
தன் வெண்ணிற வீச்சால் உலகை குளிர்வித்த நிலா ஆதவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த இளங்காலை பொழுது,… தனது அலாரத்தின் ஒலியினை கேட்டு மலர் விழிகளை திறந்து சுவரில் பெரிய அளவாக மாட்டப்பட்டிருந்த தனது பெற்றோரின் புகைப்படத்தினை கண்குளிரப்பார்த்தாள் நம் நாயகி நித்திலா,….
“குட் மார்னிங் அம்மா, குட் மார்னிங் அப்பா” புகைப்படத்திலிருந்த தன் பெற்றோருக்கு வழக்கம் போல் இன்றும் தன் காலை வணக்கத்தை வைத்தாள் நித்திலா,… அதற்க்கு பிறகே குளியலறைக்குள் நுழைந்து தன் காலை கடனை முடித்து விட்டு, கூந்தலை உலர வைத்துவிட்டு தலையில் சென்டர் கிளிப் ஒன்றை மட்டும் மாட்டிவிட்டு, இருதோள்களிலும் கூந்தலை படரவிட்டுக் கொண்டவள், மீண்டும் தன் தாய் தந்தையின் மாலையிடப்பட்ட புகைப்படத்திற்கு அருகில் வந்து நின்றாள்,….
“அம்மா…. அப்பா… நீங்க ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு போய் கிட்டத்தட்ட பதினெட்டு வருஷமாச்சு, ஐந்து வயசு குழந்தையா இருந்த எனக்கு, இரக்கமே காட்டாம அந்த கடவுள் உங்களை என்னை விட்டு பிரிச்சு கூட்டிட்டு போயிட்டாரு, எனக்கு அப்போ விவரம் தெரியாத வயசு அப்டிங்கிறதால கொஞ்ச நாள் அழுகையில நான் அதை மறந்துட்டேன், வருஷம் கடக்க கடக்க நானும் வளர்ந்து பெரிய பொண்ணானேன், நான் பெரிய மனுஷியா ஆனப்போ என் பக்கத்துல அம்மா இல்லையேங்கிற ஏக்கம் வந்தது, நான் ஸ்கூல்ல ஸ்டேட் ஃபர்ஸ்ட்டா வந்த போது, என்னை தலையில தூக்கி வைத்து கொண்டாட அப்பா இல்லாம போயிட்டாரே அப்டின்ற தவிப்பு ரொம்ப அதிகமாவே ஏற்பட்டது,… பாட்டி, தாத்தா கிட்ட சொல்லி அழுதேன், வேறு யார்கிட்ட என்னால என் மனகஷ்டத்தை சொல்லி அழ முடியும், நீங்க ரெண்டு பேரும் போனதுல இருந்து தாய் தந்தை ஸ்தானத்துல இருந்து அவங்க தானே என்னை வளர்த்தது,…
தாத்தா சொன்னார்,…’ஏன் உன் அம்மாவும் அப்பாவும் உன்னை விட்டு போயிட்டதா நினைக்கிற, அவங்க உன்கூட இருக்கிறதா நினைச்சிக்கோ, நீ உன்னோட பெத்தவங்க கிட்ட என்ன பேசனும்னு நினைக்கிறியோ அதை உன்னோட அம்மா அப்பா போட்டோ முன்னாடி நின்னு சொல்லு, நிச்சயமா அவங்க ரெண்டு பேரும் அதை கேட்பாங்க, அதோட சேர்த்து உன் ஏக்கமும் குறையும்’னு சொன்னாரு, அன்னையில இருந்து நானும் உங்க கிட்ட பேசுரதை பழக்க படுத்திக்கிட்டேன், என் வாழ்க்கையில சந்தோசம், துக்கம் எது நடந்தாலும் முதல்ல உங்க கிட்ட தான் வந்து சொல்லுவேன், எனக்கும் கூட என் மனசுல உள்ள ஏக்கம் குறைஞ்ச மாதிரி இருக்கும், இன்னைக்கு என் லைஃப்லயே ரொம்ப முக்கியமான நாள், ஆமா இன்னைக்கு உங்க பொண்ணை மாப்பிளை வீட்டுகாரங்க பொண்ணு பார்க்க வராங்க, எனக்கு உங்க ரெண்டு பேரோட ஆசீர்வாதம் எப்போதுமே இருக்கும்னு எனக்கு தெரியும், ஆனா… ஆனா… எனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் தான் உறுத்திக்கிட்டே இருக்கு, அது என்னனு உங்ககிட்ட நேத்து நைட்டே சொல்லிட்டேன், பாட்டி தாத்தா கிட்ட சொல்லாம ஒரு நல்ல மனுசனுக்காக நானே ஒரு முடிவை எடுத்துட்டேன், அது சரியா தவறான்னு எனக்கு தெரியல, எது எப்படி இருந்தாலும் நீங்க எனக்கு துணையா இருப்பீங்கனு நான் நம்புறேன்’ அவள் வாய்விட்டே தன் தாய் தந்தையிடம் பேசி கொண்டிருந்த நேரம்….”நித்தி கண்ணு” என்ற பாட்டி வைத்தீஸ்வரியின் குரல் அறைக்கதவின் வெளிப்பக்கத்திலிருந்து கேட்டது,….
தன் கண்களிலிருந்து வழிந்திருந்த கண்ணீரை அழுந்த துடைத்தவள்,…”சரிப்பா சரிம்மா,… பாட்டி கூப்பிடுறாங்க, நான் அப்றம் உங்க கிட்ட பேசுறேன்” என மானசீகமாக கூறிவிட்டு அறையின் கதவை வந்து திறந்தாள் நித்திலா,….
மஞ்சள் நிற சல்வாரில், இரண்டு பக்கமும் சிறிது முடி எடுத்து கிளிப் இடப்பட்ட கூந்தல் முன்னே கொஞ்சம் விட்டிருக்க, செயற்கை அழகு சிறிதும் இல்லாமல் இயற்கையாகவே அழகு ஓவியமாக தன் முன்னே நின்ற பேத்தியின் முகத்தை வழித்து நெட்டி முறித்த வைத்தீஸ்வரி பாட்டி,…”யாரு கண்ணும் என் பேத்தி மேல பட்டுடக்கூடாது” என்றார்
“பாட்டி,… சின்ன பிள்ளையில இருந்து நீ இதை தான் பண்ணிகிட்டு இருக்க, உன் பேத்தி என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்” நித்திலா குறும்பு புன்னகையுடன் வினவ,….”என் பேத்தி அழகுக்கு முன்னாடி வேறு எந்த பொண்ணாலையும் நிற்க முடியுமா, அவளோட செகப்பு நிறத்துக்கும், அவளோட முக வாட்டத்துக்கும், தேவலோக கன்னிகையவே தோற்கடிச்சிடுவா” என மெச்சினார் பாட்டி,…
“அய்யோ பாட்டி போதும், எனக்கு வெட்கம் வெட்கமா வருது” அவள் வெட்கப்படுவது போல் சம்பாஷணை செய்ய,…. அந்த நேரம் “என்ன பாட்டியும் பேத்தியும் காலைலயே உங்க ஆட்டத்தை ஆரம்பிச்சிடீங்களா” என்று கேட்டபடி வந்தார் தாத்தா ஜெயமோகன்,…
“இனிமே தான் தாத்தா ஆரம்பிக்கனும், நீங்களும் வரீங்களா” நித்திலா கேட்க,….”வேண்டாம்மா, அப்புறம் நீயும் உன் பாட்டியும் சிரிக்க வச்சே எனக்கு வயிறு வலி வர வச்சிடுவீங்க” என்றார்,….
“ம்ம்… அந்த பயம் இருக்கட்டும் அதோட தாத்தா இன்னைக்கு நான் உங்க சைடு, நீங்களும் நானும் கூட்டு சேர்ந்து பாட்டிக்கு வயிறு வலி வர வச்சிடலாம்” நித்திலா சொல்ல,…”டன்” என்றார் தாத்தா கட்டை விரலை உயர்த்தி..
“ஏய் வாலு,… என்ன அப்படியே உன் தாத்தா பக்கம் எகிறி குதிக்கிற, நீ எப்போதுமே என் சைடு தான் நிற்க்கணும், உன் தாத்தா தனியா தான் நம்ம ரெண்டு பேரையும் சமாளிக்கனும்” பாட்டி சொல்ல,….”பார்த்தியாடா உன் பாட்டியோட நல்ல எண்ணத்தை” என தன் பேத்தியிடம் சொல்லி காட்டியவர்,…”சரிம்மா நீ பேத்தியை உனக்கு சப்போர்ட்க்கு வச்சிக்கோ, நான் என் பேரனை வச்சிக்கிறேன்” தாத்தா மனைவியிடம் சொல்ல, குழப்பமாக அவரை பார்த்தாள் நித்திலா,….
“என்னடா அப்படி பார்க்கிற, நான் யாரை சொல்றேன்னு புரியலயா, என் பேத்தியோட வருங்கால கணவரை பத்தி தான் சொல்றேன், இன்னைக்கு என் பேத்தியோட ராஜகுமாரன் அவளை பார்க்க வர போறான், அப்புறம் அவன் எனக்கு பேரனாகிடுவான், எனக்கும் சப்போர்ட்க்கு ஆள் வந்துடுச்சே” என சிறுகுழந்தை போல் தன் மனைவியிடம் பழிப்பு காட்டினார் ஜெயமோகன்,….
இத்தனை நேரம் சிரித்த முகத்துடன் தன் தாத்தா, பாட்டியிடம் பேசி கொண்டிருந்த நித்திலாவின் முகம் அவர் கூறியதை கேட்டு சட்டென்று வாடி போனது, இது நாள் வரை எந்த ஒரு சிறிய விஷயத்தையும் தாத்தா பாட்டியிடம் மறைத்திறாத நித்திலாவிற்கு, தன் வாழ்க்கை சம்மந்தபட்ட முக்கியமான ஒரு விஷயத்தை மறைக்கிறோமே என குற்றவுணர்வு ஏற்பட்டது,,…
“என்னடா… முகம் வாடி போயிடுச்சு” பேத்தியின் கூந்தலை கோதிவிட்டபடி வைத்தீஸ்வரி வினவ,… தன்னிலை மீண்டவள்,…”ஒன்னுமில்ல பாட்டி” என்றாள் புன்னகையை வரவழைத்து,….
“ஒரு பொண்ணுக்கு இந்த தருணத்துல மனசுல ஒரு வித பயம் ஏற்பட தான் செய்யும், அதை நினைச்சு நீ ஒன்னும் கவலை படாத கண்ணு, எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றார் பாட்டி…
“ஆமா டா,… அதோட வர போற மாப்பிள்ளை நிச்சயம் ரொம்ப நல்ல பையனா தான் இருப்பாரு, நான் அவரை சந்திச்சதில்லை தான், ஆனா அவரோட தாத்தா கிருஷ்ணமூர்த்தியை எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும், என்னோட பால்ய ஸ்நேகிதன், என்ன ஒன்னு அவன் இப்போ உயிரோட இல்ல, சில மாசத்துக்கு முன்னாடி தான் அவனோட மகன் லக்ஷ்மணமூர்த்தியை சந்திச்சேன், என் நண்பனை உறிச்சு வச்சிருக்கான், அதே சாந்தமான குணம், அப்பாவை ஜெராக்ஸ் பண்ண மாதிரி பையன் இருந்தான், அப்படினா பேரனும் அப்படி தானே இருப்பான்,” என தன் பேத்திக்கு ஆறுதல் கூறியவர், அப்போது நினைத்திருக்கவில்லை வர போகும் மாப்பிள்ளையை கைப்பிடித்தால் தன் பேத்தி பட போகும் வேதனையை, அவர் அப்போதே அறிந்திருந்தால் அவளின் கள்ளம் கபடமில்லா பேத்தியை, துன்ப வாழ்க்கைக்குள் தள்ளி இருக்காமல் காப்பாற்றியிருப்பாரோ என்னவோ,…
ஜெயமோகன் வைத்தீஸ்வரி தம்பதியருக்கு எட்டு வருடத்திற்கு பிறகு நேர்ந்து தவமெடுத்து பிறந்த குழந்தை தான் வேதநாயகம்,… வருடங்கள் சென்று பிறந்ததால் அத்தம்பதியினர் அவர்களின் செல்வபுதல்வனுக்கு அன்பை மட்டுமே வாரி வழங்கி வளர்த்தனர்,… தங்களின் மொத்த பாசமும் அவனுக்கே கிடைக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்கள் இன்னொரு குழந்தை கூட பெற்றுக்கொள்ளவில்லை,..
காலம் கடக்க வேதநாயகம் வளர்ந்து பெரியமனுசனாகினார், தங்களின் புதல்வனை அவனுக்கு பிடித்த படிப்பையே படிக்க வைத்தார்கள் அவனின் பெற்றோர்கள், தன் படிப்பு முடிந்த சில மாதத்திலேயே தொழில் சாம்ராஜ்யத்தில் இறங்கினார் வேதநாயகம்,…
தன் தந்தையின் நகைக்கடை தொழிலில் இறங்கினார், அவர் கை பட்டவுடன் தொழிலில் முன்னேற்றம் அடைந்தது, மற்ற நகைகடைகளை விட ‘வி.என்’ ஜூவல்லர்ஸ்க்கு மக்களின் கூட்டம் அலைமோதியது, ‘என் பொண்ணுக்கு கல்யாணம், வி என் ஜூவல்லர்ஸ்ல நகை எடுத்தா மட்டும் தான் திருப்தியா இருக்கும், அங்கு தான் செய்கூலி சேதாரம் கம்மி, அதோட சேர்த்து கலப்படமில்லா சுத்த தங்கத்துக்கு அங்கு மட்டும் தான் கியாரண்டி தராங்க’ பலமக்களின் வாயிலிருந்து இந்த வார்த்தைகள் தான் பெறப்பட்டது,….
தன் மகனின் முன்னேற்றத்தை கண்டு ஜெயமோகனுக்கும் வைத்தீஸ்வரிக்கும் அத்தனை பெருமையாய் இருந்தது, அவரின் இருபத்தியாராவது வயதில் தனலட்சுமி என்ற அழகிய பதுமை பெண்ணை தன் மகனுக்கு மணமுடித்து வைத்தனர்,….
தனலட்சுமி சத்தம் போட்டு கூட பேசாத பெண், நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண்ணாக இருந்தாலும், அவளை பார்த்த நிமிடத்திலிருந்தே இவள் தான் தன் மகனுக்கு சரியான ஜோடியாக இருக்கும் என்று வைத்தீஸ்வரி முடிவு செய்து விட்டார், ஜெயமோகனும் அதற்கு தடை விதிக்கவில்லை,
வேதநாயகம்-தனலட்சுமியின் வாழ்க்கை தெளிந்த நீரோடை போல் சென்றது, அடுத்த வருடமே நித்திலா பிறந்தாள், நித்திலா பிறந்த பிறகு அந்த வீட்டின் சந்தோசம் கூடியது என்றே சொல்லலாம், எந்த ஒரு துன்பமும் இல்லாமல் சென்று கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் யாருமே எதிர்பார்க்காத விதமாய் ஏற்பட்டது அந்த விபத்து,…..
வேதநாயகம் மற்றும் தனலட்சுமி தங்கள் ஐந்து வயது மகள் நித்திலாவுடன் பக்கத்து ஊரிலுள்ள ஒரு கல்யாணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் வேளையில், எதிரே வந்த வண்டி மோதிய காரணத்தினால் ஸ்பாட்லயே அவர்களின் உயிர் பிரிந்தது, இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர்களுடன் சென்ற நித்திலாவிற்கு எதுவும் ஆகவில்லை, சிறு சிராய்ப்புடன் அவள் உயிர் பிழைத்துக்கொண்டாள்….
அவள் தாய் தந்தையின் இழப்பிற்கு பிறகு, அவளுக்கு ஏக்கம் வந்து விடக் கூடாது என ஒரு தாய் தந்தைக்கு நிகராக தான் அவளின் தாத்தா பாட்டி அவளை எந்த குறையுமின்றி வளர்த்து வருகின்றன,,….
மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வருகிறார்கள் என நித்திலாவின் வீடு பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது,,… வீட்டில் பல வருடமாக வேலை பார்க்கும் சுமதி மற்றும் அவரின் கணவர் பார்த்திபன் தான் அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டனர்,… இருவரும் அவ்வீட்டின் விசுவாசிகள் என்றே சொல்லலாம், வேதநாயகம்-தனலட்சுமி இருந்த காலத்தில் இருந்தே அங்கு வேலை பார்ப்பவர்கள் இவர்கள், இவர்களுக்கு மகேஷ் என்ற ஒரு மகன் உள்ளான், அவன் இப்போது தான் கல்லூரி இரண்டாமாண்டு படித்துக்கொண்டிருக்கிறான்,
நித்திலாவிற்கு பார்த்திபன் சுமதி என்றால் அவ்வளவு பிரியம், தனக்கு உடன் பிறந்தவன் இல்லா குறையை மகேஷ் தான் போக்கிருக்கான் என மகேஷிடம் அடிக்கடி கூறுவாள், இருவரும் அக்கா தம்பியை போல தான் பழகுவார்கள்,… அவளை போன்றே அவர்களுக்கும் நித்திலா என்றால் கொள்ளை பிரியம், இப்போது அவளின் பெண் பார்க்கும் படலத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்றனர்,….
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர நேரமாச்சு நித்தி கண்ணு தயார் தானே ஈஸ்வரி,” ஜெயமோகன் மனைவியிடம் வினவ,…”தயார் தாங்க, நம்ம கண்மனி தான் (பக்கத்து வீட்டு பெண்மணி) நித்தியை தயார் படுத்துறா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போய் பார்த்துட்டு தான் வந்தேன், இந்நேரம் தயாராயிருப்பா” வைத்தீஸ்வரி சொல்லிக்கொண்டிருந்த நேரம், ஹாரன் சத்தத்துடன் அவர்கள் வீட்டு காம்பவுண்டினுள் இரண்டு வண்டிகள் நுழைந்தது,…
“மாப்பிளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க போல,” ஜெயமோகன் பரபரப்புடன் வாசலைநோக்கி செல்ல, வைத்தீஸ்வரியும் அவரை பின்தொடர்ந்து சென்றார்,…
பாட்டியும் தாத்தாவும் மிகவும் உற்சாகமாக தன் பேத்தியின் வருங்கால கணவரை காண ஆர்வமாக இருக்க, அங்கு நித்திலாவிற்கோ மனம் என்னவென்று சொல்ல முடியாத அளவிற்கு தவித்துக் கொண்டிருந்தது,….

