Loading

அத்தியாயம் – 1 

 

அந்த அழகிய மாலைப் பொழுதில் சிலு சிலு என காற்று வீச, கூந்தல் ஒரு புறம் அசைந்தாட மெலோடி பாட்டு காதில் ஒலிக்க சோகமான முகத்துடன் எழில் ஓவியமாய் பூங்காவின் மேஜையில் அமர்ந்து இருந்தாள் அவள், நம் கதையின் நாயகி, “நிலா”.

 

அங்கு ஓடி ஆடும் குழந்தைகளை வெறித்தபடி பார்த்துக் கொண்டு சோகமான முகத்துடன் எதையோ சிந்தித்த படி அமர்ந்து இருந்தாள் நிலா. 

 

திடீரென்று யாரோ தன் தோள்பட்டையில் கை வைக்க. திடுக்கிட்டு திரும்பி பார்த்தவள், “ஐயோ! நீயா நான் யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்”. 

 

“சரி ஏன் இவ்வளவு லேட்டு சீக்கிரமா வரமாட்டியா? உனக்காக நான் எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கிறது” என்றாள்.

 

சுஜிதா, “சாரி டி நான் சீக்கிரம் வரலாம்னு தான் பார்த்தேன். ஆனா, மேனேஜர் பர்மிஷன் தரலை டி அதான் அறை நாள் ஒர்க் முடிச்சிட்டு கிளம்பி வர லேட் ஆகிடுச்சு” என்றாள். 

 

நிலா, “சரி வா உட்காரு” என்று அங்கு இருக்கும் நாற்காலியின் மேல் இருவரும் அமர்ந்தார்கள். நிலா அவளின் சோக கீதத்தை வழக்கம் போல் வாசிக்க ஆரம்பித்தாள்.

 

நிலாவின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவள் தான் “சுஜிதா”. சிறு வயதில் இருந்து இருவரும் ஒன்றாக இல்லாவிட்டாலும் கல்லூரி பருவத்தில் இருந்து நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். தற்பொழுது வேலைக்காக அலைந்து கொண்டு இருந்தார்கள். 

 

ஆனால், வேலை இருவருக்கும் வெவ்வேறு கம்பெனியில் அமைந்து விட்டது. நிலா தற்பொழுது சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள். 

 

சுஜிதா அதற்கு எதிர்மாறாக பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள். ஆகையால், இருவரும் ஞாயிற்றுக் கிழமை தவறாது சந்தித்து விடுவது வழக்கம்.

 

நிலா, “இந்த வாட்டியும் சித்தி மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம் டி என்ன பண்றதுன்னு எனக்கே தெரியல. என் வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கு” என்று தலையில் கை வைத்துக் கொண்டு “இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கவே இல்லை” என்று கூறினாள்.

 

சுஜிதா “அச்சச்சோ என்ன டி சொல்ற மறுபடியும் ஆரம்பிச்சிட்டாங்களா. சரி பரவாயில்லை விடு எப்பயும் போல் இந்த மாப்பிள்ளையும் ஓட விட்டுடலாம்” என்று கூறி நகைத்தாள்.

 

நிலா, அவளை முறைத்துக் கொண்டு “இல்ல டி எப்பயும் போல் எல்லாம் இந்த வாட்டி நம்மால் ஒண்ணுமே பண்ண முடியாது. ஏனென்றால், இந்த மாப்பிள்ளை என்னோட சித்தி வீட்டுக்கு புதுசா வேலைக்கு வந்தவன்”. 

 

“எனக்கு அவன் யார் என்றே தெரியலை பார்க்கவே ஒரு மார்க்கமா இருக்கிறான். அவனைப் பார்த்தால் வேலைக்காரனை போல் தெரியவில்லை எனக்கு என்னமோ பயமா இருக்கு” என்று கையைப் பிசைந்தபடி கூறினாள்.

 

சற்று நேரம் அமைதியாக எதையோ சிந்தித்த படி அமர்ந்து இருந்த சுஜிதா, “ஏய் நிலா கொஞ்சம் அமைதியா அங்க பாரு நம்மை யாரோ குறுகுறுன்னு பார்க்கிற மாதிரியே எனக்கு தோன்னுது. டக்குனு பார்க்காத பொறுமையா பாரு யாராவது நம்மள பார்க்குறாங்களா?” என்று கூறி முடிப்பதற்குள் நிலா சட்டென்று திரும்பினாள்.

 

அங்கு ஒருவன் காதில் வாக்மேன் மாட்டிக் கொண்டு முதுகை காண்பித்தபடி நின்றிருந்தான். 

 

நிலா, “நீ சொன்னது சரி தான் டி யாரோ நம்ப பேசிக்கிட்டு இருப்பதை ஒட்டு கேட்கிற மாதிரியே தோணுது” என்றாள் பதட்டமாக.

 

சுஜிதா,”நம்ம என்ன இராணுவ ரகசியமாடி பேசிக்கிட்டு இருக்கோம். இதை ஒட்டு கேட்டு யாரு என்ன பண்ண போறாங்க. நீ எல்லாத்துக்கும் பயந்துக்கிட்டே இருக்காத எவனாவது நம்மள சைட் அடிச்சிருப்பான்”. 

 

“நீ இப்படி தொட்டதுக்கெல்லாம் பயப்படுவதால் தான் உன் சித்தி உன் சொத்துக்கு உன்னையே அடிமை ஆக்கி வச்சிருக்காங்க. சரி நீ எதுக்கும் பயப்படாத நாளைக்கு காலையில் நான் உன் வீட்டுக்கு வர்றேன்”. 

 

“பொண்ணு பாக்குற சடங்கு நேரத்துக்கு நான் அங்க உன் கூட இருப்பேன்” என்று தைரியம் கொடுத்து விட்டு “நம்ம இப்போ இங்கு இருந்து கிளம்பலாம்” என்று இருவரும் கை கோர்த்தபடி எழுந்து அவன் இருக்கும் திசையை நோக்கி சென்றனர்.

 

இவர்கள் தன்னை நோக்கி வருவதை உணர்ந்து அவன் வேக எட்டுகளுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

நிலா, “என்னடி அவனை காணும்? திடிர் ன்னு மறைஞ்சு போயிட்டான். ஒருவேளை இவன் சித்தியோட ஆளாக இருப்பானோ? எனக்கு பயமா இருக்கு டி” என்றாள்.

 

சுஜிதா, “நீ பயப்படாம இருந்தால் தான் அதிசயம். இவன் யார் என்றே நமக்கு தெரியாது. நீ தேவை இல்லாமல் மனசை போட்டு குழப்பிக்காத” என்று தைரியம் ஊட்டினாள். ஆனால், அவள் மனதிலும் பதட்டம் இருக்க தான் செய்தது அது ஏன்? எதற்கு? என்று அவள் மட்டுமே அறிவாள்.

 

சிறு வயது முதல் நிலா தொட்டதற்கெல்லாம் பயப்படும் குணம் கொண்டவள். ஆனால், சுஜிதா அதற்கு எதிர் மாறாக தைரியம் கொண்டவள் அவள் அப்பாவை போல் . அப்பாவின் செல்ல பிள்ளையும் கூட. 

 

அதை பார்க்கும் போது நிலாவிற்கு சிறு ஏக்கம் உண்டாகும். ஏனென்றால் , நிலாவும் சிறு வயதில் அப்பாவின் செல்லப்பிள்ளை தான். ஆனால், எப்பொழுது அவள் வாழ்க்கையில் சித்தி என்று ஜெயலக்ஷ்மி வந்தாலோ அப்போதில் இருந்து இவள் ஒதுங்கி விட்டாள்.

 

நிலாவுக்கு ஓர் தோழியாகவும், சகோதரியாகவும் இருந்து தைரியம் ஊட்டி கொண்டே இருப்பாள் சுஜிதா.

 

சுஜிதா, “மணி ஆறு ஆச்சு டி வா நம்ம கிளம்பலாம்” என்றாள். 

 

நிலா, “அச்சச்சோ டைம் ஆகிடுச்சு இப்போ வீட்டுக்கு போனாலே ஜெயா சித்தி ஏன் இவ்வளோ லேட்ன்னு கேட்பாங்களே. நான் என்ன பதில் சொல்றது. உன்னை பார்க்க வந்ததால் லேட்னு சொன்னால் சித்தி உன்னையும் திட்டுவாங்க எனக்கு பயமா இருக்கு டி” என்று மறுபடியும் சித்தி புராணத்தை ஆரம்பித்தாள்.

 

சுஜிதா, “ஐயோ போதும்டா சாமி முடியலை” என்று தன் இரு கரங்களையும் தூக்கி கும்பிடுவது போல் காண்பித்தால் நிலாவை கோபப்படுத்தும் படி. 

 

உடனே நிலா, “அவன் அவனுக்கு வந்தால் தான் டி தெரியும் கஷ்டம். உன் இஷ்டத்துக்கு நீ இருக்குற உன் ஃபேமிலி அப்படி இருக்கு என் குடும்பம் என்ன அப்படியா… உனக்கு தெரியாதா என் சித்தியை பற்றி” என்றாள்.

 

சுஜிதா, “அதுக்கு நீ உன் சித்திகிட்ட தைரியமா பேசு. இந்த கல்யாணம் பிடிக்கலைன்னு சொல்லு அவங்களுக்கு புரியும்படி எடுத்து சொல்லு” என்று அந்த உரையாடலை முடித்து வைத்தாள். 

 

இருவரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட்டார்கள். சுஜிதா வீட்டிற்குள் நுழைந்தவுடன், “அம்மாடி சுஜி வந்துட்டியா ஏன்டா இவ்வளோ லேட்?” என்று அவள் தாய் பத்மா அக்கறையுடன் விசாரித்தார். 

 

சுஜிதா, “அது நான் நிலாவை பார்க்க போயிருந்தேன். இரண்டு பேரும் இரண்டு மணி நேரமாக நம் வீட்டு அருகில் உள்ள பூங்காவில் தான் பேசிக்கிட்டு இருந்தோம்” என்று கூறினாள்.

 

பத்மா, “நிலா எப்படி இருக்கா? நல்லா இருக்காளா? வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டியது தானே அவளை” என்று விடாமல் கேள்வி மேல் கேள்வி அடுக்கிக் கொண்டே சென்றார்.

 

சுஜிதா ஒரு கட்டத்தில் பொருக்கமூடியாமல் டென்ஷன் ஆகிவிட்டாள், “அம்மா தாயே நான் இப்போ தான் வந்தேன். எனக்கு குடிக்க ஏதாச்சும் எடுத்துட்டு வா. நீ பாட்டுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்க. உன் பொண்ணையே நீ கவனிக்க மாட்டேங்குற அதுக்குள்ள என் பிரண்டை பத்தி பேச வந்துட்டியா” என்று சிடுசிடுப்பாக பேசினாள்.

 

சுஜிதாவின் வீட்டில் சுஜிதாவின் ராஜ்ஜியமே எப்பொழுதும். அன்பாகவும், பாசமாகவும் அவள் அப்பாவும், அம்மாவும் இருப்பார்கள்.

 

அதற்கு எதிர் மாறாக நிலா வீட்டின் உள்ளே நுழைந்தவுடன், “ஏய் நில்லு டி” என்று கர்ஜிக்கும் குரலில் அவள் சித்தி ஜெயா குரல் ஒலித்தது. அதில் அடி வயிறு கலங்க ஒரு அடி எடுத்து வைக்காமல் அப்படியே சிலையாகி போனாள் நிலா.

 

நிலாவிற்கு வார்த்தைகளே எழவில்லை. கால்கள் எல்லாம் தடதடக்க சித்தியை பார்த்தபடி அப்படியே சிலையாகி போனாள். 

 

ஜெயலட்சுமி, “எங்க டி போன? இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. வீட்டில் விளக்கு வைக்கும் நேரத்திற்கு பிறகு வரும் பெண்களை எல்லாம் தவறாக பேசுவார்கள். உனக்கு அறிவு இருக்கா”. 

 

“நீ இல்லாம வீட்டில் இருக்கும் பாத்திரத்தை எல்லாம் யார் துலக்குவது? இவ்வளவு நேரம் எவன் கூட போய் ஊர் சுத்திட்டு வர்ற?” என்றார்.

 

நிலாவுக்கு கண்கள் கலங்க “இ..இ…இ… இல்ல சித்தி” என்று வாய் எடுக்கும் முன்பே அவள் கன்னத்தில் பளீர் என்று ஓர் அறை விழுந்தது”. 

 

அந்த சத்தத்தில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஆட்கள் அனைவரும் திரும்பிப் பார்க்க. 

 

சித்தியின் பார்வை ஒன்றே அனைவரையும் மறுபடி வேலை பார்க்க செய்தது. கன்னத்தைப் பிடித்துக் கொண்டு நிலா சிலை என நிற்க அவள் காதில் எதுவும் கேட்கவில்லை. 

 

ஜெயலட்சுமி அவர் வசைப்பாட்டை பாடிவிட்டு, “போய் சமையல் கட்டில் இருக்கும் வேலையைப் பார் முதலில்” என்று கட்டளை இடுவது போல் கூறிவிட்டு கடகடவென சென்று விட்டார்.

 

அங்கு வேலை பார்க்கும் கண்ணம்மா மட்டுமே நிலாவை சிறுவயதில் இருந்து வளர்த்து வருகிறார். ஆகையால், கண்ணம்மா நிலாவின் தோள்பட்டையில் கை வைத்து உலுக்கி “நிலா நிலா” என்று அழைத்தார். 

 

அதில் உணர்ச்சி அடைந்த நிலா, கண்ணம்மாவை கட்டியணைத்து தன் ஆதங்கத்தை அழுதே தீர்த்தாள். 

 

கண்ணீரை துடைத்தபடி எழுந்த நிலா திரும்பிப் பார்க்க அங்கு அவள் தந்தை சுந்தரம் எதுவும் நடக்காதது போல் செய்தித்தாளை வாசித்தபடி மௌனமாகவே அமர்ந்து இருந்தார்”. 

 

அதை பார்த்த நிலா இதெல்லாம் ஓர் வாழ்க்கையா என்று வெறுத்துப் போய் விட்டாள். 

 

பூங்காவில் இவர்களை வாட்ச் செய்த அந்த நபர் யாருக்கோ செல்போனில் அழைத்து, “ஹலோ நான் ராஜேஷ் பேசுறேன்”. 

 

“நீங்க சொன்ன படி இவ்வளவு நாள் நிலா மேடத்தை ஃபாலோ செய்து எல்லா தகவலையும் உங்களிடம் கொடுத்து விட்டேன்”. 

 

“இப்போ நிலா மேடம் அவங்க சித்தி ஏற்படுத்தின கல்யாணத்தை பத்தி பயந்து அவங்க பிரண்ட் கிட்ட பேசிட்டு இருக்காங்க ரொம்ப சோகமா இருக்காங்க” என்றான்.

 

அந்த பக்கம் இருந்து பதில் அளித்தவன், “எல்லாம் அவள் கல்யாணம் வரைக்கும் தான் அதற்கு அப்புறம் அவள் வாழ்க்கையே மாறிவிடும்” என்று கூறி அழைப்பை துண்டித்தான். 

 

நிலா அனைவருக்கும் இரவு உணவை பரிமாறிவிட்டு கடைசியாக அடுப்பறையில் அமர்ந்து கண்ணம்மாவுடன் உணவை உண்டு விட்டு அங்கேயே பாயை போட்டு படுத்து‌ கண்களை மூடினாள். 

 

ஆனால், அவளுக்கு தூக்கம் தான் வர மறுத்தது அதற்கு பதிலாக கண்ணீர் மட்டுமே வழிந்து ஓடியது. இனி தன் வாழ்க்கை எவ்வாறு இருக்குமோ என்று எண்ணி அன்றைய இரவு அப்படியே கழிந்தது.

  

காலை 6:00 மணி அளவில், ஜெயலட்சுமி, “இன்னும் என்ன உனக்கு தூக்கம் வேண்டி கிடக்கு எழுந்து போய் வாசல் தெளித்து கோலம் போடு. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க எல்லாம் வந்திடுவாங்க லீவ் எல்லாம் போட்டுட்ட இல்ல. சும்மா நீ மாட்டுக்கு ஆபீஸ்க்கு போறேன் அங்க போறேன்னு பையை தூக்கிட்டு கிளம்பிடாத” என்று சிடுசிடுப்பாக கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

 

நிலா வேறு வழியின்றி அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பெண்பார்க்கும் சடங்கிற்கு ஏற்றார் போல் மிதமான ஆபரணங்களுடன் தயாராகிக் கொண்டு இருந்தாலும் அவளுடைய சோர்ந்த முகமே காட்டியது இந்த திருமணத்தில் அவளுக்கு கடுகளவும் உடன்பாடு இல்லை என்று.

 

படபடவென கதவு தட்டும் சத்தத்தை கேட்டு நிலா தன் சோக கனவில் இருந்து விழித்தவள் யார் என்று பார்க்க, “இதோ வரேன்” என்று குரல் கொடுத்தபடி வேக எட்டுகளுடன் நகர்ந்தாள். 

 

அதற்குள் இன்னும் படபடப்பாக கதவு தட்டப்பட்டது தன் கண்களை துடைத்தபடி ஜெயா சித்தியாக இருக்குமோ? அய்யோ மறுபடியும் அடிப்பாங்களே என்று மனதில் குமுரலுடன் தலை குனிந்த படி கதவை திறந்தாள்.

 

“நிலா குட்டி” என்ற குரலில் பதரி நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்து போனாள். ஏனென்றால், அங்கு நின்று இருந்தது ஜெயலட்சுமி யின் தம்பி “சக்தி”.

 

சக்திக்கு சிறு வயது முதல் நிலாவின் மேல் ஒருதலையாக காதல் உண்டு. 

 

ஆனால், நிலா, சக்தியை கண்டாலே பதறிப் போவாள். அவனை சுத்தமாக பிடிக்காது. சக்தி எப்பொழுதும் நிலாவை மிரட்டியபடியே சுற்றுவான்.

 

சக்தி, “என்ன நிலா குட்டி உனக்கு கல்யாணம்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருக்க போலயே. இந்த மாமன் கிட்ட இருந்து தப்பி விடலாம்னு நெனச்சிட்டு இருக்கியா?”. 

 

“ஆனால், அது நடக்காது உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதாக சொல்லி இப்போ இருக்கிற மாப்பிள்ளை உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஏனென்றால், உனக்கு தாலி கட்ட போறது நான் தான்” என்று கூறி சிரித்தான்.

 

ஏன் என் வாழ்க்கை மட்டும் இப்படி இருக்கோ என்று நொந்துப் போனவள், “உன்னை கட்டிக்கிரதிலும் எனக்கு சந்தோஷம் இல்லை. அந்த வேலைக்காரனை கட்டிக்கிரதிலும் எனக்கு சந்தோஷம் இல்லை. அந்த வேலைக்காரன் பெயர் கூட எனக்கு தெரியாது என்னை ஏன் இப்படி சித்திரவதை பண்றீங்க தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க” என்று கைகூப்பி வேண்டினாள்.  

 

சக்தி சிரித்தபடி “என்ன குட்டிமா நீ இப்படி எல்லாம் பேசுற. ஏன் இப்படி பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசுற என்ன இருந்தாலும் நான் உன் மாமன் உன்னை கட்டிக்கிற எல்லா உரிமையும் எனக்கு மட்டும் தான் இருக்கு சரியா”. 

 

“நீ ஒன்னும் பயப்படாத வேறு எவனும் உன்னை கட்டிக்க மாட்டான். நான் அதுக்கு விடவும் மாட்டேன். மாமனை பத்தி உனக்கு தெரியாதா இது எல்லாமே ஒரு டிராமா தான் ஜெயா அக்காவுக்காக. ஜெயா அக்கா நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்காது அதனால் தான் ஒரு சின்ன ட்ராமா புரிந்ததா” என்றான்.

 

நிலா தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். இப்போ “நீ அழறதை நிறுத்த வில்லை என்றால் என் கையில் இருக்கிறதை தூக்கி அப்படியே உன் முகத்தில் ஊற்றி விடுவேன்” என்று தன் கையில் இருக்கும் ஆசிட் பாட்டில் ஒன்றை காண்பித்து மிரட்டினான்

 

அதைப் பார்த்தவள் அதிர்ச்சியாக கண்களை விரித்துப் பார்க்க சக்தி அசராது அப்படியே முகத்தில் ஊற்றி விட்டான் .

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. 😳😳😳😳😳😳😳ஒரு பொண்ணுக்கு இவளோ பிரச்சனையா … உங்கள வச்சு செய்ய ஹீரோ வருவான்

    1. Author

      Hero varuvana illa villan varuvananu poruthu irunthu parpom