என் உயிர் – 12 🧬
போர்வையை கொடுக்கும் சாக்கிலாவது வெளியில் வருவாள் என்று நினைத்த நிலவனுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதில் மெலிதாக எரிச்சல் தென்பட , இன்னொரு அறைக்கு சென்று விட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
கமிட்மண்ட்ஸ் என்கின்ற வார்த்தை வேலைக்கு மட்டும் வாழ்க்கைக்கு வேண்டாம் என்று முடிவெடுத்திருந்தான். அதற்கு முதலும் முடிவுமான காரணம் அவர்களது பெற்றோர்கள்.
காதலித்து கல்யாணம் செய்தததால் மனைவியை விட்டு விட கூடாது என்கின்ற பொறுப்பில் தனியாக மனைவியை அழைத்து வந்து விட்டார் தீரன். அதனால், பிள்ளையும் சொந்த பந்தங்களின் பழக்க வழக்கம் இல்லாமல் வந்தது.
ஒரு பருவம் வரை இதைப் பற்றி ஒன்றும் அறியாமல் புரியாமல் இருந்த நிலவனுக்கு, பதின் பருவம் வரும்பொழுது சஞ்சய்யின் வீட்டில் எப்பொழுதும் வரும் உறவுகளைக் கண்டு புதிததாக ஏக்கம் பிறந்தது அவனுக்கு . நம் வீட்டில் ஏன் வரவில்லை என்று அதற்கான காரணம் தேடிய பொழுது கண்முன் நின்றது அவனது பெற்றோர்களே .
அதே போல், சஞ்சய்யின் பெற்றோர்கள் வீட்டில் பார்த்து நடத்திய திருமணமே. ஆனால், அவரும் மனைவி என்கின்ற பொறுப்பினாலும், தங்கை என்ற பொறுப்பும் சேர்ந்து சண்டையிடும் பொழுது மனைவி பக்கம் சேர வேண்டிய கட்டாயம்.
அதனால் அன்றிலிருந்து முடிவு செய்தான் காதலோ வீட்டில் பார்த்தவர்களோ திருமணம் வேண்டாம் என்று. இன்றோ, நமக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்று நினைக்கும் பொழுது ஒரு நிம்மதி மனதிற்குள் பரவியது போன்று இருந்தது.
கவியை திருமணத்திற்காக சென்று பார்த்த பொழுதிலிருந்து அவள் தன்னுடையவளோ என்ற எண்ணம் பிறந்து கொண்டே இருந்தது. கமிட்மெண்ட் வேண்டாம் என்று நினைக்கும் நாமே இவ்வாறு நடந்து கொள்வது அவனுக்கே தாழ்வு எண்ணத்தை உருவாக்கியது.
ஒரு வழியாக மனதை அடக்கி அமர, அவள் கல்யாணக் கோலத்தில் கண்ட பொழுது ஒரு பெரிய மலை தன் நெஞ்சில் அழுத்துவது போன்று ஓர் உணர்வு. மூச்சடைப்பது போன்ற ஓர் உணர்வு. மொத்தத்தில் அவன் அவனாக இல்லை.
திருமணம் நின்றவுடன் வேண்டுமென்றே தான் வனஜாவின் அருகில் நின்றான். திருமணத்திற்கு வந்தவுடன் வனஜாவை அவனை அறியாமல் மிகவும் பிடித்து போயிற்று. அதனால், அவர் எவ்வளவு தவிர்த்தும் அவருடன் பேச்சு வளர்த்துக் கொண்டே இருந்தான். அதனின் விளைவாக இன்று அவனின் மனைவி கவிதாயினி நிலவனாக மாறியிருக்கிறாள்.
இதையெல்லாம் நினைத்துக் கொண்டு அவன் விட்டத்தை பார்க்க, உறக்கம் வர மறுத்தது. அதோடு சஞ்சய் அனுப்பிய குறுஞ்செய்தியும் மனதை போட்டு குழப்பி கொண்டிருந்தது. அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த தருணம் அவனே விளையாட்டாக ” அவளே சின்ன பொண்ணு ! ஒரு பொண்ணு வாழ்க்கையை வீணாக்காதடா ! ” என்று கூறிய நேரம், தீரன் அழைக்கிறார் என்று இவனும் சென்று விட்டான்.
மொத்தத்தில் , அனைத்தும் மூளைக்குள் ஓடி அவனை சோர்வாக்கியது . ஆனால், தூக்கம் வர மறுத்தது. இறுதியில் அவனின் தூக்கம் கவியின் முடிவில் தான் என்று புரிந்து கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான்.
சஞ்சய்யும், வனஜாவும் ஹாலில் உறங்கி விட்டாரா என்று உறுதி செய்து விட்டு, கவி இருக்கும் அறை வாசலிருந்து, கிட்சன் வாசல் வரைக்கும் ஐந்து நிமிடத்தில் ஐம்பது தடவையேனும் நடந்து விட்டான். ஆனால், அவளை எழுப்பும் தைரியம் மட்டும் வரவில்லை.
இறுதியாக ஆழ மூச்செடுத்து கதவைத் தட்டப் போகும் சமயம் கதவு திறந்தது. அதில் அவன் பெருமூச்சு விட்டு ” அத்தை நகரு….. உன் மக என்ன பண்ணுது. நான் பேசனும் ” எனக் கூறி இருட்டுறையில் தலையை உள்ளே விட்டு தேட முயன்றான்.
அவனின் நெற்றியில் ஆழ்காட்டி விரலை வைத்து பின்னால் தள்ளி, “ஒரு அம்மாகிட்ட பிள்ளையைப் பத்தி பேசுற பேச்சாடா இது ? “
” இங்க பாரு ! முதல்ல நீ எனக்கு அத்தை அம்மாவிட அதிகம். அப்புறம் , அவ என் அத்தை மக இல்லை இப்போ அவ என் பொண்டாட்டி ! அதனால , நான் தாராளமா கேட்கலாம் ” எனக் கூறி உள்ளே தலையை மறுபடியும் விட , பட்டென்று தலையில் கொட்டி, அவனை நகற்றி விட்டு கதவைச் சாற்றினார்.
ஒரு நிமிடம் யோசித்துக் கொண்டே நிற்க, சட்டென்று கதவு திறந்து வெளியில் வந்தாள் செல்வி கொட்டாவி விட்டுக் கொண்டே.
இவனுக்கு ஐயோ வென்று தான் ஆகியது. தலையைப் பரபரவெனத் தேய்க்க, செல்வி கையை நீட்டி ஸ்டாப் என்பது போல் கூறி , கொஞ்சம் நகர்ந்து வழியை விட, கவி வெளியில் வந்தாள்.
அதன் பின்னே , நிலவன் இயல்பு நிலைக்கு வந்தான். பின்பு, உள்ளே எட்டிப் பார்க்க எதுவும் தெரியாதது போல் கண்மணி மறுபக்கம் திரும்பி படுத்துக் கொண்டிருந்தார். இவன் வேகமாக உள்ளே நுழைந்து அத்தையின் அருகில் அமர்ந்து ” எப்படி நான் இங்க நிக்கிறேனு கண்டுபிடிச்ச? “
“ம்ம்…. ஒரு பூனை அங்கையும் இங்கையும் போனது அந்த கதவுக்கு கீழ வெளிச்சம் மறைஞ்சு மறைஞ்சு வந்துச்சு. “
“சூப்பர் அத்தை… என் மேல எவ்ளோ பாசம் உனக்கு? ” என அத்தையின் குமடை பிடித்துக் கொஞ்ச, அவனின் கையைத் தட்டி “அப்படிலாம் ஒன்னும் இல்லை. நீயும் வருவ வருவனு பாத்தேன். வரமாறி தெரில . அதோட என் தூக்கமும் போயிடுச்சு . அதான் வந்தேன். போடா போ….. போய் வேலையைப் பாரு ” என்று துரத்தி விடாத குறையாக அனுப்பினார்.
இவ்வாறு பேசியாவது இவர்கள் இணை சேர வேண்டும் என்கின்ற ஆசை தான். அதோடு, எங்கு வனஜா முழித்துக் கொண்டால் இருவரையும் பேச விட மாட்டார் என்கின்ற பயமும் இருந்தது அவருக்கு .
பின்பு, கவியை கண்களால் அழைத்து கொண்டு முழு பெளர்ணமியும் அல்லாமல், முழு அமாவாசையும் அல்லாமல் அரை நிலவாக இருக்கும் திங்களை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அறியாமல் இவனும், இவன் அறியாமல் அவளும் மாறி மாறி ரசித்து கொண்டிருந்தனர்.
கவிக்கு இச்செயல் தவறு என்று தோன்றினாலும் இத்தகைய சூழ்நிலையை விடவும் மனம் இல்லை என்பதை விட மனதோடு மூளையும் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், கண் குளிரவும், மனம் குளிரவும் இத்தகைய தருணத்தை மனதில் நிரப்பிக் கொண்டிருந்தாள்.
ஒரு பறவையின் சத்தத்தில் இருவரும் நிதர்சனத்திற்கு வர, நிலவன் தொண்டையை செருமினான். அதில் புரிந்துக் கொண்டு கவியும் அவனின் புறம் திரும்பி நிற்க, நிலவன் ஒரு மேஜையிலும், கவி ஒரு மேஜையிலும் அமர்ந்தனர்.
மறுபடியும் மெளனம் நிலவ, அம்மெளனம் இப்பொழுது கவிக்கும் எரிச்சல் ஏற்பட “அத்தான் ….. “
” நோ….. என்னை பேர் சொல்லியே கூப்பிடு ….. இந்த ஃபார்மால்டிலாம் வேணாம் “
“சரிடா ” எனக் கூறியவுடன், நிலவன் அதிர்ந்து நிமிர்ந்து பார்க்க, “என்ன ? ” என இருப் புருவத்தையும் ஏற்றி கவி கேட்டாள்.
“இல்லை… அப்படிலாம் சொல்ல மாட்டேனு சொல்லலைனாலும் பரவால்ல அட்லீஸ்ட் சரி மட்டும் சொல்லிருந்து இருக்கலாம் “
“நீ என்ன டி போட்டு தான கூப்பிடுவ ? “
“ரைட்டு விடு ! நான் நேரடியாவே கேக்குறேன் . உனக்கு இந்த கல்யாணம் போக போக சரியா வருமா? “
அவனின் கேள்வி அவளின் இதழில் புன்னகை மலர வைத்தது. “நான் சொல்லி காமிக்கிறேன் . சந்தேகப்படுறேன் . இப்படி எதுவும் நினைக்காத. ஒகேவா. நமக்கு உள்ள ஒரு கிளாரிபிகேஷன் இருக்கனும்னு நினைக்கிறேன் .புரியுதா ? “
அவள் ஏதோ கூற தயங்குகிறாள் எனப் புரிந்து அமைதிக் காத்தான் அதற்கு மேல் பேசாமல் . அவளே ஒரு சில நிமிடத்திற்கு பின்,
“அத்தான் …. “
நிலவன் கையை தூக்க , “ப்ளீஸ் அத்தான். ஒரு ஃப்லோல சொல்லிடுறேன். எனக்கு மகி அத்தானைத் தான் ரொம்ப பிடிக்கும். சின்ன வயசுல இருந்து அவரைக் கல்யாணம் பண்ணுற நாளுக்காக அவ்ளோ காத்திருந்தேன். ஆனா, அவரு வீட்டுக்கு வந்தாலோ, வெளிய பாத்தாலோ, நான் காதலிக்கிறேன்ல அப்படினு நினைச்சு அவரைப் பாப்பேன். அப்போ அதுதான் காதல்னு நினைச்சேன். ” எனக் கூறி எச்சிலை விழுங்கினாள்.
இப்பொழுதும் நிலவன் அமைதியைக் கடைப்பிடித்தான். “ஆனா, அவரு தாலி கட்டும் பொழுது ஒரு பயம் வந்தது. ஆனா நீங்க கட்டுன அப்போ ஒரு பாதுகாப்பைத் தான் உணர்ந்தேன் ” எனக் கூறி கண்கள் கலங்கி அவனை நிமிர்ந்து பர்த்தாள்.
ஆனால், அவன் முகத்தில் எந்தவித எதிர்வினையும் காட்டாமல் இருந்தான். அவள் தேடிய எதுவோ ஒன்று கிடைக்கவில்லை. அதனால், அதைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கின்ற முயற்சியில் ” மகி அத்தானை பாக்கிறப்போ மனசுக்குள்ள நானாச் சொல்லி வர வச்ச விஷயம் உங்ககிட்ட இயல்பா வருது. அவரு அங்க இருந்து போனப்போ அவமானமா தான் இருந்துச்சே தவிர ஏமாற்றமா இல்லை. நம்ம தப்பிச்சுட்டோம் அப்படிங்கற உணர்வு தான் இருந்துச்சு. இதலாம் நான் சும்மா சொல்லல அத்தான். என் மனசுல இருந்து சொல்லுறேன். என்னை தப்பா நினைச்சிடுடாதீங்க ” என்று முழு மூச்சாக கூறி கண் மூடி விட்டாள்.
எந்தவொரு சத்தமும் வராமல் இருக்க , கண் திறந்து பார்க்க, சட்டென்று நெற்றியில் முத்தம் வைத்தான் நிலவன். அதை அவள் உள்ளுணர்ந்து ரசித்து வாங்கிக் கொண்டாள்.
காதலோடு அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, வசீகர புன்னைகையுடன் அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாக, மாறி மாறி காதல் மொழியை மொழியில்லாமல் பரிமாறி விட்டுவிட்டு, இறுதியாக நிலவன் ” நீ என்னை விரும்புறேனு சொல்லாம சொல்லிட்ட . ஆனா, நான் நேரடியா சொல்லுறேன் . இனி, என் வாழ்க்கைனா அது நீ தான். உன்னை சின்ன வயசுல இருந்து அவ்ளோ பிடிக்கும். தாய்மை உணர்வோட நீ செய்யுற எல்லாமே பிடிக்கும். அதுக்காகத் தான் நான் ஊருக்கே வந்தேன். ஆனா, இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைக்கும்னு நான் நினைக்கல . நீ சொன்ன விஷயத்துக்கான பதில் நீயே தேடு. அதை அப்புறம் என்கிட்ட சொல்லு “
அவள் பீதியுடன் அவனை ஏறிட , அவளின் கைத்தொட்டு ” அதுக்கான பதில் எனக்கு தெரியும் ” , கவி “அத்….. “
“வையிட் ….. நான் சொன்னா, நீ உணருவியானு தெரில . அதனால, நீயே கண்டுபிடி. உன்னை என்னைக்கும் தப்பா நினைக்க மாட்டேன். ஓகேவா. ” எனக் கூறி அவளையும் அழைத்துக் கொண்டு கீழே செல்ல, மெதுவாக இருவரும் தத்தமது அறைக்கு கண்களால் விடைபெற்று கொண்டு சென்றனர்.
கண்மூடியே வனஜா சிரித்துக் கொண்டார். அனுபவம் பேசும் அல்லவா …….♥️♥️♥️
கீர்த்தி ☘️