
அன்று அம்மா சொன்னதால் செந்தமிழை மெரினா பீச்சுக்கு அழைத்து சென்றான் இளமாறன் … அவள் இப்போது தான் முதல்முறையாக கடற்கரையை பார்க்கிறாள் … பரந்து விரிந்திருந்த கடலையும் … அலைகளின் சத்தத்தையும் ரசித்தவள் அலைகளில் கால் நனைத்தாள் … கடற்கரை மணலில் பாதங்கள் பதித்து அதை அலை அடித்து செல்வதை குழந்தை போல பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் …
அவனோ அவளை பார்த்து சிரித்தான் … அவள் குழந்தைத்தனம் அவன் மனதை ஏதோ செய்தது … அவளை ரசித்துக் கொண்டிருந்தவன் மனதில் … தன் சுயநலத்திற்காக இவளை திருமணம் செய்து கொண்டோமா … அவளை கஷ்டப்படுத்துகிறோமோ என்று தோன்றியது … அவள் விளையாடி ஓய்ந்து அவன் அருகில் வந்து அமர்ந்தாள் …
உனக்கு சாப்பிட ஏதாவது வேணுமா என்று அவன் கேட்க … அவள் வேண்டாம் என்றாள் … அவனும் சரி என்று சொல்லி விட்டான் … அவளிடம் யாரும் இதுவரை என்ன வேண்டும் என்று கேட்டதுமில்லை … அவள் விரும்பி கேட்டால் செய்ததுமில்லை … அதனால் அவள் பதில் வேண்டாம் என்பது தான் … இளமாறன் சரி என்று விட்டுவிடுகிறான் … புனிதா அவளுக்கு என்ன வேண்டுமோ அவள் அதை கேட்காமலே செய்து விடுகிறார் … அவள் வேண்டாம் என்று மறுத்தாலும் அவளுக்கு வேண்டியதை செய்து விடுகிறார் …
செந்தமிழ் சுற்றிலும் இருக்கும் மனிதர்களை பார்த்தாள் … எல்லோரும் குடும்பங்களுடன் குழந்தைகளுடன் இருந்தார்கள் … சில பேர் தங்கள் காதல் இணையுடன் கை கோர்த்து திரிந்தார்கள் … நமக்கும் காதல் கல்யாணம் குழந்தை குடும்பம் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையா … கடவுள் என் விதியை வித்தியாசமாக எழுதி விட்டார் போல என்று நினைத்து கண்கள் கலங்கினாள் …
சரி படிப்போம் … படித்து நிம்மதியாய் உழைத்து வாழ்வோம் … அவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டாள் … என் வாழ்க்கையில் காதல் கல்யாணம் எல்லாம் சூன்யமாகி விட்டது … நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன் என்று இளமாறனும் யோசித்து கொண்டிருந்தான் … அவன் இனிமேல் செந்தமிழுக்கு செய்ய போகும் பாவங்கள் தான் அதிகம் …
செந்தமிழ் அங்கிருந்த ரங்கராட்டினத்தை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தவள் அதன் அருகில் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் … நீண்ட நேரமாக அவள் அங்கேயே நிற்க இளமாறன் அவளுக்கு அருகில் சென்றான் …
நீயும் விளையாடுறியா என்று அவன் கேட்க … வேகமாக சிரித்துக் கொண்டே சரி என்று தலையாட்டினாள் … அவள் ஏறியதும் ரங்கராட்டினம் சுற்ற … அப்படியே அவள் மனது லேசாகி காற்றில் இறகு மிதப்பது போல மிதந்தது … இரண்டு மூன்று தடவை சுற்றி விட்டாள் … இறங்க மனமே இல்லை … லேசாக தலை கிறுகிறுக்க இறங்கி கொண்டாள் …
அவள் மனம் முழுக்க மகிழ்ச்சி பரவி இருந்தது … அவர்கள் அங்கு நின்றிருக்க இளமாறன் ஆபீஸில் வேலை செய்யும் இருவர் அங்கு வந்தார்கள் … மாறா நீ இங்க என்ன பண்ற என்று அவனிடம் பேச ஆரம்பித்தார்கள் … இது யாரு என்று அவர்கள் கேட்க … இவங்க என்னோட ரிலேஷன் … இங்க பக்கத்துல இருக்கிற கிராமத்துல இருந்து வந்திருக்காங்க … அதனால அம்மா அவங்களை வெளில கூப்பிட்டு போக சொன்னாங்க அதான் பீச்சுக்கு வந்தோம் என்றான்…
அவர்கள் ஹாய் என்று கை குலுக்க அவளிடம் கையை தர … அவள் வணக்கம் என்றாள் … பட்டிக்காடு போல தயங்குறாங்க என்று சொல்லி இருவரும் சிரித்தார்கள் …
அவள் ஷாலை கழுத்தில் இருந்து முன்புறம் தொங்க போட்டிருந்தாள்… அங்கிருந்த குறைவான வெளிச்சத்தில் அவள் ஷாலில் மறைந்திருந்த தாலியை அவர்கள் கவனிக்கவில்லை … அவன் செந்தமிழை ரிலேஷன் என்று சொன்னதும் அவளிடம் இருந்த மொத்த மகிழ்ச்சியும் கரைந்து போனது …
அவர்கள் சென்றதும் இளமாறன் செந்தமிழின் சோகமான முகத்தை பார்த்தான் … அவங்க என் கூட வேலை பார்க்கிறாங்க … ஏற்கனவே ஆபீஸ்ல என் கால வச்சு கிண்டல் பண்ணுவாங்க … உன்னை பொண்டாட்டினு சொன்னா அதுக்கும் கிண்டல் பண்ணுவாங்க… இன்னும் கொஞ்ச நாள்ல நாம பிரிஞ்சுடுவோம்… இதெல்லாம் எதுக்கு … அதான் நான் கல்யாணத்துக்கு கூட யாரையும் கூப்பிடல என்றான் இளமாறன் …
உங்க கிட்ட இருக்கிறத குறையா பேசினாங்கன்னா அது அவங்க மனசுல இருக்கிற குறை … அதுக்காக நீங்க ஏன் உங்களை குறைச்சு மதிப்பிடணும் … நீங்க மனசால ரொம்ப உயர்ந்தவர் … உங்க மனசுக்கு முன்னாடி அவங்க ஒண்ணுமே இல்ல என்று செந்தமிழ் சொல்ல இளமாறன் அவளை ஆச்சரியமாக பார்த்தான் …
தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் வைத்தார்கள் … புனிதா அவர் கடையில் வேலை செய்பவர்கள் … அண்டை வீட்டார்களை மட்டும் அழைத்திருந்தார் … அம்மாவின் கட்டாயத்தின் பேரில் இளமாறன் ஆபீஸுக்கு லீவ் போட்டிருந்தான் … கணவர் விட்டு சென்றதால் … தான் ஒரு முழுமையான குடும்ப வாழ்வு வாழவில்லை என்று நினைத்த புனிதா … இளமாறனுக்கு நடந்த திருமணம் மற்றும் எல்லா விசேஷங்களிலும் கொஞ்சம் ஒதுங்கி நின்று கணவனுடன் வாழும் சுமங்கலி பெண்களை இளமாறனுக்கும் செந்தமிழுக்கும் செய்ய வேண்டிய சடங்குகளை செய்ய சொன்னார் …
இளமாறன் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு தான் இருந்தான் … அம்மா நீங்களே பண்ணுங்க என்று அவன் சொன்னதற்கும் புனிதா கேட்கவில்லை … மகன் வாழ்வு சிறக்க வேண்டும் … அவன் குடும்பமாக வாழ வேண்டும் என்று அவர் நினைத்து கொஞ்சம் விலகி நின்று கொண்டார் … அம்மாவின் மனதை அறிந்தவன் இதுக்கு தான் இந்த கல்யாணம் எல்லாம் வேணாம்னு சொன்னேன் … நீங்க கேட்டீங்களா புனிதாம்மா என்று மனதில் நினைத்துக் கொண்டான்…
மூன்று பவுனில் லஷ்மி முகப்பு வைத்த தாலி செயினில் நடுவில் தாலி … அதன் இருபக்கமும் குண்டுகள் … காசுகள் … குழாய்பாசிகள்… மாங்காய்கள் கோர்த்து அதை பூஜை செய்து … இளமாறனை அவளுக்கு போட்டு விட சொன்னார்கள் … அவன் அவளுக்கு எதிரில் உட்கார்ந்து தாலியை போட்டு விட்டு நிமிர்ந்து அவள் நெற்றியில் குங்குமம் வைத்து அவள் முகம் பார்த்தான் …
தாலி கட்டும் போது கூட சரியாக அவள் முகம் பார்க்கவில்லை … அவள் ஒளி சிந்தும் கண்கள் … கள்ளம் கபடமில்லா பார்வை … இதெல்லாம் பார்க்கும் போது அவளுக்கு ஏதோ தவறு செய்கிறோமோ என்று அவன் மனது உறுத்தியது … அவளை பார்த்த நாளில் இருந்து … அவள் அருகில் இருக்கும் போது இளமாறன் செந்தமிழ் அழகில் மயங்கி தான் போகிறான் … ஆனாலும் அவனை மீறி அவளிடம் செல்லும் மனதை அவன் கட்டுப்படுத்தினான் … அவளை நெருங்க கூடாது என்று உறுதியாக இருந்தான் …
((கொஞ்சம் இருங்க பாய் … நம்ம ஹீரோ அவ்வளவு நல்லவன்லாம் இல்ல கொஞ்சம் கெட்டவன் தான் ))
புனிதாவின் அன்பு மழையில் செந்தமிழ் திக்குமுக்காடி தான் போனாள் … ஆனால் அவரை பிரிய வேண்டுமே என்று நினைக்க … அவளால் அதை தாங்க முடியவில்லை … எனக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இப்படி இருக்கிறது … எதுவுமே எனக்கு நிரந்தரம் இல்லையா ?? உண்மையை சொன்னால் என்னை அம்மா இதே மாதிரி நேசிப்பாரா … என்னை பார்ப்பாரா … என்னிடம் பேசுவாரா… என்று நினைத்து அவள் தினமும் இரவில் அழுதாள் …
அன்று அவள் அழுகை சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த இளமாறன் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான் … என்னாச்சு ஏன் அழற என்று அவன் கேட்க … அவனுக்கு பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருந்தாள் …
என்ன செந்தமிழ் கேட்டா பதில் சொல்ல மாட்ட … உங்க அப்பா … உன் வீட்டு ஞாபகம் வந்துடுச்சா … அவங்களை போய் பார்க்கணுமா என்று கேட்க அவள் கண்ணீரோடு அவனை பார்த்தாள் …
சொல்ல போறியா இல்லையா … உன்னை நான் வந்து கெஞ்சனுமா என்று கோபத்தில் அவன் சற்று குரலுயர்த்த …
நான் எதுக்கோ அழறேன் … உங்களுக்கு என்ன … உங்க விஷயத்துல தலையிட வேண்டாம்… உங்களை தொந்தரவு பண்ண வேண்டாம்னு சொன்னீங்க … நான் உங்களை தொந்தரவு பண்றதில்ல … என் விஷயத்துல நீங்களும் தலையிடாதீங்க என்று அவள் அழுதுகொண்டே பேச …
தூங்கும் போது சும்மா அழுதுட்டே இருந்தா தொந்தரவா இருக்கு … நிம்மதியா தூங்க முடியுதா ச்சை… என்று அவன் புலம்ப … கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பேசுகிறான் என்று நினைத்தவள் எழுந்து முகம் கழுவி விட்டு வந்து அமைதியாக படுத்துக் கொண்டாள்…
அன்று கடைக்கு சென்றிருந்த புனிதா வீட்டிற்கு வந்தார் … அவர் முகம் சோகமாக இருக்க எதுக்குமா ஒருமாதிரி இருக்கீங்க என்று செந்தமிழ் அவரை கேட்டாள் … ஒண்ணும் இல்லடா என்று சொல்லி விட்டு அறைக்கு சென்றவர் அங்கு பிரேம் பண்ணி இருந்த புனிதா மற்றும் சின்ன வயது இளமாறன் போட்டோவை எடுத்து கையில் வைத்துக் கொண்டு அழுதார் …
புனிதா அறைக்கு உள்ளே வந்த செந்தமிழ் அவர் அழுவதை பார்த்து பதறி போனாள் … என்னாச்சும்மா … என்ன பிரச்சனை என்று அவளும் அழுது கொண்டே அவரிடம் கேட்க…
இன்னைக்கு இளமாறன் அப்பாவை பார்த்தேன் … அவர் குடும்பம் குழந்தைங்க அப்படின்னு சந்தோஷமா வாழுறாறு … பாவம் இளமாறன் … அவன் அப்பாவோட அன்பு அவனுக்கு கிடைக்கவே இல்ல… அவன் பிறந்ததும் இப்படி இருக்கான் … இவனை வச்சுகிட்டு என்ன பண்றது … காலமெல்லாம் இவனை தூக்கி சுமக்க என்னால முடியாது … இவனை ஏதாவது ஆசிரமத்தில விட்டுட்டு வா … நாம வேற குழந்தை பெத்துக்கலாம்னு சொன்னாரு …
என் மனசு தாங்கல … அவன் என்ன தப்பு பண்ணான் … என் குழந்தையை விட முடியாதுன்னு சொன்னதால அவர் எங்களை விட்டுட்டு போயிட்டார்… எங்களை வேணாம்னு சொல்லிட்டு அவர் சந்தோஷமா இருக்கார் … சின்ன வயசுல இருந்து இளமாறன் கஷ்டப்பட்டு … நிறைய அவமானப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கான் … அவனுக்குள்ள இருக்கிற கஷ்டத்தை கூட என்கிட்ட சொல்லாம மறச்சிடுவான் …
அவன் படிச்சு பெரிய ஆளா ஆகிட்டான்… சொந்தமா பெரிய பிசினஸ் கூட பண்ண போறான் … அவனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு … ஒரு குழந்தையும் பெத்துட்டா அது போதும் … என்னோட வாழ்க்கை லட்சியமே அதுதான் … அவன் பெரிய பணக்காரனா இருக்கணும் அப்படிங்கிறது என் ஆசை இல்ல … நான் தான் குடும்பமா இருக்க முடியல அவன் குடும்பம் குழந்தைங்க கூட சந்தோஷமா இருக்கணும்னு தான் ஆசை என்று கண்ணீரோடு சொன்னார் …
இளமாறன் நல்லவன் தான் … அது செந்தமிழுக்கும் தெரியும் … ஆனால் ஏன் அம்மாவை ஏமாற்றுகிறான் … எதற்காக இந்த பொம்மை கல்யாணம் … உண்மை தெரிந்தால் அம்மாவின் மனசு எவ்வளவு பாடுபடும் … அவர் உடைந்து போக மாட்டாரா … இதையெல்லாம் ஏன் அவன் யோசிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டவள் … அம்மா விடுங்க உங்க நல்ல மனசுக்கு அவர் நல்லா சந்தோஷமா இருப்பார் என்று புனிதாவுக்கு ஆறுதல் சொன்னாள் …
காதலாய் வருவாள் 💞
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான பதிவு,
அறிவு கெட்டவன். அருகில் இருந்து அன்பாக நடந்து கொள்ளும் மனைவியின் நேசத்தைப் புறக்கணித்து தனிமரமாய் கடைசிவரை இருக்க பார்க்கிறான்.
அவனுக்கு இழைக்கப்பட்டது அநியாயம் என்று எண்ணுபவன், அவனை மணந்து வந்து இருப்பவளுக்கு செய்வது என்னவாம்?
புனிதா பாவம். சோகமாக உள்ளே வந்ததும் நினைத்தேன். கணவரின் குடும்பத்தை பார்த்து விட்டாராக இருக்கும் என்று.
வெயிட்டிங்…
மிக்க நன்றி சகி .. இளமாறன் இப்படியே பண்ணா கடைசியில தனியா நிக்க வேண்டியது தான் …
தொடர்ந்து வாசித்து தங்கள் கருத்துகளை பகிருங்கள் …
யாரும் தனது விருப்பங்கள் கேட்டதில்லை, எவை பிடிக்கும் என்று யோசித்து பார்த்ததும் இல்லை அதனால் எப்பொழுதும் தெரியவில்லை என்ற பதிலே வருகிறது அவளிடம் இருந்து.
புனிதாமா அவளுக்கு தேவையானதை அறிந்து அவங்களாகவே செஞ்சிட்டாங்க. ஆனால் அவன் கணவனுக்கு அதனை அறிந்துகொள்ளும் மனம் இன்னும் வரவில்லை போலும்.
மாறன் தன்னை சுற்றி வட்டம் போட்டு கொண்டு விலக்கியே நிறுத்துகின்றான். ஆனால் குடும்பம் குழந்தையாக வாழ முடியாத ஏக்கமும் கொள்கின்றான்.
மூவருமே தனி தீவுகளாகவே இருந்துகொண்டு குடும்பமாக வாழ வழி இல்லையே என்று ஏங்குகின்றனர்.
வாழ்வில் கடினமான சூழ்நிலைகளை மட்டுமே கடந்து வந்தவர்கள் மனநிலை இப்படி தான் இருக்கும் … ஆனால் ஒரு உண்மையான காதலும் அன்பும் தான் அவர்களை அந்த வட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வரும் … நன்றி … தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள் …