
டார்க் காபி கலர் முழுக்கை சட்டை கிரீம் நிற பேண்ட் அணிந்து பெல்ட் மாட்டி டக் இன் செய்து … ஒரு தோளில் லேப் டாப் பேக் மாட்டி … ஒரு கையை அவன் காலில் தாங்கி நடந்தாலும் மிடுக்காய் இளமாறன் நடந்து வரும் அழகை பார்த்து ரசித்தாள் செந்தமிழ் … சோபாவில் அமர்ந்து மாமியாரும் மருமகளும் டிவி பார்த்துக் கொண்டிருக்க …
புனிதாம்மா நான் ஆபீஸ் போயிட்டு வரேன் என்று அவனுக்கு பொருத்தமான ஷூவை காலில் மாட்டிக்கொண்டே அவன் நிமிர்ந்து பார்க்க செந்தமிழ் அவனை ரசிப்பதை பார்த்து திகைத்தான் … அவனோ அவளை கோபமாக பார்க்க குனிந்து கொண்டாள் … இளமாறா என்று புனிதா கத்த … புரிந்து கொண்டவனாய் … நான் போயிட்டு வரேன் செந்தமிழ் என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு கிளம்பினான் …
அவனுக்கு தோதான மூன்று சக்கர ஸ்கூட்டி தான் வைத்திருக்கிறான் … அதில் ஏறி அமர்ந்தவன் ஆபீஸ் போகும் வழியில் வரவர புனிதாம்மா டார்ச்சர் தாங்கல … முதல்ல பணத்தை வாங்கி பிசினஸ் ஆரம்பிச்சுட்டு அந்த செந்தமிழை வீட்டை விட்டு துரத்தனும் … நிம்மதியே இல்ல என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டே ஆபீஸ் சென்றடைந்தான் …
AG டெக்னாலஜிஸ் என்று எழுதப்பட்ட அந்த அடுக்குமாடி கட்டிடத்திற்குள் பார்க்கிங் ஏரியாவில் வண்டியை நிறுத்தினான் … லிஃப்ட் டில் ஆறாவது தளம் சென்றான் … தன் இருக்கைக்கு சென்றவன் வேலையை செய்து கொண்டிருக்க … அங்கு வந்த அவன் ஆபீஸ் கொலீக் சதீஷ் … ஹாய் மாறா உனக்கு விஷயம் தெரியுமா உன்னோட நிரஞ்சனாக்கு கல்யாணமாம் என்று சொல்லி கேலியாக சிரித்தான் …
இளமாறன் ஒன்றும் பேசாமல் கணினியில் வேலை செய்து கொண்டே இருக்க … என்ன மாறா அவ உன்னோட ஆளு உனக்கு கஷ்டமா இல்லையா என்று இளித்து கொண்டே அங்கு நின்றிருந்தான் சதீஷ் … அங்கு வந்த இனியன் யாருடா அந்த நிரஞ்சனா … அவ இளமாறன் ஆளுன்னு யார் சொன்னது என்று கோபமாக சதீஷை பார்த்து முறைக்க …
இனியா உனக்கு தெரியாதா மாறன் தான் நிரஞ்சனாவுக்கு ரோஸ் கிரீட்டிங் கார்டு லாம் கொடுத்து ப்ரொபோஸ் பண்ணியிருக்கான் … அப்போ அது அவன் ஆளு தானே என்று சதீஷ் மீண்டும் கேலியாக சிரித்தான் …
ஏன்டா இளமாறா இந்த நாய் இவ்ளோ நேரமா கத்திட்டு இருக்கே பதில் சொல்ல மாட்டியா என்று இனியன் கேட்க … மச்சான் நாய்ன்னா கத்த தான் செய்யும் … பதிலுக்கு நாம கத்த முடியுமா … எனக்கு நிறைய வேலை இருக்கு … அந்த நாய் அப்படியே கத்திட்டு போகட்டும் என்று சொல்லி விட்டு இளமாறன் சிரிக்க … மூக்குடைப்பட்டு அங்கிருந்து சென்று விட்டான் சதீஷ் …
இனியன் இளமாறன் நட்பு பள்ளியில் தொடங்கி கல்லூரி ஆபீஸ் என்று இன்று வரை தொடர்கிறது … சிறுவயதில் பள்ளியில் யாரிடமும் ஒட்டாமல் இருந்த இளமாறனிடம் இனியன் தான் வலிய சென்று பேசினான் … பழகினான் … அப்போதும் அவன் சரியாக பேச மாட்டான் … ஒருநாள் கூட படிக்கும் நண்பனொருவன் இளமாறனை தள்ளி விட்டதும் இல்லாமல் … அவன் மீது வீண் பழி போட்டு சண்டை போட்டுக் கொண்டிருக்க …
கோபத்துடன் வந்த இனியன் அந்த நண்பனை அடித்து இளமாறனை தூக்கி உதவி செய்து யாருடா என் ஃப்ரெண்ட் மேல கையை வச்சது என்று கேட்டு … அங்கிருந்தவர்களை அடித்து விரட்டினான் … அன்றிலிருந்து தான் இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள் …
சொல்லப் போனால் இளமாறன் தன் மனதில் இருந்த குறைபாடுகளில் இருந்து விடுபட காரணமே இனியன் தான் … அவனுக்கு தன்னம்பிக்கை தந்து … நீயும் எங்களை போல சராசரி ஆள் தான் என்று உணர்வை தந்து எல்லா சூழ்நிலைகளிலும் அவனுக்கு ஆதரவாக இருந்தான் இனியன் … இளமாறனும் இனியனுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாய் சென்று விடுவான் …
இருவரையும் பற்றி இருவருக்கும் தெரியும் … ஆனால் அந்த திருமண ஒப்பந்தத்தை தவிர … இளமாறன் அதை இனியனிடம் கூட மறைத்து விட்டான் … இந்த கம்பெனியில் இருவரும் இப்போது சீனியர் ப்ராஜெக்ட் மேனேஜர் பொறுப்பில் இருக்கிறார்கள் …
இளமாறன் மாலை வீட்டிற்கு சென்றவன் … செந்தமிழை ஜவுளி கடைக்கு அழைத்து சென்றான் … டி.நகரில் இருந்த அவ்வளவு பெரிய ஜவுளிக்கடைகளை எல்லாம் அவள் அதிசயமாக பார்த்தாள் … செந்தமிழ் அந்த ஊரை தாண்டி எங்கும் சென்றதில்லை … வீடு விட்டால் பள்ளி … பள்ளி விட்டால் வீடு அவ்வளவு தான் அவள் உலகம்…
ஒரு ஜவுளிக்கடையில் நுழைந்து லேடீஸ் செக்ஷனுக்கு அவளை அழைத்து சென்றான் … உனக்கு என்ன ட்ரெஸ் வேணுமோ எடுத்துக்கோ என்று சொன்ன கணவனை ஆசையாக பார்த்தாள் … அவள் புனிதா சேலையை தான் கட்டிக் கொண்டு வந்திருந்தாள் …
குர்தி சைஸ் என்னம்மா என்று சேல்ஸ்உமன் கேட்க திருதிருவென விழித்தாள் … இளமாறன் சிரித்து விட்டு ஒரு M சைஸ் டாப் ஒரு XL சைஸ் டாப் எடுத்து அவள் கையில் குடுத்து ட்ரையல் ரூமில் சென்று போட்டு வர சொன்னான் …
அவள் போட்டு வர … மேலிருந்து கீழாக அவளை பார்த்தவன் M சைஸ் போதும் என்று சொல்லி விட்டு அங்கிருந்தவரை டாப் எடுத்து காட்ட சொல்ல … உனக்கு இதுல எது பிடிச்சிருக்கு என்று அவளிடம் கேட்டான் … முதல் முறை ஒருவர் அவளுக்கு பிடித்தது என்னவென்று கேட்கிறார் … ஆச்சரியத்தில் அவள் அப்படியே நின்றிருக்க … உனக்கு பிடிச்ச கலர் என்ன என்று பற்களை கடித்துக் கொண்டு கேட்டான் … அப்படிலாம் இல்லங்க வீட்ல வாங்கி தர்றத போட்டுப்பேன் என்று பயந்தவாறே சொன்னாள் …
செந்தமிழ் மாநிறத்தை விட சற்று கூடுதலான நிறத்தில் இருந்தாள் … அவன் ஆறடி உயரத்தில் அவன் மார்பில் தலை சாயும் உயரத்தில் இருந்தாள் … ஒல்லியான தேகம் தான் … அவளுக்கு ஏற்ற உடைகளை அவனே தேர்வு செய்தவன் … சேலை செக்ஷனுக்கு சென்று அவளுக்கு இரண்டு சேலைகளும் அவன் அம்மாவிற்கு இரண்டு சேலைகளும் எடுத்தான் …
எல்லாவற்றிற்கும் பில் போட்டு விட்டு கிளம்பினார்கள் … வெளியில் வந்து ரோட்டை கடக்கும் போது இளமாறன் அனிச்சையாக அவள் கையை பிடித்துக் கொண்டான் … அதை எதிர்பார்க்காதவள் இன்னும் அவன் கையை இறுக்கமாக பிடித்துக் கொள்ள … அவள் தொடுதலை உணர்ந்தவன் கையை விலக்கி கொண்டான் …
புனிதா இருவரையும் சாப்பிட்டு விட்டு தான் வர சொல்லியிருந்தார்… ஹோட்டலுக்கு அவளை அழைத்து சென்றவன் உனக்கு என்ன வேணும்… என்ன பிடிக்கும் என்று கேட்க … அவளோ ஹோட்டலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள் …
செந்தமிழ் இப்படி வேடிக்கை பார்க்காத … உன் வயசுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ என்று எரிச்சலாக சொன்னவன் அவனுக்கு பிடித்த கொத்து பரோட்டா … சிக்கன் ஃப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்தான் … இருவரும் அதையே பகிர்ந்து கொண்டார்கள் … அதோடு புரோட்டா மட்டன் சுக்கா ஆர்டர் செய்தான் … சாப்பிட்டு விட்டு மீண்டும் ரோட்டை கடக்கும் போது அவன் கையோடு அவள் கையை கோர்த்து கொள்ள … வெடுக்கென்று அவள் கையை தட்டி விட்டு அவன் முறைத்து பார்க்க … இல்ல வண்டி வருது பயமா இருக்கு அதான் என்று திக்கி திணறி சொன்னாள் …
வீட்டிற்கு சென்றதும் புனிதாவிடம் செந்தமிழ் எடுத்து வந்த உடைகளை காட்டினாள் … மகனின் உடை தேர்வையும் அவன் தனக்கும் உடைகள் எடுத்து வந்திருப்பதை பார்த்து மனதிற்குள் மெச்சி போனார் அவர் … என்கிட்ட தான் நிறைய சேலை இருக்கே எனக்கெதுக்கு சேலை என்று புனிதா கேட்க … என் புனிதம்மாவுக்கு இந்த சேலை அழகா இருக்கும் … அதான் வாங்கிட்டு வந்தேன் என்று அவரை கழுத்தோடு அணைத்து சொல்லி விட்டு அவர் அருகில் அமர்ந்தான் இளமாறன் …
அம்மா மகனுக்கு இடையில் இருக்கும் அன்பை பார்த்த செந்தமிழுக்கு ஏக்கமாக இருந்தது … ஆனாலும் இளமாறன் ஏன் அம்மாவிடம் திருமண விஷயத்தை மறைக்க வேண்டும் … ஏன் அம்மாவை ஏமாற்ற வேண்டும் என்று அவள் யோசித்தாள் …
செந்தமிழுக்கு ஏற்ற மாதிரி பார்த்து பார்த்து இளமாறன் உடைகளை அழகாக எடுத்து தந்திருப்பதை பார்த்து … இருவருக்கும் இடையில் இன்னும் உடல் பந்தம் தான் ஏற்படவில்லை … இருந்தாலும் மனபந்தம் இருக்க போய் திருமணம் செய்திருக்கிறார்கள் … இருவரும் கொஞ்ச நாள் உடலுறவை தள்ளி போட்டிருக்கலாம் … வேறு என்ன காரணம் இருக்க போகிறது என்று புனிதா நினைத்துக் கொண்டார் … பாவம் புனிதாவுக்கு உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ ??!
மறுநாள் அவன் ஆபீஸுக்கு சென்றுவிட… புனிதா அவர் தையல் கடைக்கு சென்று விட்டார் … செந்தமிழ் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்தாள் … ரொம்ப போர் அடித்ததால் அவன் அறையையும் வீட்டையும் சுத்தம் செய்தாள் … இளமாறன் மாலை வீட்டிற்கு வந்தவன் செந்தமிழ் என்று அறையில் இருந்து கத்தினான் …
ஹாலில் இருந்தவள் பதறி போய் அறைக்கு செல்ல … உன் ட்ரெஸ் எல்லாம் எதுக்கு என் பீரோல வச்சிருக்க என்று கோபமாக கேட்டான் … அது வந்து அம்மா தான் வைக்க சொன்னாங்க என்று அவள் பயந்து போய் பதில் சொல்ல …
கண்ட குப்பை எல்லாம் என் பீரோல வைக்காத … ஒரு பைல போட்டு ஓரமா வை … இல்ல அங்க இருக்க செல்ஃப்ல வை … இந்த வீட்டை விட்டு கொஞ்ச நாள்ல போயிடுவ தான … அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்றவன் … ஆமா நீ போயிடுவ தான … இல்ல வேற எதும் பிளானா என்று கண்கள் சுருக்கி அவளை கேட்க அவள் சிலையாய் நின்றிருந்தாள் …
கோபத்தில் அவள் துணிகளை எல்லாம் பீரோவில் இருந்து கீழே தள்ளி விட்டவன் … என் திங்கஸ் எல்லாம் எதுக்கு இடம் மாத்தி வச்சிருக்க … எனக்கு இங்க எடுத்தது அந்தந்த இடத்துல வைக்கணும் … நீ என் திங்கஸ் எதுவும் தொடாத … எனக்கு பிடிக்காது என்று கத்தி விட்டு வெளியே சென்று விட்டான்…
அப்படியே சுவற்றில் சாய்ந்து அமர்ந்து அந்த உடைகளை பார்த்தவள் … இதுதான் அவள் தகுதி … இதுதான் இங்கு அவள் நிலைமை என்று புரிந்து கொண்டாள் … நேற்று அவளை கடைக்கு கூப்பிட்டு போய் உனக்கு என்ன பிடிக்கும் என்று அவன் கேட்க … அவன் அன்பை நினைத்து மகிழ்ச்சியில் இருந்தாள் … இரவெல்லாம் அந்த சந்தோஷத்தில் அழுதாள் …
அதை இன்று அவன் குப்பை என்று சொன்ன போது தான் அவன் மனதில் அவளுக்கு இருந்த இடத்தை அறிந்து கொண்டாள் … சத்தமில்லாமல் அழுதவள் புனிதவதி சத்தம் கேட்டு முகம் கழுவி விட்டு வெளியே சென்றாள்…
இளமாறன் சோபாவில் உட்கார்ந்து டிவி பார்த்து கொண்டே லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான் …
செந்தமிழ் என்னடா வீட்டை அப்படியே சூப்பரா மாத்திட்ட என்று புனிதா கேட்க … அங்கங்க பொருட்கள் லாம் கலைஞ்சு போய் இருந்தது … போர் அடிச்சது அதான்மா எல்லாத்தையும் அடுக்கி வைச்சேன் … மாத்தி மாத்தி வச்சா உங்களுக்கு ஒண்ணும் தொந்தரவு இல்லையே என்று அவள் கேட்க … அதெல்லாம் ஒண்ணும் இல்ல இது உன்னோட வீடு … நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்றார் புனிதா …
அம்மா நான் டிபனும் செஞ்சு வச்சுட்டேன் … வாங்க சாப்பிடலாம் என்று அழைத்தவள் ஏங்க வாங்க சாப்பிடலாம் என்று இளமாறனை அழைத்தாள் … சாப்பிட்டு முடிக்க இருவரும் அறைக்கு சென்று வழக்கம் போல் இருவருக்கும் முதுகு காட்டி படுத்துக் கொண்டார்கள் …
காதலாய் வருவாள் 💞 …
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நல்ல நண்பனாக இனியன், அன்பான அம்மா, வேலை என்றிருக்க மாறன் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறான்?
அவனுக்கு அவனே வேலி போட்டுக்கொண்டுள்ளானோ? மற்றவர்களை நெருங்கவிடாமல், தான் காயப்படாமல் இருக்க எண்ணுகிறானோ? 🤔
தனது ஆசையை கேட்கும் உறவுகள் அமைந்தும் கூட அவைகள் நிரந்தரமில்லாத போது அதனை மனமார ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கிறாள் பாவம்.
ஒரு கனம் அவளுக்கு மகிழ்வை காட்டிவிட்டு அடுத்த கனம் அவளை விலக்கி நிறுத்திவிட்டானே.
அழகாக செல்கிறது கதை.
மிக்க நன்றி சகி … தொடர்ந்து வாசியுங்கள் … கருத்துகளை பகிருங்கள் … மகிழ்ச்சியும் பேரன்புகளும் … 🥰🥰🥰🥰
பாவம் அந்தப் பொண்ணு,
எப்படி நறுக்கு தெரித்தார் போல பேசுறான் இவன். கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையே!
இனியன் நட்புக்கு உதாரணம்.
இருவரின் நட்பும் அருமை.
வெயிட்டிங்…
இந்த இளமாறனை எவ்ளோ திட்டினாலும் தகும் … ஆனா என்ன பண்றது … அவன் சூழ்நிலை அப்படி … மிக்க நன்றி சகி