Loading

என்னுள் நீ காதலாய்💞

அத்தியாயம் 39

“தமிழ்.. எங்க வலிக்குது?” என்றவன் பதற்றத்தோடு அவளைப் பார்க்க, “வயிறு வலிக்குது.. ஆஆ” என்று வயிற்றை பிடித்துக் கொண்டு கத்தினாள்.

அவன் உறைந்து போய் அவளை பார்த்திருக்க, “இளா.. அம்மாவை கூப்பிடுங்க” என்று பற்களைக் கடித்து வலி பொறுத்து அவள் சொல்ல, புனிதாவை அழைத்து வந்தான்.

“செந்தமிழ் என்னாச்சுடா? என்ன பண்ணுது?” என்று அவளுக்கு அருகில் அமர்ந்தவர் கேட்க, “அம்மா.. வயிறு வலிக்குது. தாங்க முடியல” என்றாள். “எங்க வலிக்குது?” என்று அவள் வயிற்றை அவர் தொட்டுப் பார்த்துக் கொண்டிருக்க, புனிதாம்மா நான் டாக்ஸி புக் பண்றேன். ஹாஸ்பிடலுக்கு போகலாம்” என்றான் இளமாறன்.

“ஆஆ.. இங்கதான் வலிக்குது” என்றவள் வயிற்றில் ஓரிடத்தை சுட்டிக் காட்ட, “செந்தமிழ்.. நான் போய் கஷாயம் கொண்டு வரேன். சூடு வலி தான், குறைஞ்சிடும் அப்படி குறையலைன்னா ஹாஸ்பிடல் போகலாம்” என்று புனிதா சொல்ல, அவள் “ஹ்ம்ம்.. சரிங்கம்மா” என்றாள்.

“வேணாம் ம்மா ஹாஸ்பிடல் போகலாம்” பதற்றம் குறையாமல் அவன் மீண்டும் சொல்ல, “இரு இளமாறா.. அவளுக்கு ஒண்ணும் இல்ல. நீ பயந்து அவளை பயமுறுத்தாத” என்று அதட்டினார்.

புனிதா கிச்சனுக்கு சென்று கஷாயம் போட்டு வந்து தர, அதை குடித்த பிறகு அவள் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. “புனிதாம்மா.. நீங்க இங்கேயே படுத்துக்கோங்க” என்று அவள் சொல்ல, அவளுக்கு அருகில் படுத்தவரை அணைத்தபடி படுத்துக் கொண்டாள். இளமாறன் ஹாலுக்கு சென்று சோபாவில் படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்து செந்தமிழ் வழக்கம் போல் வேலைக்கு கிளம்ப, “நேத்து நைட் எல்லாம் வயிறு வலிக்குதுனு தூங்க விடாம கத்திட்டு இப்போ எங்கடி கிளம்புற” என்று கிளம்பிக் கொண்டிருந்தவளை தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டு இளமாறன் கேட்க,

“நான் இப்போ நல்லா தான் இருக்கேன். எனக்கு மனசுக்கு ஒருமாதிரி இருக்கு. வீட்ல இருக்க என்னவோ மாதிரி இருக்கும். போயிட்டு வர்றேங்க ப்ளீஸ்” அவள் சிரித்துக் கொண்டே சொல்ல, “சரி..” என்றவன், அவளுடன் சாப்பிட்டுக் கிளம்பி, அவளை ஃபேக்டரியில் இறக்கி விட்டு, அவன் கம்பெனிக்கு சென்று அங்கிருப்பவர்களுக்கு வேலைகளை சொல்லியபின் ஆபீஸுக்கு சென்றான்.

ஃபேக்டரியில் வேலை செய்து கொண்டிருந்த செந்தமிழ் திடீரென்று மயங்கி விழ, அருகில் நின்றிருந்த பெண்கள் அவளை தாங்கி பிடித்து அங்கு அமர வைத்து தண்ணீர் அடித்து எழுப்பி பார்க்க, அவள் விழித்தாலும் அரை மயக்கத்தில் தான் இருந்தாள்.

விஷயம் கேள்விப்பட்டு வேறு செக்ஷனில் இருந்த ரேவதி வேகமாக அங்கு வந்து, மேனேஜரிடம் விடுப்பு சொல்லியபின் அவளை கைத்தாங்கலாக அழைத்து சென்று ஹாஸ்பிடலில் சேர்த்த கையோடு இளமாறனுக்குத் தகவல் சொன்னாள்.

அவனும் புனிதாவும் அங்கு வர டாக்டர் செந்தமிழை பரிசோதித்துக் கொண்டிருந்தார். உங்களுக்கு என்ன டென்ஷன்? BP இவ்வளவு இருக்க கூடாதுமா. குழந்தை நல்லா இருக்கு” என்று சொல்லிச் சென்று விட, அவளுக்கு ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டு இருந்தது.

இளமாறன் செந்தமிழுக்கு அருகில் சென்றதும், அவளை தூக்கி அணைத்துக் கொண்டான். “உன்னை போக வேணாம்னு சொன்னேன்ல தமிழ். ஏன் டி இப்படி பண்ற?” என்று செல்லமாக திட்டியவன் கண்கள் கலங்கி இருக்க, அவள் அருகிலேயே அமர்ந்து அவளை மார்பில் சாய்த்து படுக்க வைத்துக் கொண்டான். செந்தமிழ் இன்னும் மயக்க நிலையில் தான் இருந்தாள்.

புனிதா அவர்களை பார்த்து கண் கலங்க, ரேவதி அழுதே விட்டாள். அவளுக்கு வந்தது ஆனந்தக் கண்ணீர் தான். இதற்கு தானே ரேவதி ஆசைப்பட்டாள். ‘தன் தோழி அவள் மனதிற்கு பிடித்தவனுடன் நிம்மதியான மண வாழ்க்கை வாழ வேண்டும். அவள் கணவனுடன் காதல் வாழ்க்கை வாழ வேண்டும்’ என்று ரேவதி நினைத்திருந்தாள்.

அதற்காகத் தான் தவறு என்று தெரிந்தும் கூட, அவளுடன் வேலை பார்ப்பவர்களிடம் தோழிக்கு திருமண வாழ்வில் பிரச்சனை என்றும், அதை தீர்க்க வழி கேட்டும் அப்படி ஒரு காரியத்தை செய்தாள்.

ரேவதியின் கண்ணீரை இளமாறன் கவனித்து விட, அவள் எழுந்து வெளியே சென்று விட்டாள். செந்தமிழ் நன்கு துங்கியிருக்க அவளை மெத்தையில் படுக்க வைத்தவன் வெளியே சென்று, அங்கு அமர்ந்திருந்த ரேவதியின் அருகில் அமர்ந்தான்.

“என்னை மன்னிச்சிடுமா ரேவதி. அப்போ எனக்கு இருந்த பிரச்சனைல நான் செந்தமிழோட மனசை புரிஞ்சுக்காம போயிட்டேன். இனிமே அவளை நான் நல்லா பார்த்துப்பேன்” என்று அவன் ஆத்மார்த்தமாய் சொல்ல,

“நீங்க தான் என்னை மன்னிக்கணும் அண்ணா. செந்தமிழ் கிட்ட உங்களுக்கு தெரியாம மருந்து கொடுக்க சொன்னது நான் தான். அது தப்பு தான். அவ நல்லா இருக்கணும்னு நினைச்சு அப்படி பண்ணிட்டேன். எனக்கு வேண்டியது எல்லாம் ஒண்ணு தான். அவளை சந்தோஷமா பார்த்துக்கோங்க” என்று ரேவதி கண்ணீரோடு சொல்ல, அவன் சிரித்தான்.

“பரவாயில்ல ரேவதி.. அன்னைக்கு செந்தமிழ் அப்படி பண்ணலைன்னாலும் எங்களுக்குள்ள எல்லாம் நடந்திருக்கும். நானும் அப்போ அவ வேணும் அப்படிங்கிற மனநிலைமைல தான் இருந்தேன். ஆனா அது காதல்னு  புரிஞ்சுக்க தான் இவ்ளோ நாள் ஆகிடுச்சு. நான் உன் ஃப்ரெண்ட சந்தோஷமா பார்த்துக்குறேன். அதே மாதிரி நீயும் என் ஃப்ரெண்ட சந்தோஷமா பார்த்துக்கணும்” என்று அவன் சிரித்தவாறு அவள் தலை வருடி சொல்லிட, மனம் நிறைந்த மகிழ்ச்சியில் சிரித்தாள்.

அங்கு வந்த இனியன், “ஏன் டா என் தங்கச்சிக்கு அங்க உடம்பு சரியில்ல. அவளை என்னன்னு கேட்காம இங்க அண்ணனும் தங்கச்சியும் என்ன கதை பேசிட்டு இருக்கீங்க” என்றுவிட்டு இளமாறனுக்கு அருகில் அமர்ந்தான்.

“அவ்வளவு அக்கறை இருக்கிறவன் உன் தங்கச்சி பக்கத்திலேயே இருந்து அவளை பார்த்துக்க வேண்டியது தான. என்னடா நீ எல்லாம் அவளை என்னன்னு கேட்கிறது இல்லையா? எதையோ மனசுல வச்சுட்டு அழுதுட்டே இருக்கா, பயப்படுறா. இதுதான் காரணம்னு சொல்றா. அப்புறமும் சோகமா இருக்கா” என்று மனைவியின் மீதான அக்கறையில் ஆதங்கத்தோடு சொல்ல,

“ஒண்ணும் இல்ல டா மச்சான். நீதான் ஏதாச்சும் அவளை மிரட்டியிருப்ப. உன்னை லாக்கப் ல வச்சு முட்டிக்கு முட்டி தட்டுனா சரியாகிடும்” என்றவாறு அங்கு வந்தான் சரவணன். “வாங்க இன்ஸ்பெக்டர் சார் உங்களுக்கு எப்பவும் என் முட்டி மேல தான் கண்ணு. ஆனா எனக்கு ஏதாவது ஆகிடுச்சுனா உங்க தங்கச்சி ரத்தக் கண்ணீர் வடிப்பாளே பரவாயில்லையா?” என்று இளமாறன் கேட்டிட, மூன்று பேரும் சிரித்தனர்.

ரேவதி, இனியன், சரவணன் மூன்று பேரும் செந்தமிழ் கண் விழித்ததும் அவளை பார்த்து பேசியபின் கிளம்பிட, இளமாறனும் புனிதாவும் அவளுக்கு அருகில் இருந்தார்கள்.

டாக்டர் வந்து மீண்டும் அவளை செக் செய்தவர், “BP குறையவே இல்லை. இப்படி இருந்தா குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை வரலாம். டெலிவரி டைம்ல ரிஸ்க் ஆகிடும். இங்க 3rd ஃப்ளோர் ல சைக்கியாட்ரிஸ்ட் இருப்பாங்க. அவங்க கிட்ட ஒரு டெஸ்ட் எடுத்துட்டு வாங்க. ரிப்போர்ட்ஸ் எப்படி இருக்குனு பார்க்கலாம்” என்று சொல்லி சென்றிட,

“இளா எனக்கு என்னாச்சு? எதும் பெரிய வியாதியா? நான் செத்து போயிடுவேனா” என்று சிறு குழந்தை போல கேட்டவளை, பார்த்து சிரித்தவன், “அதெல்லாம் ஒண்ணும் இல்லடி. பழசெல்லாம் நினைச்சு நீ ஃபீல் பண்ற, பயப்படுற. ஒரு சின்ன டெஸ்ட் அவ்ளோதான். ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டா சரியாகிடும்” என்று தைரியம் சொல்லி, அவளை சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரிடம் அழைத்து சென்றான். புனிதாவும் அவர்களுடன் சென்றார்.

டாக்டர் செந்தமிழிடம் சில பொதுவான கேள்விகளை கேட்ட பின், “உங்க மனசுல என்ன கஷ்டம் இருக்கு சொல்லுங்க? என்று சோர்ந்திருந்தவள் முகம் பார்த்துக் கேட்க, அவள் பதிலேதும் பேசாமலே இருந்தாள். “நீங்க ரெண்டு பேரும் வெளில இருங்க. நான் அவங்க கிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்” என்று டாக்டர் சொல்ல, புனிதாவும் இளமாறனும் அறைக்கு வெளியே சென்றார்கள்.

“புனிதாம்மா.. ஒரு முக்கியமான கிளையண்ட் வந்திருக்காங்களாம். கம்பெனில இருந்து போன் வந்தது. நான் போயிட்டு உடனே வந்துடுறேன். டாக்டர் அவளை செக் பண்றதுக்குள்ள வந்துடுவேன்” என்று சொன்னவன் கிளம்பி சென்றிட,

டாக்டர் ஹிப்னாடிஸ முறையில் செந்தமிழின் ஆழ் மனதில் இருக்கும் அழுத்தங்களை வெளிக்கொண்டு வர அவளை அதற்கான படுக்கையில் படுக்க வைத்து, மேலும் சில பரிசோதனைகளும் செய்தார். புனிதாவை உள்ளே அழைத்த நர்ஸ் அவரை அங்கு தள்ளி ஒரு இருக்கையில் அமர சொன்னார்.

டாக்டர் அங்கிருந்த திரையில் ஒரு ஆப்டிகல் இல்யூஷன் வீடியோவை போட்டு, அதை செந்தமிழை பார்க்க சொன்னார். சிறிது நேரத்தில் அவள் தளர்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

“செந்தமிழ்.. நான் உங்களோட டாக்டர். நீங்க என்னை முழுசா நம்பலாம். சொல்லுங்க உங்களுக்கு என்ன பிரச்சனை? எதுக்கு அழுதுட்டே இருக்கீங்க? ஏன் பயப்படுறீங்க?” என்று நம்பிக்கை தரும் விதமாக பேசியபின் அவர் கேட்க, அவளிடம் மௌனம் தான் பதிலாக வந்தது.

“உங்க மனசுக்குள்ள நிறைய அழுத்தங்கள் இருந்தா அது உங்க குழந்தையை தான் பாதிக்கும். உங்க குழந்தைக்கு அதனால வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படலாம்” அவளை பேச வைத்திடும் நோக்கில் அவர் சொல்ல, “அய்யோ என்னோட குழந்தை பாவம். அவளுக்கு ஏதாவது பிரச்சனை ஆச்சுன்னா இளா மாமா தாங்க மாட்டாரு” என்றாள்.

“சரி அப்போ சொல்லுங்க. உங்களுக்கு மாமியார் தான் பிரச்சனையா?”

“இல்ல.. புனிதாம்மா ரொம்ப நல்லவங்க”

“அப்போ.. உங்க கணவரா?”

“இல்ல..”

“உங்க கவலைக்கு.. பயத்துக்கு என்ன காரணம்?”

“என்னோட சித்தி தான் அவங்களை நேத்து பார்த்தோம். அப்போ இருந்து கஷ்டமா இருக்கு”

“ஏன் அவங்களுக்கும் உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று அவர் கொஞ்சம் புரிந்தவராகக் கேட்டதும், அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

“நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன். நீங்க தைரியமா என்கிட்ட சொல்லலாம். சொன்னா தான் உங்க மனப் பிரச்சனையை சரி பண்ண முடியும். தீர்க்க முடியும்” மேலும் நம்பிக்கை தருமாறு அவர் சொல்ல … செந்தமிழ் தன் வாழ்வின் கருப்பு பக்கங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.

எல்லா பெண்களோட வாழ்க்கையிலும் இந்த மாதிரி கருப்பு பக்கங்கள் இருக்கும். செந்தமிழ் சொல்லட்டும், நாம என்ன நடந்தது அப்படின்னு பிளாஷ்பேக் போய் பார்க்கலாம். என்னடா ஒரு கதைல எத்தனை பிளாஷ்பேக் அப்படின்னு யோசிக்கிறீங்களா? இதுதான் கடைசி பிளாஷ்பேக். கதையின் ஒட்டுமொத்த முடிச்சுகளும் அவிழ போற நேரம்…

செந்தமிழ் +2 முடிச்சிட்டு ரெண்டு வருடங்களா வீட்ல இருந்து தன்னோட தம்பி, தங்கைகளை (சித்தியோட குழந்தைகள்) பார்த்துக்குறது, சமைக்கிறது, வீட்டு வேலைகள் செய்றதுன்னு எல்லாவிதமான வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு ரெண்டு தங்கைகள், ஒரு தம்பி. தங்கைகள் ஆறாம் வகுப்பும், மூன்றாம் வகுப்பும் படித்துக் கொண்டிருக்க, தம்பி ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 3.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்