Loading

என்னுள் நீ காதலாய்💞 

அத்தியாயம் 35

பாம்பு காதனுக்கு செந்தமிழும் அந்த நர்ஸும் பேசியதெல்லாம் கேட்டு விட்டது. இந்த குழந்தை மட்டும் இல்லையென்றால் இந்நேரம் இருவரும் விதியை நினைத்து நொந்த படி இருவேறு பாதைகளில் சென்றிருப்பார்கள். அன்று பணம் வாங்கி அவர் அந்த மருந்தை தந்திருந்தாலும், இருவரின் மனதிற்குள் இருந்த காதல் அப்போதுதான் வெளிவந்தது. இருவருக்குமான தயக்கங்கள் அப்போதுதான் உடைந்தது.

குழந்தைக்காக என்ற பொய்யை சொல்லி இப்போதும் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள். குழந்தையை நினைத்து மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்தவன், அதே மகிழ்ச்சியோடு செந்தமிழை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.

புனிதா சோபாவில் அமர்ந்திருக்க இருவரும் அவருக்கு அருகில் சென்று அமர்ந்தார்கள். “செந்தமிழ்.. எப்படி இருக்கா என் பேத்தி? உனக்கு எப்படி இருக்குன்னு? டாக்டர் சொன்னாங்க” என்று அவர் கேட்க, அவள் ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்து அவரிடம் காட்டினாள். “போன தடவை குழந்தை குட்டியா தான தெரிஞ்சது ம்மா. இந்த தடவை குழந்தை வளர்ந்திருச்சு. டாக்டர் நல்லா குழந்தையை காட்டினாங்க” என்றாள்.

ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்தவர் “அப்போ லாம் ஒரு தடவை தான் ஸ்கேன் பண்ணுவாங்க. இப்போ அடிக்கடி ஸ்கேன் பண்றாங்க” என்றார்.

“புனிதாம்மா நான் வயித்துல இருந்தப்போ, ஸ்கேன் பண்ணும் போது என் கால் குறையா இருக்குனு சொல்லியிருப்பாங்களே. அப்போவே உங்களுக்கு தெரியுமா?” என்று இளமாறன் கேட்க, இருவரும் அவனை அதிர்ச்சியாக பார்த்தார்கள்.

“தெரியும் இளமாறா.. டாக்டர் சொன்னாங்க என்று அவர் சொல்ல இப்போது அவன் அதிர்ச்சியாக அவரை பார்த்தான். “உங்களுக்கு அப்போ கஷ்டமா இல்லையா, நீங்க என்னை வேணாம்னு நினைக்கலையா?” அவன் திகைப்பாய் கேட்க,

அவர் சிரித்தவாறு சொன்னார், “நான் ஏன் அப்படி நினைக்கணும், நீ எப்படி இருந்தாலும் என்னோட குழந்தை தான டா. என் வீட்ல இவர் தான் உனக்கு கணவர் அப்படின்னு ஒருத்தரை காமிச்சு எனக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஒண்ணா இருந்தோம், அவ்ளோதான். சந்தோஷமா இருந்தோமானு கேட்டா இல்லன்னு தான் சொல்லுவேன்.

“அவர் பாட்டுக்கு இருப்பார், வேலைக்கு போவார், வருவார். கொஞ்சம் செலவுக்கு பணம் தருவார். எங்கேயும் வெளில கூப்பிட்டு போனதில்ல. மாசமா இருக்கேன்னு சொன்னப்ப என்ன அப்படின்னு கேட்டதில்ல. கூட ஒருநாள் ஹாஸ்பிடல் வந்ததில்ல. குழந்தை பத்தி எதுவும் கேட்டதில்ல. மாமியார் நாத்தனார் பிரச்சனை ஒரு பக்கம், அன்பே இல்லாதவர் ஒரு பக்கம். மாசமா இருக்கும் போது சிரிச்ச முகமா கூட நான் இருந்ததா ஞாபகம் இல்ல. அது கூட நீ இப்படி இருக்க காரணமா இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க.

“ஸ்கேன் பண்ணி பார்த்துட்டு அதைப்பத்தி நான் உன் அப்பா கிட்ட சொன்னேன். அவர் காது கொடுத்து கேட்டாரா அப்படின்னு கூட தெரியல. நீ பிறந்து உன்னை வீட்டுக்கு தூக்கிட்டு போன நாள்ல இருந்து உன்னை வேண்டாம்னு சொல்லிட்டே இருந்தாரு. நான் முடியாதுன்னு சொன்னதால என்னையும் வேண்டாம்னு போயிட்டாரு. விடு இளமாறா அவருக்கு இப்படி ஒரு தங்கமான பிள்ளை கூட வாழ கொடுத்து வைக்கல” என்று அவர் வாழ்ந்த கடினமான வாழ்க்கையை சொல்லி முடித்தார்.

இளமாறன் புனிதாவின் மடியில் படுத்துக் கொண்டான். ‘அம்மாவின் கஷ்டங்களை நினைத்தும், அதே மாதிரியான கஷ்டங்களை தான் நான் செந்தமிழுக்கும் கொடுத்தேன்’ என்று நினைத்தும் மனம் நொந்து அழுதான்.

“புனிதாம்மா என்னை மன்னிச்சுடுங்க. இதெல்லாம் எனக்கு ஏற்கனவே தெரியும். இருந்தாலும் எல்லாத்தையும் மறந்துட்டு எதையோ நினைச்சு நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்” என்று மனதார மன்னிப்பு கேட்டு அழுதவனை, “வேணாம் இளமாறா.. அழாத. நீ எதனால அப்படி நடந்துக்கிட்டன்னு அம்மானால புரிஞ்சுக்க முடியாது” என்று தேற்றி அவன் கண்ணீரை அவர் துடைக்க, அம்மாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான்.

“புனிதாம்மா குழந்தையை ஸ்கேன்ல பார்த்ததுல இருந்து நான் எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? நிறைய பேர் எனக்கு குழந்தையே பிறக்காதுன்னு சொன்னாங்க. சில பேர் பிறந்தாலும் என்னை மாதிரி இருக்கும்னு சொன்னாங்க. அதுக்கு தான்மா நான் குழந்தை வேணாம்னு சொன்னேன்.

“எனக்கு பயமா இருந்தது, ஒருவேளை குழந்தை என்னை மாதிரி இருந்துட்டா, என்னை மாதிரி எவ்வளவு கேலியும் கிண்டலும் இந்த உலகத்துல என்னோட குழந்தை பார்க்க வேண்டியதா இருக்கும். அதை நினைச்சு பயந்து தான் அபார்ஷன் பண்ணனும்னு நினைச்சேன். செந்தமிழை கண்டபடி பேசிட்டேன்.

“என்னை சுத்தி எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க. இப்படி ஒரு அம்மாவுக்கு நான் ஒரு நல்ல மகனா இருக்கல. என்னை நம்பி வந்த செந்தமிழுக்கு நான் நல்ல புருஷனா இருக்கல. என் குழந்தைக்கு நான் நல்ல அப்பாவா இருக்கல. அன்னைக்கு தப்பு தப்பா பேசிட்டேன். நான் நல்ல மனுஷனாவே இருக்கல ம்மா. புத்தி மாறி தப்பு பண்ணிட்டேன். எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன். நான் நல்லவனே இல்லம்மா” என்று தன் தவறுகளை முற்றிலுமாக உணர்ந்து கதறி அழுதவனை பார்த்து, புனிதாவும் செந்தமிழும் மனம் தாங்காமல் அழுது விட்டார்கள்.

“நீயும் உன் அப்பா மாதிரி பண்ணிட்டன்னு எனக்கு உன்மேல கோபம் வந்தது. செந்தமிழை இப்படி கஷ்டப்படுத்திட்ட அப்படின்னு எனக்கு வருத்தம் இருந்தது. ஆனா நிரஞ்சனா பிரச்சனைக்கு அப்புறம் நான் உனக்கு கொஞ்சம் டைம் குடுத்திருக்கணும். உடனே கல்யாணம் பண்ணி வச்சா வர்ற பொண்ணு உன் மேல அன்பா இருந்தா உன் மனசுல இருக்க கஷ்டம் மாறும்னு நினைச்சேன்.

“அதான் கல்யாணம் பண்ணா பணம் தர்றேன் அப்படின்னு கண்டிஷன் போட்டேன். அதனால தான் நீ இப்படி ஒரு முடிவெடுத்திருக்க. அப்போ நீ இப்படி பண்ண நானும் ஒரு காரணம் ஆகிட்டேன். தப்பு நடந்திடுச்சு. நாம செஞ்ச தப்பை உணர்ந்தா போதும், மனசார மன்னிப்பு கேட்டா போதும், இனிமேல் அந்த தப்பை செய்யாம இருந்தா போதும்.

“இளமாறா நடந்ததெல்லாம் விடு. நீ ஒரு நல்ல மனுஷனா, உன் குழந்தைக்கு ஒரு நல்ல அப்பாவா இனிமே இருக்கணும், செந்தமிழையும் நல்லா பார்த்துக்கணும். எனக்கு அதுதான் சந்தோஷம்” என்று மகனிடம் நீண்ட நாள் மன பாரங்களை எல்லாம் இறக்கி வைத்தார் புனிதா.

இந்த நெகிழ்ச்சியான தருணத்தைக் கண்டு, ஆனந்தக்கண்ணீரில் நனைந்திருந்த செந்தமிழ் கண்களை துடைத்துக் கொண்டு, இருவருக்கும் தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாள். புனிதாவை சாப்பிட சொல்லி ஹோட்டலில் வாங்கி வந்ததை அவருக்கு பரிமாறினாள். அவர் சாப்பிட்டதும் காபி போட்டு கொடுத்து விட்டு அறைக்கு சென்றாள்.

அவள் ஒன்றும் பேசாமல் அவனுக்கருகில் மெத்தையில் படுத்திருந்தாள். ஆனால் பேசாமல் படுத்திருந்தவளின் மனதில் மகிழ்ச்சியின் ஆரவாரம். இளமாறனிடம் அவள் விரும்பியது அவன் உள்ளத்தை தான். சொந்த அண்ணனே ஏமாற்றி கலங்கி போயிருந்த நண்பனுக்காக அவன் வந்து நின்றான். அந்த அன்பான இளமாறனை தான் செந்தமிழ் காதலித்தாள்.

‘இங்கு வந்த நாளிலிருந்து நான் நேசித்த மாதிரி இல்லாமல் இவன் வேறு மாதிரி இருக்கிறானே’ என்ற வலி தான் அதிகமாய் இருந்தது அவளுக்கு. உண்மையில் காதல் அப்படிதான். ஒருவரை காதலிக்கும் போது அவர் அப்படி இப்படி என்று மனதிற்குள் நினைத்து வைத்திருப்போம். ஆனால் அவர்கள் அப்படி இல்லாத போது, நம் மனதில் இருந்த அவர்களை பற்றிய பிம்பம் பொய் என்பதை ஏற்க முடியாமல் தான் வலியில் துடிக்கிறோம். இளமாறனுக்கு நிரஞ்சனா விஷயத்தில் நடந்ததும் அது தான்.

‘இளமாறன் தன்னுடைய மனப்போராட்டத்தில் இருந்து வெளியே வந்து விட்டான். கவலைகளில், வருத்தங்களில் இருந்து மீண்டு வந்து விட்டான்’ என்ற மனநிம்மதி செந்தமிழுக்கு . அதே மனநிம்மதியுடன் தன் மேல் கையை போட்டு அருகில் படுத்திருக்கும் இளமாறன் பக்கம் திரும்பி படுத்தவள் அவனை அணைத்தாள். அவள் அணைப்பில் அவன் மெதுவாக விழிகள் திறந்து பார்த்தான்.

அழுது சிவந்து போய் இருந்த கண்களில் அத்தனை வலி, கடந்த காலங்கள் தந்த சோர்வு. “நீங்க என்னை கல்யாணம் பண்ணிட்டு வந்ததால தான் நான் அங்க இருந்து வெளில வர முடிஞ்சது. எனக்கு அன்பான ஒரு அம்மா கிடைச்சாங்க. உங்க கூட கொஞ்ச நாள் சந்தோஷமா இருக்க முடிஞ்சது. பழசெல்லாம் மறந்துட்டு நிம்மதியா தூங்குங்க. இன்னைக்கு இங்க இருக்கிற இளமாறன் தான் உண்மை” என்று சொன்னவள் அவன் கண்களில் முத்தமிட, அவனோ அவளிதழை தன்னிதழால் கவ்விக் கொண்டான்.

முத்தமாக அவள் மொத்த இதழையும் எடுத்துக் கொண்டவன், “ஐ லவ் யூ டி தமிழ்!” என்று சொல்லி சிரித்தான். “இப்படி சிரிச்சா தான் இளா வுக்கு நல்லா இருக்கு” என்று அவன் சிரிப்பில் தொலைந்து மீண்டவள் சொல்ல, “தமிழ் நீ என் கூடவே இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன்” என்றான்.

இளமாறன் எழுந்து அவள் வயிற்றில் இருந்த சேலையை விலக்கி அவள் வயிற்றில் முத்தம் வைத்தான். “பட்டு குட்டி அப்பா மேல கோபமா இருக்கியா? நான் நிறைய தப்பு பண்ணிட்டேன்ல” என்றவாறு அவள் வயிற்றை அவன் வருடித் தர குழந்தை உதைத்தது. அந்த இடத்தில் அவன் கன்னத்தை வைத்துக் கொண்டவன், அங்கே குழந்தையின் பாதம் இருந்து அது அவன் கன்னத்தில் உதைப்பதாக நினைத்துக் கொண்டான்.

சிறிது நேரம் கன்னத்தை அப்படியே அவள் வயிற்றில் வைத்து கண் மூடியிருந்தான். பின் எழுந்து வயிற்றில் இன்னும் முத்தங்கள் வைத்தவன் “இது என்னோட குழந்தைக்கு” என்றான். இன்னும் அவள் சேலையை விலக்கி அவள் மார்பில் முத்தங்கள் வைத்து, “இது என் குழந்தையோட அம்மாவுக்கு” என்க, மார்பில் அவன் லேசான மீசை முடி குத்தி அவளுக்கு குறுகுறுக்க, அவன் பின்னந்தலைமுடியை இறுக்கமாக பற்றி கொண்டாள்.

அவன் எழுந்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து மோக மூச்சுகளுடன் முத்தங்கள் வைத்துக் கொண்டிருக்க, செந்தமிழ் தன்னிலை மறக்க ஆரம்பித்தாள்.

இளமாறன் செந்தமிழ் இருவருக்கும் திருமணம், முத்தம், கலவி எல்லாம் அவசர அவசரமாய் புரிதல் இல்லாமல் நடந்தேறியிருக்க, அவன் செந்தமிழ் காதலை தெரிந்து கொண்ட பின், அவளை சமாதானப்படுத்தி முதலில் அவள் மனதை மாற்றலாம் என்று நினைத்து விலகி இருந்தான். இருந்தாலும் அவனால் கட்டுப்படுத்த முடியாத ஆசைகளை சில நேரங்களில் முத்தங்களால், செல்ல தீண்டல்களால் தீர்த்து கொண்டான்.

ஆனால் இன்னும் செந்தமிழ் அவனிடம் விலகி இருப்பதை போலத்தான் அவனுக்கு தோன்றுகிறது. அவள் மனதை நெருங்கிய பிறகு அவள் உடலை நெருங்கலாம் என்றிருந்தவன், அவளை இழந்து விடுவோமோ என்கின்ற பயத்தில் அதை மாற்றி செய்யலாமா என்று யோசித்தான்.

“இன்னைக்கு அந்த நர்ஸ் உன்கிட்ட ஏதோ பண்ணுங்கன்னு சொன்னாங்களே, அவங்க என்ன சொன்னாங்கனு நீ என்கிட்ட சொன்னா நாமளும் அதே மாதிரி பண்ணலாம்” என்று இளமாறன் அவள் காதில் சிணுங்கலாக சொல்ல, அதை நினைத்து பார்த்தே வெட்கத்தில் சிவந்தாள்.

“இதுக்கே வெட்கப்பட்டா எப்படி? ரொம்ப நாள் ஆச்சு, நாம ஒண்ணா இருக்கலாமா?” மனதில் இருப்பதை செயலாய் மாற்ற நினைத்து அவன் கேட்க, மெல்லிய தயக்கத்தோடு “ஹ்ம்ம்..” என்றாள். “ஆனா..” என்று ஏதோ சொல்ல வந்தவள் சொல்லாமல் தயங்க, “சொல்லு தமிழ்..” என்றான்.

காதலாய் வருவாள் 💞 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்