
என்னுள் நீ காதலாய்💞
அத்தியாயம் 33
“புனிதாம்மாவும் அவருக்கு வேறொரு நல்ல பொண்ணா பார்த்திருப்பாங்க. இப்பவும் ஒண்ணும் பிரச்சனை இல்ல. நான் விவகாரத்துக்கு கையெழுத்து போட்டு கொடுத்துட்டேன். என்னால தான் அவருக்கு மாமனார் வீட்டு குடும்ப ஆதரவோ, இல்லை நகை பணம் சீர்வரிசை இப்படி எந்த ஒரு பிரயோஜனமும் இல்ல.
“இளா அவருக்கு தகுதியான, படிச்ச, அவரை புரிஞ்சுக்கிற, அவருக்கும் அவர் பிசினஸுக்கும் ஆதரவா, ஒரு நல்ல குடும்பத்துல நல்ல பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டும்” என்று செந்தமிழ் தன் மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி முடிக்க,
நான்கு பேரும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனார்கள். அப்போது தான் வந்த புனிதாவும் வெளியே நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார்.
“நான் சும்மா தான் அந்த ஃபார்ம்ல கையெழுத்து வாங்கினேன். டிவோர்ஸ் க்கு லாம் அப்ளை பண்ணல” என்று இளமாறன் அதிர்ச்சியில் தடுமாறி பேச, செந்தமிழ் பதிலேதும் பேசாமல் அமைதியாக அவனை பார்த்தாள்.
“இளமாறனை பத்தி உன் குழந்தையை பத்தி யோசிச்சு பாரு” என்று சரவணன் சொல்ல,
“அவரை பத்தி யோசிச்சு தான் நான் இதை சொல்றேன். நான் இங்க கல்யாணமாகி வரும் போது ‘எப்படியும் இவருக்கு ஒருநாள் என்னோட காதல் புரியும். என்னை ஏத்துப்பார். நான் அவர்கூட வாழணும்’ அப்படின்னு ஒரு சின்ன ஆசை இருந்தது. இப்போ அதும் இல்ல.
“அவர் என்னை கல்யாணம் பண்ணிட்டார். அவர் குழந்தை என் வயித்துல இருக்கு. எனக்கு பண்ண தப்புகளுக்கு குற்ற உணர்ச்சியில இருக்கார். அதனால என்கிட்ட அன்பா நடந்துக்கிறார், அவ்வளவுதான். இதுல காதல் எங்க இருக்கு? இந்த சந்தோஷமான மனநிலையில நாங்க பிரிஞ்சுட்டோம்னா யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. ஒருவேளை நான் இங்கேயே இருந்து பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்து அவர் என்னை மறுபடியும் வார்த்தைகளால காயப்படுத்தினா என்னால அதை தாங்கிக்கவே முடியாது.
“என் மனசுக்குள்ள அவர் மேல இருக்கிற காதலை என்னால அழிச்சுக்க முடியல. அது ரொம்ப கஷ்டமா இருக்கு. குழந்தையை அவங்க வேண்டாம்னு சொன்னாலும் நான் வளர்த்துப்பேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. இது தான் என்னோட வாழ்க்கையில நானா எடுக்கிற முதல் முடிவு. அது சரியோ தப்போ, என்னால சமாளிக்க முடியும். இதுல எந்த மாற்றமும் இல்ல” என்று கண்ணீருடன் சொன்னவளை இன்னும் அதிர்ச்சி மாறாமல் பார்த்தார்கள்.
அவளும் நீண்ட நாள் தன் மனதில் அழுத்திக் கொண்டிருந்த விஷயங்களை எல்லாம் சொல்லி விட்டாள். அவள் பேசியதை எல்லாம் கேட்டு ஆண்கள் கலங்கி விட, ரேவதியும் புனிதாவும் அழுதே விட்டார்கள்.
போ என்றால் போவதற்கும், இங்கேயே இரு என்றால் இருப்பதற்கும் அவள் என்ன பொம்மையா. இன்னும் அவள் மனதில் சொல்ல முடியாத காயங்களும், வலிகளும், ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன. கோபத்தில் குழந்தையை தந்துவிட்டு போய்விடுவேன் என்று அவள் சொன்னாலும், ஒரு தாய் அவ்வளவு எளிதாக சொல்லிவிட மாட்டாள்.
தன் குழந்தைக்கு ஒரு அன்பான, உரிமையான, பாதுகாப்பான இடம் இதுதான் என்று நம்புகிறாள். ஆனால் அவளுக்கும் இது தான் புகலிடம் என ஏனோ நம்ப மறுக்கிறாள். ஒரே குடும்பமாக ஒன்றாக வாழ்வோம் என்ற ஆசைக்கும், ஏற்கனவே வாழ்க்கை தந்த காயங்களுக்கும் இடையில் போராட ஆரம்பித்து விட்டாள். என்றோ ஓர்நாள் யாருமற்று தனித்து நின்றுவிடுவோமோ என்ற பயமும் வலியும் அவள் மனதை உறுத்திக் கொண்டேயிருக்கிறது.
இளமாறன் அவன் மொத்த போராட்டங்களையும் வலிகளையும் அவளுக்கு தந்துவிட்டு தன்னை மீட்டுக் கொண்டான். செந்தமிழோ அவளை மீட்க முடியாமல் துவண்டு போயிருக்கிறாள். குழந்தை பிறந்த பிறகு என்ன செய்யலாம் என்று அவள் யாருக்கும் சொல்லாத, வேறொரு முடிவோடும் தான் இருக்கிறாள்.
“அவனை கல்யாணம் பண்ணிக்க சொல்ற. அப்போ நீ ஏன் தனியா இருக்கணும். நீயும் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ” என்று சரவணன் சொல்ல, “சரி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று செந்தமிழ் சொன்ன பதிலில் திடுக்கிட்டு அவர்கள் பார்த்திருக்க,
“நான் அப்பா வீட்ல இருக்கும் போதே யாரும் என்னை கல்யாணம் பண்ண வரல. இதுல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. குழந்தை வேற பிறந்த பிறகு யாருண்ணா என்னை கல்யாணம் பண்ணிப்பாங்க. அப்படியே கல்யாணம் பண்ணிட்டாலும் என்ன பெரிய சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்திட போறேன்” என்று கண்ணீரை துடைத்து, சிரித்துக் கொண்டே சொன்னவள் அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலையை மாற்ற முயன்றாள்.
“என்னடா பேசாம இருக்கீங்க நாங்க எவ்வளவோ சொல்லி பார்த்துட்டோம். அவ பிடிவாதமா இருக்கா. எனக்கு தமிழ் வேணும். நான் அவளை மனசார விரும்புறேன், இப்போ இல்ல அவளை பொண்ணு பார்த்திட்டு வந்த நாள்ல இருந்து தான் நான் அவளை காதலிக்கிறேன். எனக்கு நடந்த பிரச்சனையை வச்சு, அவளை விலகி போகணும்னு நானே அவளை நிறைய கஷ்டப்படுத்திட்டேன்.
“நீங்க அவளை இங்கேயே இருக்க சொல்லுங்க டா. நீங்க சொன்னா அவ கேட்பா” என்று இளமாறன் கண்ணீரை அடக்கி குரலுடைந்து சொல்ல,
“நாங்க சொல்லி செந்தமிழ் இங்க இருந்தா நல்லா இருக்காதுடா. நீதான் அவ இப்படி பேச காரணம். அப்போ நீதான் அவளை இந்த வீட்டை விட்டு போகமாட்டேன்னு சொல்ல வைக்கணும். இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை மட்டுமில்ல உங்க குழந்தையோட வாழ்க்கை அதையும் யோசிச்சு நல்ல முடிவா எடுங்க” என்று சொல்லி மூவரும் கிளம்பி விட, செந்தமிழ் அறைக்கு சென்று விட்டாள்.
வீட்டிற்குள் வந்த புனிதா மகனை கேள்வியாக பார்த்தார். செந்தமிழ் மாறி விட்டாள் என்று அவர்கள் நினைத்திருக்க, அவளோ வேறு முடிவில் இருக்கிறாள் என்று நினைக்கையில் இருவருக்கும் மனம் கனத்து தான் போனது. அவளை எப்படி சமாதானம் செய்வது என்று இருவருக்கும் தெரியவில்லை.
ஏடிஎம் வாசலில் இருந்து ஏடிஎம்மிற்குள் சென்ற செக்யூரிட்டி உடையில் இருந்த ரேவதியின் அப்பா பாண்டி, அங்கே ஒரு ஓரமாக ஒளித்து வைத்திருந்த பட்டன் போனை எடுத்து ஒரு எண்ணுக்கு டயல் செய்தான். “இப்போதான் அவங்க என்னை முழுசா நம்ப ஆரம்பிச்சிருக்காங்க. நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. சீக்கிரமே ரேவதியை கூப்பிட்டு வந்துடுவேன்” என்று சொல்லி கட் செய்து, போனை அதே இடத்தில் மறைத்து வைத்து விட்டான். வாசலுக்கு வந்து சேரில் அமைதியாக உட்கார்ந்து கொண்டான்.
நாட்கள் நகர்ந்த வண்ணம் இருந்தன…..
‘இளமாறன் இரவு தூங்கும் போது செந்தமிழை அணைத்து கொண்டு படுப்பது, அடிக்கடி அவளை பார்த்து ரசிப்பது, அவள் ஃபேக்டரியில் இருக்கும் போது ரேவதியின் போனுக்கு போன் செய்து அவளிடம் பேசுவது, வீட்டில் அவள் அருகிலேயே அமர்ந்து கொள்வது, செந்தமிழ் எதிர்பாராத போது அவள் கன்னத்திலும் இதழிலும் முத்தங்கள் வைப்பது, அவளுக்கு எப்போது பார்த்தாலும் ஐ லவ் யூ சொல்லிக் கொண்டே இருப்பது,
அவள் ஞாயிறன்று இனியன் வீட்டிற்கு சென்றால் இவனும் கூடவே செல்வது, அவளுக்கு மாங்காய் பழங்கள் சத்தான பொருட்கள் எல்லாம் வாங்கி வந்து சாப்பிடு.. சாப்பிடு.. என்று தட்டில் வைத்து கொடுப்பது’ போன்ற காதல் இம்சைகளை நாள் தவறாமல் செய்து வந்தான். செந்தமிழ் அதற்கு சந்தோஷ படவும் இல்லை. எரிச்சல் படவும் இல்லை. எப்போதும்போல் அவள் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
தினமும் பைக்கில் இளமாறன் தான் செந்தமிழை ஃபேக்டரியில் விட்டு, அழைத்து வருகிறான். அவளுக்கும் அலைய முடியாததால் சரி என்று ஒத்துக் கொண்டாள். செந்தமிழை இழக்க விரும்பாத புனிதா, அவளை எப்படி இங்கேயே இருக்க வைப்பது என்ற வழி தெரியாமல் கவலையோடு இருந்தார்.
புனிதா தனக்கு தெரிந்த ஜோசியரிடம் சென்று, இனியன் ரேவதி நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நல்ல நாள் குறித்து வந்தார்.
அன்றிரவு செந்தமிழ் தூங்கியிருக்க, இளமாறன் அவள் வயிற்றில் கையை போட்டு பின்புறமாக அவளை அணைத்துக் கொண்டு படுத்திருந்தான். அவன் தூக்கம் தொலைத்து பல நாட்கள் ஆகி விட்டன. ஒருபக்கம் செய்த தவறுகள், இன்னொரு பக்கம் செந்தமிழின் விலகல், இரண்டையும் எப்படி சரி செய்வது என்று தினமும் தான் யோசிக்கிறான். ஒரு வழியும் புலப்படவில்லை.
செந்தமிழிடம் எந்த மாற்றமும் இல்லை. ‘அவள் மனதை மாற்ற என்ன செய்யலாம்?’ என்ற யோசனையில் அவனிருக்க, அவள் வயிற்றின் மேல் இருந்த அவன் கையில் ஏதோ துடிப்பு தெரிய சட்டென்று கையை எடுத்து விட்டான்.
மீண்டும் அவன் உள்ளங்கையை மெல்ல அவளுடைய வயிற்றில் வைக்க, குழந்தை உதைக்க ஆச்சரியத்தில் மூச்சை இழுத்து விட்டவனுக்குள், சொல்ல முடியாத ஓர் பரவச உணர்வு. அவள் வயிற்றை அவன் மெதுவாக வருடித் தர, ஆடை மறைத்திருந்தாலும் அந்த துடிப்பு, அசைவு அவன் கையில் நன்றாகவே தெரிந்தது.
சூழ்நிலைகளின் பிடியில் சிக்கி தன்னை இழந்து இருளுக்குள் பூட்டிக் கொண்டவனுக்கு ஒரு ஒளி தெரிந்தது. மனம் முழுக்க மகிழ்ச்சி நிறைந்திருந்தால், சில சமயம் எந்த புலன்களும் இயங்காது ஸ்தம்பிக்கும், ஒரு மாயையில் இருப்பது போல் தோன்றும். அப்படி தான் இருந்தது இளமாறனுக்கும்.
புனிதா இதற்காக தான் அவனுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று யோசித்தார். காலமும் மனிதர்களும் தரும் காயத்தை ஒரு குழந்தையின் சிரிப்பு ஆற்றும். சின்னஞ்சிறு பிஞ்சு விரல்களின் தீண்டல் ஆற்றும். புனிதா வாழ்வில் கண்ட அத்தனை துன்பங்களையும் கடந்து வந்தது இளமாறனால் தான்.
முதன் முதலாக இளமாறன் ஆனந்த கண்ணீர் வடித்தான். சிரித்துக் கொண்டே அழுதான். இப்போதே குழந்தையை கையில் ஏந்திக் கொள்ள மாட்டோமா என்று அவன் மனம் ஏங்கியது. இன்னும் இறுக்கமாக செந்தமிழை அணைத்துக் கொண்டான். “ஹ்ம்ம்..” என்று சோர்வோடு உறக்கத்தில் இருந்தவள், கண்களை மூடியவாறு சிணுங்கினாள்.
காலை எழுந்ததில் இருந்து உற்சாகமான மனநிலையில் இருந்தான் இளமாறன். மனமெங்கும் இருந்த சந்தோஷத்தில் முகமெங்கும் தெரிந்த பிரகாசத்தோடு, விசிலடித்து கொண்டே ஆபீஸுக்கு கிளம்பி கொண்டிருந்தான். வெகு நாட்களுக்கு பிறகு செந்தமிழ் கண் இமைக்காமல், அவள் கணவனை அசையாமல் நின்று பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
கண்ணாடியை பார்த்து தலைமுடியை சீவிக் கொண்டிருந்தவன், அவன் பின்னந் தலைமுடியை லேசாக கோதி சரிசெய்து கொண்டிருக்க, நிலைக் கண்ணாடியில் தெரிந்த அவன் முக அழகிலும், அவன் தலைக் கோதும் அழகிலும் மெய்மறந்து நின்று விட்டாள்.
திரும்பி அவளை பார்த்தவன் அவள் அசையாமல் அவனை ரசிப்பதை கண்டு வெட்கத்தில் சிரித்தான். இன்னுமே அசையாமல் நின்றிருந்தவளின் அருகில் வேகமாக சென்று, அவள் இதழை தன் இதழால் கவ்விக் கொண்டு முத்தமிட, அப்போது தான் தன் தோகை இமைகளை படபடவென அசைத்தாள்.
அவள் விழியழகில் மெய் மறந்து அவன் முத்தத்தை நீட்டித்துக் கொண்டே போக, அவள் அவனுக்கு இசைவாக அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள். இதழை விடுவித்து இருவரும் வெட்கத்தோடு சிரித்தார்கள்.

