Loading

அத்தியாயம் 8

‘கிடைக்கவே கிடைக்காது என்பதன் மீது தான் எத்தனை கிறுக்கத்தனம்.’

______________________

நிகழ்…

இறுதியாக புவியிடம் தன் அகம் காட்டும் இரண்டு வரிகள் எழுதிடும் வாய்ப்பு. இதுவே கடைசியும் கூட.

இனி எழுதத் தோன்றி எழுதினாலும் புவியிடம் முல்லையால் சேர்பித்திட முடியாது. அவன் மீதான தன் ரசனையை, உள்ளம் உருகும் நேசத்தை… தற்போது போல் நினைத்த நேரமெல்லாம் இரண்டு வரியில் காகிதத்தை நிரப்பி அவனிடம் காட்டிட முடியாது.

மனம் பாரமேறி கனத்துக் கிடந்தது.

புவிக்கும் தன்மீது நேசம் இருக்கும்… இருக்க வேண்டுமென்று முல்லை எதிர்பார்க்கவில்லை. ஒரு ரசிகையாக அவனிடம் தன்னைக் காட்டிக்கொள்ள அவள் கையாண்ட முறையில் தன் மனதின் நேசத்தையும் தன்னை அறியாது அவனுள் கடத்தியிருந்தாள். வார்த்தைகளால் விதைத்திருந்தாள்.

கையில் காகிதமும் பேனாவுமாக அமர்ந்திருந்த முல்லைக்கு ஒன்றும் எழுதத் தோன்றவில்லை. எதில் தொடங்கி எதில் முற்றுப்பெற.

நெஞ்சம் முழுக்க இதுவரை கண்டிராத பெரும் வலி.

வெண்ணிற காகிதத்தை வெறித்தபடி நேரம் கடப்பதை உணராது அமர்ந்திருந்தாள்.

கண்கள் மட்டும் அவளது இதயத்தின் ஒவ்வொரு நொடி தவிப்பையும் ஏக்கமகா பிரதிபலித்தது.

சூரியன் எட்டிப்பார்த்திட தீபிகா சென்று குளித்து வந்து கல்லூரிக்கு கிளம்பியதைக் கூட முல்லை உணரவில்லை.

“வனம்.”

தேர்விற்கு செல்லத் தயாராகிய தீபிகா இன்னும் சிலையென வெற்று காகிதத்தோடு அமர்ந்திருக்கும் முல்லையின் அருகில் சென்று அவளின் தோள் தொட்டாள்.

சட்டென்று தீபிகாவின் இடையில் பக்கவாட்டாக முகம் புதைத்த முல்லை வெடித்துக் கதறினாள்.

எதற்கு இந்த அழுகை என்று முல்லைக்கும் தெரியவில்லை.

“வனம்?”

“ரொம்ப வலிக்குது தீபி.” தழுதழுப்பின் உச்சம் காற்றாய் ஒலித்தது முல்லையின் குரல்.

“எனக்கு என்ன சொல்றது தெரியல வனம். இது இப்படித்தான்னு உனக்கும் தெரியும். தெரிஞ்சும் விளையாட்டாய் நீ ஆரம்பிச்சது, எவ்ளோ வலி கொடுக்குது” என்ற தீபிகா, “ஒரே வழி தான். புவி சாரை நேரில் பார்த்து எல்லாம் சொல்லிடு. அவருக்கும் உன் மேல் விருப்பமிருக்கா கேட்டுக்கோ” என்றாள்.

மெல்ல நிமிர்ந்த முல்லை…

“இருக்கு சொன்னாலும் கஷ்டம். இல்லைன்னு சொன்னாலும் கஷ்டம்.” முல்லை வேண்டாமென மறுத்தாள்.

“அப்புறம் எதுக்கு இதெல்லாம்” என அவளின் கையில் காற்றுக்கு படபடத்துக் கொண்டிருந்த காகிதத்தைக் காட்டினாள்.

“ஒரு ரசனை. சின்ன பிடித்தம். இது ஆழமான நேசமா மாறும் அப்போ தெரியலையே” என்ற முல்லை, “என்ன பண்ணனும் கூட தெரியல தீபி. ஆனால் தாத்தாவை மீறி எதுவும் செய்ய முடியாதுன்னு மட்டும் தெரியும்” என்றாள்.

“நான் ஆகாஷ் கிட்ட எல்லாம் சொல்லப்போறேன்” என்று தீபிகா நகர, வேகமாக அவளின் கையை எடுத்து தன் தலையில் வைத்த முல்லை, “எதுவும் சொல்லக் கூடாது. இது என் மேல் சத்தியம்” என்றதோடு, “இதையும் மீறி நீ சொன்னா நான் உன்கிட்ட பேசுறது இதுதான் கடைசி” என்று சொல்லியிருந்தாள்.

“இது அநியாயம் வனம்” என்ற தீபிகா, “சப்போஸ் புவி சாரும் உன்னோட இந்த காகித விடு தூதில் ஈர்க்கப்பட்டு உன்னை விரும்புறாருன்னா என்ன பண்ணுவ?” எனக் கேட்டாள்.

“யாருன்னு தெரியாத ஒரு பொண்ணு அனுப்புற காகிதத்துக்கு மதிப்புக் கொடுத்து காதல்ன்னு நினைக்கிற அளவுக்கு அவர் ஒன்னும் குழந்தை இல்லை” என்ற முல்லை, ‘தன் வார்த்தைகள் அவனுள் எவ்வித தடுமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காதா?’ என்று தவித்து ஓலமிட்ட மனதை அடக்கும் வழி தெரியாது கையிலிருந்த காகிதத்தை நான்காக மடித்து வைத்துவிட்டு குளியலறை புகுந்து கொண்டாள்.

நீருக்கு அடியில் நின்றவள் தன் மனதின் கேவல் அனைத்தையும் தண்ணீரில் கரைத்திட முயன்றாள். காதலாய் பற்றிக்கொண்ட நெஞ்சம் நேசமாய் கசிந்துருகுமே தவிர்த்து கானலாய் மறைந்திடுமா என்ன?

புவிக்கு முதல் கடிதம் எழுதி வைத்தது முதல், தன் பக்கமிருந்து மட்டுமே அனைத்தையும் பார்க்கிறாள். அவன் பக்கம் என்ன என்பதை அவள் சிந்திக்கவே இல்லை.

முல்லையாவது அன்றைய இரவு அவனது ஆளுமையில், கம்பீரத்தில் அவனால் ஈர்க்க மட்டுமே செய்தாள். ஆனால் அவனோ அவளின் ரசினையான விழிகளில் பார்த்த நொடி மனதில் சலனம் கொண்டிருந்தானே.

புவியை முல்லை எந்தவொரு விதத்திலும் நெருங்காது தள்ளியே நின்றிருந்தாள், அவனுள் அது வெறும் சலனமாக மட்டுமே இருந்து காணாமல் போயிருக்கும்.

அதற்கு தன் எழுத்துக்களால், அவன் மீதான ரசனைகளால் உயிர் கொடுத்து காதலிக்க வைத்து, வலி கொடுத்து செல்லவிருக்கிறோம் என்பதை இந்நொடி வரை முல்லை அறியவே இல்லை.

குளித்து முடித்து வந்த முல்லை நேரத்தை கவனித்து வேகமாக கல்லூரி செல்லத் தயாராகினாள்.

கல்லூரியில் அவர்களின் ஆஸ்தான இடமான குல்முகர் மரத்திடம் வரும் வரையில் கூட முல்லை தீபிகாவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

“எதுவும் நினைக்காம எக்ஸாம் நல்லா எழுது வனம். ஆகாஷ் உட்கார்ந்திருக்கான். சாதாரணமா முகத்தை வச்சிக்கோ. அப்புறம் என்ன ஏதுன்னு கேட்பான்” என்றாள் தீபிகா.

“ஹாய் டா!” முல்லை ஆகாஷின் அருகில் அமர்ந்ததும் அவனின் தோள் சாய்ந்து கொண்டாள்.

“என்ன பக்கி… படிச்சிட்டியா இல்லை பிட் எதும் கொண்டுப்போறியா?” என்ற ஆகாஷ் தீபியிடம் கொட்டு வாங்கியிருந்தான்.

“என்ன பண்ணுது வனம். டல்லா தெரியுற” என்ற ஆகாஷ், முல்லையின் அமைதியில் தீபிகாவை ஏறிட்டான்.

“இனி நாம பார்த்துக்க முடியாதுல” என்று சமாளித்தாள் தீபிகா. ஒருவகையில் அதுவும் உண்மை தான்.

“ஹேய் டார்லிங் சில். இதுக்கா ஃபீல் பன்ற? உன்னால் தான் வீரமுத்துவை மீறி எங்களை வந்து பார்க்க முடியாது. ஆனால் நாங்க வரலாம் இல்லையா? எப்போ தோணுதோ அப்போ ஓடி வந்திடுறோம்” என்றான் ஆகாஷ்.

“ம்க்கும் வீரமுத்து முதலில் உன்கிட்ட பேசவிடுறாரா பாரு” என்றாள் தீபிகா.

“வேணும்னா நான் பர்தா போட்டுட்டு வரேன்” என்று ஏதேதோ பேசி முல்லையை கொஞ்சமாக சிரிக்க வைத்தான் ஆகாஷ்.

“எப்போ கிளம்புறீங்க?”, ஆகாஷ்.

“எனக்கு மூணு மணிக்கு டிரெயின். அவளுக்கு மூணு இருபது” என்றாள் தீபிகா.

“நானும் ஸ்டேஷன் வரேன்” என்றான் ஆகாஷ்.

தேர்வுக்கான மணி ஒலிக்க, அப்போதுதான் ஆகாஷின் தோளிலிருந்து தலையை எடுத்தாள் முல்லை.

“என்னடா… இதெல்லாம் சகஜம். நாம என்ன மொத்தமாவா பிரியப்போறோம். பழகிடும் வா” என்று தங்களின் பிரிவு குறித்து வருந்துகிறாள் என அவள் சமாதானமாக பேசியவன் தேர்வு அறைக்கு அழைத்துச் சென்றான்.
________________________

புவி ஒருவித சஞ்சலத்தோடு அமர்ந்திருந்தான். இன்னும் படுக்கையை விட்டு எழுந்து அவன் கீழ் செல்லவில்லை.

இன்று எப்படியும் அவளை கண்டுபிடித்திட வேண்டும். இன்று விட்டால் வேறு எப்போதும் முடியாது.

எப்படி என்று தான் தெரியவில்லை.

காவல் நிலையம் செல்ல ஆர்வமின்றி மெத்தையிலேயே யோசனையாக அமர்ந்திருந்தான்.

அவன் கீழே வரும் நேரம் கடந்தும் வராது இருக்க…

திரு மகனை தேடிக்கொண்டு அவனது அறைக்கு வந்துவிட்டார்.

“புவி…” என்ற அழைப்போடு கதவினை திறந்து கொண்டு உள் வந்த திரு, மகன் அமர்ந்திருந்த விதம் கண்டு…

“உடம்பு முடியலையா தங்கம்” என அவனருகில் அமர்ந்து நெற்றி கழுத்து என கை வைத்து பார்த்தார்.

“நான் ஓகே தான் ப்பா” என்ற புவி அவரின் மடியில் தலை வைத்து தன்னைக் குறுக்கி படுத்துக் கொண்டான்.

“ஐ லவ் ஹெர் சோ மச் ப்பா!”

மகனின் சிகையை கோதி கொடுத்தவர், “உன்னால கண்டுபிடிக்க முடியாதா தங்கம்?” எனக் கேட்டிருந்தார்.

“அவள் என்ன காரணத்துக்காக என் முன்னால் வரமாட்டேங்கிறாள் தெரியலையே ப்பா. அதில் எதும் அவளுக்கு பிரச்சினை இருந்தால்?”

புவி சொல்வது திருவிற்கு புரிந்தது.

“உனக்கானவள் அப்படின்னா நிச்சயம் உன்கிட்ட வருவாள் தங்கம். நீ இப்படி இருக்காத. அம்மாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாள். எனக்கும் தான்” என்றார்.

“இன்னைக்கு மட்டும் தான் பேப்பர் வரும்…” சொல்லிய புவியிடம் அத்தனை சோகம் இழையோடியது.

“தங்கம்!”

எழுந்து அமர்ந்த புவி தந்தையை தாவி அணைத்துக் கொண்டு அழுதுவிட்டான்.

திரு துடித்துப் போனார். சிறு பிள்ளையில் கூட மகன் அழுது அவர் பார்த்தது இல்லை. அவனுக்கு வலி கொடுக்கும் எதையும் அவனை நெருங்கவிட்டது இல்லை.

ஆனால் இன்று அனைத்திற்கும் மொத்தமாக சேர்த்து அழுது கரைந்தான்.

“தங்கம்… பிளீஸ் டா! அப்பாக்கும் அழ வரும் போல இருக்கு” என்ற திருவின் குரல் கமறியது.

நொடியில் தன் உணர்வை மறைத்து விலகியிருந்தான் புவி.

சிரிக்க முடியாது வலி நிறைந்த சிரிப்பை உதிர்த்த புவி, “கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன். நவ் அம் சில் ப்பா” என்றான்.

“தங்கம்…”

“ஆல்ரைட் ப்பா. நான் ஆபீஸ் கிளம்புறேன்” என்ற புவி, குளியலறை புகுந்திருந்தான்.

மகனின் காதல் வலி அவருக்கு புரியாதா என்ன?

“ரொம்ப கஷ்டப்படுத்திடாதீங்க” என மேல்நோக்கி பார்த்துக் கூறிய திரு கீழே சென்றார்.

“தங்கம் எங்கங்க?”

“குளிச்சிட்டு இருக்கான் அமிர்தா” என்ற திரு, “சாப்பிட வச்சு அனுப்பு. எனக்கு நேரமாச்சு” என்று பள்ளிக்கு கிளம்பிவிட்டார்.

புவி காக்கி உடையில் தயாராகி கீழே வர, அமிர்தம் மகனின் முகத்தை கூர்ந்து கவனித்தார். அதில் தன்னை மீட்டுக்கொண்ட புவி…

“என்னம்மா புதுசா பாக்குற மாதிரி பாக்குறீங்க?” என்று உணவு மேசை நோக்கிச் சென்றான்.

“கீழ வரவே இல்லையே தங்கம்?”

“நல்ல தூக்கம்மா. அப்பா வரலன்னா இன்னும் தூங்கியிருப்பேன்” என்ற புவி அவரையும் அமர்த்தி அவரை ஊட்ட வைத்து உண்டு முடித்து, அமிர்தமும் உண்ணும் வரை அமர்ந்திருந்தான்.

“டைம் ஆச்சு. போயிட்டு வரேன்” என்று புவி எழ,

“கல்யாண விஷயம் சொல்லியிருந்தனே தங்கம்” என்றார் அமிர்தம்.

புவி எதுவும் சொல்லாது அமைதியாக நிற்க…

“பொண்ணு டீச்சரா வேலை பாக்குது. அப்பா ஸ்கூல்ல தான் பொண்ணோட அப்பாவும் வேலை பார்க்கிறார். நீ அப்பாவை போன வாரம் கூப்பிட போனப்போ பார்த்திருப்பார் போல… நேத்து வீட்டுக்கு வந்து பேசிட்டு போனார். அப்பா உன்கிட்ட பேசிட்டு சொல்றேன் சொல்லிட்டார். உனக்கு இந்தப் பொண்ணு வேணான்னா வேற பார்ப்போம் தங்கம். கல்யாண வயசு வந்துட்டே” என்றார் அமிர்தம்.

“கொஞ்சநாள் போகட்டும்மா. இப்போ வேணாம் தோணுது” என்ற புவியை அதற்கு மேல் வற்புறுத்த அமிர்தத்துக்கு மனமில்லை.

சொல்வது மறுக்கும் பிள்ளை இல்லை அவன். இதுவரை தாய் தந்தை சொல் மீறி எதுவும் செய்தது இல்லை. வாழ்வில் எது வேண்டுமானாலும் பெற்றோர் விருப்பத்துக்கு பிள்ளைகள் செய்து கொள்ளலாம். ஆனால் திருமணம், அவரவர் விருப்பத்திற்கு செய்தால் தான் நிலைக்கும். ஒத்து வராதா பந்தம் என்றாலும், நம் விருப்பத்துக்கு நடந்த மணம் என்ற எண்ணமே உடைந்துவிடக் கூடாது எனும் உறுதியை கொடுக்கும். அதற்காகவே மகனின் சொல்லுக்கு சரியென்றார் அமிர்தம்.

சிறிது நேரத்தில் காவல் நிலையம் வந்த புவியால் எதையும் சரியாக செய்திட முடியவில்லை. அவன் மனம் நிலைகொள்ள மறுத்தது.

‘புவி… பீ காம் மேன்… அவளால் உன்னை விட முடியாது. இப்போ பிரிவு வந்தாலும்… இது நிரந்தரமா இருக்காது.’ தனக்குத்தானே சொல்லிக்கொண்ட புவி தேர்வு முடியும் நேரத்திற்காகக் காத்திருந்தான்.

‘இன்று கடைசி நாள். எப்படியும் கடிதம் வைத்திட நிச்சயம் அவள் தன்னைத்தேடி வருவாள். அவளாக வந்தால் தானே தன்னால் கண்டுகொள்ள முடியவில்லை. தானாக அவளை என் பக்கம் வரவழைத்தால்?’ எண்ணியவன் தேர்வு முடிய கால் மணி நேரமிருக்க கல்லூரி நோக்கி புறப்பட்டுவிட்டான்.

அவள் விடுதியில் தங்கியிருப்பதால் விடுதி இருக்கும் கேட்டிற்கு முன் வந்து உள்ளே செல்லாது சாலையில் காத்திருந்தான்.

________________________

ஆகாஷ் தேர்வு முடித்து வர குல்முகர் மரத்தடியில் முல்லையும் தீபியும் அமர்ந்திருந்தனர்.

“எப்படிடா எழுதுன?” முல்லையிடம் கேட்ட ஆகாஷ், “நீ எப்படி எழுதியிருப்ப எனக்கே தெரியும்” என்றான் தீபியிடம்.

“பாஸ் ஆகிடுவியா?”

“என்ன நக்கலா?” என்ற தீபி… “எல்லாம் கிளியர் பண்ணிடுவேன்” என்றாள்.

“சரி… சரி…”, ஆகாஷ்.

“பேக் பண்ணனும் டார்லிங்” என முல்லை எழுந்துகொள்ள,

“ஓகேடா… கிளம்பிட்டு கால் பண்ணுங்க வரேன்” என்று ஆகாஷ் சென்றிட, இருவரும் விடுதி நோக்கி வந்தனர்.

ஆகாஷ் விடுதிக்கு எதிர்பக்கம் சென்றதால் புவி அங்கு இருப்பது தெரியாமல் போனது.

அறைக்குள் வந்ததும் வெளியில் செல்ல முல்லை கிளம்ப, தீபி தடுத்து நிறுத்தினாள்.

“வனம் வேண்டாம்.”

“பிளீஸ் தீப்ஸ்… இன்னைக்கு மட்டும் தான். இனி நினைச்சாலும் முடியாது” என்று சொல்வதற்குள் முல்லையின் கண்ணில் கண்ணீர் வந்திருந்தது.

“இதுக்கு தொடர்ச்சி இல்லைன்னு தெரிஞ்சும் ஏன் வனம் இப்படி பன்ற? உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற. விட்டுடு… வேணாம். இன்னும் எதுவும் எடுத்து வைக்காம இருக்க. அதை பாரு. ரெண்டு மணி நேரம் தான் இருக்கு” என்று முல்லையை தீபிகா செல்ல அனுமதிக்கவே இல்லை.

முல்லை கண்ணீர் கன்னம் வழிய புறங்கையால் துடைத்துக் கொண்டே, சுவற்றில் ஒட்டி வைத்திருந்த புவியின் படங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக எடுத்து ஒரு கோப்பில் பத்திரப்படுத்தினாள்.

“இப்போவே உண்மை சொல்றன்னா… நீ போ வனம். உன்னை நான் தடுக்கல. நீ இவ்வளவு சீரியஸா இருப்பன்னு தெரிஞ்சிருந்தா எப்பவோ இதை ஸ்டாப் பண்ண வச்சிருப்பேன்” என்றாள்.

“ஒருமுறை பாக்கணும் தீப்ஸ். இனி எப்பவும் பார்க்கவே முடியாதே!” என்றாள் தவிப்பாக.

“நீ இப்படியெல்லாம் சொன்னா கேட்கமாட்ட” என்ற தீபிகா, “எப்பவும் உன் பக்கமிருந்து மட்டும் யோசிக்கிற வனம் நீ. யாருன்னு தெரியாம உன்னை புவி சார் தேடும் நிலையில் இருந்தால் என்ன பண்ணுவ? அது அவருக்கு எத்தனை வேதனை. புரிஞ்சிக்கோ வனம்” என்றாள்.

அடுத்து முல்லை ஒன்றும் பேசவில்லை. மௌனமாக அனைத்தும் எடுத்து வைத்து கிளம்பிவிட்டாள். விடுதி காப்பாளர் பார்த்து கையெழுத்திட்டு வெளியில் வர ஆகாஷ் நின்றிருந்தான்.

ஆகாஷ் இப்போதும் கல்லூரியின் பிரதான நுழைவு வாயில் வழி வந்திருக்க புவியை சந்திக்க நேரவில்லை.

“ஹாஸ்டல் கேட் ரிஜிஸ்டரில் சைன் பண்ணனும் ஆகாஷ்” என்று முல்லை சொல்ல, “ஓகே… அப்போ நான் கார் அந்த கேட் கொண்டு வரேன்” என்று சென்றான்.

ஆகாஷ் வண்டியை எடுத்துவர, புவியை பார்த்துவிட்டான்.

“அண்ணா என்ன இங்க?” வண்டியிலிருந்து இறங்கிய ஆகாஷ், முல்லையும் தீபிகாவும் காவலாளி முன் நின்றிருக்க, புவியிடம் சென்றான்.

“அண்ணா நீங்க என்ன இங்க?”

புவி கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமாக அங்கு காத்திருக்கிறான். அவனுக்கு அதெல்லாம் பெரியதாக தெரியவில்லை. அவள் எப்போது வருவாள்? எப்படி கடிதம் தன்னிடம் சேர்ப்பாள்? என்பதிலேயே கண்ணாக இருந்தான்.

எப்படியும் இந்த வாயில் வழி வந்தால் புவியை பார்க்காது செல்ல முடியாது. தான் இங்கிருப்பது தெரிந்தால் நிச்சயமாக கடிதம் வைக்க வருவாள் என அங்கிருந்து அசையாது வண்டியிலே அமர்ந்திருந்தான்.

ஆகாஷ் வருவானென்று புவி எதிர்பார்க்கவில்லை.

“நீ என்ன இன்னும் வீட்டுக்கு போகாமல் இங்கிருக்க?” தம்பியின் கேள்விக்கு பதில் சொல்லாது கேட்டிருந்தான்.

“வனம், தீபி ஊருக்கு கிளம்புறாங்க. ரயில்வே ஸ்டேஷன் கூட்டிப் போகணும்” என்றான்.

“ம்ம்” என்று புவி சொல்லும் போதே,

“டார்லிங்” என்று கை காண்பித்து இருவரையும் பக்கம் அழைத்திருந்தான் ஆகாஷ்.

ஆகாஷின் அருகில் நின்றிருந்த புவியை கண்டதும் முல்லையின் அகமும் புறமும் ஒன்றாக மலர்ந்தது.

“நீயே விட்டாலும் விதி விடாது போல” முல்லையிடம் முனகிய தீபிகா, “ஹாய் சார்” என்றாள் புவியிடம்.

புவி ஏற்கும் விதமாய் சிரிதாக தலையசைத்தான்.

முல்லை புவியை கண்களால் உள்வாங்கி, இதயத்தின் அடி ஆழத்தில் பதிந்து கொண்டவளாக அசையாது நின்றுவிட்டாள்.

“வனம்…” தீபிகா கை முட்டியால் இடித்தும் முல்லை அசையவில்லை.

இதே குறுகுறுப்பு பார்வையை தான் அன்றைய இரவில் புவி உணர்ந்தான். பக்கத்தில் இருப்பவளை விடுத்து, அவ்விடத்தை சுற்றி யாராக இருக்குமென பார்வையால் அலசினான்.

புவியின் தேடுதலை கண்ட முல்லைக்கு குற்றவுணர்வாகிப் போனது.

“அண்ணா யாரைத் தேடுறீங்க?” ஆகாஷ் கேட்க, புவி தன் பார்வை சுழற்சியை மட்டும் நிறுத்தவில்லை.

தீபிகா முல்லையை அப்பட்டமாக முறைத்தாள்.

‘எனக்காகவா? என்னைத்தேடியா?’ உருகலும், உடைதலும் நெஞ்சத்தில் ஒருங்கே உணர்ந்தாள் முல்லை.

புவியின் தவிப்பை காண முடியாத முல்லை உண்மையை சொல்லிவிடலாம் என எண்ணிய நொடி அவளது அலைபேசி ஒலித்தது.

திரையில் வீரமுத்து என்ற பெயரைக் கண்டதும் எடுத்த முடிவு தன்னால் ஆட்டம் கண்டது.

முல்லை அலைபேசி திரையையே வெறித்திருக்க…

“ஹேய் வனம் அட்டென்ட் பண்ணு” என்ற தீபிகா, “லக்கேஜ் எடுத்து வைக்கணும் பக்கி” என்றாள் ஆகாஷிடம்.

இருவரும் கேட்டிற்கு அருகில் வைத்திருந்த உடமைகளை எடுத்து வைக்க நகர்ந்திட, முல்லை அழைப்பை ஏற்றிருந்தாள்.

“ஐயா…” அவளது குரலில் ஒருவித தடுமாற்றம். அருகிலிருந்த புவி அதனை உணர்ந்து அவளை ஏறிட்டு பார்த்தான்.

“கிளம்பிட்டேன். வந்திடுவேன். ஸ்டேஷனுக்கு சீனி அண்ணாவை அனுப்பி வச்சிடுங்க” என்று பேசியவள் துண்டித்து திரும்ப…

“பேசுறதுக்கே பயமா? உன் மேல தப்பு இல்லைன்னா எதுக்கும் நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது நம்ம அம்மா அப்பாவாவே இருந்தாலும்” என்ற புவி, “ஆஷ் சொல்லியிருக்கான்… உனக்கு உன் தாத்தான்னா பயம் அப்படின்னு. அவரும் மனுஷன் தானே! சும்மா பயப்படாதே!” என்று பொதுவாகக் கூறினான். தன் தம்பியின் தோழி எனும் முறையில் ஒருவித அக்கறையில் கூறினான்.

“யார் சொன்னாலும் தாத்தா விஷயத்தில் அவளை மாற்ற முடியாதுண்ணா” என்ற ஆகாஷ், “விட்டுட்டு வரேன்” என்று வண்டியில் அமர்ந்து உயிர்ப்பிக்க, உயிர் பெறாது தடுமாறியது வண்டி.

“என்ன ஆஷ்?”

“ஸ்டார்ட் ஆகல. வரும் போது நல்லா தான் இருந்துச்சு” என்றான் ஆகாஷ்.

“இறங்கு நான் பார்க்கிறேன்” என்று புவி அமர, அந்த இடைவெளியில் புவியின் வாகனத்தில் காகிதத்தை வைத்துவிட்டு வந்திருந்தாள் முல்லை.

கவனித்த தீபிகா தீயாய் முறைத்தாள்.

வண்டி உயிர்த்திட,

“பை சார்” என்றாள் தீபிகா.

முல்லை புவியை பார்த்து மெல்லிய தலை அசைப்பு. அவளின் பார்வையில் ஏதோ ஒன்று. புவி கூர்ந்து நோக்கும் முன் இமை தாழ்த்தி வண்டியில் ஏறி, சீட்டின் பின் தலை சாய்த்து கண்களை மூடிக் கொண்டாள். கண்ணீர் அவளின் காது மடல் தீண்டியது.

அவர்கள் புறப்பட்டிட புவி தன் வாகனத்திடம் வந்து ஏறி அமர்ந்தான்.

ஓட்டுநர் இருக்கையில் நான்காக மடிக்கப்பட்ட காகிதம்.

“போயிட்டா(ள்).” ஸ்டியரிங்கில் ஓங்கி குத்தினான்.

ஆவென்று வெடித்து கத்த வேண்டும் போலிருந்தது. மொத்த வலியையும் கோபத்தையும் வண்டியின் வேகத்தில் காண்பித்தான் புவியாழன்.

வெளியில் சொல்லப்படாத ஆண்களின் வலிகள் யாவும் வலிக்க வலி கொடுத்து உள்ளத்தை மரிக்கச் செய்திடும்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 38

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
40
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

3 Comments

  1. புவி மனநிலை ரொம்ப கஷ்டம்.. எப்படி கண்டுபிடிச்சு இருவரும் சேர்வாங்கன்னு மனசு அடிச்சுக்குது…

  2. சே, ஒரு செக்கன்ல மிஸ்ஸிங்…