
அத்தியாயம் 12
உன் நேசம் மௌனம் கொண்டதால்
என் மௌனம் யாவும்
நெஞ்சம் உருகும்
நேசமாகிக் கொண்டிருக்கிறது.
__________________________
கோவில் மண்டபத்தின் மேல் கூரையில் புவி நின்றிருந்தான்.
என்று முல்லையை கண்டு கொண்டிருந்தானோ அன்றே அவளைப்பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டிருந்தான்.
தெரிந்த உண்மையில் அவனுள்ளும் இந்த சொல்லிக்கொள்ளாத காதல் சேர வாய்ப்பில்லை எனும் நிலை தான். அவனுக்கே ஒப்பதா ஒன்று.
அவற்றையெல்லாம் நெஞ்சம் கொண்ட காதல் துறந்திருக்க… உறவுகள் மீதான தன்னுடைய இத்தனை வருட கோபத்தை ஒதுக்கி வைத்து தன்னவளுக்காக, தங்களின் இரு நெஞ்சம் கொண்ட உருகும் காதலுக்காகக் காத்து நிற்கிறான்.
மாதேஷும், மதுராவும் கோவிலினை வேடிக்கை பார்த்தவாறு பேசிக் கொண்டிருந்தனர்.
முல்லை கோவில் பக்கம் பாராது, மொட்டை மாடி சுற்றுச் சுவற்றில் சாய்ந்து நின்றிருந்தாள்.
“நீ அண்ணாவை பார்த்திருக்கியா மதுக்கா. செம போலீஸ் லுக். பாக்குற பார்வையே அப்படியே சிங்கம் பாக்குற மாதிரி இருக்கும்” என்ற மாதேஷ், “எப்படியும் அண்ணா வருவார் நினைக்கிறேன். அமைச்சருக்கெல்லாம் பெரிய போலீஸ் தானே உடன் வருவாங்க” என்றான்.
“ஆமாவாக்கா… அண்ணா வராங்களா?” என்ற மதுராவுக்கு “தெரியல” என சொல்லியவாறு முல்லை கோவில் பக்கம் திரும்பிட, அவளையே பார்த்திருந்தான் புவி.
தினமும் பார்த்துக் கொண்டிருந்தவள், இடையில் பல நாட்களாக வேண்டுமென்றே பாராது இருந்து இன்று நேரில் பார்த்திட அவனருகில் ஓடிசெல்லத் துடித்த கால்களைக் கடினப்பட்டு ஆழ ஊன்றி நின்றாள்.
இருவரின் பார்வையும் தூர தொடுவானமாக கவ்வி நின்றது.
“வாவ் செம சீன்” என்று அவர்களைக் கண்டுவிட்டு மாதேஷ் கூவிட, தன்னவனின் தேடல், காத்திருப்பு என எல்லாம் புரிந்தும் பக்கம் செல்ல முடியாது எட்டி நிற்கும் வதை தாங்காது பார்வையை விலக்கிக் கொண்டு கீழே ஓடியிருந்தாள் முல்லை.
மாதேஷ், மதுரா இருவரும் பார்த்து நிற்க, மெல்ல இதழ் விரித்த புவி சிறு கை அசைப்புடன் தன் பணியை காணச் சென்றான்.
அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் வந்துவிட்டார் என ஊரே பரபரப்பாகியது.
கோவில் வாயிலில் ஊரின் முக்கிய ஆட்கள் அனைவருக்கும் நடுநாயகமாக வீரமுத்துவும் அவரின் அருகில் திருவாசகமும் நின்றிருந்தனர்.
கோவில் பூசாரி மாலையிட்டு பரிவட்டம் கட்டி அமைச்சருக்கு மரியாதை செலுத்தி கோவில் உள்ளே வரவேற்றார்.
அமைச்சர் வந்ததும் புவி அவரின் பக்கவாட்டில் வந்து நின்றுகொண்டான்.
அமைச்சர் தன்னுடைய குடும்பத்துடன் வந்திருந்தார். பத்து பேருக்கு மேல் இருந்தனர்.
கோவிலின் உள்ளே நுழைவதற்கு முன்பு வீரமுத்துவின் இரு கரங்களையும் பற்றிக்கொண்டு நலம் விசாரித்த அமைச்சர் சத்தியாவுக்கு பெரியவரின் மீது நல்ல மரியாதை என்பது பார்த்ததும் புவிக்கு தெரிந்தது. பெரியவர் அமைச்சருக்கு ஒருவகையில் அத்தனை நெருக்கமாயிற்றே! அமைச்சர் என்ற நிலையிலும் அந்த நெருக்கத்தை அவர் தள்ளி வைக்கவில்லை.
இங்கு வந்தது முதல் புவி கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான். வீரமுத்துவுக்கு ஊர் மக்கள் கொடுக்கும் மரியாதையை.
ஓரளவு இந்த ஊருக்கு அவர் தான் எல்லாம் என்பது புவிக்கு புரிந்தது.
இந்த மரியாதை தான் அவரின் கட்டுப்பாடு நிறைந்த வாழ்விற்கு காரணம் என்பதும் விளங்கியது.
புவி வந்தது முதல் திருவாசகத்தின் பார்வை அடிக்கடி அவனைத் தொட்டு மீண்டது. என்னவாக இருக்குமென்று அறிந்த போதும் புவி அவரிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
அவ்வூர் மக்களில் ஒருசிலர் புவியிடம் நேரடியாகவே அவனின் தந்தையைப் பற்றி விசாரித்து செல்ல திரு என்ற பெயரோடு புவி நிறுத்திக் கொண்டான். வேறெதுவும் அவர்கள் தன்னைக் கண்டுகொள்ளும் விதமாக அவன் கூறவில்லை.
அமைச்சர், வீரமுத்துவுடன் தன் சாகாக்கள் சூழ கோவிலின் உள்ளே சென்றார்.
அம்மன் சன்னதி முன்னிருக்கும் மண்டபம் பல்வேறு வகை அலங்காரங்களால் நிரம்பியிருந்தது. அங்கு தான் உற்சவ சிலை வைக்கப்பட்டு அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன் முன் கோவிலின் உள் சுற்று வளாகத்தில் பெரும் பரப்பளவில் மக்கள் அமர்ந்து பூஜையை காணும் வகையில் துணி பந்தலிடப்பட்டிருந்தது. கீழே கற்கள் பதித்த தரையில் துணிகள் விரிக்கப்பட்டிருந்தன.
அமைச்சர் முன் வரிசையில் தன் குடும்பத்துடன் அமர்ந்திட, அவரை மக்கள் நெருங்கிடாதவாரு சுற்றி கயிற்றால் தடுப்பிடப்பட்டு அதன் பின்னர் மக்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு அமர வைக்கப்பட்டனர்.
வீரமுத்து அமைச்சரின் அருகில் அமர்ந்திருந்தார். புவி அவ்விடம் சுற்றி நின்றிருந்த காவலர்களின் வரிசையில் கோவில் வாயிலை பார்த்தவாறு நின்று கொண்டான்.
உள்ளே வந்தாலும், வெளியே சென்றாலும் புவியின் பார்வையைத் தொட்டே செல்ல வேண்டும்.
ஊர் மொத்தமும் அங்கு தான் கூடியிருந்தது. அவனவள் மட்டும் வரவில்லை.
புவியின் மனம் எதிர்பார்ப்புகளை கடந்து ஏமாற்றம் கொள்ளவிருந்த நொடி, தன் வீட்டு ஆட்களுடன் கோவில் வாயிலில் அடி எடுத்து வைத்தாள் யாழனின் நெஞ்சத்தில் அம்பாய் தைய்த்திட்ட முல்லை மலராள்.
முன்னே சுசிலா, குமுதா, வர்ணம் வர மூவரையும் கனிவான முகத்தோடு ஏறிட்டவனின் பார்வையில் அவர்களுக்கு பின்னால் மாது மற்றும் மதுவுக்கு நடுவில் சிறு படபடப்புடன் கூடிய பதட்டம் முகத்தில் அப்பட்டமாகத் தெரிய உள் வந்தவளின் மீது ரசனை குடியேறியது.
கருநீல தாவணியும் அதற்கு தோதாய் விரலளவு தங்க கரையிட்ட அடர் பச்சை சட்டையும் பாவாடையும் உடுத்தியிருந்தாள். இடை வரையிலான கூந்தலை உச்சி வகிடெடுத்து பின்னலிட்டு பந்தாய் கட்டிய முல்லை மலர் சூடி, ஆடை நிறத்துக்கு எடுப்பாய் குடை ஜிமிக்கியும், கையில் ஃப்ளூயிட் ஓவியம் வரையப்பட்ட வானவில் நிற கண்ணாடி வளையல்களும் அணிந்து அள்ளிக்கொள்ளும் விதமாய் சுண்டி இழுத்தாள்.
நொடியில் அவளின் தோற்றத்தை உள்ளிழுத்துக் கொண்டவனின் பார்வை அவளின் நெற்றியில் வைத்திருந்த செந்நிற பொட்டிற்கும் மேலான சந்தன கீற்றில் படிந்தது. மெல்ல கீழிறங்கி அவளது வலையல்களில் நிலைத்தது.
வேறு எப்போதும் இப்படியொரு பாந்தமான அழகில் புவி தன்னவளை கண்டதில்லை.
“அய்யோ… ஹார்ட் பீட் ரைஸ் பண்ண வைக்கிறாள்.” வாய்விட்டே காற்றாய் சொல்லிக் கொண்டவனின் கண்கள் அவளிலிருந்து நகர்வேனா என சண்டித்தனம் செய்தது.
“ப்பா… அண்ணா முகம் ஸ்விட்ச் போட்ட மாதிரி பிரகாசிக்குதுக்கா” என்று கவனித்தவனாக மாதேஷ் சொல்ல, “ஹேய் அவர் தான?” என மதுரா புகைப்படத்தில் கண்டவனை நேரில் கண்டுகொண்டவளாக சத்தமின்றி ஆர்பரித்தாள்.
மூத்த பெண்கள் மூவரும் புவியைத் தாண்டி அமைச்சர் அமர்ந்திருக்கும் பகுதியில் வீரமுத்துவின் பக்கம் சென்று அமர, இளையவர்கள் மூவரும் புவியை நெருங்கினர்.
அனைவரும் அம்மனுக்கு நடந்து கொண்டிருந்த அபிஷேகத்தில் கண்ணாக இருந்தனர்.
புவி பக்கவாட்டில் நின்றிருக்க, யாரும் இவன் பக்கம் கவனிக்கும் வாய்ப்பில்லை.
ஒருவர் பின் ஒருவராக சென்றவர்களில் முன் சென்ற மதுரா, புவியை கடக்கையில் “ஹாய் அண்ணா!” என்று யாரும் அறியாது கை அசைத்திட, புவியின் இதழில் குறுநகை.
கண்களால் அவளின் அழைப்பை ஏற்று மலர்ந்தவன், “மதுரா ரைட்?” என்று மெல்லிய ஒலியில் வினவினான்.
அவனை கடந்திருந்த மதுரா தலையை மட்டும் திருப்பி
“அக்கா சொல்லியிருக்காங்களா?” என உதடசைக்க,
‘ம்க்கும் சொல்லிட்டாலும். உன் அக்கா முதலில் என்கிட்ட பேசிட்டாலும்’ என்று உள்ளுக்குள் சடைத்துக் கொண்ட புவி இதழ் விரிந்த புன்னகையோடு கண் சிமிட்டியிருந்தான்.
அடுத்து வந்த மாதேஷ், பார்த்து சிநேகமாய் சிரிக்க,
“இன்னைக்கு தைரியம் வந்திருச்சு போல?” என்று ஒற்றை புருவம் உயர்த்தினான் புவி.
“சாரி” என்று முகம் சுருக்கிய மாதேஷ், “அக்காக்கும் உங்களுக்கும் சண்டையா அண்ணா?” எனக் கேட்டான்.
“பார்த்தா அப்படியா தெரியுது?” என்ற புவி, “அவளை அண்ணி சொல்லு. உறவுமுறை கன்பியூஸ் ஆகுது” என்றான்.
புவி சொல்லியதில் அதுவரை அவனை பார்த்தும் பாராது தலை குனிந்து நின்றிருந்த முல்லை அதிர்வாய் அவனது கண்களை சந்தித்தாள்.
“ரைட்… ரைட்…” என்ற மாதேஷ், “வாங்க அத்தாட்சி” என்று புவியின் முன்பே முல்லையை அழைத்து, “இப்போ அத்தாட்சி, பியூச்சரில் மதினி” என்று புவியிடம் கூறினான்.
“தேங்க் யூ மை லிட்டில் ப்ரதர்” என்ற புவியின் பார்வை முழுக்க, தங்களின் இயல்பான பேச்சில் நொடிக்கு நொடி அதிர்வுக்குள்ளாகும் தன்னவள் மீதுதான்.
மாதேஷ் நகர்ந்து சென்றிட,
“அள்ளிக்க வைக்கிற” என்று முல்லைக்கு மட்டும் கேட்கும் விதமாக விஷமப் புன்னகையோடு சொல்லியிருந்தான்.
“ஹான்…” புவி சொல்லியதில் சட்டென்று நின்று விழிகள் அதிர உறைந்து நின்றவளின் கன்னம் தட்டியவன் “போ” என்று முன் கண் காட்டினான்.
முல்லை அவனது முகம் பார்த்தது பார்த்தபடி இருக்க, அவளின் கருவிழி மணிகளில் உருண்டு கரை சேர்ந்தான் புவியாழன்.
முல்லையின் கன்னம் உரசி ஆடிக் கொண்டிருந்த ஜிமிக்கியில் கட்டுண்டது புவியின் பார்வை.
“அந்த அசையுற ஜிமிக்கி மேல பொறாமை ஆகுது” என்றவன், மீசையோடு சேர்த்து மேல் அதரத்தை கீழ் பற்களால் கடித்து விடுத்தான்.
அவனின் அந்த பாவனையில் அவள் சொக்கி நிற்க,
“கட்டி இழுக்குது இந்த முல்லை” என்ற புவியின் பார்வை அவள் சூடியிருந்த முல்லை மலரில் தேங்கியது.
“எதுவும் வேண்டாமே பிளீஸ்” என்ற முல்லையின் ஒற்றை கண்ணில் நீர் இறங்கியது.
“ம்ப்ச்…” என்று நெற்றியை தேய்த்துக் கொண்டே சுற்றி ஒரு பார்வை பார்த்த புவி, “இழுத்து இங்க புதைச்சிக்கணும் தோணுது” என தன் மார்பில் கை வைத்தவன், “அழாதடி” என்றான் சட்டென்று நெஞ்சில் குடிகொண்ட வலியுடன்.
உதடு துடிக்க கண்கள் கலங்கி நிற்பவளை இப்போதே இழுத்துச்சென்று அந்த அம்மன் முன் நிறுத்தி குங்குமத்தை எடுத்து அவளின் வகிட்டில் வைத்துவிட்டால் என்ன எனத் தோன்றிட, தன்னிரு கைகளையும் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு விறைத்து நின்றான்.
“சத்தியமா நீயா என்னைத் தேடாமல் நான் உன் முன்னாடி வரமாட்டேன். இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. டியூட்டி முடியிற வரை” என்றான்.
அவளுக்கோ அவனது வார்த்தைகளில் இதயம் இரண்டாக உடையும் வலி.
முகம் அழுகையில் தோய்ந்திருக்க… கரை கட்டி நின்ற கண்களில் சொல்லில் அடக்கிட முடியா காதலை தேக்கி வைத்திருந்தாள்.
அவளின் ததும்பும் நிலை உணர்ந்த போதும், இதற்கு மேல் தான் செய்ய ஒன்றுமில்லை. அவளாக வராது அவனாலும் ஒன்றும் செய்திட முடியாதே!
“போடி” என்று உதடசைத்து விட்டு தள்ளிச் செல்ல, அதற்குள் அபிஷேகம் மற்றும் அலங்காரம் முடித்து அம்மனை ஊஞ்சலில் வைத்து ஆட்டிட, அமர்ந்திருந்த அனைவரும் வணங்குவதற்கு ஏற்ப எழுந்து நிற்க, நெரிசல் விரிவடைந்ததில் புவியின் மீது மோதி நிலை தடுமாறினாள்.
நொடியில் சற்று முன்னர் சொல்லியதை செய்திருந்தான்.
முல்லை புவியின் மார்பில் அடங்கியிருந்தாள்.
“நீயே வேணான்னு நினைச்சாலும் முடியாது. என்கிட்ட வந்திடுவ” என்று செவி தீண்டிய புவியின் சூடான மூச்சுக் காற்றில் பதறி விலகியவள், “சாரி” என்க, “தப்பில்லை” என்ற புவியின் கண்கள் அவனது மார்பை நோக்கி தாழ்ந்தது.
முல்லை என்னவென்று பார்க்க, அவனது காக்கிச் சட்டை மார்பு பகுதி அவளின் இரு கைகளுக்குள்ளும் அடங்கியிருந்தது.
வேகமாக கையை எடுத்தவளின் இடது கையோடு என்னவோ ஒட்டிக்கொண்டது. என்னவென உணர்ந்தவள் கையை இறுக மூடிக்கொண்டாள்.
மணியோசை அவ்விடத்தை நிறைக்க,
“அச்சோ ஐயா” என்றவள் வேகமாக முன் செல்ல முயல முடியவில்லை.
“விட்டு போறதுல எப்பவும் அவசரம் தான்” என்ற புவி, தன் பணியாளர்களுக்கு கண் காட்டிட கூட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.
கூட்டத்தை சீரமைப்பது போல் மக்களை விலக்கி முல்லையை தன் தங்கை, தம்பியின் அருகில் சேர்த்திருந்தான்.
கற்பூர தீபாராதனை முடிய, மீண்டும் அனைவரும் தரை அமர்ந்தனர்.
குமுதாவின் அருகில் அமர்ந்திருந்த முல்லை புவியை காணாது தேடிட, அவளுக்கு தன் முகம் காட்டாது போக்குக் காட்டினான் புவி. சட்டென்று முல்லையின் முகம் வாடியது.
“இம்சை” என்று செல்லமாக வைதவன், அவள் பார்வை படுமிடம் வந்து நின்றான். பூவாய் மலர்ந்தது அவளின் முகம்.
சிறிது நேரத்தில் அனைத்தும் முடிய, அமைச்சர் பிரசாதம் வழங்க மக்கள் கூட்டம் மெல்ல கலைந்தது.
இறுதியாக பூசாரி அம்மன் முன் வைத்தவற்றை சிறு தட்டில் வைத்து அமைச்சருக்குக் கொடுத்ததோடு அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கிட…
மக்களை வரிசையாக வெளி அனுப்பிக் கொண்டிருந்த புவியை அழைத்தார் அமைச்சர்.
“புவியாழன்.”
தன்னுடைய குரலுக்கு தன்னை நோக்கி வரும் புவியை பார்த்துக்கொண்டே…
“ரொம்ப நேர்மையான ஆளு. இப்போக்கூட நம்ம மாவட்டத்தில் முடிக்க முடியாத பெரிய கேஸ் ரெண்டை வந்த கொஞ்ச நாளிலே முடிசிட்டார்” என்று தன் அருகில் நின்றிருந்த வீரமுத்துவிடம் சிலாகித்துக் கூறினார் அமைச்சர்.
“அண்ணா பயங்கரமான போலீஸ் போலக்கா. மினிஸ்டரே பாராட்டுராரு” என்ற மாதேஷின் வாயினை கைக்கொண்டு பொத்தினாள் மதுரா.
“சார்” என்று பக்கம் வந்து நின்ற புவியை பூசாரியிடம் நிறுத்திய அமைச்சர், “பிரசாதம் கொடுங்க” என்றார்.
பூசாரி தனது பெருவிரலின் பிரதியாக பட்டையாய் குங்குமம் வைத்துவிட அதுவும் தனியொரு அழகாய் அவனைக் காட்டியது.
“இங்கு எல்லாமே இவர் தான். ஆசீர்வாதம் வாங்கிக்கோ புவி” என்றார் அமைச்சர். வீரமுத்துவை காண்பித்து.
பக்கம் பார்த்த புவியின் முகத்தில் எதையோ யோசனையாய் தேடிய பெரியவர், “இருக்கட்டும்” என்க “உனக்கும் தாத்தா போலத்தான் புவி” என்றார்.
புவி மற்றவர் அறியாது அமைச்சரை முறைத்தான்.
அடுத்து புவி தன் காக்கியை குனிந்து பார்த்தவனாக,
“பெரியவங்க தப்பா நினைக்க வேண்டாம். யூனிபார்மில் இருக்கேன்” என்று தன் நெஞ்சில் உள்ளங்கை வைத்து மொழிந்திட, அவனுடைய ஆளுமை கலந்த பண்பில் வீரமுத்து ஈர்க்கப்பட்டார். திருவாசகமும் புவியையே பார்த்திருந்தார்.
“இருக்கட்டும். நல்லாயிருங்க” என்றார் வீரமுத்து.
சிறு தலையசைப்போடு புவி நகர்ந்திட்டான்.
“உங்களுக்குத் தெரிந்த பையனா?” திருவாசகம் கேட்க, “ஃபிரண்டோட பையன்” என்றார் சத்தியா.
அவர் சொல்லியதில் வீரமுத்துக்கு புரியாத ஒன்று திருவாசகத்திற்கு புரிய அமைச்சரை அர்த்தமாக ஏறிட்டார்.
அமைச்சர் சத்தியா பெரியவர் கவனம் பெறாது ஆமென்று கண்கள் மூடித் திறந்தார்.
உடனே திருவாசகம் புவி எங்கென்று பார்க்க அவனோ தன் பணியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தான்.
கண்கள் கனிவுற தன் மகனை ஆதுரமாய் பார்த்த திருவாசகம், பனித்த கண்களை உள்ளிழுத்துக் கொண்டார்.
தற்போது கோவிலில் அமைச்சர் அவரது குடும்பம், வீரமுத்து குடும்பம் மற்றும் காவலர்கள் மட்டுமே எஞ்சி நின்றனர்.
தன் குடும்பத்தை ஒரு பார்வை பார்த்த மதுரா, புவியின் அருகில் சென்றாள்.
“அண்ணா” என்றழைக்க, தன்னிடம் பேசிக் கொண்டிருந்த காவலரை அனுப்பி வைத்து திரும்பிய புவியிடம், தொண்ணையில் வைக்கப்பட்டிருந்த பொங்கலை நீட்டினாள்.
“எடுத்துக்கோங்க. உங்க மாமியார் வச்ச பொங்கல்” என்று மதுரா கண் சிமிட்டி சொல்ல புவியின் இதழ்கள் நீண்டு விரிந்தன.
“என்னவிட்டு என்ன பேசுறீங்க” என்று பக்கம் வந்த மாதேஷ், “உங்க ஆளு சரியான பயந்தவங்க அண்ணா. ஐயா இருக்கவரை உங்க பக்கட்டு திரும்பவே மாட்டாங்க” என்றான்.
அதில் புவியின் சிரிப்பு இன்னும் கூடியது.
மதுராவும், மாதேஷும் புவியிடம் சிரித்து பேசியதை பார்த்துவிட்ட திருவாசகம் தன் தந்தைக்காக, அவரின் கோபம் அறிந்து பக்கம் செல்வதை தவிர்த்து… தவிப்பாய் பார்த்திருந்தார்.
மதுரா நீட்டிய பொங்கலை ஒரு வாய் எடுத்து உண்டான் புவி.
“அத்தாட்சிக்கு சமைக்கலாம் தெரியாது” என்று மாதேஷ் சொல்ல,
“நான் சமைச்சுப் போட்டுக்கிறேன்” என புவி பட்டென சொல்லியதில் இளையவர்கள் இருவரும் சத்தமின்றி ஆர்பரிப்பாய் சிரித்தனர்.
‘பிள்ளைகளுக்குத் தெரியுமோ? எப்படி?’ என நினைத்த திருவாசகம் பின்னர் கேட்க வேண்டுமென குறித்துக் கொண்டார்.
அமைச்சரும் புறப்பட முல்லை தவறிக்கூட புவியின் புறம் முகம் திருப்பவில்லை.
“எத்தனை நாளுக்குன்னு பார்க்கிறேன்” என்ற புவியும் அவளை பாராது தன் வாகனத்தில் ஏறிச் சென்றிருந்தான்.
தற்போது அவன் வேண்டாமென முகம் பார்க்கவே முடியாது தவித்து தள்ளி நின்றவள் இன்னும் இரு தினங்களில் தானாக அவனிடம் தன் காதலை மொத்தமாக சேர்ப்பித்திருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
49
+1
1
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

புவிக்கு உறவுமுறை தெரியும்.. எப்படி??ஆகாஷ்க்கு சொல்லலை போல.. அமைச்சர் குடும்ப நண்பர்… இவர் மூலம் தான் புவி மாற்றல் வாங்கினானா??அப்போ புவியின் அப்பாவுக்கு முல்லை சகோதரி மகள் என்று தெரியுமா??
மதுரா, மாதேஷ், முல்லையின் காதலன் என்ற உரிமையில் எப்படி இவ்வளவு தைரியமாக புவியிடம் பேசுறாங்க? தாத்தா மேல் பயம் இல்லையா?
புவியின் தவிப்பும் முல்லையின் துடிப்பும் பார்க்க முடியல…
உறவுகள் இணையும் நேரம் எதிர்பார்ப்பை கூட்டுது..❤️❤️
அடுத்த பதிவில் தெளிவாகிடும் sis… நன்றி
அப்போ உறவுகள் அடையாளம் காண ஆரம்பிச்சாச்சு…
ஆமாக்கா… எல்லாரும் சேர நேரம் வந்தாச்சு 😊
Super