Loading

அத்தியாயம் 11

“அக்கா ஏன் டல்லாவே இருக்கீங்க? உங்களை இப்படி பார்க்க என்னவோமாட்டிக்கு இருக்கு.”

பள்ளி செல்லத் தயாராகி வந்த மாதேஷ், கவலை படிந்த முகத்துடன் வண்டியில் அமர்ந்திருந்த முல்லையிடம் வினவினான்.

“ஒண்ணுமில்லை. நீ உட்கார் போலாம்” என்ற முல்லையின் பார்வை சாலையில் இருந்தாலும், அவளின் சிந்தை இங்கில்லை.

இதயத்தின் துடிப்பு யாவும் அவளின் யாழன் என்ற ஓலம் மட்டுமே!

எப்போதும் இந்த நேரம் முல்லை அப்படி பேசிக்கொண்டும் தம்பியை கலாய்த்துகொண்டும் வருவாள். ஆனால் இரு தினங்களாக அவளிடம் ஆழ்ந்த அமைதி. எதையோ நினைத்து வதை கொள்கிறாள்.

“ஐயா கல்யாணம் பேசுறாங்கன்னு பயமா இருக்கா?” கேட்கும் இளையவனிடம் என்ன பதில் சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.

அவனுக்கு சொன்னாலும் புரியாதே! காதலின் ஆழம் தெரிந்துகொள்ளும் வயதில்லையே அவனுக்கு.

“வீட்டுல சொல்லுங்கக்கா. இப்படி இருக்காதீங்க. சமாளிக்கலாம்” என்ற சிறியவனிடம் இருக்கும் திடம் ஏனோ அவளுக்கு இல்லை.

“என்னை யோசிக்காம உன் படிப்பை மட்டும் பாரு மாது. இன்னும் ஒரு மாசத்துல பரீட்சை வருதே” என்ற முல்லையின் மனம் புவியிடமே சுழன்று கொண்டிருந்தது.

கவனம் நிகழ் இல்லாது சாலையில் சென்று கொண்டிருந்த முல்லை போக்குவரத்து சமிக்கையை கருத்தில் கொள்ளாது செல்ல…

“அக்கா சிக்னல்” என்று மாதேஷ் கத்திய பின்னர் தான் சுயம் உணர்ந்து சட்டென்று பிரேக் பிடித்து வண்டியை வெள்ளை நிற கோட்டின் முனையைத் தொட்டு சடுதியில் நிறுத்தியிருந்தாள்.

அவளை இடித்துவிடுமாறு குறுக்கே வந்த வாகனம் ஒடித்து வளைந்து சென்றதில் அவளுக்கு மூச்சே நின்றது.

பின்னால் திரும்பி தம்பியை பார்த்தவள், “ஓகேதான மாது?” என்று பார்வையால் ஆராய்ந்தாள்.

வேகமாக தரை ஊன்றிய கால்களில் நடுக்கம்.

“அக்கா உயிரே போயிடுச்சு” என்று சொல்லிக்கொண்டே பயத்தில் மூடிய கண்களை திறந்த மாதேஷ், தங்களை நோக்கி வந்து கொண்டிருந்தவனைக் கண்டு,

“அக்கா மாமா… ச்ச, அண்ணா” என்று விழி விரித்தான்.

“யாருடா” என்று வண்டியை குனிந்து ஆராய்ந்து கொண்டிருந்த முல்லை நிமிர்ந்து பார்க்க, இவர்களை தாண்டிக்கொண்டு சென்று சாலையின் எதிர் பக்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தன்னுடைய காவல்துறை வாகனத்தில் ஏறி சென்றான் புவியாழன்.

முல்லையின் அகண்ட விழிகள் சுருங்காது கருமணிகள் அவனில் நிலைக்குத்தி நின்றது. இதயத்தில் மின்னலும் இடியும் ஒருங்கே. அகமழை துளிர்த்து நெஞ்சத்தை குளிர்வித்தது.

“வாவ்… நேர்ல செம மாஸா இருக்கார் க்கா” என்ற மாதேஷ், “உன்னை அண்ணா கவனிக்கலையோ?” என்றான்.

‘கவனிச்சாலும் தம்பியின் ஃபிரண்ட் என்கிட்ட பேச என்னயிருக்கு?’ சிறு வலி ஒன்று ஊசியாய் நெஞ்சத்தில் இறங்குவதை உணர்ந்தவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

“பார்த்திருக்கமாட்டார்.” தனக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டாள். சிறியவனிடம் தன்னிலையை என்னவென்று கூறுவாள்.

“அக்கா கிரீன்.” மாதேஷ் சொல்லிய பின்னரே வண்டியை செலுத்தினாள்.

முல்லை பள்ளியின் முன்பு மாதேஷை இறக்கிவிட,

“அக்கா ஒழுங்கா போயிடுவியா?” எனக் கேட்டான் மாதேஷ்.

“போடா” என்று முல்லை தன்னுடைய அலுவலகம் நோக்கிச் செல்ல, வழியில் ஒருவனை அடி மிதித்துக் கொண்டிருந்தான் புவி.

சற்று இடைவெளியில் இருக்கும் போதே கண்டுவிட்டு வண்டியை நிறுத்திவிட்டாள்.

‘இவங்க இங்க எப்படி?’ யோசித்தாலும் அவளின் விழிகள் அணு அணுவாக அவளவனை விழுங்கிக் கொண்டிருந்தது.

‘அச்சோவ்… என்ன இப்படி இருக்கார். இன்னும் மாஸ் ஆகிட்டாங்க.’ சைட் அடிக்கும் மனம் வெளிப்படையாகக் கூவியது.

உடனே ஆகாஷுக்கு அழைத்தாள்.

“நீ எனக்காக இங்க வரல ரைட்?” எனக் கேட்டாள்.

“உனக்காக… உன்னை பார்க்க தான் வந்தேன். அண்ணாக்கு கிடைச்ச டிரான்ஸ்ஃபர் காரணமாகிப்போச்சு” என்றவன், “அண்ணாவை பார்த்தியா?” எனக் கேட்டான்.

“இப்போ தான். ஒருத்தனை பந்தாடிட்டு இருக்காங்க” என்றாள்.

“இப்போவாவது சொல்லலாமே” என்ற ஆகாஷிடம், “இந்த வலி என்னோடவே போகட்டும்” என்றாள்.

“அண்ணா இப்போ ஏஎஸ்பி இல்லை. தேனி டிஸ்ட்ரிக்ட் எஸ்பி” என்றான்.

“இன்னும் கெத்தா தெரியுறாங்க” என்றவள், “என்ன சொன்ன?” என்ற ஆகாஷின் குரலில் “ஹான்… ஒண்ணுமில்லை” என துண்டித்திருந்தாள்.

“லூசு… அண்ணா அங்க வந்ததே உனக்காகத்தான். இதுல இவங்க மனசை திறந்து சொல்றதையே மறைக்கிறாங்க” என சிரித்துக் கொண்டான் ஆகாஷ்.

புவியின் பார்வை தன் பக்கம் வர, வேகமாக முகத்தை கவிழ்த்துக் கொண்டாள்.

புவியின் உதட்டில் குறுஞ்சிரிப்பு. மேல் பற்களால் கீழ் உதட்டை கடித்து விடுத்தான்.

ஒரு வருடங்களுக்கு பின் தன்னவனை நேரில் காண்கிறாள். தன்னைப்போல் கடிதம் எழுதி வைக்க அவளின் அகமும் புறமும் பரபரத்தது.

கை பையிலிருந்து காகிதம் மற்றும் பேனாவை எடுத்தாள்.

அடி வாங்கியவன் தப்பிக்க முயன்று ஓட, புவி நான்கே எட்டில் எட்டி பிடித்திருந்தான்.

தன்னுடன் வந்த மற்ற காவலரிடம் அவனை ஒப்படைத்த புவி, “ஸ்டேஷன் கூட்டிட்டுப் போங்க” என்று சொல்லிவிட்டு, முல்லை நின்றிருந்த இடத்தை நோக்க… ஆளில்லை. சென்றிருந்தாள்.

ஒருவித எதிர்பார்ப்புடன் புவி அங்கு தள்ளி நிறுத்தியிருந்த தன்னுடைய வாகனத்தில் சென்று பார்க்க, நான்காக மடிக்கப்பட்ட காகிதம் இருக்கையில் கிடந்தது.

“இப்பவும் கண்ணு முன்ன வந்து நிக்கமாட்டியாடி?” என சிறு கோபம் போல் கேட்டவன், காகிதத்தை திறந்து பார்த்தான்.

சிரிக்கும் ஸ்மைலி வரைந்து, “வாழ்த்துக்கள் எஸ்பி சார்” என எழுதி அதற்கு கீழே இரு முல்லை மலர்கள் தீட்டப்பட்டிருந்தது.

இதழின் ஓரம் மென் புன்னகை. மேல் பற்களால் கீழ் உதட்டின் ஒரு ஓரம் மட்டும் மென்மையாய் கடித்து விடுத்தவனின் விரல்கள் மென்மையிலும் மென்மையாய் அம்மலரை வருடின.

“முல்லை…” விழிகள் மலர இதழ் பிரிந்து நா உச்சரித்தது.

நெஞ்சம் உருகிக் கரைந்தது.

“ரொம்ப வெயிட் பண்ண வைக்காதடி. முடியல” என்று சொல்லிக்கொண்ட புவி அடுத்தடுத்த நாட்கள் காலையும் மாலையும் முல்லை கடந்து செல்லும் பாதையில் நின்றிடுவான்.

அவளுக்கு அவன் வேலை விஷயமாக கண்காணிப்பில் இருக்கிறான் என்று தான் தோன்றும். அந்தளவிற்கு நடிப்பில் தேர்ந்து அவளை காணாததைப் போல் நின்றிருப்பான்.

நாளுக்கு நாள் முல்லையே அலுவலகம் செல்லும் நேரத்தையும், திரும்பும் நேரத்தையும் ஆவலாக எதிர்நோக்கத் தொடங்கியிருந்தாள்.

இனி பார்க்கவே கிடைக்காதோ என்று தவித்து இருந்தவளுக்கு, தினமும் பார்க்கக் கிட்டும் தருணங்கள் பொக்கிஷமாக மனப்பெட்டகத்தில் சேர்ந்தன.

இதற்கு ஆயுள் குறைவு… நாளையே பணிமாற்றம் வந்துவிட்டால் அனைத்தும் மீண்டும் நின்றுப் போகும். கடிதங்கள் வார்த்தையின்றி வெற்று காகிதங்களாகவே தன்னகம் நிரம்பியிருக்கும்.

மெல்லிய சோகம் மனதின் ஓரம் இருந்துகொண்டே இருந்தாலும், அவன் பக்கமிருக்கும் நாட்களை அனுபவித்து ரசிக்கத் தொடங்கியிருந்தாள்.

இப்போதெல்லாம் அவனை பார்க்க நேரிட்டால், புவி அசந்த நேரம் கடிதத்தை வைத்துவிட்டு வந்திடுவாள்.

அவள் வைக்க வேண்டும் என்பதற்காகவே, அவள் தன்னை பார்க்க நேரிடும் தருணங்களில் வேலையின் காரணமாக தள்ளி செல்வதைப்போல் நகர்ந்து சென்றிடுவான்.

தான் காணவில்லை என அவள் தன்னை ரசிக்கும் ரசிப்பின் தித்திப்பை துளி துளியாய் அகம் நிரப்பினான். அத்தனை இன்பம் கொண்டான்.

சில நேரங்களில் உன்னை நான் கண்டு கொண்டேன் என்று முன் சென்று நின்றுவிடலாமா எனத் தோன்றிடும். அப்போதெல்லாம் அவளா வரணும் என்ற எண்ணத்தில் அலைந்திடும் மனதை அடக்கிக்கொள்வான்.

ஒருநாள் புவி தனக்கு கீழ் வேலை செய்யும் பெண் காவலரிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, பார்த்துக் கொண்டிருந்த முல்லையின் முகத்தில் அப்பட்டமான முறைப்பு. புவி கரு நிற குளிர் கண்ணாடி அணிந்திருக்க… அவன் அவளை நேர்கொண்டு பார்த்ததை அவள் உணரவில்லை.

“டெய்லி நீ பாக்கணும் தான் அண்ணா இங்க வந்து நிக்கிறாரோ?” மாதேஷ் கேட்க, “ம்க்கும் இன்னும் இது என் ஊருன்னே அவருக்குத் தெரியாது” என்று முனகிய முல்லை, “அவகிட்ட அப்படியென்ன சிரிப்பு” என்று வாய்க்குள் பொரிந்து தள்ளினாள்.

அன்று மாலையே, “பார்த்து… ரொம்ப சிரிக்காதீங்க. பல்லு சுளுக்கிக்கப் போகுது” என்று எழுதி முல்லை மலர் வரைந்து அதன் மீது அடித்திருந்தாள்.

அதனை படித்ததும் புவி இருக்கும் இடம் மறந்து வாய்விட்டு சிரித்தான்.

“பாருடா… உரிமை உணர்வெல்லாம் எட்டிப்பார்க்குது!”

மெல்ல மெல்ல புவி தன்னை வெளிப்படுத்தத் துவங்கியிருந்தான்.

முன்பெல்லாம் அவளை பார்க்காததைப் போல் பார்த்தவன், இப்போதெல்லாம் நேரடியாக தன் பார்வையை அவளிடம் காட்டினான்.

தூரமிருந்து பார்வையால் அவளின் விழி மோதி நின்றான். அவளுக்குத்தான் உள்ளுக்குள் மத்தள இடியாகும். சட்டென்று பார்வையை விளக்கிக் கொள்வாள்.

“அண்ணா உங்களைத்தான் பார்க்கிறார்” என்று மாதேஷ் சொல்ல, “சும்மா இருடா” என்று அதட்டிடுவாள்.

‘என்னை கண்டு கொண்டாரா? அப்புறம் ஏன் என்கிட்ட வந்து கேட்கல? ஆகாஷ் ஃபிரண்டுண்ணு கூட பேச வரலையே?’ குழம்பித் தவித்தாள்.

இங்கு புவியை பார்த்த அன்று தீபிகாவுக்கு அழைத்து அத்தனை சந்தோஷமாகப் பேசியிருந்தாள். இந்த நொடி அவளின் மகிழ்வை குலைக்க வேண்டாமென முல்லை பேசுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்ட தீபிகா, அடுத்த நாள் அழைத்து…

“ஒத்து வராதுன்னு உனக்கே தெரியும் வனம். அப்படியிருக்கையில் திரும்ப எதுக்கு ஆரம்பிக்கிற. இது உன்னோட ஊருன்னு ஆகாஷ் மூலமா புவி சாருக்கு தெரிஞ்சா போதும்… இப்போ நீ வச்சிட்டு வந்த லெட்டர் வச்சு, அந்தப்பொண்ணு நீதான்னு ஈசியா ஸ்மெல் பண்ணிடுவார். அவரும் உன்னை மாதிரி விருப்பம் கொண்டிருந்தால் உன்னுடைய நிலையில் ரொம்பவே கஷ்டம். வேண்டான்னு உறுதியா இருக்கவ அவரையும் சேர்த்து கஷ்டப்படுத்தப் போறியா?” என அத்தனை பேசியிருந்தாள்.

“இனி பண்ணமாட்டேன்” என தீபிகாவுக்கு முல்லை கொடுத்த உறுதி அடுத்த நாள் புவியை பார்க்கும் வரையில் தான் நீடித்தது.

“கண்ட்ரோல் பண்ண முடியல தீப்ஸ். அவங்க இருக்க வரை” என்று தீபிகாவை சமாதானம் செய்திருந்தாள்.

தற்போது புவியின் பார்வையும் தன்மீது விழ, ‘தீபிகா சொல்வதைப்போல…’ என அதற்கு மேல் சிந்திக்க மறந்து,

ஆகாஷூக்கு அழைத்திருந்தாள்.

“அவங்களுக்கு என்னைத் தெரியுமா?” எனக் கேட்டாள்.

“யாருக்கு?”

“யாழன் சாருக்கு?”

“எனக்கெப்படித் தெரியும் டார்லிங். அண்ணா என்கிட்ட இதைப்பற்றி எதும் சொன்னது இல்லையே” என்ற ஆகாஷ், “நான் வேணுன்னா நீதான் அவங்களுக்கு லெட்டர் வைக்கிற பொண்ணுன்னு சொல்லி, கண்டுப்பிடிச்சிட்டிங்களா கேட்கட்டுமா?” எனக் கேட்க, முல்லை வேகமாக மறுத்து அழைப்பத் துண்டித்திருந்தாள்.

‘ஒருவேளை அவங்க என்னை அறிந்திருந்தால்?’ அடுத்து யோசிக்கவே முடியாது வீரமுத்துவின் முகம் கண்முன் வர, தன் காதலை வலிக்க இதயத்தின் அடி ஆழம் சேர்பித்தாள்.

அதற்கடுத்த நாள், தான் செல்லும் பாதையை மாற்றிக் கொண்டாள்.

இரண்டு நாள் அமைதியாக இருந்த புவிக்கு, அவளை வழக்கமாகக் காணும் இடங்களில் பார்க்க முடியாது போக, ‘அவளுக்கு எதும் பிரச்சினையா?’ என தவித்தான்.

‘தன் மனம் புரிந்துவிட்டதோ’ என நினைத்தவனுக்கு, அடுத்தடுத்த நாட்கள் அவளிடமிருந்து கடிதமும் வராமல் போக…

ஆகாஷிற்கு அழைத்து வெடித்து சிதறினான்.

“என்ன நினைச்சிட்டு இருக்காள். அவளா வருவாள். எல்லாம் பண்ணுவாள். நாங்க உருக ஆரம்பிச்சா தள்ளி போயிடுவாளா? ராஸ்கல்… யார்கிட்ட! தொலைச்சிடுவேன்” என்று அவளுக்கான தன் மனதின் ஏக்கத்தை தம்பியிடம் கோபமாக வெளிக்காட்டியிருந்தான்.

“நீங்களே நேரா கேளுங்க.”

“எனக்குத் தெரியாதாடா அது?” என்ற புவி, “ஒரு பார்வை நீங்க வேணுன்னு அவள் பார்த்தா போதும்டா” என்று இறுதியில் உடைந்திருந்தான்.

“புவிண்ணா…”

“ம்ப்ச்… ரொம்பவே உடைய வைக்கிறா ஆஷ்” என்ற புவி, “மொத்தமா விட்டுட்டு போயிட்டே இருக்கலாம் கூட தோணுது. ஆனா முடியாதே! உள்ளுக்குள்ள அசைக்க முடியாதளவுக்கு பட்டா போட்டுட்டா(ள்)” என்றான்.

“நான் பேசட்டுமா புவிண்ணா?”

“எவ்ளோ தூரம் போறான்னு பார்க்கிறேன்” என்ற புவி, “தூக்கிட்டு வந்திடலாமான்னு கூட தோணுது” என்று தான் சொல்லியதில் ஆகாஷின் அதிர்வை கண்டுகொள்ளாதவனாக அலைபேசியை வைத்திருந்தான்.
____________________________

ஒரு மாதம் ஓடியிருந்தது.

புவிக்கு அவள் முன்பு சென்று நிற்க அத்தனை கோபம்.

‘நானா வந்தாலும் இப்படித்தான் உதறி போவியா நீ?’ என்ற காதலில் எழும் தார்மீக கோபம் அது.

‘நீயா வா!’ என தள்ளியே நின்றுகொண்டான்.

முன்பு போல் தானாக சென்று அவள் கண்ணில் படுமாறு நிற்பதில்லை அவ்வளவே! தற்செயலாக பார்க்க நேரிடும் போது பார்வையாலே தன் கோபத்தைக் கடத்திடுவான்.

அந்நேரங்களில் முல்லை தான் அல்லாடிப்போவாள்.

தன்னை நேருக்கு நேர் பார்த்தும் புவி தெரிந்தவள் எனும் முறையில் கூட தன்னிடம் வந்து பேசாத போதே அவன் தன்னை கண்டு கொண்டானென முல்லை அவனை கண்டு கொண்டிருந்தாள்.

அதனால் அவனது கோபத்தை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஏற்கத்தான் முடியவில்லை.

புவியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திட முடியவில்லை.

காதலில் பேரவஸ்தை விழி பார்த்து அகம் தவிப்பது.

தவிப்பவள் கொஞ்சமும் மிச்சமின்றி தன்னுடைய தவிப்புகளை தன்னவனிடம் தவிப்பாய் சேர்க்கவும் தவறவில்லை.

அவளது ஏக்கமும் தவிப்பும் புரிந்ததால் தான் என்னவோ அவளாக வரட்டும் என்று இன்னும் பொறுமை காக்கின்றான்.

அவனது பொறுமை கரை உடையும் முன் அவளது காதல் முந்திக்கொள்வது நல்லது. இல்லையெனில் புவியின்(பூமி) பொறுமையாய் காத்து நிற்பவன், பெரும் அதிர்வாய் அவளை உள்ளிழுத்துக் கொள்ளும் அபாயம் உண்டு. அவனின் காதல் அத்தகைய வலிமையைக் கொண்டது.

அன்று வீரபாண்டி கிராமத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு அந்த தொகுதி அமைச்சர் வருவதால் பாதுகாப்பிற்கு புவியும் அவருடன் வரும் சூழல்.

அந்த அம்மன் அமைச்சரின் குலம் தெய்வம் என்பதால் அன்றைய பொழுது புவிக்கு அங்கு தான்.

இன்று தன்னுடைய பணி வீரபாண்டி கிராமத்தில் என்றதும் புவிக்கு தன்னைப்போல் ஒரு உற்சாகம். மனதின் துள்ளல் முகத்தில் நிலைத்துவிட்ட புன்னகையில் தெரிந்தது.

ஊர் முழுக்க காக்கியால் நிரம்பியிருந்தது.

தேனியின் முக்கிய சாலையிலிருந்து வீரபாண்டி கிராமத்துக்கு செல்லும் கிளை சாலையில் தொடங்கி ஊரின் எதிர்பக்க எல்லை வரை காவலர்கள் அமைச்சருக்கு அரணாக நின்றிருந்தனர்.

அமைச்சரின் வருகையால் அன்று ஊருக்குள்ளிருக்கும் மக்களுக்கு வெளியில் செல்லவும், வெளியிலிருந்து வேறு மக்கள் ஊருக்குள் வரவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

வீட்டின் மாடியிலிருந்து முல்லை, மதுரா, மாதேஷ் மூவரும் அம்மன் கோவிலில் என்னென்ன நடக்கிறதென்று கவனித்துக் கொண்டிருந்தனர்.

“இந்த அமைச்சரால் ஒருநாள் லீவ் கிடைச்சது” என்ற மதுரா மாடிச் சுவற்றில் குதித்து அமர்ந்தாள்.

“அண்ணா வருவாங்களாக்கா?” மாதேஷ் கேட்க,

“தெரியாது” என்ற முல்லை அடுத்த தெருவிலிருக்கும் கோவில் பக்கம் திரும்ப அவளை பார்த்துக் கொண்டு கோவில் மண்டபத்தின் மேல் தளத்தில் நின்றிருந்தான் புவியாழன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
55
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

8 Comments

  1. செம்ம்ம்ம… புவி உருகுவதும் உடைவதும்… இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு தள்ளி நிற்பது உயிர் வலி… பார்ப்போம் முல்லை எப்போது உடைகிறாள் என்று..❤️❤️💕

    1. Author

      மொத்தமா உடைஞ்சு நிற்பாள் 🫂🫂🫂

  2. புவிக்கு இதுதான் அவங்க அப்பாவுக்கும் சொந்த ஊர் முல்லை அவனுக்கு அத்தை பொண்ணுனு தெரிய வருமா 🤔🤔🤔🤔🤔

    1. Author

      அடுத்தடுத்த பதிவில் sis

    1. Author

      😍😍😍❤️❤️❤️ Thank you kaa 🫂🫂🫂