
அத்தியாயம் 10
வனம் தன் தம்பி மாதேஷை முறைத்துக்கொண்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தாள்.
“அக்கா ஸ்கூலுக்கு டைம் ஆச்சு. ஃபர்ஸ்ட் பீரியடே டெஸ்ட் இருக்கு. வா கிளம்புவோம்” என்று மாதேஷ் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
“உனக்கு எப்படித் தெரியும் சொல்லு, போகலாம்.” முல்லை வண்டியை உயிர்பிக்கமாட்டேனென்று அடமாக இருந்தாள்.
“என்னடா இன்னும் கிளம்பாம இருக்கீங்க?” என்று கல்லூரி செல்லத் தயாராக வெளியில் வந்த மதுரா கேட்டாள்.
“நேத்து நைட்டிலிருந்து நான் ஒன்னு கேட்டுட்டு இருக்கேன். அவன் பதில் சொன்னா கிளம்பிடலாம்” என்ற முல்லை, “உனக்கு காலேஜ் பஸ் வந்திடுமே… நீ போ!” என்றாள்.
“அங்க வரை நடக்கணுமே. டிராப் பண்ணுக்கா பிளீஸ்” என்றாள் மதுரா.
“இங்கிருக்க பஸ் ஸ்டாப். நடந்து போ மது. இன்னைக்கு இவன் என் கேள்விக்கு பதில் சொன்னா தான் நான் நகருவேன்” என்று முல்லை சொல்லிக் கொண்டிருக்க, அவர்களுக்கு பின்னால் வீரமுத்துவின் கணைப்பு சத்தம்.
“உட்காரு” என்ற முல்லை தன் பின்னால் இருவரும் அமர்ந்ததும் வண்டியை உயிர்ப்பிக்க,
“சாயங்காலம் எப்போ வருவ வனம்?” என தன் சிம்மக் குரலில் கேட்டார் வீரமுத்து.
“எனக்கு ஆறு மணிக்கு முடிஞ்சிடும் ஐயா. மாதுக்கு ஸ்பெஷல் கிளாஸ் ஆறரைக்கு தாங்க முடியும்” என்றாள்.
“சரி… சூதானமா போயிட்டு வாங்க” என்றவர், “நீ வந்ததும் கொஞ்சம் பேசணும்” என்றார்.
“சரிங்க ஐயா” என்ற முல்லையின் குரல் அத்தனை மெல்லியதாக ஒலித்தது.
மதுவை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு, அவளின் கல்லூரி பேருந்து வர எடுத்துக்கொண்ட ஐந்து நிமிடங்களும் முல்லை மாதேஷிடம் பதில் சொல்லெனக் கேட்டு நின்றுவிட்டாள்.
“அக்கா எட்டே காலுக்கு கிளாஸ். எட்டு ஆச்சுதே பிளீஸ்…” என்று இரைஞ்சினான்.
மதுவும் பேருந்து வந்து சென்றுவிட்டாள்.
அப்போதும் முல்லை சட்டமாக வண்டியை கிளப்பாது நின்றிருக்க,
“நான் சொல்றேன்… நீங்க திட்டக் கூடாது” என்ற மாதேஷ், “நாலு மாசம் முன்ன படம் பார்க்கலான்னு நானும் மதுவும் உங்க லேப் எடுத்தோம். அதுல தான் போலீஸ் ஃபோட்டோஸ் எல்லாம் பார்த்தோம். ஃபோல்டர் நேம் மை லவ் இருந்துச்சு…” என்று நலிந்துக் கூறினான்.
“ஹோ… அப்போ மதுவுக்கும் தெரியுமா?”
“ம்ம்” என்ற மாதேஷ், “செம ஹேண்ட்சம்க்கா. உங்களுக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்” என்றான்.
வலி சுமக்கும் அவளது இதயத்தில் அவனது வார்த்தைகள் இதத்தை பரப்பியது.
‘இந்த மகிழ்விக்கு ஆயுள் இல்லை’ என விரக்தியாக நினைத்தவள் அடுத்து எதுவும் பேசாது வண்டியை கிளப்பியிருந்தாள்.
முல்லையின் அமைதி மாதேஷுக்கு என்னவோ போலிருந்தது.
பள்ளியில் இறங்கிக் கொண்டவன்,
“சத்தியமா வீட்டில் யார்கிட்டவும் சொல்ல மாட்டோம்க்கா” என்றான்.
மெல்லியதாகப் புன்னகைத்த முல்லை, தம்பியின் கன்னம் தட்டிச் சென்றாள்.
___________________________
“எப்போ போற?”
“நீங்க வரீங்களா?”
“நான் இங்க தான்னு தெரிஞ்சா அவளே வருவாள். ஆனால் முன்ன மாதிரியே முகம் காட்டமாட்டாள்.
“அப்போ இனி உங்களுக்கு இங்க தான் வேலைன்னு சொல்லவா?” என்று புவி ஆர்வமாகக் கேட்க,
“வேண்டாம்” என்று அப்பேச்சினை முடித்துக் கொண்டான் புவி.
ஆகாஷிற்கு காற்றிறங்கிய பலுனாக முகம் சுருங்கிவிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் முல்லை புவிக்கு இடையேயான கண்ணாமூச்சி ஆட்டமே ஆகாஷிற்கு தெரிய வந்தது.
அப்போது புவி ஒரு சவாலான வழக்கை கையாண்டு கொண்டிருக்க, குற்றவாளியை கைது செய்யும் போது ஏற்பட்ட அடிதடியில் புவியின் கையில் ஒருவன் வெட்டிவிட்டான். ஆழமான காயம் இல்லை என்றாலும், வெட்ட வரும்போது புவி கத்தியை பிடித்து தடுத்ததில் உள்ளங்கையில் நீளமாக கிழித்திருந்தது.
அதனை செய்தியில் பார்த்துவிட்டு தீபிகாவுக்கு அழைத்து முல்லை கதறிய கதறலில், அவள் அழுது கொண்டிருக்கும் போதே தீபிகா ஆகாஷிற்கு அழைத்து இருவரும் இரவில் கடற்கரைக்கு நடக்க சென்றது முதல் தற்போது முல்லை அழும் காரணம் வரை அனைத்தும் சொல்லிவிட்டாள்.
ஆகாஷிற்கு அதிர்வுடன் கூடிய ஆச்சரியம்.
“இன்னும் எனக்குத் தெரியாமல் எதும் இருக்கா?”
“டார்லிங் பிளீஸ்…” முல்லையின் தழுதழுப்பில் ஆகாஷ் தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான். அது கோபமென்று சொல்லிட முடியாது. தனக்கு நெருக்கமானவர்கள் தம்மிடம் ஒன்றை மறைக்கும் போது நெஞ்சில் எழும் சிறு ஏமாற்றத்தின் வெளிப்பாடு.
“உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்லை” என்ற முல்லை, “இது என்னோட போகட்டும். அவங்களுக்கு இப்போ நான் நினைவில் கூட இருக்கமாட்டேன்” என்றாள்.
கல்லூரி இறுதி நாளன்று புவி தனக்காக கல்லூரி வந்த தேடல் அறிந்தும் அவ்வாறு கூறினாள்.
“அண்ணா உன்னை கண்டுப்பிடிச்சிருக்கமாட்டாங்க தோணுதா உனக்கு?” ஆகாஷ் ஆதங்கமாகக் கேட்டான்.
“அவருக்கு இவள் விட்டு வைக்கிற க்ளூவே அவளோட நேம் தான்டா. நம்ம காலேஜ் செஞ்சூரி இயர் செலபிரேஷன் அப்போ பிரைஸ் கொடுக்க நேம் கூப்பிடுவாங்க இவள் மாட்டிப்பாள் நினைச்சேன். ஆனா நேம் சொல்லாம பிராஞ்ச் வித் ரோல் நெம்பர் சொல்லியதில் தப்பிச்சிட்டாள். இல்லைன்னா எப்பவோ மாட்ட வேண்டியது. இன்னமும் கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்காள்” என்ற தீபிகாவிடம் இந்நேர முல்லையின் அழுகை கடுப்பைத்தான் கிளப்பியது.
“எதுக்கு இந்த கஷ்டம் வனம்?”, ஆகாஷ்.
“தாத்தாவை மீறி எதும் செய்திட முடியாது டார்லிங். இதில் என் நேசத்தை நான் வெளிப்படையா சொல்லி அவங்களுக்கும் வலி கொடுக்க வேண்டாம்” என்றாள்.
புவி வலியில் ரணம் சுமந்து கொண்டிருக்கிறான் என்பது தெரியவில்லை.
‘முல்லையின் காதல் ஒருதலையாக இருந்திடும் போது, அவளே சேர வாய்ப்பில்லை எனும் போது, வீணாக புவியிடம் சொல்லி அவனையும் குழப்ப வேண்டாம்’ என நினைத்த ஆகாஷ் புவியிடம் சொல்லாதுவிட்டான்.
அத்தோடு தன் தோழியின் காதலை எப்படியும் சேர்த்து வைத்திட வேண்டுமென்றும் எண்ணியவன், புவிக்கு வீட்டில் கல்யாணப் பேச்சு எடுக்கும் போது முல்லையைப் பற்றி சொல்லிட வேண்டுமென நினைத்திருந்தான்.
அதனாலேயே புவியின் திருமணம் குறித்து திருவும், அமிர்தமும் பேசும் பொழுது, பெண் பார்த்தாச்சா எனக் கேட்டிருந்தான்.
இப்போது புவியின் விருப்பமும் தெரிந்திருக்க, இருவரையும் விரைந்து சேர்த்து வைக்கவே ஆவல் கொண்டான். அதற்கு புவி தடை விதிக்க, சோர்ந்து போனான்.
“ரெண்டு பேரும் இப்படியிருந்தால் எப்படி புவிண்ணா?”
“அவளே வரணும். வருவாள். எங்க போயிடப் போகிறாள்” என்ற புவி, “நான் கிளம்புறேன். பதினொரு மணிக்கு சார்ஜ் எடுத்திருக்கணும்” என்ற புவி காவல் நிலையம் செல்ல நகர,
“நீங்க எப்படி அவளை கண்டுபிடிச்சிங்க?” எனக் கேட்டான் ஆகாஷ்.
புவி புன்னகைத்தானே தவிர பதில் சொல்லவில்லை. சென்றிருந்தான்.
_______________________________
தீபிகாவால் மதியத்திற்குள் வர முடியவில்லை.
மூன்று மணிக்கு மேல் தான் கோவையிலிருந்து அவள் தேனிக்கு வந்திறங்கினாள்.
அவளுக்காக பேருந்து நிலையம் சென்ற ஆகாஷ், பார்த்ததும் தலையில் கொட்டி தோளோடு சேர்த்து விடுத்தான்.
“எப்படி பக்கி இருக்க? மிஸ் யூ சோ மச்” என்ற தீபிகா, ஒரு வருடத்திற்கு பின் தன் நண்பனை பார்த்ததில் நெகிழ்ந்திருந்தாள்.
“பார்த்தா தெரியலையா?” என்ற ஆகாஷ், “நல்லா சாப்பிடுற போல” என்று அவள் சற்று குண்டாகியிருப்பதைக் கண்டு கேட்டான். நிச்சயம் அதில் கேலியில்லை.
“சோறு தான்டா முக்கியம்” என்ற தீபிகா, “அவளுக்கு எப்போ ஆபீஸ் முடியும் தெரியுமா? நாம போகும் போது அவள் கிளம்பியிருக்கப்போறாள்” என்றாள்.
“அதெல்லாம் இருப்பாள். இல்லைன்னா வீட்டுக்கே போயிடலாம்” என்றான் ஆகாஷ்.
“ஆத்தி… நான் வரல. ஒருமுறை வீரமுத்து பார்த்தே நான் நடுங்கிட்டேன். பொம்பளை பிள்ளை இப்படித்தான் இம்புட்டு தூரம் தனியா வருவாங்களா கேட்டு அவ்ளோ அட்வைஸ்” என ஒருமுறை முல்லையை பார்க்க வீட்டிற்கு வந்த தீபிகாவை தெறிக்க ஓட வைத்திருந்தார் பெரியவர். அதனைத்தான் தற்போது அவள் கூறினாள்.
இருவரும் ஆட்டோ பிடித்து முல்லை வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்று சேர்ந்தனர்.
வரவேற்பில் இருக்கும் பெண்ணிடம் சொல்லிவிட்டு இருவரும் காத்திருக்கும் அறையில் முல்லையை எதிர்நோக்கி அமர்ந்திருந்தனர்.
சில நிமிடங்களில் ‘தன்னைத்தேடி யாரது அலுவலகம் வந்திருப்பது’ எனும் கேள்வியோடு வந்த முல்லை நிச்சயம் தன் நண்பர்களை எதிர்பார்க்கவில்லை என்பது அவளின் விழிகள் விரிந்த நொடி, கன்னம் இறங்கிய நீர் சொல்லியது.
“ஹேய் பக்கீஸ்” என்ற முல்லை துள்ளலோடு இருவரையும் நெருங்க… மூவரும் ஒற்றை அணைப்பில் இறுகி நின்றனர்.
“டார்லிங்” என்ற முல்லை ஆகாஷின் தோளில் தன் தலையால் இடித்தாள்.
“எப்படிடா இருக்க?”, ஆகாஷ்.
“நல்லாயிருக்கேன்” என்ற முல்லை, “என்னை பார்க்கவா? சொல்லவே இல்லை” என்றாள்.
“சர்ப்ரைஸ்” என்ற தீபிகா, புவிக்கு இங்கு மாற்றல் குறித்து சொல்ல வாய் திறந்திட, ஆகாஷ் வேண்டாமென கண் காட்டினான்.
“வெளியில் எங்கும் போகலாமா?” ஆகாஷ் கேட்டிட முல்லை நேரத்தைப் பார்த்தாள்.
“கரெக்ட் டைம் வீட்டுக்கு போகணுமா?” கேட்ட தீபிகாவிடம் “அதெல்லாம் இல்லை” என்ற முல்லை, தன்னுடைய அலைபேசியை எடுத்து மதுராவுக்கு அழைத்தாள்.
“எங்க மது இருக்க?”
“காலேஜ் பஸ்ஸில் தான் இருக்கேன். இப்போ கிளம்பப்போகுது” என்றாள்.
“ஹோ” என்ற முல்லை, “சரிடா நீ பார்த்து போ” என வைத்திட்டு, திருவாசகத்திற்கு அழைத்தாள்.
“மாமா மாதுவை நீங்க பிக்கப் பண்ணிக்க முடியுமா? எனக்கு சடனா மீட்டிங் அரெஞ் பண்ணிட்டாங்க. எப்போ முடியும் தெரியல” என்றாள்.
அவரும் சரியென வைத்திட, வீரமுத்துக்கு அழைத்து திருவாசகத்திடம் சொல்லிய அதே காரணத்தை சொல்லி, வீட்டிற்கு வர தாமதமாகும் என தெரிவித்தாள்.
“முடிஞ்சளவு வெரசா வர பாரு” என்று அவர் வைத்ததும், முல்லையிடம் பெரு மூச்சு. தன்னையே பார்த்திருந்த நண்பர்கள் இருவரையும் பார்த்து சுதாரித்து திரும்பினாள்.
“இன்னும் வேறு யார்கிட்ட பெர்மிஷன் வாங்கணும்?” ஆகாஷ் ஆயாசமாகக் கேட்டான்.
நொடியில் முல்லையின் முகம் வாடிவிட,
“ச்சூ… இப்போ என்னவாம். போலாம் வாங்க” என்றாள் தீபிகா.
மூவரும் அருகிலிருக்கும் பூங்கா ஒன்றிற்கு சென்றனர். நீண்ட நேரம் ஒரு வருட கதையை பேசினர். இருட்டத் துவங்கியிருந்தது.
“நான் கிளம்பணும் வனம்?” தீபிகா சொல்லிட மூவரும் ஹோட்டல் சென்று நீண்ட நாட்களுக்குப் பின்னர் அரட்டை அடித்து சிரித்து பேசி ஒன்றாக உணவு உண்டனர். அதன் பின்னர் தேனி பேருந்து நிலையம் சென்று ஆகாஷும், முல்லையும் தீபிகாவை கோவை பேருந்தில் ஏற்றிவிட்டனர்.
“நெக்ஸ்ட்?” ஆகாஷ் கேட்டிட முல்லை நேரத்தை பார்த்தாள்.
“நமக்குள்ள நேரம் பார்த்து பேசுற நிலை வந்திடுச்சா வனம்?”
“அப்படியில்லை ஆகாஷ்… தாத்தா” என்று முல்லை திணற,
“இட்ஸ் ஓகேடா. எனக்கு புரியுது” என்ற ஆகாஷ், “அண்ணாக்கு மேரேஜ் டாக் ஆரம்பிச்சிட்டாங்க” என்றான்.
முல்லை விலுக்கென அவனை நிமிர்ந்து பார்க்க… அவளின் கண்களில் அப்பட்டமான வலி. சட்டென்று கன்னம் விழுந்த கண்ணீரை துடைத்திருந்தாள்.
“நீ ஓகே சொல்லு வனம். அண்ணாகிட்ட நான் பேசுறேன்” என்ற ஆகாஷ், “நீ அமைதியா இருக்கும் போது என்னாலும் ஒண்ணும் பண்ண முடியாது” என்றான்.
“டார்லிங்…”
“நீ அண்ணாவை எவ்ளோ விரும்புறன்னு உன் கண்ணு சொல்லுதே வனம். உன் காதலுக்கு நீயே தடையா இருக்கும் போது, தெரிஞ்சா பெரியவங்க என்ன சொல்லுவாங்க எப்படி நினைக்கிறது. அவங்களுக்கு தெரியும் முன்னவே எதிர்க்கத்தான் செய்வாங்க நீயேன் நினைக்கிற” என்றான்.
“சொன்னாலும் புரியாது உனக்கு. தாத்தாவுக்கு கட்டுபட்டே பழகிடுச்சு” என்றவளை அடித்தால் என்ன என்று தோன்றியது.
“சப்போஸ் அண்ணாவும் உன்னை விரும்பினால்?”
“அதுக்கு வாய்ப்பே இல்லை.” உண்மையை தெரிந்து கொண்டே பொய் உரைத்தாள்.
“இது உன்னோட கெஸ் தானே?”
“நான் யாருன்னு தெரியாதப்போ எப்படி அவங்களுக்கு லவ்?” என்ற முல்லை, “அவங்க நல்லாயிருக்கட்டும் ஆகாஷ். இந்த வலி என்னோட போகட்டும்” என்றாள்.
‘அண்ணா உன்னைவிட அதிக வலி சுமக்கிறார் பக்கி. உன்னைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். அப்போ எவ்ளோ வலி அவருள் இருக்கணும்?’ மனதில் நினைத்தவனுக்கு புவியின் வார்த்தையை மீறி முல்லையிடம் எதுவும் சொல்லிட முடியவில்லை.
“நீ எதுல போற? பஸ் ஆர் டிரெயின்?”
“டிரெயின்… டைம் இருக்கு. நான் போயிக்குவேன். நீ பார்த்து போ” என்று முல்லையை அனுப்பி வைத்தவன், சில நிமிடங்கள் பேருந்து நிலையத்திலேயே, அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
புவி அழைக்கும் வரை இருவரையும் எப்படி சேர்த்து வைப்பதென்று பலவாறு யோசித்து அதிலே உழன்று கொண்டிருந்தான்.
“நான் இப்படியே கிளம்புறேன் புவிண்ணா” என்ற ஆகாஷ், “நீங்க ரயில்வே ஸ்டேஷன் வந்துடுங்க” என்றான்.
ஆகாஷ் வருவதற்கு முன்பு புவி அங்கிருந்தான்.
இருவரிடமும் மௌனம்.
“எதும் கேட்கமாட்டிங்களா?”
“என்னது?”
“போங்க புவிண்ணா. ரெண்டு பேரும் ஏன் இப்படி இருக்கீங்க” என்ற ஆகாஷ்,
“அவள் வருவான்னு எனக்குத் தோணலை. அவளோட தாத்தாவை மீறி எதுவும் பண்ணமாட்டாள். நீங்க தான் எதும் பண்ணனும்” என சொல்லிவிட்டு, புறப்படத் தயாராக இருந்த ரயிலில் ஏறி அமர்ந்தான்.
ஆகாஷின் முகம் மறையும் வரை முறுவலோடு நின்றிருந்த புவி, நடை மேடை இருக்கையில் தொய்ந்து அமர்ந்தான்.
மனதால் பக்கமிருந்தும் காதலாய் விலகி நிற்கும் வலி அவனுள் பெரும் பாரமாய்.
__________________________
முல்லை வீட்டிற்கு வர அவளிடம் பேச வேண்டுமென்றே வீரமுத்து காத்திருந்தார்.
முல்லை இரவு உணவு முடிக்கும் வரை காத்திருந்தவர்,
“வனம்” என பக்கம் அழைத்தார்.
என்ன பேசப் போகிறார் எனும் பெருத்த வினாவுடன் அவரின் முன் சென்று நின்றாள்.
தனக்கு அருகில் இருக்கையை காண்பித்த பெரியவர்,
“உனக்கு கல்யாணம் செய்யணும் நினைக்கிறோம். உன்னோட பதில் என்ன?” எனக் கேட்டார்.
“அக்கா லவ்வுக்கு ஆப்பு ரெடியாகுது.” மாதேஷ் மதுவின் காதில் முணுமுணுத்தான்.
“அதெல்லாம் அக்கா பார்த்துப்பாள். மெதுவாவே இருந்தாலும் எல்லாரும் இருக்கும்போது இப்படி பேசுறது இதுவே கடைசியா இருக்கட்டும். யாருக்கும் கேட்டுச்சு அம்புட்டுதேன். அக்கா பாவம்” என்றாள் மது.
இப்படியொரு பேச்சு எடுத்துவிடக் கூடாதென அவள் வேண்டிக்கொள்ளாத நாளில்லை.
கண்முன் புவியின் முகமும், நெஞ்சத்தில் நேசத்தின் அலையும் தோன்றிட, தவிப்புகள் கூடி மருகினாள்.
“அவள் என்ன சொல்றதுங்க ஐயா! நாம பார்த்து செஞ்சா சரிதேன்” என்றார் குமுதா.
முல்லை பாவமாக அன்னையை ஏறிட…
“என்ன எங்க மொவத்தையே பார்த்துகிட்டு நிக்கிற… ஐயா கேட்கிறாங்க பதில் சொல்லு” என்று மகளை அதட்டினார் குமுதா.
“குமுதா” என்று மகளை அடக்கிய வீரமுத்து, “நீயி சொல்லு” என்றார். முல்லையிடம்.
“இப்போ வேண்டாங்க ஐயா.” ஒருவழியாக தட்டுத் தடுமாறி சொல்லிவிட்டாள்.
“இப்போ இல்லாம வேறெப்போ பண்ணுவாங்க” என்றார் வர்ணம்.
“நீயி சும்மா இரு. நான் கேட்டுட்டு இருக்கேன்ல” என்ற வீரமுத்து, “எத்தனை பையன் பார்த்தாலும், நீ சம்மதம் சொன்னாதேன் கல்யாணம். நாங்க பையன் பார்க்க ஆரம்பிக்கிறோம். உன் செட்டு புள்ளைவளுக்கெல்லாம் கல்யாணம் முடிஞ்சு, புள்ளைவ பொறந்தாச்சு” என்று எழுந்து கொண்டார்.
“நீயும் நாலு இடத்தில் சொல்லி வைய்யீ” என்று மகனிடமும் சொல்லியவர், “போயி உறங்குங்க” என்று அறைக்குள் சென்றுவிட்டார்.
நொடியில் வீடே இருளில் மூழ்கியது.
தன் வாழ்வும் இருண்டதாக தனித்து தவித்து நின்றிருந்தாள் புவியின் முல்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
45
+1
1
+1
1
⬅ Prev Episode
உருகும் நேசம் உடையும் நெஞ்சம் ✉️ 9
Next Episode ➡
உருகும் நேசம் உடையும் நெஞ்சம் ✉️ 11
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Ayayo vana mulai pavam ….so kastam
🫂🫂🫂
தலைப்பின் முழு அர்த்தமும் இங்க தான் ஆரம்பிக்குதா?…
ஆமா ஆமா அக்கா 😍