Loading

அறைக்குத்திரும்பியதும் அவசர அவசரமாக அலங்காரங்களை கலைத்து விட்டு அடுத்த ஃபோட்டோ சூட்டுக்கு தயாரானாள் ரூபிணி.

சிலை அலங்காரத்தை மாற்றிக் கொண்டிருக்க அவளைத்தேடி மெலினா வந்தார். ரூபிணி கைபேசியை பார்த்துக் கொண்டிருக்க மெலினா அவள் முகத்தை ஆராய்ந்தார்.

பெரிய கோபம் எரிச்சல் எதுவும் இல்லை. கைபேசியில் எதையோ பார்த்து புருவம் சுருக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

ஆனாலும் அவளிடம் பேசியே ஆக வேண்டும். இப்போது ஆட்கள் நிறைந்திருப்பதால் அமைதியாகி விட்டார்.

நள்ளிரவு நேரம் நிலவு உட்சத்தை தொட அதை கேமராவினுள் கொண்டு வந்தார் கேமரா மேன். அதே நிலவொளியில் ஜொலித்துக் கொண்டிருந்த ரூபிணியும் அதோடு அழகாக பதிந்தாள்.

இரவு ஃபோட்டோ சூட் நடக்க காரணமும் இது தான். நிலவோடு அவள் அழகாக நின்ற தருணங்கள் அனைத்தையும் கேமராக்குள் ஏற்றிக் கொண்டிருக்க அதை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் உதயா.

அவன் இப்போது தான் பார்ட்டியிலிருந்து திரும்பியிருந்தான். குளித்து விட்டு வந்தவன் மெடோனாவின் செய்திக்காக காத்திருந்தபடி கண்ணாடி வழியே கீழே பார்க்க ரூபிணி அவன் பார்வையில் விழுந்தாள்.

எதற்காக அவ்வளவு அவசரமாக கிளம்பி வந்தாள் என்று இப்போது புரிந்தது. அவளது அசைவுகளை கவனித்தான். சற்று எரிச்சல் வந்தது. இன்னும் கூட அவள் நிறைய கற்க வேண்டும். அவள் கண்ணில் இன்னமும் பயமும் பதட்டமும் இருந்தது. அது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் தான் அவளை மறுக்கவும் செய்தான்.

ரூபிணிக்கு அழகில் எந்த குறையும் இல்லை. அதை அவனே அவன் வாயால் ஒப்புக் கொண்ட தருணம் அவனை வெறியேற்றத்தான் செய்தது.

“அழகா இருந்தா மட்டும் போதுமா?” என்று கேட்டதற்கு “நான் அழகா இருக்கேன்னு ஒத்துக்கிட்டதுக்கு தாங்க்ஸ்.. ஆனா அறிவ பத்தி பேசாதீங்க. அத புரிஞ்சுக்க உங்க கிட்டயும் கொஞ்சம் காமன் சென்ஸ் இருக்கனும்” என்று சொல்லி வைத்தாளே.

அன்றைய வாக்குவாதம் இன்று நடந்தது போல் அவன் மனதில் அழியாமல் இருக்கிறது.

இப்போது கூட கீழே சென்று அவளை நன்றாக திட்ட வேண்டும் போல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான். அவள் அவனிடம் வேலை செய்யவில்லை. அதனால் அவனுக்கு உரிமை இல்லை.

கீழே படங்களை எடுத்து முடியும் வரை அங்கேயே இருந்தான். திடீரென எதோ தோன்ற தன் கைபேசியை எடுத்து ரூபிணியை அதன் வழியாக பார்த்தான்.

மேக் அப் போடும் பெண் எதோ சொல்லி விட்டு நகர ரூபிணி அதைக்கேட்டு இயற்கையாக சிரித்தாள். அது அழகாக உதயாவின் கைபேசியில் பதிவானது.

“சீ.. இது எவ்வளவு நல்லா இருக்கு? இவளுக்கு திமிர் மட்டும் இல்லனா நல்லாவே வந்துருப்பா” என்று சலித்தவன் கடைசி நேர சில படங்களை எடுத்து முடித்து அவர்கள் விளக்கை அணைத்ததும் உள்ளே சென்று விட்டான்.

ரூபிணியும் அனைத்தும் முடிந்ததும் அறைக்கு திரும்பினாள். வந்த வேலை முடிந்து விட்டது. அவள் அணிந்த உடைகள் அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

நாளை நண்பகலுக்கு மேல் கிளம்பிச் செல்ல வேண்டும். அது வரை நிம்மதியாக உறங்க வேண்டும் என்று முடிவு செய்து குளித்து விட்டு வர மெலினா கதவை தட்டினார்.

உடனே கதவை திறந்து அவரை உள்ளே விட்டாள்.

“ஓகே.. இப்ப ரிலாக்ஸா பார்ட்டில நடந்தத பத்தி சொல்லு” என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

ரூபிணி யாரை சந்தித்தாள்? யார் எல்லாம் அடையாள அட்டை கொடுத்தனர் என்று அடுக்கினாள்.

அனைத்து அட்டைகளையும் எடுத்து மெலினாவிடம் கொடுத்து விட்டாள்.

“டீல் நல்லதா இருந்தா பேசலாம்.. நான் பார்க்க சொல்லுறேன்”

ரூபிணி தலையாட்டியதும் “இப்ப உதயா கூட என்ன பிரச்சனைய இழுத்துட்டு வந்துருக்கனு சொல்லு” என்று கேட்டார்.

“நீங்க ஏன் அவனுக்கு இவ்வளவு பயப்படுறீங்க?” என்று எரிச்சலாக கேட்டாள்.

“பயப்படாம? நீ அவன் கூட எப்பலாம் சண்டை போடுறியோ அப்பலாம் அவன் உன் கரியர்ல கை வைக்கிறான். நீயாச்சும் வாய மூடிட்டு இருக்கியானா அதுவும் இல்ல.”

“அவன் எவ்வளவு ட்ரை பண்ணாலும் நான் வளருறத நிறுத்த முடியாது. ஓகே? சும்மா அவன் கடவுள் மாதிரி பேசாதீங்க”

“ஏன்? இப்ப என்ன பண்ணிட்டு வந்த?”

“நான் ஒன்னும் பண்ணல.. அவனே என்னை கண்டுக்காம தான் பார்ட்டி முழுக்க சுத்துனான்”

“ஆமா ஒரு பொண்ணு கூட வந்தான்னு சொன்னியே.. யாரு அது?”

“அவன் கேர்ள் ஃப்ரண்டாம்”

“நிஜம்மாவா?” என்று ஆச்சிரயப்பட்டார்.

“ஆமா..”

“விசயமே தெரியல.. எப்ப இருந்து டேட்டிங்ல இருக்கானாம்?”

“அதெல்லாம் அவன் சொல்லல”

“எவன்?”

“உதயா தான்.. வேற யாரு?”

“சரி அத விடு.. வேற என்ன காசிப் கிடைச்சது?”

“நிறைய கிடைச்சதே..” என்றவள் ஒவ்வொன்றாக சொல்ல “ப்ச்ச்.. நான் இவங்கள பத்தி கேட்கல.. உதயா பத்தி கேட்டேன்” என்றார்.

“அவன பத்தி யாரும் என் கிட்ட எதுவும் சொல்லல.. சொன்னாலும் காசிப் வராது.. வெறும் புகழ்ச்சி தான் வரும். அதைக்கேட்டா எனக்கு உடம்பு எரியும்”

“அப்ப இந்த கேர்ள் ஃப்ரண்ட் பத்தி மட்டும் எப்படி தெரிஞ்சதாம்?”

“அவனே தான் வந்து சொன்னான்”

“வாட்?” என்று அதிர்ந்தார்.

ரூபிணி அவரது அதிர்ச்சியை பெரிதாக மதிக்கவே இல்லை.

“அப்ப நீ அவன் கிட்ட பேசிருக்க? எத்தனை தடவ சொன்னேன்?”

“சித்தி.. அவனா தான் வந்து பேசினான்” என்றவள் அங்கு நடந்ததை எல்லாம் ஒப்பித்தாள்.

“நல்ல வேளை நீ எதையும் பேசி வைக்காம வந்துட்ட”

“அவன் விஷால பத்தி பேசுறான் சித்தி.. நீங்க கால் பண்ணலனா எதாவது பண்ணிருப்பேன்”

“நீ இது வரை பண்ணதே போதும். உன் பாய் ஃப்ரண்ட்ட பாதுகாக்குறேன்னு கரியர விட்டுறாத”

“எனக்கு என் விஷாலும் முக்கியம் தான்”

“இங்க பாரு ரூபிணி.. நான் பல தடவ சொல்லிருக்கேன். திரும்பவும் சொல்லுறேன். நான் உனக்கு மேனேஜர் தான். உன்னால நானும் சம்பாதிக்கிறேன். ஆனா அத விட முக்கியமான ஒன்னு நமக்குள்ள இருக்கு. நம்ம உறவு. நான் உன் சித்தி. என் அக்கா என்னை நம்பிருக்கா.

நான் சாதிக்க முடியாத இடத்துல நீ சாதிக்கும் போது என் மகளே சாதிச்ச மாதிரி சந்தோசப்பட்டுட்டு இருக்கேன். நீ உன் கரியர காப்பாத்திட்டா உன் பர்ஷ்னல் சாய்ஸ்ல நான் தலையிட மாட்டேன்னு சொல்லிருக்கேன். அத மறந்துடாத. அவனுக்காக நீ உதயா கிட்ட சண்டை போட்டு பிரச்சனை வந்துச்சு.. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்”

“ஓகே ரொம்ப கோபப்படாதீங்க. சிங்கிளாவே இருக்கதால தான் உங்களுக்கு லவ் பத்தி ஒன்னுமே தெரிய மாட்டேங்குது. பேசாம நீங்க ஏன் ஒருத்தர் கூட டேட்டிங் போகக்கூடாது?”

“எனக்கு எதுக்கு அந்த வேலை? ஆம்பளங்களை பார்த்தா ஆசை வர மாட்டேங்குது.. இவன் என்ன பேசி வைக்க போறானோனு பயம் தான் வருது”

“சித்தி.. இதுக்கு முன்னாடி நடந்தது தப்பு தான். அதுக்காக கடைசி வரை அதை நினைச்சே வாழனுமா?”

“உனக்கு வயசு பத்தல ரூபிணி.. இந்த வயசுல.. ஆம்பளைங்க நாலு வார்த்தை நல்லா பேசுனா.. கொஞ்சமா கொஞ்சி பேசுனா உடனே மனசு அத நம்பிடும். காதல்ல விழுந்துடும். ஆனா நான் அந்த வயசெல்லாம் கடந்துட்டேன். என் மனச உண்மையா தட்டுற அளவுக்கு எவனும் வரல. வந்தா பார்க்கலாம். இப்ப தூங்கு.. காலையில ஃப்ளைட் இருக்குல.. குட் நைட்”

ரூபிணி சித்தியை சலிப்பாக பார்த்தாள். மெலினா காதலித்த இரண்டு பேரும் அவரை பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டனர். அதன் விளைவு மெலினா ஆண்களின் மீது நம்பிக்கை வைப்பதையே நிறுத்தி விட்டார்.

உதயாவின் நிறுவனத்திற்குள் அவளை போராடி நுழைத்ததற்கான காரணமும் கூட அது தான். மற்ற இடங்களை போல பெண்களை வெறும் போகப்பொருளாக மாற்றிக் கொண்டு ஆட்டி வைக்கும் பழக்கம் உதயாவின் நிறுவனத்தில் இல்லை.

அங்கு ஆணோ பெண்ணோ திறமைக்கு மட்டுமே மதிப்பு. அதைத்தாண்டி அங்கிருப்பவர்களோடு நெருங்கி பழக முடியாது.

அங்கு பாதுகாப்பு அதிகம் என்று மெலினா அனுப்ப ரூபிணி சண்டை போட்டு திரும்பி விட்டாள். அடுத்தடுத்த இடத்தில் இருந்த நிறுவனங்களை பற்றி விசாரித்து பேசும் போது தான் ரூபிணிக்கு உலகில் பல ஆண்களின் அழுக்குகளை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

ஆண்களே அப்படி என்றால் பெண் முதலாளிகள் ஒரு படிக்கு மேலாக இருந்தனர். வேலைக்கு சேர ஆசைப்பட்டால் அந்த பெண்களை அவர்களுக்கு வேண்டப்பட்ட ஆண்களோடு இரவை கழிக்கச் சொன்னார்கள். அவர்கள் பேச்சை கேட்டு நடந்து கொண்டால் தான் ஒப்பந்தம் கிடைக்குமாம். பெண்களே இப்படியா? அடுத்த பெண்களின் வாழ்வை விற்று தான் வாழ வேண்டுமா? என்று ரூபிணி பல முறை அறுவறுத்துப் போனாள்.

பல விதமான கசப்புகளை கடந்த பிறகு இப்போது வேலை செய்யும் நிறுவனம் வந்தது. இங்கு படுக்கைக்கு அழைக்கும் ஆட்கள் இல்லை. ஆனால் பண விசயத்தில் சில பல குறை இருந்தது.

அதுவும் அவள் வளர ஆரம்பித்த பிறகு குறைந்து விட்டது. இதை விட நல்ல நிறுவனம் எதாவது கிடைத்தால் ஓடி விட தான் ரூபிணிக்கு ஆசை. ஆனால் கிடைக்க வேண்டுமே?

எல்லோருக்கும் ஆரம்பத்தில் கொடுக்கப்படும் ஐந்து வருட ஒப்பந்தம் தான் அவளுக்கும் கொடுத்திருந்தனர். அடுத்த மாதம் அந்த ஒப்பந்தம் முடிந்ததும் புதுப்பிக்க வேண்டும்.

அதைப்பற்றி நிறைய முறை பேச முயற்சித்தும் ரூபிணி தட்டிக் கழித்துக் கொண்டிருந்தாள்.

மீண்டும் ஒரு முறை ஒப்பந்தம் போட்டால் பத்து வருடத்திற்கு போட வேண்டும். பத்து வருடமும் இதே நிறுவனம் தனக்கு சரிப்பட்டு வருமா? என்ற சந்தேகத்துடனே முடிவெடுக்காமல் காத்திருந்தாள்.

இப்போது முடிந்த ஃபோட்டோ சூட் தான் இந்த நிறுவனத்தின் கடைசி வேலை என்று தெரியாமல் ஒப்பந்தம் பற்றிய யோசனையுடன் உறங்கி விட்டாள்.

தொடரும்‌.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உதயாவுக்கு ரூபிணி மேல் அக்கறை இருக்கிறது.