Loading

மெலினா ரூபிணியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவள் சொல்வதை எல்லாம் சொல்லி விட்டு, “இதான் நடந்துச்சு” என்று கையை விரித்தாள்.

“அப்போ ஆஃபிஸ்ல நடந்தத பத்தி அவன் கிட்ட சொல்லிட்ட..”

“சொல்லனும்னு நான் நினைக்கல. அவனா ஆரம்பிக்கவும் கோபத்துல சொல்லிட்டேன். இருந்தாலும் அதுல என்னாகிட போகுது? என் பேரு கெட்டது கெட்டது தான? பேர கெடுத்தவன பழி வாங்காம நானும் விட மாட்டேன்.”

“என்னால உன்னை தடுக்க முடியாது. ஆனா பாதிப்பு எதுவும் இல்லாம நீ தப்பிச்சு வந்தா போதும். இவ்வளவு தூரம் வந்துட்டு எதையும் இழக்க கூடாது” என்றவர், அவளது பதிலுக்கு காத்திராமல் வேலையை தொடர்ந்தார்.

ரூபிணி யோசனையில் ஆழ்ந்தாள். உதயாவோடு இருக்கும் போது பிரச்சனை தான். பிரிந்த பிறகு என்னென்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்று ஓரளவு கணித்து வைத்திருக்கிறாள். அதை எல்லாம் சமாளிக்கவும் திட்டமிருக்கிறாள்.

ஆனால் அதற்கு முன்பு உதயாவை பிரிய வேண்டுமே? அவளை பொறுத்தவரை ஒரு கணிப்பு இருந்தது. இதை தான் உதயா செய்ய போகிறான் என்று‌. அந்த கணிப்பை தாண்டி உதயா நடந்து கொண்டால் தான் பிரச்சனையே. அவள் நினைத்தது நடந்து விட்டால் அவள் வென்று உதயா தோற்று விடுவான்.

அவள் கணித்தது தான் நடந்தது. அதுவும் சில பல திருப்பங்களோடு நடந்தது. முதல் திருப்பம் அலுவலகத்தில் ஆரம்பித்தது.

அன்று பேசி விட்டுச் சென்ற பிறகு ரூபிணி ஒரு வாரமாக அலுவலகம் பக்கம் செல்லவில்லை. மீண்டும் சென்ற போது, பலரின் பார்வை அவளை மரியாதையாக பார்த்தது. அவள் முதுகுக்கு பின்னால் யாரும் பேசவில்லை.

ரூபிணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. திடீரென இவர்களுக்கெல்லாம் அறிவு வந்து விட்டதா என்ன? புரியாத கேள்வியோடு அன்று வந்த வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டாள்.

வீட்டுக்குச் சென்ற பிறகும் இதுவே மனதில் ஓட, உதயாவை கேட்க முடிவு செய்தாள். ஏனென்றால் திடீரென்று எல்லாம் அவர்களுக்கு அறிவு வந்திருக்காது. உதயாவிடம் விசயத்தை சொன்ன பிறகு தான் இந்த மாற்றம்.

“இன்னைக்கு ஆஃபிஸ் போனேன்” என்று மொட்டையாக செய்தி அனுப்பினாள்.

உடனே பதில் வந்தது.

“நான் இன்னைக்கு வெளியே வந்துருக்கேன்”

“ஆஃபிஸ்ல இன்னைக்கு ஒருத்தர் கூட என்னை பத்தி தப்பா பேசல.. எப்படி?”

“அப்படியா?”

“நீ எதாவது பண்ணியா? திட்டுனியா? அதான் மாறிட்டாங்களா?”

“ஆமா.. திட்டுனேன்..”

“என்ன சொன்ன?”

“அத ஏன் கேட்குற?”

“சொல்லு.. என்னனு தெரியனும்”

“நீயா என் கிட்ட வரல நான் தான் உன்னை தேடி வந்தேன்னு சொன்னேன்”

ரூபிணி அதிர்ச்சியோடு அந்த செய்தியை இரண்டு முறை படித்தாள்.

“ஏன்?”

“அப்போ தான உன்னை தப்பா பேச மாட்டாங்க.. அதுவும் இல்லாம இத தான நாம போலீஸ் ஸ்டேஷன்லயும் சொல்லி வச்சுருக்கோம்”

“ஓ.. அதான் எல்லாரும் என்னை கண்டுக்காம அவங்க வேலைய பார்த்தாங்களா?”

“இனி பிரச்சனை இருக்காது”

“ஆமா.. நான் உன்னை தேடி வந்தா அது தப்பு. நீ என்னை தேடி வந்தா அதுல தப்பே இல்லையே.. பொண்ணுங்க தான் பணம் பதவினு ஆம்பளைங்க வளைச்சு போடுவாங்க. ஆம்பளைங்க பொண்ணுங்க பின்னாடி போனா அதுவும் சக்ஸஸ் ஃபுல்லா இருக்கவன் போனா அது நார்மல். நல்ல நியாயம்” என்று சலிப்பாக அனுப்பி வைக்க, உதயா அந்த செய்தியை இமைக்காமல் பல நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளை பேசியது போல் அவனை பேச யாருக்குமே தைரியம் வராதே. ஏன்? அவன் அவள் பின்னால் போவதற்கு தவறான காரணம் இருக்காது என்று நினைக்கிறார்களே?

“இதோட பிரச்சனை முடிஞ்சதுல? சந்தோசப்படு” என்று அவள் பேச்சை தவிர்த்து விட்டு பதில் அனுப்பினான்.

“ஆமா ஆமா.. இனியாச்சும் அந்த ஆஃபிஸ் வரும் போது முள்ளு மேல நிக்கிற மாதிரி தோணாம இருக்கும். சரி பை” என்று விட்டு அணைத்து விட்டாள்.

திடீரென அவனுக்கு நன்றி சொல்ல வேண்டுமோ? என்று தோன்றியது. ஆனால் எதற்கு சொல்ல வேண்டும்? என்ற கேள்வியும் வந்தது.

“அவனே ஒரு பொருள உடைச்சுட்டு வேற வாங்கி வச்சதுக்காக தாங்க்ஸ் சொல்லனுமா? நோ வே” என்று சிலுப்பி விட்டுச் சென்றாள்.

உதயாவும் கூட அவளது நன்றியை எதிர்ப்பார்த்து விட்டு பிறகு யோசித்தான்.

‘இந்த ஃபேக் டேட்டிங் ஆரம்பிச்சதே நான். இப்ப அவ பேர காப்பாத்திட்டேன்னு எப்படி தாங்க்ஸ் சொல்லுவா?’ என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.

•••

மேலும் ஒரு மாதம் கடந்து போயிருந்தது..

உதயா தன் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, நிதானமாக ரூபிணியிடம் பேச நினைத்து அழைத்தான்.

“எங்க இருக்க?”

“ஏன்?”

“வீட்டுக்கு வர்ரேன்”

ஒரு நொடி அமைதிக்குப்பிறகு, “சொல்ல மறந்துட்டேன். நான் வீடு மாறுறேன்” என்றாள்.

உதயா அதிர்ந்தான்.

“ஏன்?”

“அந்த விஷால் வந்து போனதுல இருந்து என் பேரண்ட்ஸ்க்கு ரொம்ப பயம்.. என்னை தனியா விட யோசிச்சாங்க. இப்போ இங்கயே ஒரு தனி வீடு பார்த்துட்டாங்க. இனி அவங்களோட தான் நானும் தங்க போறேன்.”

உதயா இந்த திடீர் திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை. இதைப்பற்றி முன்னால் எதுவும் சொல்லவில்லை.

“சரி எப்ப மாறுறீங்க?”

“நாளைக்கு”

“நாளைக்கேவா?”

“ஆமா.. பேக்கிங் முடிஞ்சது. நாளைக்கு அங்க போயிடுவேன். இன்னைக்கு எல்லாரும் இங்க தான் இருக்கோம்”

பெற்றவர்களை வைத்துக் கொண்டு பேச முடியாது என்று புரிய, உதயா யோசனை செய்தான்.

“நீ ஆஃபிஸ் வர முடியுமா?”

“இப்பவா?”

“இல்ல.. பிசியா இருந்தா வேணாம்”

“ரொம்ப பிசி இல்ல. ஆல்மோஸ்ட் முடிஞ்சது. நான் கிளம்பி வர்ரேன்”

“ஓகே..” என்று விட்டு அழைப்பை துண்டித்தான்.

இன்றே இதை பற்றி பேசி முடித்து விடலாம் என்று நினைத்தான். அவளும் சீக்கிரமே வந்து சேர்ந்தாள்.

“சொல்லு.. என்ன விசயம்?” என்று கேட்டுக் கொண்டே அமர்ந்தாள்.

உதயா பெருமூச்சோடு தன்னை தயார் செய்து கொண்டான்.

“லாஸ்ட் டைம் பேச ஆரம்பிச்சோம். வேற எங்கயோ போயிடுச்சு. இப்ப பேசிடலாம்னு தான் கூப்பிட்டேன். நம்ம டீல் பத்தி..”

“ஆமா.. என்ன முடிவுல இருக்க?”

“நீ சொல்லு.. உன் முடிவ வச்சு தான் நானும் முடிவு பண்ணனும்”

“எனக்கு எதுனாலும் சரி. என் வேலை பாதிக்காத வரை பிரச்சனை இல்ல”

“அப்போ இத தொடர்ந்தா உனக்கு பிரச்சனை இல்ல?”

தோளை குலுக்கினாள்.

“ஃபேக் டேட்டிங் எல்லாம் ஒரு விசயமே இல்ல. இவ்வளவு வந்துடுச்சு. ப்ளான் படி ஒரு வருசத்துக்கு அப்புறம் பிரிஞ்சதா சொல்லிடலாம்.”

“ஒரு வருசம் கழிச்சு கண்டிப்பா பிரியனுமா?”

“அப்படினா?”

“லைக்.. இத தொடர கூடாதா?”

ரூபிணிக்கு உள்ளே சந்தோசம் பொங்க, வெளியே யோசனையாக புருவம் சுருக்கினாள்.

“ஏன் தொடரனும்?”

“இதுக்கு முன்னாடி நாம எதிரிங்க. நிறைய சண்டை போட்டுக்கிட்டோம். ஆனா இப்போ அப்படி இல்ல.. நாம நார்மலா பேசிப்பழக முடியுது. சோ இத கண்டினியூ பண்ணா என்ன?”

“நாம இப்ப ஒரு டீல்ல இருக்கோம். அதுனால பேசுறோம் பழகுறோம். டீல் முடிஞ்சா பேசவும் மாட்டோம் பழகவும் மாட்டோம்”

“ஏன் அப்படி சொல்லுற? நமக்குள்ள நிறைய சண்டை இருந்தும் இப்ப நாம அப்படி சண்டை போட்டுக்காம ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டோமே?”

“நான் உன்னை புரிஞ்சுக்கிட்டனா? என்ன சொல்லுற நீ? முதல்ல என்ன பேசுறனு தெளிவா பேசு..”

“ம்.. எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. இந்த டேட்டிங் இல்லனா உன்னை பத்தி முழுசா தெரிஞ்சுருக்காது. முன்னாடி உனக்கு திமிர்னு நினைச்சேன்.இப்ப அப்படி தோணல. உன் கூட இன்னும் சில நாள் பழகனும்னு ஆசைப்படுறேன். நீ என்ன சொல்லுற”

‘ஆஹா.. எப்படி சுத்தி வளைக்கிறான்? இருடா.. என் பதில பாரு’ என்று நினைத்தவள் சில நொடிகள் புரியாதது போல் அமர்ந்து விட்டு, “நீ என் கூட பழகி பார்க்க ஆசைப்படுற? எந்த மாதிரி?” என்று கேட்டு வைத்தாள்.

“எந்த மாதிரினா?”

“ஒரு ஃப்ரண்ட்டாவா? இல்ல கோ வொர்கராவா? இல்ல ஜஸ்ட் தெரிஞ்ச பொண்ணு.. அப்படியா? இல்ல உன் கிட்ட வேலை செய்யுற எதோ ஒரு எம்ப்ளாயி.. அப்படியா? லுக்.. நம்ம டீல் முடிஞ்சுருச்சுங்குறதுக்காக நாம திரும்ப சண்டை போட்டுக்க போறது இல்ல. சமாதானம் ஆகிடலாம். உன் வேலைய நீ பாரு. என் வேலைய நான் பார்க்குறேன்னு போயிடலாம். எங்கயாவது பார்த்தா ஹாய் ஹலோ அவ்வளவு தான். இதுல மாற்றம் இல்ல. இதுக்காக போய் இந்த ஃபேக் டீல வச்சுட்டே சுத்தனும்னு இல்லல?”

உதயா அவள் பேச்சைக் கேட்டு ஆச்சரியப்பட்டான். அவன் சொல்ல வருவதை அவள் புரிந்து கொள்ளவில்லையே என்று. ஆனால் அவளுக்கு தெளிவான பதில் வேண்டும். அவன் மனதை திறந்து சொல்லியே ஆக வேண்டும்.

“நான் இப்படி சொல்லல.. ரூபிணி.. எனக்கு உன்னை பிடிச்சுருக்கு. ஃபேக் டேட் ஆ இல்லாம..ரியலா நாம ஏன் டேட் பண்ண கூடாதுனு கேட்குறேன்” என்று போட்டு உடைத்தான்.

ரூபிணி கஷ்டப்பட்டு அதிர்ச்சியானாள்.

“ரியலா?”

“எஸ்.. நாம ஏன் ட்ரை பண்ண கூடாது? எனக்கு உன்னை மிஸ் பண்ண தோணல.. அதான் கேட்டேன்”

“வெயிட் வெயிட் வெயிட்” என்று கை காட்டி நிறுத்தியவள், “உனக்கு என் மேல இன்ட்ரஸ்ட்டா?” என்று கேட்டு வைத்தாள்.

“எஸ்”

ரூபிணி அவனை நம்ப முடியாத பார்வை பார்த்து வைத்தாள்.

“அது எப்படி வந்தது?”

“உன் கூட பழகும் போது வந்தது”

“உனக்கு என்னை பிடிக்காது தான?”

“அது பழைய விசயம். இப்ப பழகும் போது உன்னை பிடிச்சுடுச்சே”

ரூபிணி வேறு பக்கம் பார்த்துக் கொண்டு சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.

“இது நடக்காது.. நோ” என்றாள் அமைதியாக.

உதயாவின் மனம் அப்போதே சேர்ந்து போக, “ஏன்?” என்று கேட்டான்.

“ஏன்னா எனக்கு எதுவும் தோணல.. உனக்கு எப்படி என்னை பிடிச்சுதுனு எனக்கே தெரியல..” என்றவள் சில நொடிக்கு பிறகு, “ஓ…” என்று இழுத்தாள்.

“என்ன?”

“இங்க பாரு.. சாரி.. ஐம் ரியலி சாரி.. அன்னைக்கு பார்ட்டில மெடோனா நம்ம ஃபேக் ரிலேஷன்சிப்ப போட்டு உடைச்சா. அத எப்படியாவது காப்பாத்தனுமேனு தான் உன்னை கிஸ் பண்ணேன். அந்த கிஸ்ஸ நீ தப்பா புரிஞ்சுட்டனா ஐம் ரியலி சாரி.. நான் ஆசைப்பட்டு பண்ணல” என்று முடித்த போது, உதயாவின் மனம் உடைய ஆரம்பித்து விட்டது.

அந்த முத்தம் இன்னும் கூட அவன் மனதில் பசுமையாக இருக்க அதை ஒரு நொடியில் அழித்து விட்டாளே.

“மெடோனா பைத்தியமால வந்தது எல்லாம். அந்த கிஸ்.. ப்ளீஸ்.. அது அப்போதைக்கு எதாவது பண்ண தோணுச்சு. கிஸ் பெட்டர் ஆப்சனா பட்டுச்சேனு பண்ணேன். அப்புறம் அத நினைச்சு எனக்கே கேவலமா இருந்துச்சு. அதான் அத பத்தி பேசக்கூட பிடிக்காம இருந்தேன். அதுல தப்பா புரிஞ்சுட்டனா.. ரியலி சாரி”

உதயா ஒரு நொடி கண்ணை மூடித்திறந்தான். அவனது அன்பு கொண்ட மனம் கேவலம் என்ற வார்த்தையை தாங்க தயாராக இல்லை. அந்த முத்தம் எப்படி, எந்த காரணத்திற்காக கொடுக்கப்பட்டாலும் அது அவனுக்கு பொக்கிஷமே.

“நோ.. அதுனால இத சொல்லல..” என்று மறுத்தவன் பார்வை மேசையில் இருந்தது.

“வேற எப்படி? எந்த காரணத்துல என்னை உனக்கு பிடிச்சது?”

“உன் கேரக்டர் பிடிச்சது ரூபிணி” என்று மீண்டும் அவள் முகத்தை பார்த்தான்.

“கேரக்டர்?”

“ஆமா.. உன் கேரக்டர் பிடிச்சது. உன் வேலையில நீ தீவிரமா இருக்கது பிடிச்சது. உன் கூட பழகும் போது ரொம்ப ஈசியா பழக முடிஞ்சது. அது என்னை இம்ப்ரஸ் பண்ணுச்சு.. அதான்..”

“ஓகே.. ஓகே .. புரியுது.. பட் எனக்கு இதுல விருப்பம் இல்ல..” என்று விட்டாள்.

உதயாவின் மனம் உடைந்தே விட்டது. அவளுக்கு அவனை பிடிக்கவே இல்லையா?

“ஏன்?”

“ஏன்னா? எனக்கு விருப்பமில்ல. எனக்கு இப்போதைக்க எதுலயும் இன்ட்ரஸ்ட் இல்ல. உன் மேல.. யாரு மேலயும் இல்ல. ஜஸ்ட் நான் உண்டு என் வேலை உண்டுனு வாழனும்னு ஆசைப்படுறேன். இந்த மூணு வருசம் எனக்கு ரொம்ப முக்கியம். இங்க இருந்து நான் வெளிய போகும் போது முடிஞ்ச வரை கத்துட்டு போக ஆசைப்படுறேன். இதுக்கு நடுவுல உன் மேல.. நோ.. இது ரொம்ப மோசமா இருக்கு.”

“உனக்கு என்னை பிடிக்கலயா?”

“உண்மைய சொன்னா வருத்தப்படுவ”

உதயாவின் மனம் மேலும் உடைந்தது.

“பரவாயில்ல சொல்லு”

“பிடிக்கல” என்று மெல்ல தலையாட்டினாள்.

“எனக்கு உன்னை என்னைக்கும் பிடிக்காது உதயா. நம்ம பழைய சண்டை ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த ஆஃபிஸ்ல வச்சு உன் கூட… உன்னை மயக்கித்தான் இங்க வந்தேன்னு பேசுற ஒவ்வொரு செகண்டும் உன் மேல எனக்கு கோபம் தான் வந்துச்சு. இப்படி பேச வச்சுட்டானேனு பல நாள் புலம்பிருக்கேன். இந்த ஒரு தடவ நான் வந்தப்போ யாரும் பேசலங்குறதுக்காக முதல்ல பேசுனத எல்லாம் அப்படியே மறந்துட்டு உன்னை பிடிக்க ஆரம்பிச்சுடுமா? உன்னை பிடிக்கிறதுக்கான வாய்ப்பை நீயும் கொடுக்கல.. உன்னை சுத்தி இருக்க சூழலும் கொடுக்கல.. வெறுக்குறதுக்கான கரணத்த நீ டன் கணக்குல கொடுத்த..

முதல்ல எந்த தப்புமே செய்யாத என்னை காண்ட்ராக்ட் கேட்ட ஒரே காரணத்துக்காக ஃபோர்ஸ் பண்ணி இந்த டீலுக்கு சம்மதிக்க வச்ச. எல்லாரும் என்னை பார்த்து கேவலமா பேசும் போது.. நான் அப்படி இல்ல.. எல்லாமே பொய் இவன எனக்கு பிடிக்காதுனு கத்தனும் போல இருக்கும். ஆனா அத செய்யவே முடியாது. அந்த அவமானத்த தப்பே செய்யாம தினம் தினம் விசம் மாதிரி விழுங்குனேன். விழுங்குன விசம் எல்லாம் நெஞ்சுல போய் அடைக்கும் போது உன்னை எப்படி பிடிக்கும்?”

உதயா முழுதும் உடைந்து விட்டான். ஆனால் முகம் கல்லாய் இறுகியிருக்க ரூபிணியால் கணிக்க முடியவில்லை.

“எல்லாமே பொய்.. ஒரு நாள் முடிவுக்கு வந்துடும். அது வரை பல்லைக்கடிச்சுட்டு பழகுவோம்னு பழகிட்டு இருந்தேன். இப்ப வந்து பிடிக்கலயானு கேட்குற? முதல்ல உன்னை பிடிக்குற அளவு நீ என்ன செஞ்ச? அந்த விஷால் கிட்ட இருந்து காப்பாத்துன.. அதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. நீ இல்லனா பயந்துருப்பேன். ஆனா அவன அந்த நிலைமைக்கு ஆளாக்குனதும் நீ தான்.;அவன ஓட ஓட விரட்டி அடிச்ச. வாழ்க்கையோட பல அடில பைத்தியமாகிட்டான். அதுக்கு என்னை பழி வாங்க வந்துட்டான். அவன் கிட்ட இருந்து காப்பாத்துனத நினைக்கவா? இல்ல அவன அப்படி ஆக்குனதே நீனு நினைக்கவா?

அவன் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்ல. செத்தே போனாலும் நான் கவலைப்பட மாட்டான். என்னை தொல்லை பண்ணாம எங்கயோ போய் சாகுறான்னு போயிட்டே இருப்பேன். அவ்வளவு தான் அவன பத்தி நான் கேர் பண்ண போறது. நீ அவன அடிக்கலனா அவன் என் கிட்ட வந்துருக்க மாட்டானேனு தோணுது. நம்ம ஃபேக் டீல் காக நான் லைவ்ல சொல்லலனா அவன் பைத்தியம் முத்திருக்காது. எல்லாத்தோட ஆரம்பமும் நீ தான்னு தோணும் போது எங்க இருந்து உன்னை எனக்கு பிடிக்கும்?”

ரூபிணி விடாமல் பேச உதயாவிடம் பேச்சே இல்லை. அவள் நிறுத்திய பிறகு சில நொடிகள் அமைதியாக இருந்தனர்.

“ஓகே.. ஃபைன்..” என்று தன்னை தானே தேற்றிக் கொண்ட உதயா, “உன் ஒபினியன் கேட்க தான் நினைச்சேன். உனக்கு பிடிக்கலனா.. இத நாம நிறுத்திக்கலாம். இங்கயே இப்பவே.. பிரேக் அப் பண்ணிட்டோம்னு அறிவிச்சுட்டா உன் மேல மரியாதை போயிடும்னு சொன்னல? சொல்ல வேணாம். நீ உன் வேலைய பாரு.. நான் வேலைய பார்க்குறேன். காண்ட்ராக்ட் முடிஞ்சதும்… அத அப்புறம் பார்க்கலாம்” என்று முடித்தான்.

“உண்மையாவே சொல்லுறியா?”

உதயா தலையை மட்டும் ஆட்ட, ரூபிணி அவன் கண்களை இமைக்காமல் பார்த்தாள். அதில் தெரிந்த வலி அவளை உண்மையாகவே திருப்தி படுத்த பெருமூச்சு விட்டு எழுந்து கொண்டாள்.

“இதான் சரினா.. எனக்கும் ஓகே. பை” என்றதும் உதயா தலையை மட்டும் அசைத்தான்.

ரூபிணி உடனே திரும்பி வெளியேறி விட்டாள். காரில் வந்து அமர்ந்து சில தூரம் சென்றதும், “எஸ்… எஸ்.. முடிச்சுட்டேன். முடிச்சுட்டேன்….” என்று கத்தினாள்.

நெஞ்சம் முழுவதும் சந்தோசம் நிறைந்து விம்மியது. உதயா இருந்த கோலம் அவளுக்கு அத்தனை திருப்தியை கொடுத்தது.

“ஃபைனலி.. கொஞ்ச நாள் நிம்மதியா வாழலாம்” என்று சொல்லிக் கொண்டவள், கைபேசியை எடுத்து பெற்றோர்களை அழைத்தாள்.

“ம்மா..ரெடியா இருங்க.. வெளிய போய் சாப்பிடலாம்..” என்று விட்டு சந்தோசமாக காரை எடுத்துச் சென்றாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்