Loading

 

இரண்டு வாரங்களும் கடந்து ஓடி விட்டது. ரூபிணி ஊருக்குச் சென்று வேலையை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வரை, உதயா பொறுமையாக காத்திருந்தான்.

அவன் வந்ததும் எப்படிப்பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டான். உடனே காதலில் இறங்க வேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.

இது வரை போலியாக உலகத்தை நம்ப வைப்பதற்காக போட்ட நாடகத்தை, உண்மையாக்கிக் கொண்டால் போதும் என்று மட்டுமே நினைத்தான்.

அவளோடு மேலும் பழக வேண்டும் போல் இருந்தது. ரூபிணிக்கு திமிர் அதிகம் என்ற அவனது பழைய எண்ணம் மாறியிருந்தது.

அவளை சீண்டாத வரை அவளும் கண்டு கொள்ள மாட்டாள் என்று புரிந்தது. விஷாலை அவள் துரத்தி விட்ட விதம் கூட ஆச்சரியம் தான். அன்று காவல் துறையினர் கேட்ட போது, அவன் மீது அவள் வேறு எந்த குறையும் சொல்லவில்லை. அவன் ஏமாற்றியதும் பிரிந்ததும் மட்டுமே சொல்லி விட்டு நிறுத்தி விட்டாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவளை புரிந்து கொள்ள ஆரம்பித்தவனுக்கு பிடிக்கவும் ஆரம்பித்திருந்தது. அதனால் அவளை இப்படி பாதியில் பிரிந்து செல்ல பிடிக்கவில்லை.

அவள் வரும் வரை காத்திருந்தவன், மறுநாளே அவளை அழைத்தான். ரூபிணி அழைப்பை ஏற்று பேசினாள்.

“எங்க இருக்க?”

“உன் ஆஃபிஸ்க்கு தான் வந்துட்டு இருக்கேன். ஏன்?”

“என்ன விசயம்?”

“ஒரு மீட்டிங்.. அடுத்த பிராஜெக்ட் பத்தி..”

“ஓகே முடிச்சுட்டு என் கேபின்க்கு வா”

“எதாவது முக்கியமான விசயமா?”

“அப்படி இல்ல.. நீ வா” என்று விட்டு வைத்து விட்டான்.

ரூபிணி அலுவலகம் வந்து அரைமணி நேரம் கழித்து உதயாவின் அறைக்கு சென்றாள்.

“ஹாய்.. என்ன விசயம்?” என்று கேட்டுக் கொண்டே அருகே வந்தவளை பார்த்தவன், தான் செய்து கொண்டிருந்த வேலையை முடித்து கொடுத்து அசிஸ்டன்ட்டை வெளியே அனுப்பினான்.

“உட்காரு” என்றதும் அமர்ந்து கொண்டாள்.

“காபி சொல்லவா?”

“உன் ஆஃபிஸ் காபி எனக்கு பிடிக்காது. அதான் நான் எப்பவும் வெளிய வாங்கிட்டு வந்துடுவேன்”

உதயா தலையாட்டி வைத்தான்.

“என்ன விசயம்?”

“நம்ம டீல பத்தி பேசலாம்னு கூப்பிட்டேன்”

“ம்ம் சொல்லு”

“நீ சொல்லு.. என்ன முடிவு பண்ணிருக்க?” என்று அவளிடம் கேட்டு விட்டு சாய்ந்து அமர்ந்தான்.

அவள் மனதில் என்ன இருக்கிறது என்று முதலில் அறிந்து கொள்ள நினைத்தான்.

‘ஓ.. அப்படி வர்ரியா?’ என்று நினைத்தவள், “நான் நினைக்க என்ன இருக்கு? டீல் பேசுனோம்.. வேலை முடிஞ்சது.. டீல முடிக்கலாம். அவ்வளவு தான்” என்று தோளை குலுக்கினாள்.

வேண்டும் என்றும் இல்லாமலும் வேண்டாம் என்றும் இல்லாமலும் ஒரு குரலில் பேசி வைத்தாள். உதயா குழம்பி விட்டான்.

“இந்த டீல முடிக்கிறதுல உனக்கு எந்த பிரச்சனையும் இல்லையா?”

“ஏன் இருக்கனும்? உனக்கு எதாவது இருக்கா?”

கேள்வியை அவன் பக்கம் திருப்பி விட்டாள்.

“நான் உன்னை தான கேட்டேன்?”

“எனக்கு பதில் சொன்னா குறைஞ்சுட மாட்ட.. சொல்லு.. இருக்கா?”

“இல்ல.. ஆனா..”

“என்ன?”

“இது தொடருறதுல உனக்கு எதாவது பிரச்சனை இருக்கா?”

“என்ன ஆச்சு உனக்கு? எனக்கு இருந்தாலும் இல்லனாலும் ஒரு பிரச்சனையும் இல்ல. உனக்கு எதாவது இருக்கா? இருந்தா சொல்லு”

“நான் என் பிரச்சனைய பத்தி பேசல.. இந்த டீல் பேசும் ஒன்னு சொன்னியே.. ஞாபகம் இருக்கா?”

“நிறைய சொன்னேனே.. எத கேட்குற?”

“என் பேரு கூட உன் பேரு சேர்ந்தா எல்லாரும் உன்னை தப்பா பேசுவாங்கனு.. அத கேட்குறேன்”

“ஓ.. அதுவா.. அத பத்தி தான் உனக்கு அக்கறை இல்லையே.. இப்ப என்ன கேள்வி?”

“இப்ப அக்கறை இருக்கு சொல்லு.. உன்னை யாரும் தப்பா பேசுனாங்களா என்ன?”

“பேச மாட்டாங்கனு நினைப்பா உனக்கு?” என்று கேட்டவள் முகத்தில் மெல்ல கோபம் ஏற ஆரம்பித்தது.

“பேசுனாங்களா?” என்று ஆச்சரியமாக பார்த்தான்.

அவனுக்கு எதுவும் தெரியவில்லையே.

“உன் காதுல விழலனா? எதுவுமே நடக்கலனு அர்த்தமா?”

“யாரு பேசுனது?” என்று கேட்டவனுக்கும் கோபம் வந்திருந்தது.

“உன் மொத்த ஆஃபிஸும்” என்று ரூபிணி பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல, உதயா அதிர்ந்து பார்த்தான்.

இதை சுத்தமாக அவன் எதிர் பார்க்கவில்லை.

“எல்லாருமே.. என்னை பார்த்து இப்பவும் சிரிக்கிறாங்க. ஏன் தெரியுமா? நான் உன் கூட படுத்து இந்த காண்ட்ராக்ட்ட வாங்குனேனாம். அதுவும் நான் அவ்வளவு வொர்த் இல்லனு நீ எனக்கு ட்ரையல மட்டும் பிச்சையா போட்டியாம். முதல் தடவ இந்த கம்பெனி வேணாம்னு ஓடுனவ கடைசியில உன் கால்ல விழுந்து கெஞ்சி இத வாங்கிருக்கனாம். கேட்க சந்தோசமா இருக்குல? எனக்கு இருக்கு”

உதயாவின் உடல் இறுகியது. இப்படி ரூபிணியை பேசக்கூடும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை.

“யாரு சொன்னா? அத சொல்லு”

“ஹேய்.. ஒருத்தர் ரெண்டு பேரில்ல.. எல்லாரும் தான்…” என்றவள், உதயாவின் முகத்தை பார்த்து விட்டு சலித்தாள்.

“உன்னால சிசிடிவ அக்ஸஸ் பண்ண முடியும்ல? இந்த ரூமுக்கு வெளிய இருக்க கேமராவ எடு..”

“ஏன்?”

“எடு சொல்லுறேன்”

உதயா எடுக்க, ரூபிணி எழுந்து சென்று அவனருகே நின்றாள்.

“நான் காண்ட்ராக்ட் சைன் பண்ணப்புறம் முதல் தடவ உன் ரூமுக்கு வந்துட்டு போனேன்ல? அந்த நாள எடு” என்றவள் தேதி நேரம் அனைத்தையும் சொல்லி வைத்தாள்.

உதயா எடுத்தான்.

“நான் வெளிய போனதும் மத்தவங்க ரியாக்ஷன பாரு” என்றவள் கை கட்டிக் கொண்டு நின்றாள்.

வெளியே இருந்த பலர் ரூபிணியை பார்த்து விட்டு தங்களுக்கு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். அவர்கள் பேசியது கேட்கவில்லை. ஆனால் எல்லோருமே அவளை பார்த்து சிரிப்பது புரிந்தது.

“என்ன சொல்லி சிரிக்கிறாங்க தெரியுமா? இந்த பொழப்புக்கு செத்துடலாம்னு சொல்லி சிரிச்சாங்க”

ரூபிணி உணர்வற்ற குரலில் சொல்ல, உதயாவிற்கு இதயம் வலிக்க ஆரம்பித்தது.

“அடுத்த தடவ வந்தத எடு” என்று தேதியை சொன்னாள்.

“உள்ள வர்ரதுக்கு முன்னாடி எல்லாரோட பார்வையையும் பாரு” என்று காட்டினாள்.

“நான் உள்ள வந்துட்டு வெளிய போற வரை என்னை பத்தி பேசி சிரிப்பாங்க. இது மாதிரி தான் ஒவ்வொரு நாளும் நடக்கும். இன்னைக்கு கூட நடந்தது.. பாரு” என்றதும் உதயா அசையாமல் இருக்க, ரூபிணியை கணினியை தன் பக்கம் திருப்பி போட்டு காட்டினாள்.

“கதவ அடைக்கிறதுக்கு முன்னாடி அவ என்ன சொன்னா தெரியுமா? கொஞ்ச நாளா வராம இருந்தா.. திரும்ப வந்துட்டா வெட்கங்கெட்டவனு சொல்லும் போது தான் கதவ மூடுனேன்” என்று ரூபிணி சொல்லும் போதே உதயா கோபத்தில் கணினியை அணைத்து விட்டான்.

அவனது கோபத்தை கண்டு ரூபிணி சிரித்தாள்.

“சோ.. உனக்கு தெரியலங்குறதுக்காக நடக்கலனு ஆகிடாது உதயா.. நான் பயந்த எல்லாமே நடந்துச்சு. நீ அத கண்டுக்கல. உனக்கு நடக்கல. அவ்வளவு தான்.” என்றவள் மேசையில் கை ஊன்றினாள்.

“பட் இதெல்லாம் எனக்கு பழகிடுச்சு உதயா. இன்னும் மூணு வருசத்துக்கு இத தாங்கனும்னு மைண்ட் செட் பண்ணிட்டு தான் காண்ட்ராக்ட் சைன் பண்ணேன். சோ என் பிரச்சனைய பத்தி புதுசா கவலைப்படாத..”

அவன் முகத்தருகே வந்து சொல்லி விட்டு, அவனது உணர்வுகளை கண்ட திருப்தியோடு விலகிச் சென்று நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.

“இப்ப என்ன முடிவு பண்ணலாம்னு இருக்க?” என்று எதுவும் நடக்காதது போல் சாவதானமாக கேட்டாள்.

உதயா சில நொடிகள் யோசித்தான்.

“இப்ப பிரேக் அப்னு சொன்னா என்னாகும்?” என்று அவளிடமே கேட்டான்.

அவனுக்கு தான் எதுவுமே தெரியவில்லையே. அவளிடம் தான் கேட்க வேண்டும்.

“சொன்னா.. உனக்கு நான் போரடிச்சுட்டேன்னு பேசுவாங்க. பட் அது வெறும் நாலு மாசத்துல மறந்து போயிடும். எனக்கு இங்க இருக்க கொஞ்சநஞ்ச மரியாதையும் போயிடும். முதலாளிக்கே பிடிக்காதவள மத்தவங்களுக்கு பிடிக்குமா என்ன? இப்ப முதுகுக்கு பின்னாடி பேசுனத, முகத்துக்கு நேரா கேட்டுட்டு போயிடுவாங்க. நானும் பழகிடுவேன். பேர கெடுக்கனும்னு ஆகிடுச்சு. இதுக்கு மேல எப்படி போனா என்ன?”

உதயா அவளை இமைக்காமல் பார்த்தான். அவள் மீது வெறுப்பு இருந்த போது இதை எல்லாம் அவள் சொல்லியிருந்தால், “அது உன் பிரச்சனை.. எனக்கு என் வேலை தான் முக்கியம்” என்று சொல்லி விட்டு போயிருப்பான்.

ஆனால் இப்போது அப்படி இல்லையே. விசயத்தை கேட்கும் போது மனம் ஆறவில்லை. ஒரு பெண்ணின் மீது இவ்வளவு அவதூறு கிளப்ப முடியுமா?

உதயா பேசாமல் இருக்க, “உண்மைய கேட்டு சாக் ஆகிட்டனு நினைக்கிறேன்.. ஓகே ரொம்ப யோசிக்காத.. இத பத்தி இன்னொரு நாள் பேசலாம். எனக்கு பார்லர் அப்பாயின்மெண்ட் இருக்கு. போகனும். தெளிவாகிட்டு கால் பண்ணு” என்றவள் எழுந்து நடந்தாள்.

திடீரென நின்று, “லைவ் டெமோ பார்க்குறியா? எந்திரிச்சு வா” என்றாள்.

உதயா ஒன்றும் சொல்லாமல் அருகே சென்றான்.

“நான் வெளிய போனப்புறம் கதவ பூட்டாம நின்னு கேட்டுப்பாரு” என்று விட்டு ரூபிணி கதவை திறந்து வெளியேற, உதயா கதவை முழுதாக மூடாமல் பிடித்துக் கொண்டான்.

“போயிட்டா.. பாஸ மயக்குற வேலை முடிஞ்சது போல.. இவளுக்கெல்லாம் உடம்பு கூசாதா?”

“அதெல்லாம் பணத்த வச்சு துடைச்சுக்குவா”

“இவள மாதிரி ஆளுங்களும் இருக்க உலகத்துல நாமலும் இருக்கோம். ச்சை”

“விடு விடு.. உனக்கும் எனக்கும் வெட்கம் மானம் இருக்குங்குறதுக்காக அவளுக்கும் இருக்கனுமா என்ன?”

இரண்டு பெண்கள் பேச ஒருவன் வந்து நின்றான்.

“உங்கள பாஸ் கண்டுக்கலனு பொறாமையில பொங்காதீங்க” என்று அவன் கிண்டலடிக்க, “அய்யோ.. அதுக்காக இவள மாதிரி அவரு பெட்ல போய் விழச் சொல்லுறியா?” என்று கேட்டாள் ஒருத்தி.

உதயாவிற்கு இதற்கு மேல் கேட்க முடியாது என்று தோன்ற, கோபத்தில் கதவை நன்றாக திறந்து கொண்டு வெளியே வந்தான்.

அவனை பார்த்ததும் மூவரும் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்ப்பது போல் திரும்ப, அவர்கள் முன்பு வந்து சொடக்கிட்டான்.

மற்றவர்களின் பார்வையும் அவன் பக்கம் திரும்பியது.

“நான் தான் ரூபிணிய முதல்ல தேடிப்போனேன். அவ நான் வேணாம்னு ஓடுனா. அவ என் பெட்ல வந்து விழல.. என் பெட் ரூம்ல யாரு வர்ரா போறாங்குறத பத்தி பேசுறதுக்கு உங்களுக்கு நான் சம்பளம் கொடுக்கல. இனியும் பேசனும்னா வேலைய விட்டுட்டு வெளிய போய் பேசுங்க” என்று குரலை உயர்த்தாமல் அமைதியாகவே சொல்லி விட்டு, மற்றவர்களையும் ஒரு பார்வை பார்த்து விட்டு அறைக்குள் சென்று விட்டான்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
16
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்