
உதயா இதை எதிர்பார்க்கவில்லை. விசயத்தை சொன்னால் ரூபிணி சந்தோசப் படுவாள் என்று தான் தேடி வந்து சொன்னான். இல்லை என்றால் அவளுக்கு மெடோனாவை பற்றித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை.
அன்று பார்ட்டியில் வைத்து அடித்த பிறகு, மெடோனாவின் பெயரை இருவரும் எடுக்கவில்லை. அதனால் இப்போது சொன்னால் ரூபிணி சந்தோசப்படக்கூடும் என்று மட்டுமே எதிர்பார்த்து வந்திருந்தான்.
திடீரென பிரிவை பற்றி பேச, உதயாவுக்கு உடனே பதில் சொல்ல முடியவில்லை.
ரூபிணி அவனை சில நொடிகள் பார்க்க, உதயா காபியை குடிப்பது போல் பேசுவதை தள்ளிப்போட்டான். ஆனால் அதற்குள் ரூபிணி தொடர்ந்தாள்.
“உன் திட்டம் முடிஞ்சது. அப்புறமும் நாம இப்படியே பொய் சொல்லிட்டு இருக்க கூடாதுல?” என்று கேட்ட ரூபிணி, அவனது பதிலுக்கு காத்திராமல் தொலைகாட்சி பக்கம் திரும்பினாள்.
படத்தை மீண்டும் ஓட விட்டு விட்டு காபியை குடிக்க, இருவரிடமும் மௌனம் நிலவியது.
உதயா, என்ன செய்வது? என்று தீவிர யோசனையில் இருந்தான். இப்போதே இங்கேயே இதை முடித்து விட்டு போகலாமா? அவனது மனம் ஒப்புக் கொள்ளவில்லை.
“ஆக்ட்சுவலி.. இது ரொம்ப சில்லியா இருக்கும்ல?” என்று ரூபிணி கேட்க, உதயா அவளை திரும்பிப் பார்த்தான்.
“நாம கண்ஃபார்ம் பண்ணி மூணு மாசம் கூட ஆகல. அதுக்குள்ள பிரேக் அப்னு சொன்னா சில்லியா இருக்கும்.. சின்ன பசங்க சண்டை போடுற மாதிரி”
ரூபிணி அவசரமாக காரணம் தேடுவது போல் தோன்ற, உதயாவின் முகத்தில் புன்னகை வந்தது.
“ஆமா” என்று தலையாட்டி விட்டு படத்தை பார்த்தான்.
ரூபிணியும் மௌனமாக படத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்களுக்குப்பிறகு படத்தை நிறுத்தி விட்டு, “நாம கொஞ்ச நாள் இத போக விட்டா என்ன?” என்று கேட்டாள்.
உதயாவின் மனம் ஓரளவு சமாதானம் ஆகி விட, “இதைப் பத்தி இன்னொரு நாள் பேசலாம்” என்றான்.
ரூபிணி இதழ்களை அழுந்த மூடிக் கொண்டு தலையாட்டி விட்டு, படத்தை பார்க்க ஆரம்பித்தாள். பிறகு படத்தில் மூழ்கி விட்டாள்.
“இதென்ன லாஜிக்கே இல்லாம பேசுறான்?” என்று ரூபிணி படத்தில் இருந்த கதாபாத்திரத்தை முறைக்க, உதயாவுக்கு சிரிப்பு வந்தது.
அவனும் படத்தை பற்றிய கருத்தை சொல்ல, இருவரும் பேசிக் கொண்டே பார்த்து முடித்தனர்.
“நேரமாச்சு.. டின்னர் சாப்பிடலாம் வர்ரியா?” என்று கேட்க, “நோ.. டயட்ல இருக்கேன்” என்று மறுத்தாள்.
“ஓ.. சரி பை..” என்று எழுந்து செல்ல, ரூபிணி கையாட்டி விட்டு கதவை பூட்டினாள்.
திரும்பி வந்து அமர்ந்தவள் முகத்தில் திருப்தி புன்னகை வந்தது.
“இனி இருக்கு உனக்கு” என்று விட்டு அடுத்த படத்தை தேடி எடுத்து பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
•••
மேலும் ஒரு மாதம் கடந்தது.
ரூபிணி தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். அடிக்கடி உதயாவின் அலுவலகத்திற்கு போவதை நிறுத்தி விட்டாள்.
முக்கியமான வேலை என்றால் மட்டுமே தலையை காட்டினாள். அப்போதும் வேலை முடிந்ததும் உதயாவை பார்க்காமலே கிளம்பி விட்டாள்.
அவனுக்கு செய்தி அனுப்புவதில்லை. அழைப்பதில்லை. அவனை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் வாழ ஆரம்பித்திருந்தாள்.
ராஜோடு அவள் எடுத்த படங்கள் பிரபலமானது. அதன் விளைவாக அவளுக்கு வேலைகள் வந்து குவிந்தது.
ஒரு இயக்குனர் மெலினாவை தொடர்பு கொண்டார். ரூபிணிக்கு படங்களில் நடிக்க ஆசை இருக்கிகறதா? என்று தெரிந்து கொள்ள.
இதைக்கேட்ட போது ரூபிணி ஆச்சரியப்பட்டாள்.
“நான் படத்துலயா? என்னால நடிக்க முடியாது”
“ஏன்? உதயா முன்னாடி பர்ஃபெக்ட்டா நடிக்கிறியே?” என்று சித்தி நக்கலாக கேட்க, ரூபிணி சலிப்போடு பார்த்தாள்.
“சித்தி.. நான் பல தடவ சொல்லிட்டேன். நீங்க பரிதாபப்படுற அளவு அவன் நல்லவன் கிடையாது. அவனுக்கு பிடிக்கலனா எந்த எல்லைக்கும் போய் அழிக்க தயங்க மாட்டான். நான் பிடிக்காதவங்கள கண்டாலே ஒதுங்குற ரகம். என்னை வச்சு விளையாடுனா அவன சும்மா விட முடியாது.”
“அதுக்காக அவன லவ் பண்ண வச்சு அவன் மனச உடைக்கனுமா?”
“வேற எத உடைக்க? கை கால உடைக்கவா? காமெடி பண்ணாதீங்க”
மெலினா பெருமூச்சு விட்டார்.
“நீ அவன் கூட சேர்ந்து வாழனும்னு நான் சொல்லல ரூபிணி.. அவன விட்டு பிரியும் போது சுமூகமா பிரிஞ்சா போதும். வேற பெரிய பிரச்சனைய இழுத்துக்காத”
ரூபிணி சித்தியை சில நொடிகள் ஆச்சரியமாக பார்த்து விட்டு, பிறகு சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
“சித்தி.. செம்ம காமெடி..”
“இப்ப ஏன் சிரிக்கிற?”
“சிரிக்காம? நான் அவன விட்டு பிரியும் போது அவன் கூட சண்டை போடுவேன்னு நினைச்சீங்களா?”
“பின்ன வேற என்ன பண்ண போற?”
“சூப்பர் காமெடி.. ஆனா கவலையே படாதீங்க. நடக்கும் போது உங்களுக்கே புரியும்” என்றவள் நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டாள்.
ரூபிணி சொன்னது மெலினாவுக்கு புரியவில்லை. ஆனால் அவர் அதிக நாட்கள் காத்திருக்காமல் சீக்கிரமே புரிந்து கொண்டார்.
•••
உதயா மிகவும் குழப்பத்தோடு இருந்தான். அவனுக்கு மனம் கேட்பது தெளிவாக புரிந்தது. புரியாத குழந்தை அல்ல அவன்.
ரூபிணியின் மீது அவனுக்கு ஈர்ப்பு வந்திருந்தது. அது காதலாகவும் வாய்ப்புண்டு. அந்த ஈர்ப்பை இப்படியே போக விட அவனுக்கு மனமில்லை.
ரூபிணியின் மனதில் என்ன இருக்கிறது என்று தெளிவாக தெரியவில்லை. அவளாக முத்தமிட்டதை ஒரு ஆதாரமாக வைத்தாலும், அதைப்பற்றி மீண்டும் பேசாதது அவனுக்கு உறுத்தியது.
தன் மனதை சொன்னால் ரூபிணி ஏற்றுக் கொள்வாளா? என்ற சந்தேகத்துடனே நாட்களை கடத்தினான்.
ரூபிணியை பார்க்கவே முடியவில்லை. அவளாக எதையும் பேசவுமில்லை. அவனாக பேசலாம் என்றால் எதை பேசுவது என்றும் புரியவில்லை.
இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருக்க, ஒரு நாள் ரூபிணிக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக செய்தி வந்தது. ரூபிணி இது வரை எந்த பதிலும் சொல்லவில்லை என்றனர்.
இதையே காரணமாக வைத்துக் கொண்டு உதயா ரூபிணியை பார்க்க கிளம்பி விட்டான். அப்படியே தன் மனதில் இருப்பதை சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தான்.
அவன் சென்று அழைப்பு மணியை அழுத்த, சில நிமிடங்களுக்கு பிறகு தான் ரூபிணி கதவை திறந்தாள்.
“என்ன திடீர்னு வந்து நிக்கிற? சொல்லவே இல்ல?” என்று கேட்டவள், அவனை உள்ளே விட்டு கதவை அடைத்து விட்டு நடந்தாள்.
“உன் கிட்ட பேசலாம்னு தான்”
“என்ன விசயம்? நான் பேக் பண்ணிட்டு இருந்தேன்”
“பேக்கிங்கா?”
“ஆமா.. ரெண்டு வாரம் ஃபாரின் ட்ரிப்.. நாளைக்கு ஃப்ளைட்.. அங்க தான் சூட்”
“ரெண்டு வாரமா?” என்று கேட்டவனின் மனம் சோர்ந்தது.
“ம்ம்.. நீ என்ன சொல்ல வந்த?”
சொல்ல வந்ததை சொல்ல இது நேரமில்லை. வேலையை முடித்துக் கொண்டு வந்த பிறகு தான் ஆற அமர பேச வேண்டும் என்று நினைத்தான்.
“உனக்கு மூவி சான்ஸ் வந்ததாமே”
“ஆமா.. சொன்னாங்க.. எனக்கு இப்ப நடிக்கிறதுல இன்ட்ரஸ்ட் இல்ல..” என்றவள், ‘உன் முன்னாடி சாதாரணமா நடிக்கிறதே போதும் சாமி’ என்று நினைத்துக் கொண்டாள்.
“ஏன்? நல்ல மூவி பண்ணா பெரிய இடத்துக்கு போகலாம்”
“உன் கம்பெனி காண்ட்ராக்ட்ட நீயே மறந்துட்டியா? வெளி ஆஃபர்ஸ் எது பண்ணாலும், அதுல எந்த லாபமும் எனக்கு கிடையாது. எல்லாமே உன் கம்பெனிக்கு தான் போகும். மறந்துடுச்சோ?”
ரூபிணி தலைசாய்த்து கேட்க, உதயா மேலும் கீழும் தலையாட்டி வைத்தான்.
“என் கம்பெனில இருந்துட்டு பலர் சைட்ல கம்பெனி பேர வச்சு சம்பாதிக்கும் போது போட்ட ரூல் இது”
“அது இன்னும் இருக்கே.. நான் நடிச்சாலும் அதுக்கு வர்ர பணத்த உன் கிட்ட.. உன் கம்பெனி கிட்ட கொடுத்துடனும். அப்புறம் நான் நடிச்சு என்ன யூஸ்? பேரும் புகழும் வரும்னு சொல்லாத.. எல்லா படத்துலயும் பேரும் புகழும் வராது. சிலது ஃப்லாப் ஆகி பேர கெடுத்துடும். என் கிட்ட பணமும் இல்ல.. பேரும் போயிடும்னா நான் ஏன் பண்ணனும்?” என்று கையை விரித்தாள்.
இது வரை முதலாளியாக அவனது லாபத்தை மட்டுமே பார்த்தவன், இப்போது தான் வேலை செய்பவராக ரூபிணியின் லாபத்தை பற்றி அறிந்து கொண்டான்.
“நாம டீல் பேசுனது ஞாபகம் இருக்கா?”
“இருக்கு”
“மத்தவங்க மாதிரி எனக்கு உன் கம்பெனில பர்மனன்ட் காண்ட்ராக்ட் கிடையாது. டிரையல் பீரியட் மூணு வருசம் தான். அதோட நான் விலகிடனும். ஏன்னா அதுக்குள்ள நீ உன் ப்ளான முடிச்சுடுவ. ஆறு மாசம் கழிச்சு நாம டேட்டிங் போறோம்னு சொல்லுவோம். ஒரு வருசம் கழிச்சு நாம அஃபீஷியலா காதலர்கள்.
காண்ட்ராக்ட் முடியுறதுக்கு முன்னாடியே நாம பிரிஞ்சுடனும். இடைப்பட்ட காலத்துல நீ உன் வேலைய முடிச்சுட்டா கூட நாம பிரியலாம். ஆனா காண்ட்ராக்ட் முடியுற வரை யாரையும் நீயும் நானும் லவ் பண்ண கூடாது. வேற யாரு கூடையும் சுத்த கூடாது. பிரிஞ்சதா சொன்னா கூட நாம தனியா தான் இருக்கனும். மூணு வருசம் கழிச்சு, உன் முகத்த நானும் என் முகத்தை நீயும் பார்க்க தேவையில்ல.. எல்லாம் ஞாபகம் இருக்குல?”
உதயா பெருமூச்சோடு தலையாட்டி வைத்தான்.
இந்த திட்டத்தை போடும் போது ரூபிணி அவனுக்கு வேண்டாதவள். சீக்கிரமாக போய் தொலையட்டும் என்று நினைத்து சொன்னான்.
ஆனால் இப்போது அப்படி இல்லையே. மனம் மாறி விட்டதே. அவளை போக விடாதே என்று அடம் பிடிக்கிறதே.
“சோ.. நான் மூணு வருசம் வரைக்கும் எதுவும் பண்ணுறதா இல்ல. ஜஸ்ட் மாடலா என்னை நானே வளர்த்துக்க போறேன். உன் கம்பெனிய விட்டு போனப்புறமும் எனக்கு மூவி சான்ஸ் வந்தா.. அப்போ பண்ணிக்கிறேன்.”
உதயாவிற்கு எந்த பக்கம் போவது என்றே புரியவில்லை. அவளை துரத்தி விட வேண்டும் என்று துடித்தவன், ட்ரையல் காண்ட்ராக்ட்டை தேர்வு செய்தான். அதில் தான் அவள் இங்கே வேலை செய்யும் போது வெளியே சம்பாதிக்க முடியாது. இதே நிரந்தரமாக இருந்தால், அவர்கள் வெளியே சம்பாதிப்பதில் பிரச்சனை இல்லை. அது அவனது நிறுவனத்தையும் சேர்த்து வளர்க்கும்.
எல்லாமே எதோ தவறான முடிச்சில் சிக்கிக் கொண்டது போல் இருந்தது. எப்படி விடுவிப்பது என்று தெரியாமல் அவன் திணற, ரூபிணிக்கு அவனை பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது.
“இத கேட்க தான் வந்தியா? ஃபோன்லயே கேட்டுருக்கலாம் நீ” என்று சலிப்பாக சொல்லி விட்டு, பேக்கிங் வேலையை தொடர்ந்தாள். உதயா அமைதியாக அவளை வேடிக்கை பார்த்தான்.
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ரூபிணி செம