
சத்தமில்லாமல் விஷாலை உள்ளே போட்டு விட்டு, ரூபிணியும் மெலினாவும் ஃபோட்டோ சூட்டுக்கு கிளம்பி விட்டனர்.
ரூபிணியின் பெற்றோர்கள் தான் விசயத்தை கேட்டதிலிருந்து கவலையில் இருந்தனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்லி விட்டு கிளம்பி விமான நிலையத்துக்கு வந்து அமர்ந்திருந்தனர்.
“ரூபிணி..”
“ம்ம்?” என்று கைபேசியை பார்த்தபடியே சத்தம் கொடுத்தாள்.
“உதயா…”
பார்வையை உயர்த்தினாள்.
“அவனுக்கு என்ன?”
“அங்க பாரு” என்றதும் திரும்பிப் பார்த்தாள்.
உதயா வந்து கொண்டிருந்தான். இன்னும் செக்இன் ஆரம்பித்து உள்ளே செல்லவில்லை.
“வந்துட்டானா” என்று விட்டு வேகமாக அவனை நோக்கி நடந்தாள்.
“வர்ரான்னு சொல்லவே இல்லையே”
“வேற எதுக்கு இங்க உட்காந்துருந்தோம்?” என்று கேட்டு விட்டு உதயாவை பார்த்தாள்.
அவன் அருகே வந்து ஒரு கவரை நீட்டினான்.
“பத்திரமா வச்சுக்கோ..” என்றதும் வாங்கிக் கொண்டாள்.
“நீ எப்போ அங்க வருவ?”
“நாளைக்கு மார்னிங்”
“ஈவ்னிங் சூட் இருக்கே?”
“நானா போஸ் கொடுக்க போறேன்?”
“நீ கூட கொடுக்கலாமே.. யாரு வேணாம்னா?”
“இருக்க வேலைய கட்டிட்டு அழுறதே எனக்கு போதும்.. நீ உன் வேலைய பாரு.. நான் என் வேலைய பார்க்குறேன்” என்றவன் மெலினாவிடம் இரண்டு வார்த்தை பேசி விட்டு கிளம்பி விட்டான்.
அவன் கிளம்பியதும் உடனே உள்ளே சென்று விட்டனர்.
செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தும் முடிந்த பிறகு இருவரும் சென்று லான்ஜில் அமர்ந்து கொண்டனர்.
இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து தான் விமானத்தில் ஏற வேண்டும். அது வரை ஓய்வெடுக்க வேண்டியது தான்.
“என்ன கொடுத்துட்டு போனான்? இங்க காட்டு” என்று வாங்கிப் பார்த்தார் மெலினா.
“அந்த கம்பெனில கேட்பாங்களா?”
“நாம அங்க போறோம்ல.. இத கொடுக்க சொல்லி கொடுத்துருக்கான். பத்திரமா வைங்க”
“ஓ…” என்றவர் அனைத்தையும் பத்திரமாக வைத்து விட்டு, “சரி இந்த சாக்லேட்டுமா?” என்று கேட்டார்.
உடனே அவர் கையிலிருந்து சந்தோசமாக வாங்கிக் கொண்டாள்.
“ரெண்டு பேரும் போற போக்கே சரியில்ல”
“ஏன்?” என்று கேட்டவள் சாக்லேட்டை பிரித்து கடித்தாள்.
“பொது இடமா இருக்கு.. தனியா பேசுவோம்” என்றதும் ரூபிணி தோளை குலுக்கினாள்.
சாக்லேட்டை வாயில் வைத்தபடி ஃபோட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றி விட்டு விமானம் ஏறி விட்டாள்.
பல மணி நேர பயணம் முடிந்து தரையிறங்கியதும், அவர்களை அழைத்துச் செல்ல கார் காத்திருந்தது. அதில் ஏறி ஹோட்டலுக்குச் சென்று விட்டனர்.
ரூபிணி அறைக்குள் நுழைந்ததும் மெத்தையில் படுத்துக் கொண்டு உதயாவிற்கு செய்தி அனுப்பினாள்.
“எதுக்கு சாக்லேட்?” என்று கேட்டு கேட்டு வைக்க, சில நிமிடங்கள் வரை பதில் இல்லை.
“சுகருக்கு லோ சுகர் வந்துட கூடாதுனு தான்”
படித்ததும் சிரித்து விட்டாள்.
“அப்போ நீ சாக்கோங்குறதால சாக்லேட் வாங்கி தரலயா?”
“ரெண்டும் தான்”
“ஓகே தாங்க்ஸ்.. நல்லா சாப்பிட்டேன்.. வேலைய முடிச்சு கிளம்பி வா” என்று விட்டு கைபேசியை போட்டு விட்டு எழுந்து சென்றாள்.
•••
அடுத்த நாள் மாலை..
ரூபிணி மேக் அப் போட்டு முடித்ததும் அவளது வழக்கமான பயம் எட்டிப் பார்த்தது. ஆனால் கண்ணை மூடிக் கொண்டு உதயாவை நினைத்துக் கொண்டாள்.
‘அவன் வாயலயே நாம அழகா இருக்கோம்னு வந்துடுச்சு. இதுக்கு மேல யாரு என்ன சொன்னா என்ன?’ என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டு தயாரானாள்.
தலை முதல் கால் வரை அந்த நிறுவனத்தின் படைப்பால் அலங்கரிக்கப்பட்டு அவள் தயாராக, ராஜும் தயாராகி விட்டான்.
இருவரும் ஒன்றாக கேமரா முன்பு நின்றனர். வேலை ஆரம்பமானது. சில நேரம் புரியாமல் தத்தளித்து பிறகு வேலையை முடித்தனர்.
நாற்காலி போடப்பட்டு ராஜ் அமர, ரூபிணி அவன் மடியில் அமர்ந்திருந்தாள். அதே நிலையில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உதயா சத்தமில்லாமல் உள்ளே வந்து நின்றான்.
ரூபிணி ராஜின் மடியில் இருந்ததும், அவளை அவன் வளைத்துப் பிடித்திருந்ததும் சம்பந்தமில்லாமல் உதயாவிற்கு எரிச்சலை கொடுத்தது.
‘அவ வேலைய தான பார்க்குறா?’ என்று நினைத்து எரிச்சலை துரத்தினான்.
படம் எடுத்து முடித்ததுமே ரூபிணி எழுந்து கொண்டாள்.
அவளது சிகை அலங்காரத்தை சரி செய்யும் போது உதயாவை பார்த்து விட்டாள்.
உடனே முகம் மலர்ந்து புன்னகையுடன் புருவம் உயர்த்தினாள். அவனை பார்த்ததும் அவள் முகம் மாறிய விதத்தில், உதயாவின் கொஞ்ச நஞ்ச எரிச்சலும் காணாமல் போனது.
அலங்காரம் முடிந்ததும் உடனே மேடையை விட்டு இறங்கி உதயாவிடம் வந்தாள்.
“ரொம்ப லேட் நீ”
“ஃப்ளைட் லேட்.. நான் இல்ல”
“இதுக்கு என் கூடயே வந்துருக்கலாம்..”
“மீட்டிங் இருந்துச்சே”
ராஜ் பார்த்து விட்டு அருகே வந்தான்.
“ஹாய் உதயா” என்றதும் உதயா புன்னகைத்து கை நீட்ட, இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
“உங்கள காணோம்னு மேனேஜர் தான் தேடிட்டே இருந்தாரு”
“இப்ப அவரெங்க?”
“ஃபோன் பேச போனாரு.. அதோ வந்துட்டாரு” என்று காட்டியதும் உதயா திரும்பினான்.
மேனேஜர் அவனை பார்த்ததும் உற்சாகமாக அருகே வர, கேமரா மேன் அடுத்த ஃபோட்டோ சூட்டுக்கு அழைத்தார்.
உதயா ரூபிணியை பார்க்க, அவள் அவனது கையை ஒரு முறை பிடித்து அழுத்தி விட்டு விட்டு நடந்தாள்.
உதயா அவள் மேடையேறிய பின்பே மேனேஜரை கவனித்தான்.
ராஜ் அனைத்தையும் கவனித்தாலும் மௌனமாக இருந்தான்.
இந்த முறை ரூபிணி நாற்காலியில் அமர, ராஜ் பின்னால் நின்றான். படங்கள் அழகாக வந்து குவிய ஆரம்பித்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு இருவரும் உடை மாற்றச் சென்று விட்டனர். ஜோடிகளுக்கான உடையை அணிந்து வந்ததும் மீண்டும் படம் எடுக்கப்பட்டது.
நள்ளிரவு வரை நீண்ட படப்பிடிப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. உதயாவுக்கு ஒரு நாற்காலி கொடுத்து விட்டதால், அவன் அமர்ந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
இனி மிச்சம் நாளை தொடரும். மூன்று நாட்கள் இருக்கிறது. அதனால் இதோடு முடித்துக் கொள்ள, அனைவரும் வேலையை முடித்து கலைந்தனர்.
ரூபிணி உடை மாற்றி விட்டு திரும்பி வந்தாள். மெலினாவும் அவளோடு வர, உதயா அவர்களுக்காக காத்திருந்தான்.
“இத பத்தி கண்டிப்பா பேசியே ஆகனும். நாளைக்கு காலையில பேசலாம்” என்று மெலினா சொல்ல, “எத பத்தி? உதயாவ பத்தியா?” என்று கேட்டாள்.
“ஆமா..”
“அவன பத்தி பேச என்ன இருக்கு?”
“பேசும் போது தெரியும்.” என்றவர் உதயாவை நெருங்கியதும், “நீங்க கிளம்பல?” என்று கேட்டார்.
“இல்ல.. இவளுக்காக வெயிட்டிங்”
“ஓ.. நாங்க ஹோட்டலுக்கு போறோமே”
“நான் இவள அப்புறமா கொண்டு வந்து விடுறேன்.”
மெலினா சம்மதமில்லாமல் தலையாட்டி விட்டு அவருக்காக காத்திருந்த காரை நோக்கிச் சென்று விட்டார்.
“என்ன விசயம்? மிட் நைட் ஆச்சு..”
“ஏறு.. சொல்லுறேன்” என்றதும் ரூபிணி காரில் ஏறிக் கொண்டாள்.
இருவரும் கிளம்ப, அவர்களது காரை பார்த்தபடி மெலினா கிளம்பினார்.
ரூபிணி விளக்குகளால் நிறைந்திருந்த சாலையை பார்த்துக் கொண்டே வந்தாள்.
“நல்லா இருக்கு.. இந்த இடம்” என்றவள் உதயாவை திரும்பிப் பார்த்தாள்.
அவன் பேசாமல் இருக்க, “என்னாச்சு உனக்கு?” என்று கேட்டாள்.
“அந்த ராஜ்க்கு உன்னை பிடிச்சுருக்கு”
“அது தெரிஞ்சது தான? அதுனால தான இந்த சூட்டே?”
“அந்த பிடிச்சுருக்கு இல்ல. அதையும் தாண்டி பிடிச்சுருக்கு”
ரூபிணி ஆச்சரியமாக புருவம் உயர்த்தினாள்.
“எப்படி சொல்லுற?”
“எவிடன்ஸ் எல்லாம் கொடுக்க முடியாது. ஆனா அவனுக்கு பிடிச்சுருக்கு”
“சரி அதுக்கு நான் என்ன பண்ணுறது?”
உதயா அவளை திரும்பிப் பார்த்து முறைத்தான்.
“அவன் வெறும் ஃப்ரண்ட்.. உன்னோட ஃபேவரட் ஆர்டிஸ்ட் அவ்வளவு தான்னு சொன்ன.. நினைப்பிருக்கா?”
“ஆமா.. இப்பவும் எனக்கு ஃபேவரட் ஆர்டிஸ்ட் தான்.”
“அப்புறம் நடுவுல எப்படி இது வந்துச்சு?”
“சில்லியா பேசாத. நான் ஒன்னும் அவர மயக்கல.. அதுக்கு எனக்கு நேரமும் இல்ல”
“ஆமா என் கூட சண்டை போட தான் உனக்கு நேரமிருக்கும்.. அது ஒத்துக்க வேண்டியது தான்”
“நக்கலா? நாம எப்ப லாஸ்ட்டா சண்டை போட்டோம்னு தெரியுமா?”
“நீயே சொல்லேன்”
“உன் ஆஃபிஸ்ல வச்சு பேசுனது தான் லாஸ்ட்.. அதுக்கப்புறம் நான் ரொம்ப பொறுமையா இருக்கேன்”
“இல்லனா?”
“உன் கழுத்த கடிச்சு துப்பிருப்பேன்”
திரும்பி அவளை கிண்டலாக பார்த்தவன், “அவ்வளவு தைரியம் உனக்கு கிடையாது” என்றான்.
உண்மையிலேயே கடித்தால் என்ன என்று தோன்றியது அவளுக்கு.
“அதுக்கு பேரு தைரியம் இல்ல.. நீ செத்து நான் ஜெயிலுக்கு போயிடக்கூடாதேனு சேஃப்ட்டி”
“நல்ல கேர்ள் ஃப்ரண்ட்.. கொடுத்து வச்சுருக்கனும்..”
“நீ தான் கொடுத்து வைக்கலயே”
உதயா திரும்பிப் பார்த்தான்.
“நான் ஃபேக் தான?” என்று தோளை குலுக்கினாள்.
“அதுல உனக்கு எதுவும் வருத்தமா?”
“நோ நோ.. எனக்கு நீ முக்கியமில்ல.. இந்த காண்ட்ராக்ட் தான் முக்கியம்.. நான் ரொம்ப ப்ரஃபஷனல் ஓகே?”
அவள் அவசரமாக விளக்க, உதயாவின் இதழ்களில் புன்னகை விரிந்தது.
“சரி தான். அந்த ப்ரஃபஷனல ராஜ் கிட்டயும் காட்டுனா நல்லா இருக்கும்”
“நான்…”
“உன் பக்கம் சரியா இருந்தா பத்தாது.. அடுத்த பக்கமும் சரியா இருக்க வைக்கனும். எல்லைய தாண்ட விடாம நிறுத்த பழக்கனும்.”
“நான் இப்ப என்ன தாண்ட விட்டுட்டேன்?” என்று திடீரென எகிறினாள்.
“அத நாளைக்கு நீயே உணருவ..”
“இப்ப இத சொல்ல தான் கூட்டிட்டு வந்தியா?”
தலையாட்டினான்.
“சந்தோசம்.. சொல்லிட்டல? இப்ப ஹோட்டலுக்கு போ”
“போகலாம்..”
“இப்பவே போ”
“ஏன் குதிக்கிற? போய் தூங்க தான போற? காலையில சூட் இல்லல.. அப்புறம் என்ன?”
“அதுக்காக உன் கூட ஊர் சுத்தனும்னு அவசியம் இல்ல”
“ப்பா.. பயங்கர சூடா இருக்கியே..” என்று சிரித்தவன், காரை ஒரு இடத்தில் நிறுத்தினான்.
சுற்றிலும் பார்த்து விட்டு ரூபிணி முறைத்துக் கொண்டிருக்க, உதயா இறங்கி வந்து அவள் பக்கம் கதவை திறந்தான்.
“இறங்கு”
“முடியாது..”
உடனே உதயா குனிய, பதறிப்போனாள். ஆனால் அவன் அவளை கண்டு கொள்ளாமல் சீட் பெல்ட்டை கழட்டி விட்டு நிமிர்ந்தான்.
“இறங்கு.. உனக்கு ஒன்னு காட்டுறேன்”
“தேவையில்லங்குறேன்”
இவள் சொல் பேச்சு கேட்க மாட்டாள் என்று சலித்தவன், அவள் கையைப்பிடித்து கீழே இழுத்தான்.
“அரகன்ட்.. கைய விடுடா”
“இடியட்.. சொல்லுற பேச்ச கேட்குறதே இல்ல” என்று பதிலுக்கு திட்டு விட்டு அவளை இழுத்துக் கொண்டு நடந்தான்.
“அட விடு..” என்று அவள் கையை உதறியும் அவன் விடுவதாக இல்லை. அருகே இருந்த நான்கு படிகளை தாண்டி மேலும் நடந்தனர்.
சுற்றிலும் இருந்த இருட்டு வேறு ரூபிணிக்கு பயத்தை கொடுக்க ஆரம்பித்தது. ஆனால் உதயா அவளது கையை விடாமல் பிடித்து இழுத்துச் சென்று ஒரு இடத்தில் நிறுத்தினாள்.
அவன் காட்டியதை பார்த்ததும், ரூபிணிக்கு இருந்த அத்தனை கோபமும் காணாமல் போனது. இமை கொட்டி விழித்தாள். அங்கிருந்து மொத்த ஊரின் அழகும் தெரிந்தது.
“அழகா இருக்குல?”
“வாவ்!” என்று தன்னை மறந்து சொன்னவளுக்கு அதை பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை.
“உனக்கு எப்படி இந்த இடம் தெரியும்?”
“நான் இங்க தான் காலேஜ் படிச்சேன்”
“நிஜம்மாவா?”
“ம்ம்.. என் ஃப்ரண்ட்ஸ் கூட நைட் அவுட் பிக்னிக்னா இங்க தான் வருவோம். அமைதியா இருக்கும். நாங்க மட்டும் இருக்கதால ஜாலியா பேசிட்டு விளையாடிட்டு இருப்போம்”
“பாதை தான் பயங்கரமா இருக்கு”
“காலையில நல்லா இருக்கும். பட் இந்த வியூ நைட் தான் கிடைக்கும். காலையில பாதி நேரம் பனிமூட்டமா இருக்கும்”
ரூபிணி அத்தனை கோபத்தையும் மறந்து அந்த இடத்தை ரசித்துக் கொண்டிருக்க, சில நொடிகளில் குளிர ஆரம்பித்தது.
“முன்னாடியே சொல்லிருந்தா எதாவது எடுத்துட்டு வந்துருப்பேன். இப்ப நல்லா குளிருது.. காய்ச்சல் எதாவது வந்தா வேலை கெட்டுரும்…” என்ற போதே உதயா பின்னாலிருந்து அவளை அணைக்க பாதியில் பேச்சு நின்று போனது.
“இப்ப குளிராது” என்று காதருகே சொல்லி விட்டு அவன் கண் முன்பு விரிந்த காட்சிய ரசிக்க, ரூபிணி தான் உறைந்து போனாள்.
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


உதயா ரூபிணி காதலை உணராமல் இருக்கிறார்கள்.