Loading

விடியும் வரை விழித்திருந்து விட்டு, விடிந்ததும் எழுந்து குளித்து கிளம்பினாள் ரூபிணி.

வெளியே உதயாவும் தன் உடைக்கு மாறியிருந்தான். ரூபிணி வரும் போது சமைத்துக் கொண்டிருந்தான்.

“சாப்பிட்டு போகலாம்.. இப்ப ஓகேவா?” என்று கேட்க மெல்ல தலையசைத்தாள்.

இரவு பயந்தது போல் மனம் குழம்பாமல் கொஞ்சம் தெளிந்திருந்தது.

“அங்க போனதும் என்ன சொல்லுறதுனு யோசிச்சியா?”

“என்ன சொல்லனும்?” என்று புரியாமல் கேட்க, உதயா தட்டை எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்பு அமர்ந்தான்.

“சித்திக்கு கால் பண்ணி சொன்னேன். நேரா ஸ்டேஷனுக்கே வந்துடுறேன்னு சொன்னாங்க”

“ஓகே..”

“அவன ஜெயில்ல போட்டுருவாங்க தான?”

“ம்ம்.. கம்ப்ளைண்ட் கொடுத்துட்டு வந்துடலாம். பட் அவன பத்தி கேட்பாங்க.. என்ன சொல்லுவ?”

“அவன் என்ன செலிபிரட்டியா? அவன பத்தி வர்ணிக்க?”

“வர்ணிக்க வேணாம். உன் எக்ஸ்னு சொன்னா போதும்..”

“அதான உண்மை?”

“ஏன் அவன பிரிஞ்சனு கேட்டா?”

“சீட் பண்ணான்னு சொல்லுவேன்”

“ப்ரூஃப் கேட்டா?”

“என் கிட்ட வீடியோ இருக்கு”

“எந்த வீடியோ?”

“அவன் வீட்டுல இருந்த கேமரால ரெகார்டான வீடியோ..” என்றதும் உதயா அதிர்ச்சியோடு சில நொடிகள் பார்த்து விட்டு, பிறகு நிம்மதி பெருமூச்சு விட்டான்.

“அது போதும். நீங்க பிரிஞ்ச கோபத்துல தான் அவன் அப்படி பண்ணிட்டான்னு சொன்னா உன் மேல பிரச்சனை வராம இருக்கும்”

“அவனுக்கு எவ்வளவு தைரியம்? என்னை கொல்ல வந்துருக்கான்? ராஸ்கல்..”

“அவன் இருக்க நிலைமைக்கு அவனுக்கு பைத்தியம் பிடிச்சுருக்கும். இப்படி தான் எதாவது நடக்கும்னு தான் இங்க இருந்தேன்”

“இதுக்கு தான் முன்னாடியே பிரேக் அப் பண்ண சொன்னியா?”

“கிட்டத்தட்ட.. அவன அழிக்கும் போது சம்பந்தமில்லாம நீ மாட்ட கூடாதுல? உனக்கு சம்பந்தம் இருக்கா இல்லையானு அதுக்கு தான் கேட்க வந்தேன்”

“எவ்வளவு நல்ல மனசு?”

“தாங்க்ஸ்.. நிறையவே இருக்கு”

“இப்ப அங்க போய் அவனுக்கு எதிரா ஆதாரம் கொடுத்தா போதும்ல?”

“ம்ம்.. அவன் சீட் பண்ண வீடியோ.. நேத்து ரெகார்ட் ஆன வீடியோ ரெண்டயும் கொடுத்துடலாம். அண்ட் நீ அவன பிரேக் அப் பண்ணிட்டங்குறதுக்கு ஆதாரம்?”

“சேட்ஸ் இருக்கு. மெஸேஜ்ல அவன் கெஞ்சுனது எல்லாம் வச்சுருக்கேன்”

“ஓகே.. இனி என்னை பத்தி கேட்டா?”

“நீ என்னோட தற்போதைய பாய் ஃப்ரண்ட்னு சொல்ல வேண்டியது தான்”

“அப்படி சொன்னதும் நம்பிடுவாங்களா?”

ரூபிணி புருவம் சுருக்கினாள்.

“விஷால் அவன் சீட் பண்ணத ஒத்துக்காம, நீயும் நானும் சேர்ந்து அவன ஏமாத்திருக்கோம்னு சொல்லுவான்”

“வாட்?”

ரூபிணி அதிர்ந்து பார்த்தாள்.

“கண்டிப்பா சொல்லுவான். அவன் டிஃபன்ஸுக்கு உன் மேல பழி போடுவான். கோபத்துல இப்படி பண்ணிட்டேன்னு விக்டிமா மாறுவான்”

“அவன என் கையாலயே கொன்னுடுவேன் அப்புறம்”

“நீ ஜெயிலுக்கு போயிட்டா என் கம்பெனி டீல் என்னாகுறது?”

“நக்கலா?”

“அப்ப நீயும் சீரியஸா பேசு.. அவன் நம்ம பக்கம் விசயத்த திருப்புனா அதுக்கு நாம ஸ்ட்ராங்கா ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்கனும்”

“என்ன சொல்லுறது?”

“ஒரு கதை சொல்லுவோம்.. அஞ்சு வருசத்துக்கு முன்னாடி நீ என் கம்பெனில ட்ரைனியா இருந்தப்போ நான் உன்னை லவ் பண்ணேன்..”

“என்ன உளறல் இது?”

“கதைய கேளு.. உன் கிட்ட காதலையும் சொன்னேன்.. ஆனா நீ ஏத்துக்கல.. அந்த கோபத்துல தான் உன்னை செலக்ட் பண்ணாம விட்டேன். நீ உண்மை தெரிஞ்சதும் கம்பெனிய விட்டு போயிட்ட. புரியுதா?”

“நல்லா.. சொல்லு சொல்லு..”

“நீ போனாலும் நான் உன் மேல கோபத்துல தான் இருந்தேன். அப்புறம் நீ விஷால் கூடயும் நான் மெடோனா கூடயும் பேட்ச் அப் ஆகிட்டோம்”

“ம்ம்”

“ஆனா நமக்கு தெரியாம இவங்க ரெண்டு பேரும் சீட் பண்ணிடுறாங்க. நான் விசயம் தெரிஞ்சதும் நேரா உன் கிட்ட வந்து சொல்லுறேன். ரெண்டு பேரும் அவங்கள பிரேக் அப் பண்ணிடுறோம்.”

“அப்புறம்?”

“அப்புறம் நான் உன்னை மறுபடியும் என் கம்பெனிக்கே வானு கெஞ்சி கூப்பிடுறேன்.”

“நீ? சரி மேல?”

“நீயும் கான்ட்ராக்டர் சைன் பண்ணுற.. நாம திரும்ப பழகும் போது என் லவ்வ நீ புரிஞ்சுக்கிற.. என்னையும் அக்சப்ட் பண்ணிக்கிற.. எப்படி?”

ரூபிணி பலமாக கை தட்டினாள்.

“கதையில அப்படியே உன்னை ஹீரோ ஆக்கிட்டியேடா”

“நான் ஹீரோ தான்.. இப்ப அது முக்கியமில்ல.. கதையில எதாவது ஓட்டை இருந்தா கண்டு பிடி..”

“ஏன்?”

“குறுக்க கேள்வி கேட்பாங்க”

ரூபிணி சில நொடிகள் யோசித்து விட்டு, “இருக்கு.. நீ எப்ப லவ்வ சொன்ன.. நான் ஏன் ரிஜக்ட் பண்ணேன்னு கேட்கலாம்” என்றாள்.

“நீ ட்ரைனியா இருக்கப்போ ஒரு நாள் சொன்னேன்”

“நான் என் கரியர் தான் முக்கியம் உன்னை பிடிக்கலனு ரெண்டு நாள்ல ரிஜக்ட் பண்ணிட்டேன்”

“இது ஓகே.. அடுத்தது?”

“மெடோனா சீட் பண்ணா.. அதை ஏன் என் கிட்ட வந்து சொன்ன?”

“அக்கறை தான்.. என் முன்னாள் காதலி.. என்னை வேணாம்னு சொல்லிட்டாங்குற கோபத்துல லவ்வே இல்லாம மெடோனா கூட சுத்துன நான்… அவ சீட் பண்ணத ஏத்துக்குவேன்.. ஆனா உன் காதலன் கூட சீட் பண்ணி நீ கஷ்டப்படுறத நான் பார்க்க விரும்பல.. மெடோனாவ விட நீ தான் முக்கியம்னு உன்னை தேடி வந்து விசயத்தை சொல்லிட்டேன்”

ரூபிணி வாயை பிளந்தாள்.

“உனக்கு முன்னாடியே தெரியும்னு நீ அழுத.. பிரேக் அப் பண்ண சொல்லி நான் கெஞ்சுறேன். நீயும் சரினு சொல்லுற.. அப்ப தான் என் அக்கறைய பார்த்து இம்ப்ரஸ் ஆகுற.. நான் கம்பெனிக்கு திரும்பி வானு கூப்பிட்டதும் வர்ர”

“பேசாம நீ எதாவது சீரியல் எடுக்கலாம்.. ப்ளேட்டயே திருப்பி போடுறியே”

“என்னைய பாராட்டுறத விடு.. இன்னும் என்ன இருக்குனு யோசி”

“இப்போதைக்கு இவ்வளவு தான் தோனுச்சு”

“ஓகே.. எதாச்சும் கேட்டா சொதப்பாம பேசிட்டு வந்துடலாம்” என்று விட்டு எழுந்தான்.

பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்து விட்டனர்.

இருவரும் கிளம்பி கதவை அடைத்த போது, ரூபிணி கதவை பார்த்தாள். உடல் நடுங்கியது. உதயா அவள் தோளில் தட்டி விட்டு, “எவிடன்ஸ்க்கு இருக்கட்டும். சீக்கிரம் சரி பண்ணிடலாம்” என்று விட்டு கீழே அழைத்துச் சென்றான்.

உதயாவின் கார் இல்லாததால் ரூபிணியின் காரிலேயே ஏறிக் கொண்டனர்.

ரூபிணி அமைதியாக நடந்ததை எல்லாம் ஒரு முறை யோசித்துக் கொண்டே வர, உதயாவும் சாலையை கவனித்து ஓட்டினான்.

இருவரும் சென்று இறங்கும் போது மெலினாவும் வந்து விட்டார்.

உள்ளே செல்லும் முன்பு உதயாவின் திட்டத்தை சுருக்கமாக மெலினாவிடம் சொல்லி விட்டு அழைத்துச் சென்றாள் ரூபிணி.

அதன் பயனாக எந்த கேள்வி கேட்ட போதும், தயங்காமல் பதில் சொன்னார்கள். உதயா கணித்தது போலவே விஷால் ரூபிணி ஏமாற்றி விட்டதாக சொல்லி இருக்கிறான்.

அவர்கள் தான் காதலர்கள் என்றும் உதயாவோடு சேர்ந்து அவள் ஏமாற்றிய கோபத்தில் அப்படி நடக்கப்பார்த்ததாகவும் சொல்லி வைத்திருந்தான்.

அதனால் நிறைய கேள்விகளை அடுக்கினர். இதில் மெடோனாவை பற்றிய விசாரணையும் வந்தது.

அவள் என்னவானாள்? என்று யாருக்கும் தெரியாது என்று விட்டனர். மெடோனாவும் விஷாலும் படிக்கும் காலத்திலிருந்தே காதலர்கள் என்பது நன்றாக வேலை செய்தது.

“பிரேக் அப் பண்ணப்புறம் விஷால நீங்க காண்டாக்ட் பண்ணலயா?” என்று கேட்க, ரூபிணி மறுப்பாக தலையசைத்தாள்.

“அவன பார்க்க பிடிக்காம தான் அந்த ஏஜன்ஸிய விட்டே வந்தேன். இது அங்க வேலை செய்யுறவங்களுக்கே தெரியும். அப்புறம் அந்த ஊர விட்டே வந்துட்டேன். இப்படி திடீர்னு வீட்டு முன்னாடி வந்து நிப்பான்னு நினைக்கல.. ஏன் இப்படி நடந்துக்கிட்டான்னும் எனக்கு புரியல”

“அவன் நிறைய கடன் வாங்கியிருக்கான். அத பத்தி எதாவது தெரியுமா?”

“கடனா? இல்ல.. நான் பழகுனப்போ எந்த கடன பத்தியும் அவன் சொன்னது இல்ல”

“ஓகே.. நீங்க போகலாம்.. உங்க வீட்ட ஃபோட்டோ எடுக்க வருவாங்க. எவிடன்ஸ்காக”

தலையாட்டி விட்டு உதயாவிடம் வந்து அமர்ந்தாள்.

“ஓகே?”

தலையை மட்டும் ஆட்டினாள்.

உதயா அவள் கையைப்பிடித்துக் கொண்டான். வந்ததிலிருந்து விடாமல் அவள் கையைப்பிடித்துக் கொண்டு தான் இருக்கிறான்.

வழக்கு பதிவு செய்து விட்டு மூவரும் வெளியே வந்தனர்.

“ரொம்ப தாங்க்ஸ் உதயா.. நீங்க இல்லனா ரொம்ப பயந்துருப்பா”

“அவன் ரூபிணிய கொல்ல வரல மெலினா.. அவன் கொல்ல வந்ததே என்னை தான்”

ரூபிணியின் பிடி இறுகியது.

“என்ன சொல்லுற?”

“போகும் போது சொல்லுறேன்”

“நான் வக்கீல பார்க்க போறேன். நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க. கால் பண்ணி கேட்குறேன். பத்திரமா போங்க.. அக்கா கிட்ட நான் சொல்லிக்கிறேன். நீ பயப்படாத” என்று இருவரையும் அனுப்பி வைத்த மெலினா, வருத்தத்தோடும் கவலையோடும் வக்கீலை அழைத்தார்.

காலையில் விசயத்தை‌ கேட்டதிலிருந்து மனதில் பாரம் ஏறியிருந்தது. உதயா இல்லாவிட்டால் ரூபிணி தனியாக விஷாலிடம் மாட்டியிருப்பாளே. அவ்வளவு பாதுகாப்பான இடத்திலும் நுழைந்து விட்டானே என்பது தான் பயமாக இருந்தது.

ரூபிணியின் பாதுகாப்புக்கு என்ன செய்வது? என்ற யோசனையுடனே வக்கீலை தேடிச் சென்றார்.

உதயா காரில் ஏறியதும், ரூபிணி அவனை இமைக்காமல் பார்த்தாள்.

“சீட் பெல்ட் போடு”

“நீ முதல்ல என்ன நடந்ததுனு சொல்லு.. அவன் ஏன் உன்னை கொல்ல வந்தான்?”

“லைவ் பார்த்துருக்கான். ஏற்கனவே உன்னை பார்க்க கிளம்பி வந்தவன், நானும் உன் வீட்டுல தங்குறேன்னு தெரிஞ்சதும் கத்தியோட என்னை கொல்ல வந்துருக்கான்”

ரூபிணி அதிர்ந்து போய் அமர்ந்து விட, உதயா அவளை பார்த்து விட்டு தானே சீட் பெல்டை மாட்ட அருகே சென்றான்.

அதே நேரம் ரூபிணி திரும்ப, அவளது உதடுகள் அவன் கன்னத்தில் உரசியது. பதறி அடித்து ரூபிணி பின்னால் சாய, உதயா அதிர்ச்சியில் உரைந்து விட்டான்.

சில நொடிகள் வரை இருவரும் அதிர்ச்சியிலேயே இருக்க, உதயா தெளிந்து சீட் பெல்ட்டை மாட்டி விட்டு தன் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்தான்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
12
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உதயா ரூபிணி கியூட்