Loading

ரூபிணி சில நிமிட யோசனைக்குப் பிறகு, “ஃபைன்.. இரு” என்று விட்டாள்.

உதயா தலையை மட்டும் ஆட்டி வைத்தான்.

“டின்னர் சாப்பிட்டியா?”

“இல்ல.. நீ சாப்பிட்டியா?”

“சாக்லேட் சாப்பிட்டேனே அது போதும்..”

“எதாவது சமைக்க வச்சுருக்கியா?”

“இருக்கும்” என்றவள் எழுந்து சமையலறைக்கு செல்ல, உதயா பின்னால் வந்தான்.

அங்கிருந்த பொருட்களை காட்டியவள், “இத வச்சு என்ன செய்யனுமோ பார்த்து செஞ்சுக்க.. என்னை டிஸ்டர்ப் பண்ணாம இருந்தா சரி. அப்படியே எல்லாத்தையும் க்ளீன் பண்ணிடு” என்றவள் அங்கிருந்து சென்று விட, உதயா சமைக்கும் வேலையில் இறங்கினான்.

இருப்பதை வைத்து சமைத்து முடிக்கும் போது, ரூபிணி மாய்ஸ்டரைஜரை தடவிக் கொண்டே வந்து நின்றாள்.

“நல்லா சமைக்கிற போல?”

“உனக்கு வேணுமா?”

மறுப்பாக தலையசைத்து வைத்தாள்.

உதயா தோளை குலுக்கி விட்டு சாப்பிட அமர்ந்து விட, ரூபிணி மீண்டும் சென்று விட்டாள்.

உதயா கைபேசியை பார்த்துக் கொண்டே சாப்பிட்டான். ரூபிணி பேசி வைத்ததை பற்றி பலர் பேசிக் கொண்டிருந்தனர். அதுவும் உதயா வீட்டுக்கு வந்து நின்றதை தான் அனைவரும் பேசினர்.

உதயா பெருமூச்சு விட்டான்.

‘செலவே இல்லாம வேலைய முடிச்சுட்டா.. இப்ப நாங்க லவ் பண்ணலனு அடிச்சு சொன்னா கூட எவனும் நம்ப மாட்டான்’ என்று நினைத்தவனுக்கு சிரிப்பும் வந்தது.

ரூபிணியோடு இப்படி ஒரு நெருக்கம் வரும் என்று நினைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு அவளது பாதுகாப்புக்காக அவள் வீட்டிலேயே வந்து தங்குவான் என்று சொன்னால் நம்பியிருப்பானா?

“அப்படியே செத்து போகட்டும் எனக்கென்ன?” என்று கேட்டு வைத்திருப்பான்.

இன்று அவள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று வந்து நிற்கிறான். அவள் வீட்டில் சமைத்து சாப்பிடுகிறான். நாட்கள் எப்படி எல்லாம் மாறுகிறது?

சாப்பிட்டு முடித்து எல்லாவற்றையும் சுத்தம் செய்து விட்டு வரும் போது, ரூபிணி அவனுக்காக தலையணை போர்வை வைத்திருந்தாள். அதை பார்க்கும் போதே அறையிலிருந்து வந்தாள்.

“இது உன் சைஸ்க்கு இருக்குமானு தெரியாது.. அப்பா வரும் போது அவர் போடுவாரு.. க்ளீனா தான் இருக்கு.. மாத்திட்டு தூங்கு” என்று நீட்டினாள்.

“அப்பாவோடதா? ஏன் விஷாலோடது இல்லையா?” என்று கிண்டலாக கேட்க ரூபிணி முறைத்து விட்டு, “குட் நைட்” என்று திரும்பிச் சென்று விட்டாள்.

உதயா அருகே இருந்த குளியலறையில் குளித்து, அவள் கொடுத்ததை மாற்றிக் கொண்டு வந்து படுத்து விட்டான்.

கைபேசியை எடுத்துப் பார்த்தான். இன்னமும் விஷாலை பற்றிய தகவல் கிடைக்கவில்லை. மேலும் சிலரை தேடச் சொல்லலாமா? என்ற யோசனையுடனே படுத்திருந்தவன், சில நிமிடங்களில் உறங்கியிருந்தான்.

எத்தனை மணி நேரம் தூங்கினானோ… கைபேசி மெல்லிய சத்தத்தோடு அதிர ஆரம்பித்தது.

பாதி தூக்கம் கலைந்து எழுந்தவன் எடுத்து காதில் வைக்க, அந்த பக்கமிருந்து வந்த செய்தியில் தூக்கம் பறந்தது.

விஷால் இப்போது அவர்கள் இருக்கும் அதே அப்பார்ட்மெண்ட்டில் இருக்கிறான்.

உதயா போர்வையை உதறி விட்டு துள்ளி எழுந்தான்.

“அவன் எப்படி இங்க வந்தான்?”

“அவனோட ஃப்ரண்ட் அங்க இருக்கான்.. அவன் தான் ரூபிணி அங்க இருக்கத பார்த்துட்டு சொல்லிருக்கான். இப்ப என்ன பண்ண? ஆளுங்கள அனுப்பவா?”

“வேணாம்.. பெரிய இஸ்யூ ஆகிடும். அவன் வந்தா நான் பார்த்துக்கிறேன்”

“நீங்க அங்க தான் இருக்கீங்களா?”

“ஆமா.. எதுக்கும் மெடோனாவ வாட்ச் பண்ணுறதையும் நிறுத்தாத” என்று விட்டு கைபேசியை அணைத்தான்.

ரூபிணியின் அறைக்கதவு பூட்டியிருந்தது. தூங்கிக் கொண்டிருப்பாள். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தவன் எழுந்து வாசலுக்கு சென்றான்.

கேமராவை திறந்து பார்த்தான். வெளியே எந்த நடமாட்டமும் இல்லை. விஷால் வந்தால் நிச்சயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். அது ஒரு ஆதாரமாக பயன்படும்.

மீண்டும் சென்று படுத்தவனுக்கு தூக்கம் வரவில்லை. சில நிமிடங்கள் உருண்டு கொண்டிருக்க, கதவில் எதோ சத்தம் கேட்டது.

துள்ளி எழுந்தவன் உடனே சென்று கேமராவை பார்த்தான். விஷால் தலையில் தொப்பியோடு நிற்க, உதயாவுக்கு கோபம் வந்தது. அவனை பதிவு செய்ய ஆரம்பித்தான்.

விஷால் அந்த கதவில் கடவுச்சொல்லை அழுத்திப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதை கொடுத்தாலும் கதவு திறக்காமல் போக, கோபத்தில் சுவற்றை ஓங்கி உதைத்தான்.

உதயா அனைத்தையும் பொறுமையாக பார்த்து விட்டு, சோபாவுக்குச் சென்று தலையணைக்கு அடியில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டான்.

விஷால் பல முறை கடவுச் சொல்லை அழுத்திப் பார்த்து விட்டு, கதவை ஓங்கி அடித்தான். அவன் உடல் மொழியிலேயே எவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று புரிந்தாலும் உதயா அசையவில்லை.

விஷால் எவ்வளவு தூரம் போகக்கூடும் என்று அவனுக்கு தெரிய வேண்டும். பல முறை முயன்ற பிறகு விஷால் அந்த கதவை வெறித்துப் பார்த்தான். பிறகு நேராக திரும்பி கேமராவை பார்த்தான்.

அவனது பார்வையை கண்டு உண்மையில் உதயாவுக்கு கூட பயம் வந்தது. விஷால் வெறி பிடித்தது போல் நின்றிருந்தான்.

கேமராவை சில நொடிகள் பைத்தியம் போல் பார்த்திருந்தவன் கத்தியை எடுத்தான்.

“நினைச்சேன்” என்று உதயா முணுமுணுத்துக் கொண்டான்.

அந்த கத்தியை வைத்து கதவை குத்த ஆரம்பிக்க, ரூபிணியின் அறைக்கதவு திறந்தது. உதயா அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தான்.

ரூபிணி ஒரு வித பயத்தோடு வெளியே வந்து உதயாவை பார்த்தாள். அவளை புருவம் சுருங்க பார்த்த உதயா, உடனே அருகே சென்றான்.

கண்ணால் என்ன? என்று கேட்க, ரூபிணி வாசலை ஒரு பார்வை பார்த்து விட்டு கைபேசியை காட்டினாள்.

தவறான கடவுச்சொல்லை பதிந்ததும் அவளது கைபேசிக்கு செய்தி வர, உடனே விழித்து விட்டாள். அப்போதிலிருந்து வெளியே நடப்பதை கைபேசி வழியாக பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.

அவன் கத்தியை எடுத்ததும் தான் பயம் வந்து விட்டது. அதே பயத்தோடு உதயாவை தேடி வந்து விட்டாள்.

“பயப்படாத.. அவனால உள்ள வர முடியாது. வந்தா சுட்டுரு” என்று மெல்லிய குரலில் சொல்லி விட்டு, தன்னிடமிருந்த துப்பாக்கியை அவள் கையில் வைத்தான்.

ரூபிணி அதை அதிர்ந்து பார்க்க, கதவை விஷால் குத்தும் வேகம் அதிகரித்தது. திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவள் துப்பாக்கியை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

உதயா அவளை தோளோடு அணைத்துக் கொண்டு, கைபேசியை வாங்கிப் பார்த்தான். இது வரை கிடைத்த ஆதாரமே போதும் என்று தோன்ற, தன் கைபேசியை எடுத்து காவல் துறையை அழைத்தான்.

விசயத்தை சொல்லி விட்டு வைத்ததும், “விசயம் வெளிய லீக் ஆச்சுனா…” என்று ரூபிணி பதறினாள்.

“ஆகாது.. பார்த்துக்கலாம்” என்றவன் அவளை மீண்டும் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தான். இன்னமும் விஷால் கத்தியை வைத்து குத்திக் கொண்டிருக்க, “செக்யூரிட்டிய கூப்பிடு” என்றான்.

அவள் தொலைபேசியை காட்டினாள். அவளால் பேச முடியும் போல் தோன்றவில்லை.

உதயாவே அழைக்க, சில நொடிகளில் வெளியே சத்தம் நின்றது. கைபேசியை பார்க்க விஷாலை இருவர் இழுத்துக் கொண்டு சென்றனர். அவன் கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது.

விஷாலை கீழே அழைத்துச் செல்வதற்கும், காவல்துறையினர் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.

“நீ இங்கயே இரு.. நான் போய் பேசிட்டு வர்ரேன். வெளிய வராத..” என்று விட்டு உதயா வெளியேறி விட, அடக்கி வைத்திருந்த கண்ணீர் ரூபிணியின் கன்னத்தில் உருண்டோடியது.

அவள் இதை நினைத்துக் கூட பார்க்கவில்லை. உதயா சொன்ன போதும், அவன் இரவு உடன் இருப்பதாக சொன்ன போதும் அவள் பெரிதாக நினைக்கவில்லை.

அப்படி விஷால் வந்தால், எப்போதும் துரத்தியது போல் துரத்தி விடலாம் என்று நினைத்தாள். ஆனால் உதயா வீட்டில் இருப்பதால் அவளுக்கு சரியாக தூக்கம் வரவில்லை. அறைகுறையாக தூங்கிக் கொண்டிருந்தவள், கைபேசி சத்தத்தில் துள்ளி எழுந்து விட்டாள்.

கைபேசியின் வழியாகவே வெளியே பார்த்தவளுக்கு, முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அத்தனை பாதுகாப்பையும் மீறி விஷால் எப்படி உள்ளே வந்திருக்க முடியும்?

உதயாவின் துப்பாக்கியை பார்த்தாள். இது எல்லாம் தெரிந்து தான் உதயா துப்பாக்கியோடு வந்தானா என்ன?

கண்ணீரை துடைத்துக் கொண்டு அசையாமல் அமர்ந்து விட்டாள்.

உதயா வெளியே வந்து கதவை பூட்டி விட்டு, கீழே கிடந்த கத்தியை எடுத்து கைக்குட்டையில் சுற்றிக் கொண்டு கீழே சென்றான்.

விஷால் காவல்துறையை பார்த்ததும் ஓடப்பார்க்க, சுற்றி வளைத்து பிடித்திருந்தனர். அவனை வண்டியில் ஏற்றிக் கொண்டு கிளம்பும் போது, உதயா வந்து நின்றான்.

ஒரு காவலதிகாரி அவனை அடையாளம் கண்டு அருகே வர, “இந்த கத்தி அவனோடது தான்.” என்று கொடுத்தான்.

“நீங்க தான் கால் பண்ணதா?”

“ஆமா.. என் கேர்ள் ஃப்ரண்டோட எக்ஸ் அவன். இப்ப அவளால வர முடியாது. காலையில வந்து பேசலாமா?” என்று கேட்டதும் சம்மதித்து விட்டு அவர் காரில் ஏறி கிளம்பி விட்டார்.

உதயா செக்யூரிட்டியை அனுப்பி விட்டு மீண்டும் மேலே வந்தான். கதவை தட்ட கை தூக்கியவனின் பார்வை விஷால் குத்திய தடத்தில் விழுந்தது.

அவனை அறியாமல் உடல் சில்லிட்டது. அத்தனை முறை குத்தியிருக்கிறான். அந்த கதவு இருந்த கோலம் விஷாலின் மனநிலையை சொன்னது.

மனதை தேற்றிக் கொண்டு கதவை தட்ட, சில நொடிகளுக்கு பிறகு ரூபிணி திறந்தாள். உள்ளே வந்ததும் கதவை பூட்டி விட்டான்.

“அவன போலீஸ் கூட்டிட்டு போயிட்டாங்க. காலையில போய் பேசுனா போதும்”

தலையை மட்டும் ஆட்டினாள்.

உதயா அவளது முகத்தை பார்த்து விட்டு, “அழுதியா?” என்று கேட்டான்.

ரூபிணியின் கண்கள் மீண்டும் குளமாக, உதயாவுக்கு அவளை அணைத்து ஆறுதல் சொல்ல தோன்றியது. கையை அடக்கிக் கொண்டான்.

“நீ ரொம்ப தைரியமான ஆள்னு நினைச்சேனே”

“அந்த கதவுல விழுந்த ஒவ்வொரு குத்தும் என் மேல விழுந்திருந்தா.. நான் செத்திருப்பேன்.. நீ சந்தோசமா இருந்துருப்பல?” என்று ரூபிணி வெடிக்க, “அப்படி விழுந்துடக்கூடாதுனு தான் இங்க நான் இருக்கதே.. அத மறந்துட்டு பேசாத” என்று அமைதியாக பதில் சொன்னான்.

“என்ன கொல்ல வந்துருக்கான்.. என்னை.. கொல்ல வந்து…”

உதயா தயக்கத்தை உதறிவிட்டு உடனே அவளை அணைத்துக் கொண்டான்.

“ஓகே ஓகே.. அதான் போயிட்டான்ல.. நீ பத்திரமா இருக்க.. அழாத” என்று அவள் தலையை தடவி விட, ரூபிணிக்கு அழவும் பிடிக்கவில்லை. அழுகையை நிறுத்தவும் முடியவில்லை.

அவன் மார்பிலேயே முகத்தை மறைத்துக் கொண்டு தேம்பினாள். உதயா அமைதியாக நின்றான். அவனாலும் கூட இதை ஜீரணிக்க முடியவில்லை.

ரூபிணி தனியாக இருந்திருந்தால் இன்னமும் பயந்திருப்பாள். உதயாவும் அவனது பாதுகாப்பும் ஓரளவு அவளை காப்பாற்றியது.

அழுகையை வேகமாக நிறுத்திக் கொண்டு அவனிடமிருந்து விலகியவள் துப்பாக்கியை நீட்டினாள்.

“இன்னைக்கு நைட் பக்கத்துலயே வச்சுக்கோ.. போய் தூங்க ட்ரை பண்ணு.. காலையில வேலை இருக்கு”

ரூபிணி ஒரு நிமிடம் அவன் முகத்தை இமைக்காமல் பார்த்து விட்டு, பிறகு தலையசைத்துக் கொண்டே அங்கிருந்து மெல்ல நடந்தாள்.

“நில்லு” என்று உதயா சொல்ல உடனே நின்றாள்.

“எதாவது சாப்பிடுறியா?”

மறுப்பாக தலையசைத்தாள்.

“பட் எனக்கு பசிக்குது.. வா சூடா எதாவது சாப்பிடலாம்..” என்றவன் அவளை தோளை பிடித்து திருப்பி தள்ளிச் சென்றான்.

அவனது போக்குக்கு அவளும் நடந்தாள். நடந்ததை அவளால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. விஷால் அவளை கொலை செய்ய நினைப்பானா? நம்பவே முடியவில்லை.

ரூபிணியை அமர வைத்து விட்டு உதயா பிரட் பாக்கெட்டை எடுத்தான். டோஸ்ட் செய்து விட்டு அவள் வாங்கி வைத்திருந்த சாக்லேட்டை உருக்கி அதில் தடவிக் கொண்டு வந்து வைத்தான்.

“இத சாப்பிடு நல்லா இருக்கும்” என்று கொடுக்க ரூபிணி மனமில்லாமல் சாப்பிட்டாள். வயிறு நிரம்பியதும் ஓரளவு தெம்பு திரும்பியது.

“இப்போ ஓகே.. போய் ரெஸ்ட் எடு” என்றதும், “தாங்க்ஸ்” என்று விட்டு எழுந்து சென்று விட்டாள்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 21

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
3
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உதய் செம. ரூபிணி பாவம் தான். விஷால் டூ மச்