
இரவெல்லாம் தூங்க முடியாமல் உருண்டு புரண்டு விட்டு, காலையில் விடிந்ததுமே கிளம்பினாள் மெடோனா.
உதயாவை சந்தித்து அத்தனை கேள்விகளுக்கும் பதில் கேட்க வேண்டும். முக்கியமாக ரூபிணிக்கு அவனது அலுவலகத்தில் என்ன வேலை என்று தெரிந்தாக வேண்டும்.
கார் இல்லாததால் ஒரு டாக்சியை பிடித்துக் கொண்டு கிளம்பி, அவனது வீட்டின் முன்பு இறங்கினாள். பணத்தை கொடுத்து விட்டு உள்ளே சென்று அழைப்பு மணியை அழுத்த, சில நிமிடங்கள் வரை பதில் வரவில்லை.
உதயா அப்போது தான் குளித்து முடித்து விட்டு வந்திருந்தான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வந்து வீட்டை சுத்தம் செய்யும் நபர் அவனை கேள்வியாக பார்த்தார்.
அந்த வீட்டு உரிமையாளரின் அனுமதியில்லாமல் கதவை திறக்கக்கூடாது. அதனால் அவர் கேள்வியாக பார்க்க உதயா, “கிட்சனயும் க்ளீன் பண்ணிடுங்க” என்று விட்டு நேராக வாசலுக்கு நடந்தான்.
கேமரா வழியாக வெளியே பார்த்தவனுக்கு உடல் இறுகியது. காலையிலேயே இப்படி மெடோனாவை சந்திப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
மனதை சற்று சமாதானம் செய்து கொண்டு கதவை திறந்தான். மெடோனா அவனை பார்த்த பார்வையில் ஆயிரம் குற்றச்சாட்டுகள் இருந்தது.
“உதயா.. என்ன இதெல்லாம்?”
“நீ இங்க என்ன பண்ணுற?”
“வாட்? நான் வரக்கூடாதா?”
“என்ன விசயம்னு கேட்டேன்”
“வாசல்ல நின்னு தான் பேசனுமா? உள்ள கூப்பிட மாட்டியா?”
உதயா எரிச்சலோடு கதவை திறந்து விலகி நிற்க, உள்ளே நுழைந்தாள். உதயா கதவை அடைத்து விட்டு நடந்தான்.
“என்னனு சீக்கிரம் சொல்லு.. எனக்கு வேலை இருக்கு”
“என்ன பேசுற நீ? என் கால்ஸ் அட்டன் பண்ணுறது இல்ல. என் மெஸேஜ்க்கு ரிப்ளை இல்ல. என்ன நினைச்சுட்டு இருக்க? நான் உன் கேர்ள் ஃபர்ண்ட் உதயா.. மறந்து போச்சா?”
“எனக்கு உன் கிட்ட பேசப்பிடிக்கல.. அதான் பேசல..”
“அப்படினா என்ன அர்த்தம்?”
ஒரு நொடிக்குப்பிறகு, “நாம பிரேக் அப் பண்ணிக்கலாம் மெடோனா” என்றான் அமைதியாக.
மெடோனா இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“பி.. பிரேக்… உதயா.. என்ன பேசுற? நான் எதாவது பண்ணிட்டனா? என் மேல கோபமா இருக்கியா? இல்ல என்ன பண்ணேன்னு இப்படி ஒரு முடிவுக்கு வந்த?”
“நீ என்ன பண்ணனு உனக்கு தெரியாதுல?”
திடீரென விஷாலின் நினைவு வந்தாலும், “என்ன பண்ணேன்? நான் எதுவுமே பண்ணலயே” என்றாள் அப்பாவியாக.
உதயாவுக்கு அவளை அடித்துக் கொல்லும் அளவு கோபம் இருந்தது. ஆனால் செய்யவில்லை. அவளை கொன்று விட்டு அவன் கைதியாக விரும்பவில்லை.
அதை விட அவளை எப்படி உருத்தெரியாமல் அழிக்க வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். அதைச் செய்வான்.
“உதயா.. ப்ளீஸ்.. காரணம் சொல்லு.. நாம பேசி தீர்த்துக்கலாம்.. இதுக்காக பிரேக் அப் வரை போகாத.. நான் உன்னை விட்டு எப்படி வாழுவேன்? ஐ லவ் யூ” என்றவள் அவனை இறுக்கமாக கட்டிக் கொள்ள, உதயாவின் மொத்த உடலும் பற்றி எரிவது போல் ஒரு கோபம் வந்தது.
இதே போல விஷாலை கட்டிப் பிடித்துக் கொண்டு அவள் நின்ற காட்சி மனக்கண்ணில் வர, அவளை பிடித்து தள்ளி விட்டான்.
அவன் தள்ளிய வேகத்துக்கு தரையில் விழுந்தாள்.
“டோன்ட் **** டச் மீ..” என்று அவன் கத்தி விட, மெடோனா விழுந்த அதிர்ச்சியிலிருந்து மீளும் முன்பு அவன் கத்தியதும் பயத்தில் உடல் தூக்கிவாரிப்போட்டது.
கணகள் கலங்க அவள் விழிக்க உதயாவுக்கு கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சுத்தம் செய்து கொண்டிருந்தவர் பயந்து வந்து எட்டிப் பார்க்க, உதயா நிதானித்தான்.
“எந்திரி..” என்று பல்லைக்கடித்துக் கொண்டு சொன்னதும், கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்தவள் அவளை பாவமாக பார்த்தாள்.
இந்த பார்வையை எல்லாம் அவன் நம்பிய நாட்களை நினைத்து அவனுக்குத்தான் இப்போது அவமானமாக இருந்தது.
உதயா முன்னால் நடக்க அவளும் நடந்தாள். அருகே இருந்த ஒரு அறைக்குள் அவன் நுழைந்ததும், மெடோனா பின்னால் சென்றாள்.
கதவை அடைத்ததும் உதயா அங்கும் இங்கும் நடந்தான்.
“இங்க பாரு.. உன் டிராமாக்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல. பிரிஞ்சுடலாம்னா பிரிஞ்சுடலாம் தான். புரியுதா?”
“ஏன்? காரணம் சொல்லு. நீ.. இப்படி பேசுற ஆளு கிடையாது.. நேத்து.. நியூஸ் பார்த்தேன்.. அந்த ரூபிணி கூட உன்னை வச்சு பேசுறாங்க. அவள உனக்கு பிடிக்காது தான? அப்புறம் ஏன் அவ உன் கம்பெனில வேலைக்கு சேருறா? நீ ஏன் என் மேல கோபப்படுற? ஏன் எல்லாம் தலைகீழா நடக்குது? எதாவது சொல்லேன்”
“ரூபிணிய பத்தி பேசாத. அவள பத்தி கேள்வி கேட்க உனக்கு உரிமை இல்ல. அண்ட் என் கம்பெனி டிசிசன் பத்தி நீ என்ன பேசுறது? உனக்கு காரணம் பிரேக் அப் க்கு வேணும்.. அவ்வளவு தான?” என்றவன் விறுவிறுவென வெளியே சென்றான்.
மெடோனா தன் காதுகளை நம்ப முடியாமல் நின்றிருந்தாள். உதயா ரூபிணிக்காக பேசுகிறான். உலகம் தலைகீழாக சுற்ற ஆரம்பித்து விட்டதா?
இதில் பிரிவை பற்றிப்பேசுகிறானே… என்ன நடக்கிறது? சுத்தமாக புரியவில்லை.
மனம் பல விதத்தில் பதறிக் கொண்டிருக்க, உதயா வந்து அத்தனை படங்களையும் தூக்கி அவள் முகத்தில் எறிந்தான்.
“இந்த காரணம் போதும்னு நினைக்கிறேன்” என்றதும் மெடோனா அதிர்ந்து கீழே கிடந்த படங்களை குனிந்து பார்த்தாள். அவள் கண்ணீரை தாண்டி பளிச்சென படம் தெரிந்தது. அவளும் விஷாலும் முத்தமிட்டுக் கொண்டிருந்த படம்.
இதயம் தாறுமாறாக துடிக்க மெடோனாவுக்கு பயத்தில் வியர்த்து விட்டது. இது எப்படி இவனுக்கு தெரியும்?
“உதயா.. இது.. இது உண்மையில்ல.. ஐ கேன்… எக்ஸ்ப்ளைன்..” என்று எதெதோ சொல்ல, உதயா அவளை வெறுப்பாக பார்த்தான்.
“என்னை ஏமாத்திட்டல..? உன்னை இங்கயே கொன்னு புதைச்சுடனும்னு போல இருக்கு. ஆனா என் ஸ்டேட்டஸ்.. அத விட்டு நான் இறங்க விரும்பல.. உன் தகுதிய முதல்ல கவனிச்சுருக்கனும். விட்டது என் தப்பு. லவ்வாம்.. லவ்.. மை பூட்.. உன்னை என் பக்கத்துல விட்டத நினைச்சாலே அசிங்கமா இருக்கு. போயிடு.. இனிமே என் கண்ணு முன்னாடி வந்துடாத.. தப்பித்தவறி வந்தா நான் கொலைகாரனாகிடுவேன்”
“உதயா..”
“யூ… ******* ” பல விதமான வார்த்தைகளால் அவளை நோகடித்தவன், கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேறினான்.
“உதயா ப்ளீஸ்.. நான் சொல்லுறத கேளு.. அந்த ஃபோட்டேஸ நம்பாத” என்று அவள் கதற, அதை பற்றி அக்கறைப்படாமல் இழுத்துச் சென்று வாசல் கதவை திறந்தவன் வெளியே தள்ளி விட்டான்.
வேகம் தாங்க முடியாமல் படிகளில் சென்று விழுந்தாள்.
விழுந்தவளை பற்றி அக்கறைப்படாமல் கதவை அடைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்.
மெடோனா அடி பட்டு தரையில் கிடந்தாள். கண்ணீர் அருவியாக கொட்டிக் கொண்டிருக்க, வலியும் பயமும் அவளை வதைத்தது. படியில் நேராக நிமிர்ந்து அமர்ந்தவள் கையைப்பிடித்துக் கொண்டாள். எங்கோ இடித்து வலித்தது.
திரும்பி கதவை பார்த்தாள். பூட்டியிருந்தது. மனம் நொந்து போக கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்து தன் பர்ஸை எடுத்துக் கொண்டு இறங்கி நடந்தாள்.
கண்ணீர் நிற்க மறுக்க துடைத்துக் கொண்டே இருந்தாள். இப்படி ஒரு நாள் வரும் என்று அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
அவளுக்கும் விஷாலுக்கும் இடையே உள்ள பழக்கம் பற்றி உதயாவுக்கு எப்படித் தெரிந்தது? ஒரு வேளை ரூபிணி சொல்லியிருப்பாளா?
ரூபிணி விஷாலை பிரிந்த பிறகு தான் அவளிடம் உதயாவும் பேசுவதை விட்டு விட்டான்.
சாலைக்கு வந்தவள் அருகே இருந்த பேருந்து நிலையம் நோக்கி நடந்து கொண்டே விஷாலை அழைத்தாள்.
“என்ன?” என்று எடுத்த எடுப்பில் எரிந்து விழுந்தான்.
“எல்லாம் உன்னாலயும் உன் **** கேர்ள் ஃப்ரண்ட்டாலயும் வந்தது” என்று மெடோனா கத்த விஷாலுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்ன சொல்லுற?”
“உதயாக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு. நம்ம ஃபோட்டோஸ யாரோ அவனுக்கு அனுப்பிருக்காங்க. கண்டிப்பா அந்த ரூபிணி தான் அனுப்பிருப்பா”
விஷாலுக்கு இதயம் நழுவி தொண்டைக்கு ஏறியது.
“எப்படித்தெரியும்?”
“இன்னைக்கு அவன பார்க்க போனேன்.. ரூபிணி அவன் கூட காண்ட்ராக்ட் போட்டுருக்கா..”
“நானும் பார்த்தேன்”
“அத பத்தி கேட்க போனா.. அவன் நம்ம ஃபோட்டோஸ காட்டுறான். நானும் நீயும் ஒன்னா இருந்த ஃபோட்டோஸ்.. எல்லாம் போச்சு.. எல்லாம் அவளால.. அவள நான் கொல்ல போறேன்”
விஷால் ஒரு நொடி அமைதிக்குப் பின்பு, “ரூபிணிய குறை சொல்லாத.. அவ வீட்டுக்கு வந்தத கவனிச்சு அன்னைக்கே நீ சொல்லியிருந்தா நான் எப்படியாவது தடுத்துருப்பேன். நீ சொல்லாம விட்டு.. அவளுக்கு உண்மை தெரிஞ்சு.. இப்ப உதயாவுக்கும் தெரிஞ்சுடுச்சு” என்றான்.
“அப்ப எல்லாம் என் தப்புங்குறியா?”
“ஆமா.. உன் தப்பு தான்.. நீ திரும்பிப் போனதோட இருக்காம நீயா தான என்னை தேடி வந்த? நீயா தான ஒரு வாரம் என் கூட இருக்க ஆசைப்பட்ட?”
“ஏன்டா இப்படி பச்சையா பொய் சொல்லுற? நீ தான என்னை பிரிய முடியலனு கேட்ட.. அதான் நான் சரினு சொன்னேன்”
“நான் கேட்டாலும்? நீ ஏன் வந்த? நீ வராம இருந்திருந்தா நாம வெளிய போயிருக்க மாட்டோம்.. அந்த ஃபோட்டோஸும் கிடைச்சுருக்காது.”
“ச்சீ.. நீ இவ்வளவு கேவலமானவன்னு நினைக்கல.. கொஞ்சமாவது மாறியிருப்பனு நினைச்சேன். இப்பவும் என் மேல பழி போட்டு நீ தப்பிக்கிறல.. இனிமே உன் கிட்ட எனக்கென்ன பேச்சு?” என்றவள் உடனே அழைப்பை துண்டித்து அவனது எண்ணை ப்ளாக்கில் போட்டு விட்டாள்.
அவளது மனம் பொறாமையிலும் வலியிலும் துடித்தது.
உதயா ரூபிணிக்கு வக்காலத்து வாங்குகிறான். விஷால் அவள் மீது தப்பே இல்லை என்கிறான். ரூபிணி அந்த நொடியே மெடோனாவுக்கு பரம எதிரியானாள்.
தொடரும்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

மொடனோ விஷால் உண்மையாக இல்லாமல் ரூபிணி சொல்லுதுங்கள்