Loading

மெலினா தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார்.

“இதுக்கு தான் சொன்னேன்.. அவன் கிட்ட சண்டைக்கு போகாதனு.. கேட்டியா நீ?” என்றவரை ரூபிணி அமைதியாக பார்த்தாள்.

“இப்ப உன் மொத்த கரியரையும் பணயம் வச்சுருக்கான். இதுல இருந்து எப்படி தப்பிக்க?”

ரூபிணி பதில் சொல்லாமல் போக, மெலினா அவளை பாவமாக பார்த்தார். அவரால் முடிந்தவரை ரூபிணியை காப்பாற்றிக் கொண்டு தான் இருந்தார். அவளது பெயருக்கும் மரியாதைக்கும் பிரச்சனை வராதபடி அவர் எவ்வளவோ செய்திருக்கிறார்.

ஆனால் உதயாவிடம் இப்படி மாட்டுவாள் என்று நினைக்கவில்லை. உதயா இப்படிப்பட்டவன் என்றும் அவர் நினைக்கவில்லை. அவனது நிறுவனத்தை அவன் கட்டிக்காத்த விதத்தில், அவன் மீது நிறைய மரியாதை இருந்தது.

இன்று இப்படி ஒரு காரியத்தை செய்து அனைத்தையும் கெடுத்து விட்டான். இவனும் காரியம் ஆக வேண்டுமென்றால் பெண்களின் மானத்தில் கை வைப்பவன் தான் என்று புரிய, மெலினாவுக்கு கசந்தது.

“பேபிமா.. எதாவது பேசு” என்று பல நாட்களுக்கு பிறகு மெலினா அவளது செல்லப்பெயரை உபயோகப்படுத்தினார்.

இந்த தொழிலில் வருவதற்கு முன்பு வரை அப்படித்தான் அழைப்பார். மற்றவர்களும் அவளுக்கு மரியாதை தர வேண்டும் என்று தான் அவளது சொந்த பெயரை வைத்து அழைக்க ஆரம்பித்தார்.

“எல்லா ஆம்பளைங்களும் ஒன்னு தான்னு அவன் காட்டிட்டான் சித்தி”

மெலினாவுக்கு வருத்தமாக இருந்தது. அவளை பாவமாக பார்த்தார்.

“ஆனா நான் எல்லா பொண்ணுங்கள மாதிரியும் இல்லனு அவனுக்கு காட்டனும்ல?”

இதைச் சொல்லும் போது ரூபிணியின் கண்கள் பளபளத்தது.

அதிர்ச்சியில் மெலினாவின் இதயம் வேகமாக துடிக்க, அவசரமாக அருகே சென்று அமர்ந்தார்.

“என்ன சொல்லுற?”

“ரூபிணி சாதாரண ஆள் கிடையாதுனு அவன் உணரனும் சித்தி. உணர வைக்கிறேன்”

“மறுபடியும் ஏன் இப்படி பண்ணுற? பேசாம எதுவும் வேணாம்னு சொல்லிடலாம். வேற நல்ல கம்பெனியா தேடலாம். உன்னால…”

“நோ சித்தி.. நோ.. அவன்.. அவன் தான் எனக்கு வேணும்.. அவனோட அந்த.. அந்த கம்பெனி தான் வேணும். அத நான் யூஸ் பண்ணாம விட மாட்டேன். இத நான் பார்த்துக்கிறேன். நீங்க காண்ட்ராக்ட் வேலைய மட்டும் பாருங்க. காண்ட்ராக்ட் என் கைக்கு வரட்டும். அப்புறம் இருக்கு”

“இப்பவும் நீ தப்பு பண்ணுறனு தான் எனக்கு தோணுது”

“இது வரை பண்ணது தான் தப்பு. இனிமே எல்லாம் சரியா பண்ணுறேன்”

“அப்ப அவன் டீல்க்கு ஒத்துக்க போறியா?”

“ஆமா..” என்றவள் கைபேசியை‌ எடுத்து உதயாவுக்கு செய்தி அனுப்பினாள்.

“டீல் டன்” என்ற இரண்டு வார்த்தையை அனுப்பி விட்டு அவன் பார்த்ததும் கைபேசியை தூக்கி போட்டு விட்டாள்.

மாலை வரை நேரம் கேட்டிருந்தாள். யோசித்து முடிவு செய்ய. அவனும் ஒப்புக் கொண்டான்.‌ இப்போது முடிவு செய்து விட்டாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு நேர்காணலுக்காக ஒரு பெண் வந்து சேர்ந்தாள். அவள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி வைத்தாள்.

பழைய நிறுவனத்திலிருந்து விலகியது பற்றி சொல்லி விட்டு புதிய நிறுவனத்தை பற்றி கேட்ட போது பின்னால் அறிவிப்பு வரும் என்று முடித்தாள்.

சொந்த வாழ்வை பற்றிய கேள்வி வர, “இருக்கலாம்.. இருந்தா நல்லா இருக்கும்” என்று சிரித்து வைத்தாள்.

“அப்ப கண்டிப்பா உங்க லைஃப்ல ஒருத்தர் இருக்காங்க.. அவங்கள எப்போ காட்டுவீங்க?”

“அப்படி ஒருத்தர் இருந்தா அவங்க சம்மதமும் வேணும் இல்லையா?” என்று கேட்டு வைத்தவள் அதன் பிறகு வேறு பேச்சுக்கு சென்றாள்.

இந்த பேட்டி இரண்டு நாட்களுக்குப்பிறகு வெளி வரும் என்ற செய்தியோடு அந்த பெண் விடை பெற்றுச் சென்று விட்டாள்.

மெலினாவுக்கு இது உவப்பாக இல்லை. ரூபிணி தவறாக எதுவும் முடிவெடுத்து விடக்கூடாதே என்ற கவலையோடு இருந்தார்.

ரூபிணி உதயாவின் நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டதை கண்டு உதயாவுக்கு திருப்தியாக இருந்தது.

எப்படியும் இறங்கி வந்து தான் ஆக வேண்டும். ரூபிணி புரிந்து கொண்டு அவன் இழுத்த இழுப்புக்கு வந்து விட்டாள்.

இனி மெடோனாவை ஒரு வழியாக்க வேண்டியது தான்.

அடிக்கடி மெடோனா அழைப்பது பிடிக்காமல் ப்ளாக்கில் போட்டு விட்டான்.

ஆனாலும் அவனது அசிஸ்டண்ட்டை அழைத்து பேசிக் கொண்டு தான் இருக்கிறாள்.

அவளுக்கு கொடுத்த நாட்கள் முடிந்து போக, அன்று மாலை நேராக அலுவலகம் வந்தாள்.

ஏகப்பட்ட அலங்காரத்தோடு உதயாவை திருமணம் செய்யும் கனவோடு அவள் வந்து சேர, உதயா அங்கே இல்லை என்ற பதில் தான் கிடைத்தது.

“எங்க இருக்கான்னு சொல்லு.. அங்க போய் பார்க்குறேன்” என்றதும் அசிஸ்டன்ட், “தெரியாது மேடம்” என்று விட்டான்.

மெடோனா அவனை நக்கலாக பார்த்தாள்.

‘எப்படியும் சர்ப்ரைஸ் பண்ண போறீங்க.. எவ்வளவு தூரம் போகுதுனு பார்க்கலாம்’ என்று நினைத்தவள், “நான் இங்கயே உட்கார்ந்துருக்கேன். உதயா வந்ததும் பேசிக்கிறேன்” என்று விட்டு உதயாவின் அறைக்கு வெளியே ஒரு நாற்காலியில் அமர்ந்து விட்டாள்.

போவோர் வருவோர் அனைவரும் அவளை வேடிக்கை பார்த்தாலும் அசரவில்லை. மெல்ல மெல்ல சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பிக்க, வேலை பார்த்த பலர் கிளம்பி விட்டனர்.

நேரம் கடந்து சென்று கொண்டிருக்க அப்படி தனியாக அமர்ந்திருப்பது மெடோனாவுக்கு பிடிக்கவில்லை. அசிஸ்டன்ட்டை கேட்டால் அவன், “தெரியாது” என்பதை திரும்பத் திரும்ப சொன்னான்.

“கால் பண்ணி கேளு” என்றதற்கு, “இப்படி டிஸ்டர்ப் பண்ணா என் வேலை போயிடும்” என்று விட்டான்.

மெடோனா மூன்று மணி நேரம் அங்கேயே இருந்தாள். இப்போது வந்து விடுவான் அப்போது வந்து விடுவான் என்று காத்திருந்து ஓய்ந்து போனாள்.

அலுவலகம் காலியாகி விட, செக்யூரிட்டி வேறு வந்து அலுவலகத்தை பூட்ட வேண்டும் என்றான்.

மெடோனாவின் அலங்காரம் எல்லாம் இந்த மூன்று மணி நேரத்திற்குள் கலைந்து விட்டது. மனதில் இருந்த சந்தோசம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட, தரையை பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.

கிடைத்த ஏமாற்றத்தில் கண்கள் கலங்கியது. கண்ணீரை நாசுக்காகவே துடைத்துக் கொண்டு வெளியே வந்தவள், சாலையில் நின்று இரண்டு பக்கமும் பார்த்தாள்.

அவளது கார் இல்லை. இருந்தால் அதிலேயே கிளம்பியிருக்கலாம். இப்போது எதாவது டாக்சியை புக் செய்யலாம் என்று பார்த்தாள்.

விலையை பார்த்ததும், அவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று யோசனையாக இருந்தது. உதயாவின் பணத்தை செலவு செய்த போது அவள் கணக்கே பார்த்தது இல்லை. இப்போதெல்லாம் அவளது பணத்தை செலவு செய்கிறாள். பணம் குறைய குறைய மனம் வலிக்கிறது.

உதயா திருமணத்திற்கு சம்மதம் கேட்டால், யோசிக்காமல் சம்மதித்து அவனோடு ஒரே வீட்டில் இருந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு பிரதானமாக இருந்தது. இருக்கும் வீட்டை இழந்தால், புது வீடு தேட வேண்டும் என்பது கூட நினைவில் இல்லை.

இப்போது அனைத்தும் பூதகரமாக தோன்ற, சோர்வாக நடந்து பேருந்து நிலையத்தை அடைந்து ஓரமாக நின்றாள்.

அவள் அணிந்திருந்த உடைக்கு அங்கே நிற்பது விசித்திரமாக இருந்தது போலும். பலர் குறுகுறுவென பார்க்க, கண்ணை துடைத்துக் கொண்டு திரும்பிக் கொண்டாள்.

இனி பணத்தேவையை சரிகட்ட வேண்டும். இது வரை அவள் பார்த்த வேலையை மாடலிங் ஆசை கொண்டதும் விட்டு விட்டாள்.

இனி வேறு வேலை தேட வேண்டும். அவளிடம் இருக்கும் அனைத்து பிராண்டட் பொருட்களையும் விற்க வேண்டும் என்று மூளையில் பல விதமான திட்டங்கள் ஓடியது.

அதே நேரம் உதயா என்னவானான்? என்ற கேள்வியும் மனதை குடைந்தது.

அவளது அழைப்பை ஏற்பதில்லை. செய்திகளுக்கு பதில் அனுப்புவதில்லை. எங்கே தான் போனானோ?

கைபேசியை எடுத்து கடைசி முறையாக முயற்சிக்க நினைக்க, பேருந்து வந்து நின்றது.

பல நாட்களுக்குப்பிறகு பேருந்தில் ஏறி வீடு நோக்கி பயணித்தாள்.

உதயாவை பிரிந்து விட்டால் இந்த வாழ்வு தான் நிரந்தரம் என்று புரிய பெருமூச்சு விட்டாள்.

வீட்டுக்கு வந்து சேர, இன்று மீண்டும் வீட்டின் உரிமையாளர் வந்து நின்றிருந்தார்.

“அடுத்த வாரம் புது ஆளுங்க வர்ராங்க. ரெண்டு நாள்ல காலி பண்ணிடுனு சொல்லத்தான் வந்தேன்” என்று விட்டு கிளம்பி விட்டார்.

அதைக்கேட்டு வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு கோபம் கோபமாக வந்தது. உதயா என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறான்? அவளை முழுவதுமாக தவிர்த்துக் கொண்டிருக்கிறானே.

கண்ணை துடைத்துக் கொண்டவள் கைபேசியை எடுத்து கடைசி முறையாக செய்தி அனுப்ப பார்க்க, அவளது தோழியிடமிருந்து அழைப்பு வந்தது.

குரலை சரி செய்து கொண்டு அழைப்பை ஏற்றாள்.

“மெடோனா.. என்ன நடக்குது?”

“எத கேட்குற?”

“உனக்கு விசயமே தெரியாதா? நான் ஒரு லின்க் அனுப்புறேன்.. அத பாரு” என்று விட்டு வைத்து விட்டாள்.

மெடோனா இருக்கும் பிரச்சனையில் இவள் எதை அனுப்புகிறாள்? என்ற கடுப்போடு எடுத்து பார்த்தாள்.

எதோ கட்டுரை என்று நினைக்க, அதில் ரூபிணி உதயாவின் நிறுவனத்தில் சேர்ந்து இன்று மாலை ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக எழுதியிருந்தது.

மெடோனாவிற்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. உதயாவின் நிறுவனத்தில் ரூபிணிக்கு என்ன வேலை?

தலை சுற்றுவது போல் இருக்க, தடுமாறி அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். ரூபிணியோடு ஒப்பந்தம். அதுவும் இன்று மாலை. அதாவது மெடோனா உதயாவுக்காக காத்திருந்த அதே நேரம் நடந்திருக்கிறது.

இதயம் இறுக்கிப்பிடிப்பது போல் ஒரு வலியும், ஏமாந்து போனது போல் கோபமும் வந்தது. ஆனால் அவளது தோழி அதை காட்ட நினைக்கவில்லை.

ரூபிணியின் மீது மெடோனாவுக்கு இருக்கும் கோபமெல்லாம் அவளுக்கு தெரியாது. அவள் காட்ட நினைத்த விசயம் பின்னால் வந்தது.

ஒப்பந்தம் முடிந்ததும் எடுத்துக் கொண்ட படம். அதில் உதயாவும் ரூபிணியும் ஒரே நிற உடையில் இருந்தனர். இருவரும் பார்க்க பொருத்தமான ஜோடியாக இருப்பதாக யாரோ சொல்ல, அது காட்டுத்தீயாக பரவி இருந்தது.

உதயாவின் பெயர் மற்றொரு பெண்ணோடு சேர்வதை நினைத்து கவலையில் தான் அந்த தோழி மெடோனாவை அணுகினாள்.

ஆனால் இது மெடோனாவுக்கு பெரிய விசயம் அல்ல. சூரியன் திசை மாற்றி உதித்தாலும் கூட உதயா ரூபிணியை பற்றி நினைக்க மாட்டான். ஆனால் இந்த ஒப்பந்தம்? அதுவும் மெடோனாவை மறந்து போனது?

இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்று நினைத்தவள் நாளை உதயாவின் வீட்டுக்குச் செல்வதாக முடிவு செய்தாள். நேரடியாக இதைப்பற்றிப்பேசினால் மட்டுமே ஒரு முடிவு கிடைக்கும்.

தொடரும்.

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. உதயாவுக்கு ரூபிணி ஏதாவது வைத்து இருப்பாள்