Loading

உயிர் – 9

ஆதவ்வை பார்த்து ஜெர்க்காகி திரும்பியவள் அகிலனை பார்க்கவும். அவனோ சோகமே உருவென சோக கீதம் வாசித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

“என்ன இது, இன்னைக்கு மைனர் மாம்ஸ் ரொம்ப அமைதியா இருக்காரே.. எதையாவது பார்த்து பயந்துட்டாரோ.. முகமே ஏதோ பயந்த போல தான் இருக்கு. இப்படியெல்லாம் அமைதியா இருக்குறவர் இவர் கிடையாதே” என்று எண்ணியவள் அவனிடம் மீண்டும் மீண்டும் ஏதேதோ பேச்சு கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

“ஆதவ் ஆர் யூ சீரியஸ்!” என்றாள் இன்னமுமே நம்ப முடியாத குரலில்.

“ஏன் அணுவை நான் லவ் பண்றேன்றதை உன்னால நம்ப முடியலையா?”.

“ஆமா”.

வெளிப்படையாகவே எந்த ஒரு பூசலும் இன்றி கூறிவிட்டாள்.

“பழசை எல்லாம் விட்டுடு. எனக்கு அவள ரொம்ப பிடிச்சிருக்கு. நிச்சயமா அவளுக்கு ஒரு நல்ல லைஃப் பார்ட்னரா நான் இருப்பேன். கடைசி வரைக்கும் அவள சந்தோஷமா வச்சு பாத்துப்பேன். முக்கியமா.. உங்க அப்பா போல இந்த ஜென்மத்துல அவள விட்டுட்டு வேற எந்த பொண்ணயும் நான் திரும்பி கூட பாக்க மாட்டேன். இதுவே அவள கல்யாணம் பண்ணிக்க போதுமான தகுதினு நான் நினைக்கிறேன்”.

அவனின் வார்த்தைகள் நெஞ்சுக்குள் நெருஞ்சி முல்லை போல் சுருக்கென்று தைத்தாலும், அவரின் சார்பாக வாதாட அவர் ஒன்றும் உத்தமன் கிடையாதே என்ற நிதர்சனமும் அவளின் நெற்றிப் பொட்டில் அடித்தது.

“எல்லாம் ஓகே ஆதவ்.. ஆனா, வீட்டுக்கு தெரிஞ்சா பிரச்சனை பெருசாகிடும். அத்த இதுக்கு நிச்சயமா ஒத்துக்க மாட்டாங்க” என்றாள் கலக்கமாக.

“உன் தங்கச்சிய கட்டிக்க போறது நான். அவளோட லைப் லாங் குப்பை கொட்ட போறதும் நான் தான். இதுல நான் தான் முடிவு பண்ணனும். அம்மாவுக்காக அம்மாவுக்கு பிடிச்ச பொண்ண எல்லாம் என்னால கட்டிக்க முடியாது. அது மட்டும் இல்லாம, மனசுல ஒருத்திய வச்சுக்கிட்டு இன்னொருத்திய கல்யாணம் பண்றதும் என்னை பொறுத்த வரைக்கும் துரோகம் தான். அதுக்கும் உன் அப்பா பண்ணதுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லைனு நான் நினைக்கிறேன்” என்று தெளிவாக பேசினான்.

“ஆனா அத்தை..” என்று அவன் எதையோ கூற வரும் முன்பே தன் கையை உயர்த்தி தடுத்தவன்.

“உன் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு எனக்கு தகுதி இல்லைனு நினைக்கிறியா?” என்று ஒரே கேள்வியில் அவளின் மொத்த எண்ணத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.

“ச்ச.. ச்ச.. நான் அப்படியெல்லாம் சொல்லல ஆதவ். சின்ன வயசுல இருந்து உன்னை பார்க்கிறேன். நீ ரொம்ப நல்லவன்னு தெரியும். ஆக்சுவலி, உன்ன மாதிரி ஒரு மாப்பிள்ளை என் தங்கச்சிக்கு கிடைக்க அவ ரொம்பவே லக்கி. எனக்கும் இதுல முழு சம்மதம்.. ரொம்ப சந்தோஷம். ஆனா, அவசரப்பட்டு அவள நீ கல்யாணம் பண்ணி கடைசி வரைக்கும் அதுவே அவள கஷ்டப்படுத்திடுமோனு தான் பயமா இருக்கு. ஏன்னா, அவளுக்கு இந்த வீட்டுல இருந்து வெளில போகணும்னு தான் அடிக்கடி சொல்லிட்டே இருப்பா. ஆனா, உன்ன கல்யாணம் பண்ணா, அவளே நினைச்சாலும் இந்த வீட்டை விட்டு, இந்த சொந்த பந்தத்தை விட்டு அவளால போக முடியாது. கடைசி வரைக்கும் இது தான அவளுடைய வாழ்க்கை..”.

“எனக்கு எல்லாமே புரியுது. எல்லாத்தையும் நான் சரி பண்றேன். கல்யாணம் பண்ண பிறகு அவள நான் பார்த்துக்கிறேன். அவள நினைச்சு நீ ஒன்னும் பயப்பட தேவையில்ல. அவளுக்கு கிடைக்க வேண்டிய உரிமையும் நிச்சயமா அவளுக்கு கிடைக்கும்!” என்று திடமாகவும், திட்டவட்டமாகவும் கூறினான்.

“ஆனா, வீட்ல இந்த விஷயம் தெரிஞ்சாலே பெரிய பிரச்சினையாகுமே.. அப்புறம் எப்படி..” என்று மீண்டும் அவள் தயங்கவும்.

தன் திட்டத்தை அவளிடம் அழகாக விவரித்தான் ஆதவ்.

“அப்போ எனக்கும் ஓகே தான்” என்றவளின் முகத்தில் கொஞ்சமே கொஞ்சம் தெளிவு எட்டிப் பார்த்தது.

“ஓகே, இப்போ உன் விஷயத்துக்கு வருவோமா” என்றதும் அவளின் புருவங்கள் முடிச்சிட.

“உனக்கும் எனக்கும் கல்யாணம்னு சொல்லிட்டு லாஸ்ட் மினிட்ல நான் அனுவை கல்யாணம் பண்ணிக்கிட்டா அத்தையுடைய நிலைமை என்ன ஆகிறது? அதை அவங்க தாங்குவாங்கன்னு நினைக்கிறியா?”.

தன் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு உண்மையிலேயே இதற்கு எப்படி பதில் கூறுவது என்று தெரியவில்லை.

“இந்த விஷயம் என்னை ரொம்பவே கன்ஃபியூஸ் பண்ணுது. என்னால எந்த ஒரு முடிவும் எடுக்க முடியல”.

“தென் டிசிஷன் நான் எடுக்கலாமா?”.

“வாட்?” என்றாள் விளங்காமல்.

“ஐ மீன், எப்படியும் கல்யாணம் பண்ணிக்கனும்னு முடிவு பண்ணிட்ட இல்ல”.

“ஆமா”.

“அப்போ உனக்கு ஏத்த போல நல்ல மாப்பிள்ளையை நான் பார்க்கிறேன். முக்கியமா உன் அப்பா மாதிரி இல்லாம உன்ன மட்டுமே கடைசி வரைக்கும், வாழ்க்கையோட கடைசி மூச்சு இருக்க வரைக்கும் காதலிக்கிற மாதிரி நல்லவனா நான் பார்த்து உன் முன்னாடி நிறுத்துனா, உனக்கு அவன கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தான” என்றான் தன் ஒற்றைப் புருவத்தை மேலுயர்த்தி.

இப்படி ஒரு கேள்வியை ஆதவ்விடமிருந்து அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒரு நிமிடம் பேச மறந்த மழலையாய் திருதிருத்தப்படி அமர்ந்திருந்தாள்.

“சொல்லு உனக்கு ஓகே தான.. எப்படியும் கல்யாணம் பண்றதுன்னு முடிவாகிடுச்சு. ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னாவே வச்சிடுவோம். அதுக்குள்ள உனக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளையையும் நான் பார்த்துடுவேன். என் மேல உனக்கு முழு நம்பிக்கை இருந்தா மட்டும் ஓகே சொல்லு”.

“நம்பிக்கை இல்லாம இல்ல ஆதவ். எனக்கு ஓகே தான்” என்றாள் பெருமூச்சை வெளியேற்றியபடி.

எப்படியும் இவன் கூறுவது போல் தன் அன்னைகாக வேணும் திருமணம் செய்தாக வேண்டும் என்று முடிவு செய்தது தானே. ஆதவ் கூறுவதும் சரி என்று பட ஒப்புக்கொண்டுவிட்டாள்.

இதே நேரம் அனுராதா அகிலனின் தோளை பிடித்து உலுக்கிய உலுக்கலில் சுயம் பெற்றான் அகிலன். ஏதோ தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல் அவன் திருதிருக்கவும்.

“சொல்லுங்க மாம்ஸ்.. சொல்லுங்க.. இதுக்கு முன்னாடி நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. சொல்லுங்க.. சொல்லுங்க.. அந்த கருப்பு பணத்தை எல்லாம் எங்க பதுக்கி வச்சிருக்கீங்க.. சொல்லுங்க.. சொல்லுங்க..” என்று பாட்ஷா பட மாடுலேஷனில் அவள் கூறவும், கடுப்பான அகிலன், “ம்ம்ச்ச்” என்றான் தன் பற்களை கடித்தபடி.

“இந்த கொடுமையை பாத்தீங்களா மாம்ஸ். அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறாங்களாம். அதனால இங்க வந்து ஃபியூச்சர் டிஸ்கஷன் பண்ணிட்டு இருக்காங்க. ஆனா, உங்களையும் என்னையும் பாத்தீங்களா.. சம்பந்தமே இல்லாம யாருக்கோ வந்த விருந்துன்ற மாதிரி இங்க வந்து ஈ அடிச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கோம்”.

“இத போய் அவங்க கிட்டயே சொல்ல வேண்டியது தான”.

“ஐயோ! அந்த பயர் இன்ஜின் கிட்டயா!” என்றாள் பதறியவாறு.

“பயர் இன்ஜினா?” என்று அவளை சந்தேகமாக பார்த்தவன், “ஏய், நீ அண்ணாவையா பயர் இன்ஜின்னு சொல்ற?”.

அவனின் சரியான கண்டுபிடிப்பில் திருட்டு விழி விழித்தாள் அனுராதா.

சரியாக ஆதவ்வும், ருக்மணியும் அப்பொழுது தான் அவ்விடம் வந்து சேர்ந்தனர்.

“என்ன பேசி முடிச்சாச்சா.. கிளம்பலாமா?” என்று ஆதவ் அகிலனை பார்த்து கேட்கவும்.

அகிலனின் புறம் சாய்ந்த அனுராதா அவனின் காதில் கிசுகிசுப்பாக, “பாத்திங்களா மாம்ஸ் உங்க அண்ணனுக்கு நக்கல்ஸ.. அவங்க ரெண்டு பேரும் பேசி முடிச்சுட்டு வந்து நம்ம அவங்கள கலாய்ச்சிட போறோம்னு முன்னெச்சரிக்கையா அவங்க நம்மள கலாய்க்கிறாங்களாமாம்”.

“ஏதாவது சொல்லணும்னா என்கிட்டயே நேரடியா சொல்லலாம்” என்ற ஆதவ் இப்பொழுது நேர்பார்வையாக அனுவை பார்க்கவும்.

அவன் தன்னிடம் நேரடியாக பேசியதில் அவளோ முதலில் திகைத்து, பிறகு ‘இல்லை’ என்பது போல் தலையசைத்துவிட்டு, தன் அக்காவின் அருகில் நெருங்கி நின்றவள், “கிளம்பலாமா?” என்றாள் அதே கிசுகிசுப்போடு.

அவளுக்கு தெரிந்து அன்று சண்டையிட்டதன் பிறகு, இன்று தான் அவன் அவளுடன் பேசுகிறான். அவன் சாதாரணமாக பேசினாலும், இவளுக்கு பேச முடியவில்லை. அப்படி ஒரு ஆழமான வடுவை இவளின் இதயத்திற்குள் ஏற்படுத்தி இருந்தான் ஆதவ்.

இன்று சட்டென்று அவன் இயல்பாக பேசிவிடவும், இவளுக்கு தான் பேச முடியாமல் எதுவோ தடுத்தது.

அவளின் வார்த்தை ஆதவ்வின் காதுகளையும் சென்றடைய, “ருக்கு இன்னைக்கு உனக்கு லீவ் தான?”.

“ஆமா ஆதவ்”.

“எதுல வந்தீங்க?”.

“பைக்ல தான்”.

“ஓகே, பைக் இங்கேயே இருக்கட்டும். கீயை கேஷ் கவுண்டர்ல குடுத்துட்டு போகலாம். என் டிரைவரை வந்து ஸ்கூட்டியை கொண்டு போய் வீட்டில் விட்டு விட சொல்லுறேன். நீங்க எங்களோட கார்ல வாங்க பக்கத்துல எங்கேயாவது போயிட்டு போகலாம்”.

“அக்கா அதெல்லாம் வேண்டாம்னு சொல்லு. இப்ப எதுக்கு அதெல்லாம்.. வேணும்னா நீங்க ரெண்டு பேரும் மட்டும் போயிட்டு வாங்க. நான் அகில் மாமா கூட வீட்டுக்கு கிளம்புறேன்” என்று மெதுவாக படபடத்தாள்.

“ஆதவ் உனக்காக தான் இந்த பிளானே சொல்றான். நான் போய் என்னடி பண்றது?” என்று உள்ளுக்குள் நொந்து போனவள், “ஓகே ஆதவ்” என்றாள் அவனை பார்த்து.

அதில் தன் அக்காவை அவள் முறைக்கவும்.

ஆதவ் எதுவும் கூறாமல் காரை கிளப்ப சென்று விட்டான்.

அகிலனும் அவனின் பின்னோடு சென்று விட.

“அக்கா நான் தான் வரலைன்னு சொன்னேன்ல” என்றாள் அனு சிணுங்களாக.

“எல்லாரும் ஒன்னா போகலாம்னு ஆதவ் கேட்கும் போது என்னால முடியாதுன்னு சொல்ல முடியல அனு. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ.. இதுவரைக்கும் உனக்கு ஆதவ்வை பிடிக்கலனாலும், இனி அவரை பிடிக்க முயற்சி பண்ணு. எப்படி பார்த்தாலும் இனி நாம எல்லாம் ஒன்னா தான டிராவல் பண்ண போறோம். ஐ மீன், ஒரே குடும்பமா!”.

அதுவும் வாஸ்தவம் தானே.. தன் அக்காவை அவர் மணந்து கொண்டால், எப்படியும் இருவரும் உறவு முறையில் இன்னுமே நெருங்கி விடுவோம். அவரே தன்னிடம் பேசும் பொழுது, தான் இப்படி முகத்தை திருப்பி செல்வது சரி வராது என்று எண்ணியவளும் அமைதியாக அவர்களுடன் காரில் ஏறிக் கொண்டாள்.

முதல் முறை அவனின் காரில் ஏறுகிறாள். ஏதோ மனதிற்குள் ஒரு வித நெருடலுடன் கூடிய சங்கடம் ஒரு புறம் இருக்கத்தான் செய்தது.

நினைத்ததும் மாற்றிக்கொள்ள மனம் ஒன்றும் உடை இல்லையே..

அவனால் உண்டான காயம் இப்பொழுது ஆழமான வடுவாய் இருக்கிறது தான். இல்லை என்று கூறிவிட முடியாது. அது மறைய இன்னும் சற்று காலம் பிடிக்கும்.

அதற்காக அதை அப்படியே விட்டு விட முடியாதே.. இனி பழகி தானே ஆக வேண்டும்.

இன்று இல்லா விட்டாலும், காலப்போக்கில் இந்த வடு மொத்தமாக அடியோடு மறையாவிட்டாலும், ‌கொஞ்சமேனும் மறையும் தானே..

தன் அக்காவிற்காக ஆதவ்வுடனான இந்த உறவை ஏற்க தன் மனதை அதற்கு தகுந்தாற்போல் மாற்றிக்கொள்ள முடிவு செய்தாள்.

ஆனால் பாவம், காலம் அந்த பந்தத்திற்குள் தன்னைத்தான் திணிக்க போகிறது என்பதை அப்பொழுது அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்