Loading

உயிர் – 8

அவனின் அகமகிழ்ச்சியை உணர்ந்தாலும்‌ அதை காட்டிக் கொள்ளாதவாறு‌ இருந்தான் ஆதவ் கிருஷ்ணா.

“என்ன.. என்ன விஷயம் அண்ணா? அவகிட்ட பேசி‌ எவ்வளவு நாள் ஆகுது” என்று எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவனின் குரல் தன் ஆனந்தத்தை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருந்தது.

“அது ஒன்னும் இல்ல எனக்கும் ருக்மணிக்கும் வீட்ல கல்யாணம் பேசி இருக்காங்க. அத பத்தி பேச தான் கூப்பிடுறானு நினைக்கிறேன்” என்றது தான் தாமதம் அகிலனின் முகம் ஏதோ காற்று போன பலூன் போல் தொங்கிவிட்டது.

“என்னண்ணா சொல்றீங்க?” என்றவனுக்கு குரலே எழவில்லை. முகம் மொத்தமாய் இருண்டு போய் விட்டது.

முன்பிருந்த அவனின் குதூகலமான குரலுக்கும், இப்பொழுது அவன் பேசும் பொழுது அவனின் வருத்தம் இழைந்தோடும் குரலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை கூட உணர்ந்து கொள்ள முடியாதவனா ஆதவ்.

மிக எளிமையாக கண்டு கொண்டான். அவனுக்குள் இழைந்தோடும் வருத்தத்தையும், ருக்மணியின் மேல் அவனுக்கு இருக்கும் காதலையும்.

ஆம் காதல் தான்..

யாருக்கும் தெரியாமல் அவளின் மேல் அவன் கொண்ட காதல்.

ரகசிய காதல்..

ஒரு தலையாய் அவளுக்கும் சேர்த்து இவன் சுமந்து கொண்டிருக்கும் ரகசிய காதல்..

“எனக்கும் நேத்து அம்மா சொல்லி தான் தெரியும். அத பத்தி பேச தான் ருக்மணி கூப்பிடுறானு நினைக்கிறேன். போய் பார்த்தா தெரிஞ்சிடும்” என்று இலகுவாக தன் தோள்களை குலுக்கி கூறியவன் இதழுக்குள் நிலைத்த புன்னகையோடு பயணத்தை மேற்கொண்டான்.

*****

“என்ன அக்காவை இன்னும் காணும்” என்றவாறு தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்தவள் அப்படியே நிமிர்ந்து பார்க்கவும். அவளின் முன்பு தரிசித்து இருந்தாள் அவளின் அக்கா ருக்மணி.

“என்னக்கா இவ்வளவு லேட்?” என்று சொல்லிக் கொண்டே அவளின் பின்னோடு ஏறிக்கொண்டாள் அனுராதா.

“சாரிடி கொஞ்சம் லேட் ஆயிடுச்சு”.

“போக்கா.. நீ லேட் ஆனதால என்ன‌ நடந்துச்சுன்னு தெரியுமா.. அந்த பயர் இன்ஜினை நேருக்கு நேர் ஃபேஸ் பண்ற மாதிரி ஆகிப்போச்சு”.

“யாரு.. ஆதவ் மாமாவை பத்தியா சொல்ற?”.

தன் இதழை சுழித்துக் கொண்டு, “ஆமா, அந்த மாமாமாமாமாவை தான் சொல்றேன்” என்றாள் இழுத்து ராகமாக.

அவளின் ராகத்தில் புன்னகைத்த ருக்மணி, “சரிடி பார்த்தா என்ன ஒரு ஹாய், ஹலோ சொல்ல வேண்டியது தான உன் மாமனுக்கு”.

“ஹலோ ஹலோ.. எனக்கு ஒன்னும் அவர் மாமாவா இருக்க தேவையில்லை. உனக்கு மட்டும் வேணும்னா மாமாவா அப்பாயின்ட் பண்ணிக்கோ. எனக்கு அகில் மாம்ஸ் மட்டும் போதும்” என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதற்கு பதில் புன்னகைத்தாளே தவிர வேறு எதுவும் கூறவில்லை ருக்மணி.

“சரி, என்ன இவ்வளவு காலையிலேயே அவசரமா வர சொல்லி இருக்க? அப்படி யாரை பார்க்க போறோம்?”.

“சொன்னா நீ என்னை திட்டுவ.. அப்புறம் எனக்கு ஒரு பெரிய கும்பிடா போட்டுட்டு வரவே முடியாதுன்னு கோவிச்சுக்கிட்டு போயிடுவ. அதனால சொல்ல முடியாது” என்று அவளை வெறுப்பேற்றினாள்.

“அக்கா.. அக்கா.. ப்ளீஸ்க்கா.. யாருன்னு சொல்லு. இப்படி சஸ்பென்ஸ் வெச்சா எனக்கு தலையே வெடிச்சிடும். அப்படி யார பாக்க போறோம்?”.

“யாரைனு சொன்ன பிறகும் நீ என்கூடவே வருவேன்னு சொல்லு நான் சொல்றேன்”.

“ஓகே ப்ராமிஸ். யாரா இருந்தாலும் சரி நான் வருவேன்” என்று உடனே ஒப்புக் கொண்டாள்.

“கண்டிப்பா?”

“100.. இல்ல, 200% கண்டிப்பா”.

“ஆதவ் மாமாவை தான் பார்க்க போறோம்”.

அவளின் வார்த்தையில் அதிர்ந்து விழித்தவள், “என்ன விளையாடுறியா.. ஆர் யூ சீரியஸ்?”.

“இதுல விளையாட என்னடி இருக்கு? மாமா கிட்ட ஒரு சின்ன பேச்சு வார்த்தை நடத்த வேண்டி இருக்கு அதான்”.

“என்ன சொல்ற.. என்ன பேச்சு வார்த்தை.. அதுவும் அவர்கிட்ட உனக்கு”.

“உன்ன பத்தி தான்”.

“என… என்னை பத்தியா?”.

“ஆமா, எதுக்காக அந்த பயர் இன்ஜின் சும்மா சும்மா உன்ன முறைக்கிறார்னு கேட்க தான் போறோம்” என்றாள் பற்களை கடித்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு.

இவள் இப்படி கூறியதும் அவள் முகம் போன போக்கை கண்ணாடியினோடு பார்த்தும் ருக்மணிக்கு சிரிப்பு பீரிட்டு கிளம்பியது. அதை அடக்க பெரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தாள்.

“ஐயோ! அக்கா ப்ளீஸ் நான் எங்கேயும் வரல. என்னை இப்படியே இறக்கி விட்டுடு. பொடி நடையா நடந்து வீடு போய் சேர்ந்துக்கிறேன். அந்த பயர் இன்ஜின் கிட்ட என்னால திரும்பவும் அவமானப்பட்டு நிற்க முடியாது”.

அவள் கூறியதை கேட்டு நகைத்தவள், “சும்மா சொன்னேன் டி. வேற ஒரு விஷயமா ஆதவ்கிட்ட பேச போறேன்”.

“அதுக்கு நீ மட்டும் போனா பத்தாதா.. நான் என்ன தக்காளி தொக்கா உனக்கு”.

“இதுவரைக்கும் என் தங்கச்சி உன்ன விட்டுட்டு நான் ஏதாவது செஞ்சு இருக்கேனா.. லைஃப்ல முக்கியமான விஷயத்தை பத்தி டிசைட் பண்ண போறேன். அந்த நிமிஷம் நீ என்கூட இருக்கணும்னு தோணுச்சு. அதான் உன்னையும் கூப்பிட்டு போறேன்”.

“அப்படி என்ன விஷயம்?”.

உண்மையில் அவளின் மனம் ஒரு நிலை இன்றி மிகவும் தலும்பலாக இருந்தது. அனுராதா உடன் இருந்தால் தனக்கு சற்று தைரியமாக இருக்கும் என்பதாலேயே அவளையும் அழைத்து செல்ல முடிவு செய்தாள்.

வீட்டில் நடந்த பேச்சு வார்த்தையை பற்றி இவளிடம் கூறினாள் ருக்மணி.

அவள் கூறியதை வாயை பிளந்து கொண்டு பார்த்த அனுராதாவினால் இன்னமும் நம்ப முடியவில்லை.

“அக்கா நீ நெஜமா தான் சொல்றியா? அந்த பயர் இன்ஜினையா நீ கல்யாணம் பண்ணிக்க போற?” என்றவளுக்கு சற்று வருத்தமும் மேலெழுந்தது.

எப்படியும் ஆதவ்வின் வீட்டிற்கு அனுராதா செல்ல மாட்டாள். ருக்மணி ஆதவ்வை திருமணம் முடித்து அங்கே போய்விட்டால் அவளை அங்கே சென்று காண முடியாதே என்ற வருத்தம் தான் அது.

“இன்னும் பிக்ஸ் பண்ணல. ஆதவ்வை மீட் பண்ணி பேசினா தான் தெரியும்”.

“கல்யாணமே வேண்டாம்னு சொன்ன”.

“அப்புறம் அம்மா இப்படி பேசும் பொழுது வேற என்ன செய்யுறது?” என்றவளின் நிலை அனுராதாவிற்கும் புரியாமல் இல்லை. அவளும் தன் தாய்க்காக தானே பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

“அதுக்கு வேற மாப்பிள்ளையே கிடைக்கலையா.. நீ ஏன் நம்ம அகில் மாம்ஸை கல்யாணம் பண்ணிக்க கூடாது?”.

“சும்மா இருடி”.

“நான் நிஜமா தான்க்கா சொல்றேன். கல்யாணம் பண்ணிக்க போறேன்னு முடிவான பிறகு அந்த பயர் இன்ஜினுக்கு அகில் மாம்ஸ் மச் பெட்டர்”.

பேசிக்கொண்டே ஆதவ் வரக் கூறியிருந்த காபி ஷாப்பையும் வந்தடைந்திருந்தனர்.

“சரி, நான் இங்கேயே நிற்கிறேன். நீ போய் பேசிட்டு வா” என்று உள்ளே வர மறுத்தவளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு உள்ளே சென்றாள் ருக்மணி‌.

அதற்குள் ஆதவ்வும், அகிலும் ஏற்கனவே ஒரு டேபிளில் அமர்ந்து இவர்களுக்காக காத்துக் கொண்டிருந்தனர்.

வழக்கமாக அகிலிடம் தென்படும் துறுதுறுப்பு இப்பொழுது துடைத்து எடுத்தார் போல் காணாமல் மறைந்திருந்தது.

அனுராதா தன் பார்வையை ஆதவ்விடமிருந்து எப்படி எல்லாம் தவிர்க்க முடியுமோ அப்படி எல்லாம் முயற்சித்து தவிர்த்துக் கொண்டு இருந்தாள்.

“ஹாய் ஆதவ் வந்து ரொம்ப நேரம் ஆகுதா?” என்றவாறு அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த ருக்மணி, அகிலனையும் பார்த்து சினேகமாக புன்னகைத்தாள்.

“இப்ப தான் கொஞ்ச நேரம்” என்றவனின் பார்வை இப்பொழுதும் அனுராதாவின் மீது தான் நிலைத்திருந்தது தன் சன் கிளாஸினூடு.

“பெரிய அப்பாட்டக்கர்.. கடைக்குள்ள கூட சன் கிளாஸை கழட்ட மாட்டார்” என்று உள்ளுக்குள் அவனை வறுத்தெடுத்தவாறு அமர்ந்திருந்தாள் அனுராதா.

“அகில் நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பர்சனலா பேசணும். கொஞ்சம் தள்ளி போய் உட்காருறியா.. அப்படியே அவளையும் கூப்பிட்டு போ” என்றதும் அனுராதாவிற்கு கடுப்பாகி போனது.

அவன் வெகு சாதாரணமாக தான் கூறியிருந்தான். ஆனால், அனுராதாவின் மூளைக்கு தான் அவன் தன்னை வேண்டுமென்றே துரத்துவதற்காக இப்படி கூறுவது போல் தோன்றியது.

கடுகடுத்த முகத்தோடு தன் அக்காவையும் முறைத்து விட்டு அகிலனுடன் அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.

இரண்டு, மூன்று டேபிள்கள் தள்ளி அமர்ந்திருந்த அகிலனின் பார்வை ருக்மணியை தான் அவ்வப்பொழுது தழுவி மீள.

இதையெல்லாம் கண்டு கொள்ளாத அனுராதாவோ தன் பாட்டிற்கு அவனிடம் ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்தாள்.

அதேபோல் ருக்மணியிடம் அங்கே பேசிக்கொண்டிருந்த ஆதவ்வின் விழிகளும் நொடிக்கு ஒருமுறை அனுராதாவை தான் தொட்டு ராகம் மீட்டிக் கொண்டிருந்தது.

“வீட்ல பேசினதெல்லாம் உனக்கும் தெரிஞ்சிருக்கும்ல ருக்மணி. இதைப்பத்தி நீ என்ன நினைக்கிற?” என்று சுத்தி வளைக்காமல் நேரடியாக கேட்டு விட்டான்.

“எனக்கு இதுல விருப்பம் இல்லை ஆதவ்” என்றவளை சற்று அதிர்ச்சி கலந்த பார்வை தான் பார்த்தான் ஆதவ் கிருஷ்ணா.

தன் மனதில் அனுராதாவின் மேல் இருக்கும் காதலை இவளிடம் விவரித்து, இந்த திருமண பேச்சிற்கு தடா போட தான் அவன் இங்கே அவள் அழைத்ததும் வந்ததே.

ஆனால், அவனுக்கே அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது ருக்மணியின் பேச்சு.

ஆம், இந்த கலியுக ராதையின் மீது இந்த கலியுக கிருஷ்ணன் கொண்ட காதலை முழு மனதோடு ஒப்புக் கொள்ளவும். அதை அடைய எந்த எல்லைக்கும் செல்ல தான் தயாராக இருப்பதையும் வெளிப்படுத்தவே அவன் இங்கே வந்திருந்தான்.

எங்கே.. எந்த இடத்தில்.. எந்த புள்ளியில் அவள் மீது அவனுக்கு காதல் தோன்றியது என்றெல்லாம் அவனுக்கே தெரியாத விந்தை தான்.

இன்றளவிலும் அவனும் எத்தனையோ முறை சிந்தித்தும், அவனுக்கு விடை தெரியாத வினாத்தாள் தான் அனுராதாவின் அத்தியாயம் அவனின் வாழ்வில்..

ஆரம்பத்தில் வெறுப்போடு அவனின் மனதிற்குள் குடியேறியவள் தான். இப்பொழுது அவனின் மனதை முழுதாய் ஆக்கிரமித்து சிம்மாசனமிட்டு தனக்குள் அவனை மொத்தமாக வளைத்து தன் ஆட்சியை அவளில் நிலைநாட்டி கொண்டிருக்கிறாள் அவளே அறியாமல்.

யாருக்கு யார் மீது காதல் எந்த புள்ளியில் தோன்றும் என்பது யாரும் அறியாத விந்தை தானே..

அப்படித்தான் ஏதோ ஒரு புள்ளியில் இந்த ராதையின் மீது காதல் வயப்பட்டான் ஆதவ் கிருஷ்ணன்!

“சோ நெக்ஸ்ட்?” என்றான் தன் புருவத்தை மேலே உயர்த்தி.

தங்கள் வீட்டில் நடந்த நிகழ்வை அவனிடம் மொத்தமாக ஒப்புவித்தாள் ருக்மணி.

“சோ, உனக்கு மேரேஜ் லைப்ல இன்ட்ரஸ்ட் இல்ல. அதனால இந்த கல்யாணம் வேண்டாம்னு நினைக்கிற ரைட்” என்றதும் அவளின் தலை மேலும் கீழுமாக ஆடியது.

“வெல், என்னுடைய மனசுல என்ன இருக்குன்னு நானும் வெளிப்படையா சொல்லிடலாம்னு நினைக்கேன். ஐ லவ் அனுராதா” என்றவனை ருக்மணி பார்த்த பார்வை என்னவென்று அவனாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை.

அவளின் பார்வையில் சற்று சங்கடமாக, “வாட்?” என்றான்.

“நீ என்ன சொன்னன்னு எனக்கு சரியா புரியல” என்றாள் புரியாதது போல்‌.

அவளுக்கு நன்கு விளங்கியது என்பதை இவனும் நன்கு அறிவான். ஆனாலும், மீண்டும் தன் வாயால் ஒருமுறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளவே அவள் கேட்கிறாள் என்பதும் புரிய.

அனைத்தும் தெரிந்தே மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொள்ள துணிந்தான்.

“எஸ். எனக்கு உன் தங்கச்சி அனுராதாவை ரொம்ப பிடிச்சிருக்கு. எப்போ எப்படின்னு எல்லாம் தெரியல. ஆனா, எனக்கே தெரியாம நான் அவளை காதலிக்க ஆரம்பிச்சுட்டேன். வீட்ல உனக்கும் எனக்கும் கல்யாணம் பேசுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட நினைச்சு பாக்கல. என் மனசு முழுக்க அவ தான் இருக்கா.‌ அவள கல்யாணம் பண்ணி அவளோட சந்தோஷமா வாழனும்னு ஆசைப்படுறேன்” என்று கூறிக்கொண்டே தன் சன்கிலாஸை கழட்டியவனின் விழிகள் அவளை தான் தொட்டு மீண்டது.

அப்பொழுது எதேர்ச்சையாக அவளும் அவர்கள் அமர்ந்திருந்த டேபிளில் இருந்து இவர்களின் புறம் திரும்ப. இருவரின் பார்வையும் ஒரு நொடி உரசிக்கொள்ள.

“ஐயோ பயர் இன்ஜின்!” என்று வெளிப்படையாகவே சின்ன குரலில் முணுமுணுத்தவாறு அவள் பதறி அடித்து திரும்பி கொண்டாள்.

அதில், இவனின் இதழிலும் குறும்பு புன்னகை கூத்தாடியது.

*****

கதையை படித்து உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்