Loading

உயிர் – 7

“என்னங்க இவன் இப்படி சொல்றான்?” என்ற உமாவிற்கு மகிழ்ச்சியில் ஏதேதோ எண்ணங்கள். ‘ஒருவேளை இவர்கள் இருவரும் ஏற்கனவே காதலிக்கிறார்களோ’ என்றும் கூட அவரின் எண்ண குதிரை பல மலைகளை கற்பனையிலேயே கடந்தது.

செல்லும் தன் மகனை புருவம் சுருக்கி பார்த்த சத்யராஜிற்கும் ஒன்றும் அவனின் வார்த்தையை வைத்து சரி வர விளங்கவில்லை. ஆனாலும், தன் மகனின் மேல் மலையளவு நம்பிக்கை மண்டி கிடந்தது.

“ஒருவேள அவங்க ரெண்டு பேரும் காதலிக்கிறாங்களோ?” என்ற உமாவின் கேள்விக்கு அவருக்குள்ளும் ‘இருக்குமோ’ என்ற பதில் தான் தோன்றியது.

ஆனாலும், நாமாக முடிவு செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு, “தெரியலையே.. அப்படி இருந்தாலும் சந்தோஷம் தான். சாப்பாடு எடுத்து வை நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என்று விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார்.

ஆனந்தத்தில் உமாவிற்கு தான் தலைகால் புரியவில்லை. விடியலை எண்ணி ஆவலோடு காத்திருக்க துவங்கி விட்டார்.

அதிலும், தன் மகன் அவர்கள் நாளை சம்மதித்து விடுவார்கள் என்று கூறிய வாக்கியத்தை வைத்து அவர்கள் காதலிக்கிறார்கள் என்று முடிவே செய்து விட்டார்.

மறுநாள் சனிக்கிழமை ருக்மணிக்கு வேலை விடுமுறை. அனுவிற்கும் கல்லூரி விடுமுறை என்பதால் அவளையும் அழைத்து செல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை.

ஆனால் நேற்று இரவு ஆதவ்விற்கு குறுஞ்செய்தி அனுப்பி முடித்ததுமே, அனுவிற்கும் குறுஞ்செய்தியை தட்டி விட்டு விட்டாள்.

அவளையும் தயாராக இருக்கும்படி வெளியே செல்ல வேண்டும் என்று மட்டுமே கூறியிருந்தாள். அதன் படி அனுவும் தயாராகி தங்கள் வீட்டின் வாயிலில் வழக்கம் போல் வந்து காத்துக் கொண்டு நின்று இருந்தாள்.

அவள் தன் அக்காவின் வரவுக்காக காத்துக் கொண்டு நிற்கவும். அவள் எதிர்பாராத வண்ணம் அவளை உரசுவது போல் வந்து நின்றது அந்த கருப்பு நிற கார்.

அதை சற்றும் எதிர்பாராதவள் சட்டென்று இரண்டு அடி பின் நோக்கி சென்றவாறு தன் நெஞ்சின் மீது கையை வைத்து கொண்டு படபடத்து போய் நின்று விட்டாள்.

காருக்குள் இருப்பது யார் என்பது இவளுக்கும் தெரியுமே. படபடப்போடு கூடிய கோபமும் பெருக்கெடுக்க. எதுவும் கூற முடியாமல் தன் பற்களை கடித்தவாறு முறைத்து கொண்டு அவள் நின்ற தோரணையை காருக்குள் அமர்ந்த வாக்கில் பார்த்தவனின் கண்களிலோ குறும்பு புன்னகையை பூக்க செய்தது.

தன் குரலை செறுமியவாறு முகத்தில் எந்த ஒரு உணர்வையும் காட்டாமல் அவன் அவள் பக்க கண்ணாடியை டிரைவர் இருக்கையில் அமர்ந்த வாக்கிலேயே திறக்கவும்.

அவன் தன்னை இவ்வளவு நேரம் காருக்குள் இருந்த வாக்கிலேயே பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் என்பதை அறியாமல் அவனை முறைத்துக் கொண்டு இருந்தவளின் விழிகள் அவனின் திடீர் தரிசனத்தில் தானாக தரையை நோக்கியது.

சூரியனை காணாத சூரியகாந்தி பூவாய் அவளின் தலை தானாக கீழ் நோக்கி பயணிக்க.

அதற்கு காரணம் அவன் மேல் அவள் கொண்டுள்ள பயம் என்று மட்டும் தவறாக கூறி விட முடியாது.

அவனின் மேல் ஒரு வித பிடித்தமின்மை என்றும் கூறலாம்.

அவனின் மேல் இருக்கும் வெறுப்பு என்றும் கூறலாம்.

அவனை காண கூட இவளுக்கு விருப்பமில்லை என்றும் கூறலாம்.

ஆம், விருப்பம் இல்லை தான்.

அவன் மீது தீராத வெறுப்பு தான். ஆனால், அது உருவானது ஒன்றும் இன்று நேற்று அல்ல. சிறு வயது முதல் அவனின் பிம்பம் இப்படித்தான் என அவளின் ஆழ்மனதில் நன்கு பச்சை குத்தி விட்டது போல் பதிய வைத்து விட்டான் ஆதவ் கிருஷ்ணன்.

சிறு வயது முதலே அவளைக் கண்டாலே அவன் காட்டும் வெறுப்பு, கோபம் என ஆரம்ப கட்டத்தில் அவனை கண்டாலே அஞ்சி அவன் இருக்கும் திசையை விட்டு தானாக அவள் ஒதுங்கும்படி செய்தவன். அன்று தான் அவளை உச்சகட்ட வெறுப்பில் ஆழ்த்தியிருந்தான்.

அன்று ஆதவ் கிருஷ்ணனின் 15ஆவது பிறந்தநாள். அவர்களின் இல்லத்தில் கோலாகலமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் வெகு விமர்சையாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கோமதியையும், அனுராதாவையும் தவிர்த்து.

கோமதியும் அவர்களின் எண்ணம் புரிந்து அங்கே செல்லாமல் நின்று விட்டார்.

வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அனுராதாவை நோக்கி சென்ற ருக்மணி, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க. எல்லாரும் அங்க கேக் கட் பண்றதுக்கு போயிட்டாங்க. நாமளும் போகலாம் இன்னைக்கு ஆதவ் மாமாவுடைய பர்த்டே” என்றதும்.

அவனின் மேலிருக்கும் பயத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு துள்ளி குதித்து எழுந்தாள் அனுராதா.

“அக்கா கேக் கட்டிங்கா?” என்றாள் தன் விழிகளை விரித்து.

இதுவரை இவர்களுக்கு என எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்காத குடும்பத்தினர். இவளின் பிறந்தநாளை கூட கேக் வெட்டி எல்லாம் கொண்டாடியது கிடையாது.

அவளுக்கு விவரம் தெரிந்து அவள் வெட்டியது எல்லாம் அவளின் மனம் ஏங்கி விடக் கூடாது என்று அவளின் தாய் கோமதி செய்து கொடுக்கும் கேசரி கேக்கை தான்.

“ஆமா டி. ஆதவ் மாமா வர சொல்லி எனக்கு போன் பண்ணாங்க. வா சீக்கிரம் போகலாம்” என்று சற்றும் குறையாத குதூகலத்தோடு அக்காவும், தங்கையும் கைகளை கோர்த்துக்கொண்டு உமாவின் வீட்டை சென்றடைந்தனர்.

வாசலிலேயே ருக்மணி அனுராதா உடன் வரும் காட்சியை கண்டு கோபமாக வாசலுக்கு விரைந்த ஆதவ், “ருக்மணி எதுக்காக நீ இவள இங்க அழைச்சிட்டு வந்த?” என்றான் கோபம் கொப்பளிக்க.

“நீங்க தான மாமா இன்னைக்கு பர்த்டேக்கு கேக் கட்டிங் இருக்குன்னு சொன்னீங்க. அதான் அனுவையும் அழைச்சிட்டு வந்தேன்” என்ற ருக்மணியின் வார்த்தை அவனுக்கு மேலும் கோபத்தை கொடுக்க.

“அதுக்காக.. உன்ன தானே வர சொன்னேன். இவள யாரு உன்ன இங்க அழைச்சிட்டு வர சொன்னது. இவள கண்டாலே எங்க யாருக்கும் பிடிக்காது. அது உனக்கும் தெரியுமில்ல” என்று ருக்மணியிடம் காய்ந்தவன் அங்கே இவனின் வார்த்தையில் அழுகையோடு பயந்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்த அனுராதாவிடம், “ஏய், அவ கூப்பிட்டா நீ அப்படியே வந்துடுவியா? உன்ன இங்க வர சொல்லி நாங்க யாராவது கூப்பிட்டோமா? உனக்கெல்லாம் எங்க வீட்டு படி ஏற கூட தகுதி கிடையாது. ருக்மணி மட்டும் தான் எங்க மாமா பொண்ணு. அவளுக்கு மட்டும் தான் இங்க வரவும், இருக்கவும் உரிமை இருக்கு. உன்ன மாதிரி ஆளுக்கெல்லாம் எங்க வீட்டு வாசப்படிய மிதிக்க கூட எந்த உரிமையும் கிடையாது. மரியாதையா இங்கிருந்து போயிடு” என்றவாறு அவளின் தோள்களை பற்றி கீழே தள்ளி விட்டான்.

கீழே விழுந்த அனுராதாவின் கை முட்டியில் சிராய்ப்பு ஏற்பட. வலியில் அவளின் அழுகை மேலும் அதிகரித்தது.

“ஆதவ் என்ன பண்ற நீ? அவ என்னோட தங்கச்சி” என்றவாறு ஓடி சென்று அனுராதாவை தூக்கினாள் ருக்மணி.

“ருக்மணி உனக்கு இவங்கள பத்தி தெரியாது. இவங்க எல்லாம் ரொம்ப பேட். இவங்களோட சேரக்கூடாதுன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க. நீயும் இனி இவளோட பேசாத. நாம எல்லாம் ஒன்னா இருக்கலாம்”.

அவன் கூறுவதன் அர்த்தம் புரியாவிட்டாலும், அவன் ‘பேட்’ என்று கூறிய வார்த்தை அனுராதாவிற்கும் நன்கு விளங்கியது. அதற்கு மேல் அங்கே நிற்காமல் அழுகையினோடு தங்களின் வீட்டை நோக்கி ஓட்டம் பிடித்தாள்.

“என்ன பேசுற ஆதவ் அவ குட் கேர்ள் தான். அவள பத்தி எனக்கு தெரியும். நீ தான் ரொம்ப பேட். உன் பர்த்டே பார்ட்டிக்கு வந்தவள இப்படி ஹர்ட் பண்ணிட்ட. பாவம் அனு, அனு வராத பங்ஷனுக்கு இனி நானும் வரமாட்டேன். அனு இந்த வீட்டு வாசப்படியை மிதிக்க கூடாதுன்னா, இனி நானும் மிதிக்க மாட்டேன். என் தங்கச்சியை வரக்கூடாதுன்னு சொன்ன வீட்டுக்கு நானும் இனி வரமாட்டேன்” என்று கோபமாக ஆதவ்விடம் சண்டையிட்டு விட்டு அனுவின் பின்னோடே சென்று விட்டாள்.

அன்று அவள் விவரம் அறியாத வயதில் கூறியது, இன்று வரையிலும் நீடிக்கிறது.

ஆம், இன்று வரையிலும் அனுராதாவும், ருக்மணியும் ஆதவ் கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்றது கிடையாது.

அதன் பிறகு விவரம் அறிந்ததும் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் தடைப்பட்டு போனாலும், எந்த ஒரு விசேஷத்திற்காகவும் அல்லது வேறு எந்த ஒரு நல்ல நாள் என்றாலும் கூட ருக்மணி அவர்களின் வீட்டிற்கு சென்றது கிடையாது.

அன்றைய நாளின் நிகழ்வு இன்றும் அனுராதாவின் மனதிற்குள் நிழலாட. முகம் இறுக அப்படியே தலை நிமிராமல் நின்று இருந்தாள்.

“ஓய் பாத்ரூம் சிங்கர்.. என்ன தலையை தொங்க போட்டுட்டு வீட்டு வாசல்ல நிக்குற?” என்ற குரலில் தன் பக்கவாட்டாக திரும்பி பார்த்தவளை பளிச்சென்ற புன்னகையோடு எதிர் நோக்கினான் அகிலன்.

“ஒன்னும் இல்ல மைன..” என்று ஆரம்பித்தவளின் வார்த்தை பாதையில் துண்டித்து, “மாம்ஸ்.. அக்கா வரேன்னு சொன்னா.. அதான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றவள் மறந்தும் ஆதவ்வின் காரின் புறம் திரும்பவே இல்லை.

ஆனால், அவனின் விழிகள் இவளிலேயே தான் நிலைத்திருந்தது. அவன் தன் கண்களில் கண்ணாடி அணிந்திருந்ததால் அவன் அகிலனை காண்கிறானா அல்லது அனுவை காண்கிறானா என்பது யாருக்கும் தெளிவாக தெரிந்திருக்காது.

“ஓகே கொஞ்சம் தள்ளி நில்லு. அண்ணா ரொம்ப ஸ்பீடு மா.. காரை உன் மேல விட்டு ஏத்துனாலும் ஏத்திடுவாரு” என்று அவளுக்கு மட்டும் கேட்குமாறு ரகசிய குரலில் கிசுகிசுத்து விட்டு காருக்குள் ஏறிக் கொண்டான்.

“அதான் தெரியுமே.. நான் கொஞ்சம் அசந்தா நிஜமாவே தரையில் என்னை படுக்க வச்சு மேல ஏத்துற ஆளு தான்” என்ற முணுமுணுப்போடு அவள் நிற்கவும், கார் கிளம்பி விட்டது.

“அது என்னடா பாத்ரூம் சிங்கர்?” என்றான் ஆதவ் காரின் ஸ்டியரிங்கை லாவகமாக வளைந்து வளைத்து ஓட்டிக்கொண்டே.

“ஓ.. அதுவாண்ணா.. மேடம் மனசுல பெரிய பி சுசிலானு நெனப்பு.. தனியா ஏதாவது வேலை பார்க்கும் போது பாட்டு பாடிக்கிட்டே தான் வேலை பார்ப்பாங்க” என்றான் புன்னகையோடு.

“ஓ.. ஐ சி”.

“ஆமாண்ணா.. நானே 2, 3 டைம்ஸ் கேட்டு அவளை நல்லா கிண்டல் பண்ணி இருக்கேன். பட், நாட் பேட். நல்லா தான் பாடுவா.. ஆனாலும், அதை நாம ஒதுக்க கூடாது பாருங்க. அதனால தான் அவளுக்கு இந்த பெட் நேம்”.

அதற்கு மேல் அவளைப் பற்றிய எந்த பேச்சையும் வளர்க்காமல் வாகனம் ஓட்டுவதில் கவனம் ஆனான் ஆதவ்.

“என்னண்ணா எங்கேயோ வெளியில் போகணும்னு காலையிலேயே வர சொல்லி இருக்கிங்க?”

“ம்ம்.. ஒரு‌ சின்ன வேலை இருக்கு”.

“அப்படி என்ன வேலை?”.

“ருக்மணியை பார்க்க போறோம்” என்று அவன் சாதாரணமாக தான் கூறினான்.

“அப்படியா!” என்று ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு கேட்ட அகிலனின் குரலே ஆதவ்விற்கு எதையோ உணர்த்தியது.

*****

எத்தனை பேர் என் கதையை படிக்கிறிங்கனு பார்ப்போமா..

கதையை படிப்பவர்கள் உங்க கருத்தையும் சொல்லுங்க டியர்ஸ். எத்தனை பேர் கதையை படிக்கிறிங்கனு நானும் தெரிஞ்சிப்பேன் 😍.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்