
உயிர் – 6
தன் மகள் தன்னுடைய திருமண வாழ்க்கையை பார்த்து திருமண பந்தத்தின் மீதே வெறுப்பு கொண்டுள்ளேன் என்று கூறியதை கேட்ட விசித்ராவின் தாய் உள்ளம் ஊமையாய் கதறி துடித்தது.
தன் மகளின் வாழ்க்கை மீதான வெறுப்பிற்கு தானே முன்னுதாரணம் ஆகிப் போய் விட்டோமே என்று எண்ணுகையிலேயே அவருக்கு நெஞ்சுக்குள் எதுவோ அடைப்பது போன்ற உணர்வு.
“எல்லா ஆம்பளைங்களும் உன் அப்பா மாதிரி கிடையாது ருக்குமா. அதை நீ முதல்ல புரிஞ்சிக்கணும். அதிலும், ஆதவ் ரொம்ப ரொம்ப நல்ல பையன். சின்ன வயசுல இருந்து நம்ம கண்ணு முன்னாடியே வளர்ந்தவன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. உன் அப்பா மாதிரி பொய் சொல்ற புத்தியும் கிடையாது. ரொம்ப ஒழுக்கமானவன்.. அவனை பத்தி எல்லாம் தெரிஞ்சதுனால தானடா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கிறேன். அம்மாவுக்காக ஒத்துக்க கூடாதா” என்னும் பொழுதே அவரின் உடல் தளர்ந்து நா தழுதழுத்தது.
கோபத்தில் இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் ருக்மணி இல்லை.
“போங்கம்மா எனக்கு எந்த ஆம்பளைங்க மேலயும் நம்பிக்கை கிடையாது. அதில் ஆதவ் மட்டும் ஒன்னும் விதிவிலக்கு கிடையாது. வெளியில் இருந்து பார்க்க எல்லாமே நல்லதாக தான் தெரியும். கூட இருந்து வாழும் பொழுது தான் நிதர்சனம் புரியும். ஆதவ் மட்டும் இல்ல, நீங்க வேற யாரை மாப்பிள்ளையா பார்த்தாலும் நான் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன். கடைசி வரைக்கும் உங்களுக்கு மகளா.. உங்களுக்கு மட்டும் மகளா இருக்க தான் எனக்கு விருப்பம்” என்று அழுத்தமாக கூறினாள்.
கொஞ்சம் கொஞ்சமாக அதீத உணர்ச்சி பெருக்கில் விசித்ராவிற்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, மூச்சு காற்றுக்கு சிரமப்படுவது போல் தோன்றியது.
அதையெல்லாம் பொருட்படுத்தாதவர், “எத்தன காலத்துக்கு தான் இதையே சொல்லிக்கிட்டு இருக்கலாம்னு நினைக்கிற. இப்பவே 23 வயசு ஆகுது. இன்னும் எத்தன காலத்துக்கு இதையே சொல்லி கல்யாணத்தை தள்ளிப் போடலாம்னு இருக்க. அம்மா சொல்றத கொஞ்சம் கேளுடா.. ஆதவ்வை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லு. அவன் உன்ன சந்தோஷமா வச்சு பாத்துப்பான்” என்று திணறியவாறு பேசி முடித்தார்.
“அம்மா ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதீங்க. ஆதவ் நல்லவன் தான். ஆனாலும், எனக்கு யாரையும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல அவ்வளவு தான்!” என்று முடித்துக் கொண்டாள்.
உணர்ச்சி பெருக்கில் ரத்த கொதிப்பு தாறுமாறாக ஏற.. மூச்சு திணறல் ஏற்பட்டுவிட்டது விசித்ராவிற்கு. அப்படியே சோபாவின் பின்னால் தலை சாய்த்தவர், மூச்சு காற்றுக்கு சிரமப்பட்டுக் கொண்டே தன் நெஞ்சின் மீது கையை வைத்து நீவி விடவும்.
அவரின் நிலையை உணர்ந்த ருக்மணி, “அம்மா!” என்ற கதறலோடு அவர் அருகில் அமர்ந்தாள்.
“அம்மா.. அம்மா என்ன ஆச்சு..?” என்று கண்ணீரோடு அவள் கதறவும்.
தன் வாய்கருகில் கையை வைத்து அவர் ஏதோ சைகை காண்பித்தார்.
அவர் கூற வருவதை புரிந்து கொண்ட ருக்குமணி ஒடிச்சென்று அவருடைய இன்ஹேலரை தூக்கிக் கொண்டு வந்து அவரின் வாய் அருகில் வைத்து அவரின் மூச்சு திணறலை சீர் செய்ய முயற்சித்தாள்.
சில வினாடிகளின் போராட்டத்திற்கு பிறகு அவர் மூச்சு சீராகவும் தான் ருக்மணிக்கு மூச்சே வெளிவந்தது.
“கொஞ்ச நேரத்துல என்னை பயமுறுத்திட்டிங்கம்மா” என்றவளின் குரலே அத்தனை நடுக்கத்தோடு வெளிவந்தது.
தன் மகளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவருக்கு அழுகையும் பீறிட்டு கிளம்ப, “இதுக்காக தான்டா சொல்றேன். உன் அப்பா எனக்கு துரோகம் பண்ண பிறகு உனக்காக மட்டும் தான் நான் இந்த உயிரை கையில புடிச்சுக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன். அவர் பண்ண துரோகத்துக்கு எனக்கு பரிசா கிடைச்சது இதோ.. இது தான்” என்றவர் தன் கையில் இருக்கும் இன்ஹேலரை அவளிடம் காண்பித்தார்.
ஆம், புண்ணியகோடியின் துரோகத்திற்கு பிறகு தான் அதை பற்றியே சிந்தித்து சிந்தித்து விசித்ராவின் உடல்நலம் சீர்கெட்டு போனது.
“இப்போ ஆன மாதிரி எனக்கு மறுபடியும் எப்போவாவது ஆயிட்டா.. நான் உன்னை விட்டு போயிட்டா.. நீ தனியா என்னடா பண்ணுவ.. உன்ன விட்டுட்டு போனாலும் என் மனசு நிம்மதியாக இருக்காது. செத்தாலும் உன்ன நினைச்சு நான் கவலைப்பட்டுக்கிட்டு தான் இருப்பேன். அதுவே உனக்கு கல்யாணம் பண்ணி நீ நல்லா வாழுறதை பார்த்தா நான் நிம்மதியா கண்ணை மூடிடுவேன். எனக்காகவாவது நீ கல்யாணம் பண்ணிக்கலாம்ல” என்று அவளிடம் பேசிக் கொண்டே சட்டென்று அவளின் கரத்தை பற்றி தன் தலையின் மீது வைத்தவர், “என் மேல சத்தியமா நீ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லு” என்றார் இறைஞ்சலாய்.
“அம்மா!” என்ற ருக்மணியின் குரல் பரிதவிப்போடு வெளியேற.
“உன் அப்பா பண்ண தப்பு எல்லாருக்கும் தெரியும். உனக்கு எப்படி ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் தர போறேனோன்னு எத்தனை நாள் நான் கவலை பட்டிருக்கேன தெரியுமா.. இப்போ உன் அத்தையே விருப்பப்பட்டு உன்னை பொண்ணு கேக்குறாங்க. எனக்கு என்னவோ சரின்னு தான் தோணுது. அம்மா மேல உனக்கு உண்மையிலேயே பாசம் இருக்குல்ல.. அப்போ எனக்காக சரின்னு சொல்லு. உன் வாழ்க்கை சந்தோஷமா அமையும்டா” என்றார் கண்ணீர் போங்க.
வார்த்தைகள் அற்று வெறுமையான முகத்தோடு அவருக்கு சம்மதமாக தலையசைத்தவள், அவரை அவரின் அறையில் படுக்க செய்துவிட்டு தன் அறைக்கு சென்றாள்.
சற்று நேரத்தில் என்னென்னவோ நிகழ்ந்துவிட்டது. அதிலிருந்து வெளிவரவே அவளுக்கு சில நேரம் பிடித்து விட்டது.
மெதுவாக குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அவள் வெளியே வரவும். அவளின் செல்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஓசையை எழுப்பியது.
துண்டினால் தன் முகத்தை துடைத்துக் கொண்டே ஒற்றை கையால் தன் செல்பேசியை தூக்கி பார்த்தாள்.
‘ஆதவ் கிருஷ்ணா’ என்ற பெயர் தான் மின்னியது.
தன் புருவம் சுருக்க அதை பார்த்தவள் அதனை திறந்து பார்க்கவும், ‘ஹாப்பி பர்த்டே’ என்ற எழுத்துக்களுடன் ஒரு கேக் பொம்மையும் வீற்றிருந்தது.
அவனின் குறுஞ்செய்தியை கண்டவளின் இதழ்கள் மெல்லிய புன்னகையை உதிர்த்தாலும், இந்த திருமண விஷயத்தைப் பற்றி அவனுக்கு தெரியுமா என்ற சந்தேகமும் எழுந்தது. தன் மனதில் இருப்பதையும் அவனிடம் விளக்கி கூற வேண்டும்.
அதற்காக அவனை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தவளாக, “தேங்க்யூ ஆதவ் மீட் பண்ணனுமே” என்று பதிலுக்கு தட்டிவிட்டிருந்தாள்.
“ஷ்யோர்.. நாளைக்கு ஷோரூம் வரியா?”.
“இல்ல வேண்டாம். ஷோரூம்ல மாமா இருப்பாங்க. உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்”.
அவளின் குறுஞ்செய்தியை படித்தவனின் புருவங்கள் முடிச்சிட, “ஓகே” என்றுவிட்டு ஒரு கஃபேயின் பெயரையும் சேர்த்து அனுப்பி அங்கே சந்திக்கலாம் என்று தானும் ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டு இருந்தான்.
அதை பார்த்தவள் மனதில் ஒரு முடிவுடன் மற்ற வேலைகளை பார்க்க சென்று விட்டாள்.
தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அதை லேசாக சுழற்றியவனின் கண்கள் ருக்மணியின் குறுஞ்செய்தியில் பதிந்திருந்தது.
என்ன விஷயமாக இருக்கும் என்று அவனின் மூளை சிந்தித்தாலும், அதற்கு மேல் அதை பற்றி சிந்திக்க விடாமல் அடுத்தடுத்த வேலைகள் அவனை தனக்குள் சுருட்டிக் கொண்டது.
*****
“ம்ம் சொல்லுங்கமா.. எப்படி இருக்கிங்க?” என்று உமா தன் உற்சாக குரலில் வினவவும்.
“எனக்கு என்னம்மா நான் நல்லா இருக்கேன். விசித்ரா சொன்னா ஆதவ்க்கு ருக்மணியை கல்யாணம் பேசலாம்னு நீ கேட்டியாமே”.
“ஆமாமா, அண்ணி சம்மதம் சொன்ன பிறகு எல்லார்கிட்டயும் சொல்லிக்கலாம்னு நினைச்சேன். அதுக்குள்ள அண்ணியே உங்க கிட்ட சொல்லிட்டாங்களா”.
“ஆமாமா, இன்னைக்கு எதேர்ச்சையா விசித்ராவுக்கு பேசலாம்னு போன் பண்ணேன். அப்போ தான் இந்த விஷயத்தை சொன்னா”.
“அப்படியா.. அண்ணி என்னம்மா சொன்னாங்க. இன்னும் அவங்க எங்களுக்கு எந்த பதிலும் சொல்லல”.
“என்கிட்டயும் அத பத்தி எதுவும் சொல்லலமா. இந்த போல நீ கேட்டிருக்கன்னு தான் சொன்னா”.
“ஓ.. சரிமா. நம்ம அண்ணன் பண்ண தப்புக்கு பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க. ருக்மணியை நல்ல இடத்தில கட்டி கொடுத்து அவ சந்தோஷமா வாழுறதை பார்த்தா தானே அண்ணிக்கும் சந்தோஷமா இருக்கும். ஆதவ்க்கே கல்யாணம் பண்ணி வச்சா என்னன்னு தோணுச்சு அதான் பட்டுன்னு கேட்டுட்டேன்”.
அவருக்குள்ளும் கீதாவிற்குள் இருக்கும் அதே பயம் தான். எங்கே தன் மகனுக்கு அனுராதாவை மணம் முடிக்க சொல்லி கேட்டு விடுவார்களோ என்று. அதனாலேயே ருக்மணி விஷயத்தில் முந்தி கொண்டார்.
மேற்கொண்டு சற்று நேரம் தன் தாயிடம் பேசிவிட்டு அவர் அழைப்பை துண்டிக்கவும். சரியாக அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்தார் அவரின் கணவர் சத்யராஜ்.
“என்ன உமா பக்கத்து தெருவுல இருக்குற உன் அம்மாவுக்கு ஒரு நாளைக்கு பத்து முறை போன் பண்றதுக்கு பதில் அவங்கள இங்கேயே கூப்பிட்டு வந்து வச்சுக்கலாம் இல்ல” என்று விளையாட்டாக கூறியவாறு வீட்டிற்குள் நுழைந்தார்.
அவரை பதிலுக்கு விளையாட்டாக முறைத்தவர், “இப்போதாங்க அம்மா போன் பண்ணாங்க. நம்ம ஆதவ்க்கு ருக்மணியை கேட்டிருந்த விஷயத்தை பத்தி விசித்ரா அண்ணி அம்மாகிட்ட சொல்லி இருந்தாங்களாம். அதை பத்தி சொல்ல தான் போட்டு இருந்தாங்க”.
“அப்படியா, சம்மதம் சொல்லிட்டாங்களா?”.
“இல்லங்க.. அம்மா கிட்ட பேசும் பொழுது நம்ம கேட்டிருக்கோம்னு சொல்லி இருப்பாங்க போலருக்கு. இன்னும் முடிவு சொல்லல”.
“விருப்பம் இல்லனா போர்ஸ் பண்ண வேண்டாம் உமா”.
“அதெல்லாம் விருப்பம் இல்லாம இருக்காது. என் அண்ணா பண்ண வேலைக்கு என் பையன் ஆதவ் விட வேற நல்ல மாப்பிள்ளையை வெளிய பாத்துட முடியுமா.. எங்க போனாலும் அந்த பொண்ணோட அப்பாவுக்கு இரண்டு பொண்டாட்டின்னு இந்த காரணத்தை சொல்லியே ருக்மணியோட கல்யாணம் தட்டி கழிச்சுக்கிட்டே போகும். கண்டிப்பா அண்ணி ஒத்துப்பாங்க” என்னும்பொழுதே அடுத்ததாக வீட்டிற்குள் நுழைந்த ஆதவ், “என்னம்மா என்ன விஷயம்.. சத்தம் எல்லாம் பலமா இருக்கு”.
“எல்லாம் உன் கல்யாண விஷயம் தான் கண்ணா”.
“இத இப்பவே ஆதவ் கிட்ட சொல்லணுமா உமா. அவங்க முடிவு சொன்ன பிறகு சொல்லிக்கலாம் இல்ல” என்ற சத்யராஜின் குரல் சற்று கண்டிப்போடு தென்பட்டது.
அவருக்கு அனைத்தும் சரியாக முடிவானால் ஆதவ்விடம் சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணம் தான்.
எங்கே எந்த எண்ணமும் இல்லாத தன் மகனின் மனதிற்குள் ஆசையை வளர்த்துவிட்டு, கடைசியில் அவர்கள் வேண்டாம் என்று விட்டால் ஏமாந்து போய் விடுவானே.. அதனாலேயே இப்பொழுது சொல்லாமல் இருக்கலாம் என்று உமாவிடம் கூறியிருந்தார். அதையும் மீறி அவர் கூறி விடவும் இவருக்கு கோபம் வந்துவிட்டது.
தன் தந்தையின் எண்ணத்தை சரியாக கணித்தவன், “அப்பா காம் டவுன். நான் என்ன சின்ன குழந்தையா” என்று விட்டு தன் அன்னையைப் பார்த்தவன், “நீங்க சொல்லுங்கம்மா என்ன விஷயம்?”.
தன் கணவரை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே, “அது ஒன்னும் இல்ல கண்ணா, உனக்கு ருக்மணியை கல்யாணம் பேசலாம்னு அண்ணி கிட்ட கேட்டு இருந்தேன்”.
“ஓ.. சம்மதம் சொல்லிட்டாங்களா?” என்றவனின் மூளைக்குள் அப்பொழுது தான் ருக்மணி தன்னை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறியதற்கான காரணம் இது தான் என்று பளிச்சிட்டது.
“இன்னும் இல்ல”.
“நாளைக்கு சம்மதம் சொல்லிடுவாங்க” என்று விட்டு விறுவிறுவென தன் அறைக்கு சென்று விட்டான்.
அவனின் முகம் மகிழ்ச்சி, ஆர்வம் என எந்த ஒரு உணர்வையுமே பிரதிபலிக்கவில்லை.
*****
கதையை பற்றிய உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
+1

