
உயிர் – 5
“என்னடி சுத்த கூறு கெட்ட தனமா பேசிட்டு இருக்க.. நீ சொல்றது கொஞ்சம் கூட சரி வராது” என்றார் கற்பகம் பாட்டி.
“என்னம்மா என்ன சரி வராது.. ஏன் சரி வராது.. ஏன் என் பையனுக்கு அவங்க பொண்ண கொடுக்க மாட்டாங்க?” என்று மல்லுக்கு நின்றார் கீதா.
“சொல்றத கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ கீதா. பெரியவன் இருக்கும் போது எப்படி சின்னவனுக்கு பொண்ணு கேட்க முடியும்?”.
அவரின் பயமே அதுதானே.. எங்கே அண்ணன் மகள் என்ற முறையில் அனுராதாவை தன் மகன் அகிலனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற பயத்தினாலேயே தன் அக்காவிற்கு முன்னால் முந்திக்கொண்டு ருக்மணியை பெண் கேட்டு விடலாம் என்று பார்க்கிறார்.
பேசி வைத்துக் கொண்டால் கூட போதும். ஆதவ்வின் திருமணத்திற்கு பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு தான் தன் அன்னையிடம் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்.
“நான் என்ன உடனேவா கல்யாணம் வைக்கணும்னு சொல்றேன். பேசி கை தாம்புலம் மட்டும் மாத்திப்போம். அதுக்கு பிறகு நீங்க எப்ப சொல்றீங்களோ அப்போ நிச்சயத்தையும், கல்யாணத்தையும் வச்சுக்கலாம்”.
அவரின் மனதிற்குள் ஓடும் எண்ண ஓட்டத்தை பற்றி அறியாதவரா கற்பகம். அங்கே சட்டமிட்ட புகைப்படத்தில் இருக்கும் தன் கணவரின் பிம்பத்தை ஒரு முறை பார்த்தவர் பெருமூச்சோடு இவரின் புறம் திரும்பி, “எனக்கு என்னமோ இது சரியா படல. முதல்ல நான் உமா கிட்ட பேசுறேன். அவ ஆதவ்க்கு பொண்ணு எதுவும் பார்க்கிறாளானு கேட்போம்”.
“நீ முதல்ல விசித்ரா அண்ணிகிட்ட பேசுமா. அவங்களுக்கு இதுல சம்மதமானு கேட்டுட்டு அப்புறமா அக்காவுக்கு பேசலாம்” என்னும் பொழுதே அவரின் இதயம் பிசைய தொடங்கியது.
எங்கே தன் அக்காவும் தான் கூறியதைப் போல் ருக்மணியை தான் பெண் கேட்கப் போகிறேன் என்று கூறிவிடுவாரோ என்ற பதட்டம் அவருக்குள் தோன்றத்தான் செய்தது.
என்ன தான் கோமதியின் விஷயத்தில் கூட்டு சேர்ந்து இருவரும் அவரை வசை பாடினாலும், இந்த விஷயத்தில் இருவருமே எதிரெதிர் துருவமாய் தான் நின்றனர்.
தங்கள் வீட்டிற்கு தான் ருக்மணி மருமகளாக வரவேண்டும் என்ற ஆவல் இருவருக்குள்ளுமே இருந்தது.
“வீட்ல மூத்தவ இருக்கும் போது அவகிட்ட ஒரு வார்த்தை கூட கலந்துக்காம எப்படி டி எடுத்த இடுப்புல விசித்ரா கிட்ட பேச முடியும். அவகிட்டயும் இப்படி பேச போறோம்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு பேசலாமே” என்று அப்பொழுதும் அவருக்கு எடுத்து கூறி புரிய வைக்க முயற்சித்தார் கற்பகம்.
“அம்மா நான் சொல்றத நீ இப்ப செய்ய போறியா இல்லையா? நீ தான் இந்த குடும்பத்துக்கு மூத்தவ.. நீ பார்த்து செஞ்சா போதும். நாம என்ன இப்போ நிச்சயமா பண்ண போறோம். சும்மா விசாரிக்க தானே போறோம். விசாரிச்சிட்டு அக்கா கிட்ட சொல்ல தானே போறோம். நாம என்ன மறைக்கவா போறோம்” என்று படபடக்கவும்.
இவரிடம் பேசி புரிய வைக்க முடியாது என்று எண்ணிய கற்பகம், இந்த விஷயத்தால் எதுவும் பிரச்சனை ஆகாமல் இருந்தால் சரி என்ற எண்ணத்தோடு அரை மனதாக விசித்ராவிற்கு அழைப்பு விடுத்தார்.
“அத்தை எப்படி இருக்கீங்க உடம்பு பரவாயில்லையா?” என்று எடுத்த எடுப்பிலேயே விசித்ரா விசாரிக்கவும் முகம் மலர்ந்தார் கற்பகம்.
“நான் நல்லா இருக்கேன் விசித்ரா, நீ எப்படிமா இருக்க? நம்ம வீட்டு பக்கமே ஆள காணோமே”.
அதற்கு விசித்ராவிடம் மௌனம் மட்டுமே நிலவ.
அவரின் மௌனத்திற்கான அர்த்தத்தை புரிந்து கொண்ட கற்பகம் மெல்லிய புன்னகையோடு, “என் பேத்திய பாத்து ரொம்ப நாள் ஆகுது. அனுகூட காலையிலேயே வாசலுக்கு போய் நின்னா தான் என் பேத்தியோட தரிசனம் கிடைக்குது. கொஞ்ச நேரம் அவளோட ஆற அமர உக்காந்து பேசலாம்ன்னு பார்த்தா எங்க முடியுது. அவளும் இங்க வர மாட்டேங்குறா”.
“தப்பா நினைச்சுக்காதீங்க அத்தை. அவள பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல. நீங்க இங்க வாங்களேன் அத்தை எங்களுக்கும் உங்கள பாக்கணும் போல தான் இருக்கு”.
“கண்டிப்பா வரேன் மா. அப்புறம் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேச தான் போன் பண்ணேன்”.
“சொல்லுங்க அத்தை?”.
“அது வந்து மா நம்ம அகிலுக்கு ருக்மணியை பேசலாம்னு கீதா விருப்பப்படுறா.. அதான் உன்கிட்ட பேசி பார்க்கலாமேன்னு..”.
“அத்தை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல. போன மாசம் தான் பெரிய அண்ணி போன் பண்ணி இருந்தாங்க”.
“என்னம்மா சொல்ற நம்ம உமாவா..” என்றதுமே இங்கே கீதாவின் இதயத்துடிப்பு பல மடங்காக கூடியது.
என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதும் தெளிவர புரியாமல் இருப்பு கொள்ளவில்லை.
“ஆமா ஆதவ்க்கு நம்ம ருக்மணியை கேட்டிருந்தாங்க”.
“என்னம்மா சொல்ற.. நம்ம ஆதவ்க்கு ருக்மணியை பொண்ணு கேட்டு இருந்தாளா.. எங்க கிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கூட அவ இத பத்தி பேசவே இல்லையே” என்று கற்பகம் கூறியது தான் தாமதம், கீதாவின் முகம் முழுவதும் ஜிவ்வென்று கோபத்தில் செவ்வண்ணம் பூசிக் கொண்டது.
‘நமக்கு முன்னாடி அவங்க முந்திக்கிட்டாங்களா ச்ச..’ என்ற கருவியவாறு நின்றிருந்தார்.
“ம்ம்.. ம்ம்.. ஓ.. அப்படியா.. ம்ம் சரிமா.. எங்களுக்கு இதைப் பத்தி எல்லாம் தெரியாது மா. அதான் கீதா சொல்லவும் உன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைப்போம்னு போன் போட்டேன். பரவாயில்லமா.. ருக்மணி என்னுடைய பேத்தி.. ஆதவ்வும் என்னுடைய பேரன் தான், அகிலனும் என்னுடைய பேரன் தான். ரெண்டு பேர்ல யாரை அவ கல்யாணம் பண்ணி மருமகளா வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான்” என்றார் புன்னகை முகம் மாறாமல்.
மேலும் சற்று நேரம் அவருடன் பேசிவிட்டு அவர் அழைப்பை துண்டிக்கவும்.
“என்னம்மா என்ன சொல்றாங்க?” என்று கோபமாக எகிறிக் கொண்டு கேட்டார் கீதா.
“என்னடி இப்ப என்னத்துக்கு என்கிட்ட எகிறுர.. உன் அக்கா போன மாசமே அவளுக்கு போன் பண்ணி ஆதவ்க்கு ருக்மணியை பேசி முடிக்கலாமான்னு கேட்டு இருக்கா. இவளுக்கும் மறுத்து சொல்ல தோணல. ஆதவ் நம்ம குடும்பத்து பையன். சின்ன வயசுல இருந்து பார்த்து இருக்காங்க. ரொம்ப நல்ல பையனும் கூட.. அதனால ருக்மணி கிட்ட பேசிட்டு சம்மதம் சொல்றேன்னு விசித்ரா சொல்லி இருக்கா”.
“பாத்தியாம்மா.. சைலன்ட்டா எவ்வளவு பெரிய வேலையை பார்த்து இருக்காங்க அக்கா. நம்ம கிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கூட இதை பத்தி சொல்லல” என்று முகத்தை பத்திரகாளியாக வைத்துக்கொண்டு கோபமாக பேசினார்.
“இப்போ என்ன நடந்து போச்சுன்னு நீ இவ்வளவு கோபப்படுற கீதா. இப்ப நாம கூட தான் அகிலுக்கு ருக்மணியை பொண்ணு கேக்கலாம்ன்னு பேசுனோம். உமா கிட்ட சொல்லிட்டா பேசுனோம். பொறுமையா சொல்லிக்கலாம்னு நீ தான சொன்ன. அந்த மாதிரி அவளும் நினைச்சி இருக்கலாம். இப்போ அவங்க என்ன நிச்சயமா பண்ணிட்டாங்க. பேசி இருக்காங்க அதனால சரி வந்தா சொல்லலாமேனு நினைச்சாளோ என்னவோ”.
“ச்ச.. எல்லாம் என் தப்பு தான்ம்மா.. கொஞ்சம் முன்னாடியே அண்ணிகிட்ட பேசி இருந்திருக்கணும் ச்சே..”.
“இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு நீ இப்படி தாம் தூம்னு குதிக்கிற.. ஆதவ் யாரு அவனும் நம்ம வீட்டு பையன் தானே”.
“இங்க பாருமா ஆதவ்க்கு ருக்மணியை கட்டி கொடுக்க அவங்க ரெண்டு பேரும் சம்மதிச்சு இந்த கல்யாணம் நடந்தாலும் சரி, இந்த அனுவும் உன் அண்ணன் பொண்ணு தானே உன் பையனுக்கு கட்டிக்கோனு யாரும் வந்து நிக்கக்கூடாது சொல்லிட்டேன்” என்று தன் விழிகளை உருட்டி மிரட்டி கோபமாக கத்திவிட்டு அவர் திரும்பவும்.
அங்கே அதிர்ந்த முகத்தோடு நின்று இருந்தார் கோமதி.
அவரின் மனதை அறித்துக்கொண்டிருந்த விஷயம் வாய் வார்த்தையாக வெளி வந்துவிட்டது. இதுவும் நல்லதிற்கு தான் என்று நினைத்து கொண்டார்.
அவரை ஏளன பார்வை பார்த்த கீதா, “என்ன தான் இருந்தாலும் நீ என் அண்ணனுடைய இரண்டாம் தாரம் தான். ருக்மணிக்கு கிடைக்கிற அங்கீகாரமும், மரியாதையும், கௌரவமும் உன் பொண்ணுக்கு இந்த குடும்பத்தில் கிடைக்கும்னு கனவு காணாத. முடிஞ்சா படிப்பை முடிக்கிறதுக்குள்ள இப்போ இருந்தே வெளியில் மாப்பிள்ளையை பார்க்க ஆரம்பிச்சிடு. அப்போவாவது அவளுக்கு மாப்பிள்ளை அமையுதானு பாப்போம். ஏன்னா, உங்க லட்சணம் தான் ஊர் முழுக்க தெரியுமே.. ரெண்டாம் தாரத்தோட பொண்ண கட்ட எவன் சம்மதிப்பான்”.
அகிலுக்கும், ருக்மணிக்கும் திருமணம் பேச முடியவில்லையே என்று தனக்கு இருந்த ஆதங்கம் மொத்தத்தையும் கோமதியின் மீது கோபமாக இறக்கி வைத்து விட்டு சென்று விட்டார் கீதா.
அவர் கூறியதை கேட்ட கோமதிக்கு கண்களில் நீர்வழிய, அவரின் கையை ஆதரவாக பற்றி கொண்ட கற்பகம், “அவ கெடக்குறா.. அவ பேசுறது எல்லாம் நீ ஒன்னும் பெருசா நினைச்சுக்காதம்மா.. நம்ம அனு செல்லத்துக்கு ராஜா மாதிரி ஒரு மாப்பிள்ளை தான் கிடைக்கப் போறான் பாரு.. நீ சந்தோஷமா வாழாத உன் வாழ்க்கைக்கும் சேர்த்து உன் பொண்ணு பல மடங்கு சந்தோஷமா வாழப் போறா.. அவ வாழுறதை பார்த்தாவது நீ பூரிச்சு போகணும்”.
அவரின் வார்த்தைகள் ஏதோ கோமதியின் மனதிற்குள் பெரும் நம்பிக்கையை அளிக்க. நொடி நேரத்தில் அவரின் முகமே பிரகாசித்தது.
இவருக்காக வேணும் எப்படியாவது அனுவிற்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார் பாட்டி.
தன் மாமியாருடன் பேசிவிட்டு அணைப்பை துண்டித்த பிறகு யோசனையோடு அமர்ந்திருந்தார் விசித்ரா.
அனுராதாவை விட்டுவிட்டு அப்பொழுது தான் வீட்டிற்குள் நுழைந்தாள் ருக்மணி. அவளை கூட கவனிக்காமல் தன் சிந்தனையிலேயே உழன்று கொண்டு அமர்ந்திருந்தார்.
“என்னம்மா எந்த கோட்டையை பிடிக்க போறீங்க.. நான் வந்தது கூட தெரியாம அப்படி என்ன யோசனை?” என்றவாறு ருக்மணி வீட்டுக்குள் நுழையவும்.
“ருக்கு நான் உன்கிட்ட சொல்லி இருந்தேன்ல. உன் பெரிய அத்தை போன் பண்ணதை பத்தி.. நீ இன்னும் எதுவும் பதில் சொல்லலையே”.
“என்ன பதில் சொல்லணும்னு நீங்க எதிர்பார்க்குறீங்க. நிச்சயமா நீங்க எதிர்பார்க்குற பதில் என் வாயிலிருந்து வராது. நான் தான் விருப்பம் இல்லைன்னு அவங்ககிட்ட சொல்லிடுங்கன்னு அப்பவே உங்க கிட்ட சொல்லிட்டேனேமா. நீங்க இன்னுமா அவங்க கிட்ட என்னுடைய முடிவை சொல்லாம இருக்கீங்க”.
“இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேச முடியாதுமா. நான் வாழுற வாழ்க்கையே உனக்காக தான். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துட்டா அப்புறம் எந்த கவலையும் இல்லாம நான் நிம்மதியா கண்ண மூடுவேன். எனக்காக யோசிக்கலாம்ல”.
“உங்கள பார்த்து யோசித்து தான் நான் இந்த முடிவே எடுத்து இருக்கேன். ஏன் கல்யாணம் பண்ணாம வாழ முடியாதா.. இப்போ நீங்க கல்யாணம் பண்ணி என்ன சாதிச்சிட்டீங்க.. சாதிக்கிறத விடுங்க.. அட்லீஸ்ட், சந்தோஷமான வாழ்க்கையாவது உங்களுக்கு கிடைச்சுதா.. இல்லையே.. வாழ்க்கை முழுக்க கஷ்டத்தை மட்டும் தானே கொடுத்தது உங்களுடைய கல்யாண வாழ்க்கை. இப்படி ஒரு வாழ்க்கை எனக்கும் வேணுமா?”.
தன் தந்தையின் தவறான பிம்பம், தாயின் வேதனைகள், வலிகள் என அனைத்தையும் சிறு வயது முதலே பார்த்து வளர்ந்தவளுக்கு திருமண வாழ்க்கை என்றாலே வேப்பங்காயாய் கசந்து விட்டது.
*****
கதையை படிப்பவர்கள் உங்கள் கருத்தையும் சொல்லுங்க 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
+1

