
ஹாய் டியர்ஸ், கதை இன்னும் இரண்டு அத்தியாயங்களில் முடியப் போகுது. வெள்ளிக்கிழமை கதை நிறைவை எட்டி விடும்.
ஞாயிறு அன்று கதையை தளத்தில் இருந்து நீக்கிடுவேன். அதுக்குள்ள படிக்காதவங்க படிச்சிடுங்க 😊
உயிர் – 33
“என்னக்கா நீ இப்படி இருக்க? மருமகள எங்க வைக்கணுமோ அங்க வைக்கணும்! அவளுக்கு நீ சாப்பாடு போட்டு கொடுத்துட்டு இருக்க.. அவ என்ன சின்ன குழந்தையா.. பசி எடுத்தா தானா வந்து சாப்பிட போறா” என்று இகழ்ச்சியாய் கூறி இருந்தார் கீதா.
“என் மருமக வந்ததும் காபி வேணுமானு தானே கேட்டா.. நான் வேணும்னு சொன்னதும் எனக்காக காபியை போட்டு கொண்டு வந்து என் கையில கொடுத்தா.. நான் காபி குடிச்சிட்டு வச்ச எச்சி கிளாஸை கூட அவ கொண்டு போய் கழுவி வச்சா.. அதுக்கு எல்லாம் காரணம் அவ இந்த வீட்டு வேலைக்காரின்னு இல்ல கீதா..
இது அவளோட வீடு! இந்த வீட்ல அவளுக்கு இருக்க உரிமையை தான் அவளுடைய இந்த வேலைகள் எல்லாம் பிரதிபலிக்குது. அதே போல, அவ பசியோட இருக்குறத தெரிஞ்சு நான் அவளுக்கு சாப்பாடு போட்டு கொடுத்தேன்.
அதுக்கு அர்த்தம், அவளுக்கு சேவகம் செய்யுறேன்னு கிடையாது! இது என்னுடைய குடும்பம்! என் மருமக எனக்கு காபி போட்டு கொடுத்த மாதிரி, நான் அவளுக்கு சாப்பாடு போட்டு கொடுக்கிறேன். இது தான் குடும்பம்.. புருஷன் வெளியில போய் மாடா உழைக்கிறார்னா, பொண்டாட்டி வீட்ல மாடா உழைப்பா..
அதுக்காக அவங்க நமக்கு கீழேயும் கிடையாது, நாம அவங்களுக்கு கீழேயும் கிடையாது. ஒரு குடும்பத்துல எல்லாருமே அனுசரிச்சு போனா தானே கடைசி வரைக்கும் ஒத்துமையா இருக்க முடியும்.
மருமகள்னா நீ என்ன நெனச்ச.. நம்ம வீட்டுக்கு சம்பளம் இல்லாம கட்டி கூப்பிட்டு வந்த வேலைக்காரினா..” என்று அவளை நோக்கி இகழ்ச்சியாக புன்னகைத்தவர்.
“அது அப்படி கிடையாது கீதா, இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த குடும்பத்தை நாம கட்டி காப்பாத்தி கரை சேர்த்திட முடியும். இன்னும் பத்து வருஷமோ, 15 வருஷமோ நமக்கு வயசாகிடும். அதுக்கு அப்புறம் இந்த குடும்பத்து மேல நமக்கு இருக்க உரிமையையும், அக்கறையையும், அன்பையும் விட அவங்களுக்கு நிறையவே இருக்கும். அதுக்குள்ள எதுக்கு நீ பெருசா, நான் பெருசானு மல்லு கட்டிக்கிட்டு நிக்கணும்?” என்று அவருக்கு குட்டு வைப்பது போல் பேசி முடித்திருந்தார்.
அவரின் வார்த்தையில் உணவை கூட உண்ண மறந்து, விழிகள் கலங்க அவரையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அனுராதா.
தங்கள் அறையில் இருந்து வெளியே வந்த ஆதவ் கிருஷ்ணனும் தன் தாயின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டு அறை வாயிலிலேயே நின்றுவிட்டான்.
கீதாவிற்கு தான் அனுராதாவின் முன்பு உமா இப்படி பேசியது முகம் கறுத்து விட்டது.
அதிலும், எங்கள் குடும்பத்தில் அவளும் ஒருத்தி தான் என்று தூக்கி வைத்து பேசியதும், அனுராதாவை மட்டம் தட்ட எண்ணிய கீதாவிற்கு மூக்கை உடைத்த உணர்வை கொடுத்திருந்தது.
“சரிக்கா, நான் கிளம்புறேன். அம்மாவுக்கும் சாப்பாடு எடுத்து வைக்கணும்” என்றுவிட்டு முகம் கறுக்க அங்கிருந்து கிளம்பி விட்டார்.
“எல்லாரும் சந்தோஷமா ஒத்துமையா தான் இருக்காங்க. என் தலையெழுத்து நான் மட்டும் இப்படி கிடக்கிறேன்” என்று தன் வீடு சென்று சேரும் வழியெல்லாம் புலம்பிக்கொண்டே சென்றார் கீதா.
உணவை உண்ணாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளை வாஞ்சையாய் பார்த்த உமா, “என்ன.. என் முகத்துல என்ன எழுதி ஒட்டி இருக்குன்னு இப்படி என் முகத்தையே பார்த்துகிட்டு இருக்க. ம்ம்.. சீக்கிரம் சாப்பிடு!” என்று அதட்டலாக கூறவும்.
அவரின் அதட்டலில் இவளின் இதழில் புன்னகை பூக்க. கண்கள் கலங்க மெல்லிய புன்னகையோடு மனநிறைவாக உணவை உட்கொள்ள தொடங்கினாள்.
இந்த நேரம் அவர்கள் இருவருக்குமானது என்று எண்ணிய ஆதவ், அவர்களுக்கு இடையே சென்று இந்த நேரத்தை கெடுக்க விரும்பாமல் அறை வாயிலிலேயே நின்று கொண்டான்.
முதல் முறை உமா அவளிடம் தானாக முன்வந்து பேச்சு கொடுத்தார்.
“உன்னை என் மகனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இத்தனை நாள் ஆகுது. ஒரு நாள் கூட உங்க அம்மாவுக்கு உன்ன பாக்கணும்னு தோணலையா? ஏன் இங்க வரவே இல்ல?”.
“அது.. நான் போன் பண்ணி பேசுறதால அம்மா வந்திருக்க மாட்டாங்க அத்தை” என்று சமாளிப்பாக கூறியிருந்தாள்.
அவளின் வார்த்தை வெறும் சமாளிப்பு தான் என்பது அவருக்கும் நன்கு தெரியும். தன்னை நினைத்து தான் அவர் இங்கே வராமல் இருக்கிறார் என்பதை அவரும் அறிவார் தானே..
“ஓ! அதனால என்ன.. போன்ல மட்டும் பேசுனா போதுமா.. நேர்ல ஒரு எட்டு வந்தா ஆற அமர உக்காந்து பார்த்து பேசிட்டு பொறுமையா போகலாம் இல்ல. அப்போ தானே இரண்டு குடும்பத்துக்கும் நடுவுல உறவு சுமூகமா இருக்கும்”.
அவரின் வார்த்தையில் நிச்சயம் எந்த ஒரு உள் அர்த்தமும் இருப்பது போல் அவளுக்கு தோன்றவில்லை.
“வீட்டுக்கு வர சொல்லி அம்மா கிட்ட சொல்றேன் அத்த” என்றாள் மென் புன்னகையோடு.
தன் தாயின் இந்த மாற்றத்தை தாடையில் கையை வைத்து ஆச்சரிய பாவனையோடு பார்த்த ஆதவ்விற்கும் மனநிறைவாக இருந்தது. அவரின் பேச்சும், செயலும்..
“என்னம்மா உங்க மருமகளுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பா? நானும் தான் டயர்டா வேலையை முடிச்சிட்டு வந்து தூங்கினேன். என்னை சாப்பிட வான்னு ஒரு வார்த்தை கூட நீங்க கூப்பிடலையே?” என்று பொய்யாக குறைபட்டுக் கொண்டான்.
“ஏன் நீ என்ன சின்ன குழந்தையா? பசிச்சா வந்து சாப்பிட போற. அவ வந்தா அவளுக்கு சாப்பாடு போட்டுக் கொடுத்தேன். நீயும் வந்திருந்தா உனக்கும் கொடுத்து இருப்பேன். நீ இப்போ தானே வந்திருக்க. உட்காரு, நான் போட்டு கொண்டு வரேன்” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அனு சாப்பிட்டு முடித்திருக்க.
“இல்லம்மா, எனக்கு என் பொண்டாட்டி போடுவா. உங்களுக்கு ஏன் சிரமம். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றவனின் காதை பிடித்து திருகிய உமா, “படவா! உன் பொண்டாட்டி கையால பரிமாறி சாப்பிடணும்னு ஆசையா இருக்குன்னு சொல்லு. அதை விட்டுட்டு என்னை பார்த்து பாவப்படுற மாதிரி நடிக்காத” என்று புன்னகைத்து விட்டு இளையவர்களுக்கு இடம் கொடுத்து தன் அறைக்கு சென்று விட்டார்.
அவர் சென்றதும் ஆதவ்விற்கு சாப்பாட்டை கொண்டு வந்து டேபிளின் மீது வைத்தவள். அவன் அருகில் நின்று பரிமாறவும்.
பரிமாறி முடித்தவளின் இடையோடு கை கொடுத்து அவளை தன் மடியில் அமர்ந்திக் கொண்டான் ஆதவ் கிருஷ்ணா.
அவனின் இந்த திடீர் செயலை அவள் சற்றும் எதிர்பார்த்து இருக்கவே இல்லை.
சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே, “யாராவது வந்துட போறாங்க!” என்று படபடத்துக்கொண்டே எழ முற்படவும்.
அவளின் வயிற்றோடு தன் கரம் கொடுத்து அழுத்தியவன், அவளை எழவிடாமல் செய்து இருந்தாள்.
“ஐயோ! என்ன பண்றீங்க நீங்க? அத்தை வந்து பாத்திட போறாங்க” என்றாள் தவிப்பான குரலில்.
“என் அம்மாவுக்கு நிறையவே இங்கீதம் தெரியும். நான் பேசினப்போவே அவங்க எல்லாத்தையும் புரிஞ்சுகிட்டு இருந்திருப்பாங்க. நிச்சயமா அவங்க கொஞ்ச நேரத்துக்கு இந்த பக்கமே வர மாட்டாங்க” என்று கூறி தன் ஒற்றை கண்ணை சிமிட்டினான்.
சட்டென்று தன் குரலை செறுமியவன், “உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றான் சீரியஸாக தன் முகத்தை வைத்துக்கொண்டு.
“அதுக்கு இப்படி தான் வச்சுக்கிட்டு பேசுவீங்களா?” என்றவளுக்கு அவனின் மடியில் அமரவே அத்தனை சங்கடமாகவும், கூச்சமாகவும் இருந்தது.
நெளிந்து கொண்டே அவனில் இருந்து எழ முற்பட்டாள்.
ஆனால், முடிந்தால் தானே..
அத்தனை அழுத்தமாக இருந்தது அவனின் பிடி. அவளால் அசைய கூட முடியவில்லை.
அவள் விலக முற்படவும், அவனின் பிடி மேலும் இறுகியது தான் மிச்சம்.
அவளின் மென்மையை அவனின் விரல்கள் உணரவும், அவளுக்கோ சங்கடத்தின் உச்சமாகிப் போனது.
“சோ ஹாட்!” என்றவனின் குரல் கிசுகிசுப்பாக அவளின் செவியை அடைந்திருக்கவும்.
அவனின் முகத்தையே பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.
“ஷ்ஷ்! சும்மா இருந்தா நான் பேச வேண்டியதை மட்டும் பேசிட்டு விட்டுடுவேன். இல்ல, அப்புறம் ஏதாவது சேதாரம் ஏற்பட்டா நான் பொறுப்பேத்துக்க முடியாது” என்றான் கிசுகிசுப்பாக.
“சரி, என்ன விஷயம்னு சீக்கிரம் சொல்லுங்களேன்”.
“மேடம் ஏதோ வேலைக்கு போக போறதா சொன்னீங்களே ஞாபகம் இருக்கா?” என்றான் தன் ஒற்றை புருவத்தை ஏற்றி கேள்வியாக.
அப்பொழுது தான் அந்த நினைவே அவளுக்கு வரவும்.
“ஐயோ! மறந்தே போயிட்டேன்” என்றாள் தன் தலையில் கையை வைத்தவாறு.
“இது தான் நீ வேலை பார்த்து என்னை காப்பாத்துற லட்சணமா? உன்ன நம்புனா அவ்வளவு தான் போலருக்கே. நான் கூட சரி நீ வேலைக்கு போய் என்னை எப்படியும் காப்பாத்திடுவேன்னு நினைச்சேன். வீட்ல ஃப்ரீயா, ஹாயா இருக்கலாம்னு நினைச்சேன். குழந்தைகளை மட்டும் வளர்த்துக்கிட்டா போதும், சம்பாதிக்கிற பொறுப்பை உன்கிட்ட கொடுத்திடலாம்னு நினைச்சேன். நீ என்ன இவ்வளவு இர்ரெஸ்பான்சிபில்லா இருக்க”.
அவனின் வார்த்தையில் அவனை முறைத்து பார்த்தவள், “நான் வேலைக்கு போய் உங்கள உட்கார வச்சு பாத்துக்கணுமா? இது நல்ல கதையா இருக்கே.. நான் மட்டும் வேலைக்கு போய் கஷ்டப்படணும். நீங்க மட்டும் வீட்ல எந்த வேலையும் பாக்காம ஜாலியா இருப்பீங்களா?”.
“வீட்ல இருந்தா வேலை பாக்காம ஜாலியா இருப்பேன்னு யாரு டி உன் கிட்ட சொன்னது? சொல்லப்போனா உனக்கு விட எனக்கு தான் நிறையயயய வேலை” என்றான் நீட்டி முழக்கி
“அப்படி என்ன வேலை?”.
“நாலைஞ்சு குழந்தை பெத்துக்கணும்னு மேடம் அசால்ட்டா சொல்லிட்டீங்களே.. அதுக்கு நான் எவ்வளவு ஹார்ட்வொர்க் பண்ண வேண்டியது இருக்கும்னு தெரியுமா?” என்றதும் அவனை புரியாமல் பார்த்தவளிற்கு, முதலில் அவன் என்ன கூற வருகிறான் என்பதே புரியவில்லை.
அவளை பார்த்து அவன் கள்ளப் புன்னகையோடு ஒற்றை கண்ணை சிமிட்டவுன் தான் அவன் கூற வருவதன் அர்த்தமே அவளுக்கு புரிந்தது.
சட்டென அவனின் வாயின் மீது தன் கரம் கொண்டு அடைத்தவள், “என்ன பேச்சு பேசுறீங்க நீங்க? யாராவது கேட்டா என்ன ஆகிறது?”.
அவள் தன் வாயை அடைத்திருந்த கரத்தின் மேல் அழுத்தமாக தன் இதழை பதித்திருந்தான் ஆதவ் கிருஷ்ணன்.
அதில், விருட்டென்று அவள் தன் கரத்தை பின் இழுத்துக் கொள்ளவும்.
“யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்!” என்றான் அவளை தன்னோடு மேலும் இறுக்கியவாறு.
ஓரிரு நொடிகள் இருவருக்குள்ளும் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் இல்லை.
அதற்கு பதில் அவர்களின் விழிகளே பேசிக்கொண்டன மௌனமாய்..
“சரி, என்னை டைவர்ட் பண்ணாத.. வேலைக்கு போகணும்னு சொன்ன இல்ல” என்று அவனே எடுத்துக் கொடுக்கவும், மீண்டும் அவள் தொடர்ந்தாள்.
******
கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
4
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன? அதுக்குள்ள கதை முடியுதா??😲 ரொமான்டிக்கா 50 எபிஸ் போகும்ன்னு நினைச்சேன் 😔😔..
35 than sis 😊