
உயிர் – 32
“நான் என் பொண்ணுக்காக தான் அங்க இருந்தேன். என் பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும்னு தான் எல்லா கஷ்டத்தையும் பொறுத்துக்கிட்டு சகிச்சுக்கிட்டு அங்க வாழ்ந்தேன். ஆனா, அவர் என் பொண்ணுக்கு கூட ஒரு நல்லது பண்ற மாதிரி தெரியல.
கடவுளா பார்த்து தான் என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இனி அவரோட அங்க இருந்து கஷ்டப்படனும்னு எனக்கு எந்த தேவையும் இல்ல. எனக்கு என் பொண்ணு தான் எல்லாமே.. என் பொண்ணு என்னை இனி அங்க இருக்க கூடாதுன்னு சொல்லிட்டா..
நான் இங்க அக்கா வீட்ல வேலைக்காரியா இல்லாம வீட்ல ஒரு ஆளா இருக்கேன். எனக்கு அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் அங்க வருவேன்னு எதிர்பாக்காதீங்க அண்ணி” என்று மெதுவான குரலில் சாதாரணமாகவே கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார் கோமதி.
விசித்ராவை போல் முகத்தில் அடித்தது போல் கோபமாக பேச எல்லாம் அவருக்கு வரவில்லை. தனக்கு தெரிந்தவரை பேசிவிட்டு கிளம்பி விட்டார்.
அவர் இத்தனை பேசியதே கீதாவிற்கு அவ்வளவு அதிர்ச்சி தான்.
விசித்ராவிற்கு அவர் இதையாவது வாய் திறந்து பேசினாரே என்ற நிம்மதி.
“நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத கீதா. வேணாம்னு நினைச்சு விலகுன உறவை திரும்ப ஒட்ட வைக்க நினைக்காத. அதெல்லாம் சரி வராது. மனசு முழுக்க துரோகத்தால ரணமாகி மரத்து போய் கிடக்கு. அந்த நிலைமையில் நிற்கும் பொழுது தான் அதோட வலி எப்படி இருக்கும்னு நமக்கு புரியும். வெளியிலிருந்து பார்க்கிறவங்களுக்கு இது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லையேன்ற மாதிரி தோணும். ஆனா, அந்த இடத்துல நிக்கிறவங்களுக்கு தான் அது எவ்வளவு பெரிய வலியையும், வேதனையையும் கொடுக்கும்னு உணர முடியும். தெரியாம தப்பு பண்றவங்களுக்கு வேணும்னா மன்னிப்பு கொடுக்கலாம். ஆனா, துரோகத்துக்கு மன்னிப்பே கிடையாது. மன்னிக்கிற அளவுக்கு நான் பெரிய தியாகியும் கிடையாது. என் பொண்ண உன் வீட்ல கட்டி கொடுத்ததற்கு ஒரே காரணம் ஆதவ்.
அகில் ருக்மணியை காதலிக்கிறதா ஆதவ் சொன்னான். அதோட எனக்கு அகிலனை பத்தியும் தெரியும். அவன் நிச்சயம் என் பொண்ண நல்லா பார்த்துப்பான்ற நம்பிக்கையும் நிறையவே இருந்துச்சு. ஆதவ் சொன்ன ஒரு வார்த்தைக்காக தான் நான் ருக்மணியை உங்க வீட்ல கட்டி கொடுத்து இருக்கேன். அதை வச்சு நீ வேற எதுவும் கணக்கு போட வேண்டாம். தாராளமா நீ எப்போ வேணும்னாலும் இங்க வா போ.. ஆனா, திரும்பவும் இந்த பேச்சு வேண்டாம்!” என்று கராராக கூறிவிட்டார்.
தான் நினைத்து வந்தது ஒன்று. ஆனால், நடந்ததோ வேறாகிப்போன கோபத்தோடு எழுந்து வெளியேறிவிட்டார் கீதா.
“என்னென்னமோ நெனச்சு வந்தா கடைசியில ஒன்னு கூட நடக்கல. அந்த கோமதியை எப்படியாவது பேசி கூப்பிட்டு போயிடலாம்னு பார்த்தா.. அவளுக்கு இவ்வளவு கூட பேச வருமா.. என்ன எல்லாம் பேசிட்டா.. வர முடியாதுன்னு முகத்துல அடிச்ச மாதிரி சொல்லிட்டு போயிட்டாளே..” என்று கோபத்தோடு புலம்பியவாறு வெளியே வந்தவருக்கு மனதிற்குள் ஒரு சிறு நப்பாசை எட்டிப் பார்த்தது.
“ருக்மணியை கட்டுன நமக்கே இந்த நிலைமை.. அனுராதாவை கட்டுன என் அக்காவுடைய நிலைமை எப்படி இருக்குன்னு தெரியலையே.. நானும் ஆதவ்வுக்கு ருக்மணியை பேசுன கோவத்துல அக்கா கிட்ட பேசுறதை விட்டுட்டேன். அக்கா வீட்டுக்கு போய் அங்கே என்ன நடக்குதுன்னு பாத்துட்டு வருவோம்” என்ற எண்ணத்தோடு உமாவின் வீடு நோக்கி புறப்பட்டார்.
வெகுநாட்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்திருந்த தங்கையை பார்த்த உமாவிற்கும் ஆனந்தம் எட்டிப் பார்த்தது தான்.
“வா கீதா.. எப்படி இருக்க? உள்ள வா” என்று புன்னகை முகமாக அழைத்தார்.
“நான் நல்லா இருக்கேன்க்கா. நீங்க எப்படி இருக்கீங்க? என்ன எல்லாரும் வெளியில போயிட்டாங்களா?” என்றவாறு வீட்டை நோட்டம் விட்டார்.
“ஆமா கீதா, தாரணி காலேஜ் போய் இருக்கா. மாமா ஷோரூம் போயிருக்காங்க”.
‘ஆதவ்வும் ஷோரூம் கிளம்பி இருப்பான்’ என்று தானாக நினைத்துக் கொண்ட கீதா, ‘என்ன இந்த அனுவை ஆளையே காணும்?’ என்று எண்ணியவாறு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தார்.
நேரம் மதியத்தை நெருங்கி இருந்தது. அனுராதாவிற்கு அப்பொழுது தான் விழிப்பு தட்டியது. எதிலோ கட்டுண்டதை போல் உணர்ந்தவள் நிமிர்ந்து பார்க்கவும்.
ஆதவ்வின் உறக்கத்தில் இருக்கும் நிர்மலமான முகம் தான் அவளுக்கு காட்சி அளித்தது. இதழில் ஒருவித புன்னகையோடு அவனையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எத்தனை நேரம் என்பதை அவளே அறியவில்லை. சுதாரித்தவள், “ஐயோ! இப்படி பார்த்து வைக்கிறோமே.. அவர் மட்டும் பார்த்தா என்ன நினைப்பார்?” என்று எண்ணும் பொழுதே முகம் வெட்கத்தை பூசிக்கொள்ள.
அவனின் உறக்கம் கலையாத வண்ணம் எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
அவள் எழுந்து குளியலறைக்குள் சென்றதுமே ஆதவ்விற்கும் விழிப்பு தட்டிவிட்டது.
குளித்து முடித்து தயாராகி அவள் வெளியே வரவும். குப்புற படுத்து கிடந்தவன் தன் தலையை மட்டும் தூக்கி அவளை பார்த்திருந்தான்.
அவளோ அவனை கண்டும் காணாதது போல் தன் பார்வையை திருப்பிக் கொண்டு தலையை துவட்டவும்.
எழுந்து வந்து அவள் அருகில் நின்றவாறு, தன் மார்புக்கு குறுக்கே கையை கட்டிக்கொண்டு அவளையே குறுகுறுவென பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதவ் கிருஷ்ணா.
‘என்ன.. இவர் பார்வையே சரி இல்லையே..’ என்று அவனை ஓரப்பார்வையால் சந்தேகமாக பார்த்தவள், “என்ன வேணும்?”.
“சோ ஹாட்! கேட்டா எல்லாமே கிடைக்குமா?” என்றவனின் பார்வையோ அவளை மேலிருந்து கீழ் பார்வையாலேயே அளந்து விட்டு அவளின் விழிகளில் நிலைக்கவும்.
அவன் கூறாததை எல்லாம் அவனின் விழி அசைவுகளே அப்பட்டமாக எடுத்துரைக்க. அவளுக்கு தான் படபடப்பு கூடி போனது.
ஆனாலும், தன் நிலையை அவனுக்கு காட்டாமல் இருக்க அரும்பாடு பட்டுக் கொண்டு இருந்தாள்.
அவளின் தவிப்பை ரசித்தவன் கீழ் அதரங்களை கடித்து சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு, “கொடுக்க மனசு இல்லைனாலும் பரவாயில்ல. நானே கூட எடுத்துக்குவேன்!” என்று ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடைவெளி விட்டு அவன் கூறி முடிக்கவும்.
அவனின் நீட்டி முழக்கிய வசனத்தில் இவளுக்கு தான் மூச்சடைத்தது.
“நீங்க.. பேசுறதே.. சரி இல்ல..” என்று வார்த்தைகள் சண்டித்தனம் செய்ய ஒரு வழியாக கூறி முடித்தவள். வேகமாக அறையை விட்டு வெளியே ஓடிவிட்டாள்.
அறையை விட்டு வெளியே வந்ததும் தான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது. சீரான மூச்சுக்காற்றும் வெளியேற, பசி வேறு வயிற்றை கிள்ளிக் கொண்டு இருந்தது.
‘சாப்பிடுவோம்’ என்ற எண்ணத்தோடு அவள் ஹாலிற்கு வரவும்.
டைனிங் டேபிளில் அமர்ந்து உமாவுடன் பேசிக் கொண்டிருந்த கீதாவை பார்த்தவள், “வாங்க அத்த” என்றாள் இன்முகமாக.
தலை முடியின் நுனியில் நீர் சொட்ட வந்து நின்றவளை மேலிருந்து கீழ் ஒரு மார்க்கமாக பார்த்த கீதா, “என்ன இந்த நேரத்துக்கு தலைக்கு குளித்து இருக்க?” என்றுவிட்டு அவளை மேலிருந்து கீழ் குறுகுறுவென அவர் பார்த்து வைக்கவும்.
“சும்மா தான் அத்தை” என்றவளுக்கு அவரின் கேள்வி சற்று அசௌகரியமாக இருக்கவும்.
“உங்களுக்கு காபி கொண்டு வரவா?” என்றாள் உமாவை பார்த்து.
அவர் ‘சரி’ என்னும் படி தலையசைக்கவும். சமையலறைக்குள் நுழைந்தவள் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவர்களுக்கான காபியை தயார் செய்து கொண்டு வந்து கொடுத்திருந்தாள்.
அவரின் கேள்வி உமாவிற்குமே அவ்வளவாக சுகிக்கவில்லை. புதிதாக திருமணம் ஆகி இருப்பவர்களிடம் இப்படி சற்றும் சிந்திக்காமல் சங்கடப்படுத்துவது போல் கேட்கிறாளே என்று எண்ணிக் கொண்டு தான் அமர்ந்திருந்தார்.
அதை வாங்கி பருகிய கீதா, “நீ கொடுத்து வச்சவ தான்க்கா”.
“என்ன சொல்ற கீதா?”.
“ஆமாக்கா, இவ்வளவு நேரம் உன்கிட்ட எல்லாத்தையும் சொன்னேன் இல்ல. எங்க வீட்ல வேலைக்காரங்க இருந்தும் சமாளிக்க முடியாம நான் திண்டாடுறேன். ஆனா, உனக்கு அப்படி எந்த கவலையும் இல்லை. வீட்டோடவே இவ இருக்காளே” என்றார் அனுவை பார்த்து ஏளனமாக.
“கீதா என்ன பேசுற நீ?” என்றார் உமா அதட்டலாக.
என்ன தான் அவரின் பேச்சு இப்படித்தான் என்பது அனுராதாவிற்கு தெரிந்தாலும், ஏனோ அதை கேட்கும் பொழுது மனம் நோக தான் செய்தது.
மீண்டும் மீண்டும் தன் தகுதியை தரம் தாழ்த்தி காட்டுபவர்களின் முன்பு எவ்வளவு தான் வாதிட முடியும்.
புரியாதவர்களுக்கு புரிய வைக்கலாம். புரியாதது போல் நடிப்பவர்களிடம் என்னவென்று புரிய வைப்பது. சுவற்றை நோக்கி கல் வீசும் நிலை தான்.
சட்டென்று கண்கள் கலங்கிவிட, அத்தனை பசியிலும் உணவை அவளின் மனம் நாடவில்லை. சமையலறைக்குள் புகுந்து கொண்டாள்.
“ஒன்னும் இல்லக்கா. ருக்மணி இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்னு நீங்க ஆசைப்பட்டீங்க. ஆனா, இவ வந்துட்டா.. ஆனா, இப்ப அதுவும் நல்லதுக்கு தானே. வீட்டுக்கு வேலைக்காரியே வைக்க வேண்டாம் பாருங்க” என்று கூறி அவர் நகைப்பது அனுராதாவிற்கு தான் சுருக்கென்று இதயத்தில் தைத்தது.
அவருக்கு எந்த பதிலும் அளிக்காத உமா, “அனு!” என்று சத்தமாக அழைத்திருந்தார்.
அவரின் குரலுக்கு அடுத்த நொடி அனுராதா தன் முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டு அவரின் முன்னே வந்து நிற்கவும்.
“இந்தா.. இந்த டம்ளரை கொஞ்சம் கழுவி வச்சிடு” என்றவாறு அவளின் முன்பு தாங்கள் பருகிய காபி டம்ளரை நீட்டி இருந்தார்.
கீதாவின் அந்த வார்த்தைக்கு உமாவின் இந்த செயல் அவளின் மனதை வெகுவாக வலிக்கச் செய்தது.
என்ன தான் இந்த வீட்டிற்கும் தனக்கும் முழு உரிமை இருக்கின்றது என்று அவளே உரிமை போராட்டம் நடத்தினாலும், அனைத்தையும் இழுத்துப் போட்டு செய்தாலும், இப்படி தள்ளி நிறுத்துபவர்களின் முன்னிலையில் எவ்வளவு தான் போராடுவது என தோய்ந்து போய்விட்டாள்.
தற்போதைய அவளின் உடலின் அசதியும் அதற்கு அவளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பதும் ஒரு காரணம்.
அவர் கூறியதை மறுக்காமல் செய்தவளுக்கு அதற்கு மேல் அங்கே நொடியும் நிற்க முடியவில்லை.
ஏதோ ஒரு தாழ்வு மனப்பான்மை.. அவர்களின் முன்பு போக அவளை விடவில்லை.
அறைக்கு சென்று விடலாம் என்று முயன்றவளை மீண்டும் உமாவின் குரல் தடுத்திருந்தது.
“எங்க போற?”.
“ரூமுக்கு” என்றாள் வெளி வராத குரலில்.
“இங்க வா, இப்படி உட்காரு” என்று தங்களுக்கு அருகில் இருந்த இருக்கையை காட்டவும்.
அனுராதா அமைதியாக அமர்ந்து கொண்டாள்.
தான் எழுந்து கிட்சனுக்கு சென்ற உமா, அவளுக்கு ஒரு தட்டில் உணவை வைத்து எடுத்து கொண்டு வந்தவர் அவளின் முன்னே வைக்கவும்.
அவளுக்கு இருக்கும் மனநிலையில் உணவை உண்ணும் எண்ணமே இல்லை.
அவள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்டு, “சாப்பிடு” என்றார் உமா.
வேறு வழியின்றி சாப்பாட்டை பிசைந்து ஒரு கவளம் வாய்க்குள் திணித்தவளிற்கு வயிறு பசித்தாலும், உணவு அவளின் தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்து சண்டி செய்தது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
1
+1

