Loading

உயிர் – 31

ருக்மணி பேங்கிற்கு கிளம்பி சென்று விட. வேலை ஆள் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தார்.

“என்ன இது.. இப்படி தான் வீட்டை ஏனோ தானோன்னு துடைக்கிறதா.. சரியா பண்ணு” என்று அவரை அதட்டி விட்டு ஹாலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார் கீதா.

என்ன தான் வேலைக்கு ஆட்கள் வந்தாலும் அவருக்கு திருப்தியாக இருக்கவில்லை.

கோமதி, அனுராதா இருக்கும்பொழுது அவர்கள் பார்த்துக் கொண்டதை போல் இருப்பதாக தெரியவில்லை.

எனவே, மீண்டும் கோமதி இங்கேயே வந்து இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவருக்குள் தோன்றியது.

ஆனால், தான் போய் எப்படி அவளை அழைப்பது? அவளாக இங்கே வருவதாக இருக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்று சிந்தித்துக்கொண்டு அமர்ந்திருந்தவருக்கு முகம் சட்டென பளிச்சிட்டது.

அவரின் மூளைக்குள் யோசனை மணி அடிக்க.

“கையிலேயே துருப்புச்சீட்டை வச்சுக்கிட்டு நாம எதுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டு யோசிக்கணும். அவ புருஷன் இங்க தானே இருக்காரு. ஒண்ணுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கும் பொழுது எதுக்கு நான் என் அண்ணனை கவனிச்சுக்கணும்?

ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தி இங்க வந்து இருந்து என் அண்ணனை கவனிச்சுக்கட்டும். எப்படியும் இப்படி சொன்னா அந்த விசித்ரா வர மாட்டா. கோமதி வேற வழியில்லாம வந்து தான் ஆகணும். அப்படி இல்லையா அண்ணனை கொண்டு போய் அங்க வச்சு பார்த்துக்கட்டும்.

அம்மாவையும், அண்ணனையும் சேர்த்தே அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவோம். நமக்கும் வேலை குறைஞ்சிடும்” என்று யோசித்த பிறகு தான் அவரின் முகமே புன்னகையை பூசியது. முகத்திலும் ஒருவித புது தெளிவு பிறந்தது.

அதன்படி அனைவரும் வெளியே கிளம்பி சென்றதும். தன் அன்னைக்கும் உணவை கொடுத்துவிட்டு யாருக்கும் தெரியாமல் விசித்ராவின் வீட்டிற்கு புறப்பட்டு இருந்தார் கீதா.

விசித்ராவும், கோமதியும் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தவர்கள், கீதாவை இந்நேரம் இங்கே சற்றும் எதிர்பார்க்கவே இல்லை.

லேசாக கதவை தட்டி விட்டு அவர் உள்ளே நுழையவும். இருவருமே அவரை திடுக்கிட்டு தான் பார்த்தனர்.

இது நாள் வரை தங்கள் வீட்டிற்கு வந்திடாதவர், இப்படி திடீரென வந்து நிற்கவும் விசித்ராவிற்கும் ஒன்றும் புரியவில்லை.

“என்ன அண்ணி அப்படி பாக்குறீங்க? வீட்டுக்கு வந்தவங்கள வாங்கனு ஒரு வார்த்தை கூட கூப்பிட மாட்டீங்களா? நம்ம வீட்டுக்கு வரர்துக்கு நான் எதுக்கு தயங்கனும்?” என்றவாறு அவர் அழையாமலேயே விறுவிறுவென உள்ளே வந்து விட்டார்.

“வா.. வா கீதா.. ஏதோ யோசனையில.. தப்பா எடுத்துக்காத. உட்காரு.. உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வரேன்” என்று விசித்ரா திரும்பவும்.

“நீங்க இருங்கக்கா. நான் போய் கொண்டு வரேன்” என்று உள்ளே சென்ற கோமதி அவருக்கு தண்ணீரை கொண்டு வந்து கொடுக்கவும்.

அதை மறுக்காமல் பெற்றுக் கொண்டார் கீதா.

“எப்படி இருக்கீங்க அண்ணி? அத்தை எப்படி இருக்காங்க? அண்ணா, பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்த கோமதி, புண்ணிய கோடியை பற்றி ஒன்றுமே கேட்கவில்லை.

அவர் தன்னை ‘அண்ணி’ என்று கூறியது வேறு கீதாவிற்கு கடுப்பை கொடுக்க.

அதை முகத்தில் காட்டாமல் இருக்க வெகுவாக சிரமப்பட்டவர், “ம்ம்.. எல்லாம் நல்லா இருக்காங்க” என்றதோடு முடித்துக் கொண்டார்.

“பொண்ணும், மாப்பிள்ளையும் எப்படி இருக்காங்க கீதா?”.

“அவங்களுக்கு என்ன.. சந்தோஷமா இருக்காங்க! உங்க பொண்ணு எங்க வீட்ல மகாராணி போல இருக்கா” என்றவாறு கோமதியையும் ஒரு பார்வை பார்த்தார்.

அவரின் முகத்தில் கொஞ்சமும் பொறாமையோ, வருத்தமோ இருப்பது போல் தெரியவில்லை. அத்தனை மகிழ்ச்சியாக தான் கீதா பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

“நீங்க வீட்டுக்கு வாங்களேன் அண்ணி. நீங்க வந்தா ருக்மணியும் சந்தோஷப்படுவா இல்ல. அது உங்க வீடு! நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம் போகலாம். உங்க பொண்ண பாக்கலாம்.. சில பேர் மாதிரி பொண்ண கட்டி கொடுத்த வீட்டுக்கு போக முடியாத நிலைமையிலா நீங்க இருக்கீங்க? ஏன் வர மாட்டேங்குறிங்க?” என்று உரிமையாக கேட்பது போல் கோமதியையும் குத்தி காட்டினார்.

அவரின் குத்தல் பேச்சு தனக்கானது என்பது கோமதிக்கு நன்கு விளங்கியது.

“நான் உங்களுக்கு டீ கொண்டு வரேன்” என்று பொதுவாக கூறிவிட்டு எழுந்து சமையலறைக்குள் சென்ற கோமதிக்கு பெரும் மனம் வருத்தம் ஆகிப்போனது.

அவருக்கும் தன் மகள் அனுராதாவை சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை நெஞ்சு வரை முட்டிக் கொண்டு இருக்கிறது. ஆனாலும், போக முடியாத நிலையில் அல்லவா இருக்கிறார்.

எந்த முகத்தை வைத்துக்கொண்டு அங்கே செல்வது? அவருக்குத் தெரிந்து இதுவரை ஒரு நாளும் உமா இவரை தங்கள் வீட்டிற்கு வருமாறு அழைத்ததே கிடையாது.

இங்கே அவர் வரும்போது எல்லாம் கீதாவுடன் சேர்ந்து கொண்டு கோமதியை கரித்துக் கொட்டி விட்டு தான் செல்வார்.

இப்பொழுது என்ன தான் சம்பந்தி என்று ஆகிவிட்டாலும், அவரின் வாசல் படி ஏற நெருடலாக தான் இருந்தது.

அனுராதாவிற்கும் தன் தாயின் தயக்கம் பற்றி புரியாதா என்ன.. அவளும் இதுநாள் வரை தன் தாயை அங்கு வருமாறு அழைத்ததே கிடையாது.

தன் மேல் நிறையவே பாசம் வைத்திருக்கிறார் என்பது புரியும். அதற்காக அவரின் தன்மானத்தை விட்டு அவர் கீழ் இறங்கி வர மகளும் விருப்பப்படவில்லை.

அது மட்டும் இன்றி, அங்கே வந்து அவருக்கு ஏதேனும் அவமானம் என்றால், அதை தன்னால் தாங்கிக் கொள்ள முடியாது என்று எண்ணியவள்.

தன்னால் முடிந்த நேரம் தானே சென்று கோமதியை பார்த்துவிட்டு வருவாள். இல்லை என்றால் போனில் பேசிக்கொள்வாள். இப்படியே அவர்களின் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது‌.

கோமதி டீ கொண்டு வந்ததும், அதை ஒரு மிடர் பருகிய கீதா, “ம்ம்.. அப்படியே இருக்கு உன்னோட டீ. உன் கை பக்குவம் மாறவே இல்ல. நானும் வீட்டுக்கு எத்தனையோ வேலை ஆளுங்கள சேத்துட்டேன். யாரும் உன்ன போல வேலை செய்ய மாட்டேங்குறாங்க. பரவாயில்ல அண்ணி, உங்களுக்கு சம்பளமே இல்லாம வீட்டு வேலைக்கு ஆள் கிடைச்சிடுச்சு” என்று வஞ்சகமாக புகழ்ந்து கலகலவென நகைத்தார்.

விசித்ரா, கோமதி என இருவருக்குமே அவரின் வார்த்தை ஒரு மாதிரியாகி போக. அவரின் சிரிப்பில் இருவரும் இணைந்து கொள்ளவில்லை.

“கோமதிய நான் என்னைக்கும் அப்படி பார்த்தது கிடையாது. என்கூட பிறக்காத தங்கச்சியா நினைச்சு தான் நான் அவளை என்னோட வச்சிருக்கேன். திரும்ப இப்படி எல்லாம் பேசாத கீதா!”.

“இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்? எங்க வீட்லயும் இவங்க இப்படித்தான் இருந்தாங்க. எல்லா வேலையும் பாப்பாங்க. எனக்கும் அப்போ எல்லாம் வீட்டு வேலைக்கு ஆள் வைக்கிற தேவை இல்லாம இருந்தது” என்றவர்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றியவாறு, “இப்போ அப்படியா.. உங்க புருஷனையும், மாமியாரையும் சேர்த்து நான் தானே தனியா பார்த்துக்க வேண்டியதா இருக்கு. ஆனா, இங்க பாருங்க ஜம்முன்னு இங்க வந்து உட்கார்ந்துட்டாங்க. உங்களுக்கு இப்போ வீட்டு வேலைக்கு ஆள் தேவைப்படல போலருக்கே” என்று குத்தலாக பேசவும்.

“என்ன பேசுற நீ? இங்க நான் வேற, கோமதி வேற கிடையாது. இது எங்க வீடு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து தான் எல்லா வேலையும் பார்ப்போம். உன்ன போல என்னைக்கும் கோமதியை வீட்டு வேலைக்காக மட்டும்னு நான் பார்த்தது கிடையாது. என் குடும்பத்துலயும் அவ ஒருத்தி தான்” என்று அவருக்கு சூடாக திருப்பிக் கொடுத்திருந்தார் விசித்ரா.

“ஓ! குடும்பத்துல ஒருத்தவங்க.. அந்த அளவுக்கு நெருங்கிட்டிங்களா.. சரி, அதான் ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டிங்க தனியா இங்க உக்காந்து குடும்பம் நடத்துறீங்களே.‌. அப்புறம் எதுக்காக எங்க அண்ணனை மட்டும் அங்க தனியா தவிக்க விட்டு இருக்கீங்க?

ரெண்டு பொண்டாட்டிய கட்டியும் சன்னியாசம்ன்ற மாதிரி என் அண்ணன் அங்க ஒத்தையில கிடக்கு. ஒன்னு அவரை கொண்டு வந்து இங்க வச்சுக்கோங்க. அது முடியாதா ரெண்டு பேர்ல ஒருத்தர் அங்க வந்து என் அண்ணனை கவனிச்சுக்கோங்க” என்று சற்று அதிகாரமாகவே கூறியிருந்தார்.

அவரின் பேச்சு பெண்கள் இருவருக்குமே பிடிக்கவில்லை. அதிலும், விசித்ராவிற்கு கோபம் சுர்ரென்று ஏறியது.

“உன் அண்ணனோட சேர்ந்து வாழ முடியாதுன்ற முடிவை நான் எடுத்து பல வருஷமாகுது. அவரை விட்டு நான் பிரிஞ்சு வந்தும் பல வருஷமாகுது. திரும்ப அவரோட சேரும் எண்ணமும் எனக்கு கிடையாது. உங்க அண்ணன் தான் பொண்டாட்டி இருக்கும் போதே புது மாப்பிள்ளை ஆகுவாரே..

இப்போ தான் நாங்க ரெண்டு பேரும் அவரை விட்டுட்டு இங்க வந்துட்டோமே.. பொண்டாட்டி இல்லாம தானே இருக்காரு. முடிஞ்சா திரும்பவும் புது மாப்பிள்ளை ஆகிக்க சொல்லு. எங்களால எல்லாம் அவரை கவனிச்சுக்க முடியாது” என்று முகத்தில் அடித்தார் போல் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக கூறிவிட்டார் விசித்ரா.

“என்ன இப்படி கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாத மாதிரி பேசுறீங்க. அவருக்கு நீங்க ரெண்டு பேரும் பொண்டாட்டின்னு இருக்கும் பொழுது, அவர் எதுக்காக இன்னொருத்தியை தேடி போகணும்? ரெண்டு பேர கட்டியே இப்படி ஒருத்தரும் இல்லாம உக்காந்திருக்காரு. இதுல இன்னொருத்திய வேற கட்டவா?” என்று கடுகடுத்த முகத்தோடு அவர் கூறவும்.

“இங்க பாரு கீதா, இதெல்லாம் தேவையில்லாத பேச்சு. எனக்கும், உனக்கும் நடுவுல இருக்க உறவு நான் பொண்ணு கொடுத்தவ, நீ என்கிட்ட இருந்து பொண்ணு எடுத்தவ.. அதோட இருந்தா நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். அண்ணின்ற முறைக்கு நீ என்னை பார்க்க வராத!

சம்பந்தின்ற முறைக்கு நீ எப்ப வேணும்னாலும் தாராளமா என்னை பாக்க வரலாம். உன்னால உன் அண்ணனை பார்த்துக்க முடியலைன்னா, உனக்கு சேர வேண்டியதை பிரிச்சு எடுத்துக்கிட்டு அந்த வீட்டை விட்டு உங்க அக்கா மாதிரி தனியா போயிடு.

அந்த வீடு ஒன்னும் உங்க வீடு கிடையாதே.. அந்த வீடு அவரோடது தானே! வேலைக்கு ஆள் போட்டுக்கிட்டு அவர் அந்த வீட்ல இருந்துக்கட்டும். நீ உன் வழியை பார்த்துக்கிட்டு போயிடு. அதை விட்டுட்டு இங்க வந்து தேவையில்லாத பேச்சு எல்லாம் பேசாத”.

விசித்ராவிடம் என்ன பேசினாலும் வேலைக்கு ஆக மாட்டேங்கிறதே என்ற கடுப்பு அதிகரிக்க.

கோபத்தை எங்கே காட்டுவது என்று தெரியாமல் கோமதியை பார்த்த கீதா, “மூணு வேளை சோறு கிடைச்சா சொர்க்கம்னு இங்க வந்து உட்கார்ந்துட்டா போதுமா.. அங்க உங்க புருஷன் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காரு. உடம்பு முடியலைன்னா யார் பாக்குறது? எல்லாமே என் தலையில தான் வந்து விழுது. அவங்க தான் புரியாம பேசுறாங்க. நீங்களும் அவங்க பின்னாடியே போனா எப்படி?”.

கோமதிக்கு திடீர் மரியாதை கூட கிடைத்தது கீதாவிடமிருந்து. தன் காரியம் ஆக வேண்டுமே..

******

கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Geetha thirunthura madri theriyala..gomathiya marupadiyum geethavukku velai seiyya anuppatheenga…geethavukku uraikkura madri edhavadhu punishment kodunga