Loading

உயிர் – 3

விசித்ராவின் குடும்பத்தினர் சற்று வசதி படைத்தவர்கள். புண்ணிய கோடியின் இரண்டாம் திருமண விஷயம் கேள்விப்பட்டதும் பெரும் எதிர்ப்பு எழுந்துவிட்டது.

அதிலும், கோமதியை இவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்ததும் பெரிய சண்டையே நிகழ்ந்துவிட்டது.

ஏற்கனவே, புண்ணியகோடி தன்னை ஏமாற்றிய அதிர்ச்சியில் இருந்தே மீளாமல் இருந்த கோமதிக்கு, விசித்ராவின் குடும்பத்தினர் சண்டையிட்டதும் ஆடித்தான் போய்விட்டார்.

வயிற்றில் பிள்ளையோடு எந்த ஒரு ஆதரவும் இன்றி நிர்கதியாய் நின்றவருக்கு ஆறுதலாய் இருந்தது அவரின் மாமியார் கற்பகம் மட்டும் தான்.

மொத்த தவறும் தன் மகன் மீது தான் இருக்கிறது என்பது அவருக்கும் நன்கு விளங்கியது. மேலும், ஆதரவிற்கு என்று யாரும் இன்றி இருக்கும் கோமதியின் மேல் எந்த தவறும் இல்லை என்பதை உணர்ந்தவருக்கு அவரை நிர்கதியாய் வெளியில் துரத்த சக பெண்ணாய் மனம் வரவில்லை.

கோமதியை அந்த வீட்டிலிருந்து வெளியேற்ற முடியாமல் போகவும் விசித்ராவின் அண்ணனுக்கு பெரும் கோபம் வந்துவிட்டது.

அவளே இந்த வீட்டில் வாழும் பொழுது தன் தங்கையை இங்கிருந்து அழைத்து சென்று விட்டாள் எங்கே முழு உரிமையும், புண்ணிய கோடியின் மனைவி என்னும் அங்கீகாரமும் கோமதிக்கு போய்விடுமோ என்று எண்ணியவர், விசித்ராவையும் அங்கேயே இருக்கும்படி அறிவுறுத்தினார்.

அப்பொழுது ருக்மணிக்கு இரண்டு வயது. விசித்ராவிற்கு புண்ணிய கோடியின் துரோகம் தெரிந்த பிறகு அந்த வீட்டில் ஒரு நொடியும் இருக்க சற்றும் விருப்பமில்லை.

ஆனாலும், தன் அண்ணனின் வார்த்தையை மீறி செயல்படும் தைரியமும் அப்பொழுது அவருக்கு இருக்கவில்லை.

தன் வீட்டினரின் சொல்படி அங்கேயே இருந்தார். ஆரம்பத்தில் கோமதியின் மீது தன் கோபம் தீரும் மட்டும் எரிந்து விழுந்தார். ஆனால், இவரின் பேச்சுகளுக்கு எல்லாம் எதிர்ப்பேச்சு பேசாத கோமதியின் உண்மை குணம் அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வந்தது.

ஆரம்பத்தில் நடிக்கிறாரோ என்று கூட எண்ணியவருக்கு போகப்போக தான் கோமதியின் இயல்பே இதுதான் என்னும் நிதர்சனம் உரைத்தது.

தன்னை எப்படி தன் கணவன் ஏமாற்றி இருக்கிறாரோ அப்படித்தான் விபரம் அறியாத இந்த அபலையையும் ஏமாற்றி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டவருக்கு மொத்த கோபமும் ஒன்று திரண்டு புண்ணிய கோடியின் மீது தான் எரிமலையாய் கொழுந்து விட்டு எறிந்தது.

ஆனாலும், அவரை ஒன்னும் செய்ய முடியாத தன் நிலையை எண்ணி தன் மேலேயே கோபம், ஆத்திரம் என ஏதேதோ உணர்வுகளில் உழன்று கொண்டிருந்தார்.

ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் விசித்ரா தெளிவாகிவிட்டார். இனி என்ன நடந்தாலும் சரி புண்ணிய கோடியை மட்டும் தன் அருகிலேயே சேர்க்கக்கூடாது என திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டார்.

அதை செயல்படுத்தியும் காட்டினார். அந்த வீட்டில் முழு உரிமை கொண்ட மருமகளாக வளம் வந்தாரே தவிர, புண்ணிய கோடியை தன் அறைக்குள் கூட அனுமதித்தது கிடையாது.

விசித்ராவின் அளவிற்கு சிந்திக்க தெரியாத கோமதி கணவனே கண் கண்ட தெய்வம் என்பது போல் புண்ணிய கோடியை அத்தனை நம்பினார்.

அதற்கு முக்கிய காரணம் புண்ணியகோடி அவரிடம் பேசும் ஆசை வார்த்தைகள் தான். என்ன தான் அவர் மேல் நிறையவே கோபம் இருந்தாலும், பேசிப்பேசியே அவரின் கோபத்தை கரைத்து விட்டார் புண்ணியகோடி.

இப்படியே நாட்கள் நகர கோமதிக்கு பிரசவ தேதியும் வந்து சேர்ந்தது. அனுராதா பிறந்த பிறகு விவரம் அறியாத குழந்தை ருக்மணிக்கு ஏதோ தனக்கே சொந்தமான தங்கை பிறந்துவிட்டாள் என்பது போல் அத்தனை மகிழ்ச்சி.

“பாப்பா.. பாப்பா..” என்று அவள் மீது கொள்ளை பிரியத்தை வைக்க துவங்கி விட்டாள்.

ஆனால் குடும்பத்தில் கற்பகத்தையும் அவரின் கணவர் வேணு கோபாலையும் தவிர்த்து வேறு யாரும் கோமதியை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

கற்பகம் மற்றும் வேணு கோபால் தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் புண்ணியகோடி, இரண்டாவது உமா, மூன்றாவது கீதா.

இரு பெண்களுக்குமே கோமதி என்றால் பாகற்காயாய் கசக்கும். கிட்டத்தட்ட அவரை வீட்டின் வேலைக்காரியை போல் தான் நடத்தினார்கள்.

அவர்களின் பேச்சும், செயலும் அவர்களின் பிள்ளைகளுக்கும் ஒட்டிக்கொண்டது.

உமாவிற்கு ஆதவ் கிருஷ்ணா என்ற மகனும், தாரணி என்ற மகளும் இருக்கின்றனர்.

ஆதவ் கிருஷ்ணா, தாரணி, கீதாவின் மகன் அகிலன் கிருஷ்ணா இவர்கள் மூவரும் தான் சிறு வயது முதலே ஒன்றாக விளையாடுவார்கள்.

அவர்களின் கூட்டத்தில் ருக்மணியையும் இணைத்துக் கொள்பவர்கள், அனுராதாவை மட்டும் அருகில் கூட சேர்ப்பது கிடையாது.

ஒரு புறம் பெரியவர்களின் வெறுப்பு பிள்ளைகளையும் ஆக்கிரமிக்க தொடங்க.

மற்றொருபுறமோ ருக்மணி அனுராதாவின் அழகிய உறவு அன்பால் பலப்பட்டு கொண்டிருந்தது.

விவரம் தெரிந்த பிறகும் கூட முற்றிலுமாக அவளை தன் தங்கையாகவே ஏற்றுக்கொள்ள தொடங்கி விட்டாள்.

ருக்மணி அவர்கள் அனுராதாவை விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டால், தானும் அவர்களுடன் விளையாட மாட்டாள்.

அனுராதாவும், ருக்மணியும் தனித்து விளையாடுவார்கள். இப்படியே நாட்கள் நகர்ந்து செல்ல ருக்மணி பத்தாம் வகுப்பு படிக்கும் நேரம் அது.

ஆரம்பத்தில் ‘சித்தி.. சித்தி..’ என்று பழகிய ருக்மணிக்கு கோமதிக்கும் தங்களுக்கும் இருக்கும் உறவு முறை பற்றி எல்லாம் பெரிதாக தெரியாது.

காலப்போக்கில் தெரிய துவங்கவும் என்ன தான் அவர்கள் மேல் பாசத்தோடு அன்பாக இருந்தாலும், புண்ணிய கோடியை மன்னித்து அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தன் தாயை ஏமாற்றியவரின் மீது அப்படி கோபம் எழுந்தது.

ருக்மணி கோமதியை தூர திருத்தாததற்கு மிக முக்கிய காரணம், கோமதி ருக்மணியை வேற்று மகளாக எண்ணாமல் அவளின் மேல் காட்டிய மாசற்ற உண்மையான அன்பு தான்.

ருக்மணி பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது அவளுடன் படிக்கும் மாணவிகள், “உங்க அப்பா ரெண்டு பொண்டாட்டியையும் ஒரே வீட்டில் வச்சு குடும்பம் நடத்துறாரே எப்படி உங்களால இதையெல்லாம் சகிச்சுக்க முடியுதோ” என்று அவளின் மனம் காயப்படும்படி வெகுவாக அவளை கிண்டல் செய்து விட்டனர்.

அதில் மனம் உடைந்து போனவளிற்கு ஏற்கனவே தன் தந்தையின் மேல் இருந்த கோபம் மலை அளவு பெருகியது. இனி அவருடன் ஒரே வீட்டில் இருக்க முடியாது என்று பெரிய ஆர்ப்பாட்டமே செய்து விட்டாள்.

ஏற்கனவே, அவருடன் அந்த வீட்டில் சகித்துக் கொண்டு இருந்த விசித்ராவிற்கும் தன் மகள் வேறு வீட்டிற்கு சென்று விடலாம் என்று அழைத்ததும் சரி என்று கிளம்பிவிட்டார்.

இனி தன் வாழ்க்கையே தன் மகளுக்காக மட்டும் தான் என்று எண்ணுபவருக்கு அவளின் விருப்பம் தான் முக்கியம் என்று பட்டது போலும்.

தன் அண்ணனின் உதவியோடு புண்ணியகோடியின் வீடு இருக்கும் அதே தெருவிலேயே நான்கைந்து வீடுகள் தள்ளி வேறு வீட்டிற்கு இடம் பெயர்ந்தனர்.

இவர்களுக்காக தாய் வீட்டு சார்பாக வாங்கி கொடுத்திருந்தார் விசித்ராவின் அண்ணன் தர்மன்.

ருக்மணி கோமதியையும், அனுராதாவையும் தங்களுடனேயே வந்துவிடுமாறு அழைக்க. விசித்ராவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. அவருக்குமே கோமதியுடன் நல்ல பிணைப்பு தான்.

ஆனால் கோமதி தான் மறுத்துவிட்டார். ருக்மணியை போல் அனுராதா கிடையாதே. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கும் வரை தான் இங்கே தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவர் இங்கேயே இருந்து விட்டார்.

உமாவின் குடும்பம் பக்கத்து தெருவில் தான் வசிக்கின்றனர்.

கீதா தான் தன் அண்ணன் திறம்பட தங்கள் தொழிலை நடத்தி குடும்பத்தை வழி நடத்த மாட்டார் என்று கூறி தன் கணவரோடு அம்மா வீட்டிற்கே வந்து அமர்ந்து விட்டார்.

என்ன தான் புண்ணிய கோடியும், கீதாவின் கணவர் கணபதியும் இணைந்து அவர்களின் தொழிலை நடத்தினாலும், தொழிலில் கணபதியின் பங்கு தான் அதிகமாக இருக்கும்.

புண்ணியகோடி ஏனோ தானோ என்று தான் தொழிலை நடத்துவார். மாதா மாதம் அவருக்கு என அவரின் பங்கையும் கணபதி தவறாமல் அவரின் கணக்கில் போட்டு விடுவார். அதை வைத்து மகிழ்ச்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் புண்ணியகோடி.

விசித்ராவை போல் தன் அன்னை தனித்து நிற்க தயங்குவது தன்னால் தான் என்பது அனுராதாவிற்கு நன்கு தெரியும். அதனாலேயே தான் படித்து முடித்து நல்ல வேலைக்கு சென்று தன் தாயுடன் அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணத்துடன் வைராக்கியத்தோடு படித்துக் கொண்டிருக்கிறாள்.

வேணுகோபால் துவங்கியது தான் பர்னிச்சர் தொழில். ஆரம்பத்தில் அவரே கடினப்பட்டு தன் கடின உழைப்பால் சிறிய கடையாக ஆரம்பித்தார். அதன் பிறகு படிப்படியாக முன்னேறினார்.

தன் இரண்டு மகள்களையும் சொந்தத்திலேயே திருமணம் முடித்துக் கொடுத்திருக்க, அவர்களும் இவரின் தொழிலையே கையில் எடுக்க துவங்கினர்.

கணபதி புண்ணிய கோடியுடன் இணைந்து வேணுகோபாலின் பர்னிச்சர் வியாபாரத்தை கையில் எடுக்க.

உமாவின் கணவர் சத்யராஜ் தனித்து அதே பர்னிச்சர் தொழிலை ஆரம்பித்தார்.

கணபதி பொருட்களை தயாரிக்கும் வேலையை மட்டும் செய்ய.

சத்யராஜ் தயாரிப்போடு விற்பனையையும் சேர்த்து செய்ய துவங்கினார்.

அதிலும், ஆதவ் கிருஷ்ணா தன் படிப்பை முடித்ததும், தன் தந்தையுடன் இணைந்து அவர்களின் தொழிலை மேலும் ஒரு படி உயரத்திற்கு கொண்டு சேர்த்து விட்டான்.

அவர்கள் இருவரின் கடின உழைப்பால் உருவானது தான் ‘ஏ கே பர்னிச்சர்ஸ்’. பாண்டிச்சேரியில் ஏ கே பர்னிச்சர் தங்களுக்கென தனி பெயரையே பிடித்து விட்டனர்.

அதிலும், ஆதவ்வின் யோசனைப்படி அவர்கள் வெளியிட்டு இருந்த திருமண சீர்வரிசை செட் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

கட்டில், மெத்தை, தலையணை, கலமாரி, டிரெஸ்ஸிங் டேபில், சோபா, சேர், டைனிங் டேபிள் போன்ற பல பொருள்களை குறைந்த விலையில் காம்போவாக அவன் விற்பனை செய்ய செயல்படுத்திய திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.

நான்கு தலங்கள் கொண்ட அவர்களின் கட்டிடத்தில் கீழே முழுவதும் தலையணைகளும், மெத்தைகளும் பருத்தி, இளவம், ஃபோம் என சைஸ் வாரியாக அடுக்கி வைத்திருந்தனர்.

முதல் தளத்தில் மரத்திலும், ஸ்டிலாலும் செய்யப்பட்ட கட்டில்களும், அலமாரிகளும் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இரண்டாம் தளத்தில் டைனிங் டேபிள், சேர்கள், டீப்பாய்கள், பாய்கள் என வீற்றிருக்க.

கடைசி தளத்தில் தலையணை கவர்களும், பெட்ஷீட், பெட் ஸ்ப்ரெட் மற்றும் டிரெஸ்ஸிங் டேபிள்கள் வகை வகையாக காட்சி படுத்தப்பட்டிருந்தது.

நேற்று இரவு வந்து இறங்கிய சரக்குகளை சரி பார்த்துக்கொண்டு தனக்கான அலுவலக அறைக்குள் அமர்ந்திருந்தான் ஆதவ் கிருஷ்ணா.

கதவை லேசாக தட்டிவிட்டு அறைக்குள் நுழைந்த அகில், “ஹாய் ப்ரோ என்ன காலையிலேயே இவ்வளவு ஹார்ட் வொர்க்” என்று கேட்டவாறு பளிச்சென்ற புன்னகையோடு அறைக்குள் நுழைந்தான்.

அதுவரை லேப்டாப்பில் பார்வையை பதித்திருந்தவன் அவனை நிமிர்ந்து பார்த்து ‘வா’ என்னும் விதமாக தலையசைத்து விட்டு மீண்டும் லேப்டாப்பில் தன் பார்வையை பதித்து இருந்தான்.

முக்கிய வேலை நேரத்தில் தேவையற்ற பேச்சுக்களை வைத்துக்கொள்ள மாட்டான். முழு கவனமும் வேலையில் மட்டும் தான் இருக்கும்.

வேலையை முடித்த பிறகு தான் நிமிர்ந்தே பார்ப்பான். அதை அறிந்த அகிலன் அமைதியாக அவனுக்கு எதிரே இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

அனைத்தையும் சரி பார்த்து முடித்த ஆதவ் தன் நாற்காலியில் நன்கு சாவகாசமாக சாய்ந்து அமர்ந்தவாறு தன் கைகள் இரண்டையும் கோர்த்துக்கொண்டு, “என்ன சார் ஸ்வீட் எப்படி இருந்தது?”.

“என்ன ஸ்வீட் ப்ரோ?” என்றவனுக்கு சட்டென்று பிடிபடவில்லை.

“உங்க சின்னத்த பொண்ணு செஞ்ச ஸ்வீட்”.

“ஓ அதுவா.. அதுக்கு என்ன வாவ் தான். செமையா செஞ்சிருந்தா” என்னும் பொழுதே சுவை இன்னும் அவனின் நாக்கில் நடனம் ஆடிக் கொண்டிருந்தது.

ஆதவ் எந்த ஒரு உணர்வையும் தன் முகத்தில் பிரதிபலிக்காமல் அவனை நிர்மலமான முகத்துடன் பார்க்கவும்.

‘ப்ரோவோட பார்வையே சரியில்லையே’ என்ற யோசனையோடு அவனைப் பார்த்தான் அகிலன்.

“நேத்து நைட்டு லோடு இறக்க குடோனுக்கு லாரி வந்து இருக்கு. கொஞ்சம் கூட பொறுப்பில்லாம தூங்குறோம்னு சொல்லி திருப்பி அனுப்பி இருக்கீங்க. வேலை விஷயத்துல சின்சியரா இருக்க முடியல.. உனக்கெல்லாம் ஸ்வீட் ஒரு கேடா” என்று காரசாரமாக திட்ட துவங்கி விட்டான்.

ஆதவ்விற்கு எப்பொழுதும் வேலை விஷயத்தில் சரியாக இருக்க வேண்டும். இல்லை என்றால் யார், என்ன என்றெல்லாம் பார்க்காமல் இப்படித்தான் கடுப்படிப்பான்.

****

கதையை படித்து விட்டு உங்கள் கருத்தையும் சொல்லுங்க 🙏

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்