Loading

உயிர் – 29

கீதா பரபரவென கடுகடுத்த முகத்தோடு வாய்க்குள் யாருக்கோ அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளில் ஈடுபட்டு இருந்தார்.

“கீதா ஒரு காபி கொடு மா” என்றவாறு கணபதி சோபாவில் அமரவும்.

ஆவி பறக்க சூடாக அவருக்கு கப்பில் காபியை கொண்டு வந்து நீட்டி இருந்தார் கீதா.

அவர் அதை பருகிக் கொண்டே நியூஸ் பேப்பரில் தன் பார்வையை பதித்தவாறு, “அகில் எங்க?”.

“அகிலும், ருக்மணியும் இன்னைக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குன்னு சீக்கிரமே கிளம்பிட்டாங்க” என்று அவர் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே அடுப்படியில் குக்கர் விசிலடித்து அவரை அழைத்திருந்தது.

அதை அணைக்க சென்றவர், அப்படியே கழுவாமல் கிடந்த பாத்திரத்தையும் கழுவி விட்டு களைப்பாக வெளியே வரவும்.

கற்பகம், “என்ன புண்ணியகோடி ஒரு மாதிரி வாட்டமா இருக்க?”.

“அது ஒன்னும் இல்லம்மா.. பிரண்ட்ஸோட சேர்ந்து வெளியூர் போயிட்டு வந்தது தண்ணி ஒத்துக்காம சளி பிடிச்ச மாதிரி இருக்கு” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் அமர்ந்தவர், “கீதா ஒரு காபி போட்டு கொடு”.

“என்னை பாத்தா உனக்கு என்ன வேலைக்காரி மாதிரி தெரியுதா?” என்று கோபமாக எறிந்து விழுந்தார் கீதா.

வேலைக்கு ஆள் மாற்றியும் இரண்டு நாட்களாக விடுப்பு எடுத்துவிட்டார்.

ருக்மணிக்கும் பேங்க் வேலையோடு சேர்த்து கம்பெனியிலும் அதிக வேலை என்பதால் அவளையும் ஒரு வார்த்தை சொல்ல முடியவில்லை. அனைத்து கடுப்பும் ஒன்று சேர்ந்து இப்படி திசை திரும்பி விட்டது.

“இப்ப நான் என்ன கேட்டுட்டேன்னு இப்படி கத்துற? ஒரு காபி தானே கேட்டேன்”.

“அதான் ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டி  வச்சிருக்கியே.. அங்க போக வேண்டியது தானே. சும்மா இதை கொடு அதை கொடுனு என்னையே போட்டு நோண்ட வேண்டியது‌”.

சிடுசிடுத்துவிட்டு கிச்சனுக்கு சென்றவர், காபியை கொண்டு வந்து அவர் அருகில் இருந்த டேபிளில் டம்மென்று வைத்துவிட்டு சென்று விட்டார்.

அவரின் நடவடிக்கை புண்ணிய கோடிக்கு ஒரு மாதிரியாகி விட. அந்த காபியை கூட கையில் தொடாமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

தன் மகனின் நிலை புரிந்தாலும், அவன் விதைத்ததை அறுவடை செய்து தானே தீர வேண்டும் என்ற எண்ணத்தோடு பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார் கற்பகம்.

“நான் சொல்றேன்னு எதுவும் நினைச்சுக்காத புண்ணியம். என்னைக்கா இருந்தாலும் ஒரு புருஷனுக்கு கட்டினவ தான் கடைசி வரைக்கும் துணையா இருப்பா. நீ பார்க்க வேண்டிய காலத்துல உன் பொண்டாட்டிங்களை சரியா கவனிக்காம விட்டுட்ட.

பொண்டாட்டி இல்லாத மனுஷனும் கிட்டத்தட்ட அனாதை மாதிரி தான். பெத்த பொண்ணு அம்மா மாதிரின்னு சொல்லுவாங்க. உனக்கு ஒன்னுக்கு ரெண்டு பொண்ணு இருந்து ரெண்டு பேருமே உன் மேல அத்தனை வெறுப்பை கொட்டுறாங்க. இதுக்கெல்லாம் காரணம் யாரு? வயசுல செஞ்ச தப்ப எத்தனையோ முறை நான் உன்கிட்ட திருத்த சொல்லி இருக்கேன்.

ஆனாலும், என் பேச்சை எல்லாம் நீ கண்டுகிட்டதே இல்ல. எப்பயுமே நம்ம குடும்பத்தோட இருக்கிறது தான் பா நமக்கு மரியாதை. பெத்தவளா இருந்தாலும், கூட பொறந்தவங்களா இருந்தாலும் ஒரு அளவுக்கு மேல பாக்க மாட்டாங்க” என்று கவலையான குரலில் கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

புண்ணியகோடிக்கு இனி அது உரைத்தாலும் பயனில்லையே.. காலம் ஓடிவிட்டது. இனி என்ன சரி செய்து விட முடியும்.

******

அன்று ஆதவ்வின் ஷோரூமிற்கு வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட அதிகமாகவே வந்திருந்தனர்.

ஸ்பெஷல் ஆஃபர் ஒன்று போய்க் கொண்டிருப்பதால், பாண்டிச்சேரியில் இருக்கும் மொத்த கூட்டமும் அங்கே தான் கலை கட்டியிருந்தது.

விற்பனையை மேற்பார்வை பார்த்துவிட்டு அப்போது தான் அலுவலக அறைக்குள் வந்து அமர்ந்தவள். மீதம் இருக்கும் பொருட்களின் ஸ்டாக்கை கணக்கெடுத்துக் கொண்டிருந்தாள்.

அவர்களின் கீழ் வேலை பார்க்கும் அனைவரிடமுமே அனுராதவிற்கு என்று நல்ல பெயர் கிடைத்துவிட்டது.

தங்களுக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் என்று எந்த ஒரு பாராபட்சமும் இன்றி அவர்களுடனும் அன்பு பாராட்டி தட்டிக் கொடுத்து அவள் வேலை வாங்கும் அழகு சத்யராஜிற்கு மிகவும் பிடித்திருந்தது.

அவ்வப்பொழுது வீட்டில் உமாவிடமும் அதைப் பற்றி கூறி பெருமையாக பேசுவார்.

அன்று ஒரு கிளைன்ட் மீட்டிங்கிற்கு சென்று விட்டு வந்திருந்தான் ஆதவ். வரும்பொழுதே முகம் சற்று சோர்வாக காட்சியளித்தது.

“என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்கீங்க?”.

தன் இருக்கையில் அமர்ந்தவன். சட்டையின் கையை முட்டி வரை ஏற்றி விட்டு விட்டு நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டு ஏதோ யோசனையோடு, “ஒரு சின்ன இஸ்ஸீ ஆயிடுச்சு”.

அவன் அருகில் எழுந்து வந்தவள் தண்ணீர் பாட்டிலை அவனுக்கு கொடுத்தவாறு, “என்ன ஆச்சு?” என்றாள் மெதுவாக.

“ஒரு பல்க் ஆர்டர் நம்ம கிட்ட வந்துச்சு‌. எல்லாமே உடனே வேணும்னு கேட்டிருந்தாங்க. அவங்க கேட்ட போலவே எல்லாம் ரெடி பண்ணியாச்சு. பட், மாடல்ஸ் அவங்க அசிஸ்டென்ட் நம்பருக்கு சென்ட் பண்ணி இருந்தோம். அவர் பார்த்துட்டு ஓகே பண்ணிட்டாரு.. இன்னைக்கு தான் ஓனர் கைக்கு டிசைன்ஸ் போயிருக்கு போலருக்கு.

அதுக்குள்ள நம்ம புரொடக்ஷ்ன் டீம் ப்ரொடக்ஷ்ன் எல்லாத்தையும் கம்ப்ளீட் பண்ணி முடிச்சிட்டாங்க. பட், ஓனருக்கு அதுல சில டிசைன்ஸ் சாடிஸ்பை ஆகலைன்னு டைரக்ட்டா என்கிட்டயே சொல்லிட்டாரு. இப்போ லாஸ்ட் மினிட்ல நியூ டிசைன்ஸ் ப்ரிப்பேர் பண்ணி ப்ரொடக்ஷ்ன் பண்ணி டூ டேஸ்ல இந்த மொத்த பிராசஸையும் கம்ப்ளீட் பண்ணனும். அதான் ரொம்ப குழப்பமா இருக்கு” என்றான் துவண்டு போய்.

இப்படி எல்லாம் வெகு சாதாரணமாக துவண்டு போகுபவன் கிடையாது ஆதவ் கிருஷ்ணா.

அவனே இப்படி துவண்டு போய் பேசவும், விஷயம் எத்தனை தீவிரம் என்பது அவளுக்கு நன்கு புரிந்தது.

“அப்படியா! எந்த டிசைன்ஸ் எல்லாம் அவங்க ரிஜெக்ட் பண்ணாங்க?” என்றவளிடம் தன் லேப்டாப்பை திருப்பி அதில் இருக்கும் கட்டிலின் மாதிரிகளை காட்டிக் கொண்டிருந்தான்.

“ஓகே, நமக்கு தான் இன்னும் 2 டேஸ் டைம் இருக்குல்ல.. அதுக்குள்ள ஏதாவது பண்ணி இதை நாமே சரி பண்ணிடலாம். லாஸ்ட் மினிட்ல முடியாதுன்னு சொன்னா நம்ம ஷோரூமுக்கு இருக்குற நல்ல பேர் கெட்டுப் போயிடும்”.

“என்ன விளையாடுறியா ராதா.. எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்டா சொல்லிட்ட.. நாம எப்படி மேனுஃபேக்சர் பண்ண போறோம்னு நினைச்சாலே எனக்கு தலை சுத்துது. மேனுஃபாக்சரிங்கை விடு. டிசைன் ரெடி பண்ணனும்.. எனக்கு அது தான் பெரிய வேலை.. இத்தனை டிசைனையும் ரெடி பண்ணவே டூ டேஸ்க்கு மேல ஆகும். மேனுஃபாக்சரிங் கூட அகில் கிட்ட ஹெல்ப் கேட்டுக்கலாம்” என்றவாறு அவன் தன் நெற்றியை தேய்த்துக் கொள்ளவும்.

வேகமாக தன் டேபிளிற்கு சென்றவள், தன் லேப்டாப்பை கொண்டு வந்து அவனின் முன்பு காட்டி இருந்தாள்.

“என்ன இது?” என்று புருவம் சுருக்கி அவளின் லேப்டாப்பில் தன் பார்வையை பதித்தவனின் இதழிலோ கொஞ்சம் கொஞ்சமாய் புன்னகை விரிய.

“இதெல்லாம் எப்படி?”.

“உங்களுடைய டிசைன்ஸ் நிறைய நான் பார்த்திருக்கேன். நீங்க ஸ்டாக் டீடைல்ஸ் செக் பண்ண ரவுண்ட்ஸ்க்கு போகும்போது எனக்கு போர் அடிக்குதேனு உங்களுடைய டிசைன்ஸ்ல இருந்து இன்ஸ்பயர் ஆகி அதை எனக்கு பிடிச்ச மாதிரி கொஞ்சம் மாடிஃபை பண்ணி இந்த டிசைன்ஸ் எல்லாம் நானே ரெடி பண்ணது”.

“வாட்! நீயே ரெடி பண்ணியா?” என்றவனுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி.

“ம்ம்.. இந்த டிசைன்ஸ் அவங்களுக்கு பிடிக்குமான்னு தெரியல”.

“வாட்! அவங்களும் இது போல டிசைன் தான் வேணும்னு கேட்டு இருந்தாங்க. கொஞ்சம் ட்ரடிஷனலாவும், அதே சமயம் ஸ்டைலிஷாவும். இது பர்ஃபெக்ட்டா இருக்கும்னு நினைக்கிறேன். இது எல்லாத்தையும் எனக்கு மெயில் பண்ணு. நான் இதையெல்லாம் அவரோட அசிஸ்டென்ட்க்கு சென்ட் பண்றேன். அவங்க அப்ரூவ் கொடுத்துட்டா அகில் கிட்ட பேசி உடனே ப்ரொடக்ஷ்ன் ஸ்டார்ட் பண்ணிடலாம்”.

இப்பொழுது தான் அவனின் முகத்தில் தொலைந்த புத்துணர்வு மீண்டிருந்தது.

தங்களை நம்பி ஆர்டர் கொடுத்து விட்டார்கள். தவறு யார் மேல் இருந்தாலும் கடைசி நேரத்தில் முடியாது என்று கையை விரிக்க இவனுக்கு மனம் ஒப்புக்கொள்ளவில்லை.

அதில் தங்களின் நிறுவன பெயரும் அடங்கி இருக்கிறதே. இதனால் தங்களின் பெயர் மார்க்கெட்டில் சரிய கூடும் என்று எண்ணியவனுக்கு பெரும் குழப்பமாக இருந்தது.

ஆனால், அவனின் குழப்பத்தை நொடியில் தீர்த்து வைத்து விட்டாள் அவனின் ராதை.

கிளைன்ட்டிடம் இருந்து சம்மதம் என்று பதில் மெயில் வந்து விடவும் தான் அவனுக்கு முழு திருப்தியே கிடைத்தது.

“உஃப்!” என்று நிம்மதியோடு பெருமூச்சை ஊதியவன், “இப்போ தான் ரிலாக்ஸா இருக்கு” என்ற கையோடு அகிலனுக்கும் தொடர்பு கொண்டு பொருட்கள் தயாரித்தல் பற்றியும் பேசி விட்டான்.

அடுத்தடுத்த வேலைகள் துரிதத்தில் நடைபெற. அவர்கள் எதிர்பார்த்தது போலவே இரண்டு நாட்களில் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, கூறியது போலவே அவர்களுக்கு அனுப்பியும் வைக்கப்பட்டாகிவிட்டது.

அனுவிற்கும் தன்னால் அவனுக்கு இப்படி ஒரு உதவி செய்ய முடிந்ததே என்று உள்ளுக்குள் பேரானந்தம் தான்.

தனக்காக ஒவ்வொரு இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் அவன் துணை நிற்கும் பொழுது, அவனின் கஷ்டத்தில் தானும் சிறு பங்கெடுத்திருக்கிறோம் என்பதை எண்ணும் பொழுதே அவளுக்குள் அப்படி ஒரு மகிழ்ச்சி.

ஆரம்பத்தில் இந்த திருமண வாழ்வு சரி வருமா என்று எண்ணியவள் தான்.

திருமணமே வேண்டாம் என்று இருந்தவள் தான்.

அப்படியே திருமணம் செய்தாலும், இந்த சொந்தத்தில் எந்த ஒரு உறவும் வேண்டாம் என்று முடிவாக இருந்தவள் தான்.

அனைத்துமே இப்பொழுது தலைகீழாக அல்லவா மாறிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக இவளின் மனதிற்குள் இடம் பிடித்து, இப்பொழுது அவளின் மனதை மொத்தமாக ஆக்கிரமித்து விட்டிருந்தான் ஆதவ் கிருஷ்ணா.

சிறுவயதில் நடந்த சில கசப்பாக சம்பவங்களினால் அவன் மேல் ஒரு கோபம், அதிருப்தி என அனைத்துமே இருந்தது தான்.

ஆனால், அது அனைத்தையும் தன் காதல் கொண்டு அழித்திருந்தான் ஆதவ் கிருஷ்ணா.

என்றோ நடந்த ஒரு சம்பவத்தை இழுத்து பிடித்துக் கொண்டு இப்பொழுது தன் மேல் மாரியாய் காதலை பொழிபவனிடம் எப்படி வெறுப்பை கக்க முடியும்.

இந்த இரண்டு நாட்களுமே ஆதவ், அகில், அனு என யாருக்கும் சரிவர உறக்கமோ, உணவோ கிடையாது.

மூவரும் அலுவலகமே கதி என கிடந்தனர்.

சத்யராஜ் தான் தன் மருமகளின் பெருமையை தன் மனைவியிடம் கூறி வாயாறிப் போனார்.

அதிலும், எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் அனு துரிதமாய் செயல்பட்டு இருக்கிறாள் என அவளின் புத்திசாலித்தனத்தை பற்றியும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தார்.

அன்று காலை 7:00 மணிக்கு தான் அனைத்து வேலையையும் முடித்துவிட்டு அனுராதாவும், ஆதவ்வும் அத்தனை கலைப்பாக வீடு வந்து சேர்ந்தனர்.

வீட்டிற்குள் நுழையும் பொழுதே அவர்களை தடுத்திருந்தார் உமா.

******

கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்