Loading

உயிர் – 27

“ஷ்! ஷ்! இப்படி எல்லாம் பேசாதீங்க. யாராவது கேட்டா என்னை பத்தி என்ன நினைப்பாங்க. நான் ஒன்னும் அவ்வளவு மோசமான பொண்ணு கிடையாது. அப்படி இப்படி எல்லாம் பார்க்க மாட்டேன். எப்போவாவது கிஸ்ஸிங் சீன்ஸ் பார்த்து இருக்கேன். அதுவும் நானா ஒன்னும் தேடிப் பிடித்து பாக்கல. வெப் சீரியஸ் பார்த்துட்டு இருக்கும்போது தானா வரும்போது பார்ப்பேன்” என்று மெல்லிய குரலில் அவள் நெலிந்துக் கொண்டே கூறவும்.

“ஓ! ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி இருந்துகிட்டு நீ இவ்வளவு வேலை பார்த்து இருக்கியா!” என்றான் ஆச்சரியமாக.

“அப்போ இந்த மாதிரியெல்லாம் பார்த்து தான் உனக்கு நாலைஞ்சு குழந்தை குட்டியோட செட்டில் ஆகணும்னு ஆசை வந்துச்சோ” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் கேட்கவும் தான் அவளின் மூளைக்குள் பொறி தட்டியது.

“ஐயோ! அது சும்மா அக்கா கிட்ட..” என்றவளின் வார்த்தைகள் அப்படியே அந்தரத்தில் தேங்கி நிற்க.

“அப்போ அக்கா தான் உங்ககிட்ட இது எல்லாம் சொன்னாளா?” என்றாள் மீண்டும் அதிர்ச்சியோடு.

“உன் அக்கா ஒன்னும் சொல்லல. நீ தான் சொன்ன”.

“நானா?” என்று குழப்பமாக அவள் அவனை பார்க்கவும்.

“ம்ம்.. நிச்சயத்துக்கு முதல் நாள் உன் அக்கா உனக்கு போன் பண்ணாங்கல்ல.. அப்போ நானும் கான்ஃபரன்ஸ்ல தான் இருந்தேன்”.

அவன் கூறியதை கேட்டவளிற்கு பெரும் சங்கடம் ஆகிப் போனது. அன்று என்னவெல்லாம் பேசி வைத்து விட்டாள்.

அதன் விளைவு தான் இதெல்லாம் என்பதை அறியும் பொழுது ஏனோ அவனின் முன்னே நிற்கவே முடியவில்லை. இப்பொழுதே இவன் கண்களை விட்டு மாயமாய் மறைந்து விட்டால் போதும் என்று ஆகிவிட்டது.

அவள் சங்கடத்தோடு தன் கைகளை பிசைந்து கொண்டு அமைதியாக நிற்கவும்.

“என்ன சைலன்ட் ஆயிட்ட.. அன்னைக்கு எவ்வளவு பேச்சு.. ம்ம்.. நான் கூட உன்ன என்னமோனு நினைச்சேன். ஆனா, நீ பயங்கர தில்லாலங்கடியா இருக்கியே”.

“இங்க பாருங்க இப்போலாம் கிஸ்ஸிங் சீன் பாக்குறது எல்லாம் ரொம்ப சர்வ சாதாரணமா ஆயிடுச்சு. ஏன் நீங்க இதுவரைக்கும் பார்த்ததில்லயா?”.

“ஏன் பார்த்ததில்ல.. அதெல்லாம் நிறையவே பார்த்திருக்கேன். என்ன ஒன்னு ப்ராக்டீஸ் பண்ணி பார்த்ததில்லை. இதுவரைக்கும் அப்படி ஒரு சான்ஸ் கிடைக்கல. உனக்கும் சந்தேகம் இருக்கு.. எனக்கும் ப்ராக்டிஸ் பண்ணி பாக்கணும்..” என்று இழுத்தவாறு அவளை பார்த்துக் கொண்டே கூறவும்.

இதற்கு மேல் அவனிடம் பேச முடியாது என்று அவளே முடிவு செய்து விட்டாள். அவனின் பேச்சு செல்லும் திசை இவளின் முக சிவப்பை நிச்சயம் அவனிடம் காட்டிக் கொடுத்து விடும்.

சட்டென்று கீழே குனிந்து சிதறி கிடந்த ஃபையில்களை எடுத்தவள், “நான் செக் பண்ணிட்டு சொல்றேன்” என்றவாறு அறைக்குள்ளேயே போடப்பட்டிருந்த நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அதன் பிறகு அவனுக்கும் வேலைகள் ஒன்றன் பின் ஒன்றாக லைன் கட்டி நிற்கவும். தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரும் இரவு தான் வீடு திரும்பி இருந்தனர்.

இப்படியே அவர்களின் நாட்கள் தெளிந்த நீரோடையாய் சென்று கொண்டிருந்தது. அடுத்த 10 நாட்களும் நொடியில் நகர்ந்துவிட்டது.

அகிலனும், ருக்மணியும் தங்கள் பயணத்தை முடித்துக் கொண்டு வந்து விட்டனர்.

இந்த பத்து நாளிலேயே நொந்து போனது என்னவோ கீதா தான்.

மாலை போல் டீ போடலாம் என்று சமையல் அறைக்குள் நுழைந்தவருக்கு தலை சுற்றாத குறை தான்.

சமையலறையே தலைகீழாய் கிடந்தது. ஆங்காங்கே பாத்திரங்கள் வீற்றிருக்க. கழுவ வேண்டிய பாத்திரங்கள் வேறு சிங்கில் மண்டி கிடந்தது.

தன் தலையை பிடித்துக் கொண்டு வெளியே வந்தவர், “இந்த வேலைக்காரங்கள என்ன சொல்றது.. ஒரு நாள் வந்தா ரெண்டு நாள் லீவ் போடுறாங்க. நான் ஒரு ஆளா இத்தனை வேலையையும் எப்படி பார்க்கிறது. வேலைக்கு ஒரு நல்ல ஆளும் அமைஞ்சு தொலைய மாட்டேங்குது” என்று சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்.

“அம்மாடி கீதா கொஞ்சம் சூடா டீ போட்டு கொடும்மா தலைவலியா இருக்கு” என்றவாறு வெளியே வந்து அமர்ந்தார் கற்பகம்.

வெளியூர் சென்று வந்தது முதல் ருக்மணியும், அகிலனுடன் சேர்ந்து அலுவலகம் செல்ல துவங்கி இருந்தாள்.

பார்த்து பார்த்து ஆசைப்பட்டு தங்கள் வீட்டிற்கு வந்த மருமகளை அதட்டி வேலை வாங்கவும் முடியவில்லை.

வீட்டில் இருந்தாலாவது வாங்கி இருக்கலாம். அவள் தான் பேங்க் வேலை முடிந்ததும் இவர்களின் கம்பெனிக்கு சென்று விடுகிறாளே..

வீட்டில் இருக்கும் நேரங்களில் ஒன்று, இரண்டு வேலைகள் செய்ய தான் செய்கிறாள்.

கோமதி இருக்கும் வரை சொகுசாகவே இருந்து பழகிவிட்ட கீதாவிற்கு தான் ருக்மணி செய்யும் வேலைகள் போதுவதில்லை.

கற்பகத்தை அடுத்து புண்ணிய கோடி, கணபதி என அனைவரும் வந்துவிட. எல்லோருக்கும் சேர்த்து டீ வைத்து கொண்டு வந்து கொடுத்த கீதா, அடுத்ததாக அடுப்படியை சுத்தம் செய்யும் வேளையில் இறங்கிவிட்டார்.

முணங்கிக் கொண்டே அனைத்தையும் சீர்படுத்தி முடித்தவர். இரவு உணவிற்கு சப்பாத்தியும், தக்காளி தொக்கும் செய்திருந்தார்.

அனைவரும் சாப்பிட்டு முடிக்கவும்.

“அகில் என்னால முன்ன போல வேலையெல்லாம் செய்ய முடியல. ருக்மணி வீட்டிலேயே இருக்கட்டும். எனக்கும் துணையாக இருக்கும். எதுக்கு அவளையும் வேலைக்கு போக வச்சு கம்பெனிக்கும் இழுத்துக்கிட்டு அலையுற”.

“ஏன் மா அவ தான் காலையில டிபன் செய்யுறா.. வீட்ல இருக்கும்பொழுது உங்களுக்கு வேலை எல்லாம் செஞ்சு கொடுத்துட்டு தானே இருக்கா. வீட்டிலேயே முழு நேர வேலை பார்த்து என்ன பண்ண போறா? அவ கம்பெனிக்கு வரர்து எனக்கும் ஹெல்பா தான் இருக்கு”.

“கோமதி இருந்த வரைக்கும் எனக்கு நம்ம வீட்ல இவ்வளவு வேலை இருக்குன்னே தெரியாது. சம்பளமே இல்லாத வேலைக்காரி மாதிரி அப்படி வேலை பார்த்தா. இப்போ மொத்த வேலையும் என் தலையில விழுந்ததும் என்னால செய்ய முடியல. வேலை செய்றவங்களும் ஒரு நாள் வந்தா ரெண்டு நாள் லீவ் போடுறாங்க. நான் ஒத்த ஆளு எப்படி எல்லா வேலையையும் பார்க்க முடியும்?”.

“அத்த உங்களால வேலை செய்ய முடியலைன்னா வீட்டுக்கு நல்ல வேலை செய்றவங்களா பார்த்து வச்சுக்கோங்க. சித்தியை ட்ரீட் பண்ண மாதிரி என்னை பண்ணலாம்னு பாக்காதீங்க” என்று பட்டென்று கூறிவிட்டாள் ருக்மணி.

“அப்புறம் இன்னொரு விஷயம்.. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேன். சித்தியை பத்தி இப்படி எல்லாம் பேசாதீங்க. அவங்க இந்த வீட்ட அவங்க வீடா நினைச்சு தான் எல்லா வேலையும் மனசார செஞ்சாங்க. சொல்லப்போனா அது தான் உண்மை! இந்த வீடு அவங்க வீடு! ஏன்னா, அவங்க தான் இந்த வீட்டுக்கு வாழ வந்தவங்க. உங்கள இன்னொருத்தர் வீட்டுக்கு கட்டி கொடுத்தாச்சு. நீங்க ஒன்னும் இந்த வீட்டு பொண்ணு கிடையாது. அடுத்த வீட்டு பொண்ணு தான். ஏதோ அவங்க வேலைக்காரி போலவும், நீங்க வீட்டு ஓனர் போலவும் பேசுறீங்க” என்று பொங்கி விட்டாள்.

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இப்படி குதிக்கிற? மாமியாருக்கு முடியலைன்னா மருமக தான பொறுப்பை எடுத்துக்கணும்”.

“நான் பேங்க் போயிட்டு, ஷோரூம் போயிடுறேன்ல.. நான் எப்படி பொறுப்பை எடுத்துக்க முடியும்? என்னால முடிஞ்ச வேலையை நான் பார்ப்பேன். மாட்டேன்னு சொல்ல மாட்டேன். அதுக்காக இந்த வீட்டுக்கு சம்பளம் இல்லாத வேலைக்காரியா என்னை ஆக்க பார்க்காதீங்க. நான் இந்த வீட்டோட மருமக தான். ரெண்டு பேரும் சேர்ந்து வேலையை ஷேர் பண்ணி பார்ப்போம். உங்களால முடியாதுன்னா என்னாலும் முடியாது. வீட்டுக்கு வேலைக்கு ஆள் வச்சிடுங்க” என்று விட்டு விறுவிறுவென தன் அறைக்கு எழுந்து சென்று விட்டாள்.

“பாத்தியாடா உன் பொண்டாட்டி எப்படி பேசிட்டு போறான்னு..” என்று அவளின் முதுகை முறைத்துப் பார்த்துக் கொண்டே கூறினார் கீதா.

“அம்மா அவளுக்கு தான் கோமதி அத்தை பத்தி இப்படி எல்லாம் பேசினா பிடிக்காதுன்னு தெரியும்ல. அப்புறம் ஏன் அவ முன்னாடியே வேலைக்காரினு பேசுறீங்க. அதான் அவளும் கோவத்துல பேசிட்டு போறா. எப்பவுமே யாராவது வேலை செய்வாங்க நாம மட்டும் எஜமானியா இருக்கலாம்னு நினைச்சா எப்படி? நான் ஒன்னும் இந்த வீட்டுக்கு வேலை செய்றதுக்காக அவளை கட்டி கூப்பிட்டு வரல. அவ சொல்ற போல உங்களால முடியலைனா வேலைக்கு வேற ஆளை வைங்க” என்று விட்டு அவனும் எழுந்து சென்று விட்டான்.

“பாத்தீங்களாம்மா உங்க பேத்திக்கு திமிரை.. என்ன பேச்சு பேசிட்டு போறா. அனு கூட என்னை இதுவரைக்கும் இப்படி எல்லாம் பேசுனது கிடையாது” என்றவருக்கு ஆதங்கம் தாளவில்லை.

“அனுவுக்கு ஒன்னும் பேச தெரியாம இல்ல கீதா. கோமதி பேச விட்டது கிடையாது. அதுவரைக்கும் உன் மரியாதை தப்பிச்சதுன்னு நெனச்சுக்கோ” என்று அவரும் கடுப்பாக எழுந்து சென்றுவிட.

புண்ணிய கோடியை முறைத்துப் பார்த்த கீதா, “நீ மட்டும் ஏன் சும்மா இருக்க? உன் பங்குக்கு நீயும் ஏதாவது சொல்லிட்டு போ”.

“இதெல்லாம் ஒரு விஷயம்னு பெருசு படுத்திட்டு இருக்க பாரு.. உன்னை என்னன்னு சொல்றது” என்றவாறு வழக்கம் போல் விட்டேற்றியாக ஒரு பதிலை கூறிவிட்டு எழுந்து சென்று விட்டார்.

“ஆமா, பொண்டாட்டிக்கு ஒன்னுனாலே இவர் பதற மாட்டார். என்னை மட்டும் பெருசா கவனிக்க போறாரா என்ன” என்று கருவியவாறு புலம்பி கொண்டே சாப்பிட்ட பாத்திரங்களை சுத்தப்படுத்த தொடங்கினார் கீதா.

*****

அன்று கணக்கு விஷயமாக பேசுவதற்காக ஆதவ்வை சந்திக்க அலுவலகம் வந்திருந்தான் அகிலன் ருக்மணியுடன்.

“வாக்கா.. வாங்க மாமா..” என்று அவர்களை இன்முகமாக வரவேற்றாள் அனுராதா.

“வா அகில், சேல்ஸ் எல்லாம் எப்படி போகுது? முன்னைக்கு இப்போ பெட்டர் தானே”.

“ம்ம்.. அண்ணா ரொம்பவே நல்லா போகுது. எதிர்பார்த்ததை விட நிறையவே ப்ராபிட் வந்திருக்கு”.

“சூப்பர் டா!”.

“அண்ணா உங்க கிட்ட ஸ்டாக் எடுக்குறதை பத்தி பேச தான் வந்து இருக்கேன்” என்றவாறு அகில் ஆதவ்வுடன் பேசிக் கொண்டிருக்கவும்.

ருக்மணியும், அனுராதாவும் சற்று தள்ளி அமர்ந்து கொண்டு இருந்தனர்.

“என்னக்கா ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?” என்ற அனுவிடம் முதல் நாள் நடந்த சம்பவத்தை கூறியிருந்தாள் ருக்மணி.

“அத்தை எப்போவுமே இப்படித்தான் கா. அதெல்லாம் நீ ஒன்னும் கண்டுக்காத”.

“சித்தியை யூஸ் பண்ணிக்கிட்ட மாதிரி என்னையும் யூஸ் பண்ணிக்கலாம்னு பாக்குறாங்க அனு. அதான் எனக்கு கோபம் வந்துடுச்சு நானும் பிடிச்சு திட்டி விட்டுட்டேன்”.

“ம்ம்” என்றவளுக்கு என்ன கூறுவது என்று தெரியவில்லை.

தன் அக்காவும் தன்னை போல் வாயை மூடிக்கொண்டு இருந்தால் வேலைக்காரியை போல் தான் ஆக்கிவிடுவார்கள் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது. எனவே, அவள் போக்கிலேயே போகட்டும் என்று அமைதியாகிவிட்டாள்.

*****

கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
6
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. கீதாவுக்கு இதெல்லாம் பத்தாது… கொஞ்ச நஞ்சமா ஆடினாங்க.. நல்லா வேணும்…