
உயிர் – 25
“நீங்க அவங்களை எப்படி சந்தோஷமா பாத்துக்கிட்டிங்கன்னு நாங்களும் இந்த வீட்டில் இருந்து பார்த்துகிட்டு தானே மாமா இருக்கோம். உங்க பொண்ணு ஆசைப்பட்ட படிப்பை கூட நீங்க படிக்க வைக்கல. அந்த அளவுக்கு நீங்க சந்தோஷமா பாத்துக்கிட்டிங்க.. உங்க அளவுக்கு இல்லனாலும், அதுல பாதியாவது என் பொண்டாட்டியை என்னால சந்தோஷமா வச்சுக்க முடியுதான்னு பார்க்கிறேன்” என்று வஞ்சகமாக புகழ்ந்தான் அவரை.
அதில் அவர் வெடுக்கென்று தன் முகத்தை திருப்பிக் கொள்ளவும்.
அனுராதாவிற்கு தன் பார்வையை அவனிலிருந்து அகற்றவே முடியவில்லை.
அவன் பேச பேச இவளுக்குள் அப்படி ஒரு பரவசம். அவனையே அசந்து போய் ‘ஆ’வென பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
ருக்மணியும், அகிலனும் கூட அவன் கூறுவது சரி என்பது போல் இன்முகமாக தான் அமர்ந்திருந்தனர்.
“மனசுல ஏதோ ஒரு முடிவோட தான நீங்க இங்க கிளம்பி வந்திருக்கீங்க. அது என்னன்னும் நீங்களே சொல்லிடுங்க. எதுக்கு சுத்தி வளைச்சு பேசிக்கிட்டு” வெடுக்கென்றார் புண்ணியகோடி.
“வெரி குட்! கரெக்டா பாயிண்ட்டுக்கு வந்துட்டீங்களே” என்று அவரை மெச்சும் பார்வை பார்த்தவன்.
தன் கால் மேல் கால் இட்டு இருக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டு, “இனி மாச மாசம் ஷேரிங் மூணா போடணும். இத்தனை நாள் என் மாமியார் இவரோட இருந்தாங்க. அதனால இரண்டு ஷேரிங் போதும்னு நினைச்சிருப்பீங்க. இப்ப தான் அவங்க இங்க இல்லயே.. இனி அவங்களுக்கும் சேர்த்து மூணு ஷேரிங்கா போடணும்.
அதோட ருக்மணிக்கு நீங்க எப்படி நகை, சிர்வரிசைனு எல்லாம் செஞ்சு என் தம்பிக்கு கட்டி கொடுத்தீங்களோ.. அதே போல அனுவுக்கும் எந்த குறையும் இல்லாம செய்யணும்” என்று சட்டமாக கூறினான்.
அவனின் வார்த்தையில் அவனை இகழ்ச்சியாக பார்த்த புண்ணிய கோடி, “ஓ! மாப்பிள்ளைக்கு நகையும், சீர்வரிசையும் வேணும்னா அதை நேரடியாவே கேட்டு இருக்கலாமே.. எதுக்கு இப்படி சுத்தி வளச்சு பேசிகிட்டு” என்று நக்கல் குரலில் கேட்டார்.
அனுவிற்குமே அவன் நகைகளை கேட்டதற்கான காரணம் புரியவில்லை. இவர்களிடமிருந்து எதுவுமே வேண்டாம் என்று எண்ணுபவள். அவர்களின் நகைக்கு மட்டும் ஆசைப்படுவாளா என்ன..
“என் பொண்டாட்டிக்கு நீங்க செய்யுறதை விட அதிகமாகவே என்னால நகை செஞ்சு போட முடியும். அது எனக்கு ஒரு விஷயமே இல்ல. ஆனாலும், என் பொண்டாட்டி சும்மா கைய வீசிக்கிட்டு வந்தானு யாரும் ஒரு வார்த்தை சொல்லிட கூடாது பாருங்க.. அதோட அவ ஒன்னும் ஒன்னும் இல்லாத வீட்ல பிறந்தவ கிடையாது. எல்லா வசதியும் இருக்க வீட்ல தான பிறந்து இருக்கா.. அவளுடைய அப்பா அம்மானு எல்லாருமே அவளுக்கு இருக்கும் பொழுது எதுக்கு ஒன்னும் இல்லாம வெறும் கையோட அவ கல்யாணம் பண்ணி வந்தானு பேர் வாங்கணும். என்ன தான் அவளுக்கு நான் தங்கத்தாலேயே இழைச்சாலும் அம்மா வீட்டு சார்பா செய்யுற மாதிரி வராதே. அதோட இது அவளுடைய உரிமை தான. ஏன் ருக்மணிக்கு செஞ்ச உங்களுக்கு அனுவுக்கும் செய்யுற கடமையும் கூட இருக்கே..
ரெண்டு பொண்ணையும் நீங்க ஒரே போல தானே பாக்குறீங்க. அப்ப ரெண்டு பேருக்கும் எல்லாத்துலயுமே ஈக்குவாலிட்டி இருக்கணும். எந்த விதத்திலும் என் பொண்டாட்டி தரம் தாழ்ந்து போய்ட கூடாது”.
“ஆமா புண்ணியம். ஆதவ் சொல்றது தான் சரி. அனுவுக்கும் நீ ருக்மணிக்கு செஞ்ச போலவே எல்லாம் செய்யணும். அது தான் அவளுக்கும் அவங்க மாமியார் வீட்ல கௌரவமா இருக்கும். நமக்கும் மரியாதையா இருக்கும். நானே இதை பத்தி உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன். அதுக்குள்ள ஆதவ்வே பேசிட்டான்”.
“சரி மா” என்ற புண்ணியகோடிக்கு முகம் மொத்தமாக தொங்கிவிட்டது.
அனுராதா ஆதவ்வின் பேச்சுக்கு எந்த இடத்திலுமே இடைப் புகவில்லை. அவன் மீது ஒருவித பிரம்மிப்பும், மரியாதையும் அவளுக்குள் கூடியது தான் மிச்சம்.
சுற்றம் மறந்து அவனை விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் புறம் சரிந்தவன். அவளின் தாடையை பற்றி வாயை மூடிவிட்டவாறு, “சோ ஹாட்! இதெல்லாம் வீட்ல போய் வச்சுக்கலாமே” என்றான் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி கிசுகிசுப்பாக.
அதில் சுயம் பெற்றவள் சட்டென்று தன் முகத்தை திருப்பிக் கொள்ளவும். அவனின் இதழிலோ குறும்பு புன்னகை.
இதைப் பார்த்த மற்றவர்களுக்கும் மனநிறைவாக இருந்தது. குறிப்பாக ருக்மணிக்கும், கற்பகத்திற்கும்.
ஆதவ் அனுவை நல்ல முறையில் பார்த்துக் கொள்வான் என்பதெல்லாம் அவர்களுக்கு நன்கு தெரியும். அவன் மேல் அத்தனை நம்பிக்கை இருந்தது.
ஆனாலும், அதை அனுராதா ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்று தான் பயந்து கொண்டு இருந்தனர். இப்பொழுது அவர்களின் பயம் மொத்தமாக நீங்கியது.
இவர்கள் பேசியது அனைத்தையும் காதில் வாங்கியபடியே இவர்களுக்காக டீயை தயாரித்து கொண்டு வந்திருந்தார் கீதா.
அவரின் முகமே கடுகடுத்து போய் கிடந்தது. கடுப்பின் உச்சத்தில் இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெள்ள தெளிவாக புரிந்தது.
ஆனாலும், இது அவர்களின் குடும்ப விஷயமாகிற்றே. அதுவும் ஆதவ்வின் முன்னாள் வாயை திறக்க முடியுமா என்ன.. ஏதாவது பேசி அனுவின் முன்னாலேயே தன் வாயை அடைத்துவிட்டால் அவமானம் ஆகிவிடுமே என்று எண்ணிய கீதா வாயையே திறக்காமல் அனைவருக்கும் டீயை கொடுத்து முடித்தார்.
டீ குடித்து முடித்ததும் இரு ஜோடிகளும் கற்பகம் பாட்டியுடன் சேர்ந்து அவர்களின் அம்மா வீட்டிற்கு கிளம்பி இருந்தனர்.
ஏனோ காலை முதல் இருந்த மனநிலை இப்பொழுது முற்றிலுமாக அனுராதாவிடம் மாறி இருந்தது. மனதிற்குள் ஒருவித நிறைவும் குடி கொண்டிருந்தது. ஏதோ ஒரே நாளில் தன் உரிமை மொத்தத்தையும் மீட்டெடுத்து விட்டதைப் போன்ற உணர்வு.
விசித்ராவும், கோமதியும் ஏதோ உடன் பிறந்த சகோதரிகளை போல் அத்தனை ஒற்றுமையாக அனைத்து வேலைகளையும் செய்து வைத்திருந்தனர்.
மணமக்களை வரவேற்று அவர்களுக்கு உணவு உபசரிப்பு என அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தனர்.
உணவு உபசரிப்புகள் முடிந்ததும் ஆதவ், அகில் இருவரும் வெளியே சென்று வருகிறோம் என்று சென்று விட்டனர்.
அனுவும், ருக்மணியும் புண்ணியகோடியிடம் ஆதவ் பேசிய விஷயத்தை அவர்கள் இருவரிடமும் கூறினர்.
கோமதிக்கு இதில் என்ன கருத்து கூறுவது என்றே புரியவில்லை. வாய் அடைத்து போய் அமர்ந்திருந்தார். தன் மருமகனின் இந்த பரிமாணத்தில்..
“ஆதவ் சரியா தானே பேசி இருக்கான் ருக்மணி. இத அவங்களே செஞ்சிருக்கணும். தங்களுக்கான உரிமை கிடைக்காத இடத்தில கேட்டு வாங்குறது ஒன்னும் தப்பில்லை” என்றதோடு முடித்துக் கொண்டார் விசித்ரா.
ஆதவ்வின் இந்த கராரான பேச்சு கோமதிக்குள் ஏதோ ஒரு உறுத்தலை ஏற்படுத்தியது.
தன் மகளை தனியே அழைத்து வந்தவர், “அனு நீ சந்தோஷமா தானே இருக்க?”.
“எப்போ கேக்க வேண்டிய கேள்விய நீங்க எப்போ கேக்குறீங்க? விருப்பம் இருக்கா இல்லையானு கூட கேட்காம எல்லாருமா சேர்ந்து கல்யாணம் பண்ணி வச்சு அனுப்பிட்டு, இப்ப வந்து சந்தோஷமா இருக்கியான்னு கேட்டா என்ன சொல்றது?”.
அவளின் வார்த்தையில் பதறிய கோமதி, “என்ன அனு இப்படி சொல்ற.. நான் உனக்காக தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். அவர் உன்கிட்ட ஏதாவது கோபமா நடந்துக்குறாரா?”.
“ஐயோ அம்மா, அதெல்லாம் ஒன்னும் இல்ல. அவர் என்கிட்ட நல்லா தான் பேசுறாரு. என்னால தான் இதையெல்லாம் உடனே ஏத்துக்க முடியல”.
“அப்படியெல்லாம் சொல்லாத அனு. இனி இது தான் உன்னுடைய வாழ்க்கை. அவரை புரிஞ்சுகிட்டு சந்தோஷமா நீ வாழனும். என்னை போல நீயும் ஆகிட கூடாது. புரியுதுல..”.
அவரின் கையைப் பற்றி அதில் அழுத்தத்தை கொடுத்தவள், “அம்மா நிச்சயமா நான் உங்களைப் போல ஆகிட மாட்டேன். நீங்க நினைக்கிற மாதிரி என் வாழ்க்கை சந்தோஷமா தான் அமையும்”.
சற்று நேரத்தில் ஆதவ்வும், அகிலனும் வந்துவிட. இரு ஜோடிகளும் அவரவர் வீட்டை நோக்கி புறப்பட்டு இருந்தனர்.
வீட்டை அடைந்ததும் ஒற்றை வார்த்தையில், “தேங்க்ஸ்” என்றிருந்தாள் அனுராதா.
“எதுக்கு?” என்றவாறு அவன் தன் சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டவும்.
“இல்ல, இன்னைக்கு அப்பாகிட்ட அவ்வளவு பேசுனீங்களே”.
“இது நல்லா இல்லையே” என்றான் அவளை நன்றாக திரும்பிப் பார்த்தவாறு.
அவள் ‘என்ன’ என்று புரியாமல் அவனைப் பார்க்கவும்.
அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன், “எப்பவுமே நீ ரொம்ப ஹாட்டா இருப்ப. அது தான் எனக்கும் பிடிக்கும். என்னோட ஹாட் வைஃபை..” என்று அவளை மேலிருந்து கீழ் அளக்கும் பார்வை பார்த்துக் கொண்டே பெருமூச்சோடு கூறியவன்.
“நான் பேசின பேச்சுக்கு என்கிட்ட மல்லுக்கு நிப்பனு பார்த்தா.. இப்படி தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு வெள்ளை கொடிய பறக்க விடுறியே”.
“நான் எதுக்கு மல்லுக்கு நிக்கணும். நீங்க சரியா தானே பேசினீங்க. பல நாளா இதை எல்லாம் நான் கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா, என்னை வாயவே திறக்க விடமாட்டாங்க என் அம்மா. இன்னைக்கு நான் மனசுல நினைச்ச மொத்தத்தையும் நீங்க கேட்கும் போது எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..
அப்படியே புல்லரிக்கிற மாதிரி ஃபீல்.. இப்போ நாம ஒரு விஷயத்தை கேட்கணும் கேட்கணும்னு பல நாளா நினைச்சுக்கிட்டு இருந்ததை ஒருத்தவங்க நம்ம முன்னாடியே கேட்கும் போது நமக்கு அப்படியே ஜிவ்வுன்னு ஒரு ஃபீல் வரும் பாருங்க.. அப்படி இருந்துச்சு” என்று தன் கண்களை உருட்டி உருட்டி அவள் வர்ணனையோடு காட்சிப்படுத்தி செயல்முறை விளக்கத்தோடு கூறவும்.
அவளையே விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் ஆதவ் கிருஷ்ணா.
“சோ ஹாட்” என்றவனின் குரலோ மங்கிப்போய் வெளியேறி இருந்தது.
“நான் தான் சண்டை போடலையே” என்றவளை விஷமமாக பார்த்தவன்.
“இது வேற ஹாட்” என்றான் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி.
அவளின் கண்கள் பெரியதாக விரிந்து கொள்ள.. அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.
“இப்போ ஹாட்டோ ஹாட்” என்றவாறு அவன் தன் வலது பக்க நெஞ்சை நீவிக் கொள்ளவும்.
அவளுக்கு தான் இப்போது எப்படி செயலாற்றுவது என்பதே தெரியாமல் போனது.
*****
ஆதவ் கூறி சென்றதன் படி மறுநாளே அனுவிற்கு சேர வேண்டிய நகைகளுடனும், சீர் வரிசையுடனும் அவர்களின் வீட்டை அடைந்திருந்தனர் புண்ணிய கோடியும், கற்பகமும்.
கற்பகம் கோமதியையும், விசித்ராவையும் அழைக்கலாம் என்று எவ்வளவோ கூறியும் மறுத்துவிட்டார் புண்ணியகோடி.
தன்னை தவிர்த்து திருமணம் செய்தவர்களை தானும் தவிர்த்து தான் செய்வேன் என்று ஒரே காலில் நின்று விட்டார்.
உமா எந்த ஒரு எதிர்ப்பும் காட்டவில்லை. அதே சமயம் தன் விருப்பத்தையும் காட்ட வில்லை.
தன் அண்ணன், அம்மா என்ற முறையில் அவர்களை உபசரித்து அனுப்பி இருந்தார்.
****
கதையை பற்றிய உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ் 😊
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அருமையான பதிவு 💕💕💕💕
மிக்க நன்றி சிஸ் 🥰🙏
என்ன ரெண்டு fire engine ம் சண்டை இல்லாம இருக்கு!! தப்பாச்சே 🤔🤔😉😉