
உயிர் – 23
மறுநாள் விடியலில் கலைந்த ஓவியமாய் படுத்திருந்த ருக்மணிக்கு நேற்றைய சம்பவத்தின் தாக்கத்தால் அவளின் இதழில் மெல்லிய புன்னகை நிலை பெற்றது.
தன் அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் அகிலனை காதல் பார்வை பார்த்துவிட்டு குளியல் அறைக்குள் சென்று குளித்து முடித்து வேறு ஒரு புடவையில் தயாராகி வெளியே சென்றாள்.
இவளை கண்டதுமே முகம் மலர்ந்த கீதா, “வா மா இந்தா காபி குடி” என்று அவள் கையில் ஒரு கப்பை திணித்தார்.
“ஏன் அத்த நானே எடுத்துக்க மாட்டேனா” என்றவாறு அவர் நீட்டிய கப்பை எடுத்து கொண்டாள்.
“பரவாயில்ல இருக்கட்டும் மா. காபி குடிச்சிட்டு டிபன் சாப்பிடலாம் எல்லாம் தயாராகிடுச்சு” என்று தன் மருமகளிடம் கூறியவர்.
அங்கே செய்தித்தாளை வாசித்துக் கொண்டு அமர்ந்திருந்த தன் கணவரை பார்த்து, “என்னங்க வீட்டு வேலைக்கு ஆள் சேர்க்கணும். என்னால ஒத்தையில இத்தனை வேலையை பார்க்க முடியாது. இவ்வளவு நாள் அந்த கோமதி சம்பளம் இல்லாத வேலைக்காரி மாதிரி இருந்து எல்லா வேலையையும் பாத்துக்கிட்டா. இனி என்னால தனியா எப்படி பாத்துக்க முடியும்”.
“என்னத்த என்ன பேசுறீங்க நீங்க.. சித்தி என்ன இங்க வேலைக்காரியாவா இருந்தாங்க. அவங்களும் இந்த வீட்டு மருமக தான். அவங்க வீடா நினைச்சு தான் மனசார எல்லா வேலையையும் செஞ்சாங்க. ஏதோ அவங்கள வேலைக்காரின்ற மாதிரி பேசுறீங்க” என்று பொங்கி விட்டாள் ருக்மணி.
முதல் நாளே இதனை எதிர்பார்க்கவில்லை கீதா.
“ச்ச.. ச்ச.. நான் அப்படி சொல்லலமா. அவ இருந்த வரைக்கும் எல்லா வேலையையும் அவளே பார்த்துக்கிட்டா. இப்போ நான் ஒத்தையில செய்ய முடியாது இல்ல. அதுக்கு தான் வேலைக்கு ஆள் சேர்க்கலாமேன்னு..” என்று மென்று விழுங்கினார்.
“வேலைக்கு ஆள் சேக்குறது எல்லாம் சரி தான். அதுக்காக சித்தியை இப்படி குறைவா பேசாதீங்க. அவ இவன்னு என்ன பேச்சு இதெல்லாம்.. அவங்களும் உங்களுக்கு அண்ணி முறை தானே.. அண்ணினே கூப்பிட்டு பழகுங்க” என்று கரார் குரலில் கூறிவிட்டாள்.
கீதாவிற்கு அவளின் வார்த்தைகள் குட்டு வைத்தார் போல் ஆகிவிட்டது. புது மருமகள் முகத்தில் அடித்தது போல் பேசவும் முடியாதே என்று அடக்கி வாசித்தார் கீதா.
இங்கே நடக்கும் எதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அமர்ந்திருந்த புண்ணியகோடியின் காதில் விழும் படியாக, “ஒன்னுக்கு ரெண்டு பொண்டாட்டி கட்டிக்கிட்டா மட்டும் பத்தாது. அவங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கணும். அவங்களுக்கான மரியாதையை தேடி கொடுக்கணும். அதுக்கெல்லாம் முடியாதவங்களுக்கு எதுக்கு ரெண்டு பொண்டாட்டி” என்று குத்தலாக பேசிவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.
“என்ன இவளுக்கு இவ்வளவு பெரிய வாயா இருக்கு” என்று கீதாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
சற்று நேரத்தில் ருக்மணியும், அகிலனும் காலை உணவை உண்டு முடிக்கவும்.
“அப்பா எனக்கு ஒரு ஒன் வீக் லீவ் வேணும்” என்றான் தன் தந்தையை பார்த்து.
“அதுக்கு என்ன அகில் தாராளமா எடுத்துக்கோ. பிசினஸை நான் பாத்துக்குறேன். பொறுமையா நீ திரும்பி வந்தா போதும்”.
“தேங்க்ஸ் பா”.
“மாமா அனுவை பார்க்க போகணும்” என்றாள் ருக்மணி.
“எதுக்கு அவளை பார்க்க போகணும்?” என்று அகில் பதில் கூறுவதற்கு முன்னதாக முந்திக்கொண்டு கேட்டார் கீதா.
“இது என்ன கேள்வி அத்த.. அவளை பாக்கணும்னு தோணுச்சு அதான் பாக்கணும்னு சொன்னேன்” என்ற பதில் அவளிடமிருந்து பட்டென்று வந்தது.
“நம்ம சொந்தக்காரங்க எல்லாம் உன்ன பாக்க வருவாங்க ருக்குமா. அதான் வேண்டாம்னு சொல்றேன். பொறுமையா பார்த்துப்போமே எங்க போயிட போறா”.
“இல்லத்த சொந்தக்காரங்க எல்லாம் வர்றதுக்குள்ள நாங்க போய் அவள பாத்துட்டு வந்துடறோம்” என்று பதில் கொடுத்தவள் அகிலனை பார்த்து தலையசைக்கவும்.
அவனும் உண்டு முடித்து எழுந்து விட்டான்.
“வரேன் மா” என்றவன் ருக்மணியுடன் வெளியேறி விட்டான்.
“என்ன இவ.. நாம இவ்வளவு தூரம் சொல்றோம் கொஞ்சம் கூட மதிக்க மாட்டேங்குறா” என்று உள்ளுக்குள் கீதாவிற்கு சற்று நெருடலாக தான் இருந்தது.
ருக்மணியின் மனநிலையோ அனுவை பார்த்தே ஆக வேண்டும் என்று அடித்துக் கொண்டே இருந்தது.
நேற்று திருமணம் முடிந்தது முதல் அவளுடன் பேசக்கூட நேரம் கிடைக்கவில்லை. அதனால் எப்படி இருக்கிறார்களோ.. அங்கே அனைத்தும் அவளுக்கு சரியாக அமைந்ததா..
அத்தை வேறு கோபமாக இருந்தாரே என்று ஏதேதோ எண்ணங்கள். அதனாலேயே முதல் வேலையாக அவளை பார்க்க வேண்டும் என்று முன்னதாகவே நினைத்துக் கொண்டாள்.
*****
விடியற்காலை 4 மணிக்கெல்லாம் குடோனுக்கு லோடு வந்துவிட்டதாக ஆதவ்விற்கு அழைப்பு வந்துவிட்டது.
அவனின் தந்தைக்கு தான் முதலில் அழைத்திருந்தனர். அவர் தூக்கத்தில் எடுக்காமல் போய்விட்டதால் ஆதவ்விற்கே அழைத்துவிட்டனர். அவனும் உடனே புறப்பட்டு விட்டான்.
தன் செல்பேசியின் சிணுங்களில் எழுந்தவன். பேசி முடித்து அவசரமாக கிளம்பியவாறு தூக்கத்தில் இருக்கும் அனுவை பார்த்தவனின் இதழில் மெல்லிய புன்னகை.
அவன் சென்றது கூட அறியாமல் அவள் உறக்கத்தில் இருந்தாள். காலையில் 7 மணி போல் தான் அவளுக்கு விழிப்பு தட்டியது.
எழுந்ததும் குளித்து முடித்து அவள் கீழே செல்லவும். உமா கையில் காபி கப்புடன் அமர்ந்திருந்தவர். இவளை முறைத்து பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார்.
அவர் அருகில் அமர்ந்து காபியை அருந்திக் கொண்டிருந்த தாரணி இவளை பார்த்ததும் மெல்லிய புன்னகையை உதிர்க்க. இவளும் பதிலுக்கு மெல்லிய கீற்றாய் புன்னகைத்தாள்.
யாரிடம் என்ன பேசுவது என்று அனுவிற்கும் விளங்கவில்லை. தயங்கியவாறு நிற்கவும்.
ருக்மணியும், அகிலனும் சரியாக அந்நேரம் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அவளை கண்டதும் ஏனென்றே தெரியாமல் விலுக்கென கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது. ஓடி சென்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
“அனு” என்று மெல்லிய முணுமுணுப்போடு ருக்மணி அவளின் தலையை வருடி கொடுக்கவும்.
அவளிலிருந்து பிரிந்தவள், “வாக்கா.. வாங்க மாமா” என்றவாறு அவர்களை உள்ளே அழைத்து வந்தாள்.
“வாங்க” என்று பொதுவாக அழைத்த உமா அதற்கு மேல் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
அவருக்கு இருக்கும் கடுப்பு அவரின் முகத்திலேயே அப்பட்டமாக தெரிந்தது.
“இருக்கா நான் உனக்கு காபி கொண்டு வரேன்” என்றவாறு அவள் சமையலறைக்குள் நுழையவும்.
“தாரணி வழக்கம்போல நமக்கு மட்டும் தான் பால் வாங்கினேன். பால் காலி ஆயிடுச்சு” என்று கூறினார் உமா.
“அம்மா அண்ணியும் இன்னும் காபி குடிக்கலையே”.
“ஆமா, பெரிய அண்ணி..” என்று அனைவருக்கும் கேட்கும் படியாகவே முணுமுணுத்தார்.
உமாவின் பாராமுகமும், வார்த்தையும் ருக்மணிக்கு ஒரு மாதிரியாகி விட.
“பரவாயில்ல அனு, நாங்க வீட்ல சாப்பிட்டு தான் வந்தோம். உன்ன பாக்கணும் போல இருந்துச்சு அதான் வந்தேன். சரி, நாங்க அப்படியே கிளம்புறோம்” என்று விட்டு கிளம்பி விட்டாள்.
“என்னடி அண்ணி அண்ணின்னு ரொம்ப தான் உரிமை கொண்டாடுற.. இன்னும் நகை நட்டோட, சீர்வரிசையோட அண்ணி வந்து இருந்தா உன்ன கையில பிடிக்க முடியாது போலருக்கே.. ஒன்னும் இல்லாம வெறும் கையை வீசிக்கிட்டு வந்த உன் அண்ணிக்கே இவ்வளவு வக்காலத்து வாங்குறியா நீ” என்று அவர்கள் சென்றதும் சிடுசிடுத்தார்.
“அதுக்கு இல்லம்மா அண்ணி இன்னும் காபி கூட குடிக்கல”.
“குடிக்கலைன்னா என்ன இப்போ.. அஞ்சு மூணும் அடுக்கா செய்றதுக்கு இவ என்ன நான் பார்த்து கட்டி வந்த மருமகளா.. என் அண்ணன் அவன் இஷ்டத்துக்கு இவ அம்மாவை கூட்டிட்டு வந்தான். அதே போல என் மகன் அவன் இஷ்டத்துக்கு இவளை கூப்பிட்டு வந்து இருக்கான். அவங்க அம்மாவுக்கு எங்க வீட்ல என்ன இடமோ, அதே தான் இவளுக்கும் இந்த வீட்ல” என்று நெருஞ்சு முள் தைத்தார் போல் கூறிவிட்டார்.
இதற்காக தானே அவள் இந்த சொந்தமே வேண்டாம் என்று விலகிச் செல்ல நினைத்தது.
இனி தினம் தினம் இப்படிப்பட்ட வார்த்தைகளை கேட்க வேண்டுமா என்று எண்ணும் பொழுதே கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.
வேகமாக இவர்களுக்கு தன் கண்ணீரை காட்டாமல் உள்ளிழுத்துக் கொண்டவள் மீண்டும் அறைக்கு சென்று விட்டாள்.
உமாவும் அவளை சற்றும் கண்டுகொள்ளவில்லை. தாரணிக்கு தான் மனம் பிசைந்தது. அனுவின் கலங்கிய முகம் அவளுக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியது.
சற்று நேரத்தில் ஆதவ் வரவும். அவனிடம் நடந்த விஷயத்தை அப்படியே கூறிவிட்டாள் தாரணி.
அதைக் கேட்டவனிற்கோ அத்தனை கோபம் வந்தது. தன் அன்னையின் மீதும்.. அதே போல் தன் மனைவியின் மீதும்..
அறைக்குள் வந்தவளிற்கு உமாவின் வார்த்தைகள் தான் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.
அவளின் அம்மாவின் இடம் தான் அவளுக்கும் என்றால் தன்னையும் இந்த வீட்டின் வேலைக்காரி போல் தானே குறிப்பிடுகிறார் என்று எண்ண எண்ண உள்ளம் குமுறியது.
ஆதவ்வின் மேல் கொஞ்சமே கொஞ்சம் மட்டு பட்டு இருந்த கோபம் எரிமலையாய் கொந்தளித்து கிளம்பியது.
“இதுக்கு தான் நான் இதெல்லாம் வேண்டாம்னு நினைச்சேன்” என்று அழுகையோடு முணுமுணுத்துக் கொண்டு கோபமாக அமர்ந்திருந்தாள்.
கடுகடுத்த முகத்தோடு அறைக்குள் நுழைந்த ஆதவ் இவளை சற்றும் கண்டு கொள்ளாமல் குளித்து முடித்து வந்தவன். வேறு உடைக்கு மாறி தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் ஏதாவது கேட்பான் தான் கூறலாம் என்று காத்துக் கொண்டிருந்த அனுராதாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளின் பொறுமை காற்றில் கரைய, கோபம் அதிகரித்தது.
கண்ணாடியின் முன் நின்று தன் சட்டையின் பட்டனை போட்டுக் கொண்டிருந்தவனின் பின்னோடு முறைத்துக் கொண்டு நின்றவள், “இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?” என்றதுமே.
அவளின் முன்பு ‘பேசாதே’ என்பது போல் தன் ஒற்றை கையை தூக்கி காட்டியவன், “எல்லாம் தாரணி சொன்னா” என்றான் இறுகிய குரலில்.
“எல்லாம் தெரிஞ்சு தான் அமைதியா இருக்கீங்களா.. ஒரு வார்த்தை கூட என்கிட்ட அதை பத்தி பேசணும்னு உங்களுக்கு தோணலைல. இதுக்கு தான் இதெல்லாம் நான் வேண்டாம்னு நினைச்சேன்”.
“என்னடி சும்மா எப்ப பாத்தாலும் இதுக்கு தான் வேண்டாம்னு நினைச்சேன், இதுக்கு தான் வேண்டாம்னு நினைச்சேன்னு எகிறிகிட்டு வர”.
கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தவன் சட்டென்று தன் புறம் திரும்பி கோபமாக கத்தவும்.
ஒரு நொடி ஒன்றும் புரியாமல் தூக்கி வாரி போட திடுக்கிட்டு விழித்தாள் அனுராதா.
“ஏதாவது ஒன்னுனா என்கிட்ட மட்டும் சண்டை போட தெரியுதுல. என் அம்மா கிட்ட சண்டை போட வேண்டியது தான.. அவங்க உன்ன வேலைக்காரி மாதிரி மீன் பண்ணி சொன்னா, அப்படி கிடையாது. நான் இந்த வீட்டு மருமக.. உங்க பையனோட பொண்டாட்டின்னு சண்டை போட வேண்டியது தான.. என்ன பெரிய சீரியல் ஹீரோயினா நீ.. ரூமுக்குள்ள வந்து உட்கார்ந்து யாருக்கும் தெரியாம அழறதுக்கு”.
அவன் வந்ததும் சண்டையிட வேண்டும் என்று இவள் யோசித்து வைத்திருந்த மொத்தமும் அவனின் பரிமாணத்தில் சுத்தமாய் மறந்து போனது.
இவள் அவனிடம் சண்டையிட வேண்டும் என்று நினைத்தால், அனைத்தும் இங்கு நேர் எதிராக அல்லவா நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
10
+1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல… ரெண்டு fire engine ம்… ஆனால் அனு எப்படி கேட்பது… ஆதவ் தான் கேக்கணும்…மாமிக்கு அவளை கண்ணால் காணவே பிடிக்கல.. அனு எண்ணம் ஒரு வகையில் உண்மை தான்… எவ்வளவு காலம் தான் இது போன்ற பேச்சுக்கள் கேட்பது… நிம்மதி முக்கியம் பிகிலு…❤️❤️
ம்ம் சரி தான்.. இதே பேச்சு தொடர்ந்தால் கஷ்டம் தான். ஆனா அவங்க சொல்றதை கேட்டுகிட்டு சும்மா இருக்க அளவுக்கு அனுவும் சாதாரண ஆள் இல்லையே 🤣🤣
Yenga rendum fire engine ah erunthaa..yeppdinga kudumbaththa ottrathu 😝😝😝😝
கொஞ்சம் கஷ்டம் தான் 😂😂