Loading

உயிர் – 22

தன் பற்களை கடித்துக் கொண்டு, “சேஞ்ச் பண்ணனும்னு சொன்னேன்”.

திடீர் கல்யாணத்தின் காரணத்தால் அவளுக்கான மாற்று உடைகளை கூட எடுத்து வைக்க அவகாசம் இல்லாமல் போய்விட்டது. இப்பொழுது உடையை மாற்ற என்ன செய்வது என்று அவள் தவித்து நிற்கவும்.

“கபோர்டை திறந்து பாரு உனக்கு தேவையான எல்லாம் அதுல இருக்கும்” என்றதும் வேகமாக சென்று திறந்து பார்த்தாள்.

ஆம், அவன் கூறியது போலவே உடை தொடக்கம் உள்ளாடை வரை அவள் கொஞ்சமும் நினைத்தும் பார்க்காமல் அனைத்தும் அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

‘இதெல்லாம் இவருக்கு எப்படி தெரியும்?’ என்று எண்ணியவளின் எண்ண குதிரை எங்கெங்கோ செல்ல.

அதை பார்க்கும் பொழுது சற்று சங்கடமாக இருந்தாலும் இப்பொழுது வேறு வழியும் இல்லையே..

வேகமாக ஒரு சுடிதாரை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.‌ குளியலறைக்குள்ளும் சோப், ஷாம்பூ என அனைத்துமே புதிதாக இவளை பார்த்து பல்லை காட்டியது.

அனைத்தையுமே முன்னதாகவே சிந்தித்து தயார் படுத்தி வைத்திருக்கிறான் என்பது இப்பொழுது அவளுக்கு இன்னும் நன்றாக விளங்கியது.

பெருமூச்சோடு தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு அந்த சுடிதாரை அணிந்து கொண்டு வெளியே வரவும் தான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.

குளியலறைக்குள்ளேயே உடை மாற்ற சற்று சிரமமாக இருந்தாலும், அறைக்குள் தான் அவன் இருக்கிறானே.. அதற்கு இதுவே மேல் என்னும் எண்ணம் தான் அவளை ஆக்கிரமித்து இருந்தது.

அதிலும், அவன் வாங்கி வைத்திருந்த உள்ளாடை தொடக்கம் உடை வரை அனைத்தும் அவளுக்கு கச்சிதமாக சரியாக பொருந்தி போயிருந்தது.

அது மேலும் அவளின் புருவத்தை மேலுயர வைத்தது.

அவள் வெளியே வரும்பொழுது ஆதவ் உறங்கி விட்டிருந்தான்.

ஆம், இந்த திருமணத்தை நல்ல முறையில் செய்து முடிக்க வேண்டுமே என்ற எண்ணமே அவனை சரிவர உறங்கவிடாமல் செய்திருந்தது.

பல நாட்கள் கழித்து இன்று தான் நிம்மதியாக உறங்குகிறான்.

கட்டிலில் அவனுக்கு மறுபுறம் படுக்கலாமா வேண்டாமா என்ற சிந்தனையோடு நின்றவளுக்கு அவனின் வார்த்தைகள் மீண்டும் நினைவு வந்தது.

அதன் பிறகு பெரிதாக சிந்திக்காமல் மற்றைய புறம் வந்து படுத்துக் கொண்டாள்.

அவள் வந்து படுத்த அரவத்தில் நேராக படுத்திருந்தவன் அவளின் புறம் திரும்பி படுக்கவும். இருவரும் உரசியும் உரசாத நிலை தான்.

அவனின் மூச்சுக்காற்று இவளில் பட்டு தெரிந்தது. சட்டென்று ஒருவித பதட்டம் தொற்றிக் கொள்ள. அவனுக்கு முதுகு காட்டியவாறு இவள் திரும்பி படுக்கவும்.

அவளின் அசைவில் கொஞ்சமாக விழிப்பு தட்டி விட. அவள் தன் அருகில் படுத்திருக்கும் பிம்பத்தில் தூக்கத்திலும் அவனின் இதழில் மெல்லிய புன்னகை கீற்றாய் அரும்பியது.

அனிச்சையாக அவளின் இடையை சுற்றி தன் கையை போட்டுக் கொண்டவன். மீண்டும் ஆழ்ந்த நித்திரைக்கு செல்ல. அவளுக்கு உறக்கம் வந்தால் தானே..

அவன் அருகில் ஒவ்வொரு நொடியும் அவஸ்தையில் தான் கழிந்தது. அதிலும், அவனின் கையை விலக்கவும் முடியாமல், அப்படியே விடவும் முடியாமல் தவித்துக் கொண்டு அசையாமல் படுத்து கிடந்தவள், எப்பொழுது உறக்கத்தை தழுவினாள் என்பதை அவளே அறியவில்லை.

*******

“உமா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல. நம்ம பையன் கல்யாணம் முடிச்சு வந்திருக்கான். நீ இப்படி முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருந்தா நல்லா இருக்கா”.

தன் மூக்கை உறிஞ்சிய உமா, “என்னை என்ன பண்ண சொல்றீங்க? ஒரே பையன்னு அவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன். அவன் எதை செஞ்சாலும் சரியா தான் இருக்கும்னு கண் மூடித்தனமா நம்புனேன். அதுக்கு தான் எனக்கு இவ்வளவு பெரிய பரிசு கொடுத்துட்டானே”.

“இப்போ என்ன.. நீ ருக்மணியை கட்டணும்னு நினைச்ச. ஆதவ் அனுவை கல்யாணம் பண்ணிக்கிட்டான். ரெண்டு பேருமே உன் அண்ணன் பொண்ணுங்க தானே”.

“ரெண்டு பேரும் என் அண்ணன் பொண்ணுங்களா இருந்தாலும், ரெண்டு பேரும் ஒன்னு கிடையாது” என்றார் சட்டென்று.

“முதல்ல இப்படி பேசுறத நிறுத்து உமா. தப்பு பண்ண உன் அண்ணனையே ஏத்துக்கிட்ட.. எந்த தப்பும் பண்ணாதவங்களை உன்னால ஏத்துக்க முடியலையா.. கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சு பாரு, தப்பு யார் மேலனு புரியும். அது மட்டும் இல்லாம, ஆதவ் விருப்பப்பட்டு அந்த பொண்ண கல்யாணம் செஞ்சி இருக்கான்.

இதுல நீ மூஞ்சிய தூக்கி வச்சிக்கிறதால என்ன மாறிட போகுது. எனக்கு என் பையனுடைய விருப்பம் தான் முக்கியம். அவன் ஆசைப்பட்டு அமைச்சுக்கிட்ட வாழ்க்கை சந்தோஷமா அமையனும்னு நானும் ஆசைப்படுறேன். இப்படி உம்முனு முகத்தை தூக்கி வச்சுக்கிட்டு இருக்காத என்னமோ போல இருக்கு” என்று அறையை விட்டு வெளியேறி விட்டார்.

இருவருக்கும் முதலிரவுக்கான ஏற்பாடுகள் கூட எதுவும் செய்யப்படவில்லை. உமா எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொள்ளவும். சத்யராஜுக்கும் இதை எப்படி கையாள்வது என தெரியாமல் அமைதியாக இருந்து விட்டார்.

திருமணத்தை அனுராதா ஏற்றுக் கொண்டதே பெரிது என்று எண்ணிய ஆதவ்வும், முதலிரவு என்று அவளை சீண்ட விரும்பவில்லை. அவளுக்கான அவகாசத்தை கொடுக்க எண்ணியவன் முதலில் இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வரட்டும் என்று நினைத்து விட்டான்.

****

கீதாவின் வீடோ அல்லோல பட்டுக்கொண்டிருந்தது.

“அம்மா ருக்மணிக்கு மல்லி பூ வச்சு விடுவோமா இல்ல, முல்லை பூ வச்சு விடுவோமா?”.

“முதல்ல ருக்மணிக்கு எந்த பூ பிடிக்கும்னு கேளு கீதா. அவளுக்கு எது பிடிக்குமோ அதையே வச்சு விடுவோம்” என்றார் கற்பகம்.

“எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மா. பாத்தீங்களா அன்னைக்கு நீங்க சொன்னீங்க இல்ல கடவுளோட சித்தம் என்னவோ அது தான் நடக்கும்னு.. அதே போலவே நடந்துடுச்சு பாருங்க. ருக்மணி என் பையன் அகிலனுக்கு தான்னு எழுதி இருக்கு. அதான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்திருக்கு” என்றார் வாயெல்லாம் பல்லாக.

“எப்படியோ என் ரெண்டு பேரனுங்களுக்கும் அவங்க ஆசைப்பட்ட மாதிரி சந்தோஷமான வாழ்க்கை அமைஞ்சதுல எனக்கும் சந்தோஷம் தான் கீதா. சரி, மத்த சடங்கு எல்லாம் நீ பாத்துக்கோ. நான் போய் கொஞ்ச நேரம் படுக்கிறேன். ரொம்ப அசதியா இருக்கு” என்றவாறு அவர் எழுந்து சென்று விடவும்.

ருக்மணியை அலங்காரம் செய்தவர், அகிலனின் அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு தன்னறைக்கு சென்று விட்டார்.

“என்னால நடந்த விஷயத்தை கொஞ்சம் கூட நம்பவே முடியல” என்றவாறு தன் முன்னே கையை பிண்ணிக் கொண்டு அமர்ந்திருந்த கீதாவை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தார் கணபதி.

“என்ன கீதா இதெல்லாம்?”.

“ஐயோ! இப்ப நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா.. என்னுடைய சந்தோஷத்தை எப்படி உங்ககிட்ட சொல்லி புரிய வைக்கிறதுனே எனக்கு தெரியலைங்க. ருக்மணி நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு அவ்வளவு ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்ட போலவே அவ இந்த வீட்டு மருமகளா வந்துட்டா.. எனக்கு சந்தோஷத்துல இப்போ தலை கால் புரியல. நம்ம பையனுக்கு இப்படி திடீர்னு கல்யாணம் நடந்துடுச்சேன்னு உங்களுக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே”.

“அதெல்லாம் எந்த வருத்தமும் இல்ல கீதா. அதான் ஆதவ் எல்லாத்தையும் சரியா நடத்தி முடிச்சிட்டானே. அது மட்டும் இல்லாம, அகிலனுக்கும் ருக்மணியை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அவனுடைய முகமே அவ்வளவு சந்தோஷமா இருக்கு. எனக்குமே இதுல சந்தோஷம் தான். நம்ம பசங்க சந்தோஷமா வாழ்ந்தா அதைவிட நமக்கு வேற என்ன வேணும்”.

என்ன தான் சிறு வயது முதல் அகிலனோடு ஒன்றாக விளையாடி இருந்தாலும், இன்று ஏனோ கணவன் என்னும் பரிமாணத்தில் அவனை பார்க்கும் பொழுது ருக்மணிக்குள் தலும்பலான உணர்வு தான் ஆட்சி புரிந்தது.

அறைக்குள் அவள் தயங்கி தயங்கி வரவும்.

அவளை கண்டதும் எழுந்து சென்று, “வா” என்றவாறு அவளின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தான் அகிலன்.

சொந்தம் தான் என்றாலும் ஏதோ ஒரு தயக்கம் அவளிடம். மெதுவாக அவனின் அறையை சுற்றிப் பார்த்தவளின் விழிகள் அந்த புகைப்படத்திலேயே நிலை குத்தி நின்றது.

அதை பார்த்தவளின் விழிகளும் பெரிதாக விரிந்து கொள்ள. ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியோடு அகிலனை திரும்பிப் பார்த்தாள்.

அவனோ தன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு அவளை நோக்கி தன் ஒற்றை கண்ணை சிமிட்டியவன் ரகசிய புன்னகை சிந்தினான்.

“மாமா இது?” என்றவாறு அவள் அந்த புகைப்படத்தை காட்டவும்.

அந்த ஆளுயர புகைப்படத்தை ரசனை பொங்க பார்த்தவன், “இது என்னுடைய குட்டி ருக்மணியும் அவளோட குட்டி அகில் மாமாவும்”.

அவளுக்கு எதுவோ புரிவது போன்ற உணர்வு. இதயம் வேகமாக மத்தளம் கொட்ட தொடங்கியது. அவள் எண்ணுவது உண்மை தானா என்பது போல் அகிலனை அவள் பார்க்கவும்.

“எனக்கு சின்ன வயசுல இருந்தே உன்ன ரொம்ப பிடிக்கும் ருக்மணி. வளர வளர அது காதலா மாறிடுச்சு. ஆனா, அண்ணாவுக்கும் உனக்கும் கல்யாணம்னு பேசினதும் நான் மொத்தமா உடைஞ்சு போயிட்டேன் தெரியுமா.. அந்த ஒரு நாள்.. என் வாழ்க்கையில இதுவரைக்கும் நான் அப்படி கஷ்டப்பட்டதே இல்லை. எதை பத்தியும் பெருசா கேர் பண்ணிக்காம ஜாலியா இருக்கிறது தான் எனக்கு பிடிக்கும். ஆனா, அன்னைக்கு ஒரு நாள் மொத்தமா நொறுங்கி போயிட்டேன் டி. அண்ணா என்கிட்ட கல்யாணத்தில் நடக்கப்போற விஷயத்தை பத்தி சொன்ன பிறகு தான் எனக்கு மூச்சே வந்துச்சு”.

“அப்போ உங்களுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியுமா?”.

“ம்ம்.. நியூ இயர் செலப்ரேஷனுக்கு போயிருந்தோமே அன்னைக்கு தான் தெரியும். அண்ணா நான் உன்ன லவ் பண்றேன்னு எப்படியோ கண்டுபிடிச்சு, உனக்கு வெளியில மாப்பிள்ளை பார்ப்பதற்கு பதில் என்னையே மாப்பிள்ளையா பார்த்துட்டார்” என்று கூறி நகைத்தான்.

“இதெல்லாம் நிஜம் தானா” என்று அவள் தன் விழிகளை விரித்து ஆச்சரியமாக கேட்கவும்.

அவளை அப்படியே அள்ளிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது அகிலனுக்கு.

“என்ன.. நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன். உன்ன மூச்சு முட்டுற அளவுக்கு காதலிச்சிட்டேன். இனியும் என்னால தனியா இந்த காதலை சுமக்க முடியாது. ரெண்டு பேரும் சேர்ந்து காதலிக்கலாமா?” என்றவாறு அவளை நோக்கி தன் ஒற்றை கரத்தை நீட்டி இருந்தான்.

ஏதோ மாயைக்குள் சிக்கிக் கொண்டவள் போல் சுயம் உணராமல் தானாக அவனின் கரத்தை பற்றி இருந்தது அவளின் கரம்.

அழுத்தமாக அவளின் கரத்தை தனக்குள் இறுக்கி கொண்டவன். மெல்லிய அழுத்தம் கொடுத்து அவளின் கரத்தை தன்னை நோக்கி இழுக்கவும். அவனின் மார்பிலேயே மோதி நின்றாள் ருக்மணி.

அவளால் இதை சற்றும் நம்பவே முடியவில்லை. தன்னையும் ஒருவன் இத்தனை காதலிக்கிறானா.. அதுவும் ரகசியமாக என்று எண்ணவே அத்தனை ஆச்சரியமாக இருந்தது. மலைப்பாகவும் கூட இருந்தது.

இதுவரை திருமணத்தின் மேலோ, காதலின் மேலோ பெரிதாக நம்பிக்கை கொள்ளாதவளிற்கு, அகிலனின் வார்த்தைகள் உள்ளுக்குள் ஏதேதோ மாயங்களை புரிந்து கொண்டு இருந்தது.

அவனை தவிர்க்கவோ, தவிக்க வைக்கவோ இவளிடம் எந்த ஒரு காரணமும் இல்லை. தானாய் அமைந்த வாழ்க்கை தான்.

அதிலும், இத்தனை காதலோடு கிடைத்திருக்கும் பொழுது தவிக்க வைக்க முடியுமா என்ன..

அவனை முழு மனதோடு ஏற்றுக் கொண்டாள். தன்னையும் அவனுக்காக முழு மனதோடு கொடுக்க துணிந்து விட்டாள்.

இன்றே.. இந்த நொடியே.. அவர்களின் இல்லற வாழ்க்கையும் இனிதே துவங்கியது.

*****

 

கதையை நிறைய பேர் படிக்கிறீங்க ஆனா கமெண்ட் தான் வர மாட்டேங்குது. கதையை பற்றிய உங்கள் கருத்தையும் சொல்லுங்க டியர்ஸ் 😊

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
14
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. சொல்லிட்டா போச்சு…😁😁…நம்ம பழைய fire engine & புது fire engine (அனு) அலப்பறைகளுக்காக waiting..❤️❤️