
உயிர் – 2
அவள் அருகில் வந்து வண்டியை நிறுத்தியவனின் பார்வை அவள் விழிகள் நிலைத்திருக்கும் இடத்திற்கு தான் சென்றது.
ஆம், இன்னமுமே அவளின் விழிகள் அந்த வீட்டின் பெயர் பலகையை தான் உற்று நோக்கி கொண்டிருந்தது.
தன் வண்டியின் ஹாரனை அடித்தவன், “அதெல்லாம் விக்கிறதுக்கு இல்ல” என்றான் குறும்பு புன்னகையோடு.
அவன் எழுப்பிய ஒலியில் அவனை திரும்பிப் பார்த்தவள் ‘என்ன’ என்பது போல் அவன் கூறிய வாக்கியம் சரிவர புரியாமல் அவனைப் பார்க்கவும்.
“ஏதோ மேடம் ஒரே செக்கில் இந்த வீட்டையே விலைக்கு வாங்க போற மாதிரி இந்த பார்வை பாக்குறியே.. அதான் விக்கிறதுக்கு இல்லன்னு சொன்னேன்” என்றான் கிண்டல் தொனியில்.
தன் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டியவாறு அவனை கண்கள் மின்ன தானும் குறும்பு புன்னகையோடு எதிர்நோக்கியவள், “என்ன மைனர் மாமா, உங்க அம்மா பார்த்தா வீட்டையே ரெண்டாக்கிடுவாங்க. என்கிட்ட பேச எல்லாம் உங்களுக்கு நேரம் இருக்கா”.
அவளின் வார்த்தைக்கு பின்னால் இருக்கும் வலிகள் அவனுக்கும் புரியாமல் அல்ல.
“அம்மா அப்படி தான் டா. ம்ச்ச்.. உனக்கு தான் அவங்கள பத்தி தெரியும்ல”.
“தெரியும்.. தெரியும்..” என்று முகத்தை நொடித்து திருப்ப.
அவனின் தாய் இவளிடம் பேச கூடாது என்று அத்தனை முறை கூறியும் அவருக்கு தெரியாமல் இவளுடன் அவன் நட்புறவாடிக் கொண்டு தான் இருக்கிறான்.
சிறு வயது முதலே ஒன்றாக ஒரே வீட்டில் இவனின் கண்பார்வையில் வளர்ந்தவள். மாமன் மகள் என்பதையும் மீறி ஏதோ உடன் பிறந்த சகோதரியை போல் தான் இவனின் பார்வை அவளில் இருக்கும்.
இதை புரிந்து கொள்ளாத கீதா தான் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசி விடுவார். இதனைக் கொண்டு தாய்க்கும் மகனுக்கும் இடையே முட்டிக் கொள்வதும் உண்டு.
அதனாலேயே வெளியே பேசிக் கொள்பவள். வீட்டில் அகிலன் இருக்கும் திசையை கண்டாலே தெறித்து ஓடி விடுவாள்.
அவளின் பையை வம்படியாக பிடுங்கி எடுத்தான் அகில்.
“ஹே மைனர் என்ன பண்ற?” என்றவாறு தன் பையை அவனிடம் இருந்து பறிக்க போராடிக் கொண்டிருந்தவர்களிடம், “மைனர்னு கூப்பிடாதனு எத்தன தடவ சொல்லி இருக்கேன்” என்றான் சுள்ளென்று.
உதடு துடிக்க குறும்பு புன்னகையோடு, “உங்க அம்மா தான் ஏதோ பெருசா யாரும் பெக்காத பிள்ளைய பெத்து வச்சிருக்க மாதிரி, நான் எங்க வளச்சி போட்டுடுவேனோனு என் கண்ணுல படாம மறைச்சு மறைச்சு பாதுகாத்து வளக்குறாங்களே.. அதான் உங்களுக்கு மைனர் மாமானு செல்லமா பேரு வச்சிருக்கேன்”.
அவள் பேசி முடிப்பதற்குள்ளாகவே நீ என்னவோ பேசு என்பதை போல் அவளின் பேக்கில் இருந்த டிபன் பாக்ஸை வெளியே எடுத்தவன். அதிலிருந்த பால் கொழுக்கட்டையை அவள் வைத்திருந்த ஸ்பூனை கொண்டு சுவை பார்த்துவிட்டு, “ஆஹா.. செம போ” என்றான் சிலாகித்து.
அவனின் தோளில் இரண்டு அடி போட்டவள் அவனிடமிருந்த டிபன் பாக்ஸை வெடுக்கென்று பிடுங்கி மீண்டும் தன் பேக்கிற்குள் திணித்துவிட்டு, “என்ன பண்றீங்க மாம்ஸ் இது அக்காவுக்காக” என்றாள் சிணுங்கி கொண்டு.
“அப்போ என்னை விட உனக்கு உன் அக்கா தான் முக்கியம் இல்ல.. நம்முடைய உறவு அவ்வளவு தான். உன் அக்காவுக்கு அடுத்து தான் நான் உனக்கு. சின்ன வயசுல இருந்து உன்னை இந்த கையால எவ்வளவு ஆசையா தூக்கி வளர்த்தேன் தெரியுமா” என்று வராத கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டு அவன் பாசமலர் டயலாக்கை எடுத்து விடவும்.
தன் இடுப்பில் கையைக் குற்றி அவனைப் பார்த்து உச்சு கொட்டியவள், “ஐயோ பாவம், இதோ அத்தையையும் கூப்பிடுறேன். அவங்களும் வந்து நீங்க என்னை எப்படி சீராட்டி பாராட்டி வளத்தீங்கன்னு கேட்டு தெரிஞ்சுக்கட்டும்” என்றதும்.
அவளை முறைத்து பார்த்தவன், “கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியே.. சரி நான் கிளம்புறேன் எனக்கு நேரம் ஆகுது”.
இவர்களின் உரையாடல் சுவாரசியத்தில் தங்களை கடந்து சென்ற அந்த கருப்பு நிற காரை கவனிக்க தவறிவிட்டனர் இருவரும்.
ஆனால் காருக்குள் அமர்ந்திருந்தவனின் விழிகளோ இவர்கள் இருவரையும் தான் கவனித்துக் கொண்டே அவ்விடம் இருந்து கடந்து சென்றது.
அகிலன் சென்ற சற்று நேரத்திற்குள்ளேயே ருக்மணி தன் இரு சக்கர வாகனத்துடன் வந்து விடவும். அவளுக்கு பின்னால் ஏறிக்கொண்ட அனு இத்தனை நேரம் தன் மனதிற்குள் அடக்கி வைத்திருந்த மொத்தத்தையும் ஆதங்கமாகவும், புலம்பலாகவும், திட்டுகளாகவும் பொரிய தொடங்கிவிட்டாள்.
“இவ்வளவு கஷ்டப்பட்டு நீ அங்க இருக்குறதுக்கு பேசாம நீயும் சித்தியும் எங்களோடவே வந்துடலாம்ல” என்று பலமுறை அவளிடம் கேட்டுவிட்ட அதே கேள்வியை மீண்டும் சலிப்போடு கூறினாள் ருக்மணி.
“என்னை என்னக்கா பண்ண சொல்ற.. எனக்கு மட்டும் என்ன ஆசையா.. அந்த வீட்டுக்கு சேவகம் பண்ணி சேவையிலேயே என் ஆயுசை கரைக்கனும்னு.. எல்லாம் அம்மாவால தான். ஒன்னு பேச முடியல உடனே கண்ணுல தண்ணி வச்சுக்க வேண்டியது. நாம ஒன்னும் பெரியம்மா மாதிரி கிடையாது. உன் பெரியம்மாவுக்கு அண்ணன் தம்பிங்க ஆதரவு இருக்கு. நான் அப்படி யாருடைய ஆதரவும் இல்லாம இந்த வீட்டுக்கு வந்தவ. இந்த வீட்டை விட்டு வெளிய போயிட்டா நாளைக்கு உனக்கு கல்யாணம் பண்ணனும்னா யாரு எடுத்து செய்வா.. நமக்குன்னு யாரு இருக்கான்னு அத்தனை அழுகாச்சு புலம்பலோட. கேட்டு கேட்டு காதுல ரத்தம் வருது. ஒரே டயலாக்கை நானும் எத்தன தடவ தான் கேட்கிறது” என்றவாறு அவளின் தோளில் தன் தலையை சாய்த்து கொண்டாள்.
அவளின் கன்னத்தை வண்டியை ஓட்டிக்கொண்டே இடது கையால் தட்டிக் கொடுத்தவள், “இன்னைக்கு டோஸ் ஓவரா” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.
“வேலை செய்யுறதோ, திட்டு வாங்குறதோ பெருசு இல்லக்கா. ஏதோ வடகத்தை காக்கா தூக்கிகிட்டு போயிடுற மாதிரி, அவங்க பையன எங்க நான் தூக்கிகிட்டு போயிடுவேனோன்ற போலவே என்னை ஒரு பார்வை பார்க்கிறாங்க பாரு.. அது தான் பத்திகிட்டு வருது. இதெல்லாம் எங்க அம்மா கண்ணுக்கு தெரிய மாட்டேங்குது. உனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு பார்த்துட்டா அதுக்கப்புறம் நீ என்ன சொல்றியோ அதையே நான் கேட்கிறேன்னு சொல்லி என் வாயை அடைச்சிட வேண்டியது. இதுக்காகவே சீக்கிரம் படிப்ப முடிச்சு ஒரு நல்ல வேலைக்கு போய் நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி என் அம்மாவையும் என்னோடவே கூட்டிட்டு போய் வச்சுக்கணும்னு தோணுது. ஆனா, இதெல்லாம் உடனே நடக்கிற காரியமா” என்றவளின் குரலுமே அத்தனை வருத்தத்தை உள்ளடக்கி இருந்தது.
இவர்களின் உரையாடல் முடிவதற்குள்ளாகவே கல்லூரி வளாகம் வந்து விடவும், வண்டியை நிறுத்திய ருக்மணி அவளை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவாறு, “ஏன் நடக்காது? நீ மட்டும் சரின்னு சொல்லு நாளைக்கே உனக்கு தகுந்த மாதிரி ஜம்முனு ஒரு மாப்பிள்ளையை கொண்டு வந்து நான் இறக்குறேன்” என்றாள் தன் ஒற்றை கண்ணை சிமிட்டி சிரித்தவாறு.
“போக்கா” என்று அவளின் முதுகில் தன் பையினால் அடித்தவள், “மறந்தே போயிட்டேன் பாரு.. ஹாப்பி பர்த்டே” என்றாள் அவளை ஆரத்தழுவி.
அதில் முகம் மலர்ந்த ருக்மணி, “வீட்டு பிரச்சனையை பத்தி பேசினதும் என் பர்த் டேவை கூட நீ மறந்துட்ட பாத்தியா” என்றாள் விளையாட்டாய்.
“அப்படியெல்லாம் இல்லக்கா.. இங்க பாரு காலையிலேயே உனக்காக பால் கொழுக்கட்டை செஞ்சு கொண்டு வந்தேன். இது உனக்கு ரொம்ப பிடிக்கும்ல சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு” என்றதோடு மட்டுமல்லாமல் அவளின் வாயிலேயே எடுத்து வைத்து விட்டாள்.
“ம்ம்.. ம்ம்.. போதும் டி. சூப்பரா இருக்கு நீயா செஞ்ச”.
“பின்ன வேற யாரு செய்வாங்களாம். நானே தான் செஞ்சேன். இதுக்கு ஏதோ அவங்க குடும்ப சொத்தையே நான் ஆட்டைய போட்டு என் பைக்குள்ள சொருகிகிட்டு போற மாதிரி பேசுறாங்க அந்த மிஸ்ஸான இந்தியா அத்தை”.
“சரி விடு அவங்க அப்படித்தானே நமக்கு தான் தெரியும்ல” என்னும் பொழுது சட்டென்று தன் தலையில் கையை வைத்த அனுராதா, “ஐயோ அக்கா! மறந்தே போயிட்டேன்”.
“என்னது?”.
“பானி பூரி கடைக்கு போகணும்னு நினைச்சேன்”.
“காலையிலேயே வா” என்றாள் ருக்மணி தன் விழிகளை அகல விரித்து.
அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சியவாறு, “ஐயோ அக்கா, நீ ரொம்ப க்யூட் தெரியுமா.. செம அழகு.. சோ ஸ்வீட்” என்று அடுக்கிக்கொண்டே செல்ல.
அவளின் கையை தட்டிவிட்டவள், “முதல்ல விஷயத்தை சொல்லு டி”.
“ஆமா, காலையிலேயே அத்தை பேசின பேச்சுக்கு கோபம் சர்ருன்னு டைரக்டா உச்சந்தலைக்கு ஏறிடுச்சு. அதை மலை இறக்கனும்ல.. அந்த கோபத்துக்கு நாலு பிளேட் பானி பூரி சாப்பிட்டு என்னை நானே கண்ட்ரோல் பண்ணனும்னு நெனச்சேன். ஆனா, உன்கிட்ட பேசிக்கிட்டே மறந்து காலேஜுக்கு வந்துட்டேன்”.
தன் தங்கையின் முக சுணக்கத்தை தாங்க முடியாமல், “உன்கிட்ட எத்தன தடவ சொல்றது அனு, இப்படி மார்னிங் டைம்ல பானி பூரி சாப்பிடுறது நல்ல பழக்கமே கிடையாது. வயித்துக்கும் ஒத்துக்காது. ஈவினிங் பிக்கப் பண்ண வருவேன்ல. அப்ப ரெண்டு பேரும் சேர்ந்தே பானி பூரி கடைக்கு போகலாம். இன்னைக்கு என்னுடைய பர்த்டே ட்ரீட் அங்க தான் ஓகே” என்றதும் தான் முகம் மலர்ந்தாள் அனுராதா.
அவளின் மலர்ந்த முகத்தை பார்த்த பிறகு தான் ருக்மணிக்குமே மனம் சற்று ஆசுவாசமானது.
“ஓகேக்கா டைம் ஆயிடுச்சு பாய். ஒன்ஸ் அகைன் ஹாப்பி பர்த்டே” என்று அவளை அணைத்து விடுவித்தவள் பட்டாம்பூச்சியாய் சிறகடித்து பறக்க தொடங்கி விட்டாள்.
அவளுக்கு கை அசைத்துவிட்டு புறப்பட்ட ருக்மணிக்குள் பல்வேறு சிந்தனைகள்.
ருக்மணி பாண்டிச்சேரியில் இடம் பெற்றுள்ள தனியார் வங்கியில் மேனேஜராக பணியாற்றுகிறாள்.
தினமும் அவள் தான் தன் தங்கையை கல்லூரிக்கு விட்டுவிட்டு செல்வாள். மாலை வரும்பொழுது அவளையும் அழைத்துக் கொண்டே சென்று விடுவாள்.
இத்தனை பாசத்தோடும், அன்போடும் இருக்கும் இவர்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றில் ஒட்டி பிறந்த சகோதரிகள் எல்லாம் கிடையாது.
அவர்களின் அப்பா புண்ணிய கோடியின் மூத்த சம்சாரம் விசித்ராவின் ஒரே மகள் தான் ருக்மணி.
இரண்டாம் சம்சாரம் கோமதியின் ஒரே மகள் அனுராதா.
ஒரே தந்தைக்கும் வெவ்வேறு தாய்க்கும் பிறந்தவர்களாக இருந்தாலும் கூட, அவர்களுக்குள் அத்தனை அன்னியோன்யமும், பாசமும் சிறு வயது முதலே இருக்கிறது.
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டே தானே இருப்பார்கள்.
அப்படி புண்ணியகோடியின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து, தன் வாழ்க்கையை தொலைத்தவர் தான் கோமதி.
அவருடன் திருமணம் முடிந்து அனுராதா அவரின் வயிற்றில் 8 மாத கருவாக இருக்கும் பொழுது தான் புண்ணியகோடிக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயமே அவருக்கு தெரியவந்தது.
பெரிய குடும்பம்.. இரண்டாம் மனைவிக்கும் குழந்தை என்று ஆகிவிட்டது. குடும்ப கௌரவத்திற்காக புண்ணியகோடி அடிக்கடி அங்கு சென்று வருவது சரி வராது என்று எண்ணிய அவரின் குடும்பத்தினர் வீட்டில் மூத்த தாரம் இருக்கும்பொழுதே கோமதியையும் அங்கே அழைத்து வந்து விட்டனர்.
ஆனால் விசித்ராவிற்கு கிடைக்கும் மரியாதையும், கௌரவமும் கோமதிக்கு அங்கே கிடைக்காது.
கோமதி சொந்த பந்தம் என்று யாரும் இல்லாத வெகுளித்தனமான பெண்மணி. அதனாலேயே இலகுவில் புண்ணிய கோடியின் ஆசை வார்த்தைகளை நம்பி காதலில் விழுந்துவிட்டார்.
*****
கதையை பற்றிய உங்கள் கருத்தையும் பதிவு பண்ணுங்க டியர்ஸ் 😊 உங்கள் கருத்து தான் என்னை ஊக்கப்படுத்தும் 🙏 🥰
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
2
+1
+1

