Loading

உயிர் – 15

தன் போனில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த புண்ணியகோடி, “இப்போ என்ன அவசரம் அதெல்லாம் பொறுமையா பாத்துக்கலாம். போய் வேற வேலை இருந்தா பாரு” என்று கோமதியை திரும்பியும் பார்க்காமல் கூறினார்.

“இதுவரைக்கும் நான் உங்ககிட்ட எனக்குன்னு எதையுமே கேட்டதில்ல. முதல் தடவையா கேட்கிறேன். என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை மட்டும் அமைச்சு கொடுத்திடுங்க. அவ சந்தோஷமா வாழ்ந்தா எனக்கு அது போதும். அதுக்கு மேல எனக்கு வேற எதுவுமே தேவையில்ல” என்று உணர்ச்சி பெருக்கோடு அவர் கூறிக் கொண்டிருப்பதை சற்றும் சட்டை செய்யாமல் அமர்ந்திருந்தவர்.

“இப்ப எதுக்கு நீ இவ்வளவு அவசரப்படுற.. அவ இன்னும் படிப்பையே முடிக்கல. அதுக்குள்ள என்ன கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நிலைமை வந்துச்சு”.

“அதுக்கு இல்லங்க.. மாப்ள பார்க்க ஆரம்பிச்சா கொஞ்சம் நாள் ஓடும் இல்ல.. அதுக்குள்ள படிப்ப முடிச்சிடுவா. படிப்பை முடிச்சதும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா நம்ம கடமை முடிஞ்சிடும் இல்லங்க”.

“அது தான் நானும் கேட்கிறேன். இப்போ என்ன அவசரம்னு.. படிப்ப முடிச்ச உடனே கல்யாணம் பண்ணனுமா என்ன.. கொஞ்ச நாள் போகட்டும் விடு”.

இவரிடமிருந்து இதைவிட வேறு என்ன தான் எதிர்பார்த்து விட முடியும். தங்களின் வாழ்க்கையின் போதும் இப்படித்தான் விட்டேற்றியாக நடந்து கொண்டார்.

இப்பொழுது தங்கள் மகளின் வாழ்க்கையின் பொழுதும் அதே போல் இருப்பவரிடம் போராட முடியாமல் கோமதியின் மனம் மரத்துப்போனது.

“இல்லங்க ருக்மணிக்கும், ஆதவ்க்கும் கல்யாணத்துக்கு பேசி இருக்காங்க. நாமளும் அனுவுக்கு வெளியில மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சா அவ படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி வைக்கலாமேனு தான்..” என்று அவர் முடிப்பதற்குள்ளாகவே அவரை வெடுக்கென்று நிமிர்ந்து பார்த்த புண்ணியகோடி, “என்னது அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துக்கு பேசி இருக்காங்களா.‌. என்ன நெனச்சிட்டு இருக்கா அந்த விசித்ரா.. எப்படி இருந்தாலும் ருக்மணி என்னுடைய பொண்ணு தான. அவளுக்கு அப்பா நான் தான. என்கிட்ட ஒரு வார்த்தை கூட கேட்காம ஆதவ்க்கும், ருக்மணிக்கும் கல்யாணத்துக்கு பேசி இருக்காங்களா.. போனா போகுதுன்னு விட்டா ரொம்ப தான் பண்றா அவ.. இப்ப உனக்கு என்ன.. அவ பொண்ணுக்கு அவ கல்யாணம் பண்ணதும். உனக்கும் உன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனுமா.. என்ன அவளோட சேர்ந்து போட்டி போடுறியா நீ”.

“ஐயோ! அப்படியெல்லாம் இல்லைங்க” என்று பதறியவாறு கூறினார் கோமதி.

“பின்ன வேற எப்படி? நீ பண்றது அப்படி தான் இருக்கு. முதல்ல நான் அந்த விசித்ராவை போய் என்னன்னு கேட்டுட்டு வந்து உன்கிட்ட பேசிக்கிறேன்” என்று விட்டு அவர் விறுவிறுவென விசித்ராவின் வீடு நோக்கி நடக்கவும். கோமதிக்கு தான் பக்கென்றது.

அவரின் பின்னோடு விசித்ராவின் வீடு நோக்கி ஓடினார் கோமதி.

வீட்டிற்குள் நுழைந்ததும் எடுத்த எடுப்பிலேயே, “ஏய் விசித்ரா.. எங்க இருக்க?” என்று குரல் கொடுக்கவும்.

நிதானமாக வெளியே வந்தனர் விசித்ராவும், ருக்மணியும்.

“புருஷன்னு நான் ஒருத்தன் உயிரோடு இருக்கிறது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா.. உன் இஷ்டத்துக்கு ருக்மணிக்கும், ஆதவ்க்கும் கல்யாணத்துக்கு பேசி இருக்க. நான் தானே இவளுடைய அப்பா. ஒரு வார்த்தை என்கிட்ட கலந்துக்கணும்னு உனக்கு தோணலையா”.

“என் பொண்ணுக்கு அப்பான்னு எல்லா விஷயத்துலயும் சரியா நடந்திருந்தா கலந்து இருப்பேன்” என்று முகத்தில் அடித்தார் போல் கூறி இருந்தார் விசித்ரா.

“இதுவரைக்கும் என் பொண்ணுக்கு அப்பானு நீங்க என்ன பண்ணி இருக்கீங்க? எதுக்காக உங்ககிட்ட நான் இதையெல்லாம் கேட்டு முடிவு பண்ணனும். என் வாழ்க்கையிலும் சரி, என் பொண்ணோட வாழ்க்கையிலும் சரி எல்லா முடிவையும் நான் மட்டும் தான் எடுப்பேன். முடிவு எடுக்கிற தகுதியிலிருந்து நீங்க எப்பவோ விலகிட்டீங்க”.

“கொஞ்சம் கூட எப்படி மரியாதை கொடுத்து பேசணும்னு தெரியல. அதான் உன் வாழ்க்கையை இப்படி விட்டுட்டு உட்கார்ந்து இருக்க. நீயும் உன் அம்மா மாதிரியே இருந்தினா நாளைக்கு உனக்கும் இதே நிலைமை தான். பார்த்து நடந்துக்க” என்று வார்த்தைகளை அமிலமாய் இறைத்துவிட்டு வெளியேறிவிட்டார்.

எப்படி எல்லாம் பேசிவிட்டார். ஏதோ விசித்ராவினால் தான் அவரின் வாழ்க்கை அவரின் கையை விட்டுப் போனதைப் போல் அல்லவா அனைத்து பழியையும் தூக்கி அவர் மீது இறைத்து விட்டு போகிறார்.

‘இவர் எல்லாம் என்ன மனுஷன்’ என்று அங்கிருந்த மூன்று பெண்களுமே ஒரு சேர நினைத்தனர்.

சற்று நேரத்தில் அவர் பேசி விட்டு சென்ற அதிர்ச்சியில் இருந்து விசித்ரா மீளவும், “வா கோமதி உட்காரு”.

“மன்னிச்சிடுங்கக்கா.. எல்லாம் என்னால தான்” என்று பரிதவிப்போடு கூறினார் கோமதி.

“உன்னாலயா என்ன சொல்ற?”.

நேற்று இரவு வீட்டில் நடந்த சம்பவத்தையும், காலையில் புண்ணியகோடியிடம் அவர் பேசிய விஷயங்களையும் விளக்கமாக கூறினார் கோமதி.

அதை கேட்டதும் ருக்மணிக்கு கோபம் சுர்ரென்று தலைக்கு ஏற, “என்ன பேசுறீங்க சித்தி.. அனுவை அடிச்சீங்களா.. எதுக்காக நீங்க அனுவை அடிச்சீங்க. அவ மேல எந்த தப்பும் இருந்திருக்காது”.

“அது எனக்கும் நல்லா தெரியும்மா. பெரியவங்க கிட்ட வார்த்தையை விடுறா. எனக்கு அவளை எப்படி கட்டுப்படுத்துறதுனு தெரியல. அவங்களும் என் பொண்ணுக்கு ஏதோ சாபம் விடுற மாதிரி பேசிட்டு போறாங்க. எனக்கு மனசே சரியில்ல. எனக்குன்னு இருக்கிறது அவ மட்டும் தான். அவ சந்தோஷமா வாழுறதை பார்த்தா தான் நான் நிம்மதியா கண்ணை மூட முடியும். எங்க அவ வாழ்க்கையும் என்னை மாதிரியே நாசமா போயிடுமோன்னு வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு இருக்கேன். ஏற்கனவே, நான் செஞ்ச தப்பால அவளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையுமோ அமையாதோன்னு தினம் தினம் நான் பயந்துகிட்டு இருக்கேன். இதுல அவங்க வேற அப்படி பேசவும் என்னால தாங்க முடியல” என்றார் கண்ணீர் மல்க.

அவரின் நிலையை விசித்ராவால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவரும் தன் பெண்ணிற்காக எப்படி எல்லாம் பயந்தார்.

“அதுக்காக இப்படி தான் பொண்ணு மேல கை நீட்டுறதா. என்கிட்ட நேத்து ருக்மணி சொன்னா இவங்க நாலு பேரும் சேர்ந்து தான் புது வருஷத்தை கொண்டாடுறதுக்காக போயிருக்காங்க. சொந்த பந்தத்துக்குள்ள இதெல்லாம் ஒரு விஷயமா.. நானும் பெருசா எடுத்துக்கல.. இதுக்கு ஏன் கீதா அண்ணி அப்படியெல்லாம் பேசுறாங்க”.

“அவங்களுக்கு எங்க அனுவை அகிலனுக்கு கட்டிக் கொடுக்க கேட்போமோனு யோசிக்கிறாங்க போலருக்கு அக்கா. அதான் இப்படி எல்லாம் வார்த்தையை விட்டுட்டாங்க. எனக்கும் என் பொண்ணுக்கும் துளி அளவும் அப்படி எந்த ஒரு எண்ணமும் கிடையாது. என் பொண்ணுக்கு வெளியில மாப்பிள்ளை பார்த்தாலும் நல்ல படியா வாழ்ந்தா போதும்னு தான் நான் நினைக்கிறேன்”.

“நீ ஒன்னும் கவலைப்படாத கோமதி நிச்சயமா அனுவுக்கு நல்ல மாப்பிள்ளை தான் அமையும். நீ ஆசைப்படுற போல அவ சந்தோசமா வாழுறதை உன் கண்ணார நீ பார்ப்ப. புது வருஷத்துடைய ஆரம்பமும் அதுவுமா இப்படித்தான் அந்த சின்ன பொண்ணு கிட்ட வீட்ல இருக்குறவங்க எல்லாரும் சண்டை போடுறதா.. அதோட நிறுத்தாம பாவம் நீ பிள்ளையை அடிச்சு வேற வச்சிருக்க. புள்ள மேல கை நீட்டுறதுக்கு உனக்கு யார் உரிமை கொடுத்தது” என்று கோமதியை அதட்டியவர்.

ருக்மணியை பார்த்து, “நீ அனுவை கூப்பிட்டு கோவிலுக்கு போயிட்டு வாம்மா. அப்ப தான் அவளோட மனசு கொஞ்சம் சரியாகும்”.

“சரிமா” என்றவள் தன் செல்பேசியை எடுத்துக்கொண்டு அனுவிற்கு அழைத்தவாறு அவளையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றாள்.

கோவிலுக்கு சென்றவர்கள் நேராக பானி பூரி கடைக்கு சென்று நிற்கவும். தன் கோபம் தீரும் மட்டும் உண்டு தீர்த்தவள். கீதாவையும் திட்டி தீர்த்துவிட்டு தான் வீட்டிற்கு புறப்பட்டு இருந்தாள்.

இதற்காக தானே அவள்‌ வீட்டில் கீதாவின் முன்னிலையில் அகிலனுடன் பேசாமல் இருப்பது. இனியும் தள்ளியே இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்.

பாவம்,‌ வாழ்க்கை அவளை இந்த குடும்பத்துடன் தான் திருமண பந்தத்தில் இணைக்க போகிறது என்பதை அறியாமல் தன் போக்கிற்கு முடிவு செய்து கொண்டாள்.

அதன் படி வழக்கம் போல் அகிலனை கண்டாலே எதற்கு வம்பு என ஒதுங்கி செல்ல துவங்கி விட்டாள்.

விசித்ராவும் உமாவிற்கு தொடர்பு கொண்டு திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட.

உமாவிற்கு மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை.

அன்றே தன் அன்னையை காண வேண்டி வந்துவிட்டார்.

“அம்மா எப்படி இருக்கிங்க?” என்றவாறு ஆராவாரத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவரை வரவேற்ற கீதா, “வாக்கா உக்காரு”.

“நல்லா இருக்கியா கீதா?”.

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்”.

நல விசாரிப்புகள் முடிந்ததும் கற்பகத்தை பார்த்த உமா, “அம்மா அண்ணி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாங்க. நம்ம ஜோசியரை வர வச்சு நிச்சயத்துக்கும், கல்யாணத்துக்கும் நாள் குறிச்சிடலாம்” என்று மகிழ்ச்சியாக குதுக்களித்தார்.

கீதா எதிலும் கலந்து கொள்ளாமல் ஓரமாக அமர்ந்து கொண்டார். அவருக்கு முகமே விடியவில்லை.

“எதுக்குமா நிச்சயத்துக்கு ஒரு நாள்.. கல்யாணத்துக்கு ஒரு நாள்.. பேசாம கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நிச்சயத்தையும் ஒன்னாவே வச்சிடுவோமே”.

“ம்ம்.. அதுவும் சரி தான் மா. நான் கூட நினைச்சேன் ரொம்ப நாளை கடத்த வேண்டாம்னு” பேசிக்கொண்டே தங்களின் குடும்ப ஜோசியருக்கும் அப்பொழுதே தொடர்பு கொண்டு நல்ல நாளையும் குறித்து வாங்கி விட்டனர்.

அடுத்த மாதத்திலேயே ஒரு நல்ல தேதியை குறித்து கொடுத்திருந்தார் அவர்.

முந்தைய நாள் சாய்ந்திரம் நிச்சயத்தையும், ரிசப்ஷனையும் ஒன்றாக வைத்தவர்கள். மறுநாள் திருமணம் என முடிவு செய்துவிட்டனர்.

விசித்ராவின் அண்ணனுக்கு மட்டும் தான் இந்த திருமணத்தில் அவ்வளவாக விருப்பமில்லை.

“திரும்பவும் ஏன் அந்த குடும்பத்திலேயே உன் மகளையும் கொடுக்க ஆசைப்படுற.. உன் வாழ்க்கை வீணா போனது பத்தாதா” என்று தன் தங்கையிடமே நேரடியாக கேட்டு விட்டார்.

தன் மகனுக்கு தன் தங்கை மகளை திருமணம் முடித்து வைக்கவும் அவருக்கு சூழ்நிலை சரியில்லை. ஏனெனில், அவரின் மனைவிக்கு ருக்மணியை கட்டுவது சற்றும் விருப்பமில்லை.

எனவே, விசித்ராவின் விருப்பம் என்று விட்டுவிட்டார். அதிகமாக இந்த திருமண விஷயத்தில் அவர் தலையிட்டு கொள்ளவில்லை.

அதன்படி குடும்பமே உற்சாகமாக திருமண கொண்டாட்டத்தில் குதூகலித்துக் கொண்டிருந்தது. அனைவரும் ஒரு திருமணத்திற்காக தயாராகிக் கொண்டிருக்க.

ஆனால், நடக்கப் போவதோ இரு திருமணம்.

ருக்மணியும் தன் அன்னையிடம் இதைப் பற்றி இதுவரை எதுவும் கூறிக் கொள்ளவில்லை. ஆதவ்வின் மேல் நிச்சயம் நம்பிக்கை இருந்தது. அவன் பார்க்கும் மணமகன் நல்லவனாக தான் இருப்பான் என்ற நம்பிக்கையும் இருந்தது.

திருமணத்தின் மேல் பெரிதாக எந்த ஒரு ஈடுபாடும் இல்லாத ருக்மணிக்கு மணமகன் யாராக இருந்தாலும் சரி என்னும் மனநிலையில் தான் இருந்தாள்.

ஆனால், அகிலன் தான் மணமகன் என்பதை அறியும் பொழுது அவளின் மனநிலை எப்படி இருக்குமோ..

திருமண வேலைகள் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது. பத்திரிக்கை அடித்து சொந்த பந்தங்கள் அனைவருக்கும் கொடுத்து விட்டனர்.

மணமகனுக்கு உடை எடுக்கும் பொழுது அகிலனுக்கும் தனக்கும் ஒரே போல் எடுத்து விட்டான் ஆதவ்.

“கல்யாணம் உனக்காக உன் தம்பிக்கா?” என்று கிண்டல் செய்த தன் பாட்டியிடம், “என் கல்யாணத்துல என் தம்பியும் கல்யாண மாப்பிள்ளை போல தான் ஜொலிக்கணும்” என்று அவரின் வாயை அடைத்திருந்தான்.

யாருக்கும் இதில் எந்த ஒரு சந்தேகமும் தோன்றவில்லை. அதற்கு பதிலாக அவர்களின் பாசமும், பிணைப்பும் தான் பளிச்சென்று விளங்கியது.

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
7
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்