
உயிர் – 13
அனு தன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அகிலனை திரும்பி பார்க்கவும்.
அவனும் அவள் பாவனையில் அவளை அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தவன், “என்ன அனு?” என்றான் சாவகாசமாக.
அவனுக்குள் அப்படி ஒரு குதூகலம். ருக்மணி அருகில் அமர்ந்த நிமிடங்களை கொஞ்சம் கொஞ்சமாக தெவிட்டாமல் தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
அவளுடன் செலவிடும் ஒவ்வொரு மணித்துளிகளையும் தனக்குள் பொக்கிஷமாக சேர்த்துக் கொண்டிருந்தான்.
தங்கள் காதலுக்கு ஆதாரமாய் அமையப்போகும் இந்த நொடிகளை வீணடிக்க அவன் விரும்பவில்லை.
ஆதவ் முன்னிலையில் அவனிடம் தன் கோபத்தை கூட காட்ட முடியாத கையறு நிலையில் நின்று இருந்தாள் அனு.
தன் பற்களை கடித்துக் கொண்டு, “ஒன்னும் இல்ல” என்றவள் திரைப்படத்தை பார்க்க முயற்சிக்க அது முடிந்தால் தானே.
அகிலன் ருக்மணியின் முதுகின் பின்னால் தன் கட்டை விரலை தூக்கி காட்டியவாறு ஆதவ்வை பார்க்கவும்.
அவனும் சரியாக அந்நேரம் அகிலனை பார்த்தவன் அட்டகாசமான புன்னகையோடு ஒற்றை கண்ணை சிமிட்டி காட்டி இருந்தான்.
சகோதரர்கள் இருவருக்குள்ளும் காதல் நைல் நதி போல் கரைபுரண்டு ஓட. அதை கரை சேர்க்கும் வழி தெரியாமல் தங்கள் துணையையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தனர். அது புரியாமல் போனது என்னவோ பேதைகளுக்கு தான்.
ஒரு வழியாக திரைப்படம் முடியவும், அனுவிற்கு ‘அப்பாடா’ என்று ஆயாசமாக ஆகிவிட்டது.
திரையரங்கை விட்டு வெளியேறியதும் ஆதவ்வும், ருக்மணியும் முன்னே செல்ல.
யாரும் அறியா வண்ணம் அகிலனின் கையை பிடித்து இழுத்து பின் கொண்டு வந்த அனுராதா, “மாம்ஸ் உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா.. ஆள் தான் வளர்ந்து இருக்கீங்களே தவிர, கொஞ்சம் கூட உங்களுக்கு விவரமே பத்தல”.
“ஏன் நான் என்ன பண்ணேன்?”.
“உங்க அண்ணனுக்கும் என் அக்காவுக்கும் கல்யாணம் அதை நீங்க மறந்துட்டீங்களா என்ன” என்று தன் விழிகளை உருட்டி அவள் கேட்கவும்.
“ஆமா, அதுக்கு என்ன இப்போ?” என்றான் சர்வ சாதாரணமாக.
“அவங்க ரெண்டு பேரையும் ஜோடியா உட்கார வச்சு படம் பார்க்க விட்டா தானே ஒரு கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் ஏதாவது கனெக்ட் ஆகும். அதை விட்டுட்டு அவங்க ரெண்டு பேரையும் இப்படி பிரிச்சு வைக்கிறீங்க. இதெல்லாம் உங்களுக்கே அநியாயமா இல்லையா”.
“ஓ! இதுல அப்படி ஒரு விஷயம் இருக்கா.. அதை பத்தி நான் யோசிக்கவே இல்ல அனு” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் கூறிய பாவனையில் அவன் உண்மையாக தான் கூறுகிறான் என்று அப்படியே நம்பிவிட்டாள் அனுராதா.
“என்ன மாம்ஸ் நீங்க.. ஒண்ணுமே தெரியாம இப்படி பச்சை மண்ணா இருக்கீங்களே.. சரி, இனி பார்த்து நடந்துக்கோங்க. அவங்கள பிரிக்கிறதோட மட்டுமில்லாம, என்னை வேற உங்க அண்ணனோட கோர்த்து விட்டுடுறீங்க.. போங்க மாம்ஸ் நீங்க..” என்று அவள் முகத்தை சோகமாக வைத்துக் கொள்ளவும்.
“லைஃப் லாங் உன்ன என் அண்ணனோட கோர்த்து விட அந்த கடவுள் முடிவு பண்ணிட்டாரு. நீ என்னடான்னா ஒரு படம் பார்க்கவே இப்படி மூக்கால அழறியே” என்று மனதிற்குள் அவளுக்காக பரிதாபப்பட்டு உச்சு கொட்டிக் கொண்டான் அகிலன்.
“யார் யாரை பிரிக்கிறது?” என்று சட்டென்று தங்களுக்கு வெகு அருகாமையில் கேட்ட ஆதவ்வின் குரலில் திடுக்கிட்டு திரும்பிய அனுராதா, அவனை சற்றும் இங்கே எதிர்பார்க்கவில்லை. முகமே பேய் அறைந்தது போல் மாறிவிட்டது.
அவளை பார்த்துவிட்டு அகிலனை பார்த்தவன், “என்ன அகில்?” என்றான்.
தன் அண்ணனை கண்டதும் அனுராதாவின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை பார்த்த அகிலனுக்கு கட்டுப்படுத்த முடியாமல் சிரிப்பு பீரிட்டு கிளம்பியது.
ஆனாலும், இப்பொழுது சிரித்து வைத்தால் ஆதவ்விடம் மாட்டிக் கொள்வோமே என்று வெகு சிரமப்பட்டு தன் பற்களை கடித்து தன் சிரிப்பை கட்டுப்படுத்தியவன், “அது ஒன்னும் இல்லண்ணா அனு தான்..” என்று ஆரம்பிக்கும் முன்பே முந்தி கொண்ட அனுராதா, “ஒன்னும்.. ஒன்னும் இல்லையே.. சும்மா படம் நல்லா இருந்துச்சுன்னு பேசிட்டு இருந்தோம். இல்ல மாம்ஸ்.. படம் நல்லா இருந்துச்சில்ல..” என்று அகிலனை பார்த்து கேட்டுக் கொண்டே ‘ஆமாம்’ என்று தலையசைக்கும்படி தன் தலையையும் அவள் ஆட்டிக் காட்டவும்.
அவளின் குறிப்பை சரியாக புரிந்து கொண்ட அகிலனுக்கு மேலும் சிரிப்பு வெடியாய் கிளம்பியது தான் மிச்சம்.
“ம்ம்” என்றவனுக்கு வாயை திறந்து பதில் பேச முடியவில்லை.
வாயைத் திறந்தால் எங்கே பக்கென்று சிரித்து வைத்து விடுவோமோ என்று பயம் பிடித்துக் கொள்ள அமைதியாக நின்றிருந்தான்.
அதற்கு மேல் அங்கே நிற்க முடியாத அனு, “நான் அக்கா கிட்ட போறேன்” என்று பொதுவாக கூறிவிட்டு குடுகுடுவென ஓடிவிட்டாள்.
அவள் சென்று மறையவும் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கலகலவென நகைக்க தொடங்கி விட்டான் அகிலன்.
“என்னடா அப்படி என்ன சொல்லிட்டு போறா? இப்படி விழுந்து விழுந்து சிரிக்கிற?”.
“உங்க நிலைமையை நெனச்சு தான் சிரிக்கிறேன்”.
“என் நிலைமையா என்ன சொல்ற?”.
“அது உங்களுக்கும் அவளுடைய அக்காவுக்கும் கல்யாணம் நடக்க போகுதாம். உங்க ரெண்டு பேரையும் நான் பிரிச்சு விடுறேனாம். இனிமே அப்படி பண்ண கூடாதுன்னு மேடம் என்னை வார்ன் பண்ணிட்டு போறாங்க. அது மட்டும் இல்லாம, அவங்கள பிரிக்கிறதோட இல்லாம உங்களை வேற அனுவோட கோர்த்து விட்டுடறேனாம். அதை சமாளிக்க முடியாம திணறி போய் நிக்கிறா” என்று சிரிப்பினோடு கூற.
ஆதவ்வின் இதழும் தாராளமாக விரிந்தது.
அதன் பிறகு புகழ்பெற்ற உணவகத்திற்கு அவர்களை அழைத்துச் சென்ற ஆதவ் இரவு உணவை முடித்துக் கொண்டதும் கடற்கரைக்கு அழைத்து சென்றிருந்தான்.
அனு ஒவ்வொரு இடத்திலும் கவனமாக ஆதவ்வை தவிர்ப்பது அப்பட்டமாக மற்றவர்களுக்கு விளங்கினாலும், தங்களுக்குள் சிரித்துக் கொண்டனரே தவிர, அவளை தொந்தரவு செய்யவில்லை.
அவனும் அவளின் இந்த குட்டி குட்டி சில்மிஷ வேலைகளை எல்லாம் ரசித்துக் கொண்டே தான் இருந்தான். ஆனாலும், தடுக்கவில்லை.
நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. அனைவரும் அவரவர் வீட்டில் கூறி விட்டமையால் யாரும் அவர்களை தொந்தரவு செய்யவில்லை.
கடற்கரையின் காற்று குளுமையாக அனைவருக்குள்ளும் ஊடுருவி செல்ல. அந்த சில்லென்ற நேரம் கூட ஆண்கள் இருவருக்குள்ளும் அத்தனை கதகதப்பை கொடுத்து இருந்தது.
தங்களின் இணையுடன் இப்படியே இந்த நொடி இணைபிரியாமல் நீடிக்காதா என்ற ஏக்கம் இருவருக்குள்ளுமே வான் அளவிற்கு உயர்ந்திருந்தது.
அகிலன் தன் காதல் பார்வையால் ருக்மணியை தன் விழிகளுக்குள்ளும், மனதிற்குள்ளும் நிறைந்து கொண்டே இருந்தான்.
அனுவின் ஒவ்வொரு அசைவை கூட தனக்குள் ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டு இருந்தான் ஆதவ்.
என்ன தான் அவர்களை திருமணம் செய்த பிறகு ஒட்டி உறவாடி உரசிக் கொண்டு திரிந்தாலும், இந்த நொடி அவர்களுக்கு மீண்டும் கிடைக்காதே.. அதனாலேயே ஆடவர் இருவருக்கும் உள்ளுக்குள் அப்படி ஒரு உணர்ச்சி பெருக்கு.
கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கலை கட்ட தொடங்கியது. மணி 12ஐ நெருங்க இன்னும் சில வினாடிகளே இருக்க கவுண்டவுன் துவங்கியிருந்தது.
கூட்டத்தினர் அனைவரும் பத்திலிருந்து ஒன்று வரை தலைகீழாக கவுண்டவுனுடன் சேர்ந்து சத்தமாக கூச்சலிட்டு எண்ணினர்.
ருக்மணி மின்னும் புன்னகையோடு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்க.
அனுராதாவிற்கோ ஆர்வம் தாங்க முடியவில்லை. முதல் முறை இப்படி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வந்திருக்கிறாள்.
அவளுக்குள் அதுவே புதுவித உணர்வை கொடுத்திருந்தது. இந்த நிமிடங்களை மொத்தமாக எந்த ஒரு கட்டுப்பாடும் இன்றி அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
சுற்றம் மறந்து கூட்டத்தோடு கூட்டமாக ஐக்கியம் ஆகிவிட்டாள்.
அனுவும், அகிலனும் எண்களை சத்தமாக கத்திக் கொண்டிருக்க.
ஆதவ் தன் பேண்ட் பாக்கெட்டில் இரு கைகளையும் விட்டவாறு அவளையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்த வருடத்தின் கடைசி நொடிகளையும் அவனின் விழிகள் அவளில் தான் ரசனையாக செலவழித்தது.
மணி 12ஐ தொட்டதும் அனைவரும் ‘ஹாப்பி நியூ இயர்’ என்று செவிப்பறை கிழியும் அளவிற்கு கத்தி இருந்தனர்.
ஒரு புறம் வான வேடிக்கைகள், மற்றொரு புறம் இசை கச்சேரி என கலை கட்டியிருந்தது.
ஆதவ்வின் விழிகள் இப்பொழுதும் அவளிலேயே தான் நிலைத்திருந்தது.
இந்த வருடத்தின் முதல் நொடிகளையும் அவனின் விழிகள் அவளை தான் ரசனையாக தழுவிக் கொண்டிருந்தது.
தன் அக்காவிற்கு முதலில் புத்தாண்டு வாழ்த்து கூற திரும்பிய அனுவின் விழிகளுக்கு காட்சி பொருளாகியது என்னவோ ஆதவ் கிருஷ்ணா தான்.
எப்பொழுது ருக்மணி அங்கிருந்து நகர்ந்தாள். அவள் அருகில் எப்பொழுது ஆதவ் இடம் பெற்றான் என்பதை எல்லாம் கவனிக்காதவள்.
சட்டென ஆதவ்வை கண்டதும் ஒரு நொடி தடுமாற. அவளை நோக்கி அவள் சுதாரிப்பதற்கு முன்னாக தன் கையை நீட்டி இருந்தான் ஆதவ்.
அதற்கு மேல் எதைப் பற்றியும் சிந்திக்காமல் அவனின் கையை தானும் மென்மையாக பற்றியவள், “ஹாப்பி நியூ இயர்” என்று அவனுக்கு தான் அந்த வருடத்தின் முதல் வாழ்த்தை தெரிவித்து இருந்தாள்.
அவளின் கண்களும் அத்தனை அழகாய் புன்னகைத்துக் கொண்டிருந்தது. அவளுக்குள் ஏதோ ஒரு புது உற்சாகம் ஆர்ப்பரிக்க. அது அவளின் முகத்திலும் அப்பட்டமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.
அதில் தொலைந்து போனவன் ஈர்க்கும் புன்னகையோடு, “ஹாப்பி நியூ இயர்” என்று அந்த பேரிரைச்சலுக்கு தகுந்தார் போல் சத்தமாக அவளிடம் கூறியவன், “மை லைப் லைன்” என்பதை மட்டும் சற்று குரல் தாழ்த்தி கூறியிருந்தான்.
நிச்சயம் அது அவளின் செவிகளை அடைந்திருக்க வாய்ப்பே கிடையாது.
இவர்களின் பரிமாற்றத்தை பார்த்துக் கொண்டிருந்த ருக்மணி மன நிறைவோடு புன்னகைக்க.
அவளுக்கு அருகில் இருந்த அகிலன், “ஹாப்பி நியூ இயர்” என்று கையை நீட்டி இருந்தான்.
பளிச்சென்ற புன்னகையோடு பதிலுக்கு கை குலுக்கியவள், “ஹாப்பி நியூ இயர் அகில்” என்றாள் உற்சாகத்தோடு.
இந்த வருடம் நால்வரையுமே அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல போகிறது.
பெண்கள் இருவருக்கும் பல சுவாரசியங்களையும், உணர்வுகளையும் அவர்களுக்குள் ஒரு ரோலர் கோஸ்டர் போல் கடத்த போகிறது.
சுழலுக்குள் சிக்கியதை போல் அவர்களை சிதறடிக்க போகிறது. அதிலிருந்து அவளவன்கள் அவர்களை மீட்டெடுத்து கரை சேர்ப்பார்களா..
அன்றைய இரவு அவர்களின் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒன்றாக மாறிப்போனது.
அதன் பிறகு அகிலனையும், அனுராதாவையும் அவர்களின் வீட்டில் இறக்கி விட்ட ஆதவ். ருக்மணியை அவளின் வீட்டில் இறக்கிவிட்டு தானும் தன் வீடு சென்று சேர்ந்தான்.
புதுவருட ஆரம்பத்தை பார்த்துவிட்டு அனுராதா தன் வாழ்க்கை இந்த வருடம் இப்படியே குதூகலத்தோடு செல்லும் என்று நினைத்து விட்டாள் போலும்..
ஒரு நொடி போல் அடுத்த நொடி இருப்பதில்லையே.
மகிழ்ச்சியும், குதூகலமும் மட்டும் நிறைந்திருந்தால் வாழ்க்கையும் அதன் சுவாரஸ்யத்தை இழந்துவிடுமே..
அவளுக்கும் அப்படி தான் வீட்டிற்குள் நுழைந்ததும் பெரிய சம்பவமே காத்துக் கொண்டிருந்தது கீதாவின் ரூபத்தில்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
3
+1
1


மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S