Loading

உயிர் – 1

“எங்க அவ?” என்ற அதட்டல் குரலோடு கையில் இருக்கும் காபி கப்பை தூக்கிக் கொண்டே கிச்சனை நோக்கி வந்திருந்தார் கீதா.

“என்னாச்சு கீதா? ஏன் இவ்வளவு கோபமா இருக்க?” என்றார் அவரின் தாயும் அந்த வீட்டின் மூத்த பெண்மணியுமாகிய கற்பகம்.

“எங்கம்மா அந்த அனு? நீங்க கிச்சன்ல என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற கேள்வி பார்வையோடு தன் வழக்கமான அதட்டல் குரலில் கராராக வெளிவந்திருந்தது அவரின் வார்த்தைகள்.

“இப்போதாம்மா உனக்கு காபி கொடுத்துட்டு அப்படியே மாப்பிள்ளைக்கும் காபி கொடுத்துட்டு வரேன்னு எடுத்துட்டு போயிருக்கா” என்று தன் பேத்திக்காக பரிந்தும் பேச முடியாமல், தன் மகளிடமிருந்து இன்று அவளை எப்படி தப்பிக்க வைப்பது என்றும் தெரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தார் கற்பகம்.

“என்னது அதுக்குள்ள அவருக்கு காபி கொண்டு போயிட்டாளா.. அவருக்கும் வெள்ளை சர்க்கரை தான் காபில போட்டு கொடுத்திருக்காளா.. இவளுக்கு எத்தன தடவ சொல்றது. இன்னையிலிருந்து நாங்க ஒயிட் சுகரை கட் பண்ணிட்டு டயட்ல இருக்க போறோம். இவ கிட்ட நேத்து நைட்டே சொல்லி வச்சிருந்தேன். ஆத்தாளும் மகளும் சொல்றதை எங்க காதுல வாங்குறாளுங்க. அவளுங்க இஷ்டத்துக்கு தான் வச்சது தான் சட்டம்ன்ற மாதிரி நடந்துக்குறாளுங்க. எங்க அவளோட அம்மாகாரி அந்த கோமதி” என்றவரின் குரலுக்கு அடுத்த நொடி அவரின் முன்பு பவ்யமாக வந்து நின்று இருந்தார் கோமதி.

“ஏன் டி நேத்து உன் கிட்டயும் உன் மககிட்டயும் சொல்லி இருந்தேன்ல.. இன்னையிலிருந்து நானும் என் வீட்டுக்காரரும் ஒயிட் சுகர் சாப்பிட மாட்டோம்னு.. அப்புறம் எதுக்கு டி காபில உன் மக எனக்கு ஒயிட் சுகர் போட்டுக் கொடுத்திருக்கா” என்றதும் தான் கோமதிக்கு திக்கென்றது.

ஏனெனில், காபியில் மறதியால் வெள்ளை சர்க்கரையை கலந்தது அவராயிற்றே.. ஆனால், அவர் செய்த தவறுக்கு அவரின் மகள் அல்லவா இவரின் வாயில் விழுந்து கொண்டிருக்கிறாள்.

வழக்கம்போல் இவர் காபியை கலந்து கொடுக்க, அவளோ அனைவருக்கும் எடுத்துச் சென்று கொடுத்திருந்தாள். அதன் விளைவு கீதாவின் வாயில் அரை பட்டு கொண்டிருக்கிறாள் அனுராதா.

“இல்லங்க.. அது நான்..” என்று கோமதி தொடங்கும் பொழுதே அவ்விடம் வந்து சேர்ந்த அனு, “நான் தான் மறந்து மாத்தி கலந்துட்டேன்” என்றாள் இறுக்கமான முகத்தோடு.

“வீட்டுல ஒரு வேலையும் செய்யுறதுல உருப்படி இல்ல. மூஞ்சிய பாரு உம்முன்னு.. காலையிலேயே இப்படி முகறையை தூக்கி வச்சிருந்தா வீடு விளங்குமா.. நாளையிலிருந்து ஒழுங்கா நாட்டு சக்கரை போட்டு தான் காபி கொடுக்கணும் நினைவுல வச்சுக்கோ” என்று மேலும் இரண்டு திட்டுகளை திட்டி விட்டே சென்றிருந்தார்.

அனுராதாவோ அவருக்கு எந்த ஒரு பதிலையும் அளிக்காமல் தன் தாயையே உருத்து விழித்துக் கொண்டு நின்று இருந்தாள்.

தன் மகளின் விழி மொழியை அறியாதவரா அவர்.

அவளின் விழிகள் ஆயிரம் கதைகளை பேசின. அதில் கண்டிப்பும், எரிச்சலும் கிலோ கணக்கில் மண்டி கிடந்தது.

அவளின் விழி மொழியை கண்டு கொண்டவர், வழக்கம் போல் அதை கண்டும் காணாதது போல் நகர.

“அவ பேசுறதை எல்லாம் நீ ஒன்னும் பெருசா நினைச்சுக்காத அனு குட்டி. அவள பத்தி தான் உனக்கு தெரியும்ல” என்று தன் தாடையை பற்றி கொஞ்சும் குரலில் சமாதானம் பேசிய தன் பாட்டியின் கையை தட்டி விட்டவள், “இவ்வளவு நேரம் உங்க பொண்ணு பேசுனதை எல்லாம் கேட்டுக்கிட்டு தானே இருந்தீங்க. அப்போ எல்லாம் வாயை திறக்காம, அவங்க போனதும் வழக்கம் போல வெள்ளை கொடிய பறக்க விட வந்துட்டீங்களா.. நோ சுகர் டயட்ல இருக்க போறாங்களாம். உடம்பு குறையனும்னா முதல்ல வயித்த கட்டணும். நல்லா நாலு பிளேட் சாப்பாட்டை உள்ள இறக்கிட்டு டயட் மட்டும் இருந்தா உடம்பு குறைஞ்சிடுமா.. இந்த வயசுக்கு அப்புறம் உங்க பொண்ணு ஸ்லிம்மாகி மிஸ் இந்தியா போட்டியிலா கலந்துக்க போறாங்க” என்று வழக்கம்போல் துடுக்குத்தனமாக தன் பாட்டியிடம் வாயாடிவிட்டு தன் அன்னையை பார்த்து முறைத்துக் கொண்டே, “எல்லாம் உங்களால தான். நான் சொல்ற பேச்சை நீங்க கேட்டு இருந்தா இப்படி எல்லாம் ஆகியிருக்காது” என்றவரின் குரலில் கொஞ்சம் ஆதங்கமும் தென்பட தான் செய்தது.

வழக்கம்போல் அவளின் வார்த்தையை காதில் வாங்காதது போல், “பெரியவங்க கிட்ட இப்படி மரியாதை இல்லாம பேச கூடாதுன்னு உன்கிட்ட நான் எத்தன தடவ சொல்லி இருக்கேன். நீ ஏன் அனு புரிஞ்சுக்கவே மாட்டேங்குற. சரி, உனக்கு காலேஜுக்கு நேரம் ஆகிட போகுது. நீ முதல்ல குளிச்சிட்டு வா” என்று சமையல் அறைக்குள் நுழைந்து கொண்டார் கோமதி.

தன் பேத்தியின் மனநிலையையும், தன் மருமகளின் மனநிலையையும் நன்கு அறிந்தவரால் நடப்பவற்றை கண்டு பெருமூச்சு ஒன்றே‌ வெளியேற்ற முடிந்தது.

அனுராதா அருகில் இருக்கும் அரசு மகளிர் கலை கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு பொறியியல் படிக்க வேண்டும் என்று அத்தனை ஆசை.

“பணம் என்ன கீழயா கொட்டி கிடக்குது. இன்ஜினியரிங் படிக்கணும்னா எவ்வளவு காசு செலவாகும்னு தெரியும்ல. ஒழுங்கா கவர்ன்மென்ட் காலேஜ்ல ஏதாவது குரூப் எடுத்து படி. உனக்கு அது போதும்” என்று முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டார் கீதா.

தாய்க்கு அவர்களை மீறி பேச முடியாத நிலை. தந்தை இருந்தும் இல்லாதது போல் தான். அவர்களை அண்டி இருப்பவர்கள் தான் அனுராதாவும், கோமதியும்.

இதில், எந்த ஒரு பிடிமானமும் இன்றி எப்படி அவர்களிடம் மல்லுக்கு நிற்க என்று தன் ஆசையை கைவிட்டவள், தான் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அருகில் இருந்த அரசு கல்லூரியிலேயே பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு அவளுக்கு கிடைக்கவும், சரி என்று அதை எடுத்து படிக்க துவங்கிவிட்டாள்.

ஹாலில் வீற்றிருந்த அந்த டிஜிட்டல் கடிகாரம் எட்டாக இன்னும் ஐந்து நிமிடமே இருப்பதாக நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தது.

அதில் ஒரு பார்வையை பதித்தவள். வேக வேகமாக தான் செய்த பால் கொழுக்கட்டையை ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக்கொண்டு அவசரமாக கிளம்பி கொண்டு இருந்தாள்.

கைகள் அதன் வேலையை செய்ய, “அம்மா வாசலை பெருக்கி கோலம் போட்டாச்சு. சாமானை எல்லாம் விலக்கிப் போட்டாச்சு. காலையில சமையலும் முடிஞ்சுது. துணி மிஷின்ல போட்டு காய போட்டுட்டேன். நான் காலேஜ் விட்டு வந்து எடுத்து மடிச்சு வச்சுக்கிறேன். நீங்க ஒன்னும் படி ஏறத் தேவையில்ல. மதியத்துக்கு மட்டும் சமைங்க.. காய்கறி எல்லாம் நறுக்கி தான் வச்சிருக்கேன்” என்று தான் செய்த பணிகளை பட்டியலிட்டவள் அவர் செய்ய வேண்டிய வேலைகளையும் கூறினாள்.

அவள் கூறியதை தன் நாடியில் கையை வைத்து மலைப்பாக பார்த்த கோமதி, “இப்போ இதெல்லாம் தேவையா.. காலேஜுக்கு போற புள்ள அதை மட்டும் பண்ணா போதாதா.. எதுக்காக இந்த வேலையெல்லாம் அவசர அவசரமா நீ பார்த்து வச்சிட்டு கிளம்புற”.

கோமதிக்கு இரண்டு நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறது. ஆனாலும், வீட்டில் அனைத்து வேலைகளையும் அவர் தான் எடுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டும்.

அதனாலேயே தன் தாய்க்கு உதவியாக தன்னால் முடிந்த மட்டும் அனைத்தையும் காலையிலேயே செய்து வைத்துவிட்டாள். முன்னமே தெரிந்திருந்தால் அவர் மறுத்துவிடுவார் என்பது தெரிந்தே அவரிடம் கூறாமல் தானாகவே அனைத்தையும் செய்து முடித்துவிட்டாள்.

ஒரு புறம் தன் மகளின் செய்கையில் கண்கள் பனித்தாலும், மனதிற்குள் சங்கடமாகவும் இருந்தது. சிறு பெண் தனக்காக எத்தனை வேலைகளை செய்திருக்கிறாள் என்று.

அவள் டிபன் பாக்ஸை பேக்கிற்குள் திணிப்பதை பார்த்த கீதா வந்துவிட்டார்.

“என்ன அது.. என்னத்த உள்ள வச்சு மறைச்சு கொண்டு போற?”.

அவரின் வார்த்தை அனுராதாவிற்கு சுர்ரென்று கோபத்தை கொடுக்க.

“நான் ஒன்னும்..” என்று தொடங்கியவளின் வார்த்தைகளை தன் தாய் தன் கையில் கொடுத்த அழுத்தத்தில் தன் தொண்டை குழிக்குள்ளேயே விழுங்கிக் கொண்டாள்.

கோமதியின் இறைஞ்சும் பார்வை அவளுக்கு மேலும் எரிச்சலை கொடுக்க. தன் கையை அழுத்தமாக முடியவள் தன் வாய்க்கும் பூட்டிட்டு கொண்டு அமைதியாக நின்று இருந்தாள்.

“அது ருக்மணிக்கு இன்னைக்கு பிறந்தநாள். அதான் அவளுக்காக இனிப்பு செஞ்சு கொண்டு போறா. எல்லாருக்கும் சேர்த்து தான் செஞ்சிருக்கா”.

“ஏன் அதை உன் பொண்ணு வாயை திறந்து சொல்ல மாட்டாளா.. வாயை திறந்து சொன்னா என்ன வாயில இருக்க முத்தா கொட்டிடும்” என்று அதற்கும் நொட்டை சொல்லியவரின் அருகில் வந்து நின்று தன் சட்டையின் கையின் இருக்கும் பட்டனை போட்டுக் கொண்டே, “இப்ப என்னம்மா இதெல்லாம் ஒரு விஷயமா.. நீங்க தேவை இல்லாம டென்ஷன் ஆகுறீங்க.. பீபி மாத்திரை போட்டிங்களா இல்லையா?” என்றான் அவரின் ஒரே மகன் அகிலன் கிருஷ்ணா.

அகிலனை முறைத்துப் பார்த்தவர், “உன்ன யார் இங்க வர சொன்னது அகில்” என்றவரின் பார்வை அடுத்ததாக அனுவை தான் துளைத்தெடுத்தது.

அவள் சற்றும் அகிலன் வந்ததை கண்டுகொள்ளாமல் தன் பைக்குள் புத்தகங்களை சரி பார்த்துக் கொண்டே, “சரிமா அக்கா வந்துடுவா நான் கிளம்புறேன்” என்று தன் அன்னையிடம் கூறிவிட்டு விறுவிறுவென வாசலை நோக்கி சென்று விட்டாள்.

அகிலன் தன்னுடன் பேசுவது கீதாவிற்கு பிடிக்காது என்பது அனுவிற்கும் தெரியும். ஏதோ அவரின் ஒற்றை மகனை இவள் மயக்கி விடுவதைப் போல் ஒரு பார்வை பார்ப்பார். அது அவளுக்குள் அத்தனை எரிச்சலை முண்ட செய்யும். வாயையும் திறக்க முடியாதே அதனாலேயே இந்த அவசர வெளி நடப்பு.

இதற்கு மேல் தான் பேச்சை வளர்த்தால் அவள் இங்கேயே இருக்க வேண்டி வரும் என்று எண்ணிய கீதாவும் போகட்டும் என்று விட்டுவிட்டார்.

வாசலில் வந்து நின்று யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தவளின் விழிகள் அப்படியே திரும்பி அந்த வீட்டின் பெயர் பலகையில் ஒரு நொடி நிலைத்தது.

‘கோபால் இல்லம்’ என்ற பெயர் பலகையை வெறித்து பார்த்தவளுக்கு இந்த குடும்பத்திற்கும் தங்களுக்கும் இப்படி ஒரு பந்தம் தேவை தானா என்று தினமும் தோன்றும் அதே கேள்வி இன்றும் அவளை நச்சரித்தது.

விரும்பி ஏற்றுக் கொண்ட உறவோ, பந்தமோ கிடையாது. இன்றும் அவளின் அன்னை வேண்டாம் என்று கூறிவிட்டால் போதும் அடுத்த நொடியே வெளியேற தயாராக தான் இருக்கிறாள்.

ஆனால் கோமதி தன் வாயை திறப்பேனா என்கிறாரே என்று தன் சிந்தனைக்குள்ளேயே உழன்று கொண்டிருந்தவளுக்கு எப்பொழுது அகிலன் தன் வண்டியில் வந்து இவள் அருகில் நின்றான் என்பதே அவளின் கவனத்தில் பதியவில்லை.

 

******

ஹாய் டியர்ஸ் கதையை படித்தவர்கள் உங்கள் கருத்தையும் மறக்காமல் பதிவிடுங்க. உங்கள் ஒவ்வொருவரின் கருத்தும்‌ தான் என்னை ஊக்கப்படுத்தும் 🙏 🥰

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்