
அத்தியாயம் 35
தீப்ஷீ டிஎஸ்பியாக இருக்கும் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஏரியாவாக தான் சத்யா விபத்து நடந்த இடம் மற்றும் அவனின் அலுவலகம் வருகிறது . அதனால் கண்டிப்பாக சத்யாவின் ஃபைல் அங்கு தான் இருக்கும் .
வெளியே வந்தவள் கான்ஸ்டபிள் டேபிள் அருகே சென்றாள் .
வயதில் பெரியவர் தீப்ஷீயை பார்த்து எழுந்து நின்றார் .
” சார் , லாஸ்ட் இயர் சத்யா என்றவரின் ரோடு ஆக்சிடென்ட் ஃபைல் தேடி எடுத்து தர்றீங்களா?” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” மேடம் , நீங்க உள்ள போங்க , நான் ஃபைல் எடுத்துட்டு வரேன்.” என்றார் அவர் .
ஃபோனில் சிரித்து பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் திவாகரை பார்த்தவள் , ” கம் டூ மை கேபின் .” என்றவள் உள்ளே சென்றாள் .
” எக்ஸ்க்யூஸ் மீ ?” என்றான் திவாகர் திமிராக .
” கம் இன் .” என்றாள் தீப்ஷீ .
” என்ன மிஸ்டர் . திவாகர் வேலை செய்யாம ஃபோன்ல பேசிட்டிருக்கீங்க ?”
” கேஸ் விஷயமா பேசிட்டிருந்தேன். ”
” ஓ ! கேஸ் விஷயத்தைப் பத்தி தான் சிரிச்சிட்டே பேசினீங்களோ ?” என்றாள் நக்கலாக .
” இல்ல … ” என்று ஏதோ சொல்ல வந்தவனிடம் கையை காண்பித்து நிறுத்த சொன்னவள் , ” லிசன் , இங்க நான் எவ்வளவு நாள் வேலை செய்வேனு தெரியாது . ஆனா, நான் இருக்கும் வரை ஒழுங்கா இருந்தால் உனக்கு நல்லது . முடிச்ச கேஸ் லிஸ்ட் , முடிக்காத கேஸ் லிஸ்ட் , நம்ம ஏரியாவில் அதிகமா நடக்கும் குற்றம் , முக்கியமான குற்றவாளி பற்றிய தகவல் என்று தெளிவாக , விபரமாக தனித்தனியாக ஃபைல் ரெடி பண்ணி எடுத்துட்டு வாங்க. ” என்றாள் .
” ஓகே மேடம். ” என்றவன் சல்யூட் அடித்து வெளியே சென்றான் .
மனதில் தீப்ஷீயை திட்டிக் கொண்டே. தன் இடத்திற்கு போனான் திவாகர் .
அரை மணி நேரத்தில் தீப்ஷீ கேட்ட ஃபைலை எடுத்துக் கொண்டு , அனுமதிக் கேட்டு வெளியே நின்றார் கான்ஸ்டபிள் .
” எஸ் கம் இன் .” என்றாள் தீப்ஷீ .
” மேடம் , நீங்க கேட்ட ஃபைல். ” என்றவர் அதை தீப்ஷீ கையில் தந்தார் .
நடுங்கும் கைகளோடு வாங்கியவள் டேபிள் மீது வைத்தாள் .
அவர் சென்றுவிட, தயக்கத்தோடு ஃபைலை எடுத்தாள் தீப்ஷீ .
ஆக்சிடென்ட் நடந்த நேரம் , போலீஸ் ஸ்பாட் போன நேரம் , கேஸ் எழுதிய இன்ஸ்பெக்டர் கையெழுத்து மற்றும் சத்யா பாடியை வாங்கிய தேவ் கையெழுத்து எல்லாம் பார்த்தாள் . கடைசியாகவே ஆக்சிடென்ட் நடந்த இடத்தை பார்த்தாள் .
அவள் முகத்தில் அதிர்ச்சி . முதலில் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருந்தவள் . உன்னிப்பாக கவனித்தாள் .
நிறைய முரண்பாடான தகவல் இருப்பதுப் போல் தோன்றியது .
தேவ்விற்கு போன் செய்தவள் . ” சத்யா இறந்ததைப் பத்தி யார் தகவல் தந்தது? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” கமலாமா வந்து தான் எங்களுக்கு சொன்னாங்க . அவங்களும் இருந்த பதட்டத்தில் தகவல் சொன்னது யார் என்றெல்லாம் கேட்டிருக்க மாட்டாங்க? ” என்றான் தேவ் .
” சத்யாவின் பொருட்கள் என்று ஏதாவது தந்தாங்களா? ”
” தந்தாங்க தீப்ஷீ. ”
” ஃபோன் இருந்ததா ?”
யோசித்து பார்த்த தேவ் , ” இல்ல , சத்யாவின் வாட்ச் , பிரேஸ்லட் , செயின் தான் இருந்தது. ”
” சத்யாவா என்று பார்த்தியா? ”
” பார்த்தேன் . ஆனா, அவனானு அடையாளம் தெரியாத அளவு அவன் முகம் எரி… ” என்று அவனால் முழுவதும் சொல்ல முடியவில்லை.
அதைக் கேட்கும் சக்தியும் தீப்ஷீயிடம் இல்லை.
” எப்படி அது சத்யானு முடிவு பண்ணீங்க ? அட்லீஸ்ட் போஸ்ட்மார்ட்டம் பண்ண சொல்லி இருக்கலாமே ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” நாங்க இருந்த பதட்டத்தில் எங்களுக்கு அது தோணலை தீப்ஷீ . போலீஸ் ஆஃபீஸரும் போஸ்ட்மார்ட்டம் செய்து தான் சத்யாவை தருவேனு சொல்லலை . என் கிட்ட கையெழுத்து வாங்கி எங்களை அனுப்புவதிலே அவர் குறியாக இருந்தார் . அதுவுமில்லாமல் சத்யா காரில் சத்யாவை தவிர வேறு யார் இருக்க போறாங்கனு நினைச்சேன். அவனின் உடலை அதற்கு மேல் கஷ்டப்படுத்த நான் விரும்பவில்லை. ” என்றான் .
தீப்ஷீ கண்களில் கண்ணீர் , இருந்தும் அதை குரலில் காட்டிக்கொள்ளாமல் , ” சரி ” என்றாள் .
” கண்ண துடச்சுக்கோ . போலீஸ் யூனிஃபார்ம்ல என் பொண்டாட்டி அழறது பொருத்தமா இருக்காது .”
அதிர்ச்சியானாள் தீப்ஷீ , ‘ எப்படி இவன் நேரில் பார்த்தது போல் சொல்கிறான். ‘ என்று நினைத்தவள் வெளியில் , ” நான் அழல .” என்றாள்.
” எதுக்கு இந்த டீடைல்ஸ் கேட்ட?”
” சத்யா கேஸ் ஃபைலை சாதாரணமா தான் பார்த்தேன் . ஆனா , இதில் நிறைய விஷயம் முரண்பாடா இருக்கு , எனக்கு சந்தேகமாக இருக்கு . நான் விசாரிக்கிறேன் . பாய். ” என்ற தீப்ஷீ போனை வைத்தாள் .
திவாகரை மீண்டும் அழைத்தாள் தீப்ஷீ .
” போன வருஷம் , சத்யா என்றவர் கார் ஆக்சிடென்டில் இறந்தார் . நீங்க தான ஸ்பாட்டிற்கு போனீங்க ? ”
” ஆமா மேடம். ” என்றான் திவாகர் .
” உங்களுக்கு எப்படி ஆக்சிடென்ட் நடந்தது தெரியும்?” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” அது வந்து… ” என்ற திவாகர் தடுமாற .
” நடந்ததை சொல்ல எதுக்கு இந்த தடுமாற்றம். ”
” ஒரு வருஷம் முன்ன நடந்தது சரியா நியாபகமில்ல மேடம். ”
” சரி சொல்லுங்க .”
” எனக்கு தகவல் எதுவும் வரவில்லை . நான் ஒரு வேலையா அந்த வழியில் போனப்ப பார்த்தேன் .”
” காரில் அவரின் ஃபோன் இருந்ததா ? ”
” இல்ல. ” என்றான் .
ஆனா, அவன் முகத்தில் பயம் தெரிய . தீப்ஷீ அதை குறித்துக் கொண்டாள் .
” ஏன் போஸ்ட்மார்ட்டம் பண்ணலை?”
” அவரின் உடல் முழுவதும் எரிஞ்சிடிச்சி . நாங்க கேஸ் கொடுக்கமாட்டோம் போஸ்ட்மார்ட்டம் பண்ண வேண்டாம்னு அவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் செஞ்சாங்க . வேறு வழி இல்லாம அவரின் உடலை தந்து விட்டோம். ”
‘ நான் யார் என்று தெரியாமல் பொய் மேல் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறாய் .’ என்று நினைத்துக் கொண்டாள் தீப்ஷீ .
” சரி நீ போ. ” என்றாள் தீப்ஷீ .
ஒரு பேப்பரை எடுத்தாள் அவளின் சந்தேகங்களை எழுத ஆரம்பித்தாள் முதலாவது சந்தேகம் ஆக்சிடென்ட் நடந்த ரோடு .
” சத்யா எப்போதும் இந்த ரோடை பயன்படுத்த மாட்டான் . நான் போனாலே என்ன திட்டுவான். இந்த ரோடு குண்டும் குழியுமா இருக்குனு.” என்று தனியாக பேசிக் கொண்டாள் .
இரண்டாவது , சத்யாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யவில்லை .
மூன்றாவது , அவனின் ஃபோன் எங்கே என்று தெரியவில்லை . ஆனால் , சரியாக வீட்டிற்கு தகவல் வந்திருக்கு , என்று எழுதியவள் வெளியே வந்தாள் .
தன் வண்டியை எடுத்தவள் சென்றது போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு . அங்கு தான் முக்கிய சாலையில் உள்ள சிசிடிவி புட்டேஜ் தகவல்கள் இருக்கும் .
அங்கே சென்றவள் , ஆக்சிடென்ட் நடந்த தேதியில் வீட்டில் இருந்து சத்யா அலுவலகம் செல்லும் வரை உள்ள முக்கிய சாலையின் புட்டேஜ் முழுவதையும் பென் ட்ரைவில் ஏற்றிக் கொண்டு தன் ஸ்டேஷனிற்கு வந்தாள் தீப்ஷீ .
வீடியோவை பலமுறை அங்கிருந்த சிஸ்டத்தில் ஓட்டி பார்த்தாள் .
அலுவலகத்திற்கு எப்போதும் போகும் வழியில் சென்ற சத்யா, தீப்ஷீ சந்தேகப்பட்டதுப் போல் வரும் போது வேறு வழியில் வந்திருந்தான் .
போகும் போது இரண்டு முக்கிய சாலைகள் வழியாக செல்பவன் வரும்போது ஒரு முக்கிய சாலை வழியாக மட்டுமே வந்து ஆக்சிடென்ட் நடந்த ரோட்டிற்கு செல்லும் வழியில் சத்யாவின் கார் செல்கிறது .
பேப்பரை எடுத்தவள் நான்காவது சந்தேகத்தை எழுதினாள் , கார் ஜன்னல் மூடியிருக்கு .
‘ சத்யாவிற்கு கார் ஏசி பிடிக்காது அதுமட்டுமில்லாமல் அவனுக்கு அது ஒத்துக்காது . அதனால் , அவன் எப்போதும் ஏசி போடாமல் , ஜன்னலை திறந்து வைத்து தான் காரை ஓட்டுவான். ஆனால் ஆஃபீஸ்லிருந்து வரும் போது ஜன்னல் மூடி இருக்கு. ‘ என்று நினைத்த தீப்ஷீ ஒருமுறை முதலில் இருந்து படித்தாள் .
” கண்டிப்பா இது ஆக்சிடென்ட் இல்லை பிளான்டு மர்டர் . என் சத்யாவை கொலை செய்ய என்ன காரணம் ? கொன்றவன் என் கையில் கிடைக்கட்டும் அவனுக்கு உயிரோடு இருக்கும் போதே நரகத்தை காண்பிக்கிறேன். ஆனால், யார் கொலை செய்தது ? ” என்று தனக்குள்ளே பேசிக் கொண்டாள் தீப்ஷீ .
வெளியே நின்றுக் கொண்டே,
” மேடம்? ” என்றார் ஏட்டு.
” உள்ள வாங்க. ” என்றாள் தீப்ஷீ .
” மேடம் உங்களை தான் பார்க்கணும்னு பிடிவாதமா ஒரு பெண்ணு வெளிய நிற்கிறாள். ” என்றார் .
” சரி உள்ள அனுப்புங்க. ”
வெளியே சென்றவர் , அந்த பெண்ணை உள்ளே போக சொன்னார் .
” எக்ஸ்க்யூஸ் மீ ?”
” எஸ் கம் இன் . உட்காருங்க. ”
” மேடம் என் பெயர் இலக்கியா .”
” நான் என் வீட்டில் டிரஸ் மாத்திய வீடியோ எனக்கு தெரியாத நம்பரில் இருந்து வந்திருக்கு . எப்படி என்றே தெரியல்லை . ஒரு முறை அந்த நம்பரில் இருந்து ஃபோன் வந்தது,
‘பத்து நாட்களுக்குள் பத்து லட்சம் பணம் அனுப்பு இல்லன்னா அடுத்த நாள் உன் வீடியோ நெட்ல விட்டுடுவேன். இந்த உலகத்துல உள்ள எல்லோரும் பார்க்கலாம்னு. ‘ என்றான் ஒருவன் . ” என்றாள் இலக்கியா .
” இதை நீங்க சைபர் க்ரைமில் கம்ப்ளைன்ட் செஞ்சா இன்னும் சீக்கிரமா ஆக்சன் எடுப்பாங்க. ” என்றாள் தீப்ஷீ .
” மேடம் இது ரொம்ப சென்சிட்டிவான விஷயம் , என்னால யார் கிட்டையும் போய் இப்படி சொல்லவோ அல்லது வீடியோவை காண்பிக்கவோ முடியாது . உங்கள பற்றி நிறைய தெரியும் மேடம் . பதவி ஏற்கும் முன்பே ஒரு பெண்ணை காப்பாத்தியிருக்கீங்க . சோசியல் மீடியா முழுவதும் உங்கள பற்றி தான் பெருமையா மீம்ஸ் வரும் . ப்ளீஸ் மேடம் எனக்கு உதவி செய்யுங்க . இந்த விஷயத்தை என் அம்மா கிட்ட கூட நான் இன்னும் சொல்லலை. ” என்றாள் இலக்கியா .
” யார் போன் நம்பர் , மெயில் ஐடி கேட்டாலும் கொடுக்க வேண்டியது பின் இதுபோல் தப்பான வீடியோ வந்தால் அழுதுக் கொண்டு இருக்க வேண்டியது . நல்லா படிச்சிருக்கீங்க . ஆனா, இன்னும் பாதுகாப்பா இருக்க தெரியல்லை. ” என்றாள் தீப்ஷீ .
” மேடம் நான் யாருக்கும் என் ஃபோன் நம்பர் தருவதில்லை . மெயில் ஐடி எல்லாம் யாரும் இப்போது கேட்பது இல்லை. ” என்றாள் இலக்கியா .
” சரி வீடியோவை காண்பீங்க .” என்றாள் தீப்ஷீ .
தயங்கிக் கொண்டே தந்தாள் இலக்கியா .
இரண்டு முறை பார்த்த தீப்ஷீ , ” டிரஸ் மாற்றும் போது போனை எங்கு வெச்சிருந்த? ” என்றாள் .
” பெட் மேல் . ஆனா, நல்லா ரூமில் ஃபுல்லா தேடி பார்த்தேன் மேடம். கேமரா இருப்பது போல் இல்லை. ” என்றாள் இலக்கியா .
சத்தமாக சிரித்த தீப்ஷீ , ” இந்த வீடியோவை உன் போன் கேமரா மூலம் எடுத்து தான் உனக்கு அனுப்பி இருக்கான் அந்த பொறுக்கி. ” என்றாள் .
” இல்ல மேடம் , என் அறையில் அப்போது யாரும் இல்லை . நானும் கேமராவை ஆன் செய்யவில்லை. ” என்றாள் இலக்கியா .
” டெக்னாலஜி நம்மள விட பல மடங்கு அட்வான்ஸ்டா இருக்கு . உன் போனை கொடு. ” என்ற தீப்ஷீ அதை ஸ்விட்ச் ஆப் செய்தாள் .

