
அத்தியாயம் 31
” ஹலோ சத்யா , ஊஞ்சல் கிட்ட வா. ” என்றாள் தீப்ஷீ .
” இதோ வரேன் அம்மு .” என்ற சத்யா ஃபோனை வைத்தான் .
டீஷர்ட்டை மாட்டிய சத்யா , பார்க்கை நோக்கி சென்றான் .
ஊஞ்சலில் சோகமாக உட்கார்ந்திருக்கும் தீப்ஷீயை பார்த்ததும் சத்யாவிற்கு சிறுவயது அம்மு நினைவுக்கு வந்தாள் .
‘ சரண்யாமா அல்லது அப்பா இவளை திட்டினால் இப்படி தான் சோகமாக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்துக்கொள்வாள். இப்போது யார் இவளை திட்டினாங்க? ‘ என்று நினைத்தவன் தீப்ஷீ அருகே வந்தான் .
” இப்போ யார் அம்மு உன்ன திட்டுனது? ” என்றுக் கேட்டான் சத்யா .
” யாரும் என்ன திட்டலை சத்யா. ” என்றாள் தீப்ஷீ .
” பின் ஏன் டா சோகமா இருக்க?”
” சத்யா , நாளைக்கு ஹைதராபாத் போக போறேன் உங்களை எல்லாம் மிஸ் பண்ணுவேன் .”
” ஐ.பி.எஸ் ஆகணும்னா சில தியாகம் செய்ய தான் வேண்டும் அம்மு. ”
ஆம் தீப்ஷீ , பிரிலிமினரி எக்ஸாமை வெற்றிகரமாக முடித்து மெயின் எக்ஸாமையும் முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக முடித்துவிட்டாள் . நாளையிலிருந்து ஒரு வருடம் அவளுக்கு ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமி யில் பயிற்சி .
” ஆமா சத்யா . எல்லாரையும் நல்லா பார்த்துக்கோ சத்யா . உன்ன தான் அதிகமா மிஸ் பண்ணுவேன். ” என்றாள் தீப்ஷீ.
” எல்லாரையும் நல்லா பார்த்துக்குறேன். உன் வீட்டுக்காரரை ரொம்ப நல்லா பார்த்துக்குறேன்.”
” சத்யா …” என்று பல்லை கடித்தாள் தீப்ஷீ.
” பின்ன இந்த உலகத்துல தேவ் தான் பாவப்பட்ட பிறவி. உன் கிட்ட மாட்டிக் கிட்டு கஷ்டப்படுகிறான். ”
” நான் தான் அதிக கஷ்டப்படுகிறேன். ” என்றாள் தீப்ஷீ .
இதுவரை விளையாட்டாக பேசிக் கொண்டிருந்த சத்யாவிற்கு தீப்ஷீயின் பதில் கோபத்தை தர .
” அம்மு , தேவ் உன்ன நல்லா தான் பார்த்துக்குறான் . உன் விருப்பத்திற்கு தடையா இல்லாம இருக்கிறான் . நம்ம நட்பிற்கு தடையா இருக்கானா?”
” இல்லை. ” என்றாள் தீப்ஷீ .
” உன்ன ஐ.பி.எஸ் ஆக்க இந்திராணி பாட்டி கிட்ட சண்டை போட்டு உனக்கு அனுமதி வாங்கி தந்தான் தானே. ”
ஆம் என்பது போல் தலை ஆட்டினாள் .
” உன்ன எதற்காகவது கட்டாய படுத்தினானா? ”
” இல்லை. ”
” நீ சொன்ன பதிலை எல்லாம் ஒன்று சேர்த்து, நீயே யோசிச்சுப் பார்த்தா . உனக்கே புரியும் தேவ் உன்ன எப்படி பார்த்துக்குறானு. ” என்றான் சத்யா .
தீப்ஷீ அமைதியாக தலை குனிந்து உட்கார்திருந்தாள் .
” ஆனா, அம்மு நீ தேவ்வை கணவனா என்ன, ஒரு நண்பனா பார்க்க கூட கல்யாணம் ஆன இந்த எட்டு மாசத்துல முயற்சி பண்ணலை என்பது தான் கொடுமை . உன் உணர்வுக்கு ஒருவன் மதிப்பளிக்கிறான் என்றால் அவனுக்கும் உணர்வு இருக்கும் என்பதை மறந்துட்ட? ” என்றான் சத்யா .
” சாரி சத்யா , என் மேல் தான் தப்பு. ”
” என் கிட்ட கேட்க தேவை இல்லை அம்மு , தேவ் கிட்ட தான் கேட்கணும். ”
” கேட்கிறேன் சத்யா , ட்ரெய்னிங் முடிஞ்சி வந்ததும். அவன் கிட்ட நல்லா பேசுறேன். ஃப்ரெண்ட்ஷிப் வெச்சுக்க முயற்சி பண்றேன். ” என்ற தீப்ஷீ சோகமாக உட்கார்ந்திருந்தாள் .
‘ ஊருக்கு போகும்போது என் அம்மு கிட்ட இப்படி பேசிவிட்டேனே. ‘ என்று வருந்தினான் சத்யா .
தீப்ஷீ கையை பிடித்த சத்யா , ” சாரி அம்மு , ஏதோ கோபத்துல பேசிட்டேன் . ஏன் என்றே தெரியலை. காலையிலிருந்து கோபமா வருது . காலைல சந்தியாவை திட்டினேன் இப்போ உன்ன திட்டிவிட்டேன். ”
” சத்யா , என்மேல் தப்பிருக்கு . அதான் நீ என்ன திட்டினா . என்ன சரியான பாதையில் வழி நடத்துற . என்ன திட்ட உனக்கு உரிமை இருக்கு. ” என்றாள் தீப்ஷீ .
” அப்புறம் ஏன் டா சோகமாக இருக்க? ”
” சத்யா , ஒரு வருடம் உன்ன பார்க்காம நான் எப்படி இருப்பேன் ? நீ இரண்டு நாள் ஊருக்கு போனாலே என்னால் உன்ன பிரிஞ்சு இருக்க முடியாது .
ஒரு நாளைக்கு ஒரு மணி நேராமாவது உன்னோட பேசணும்னு நினைப்பேன் . இனி ஒரு வருடம் எப்படி இருக்க போறேனு தெரியலை. ” என்றவள் சத்யா தோள் சாய்ந்து அழுதாள் .
சத்யா கண்களிலும் கண்ணீர் . பின் ஒருவாறு தன்னை சரி செய்துக் கொண்டவன் .
” அம்மு , நீ ஒரு அழுமூஞ்சி ஐ.பி.எஸ். ”
வேகமாக அவனிடமிருந்து எழுந்து நின்றவள் சத்யாவை முறைத்தாள் .
” இப்போ தான் அழகா இருக்க. ” என்றான் சத்யா .
தீப்ஷீ சத்யாவை அடிக்க வர . பொறுமையாக அவளின் அடிகளை வாங்கியவன் , ” அம்மு , எப்போதும் ஐ.பி.எஸ்ஸை தான் முதன்மையாக நினைக்கணும் . ஒரு வருடம் எதப் பத்தியும் யோசிக்காம நல்லா பயிற்சி எடுக்கணும் .
பயிற்சியிலும் முதல் ஆளாக நீ தான் இருக்கணும் . நீ ஐ.பி.எஸ் பதவி ஏற்கும் முன்பே உன்னப் பத்தி எல்லோரும் பெருமையா பேசும் படி நீ திறமையா இருக்கணும் சரியா? ”
” கண்டிப்பா நீ சொல்ற மாதிரி இருப்பேன் சத்யா. ”
” சரி வா அம்மு போலாம் . ஊருக்கு போக எல்லாம் எடுத்து வெச்சிட்டியா? எதையும் மறக்கலையே? ” என்ற சத்யா அவளை தேவ்வின் வீட்டில் விட்டுவிட்டு அவனின் வீட்டிற்கு சென்றான் .
முதல்முறையாக தீப்ஷீயிடம் முக்கியமான விஷயத்தை மறைத்தது சத்யாவிற்கு வருத்தமாக இருந்தது .
ஒருவேளை சத்யா தீப்ஷீயிடம் சொல்லியிருந்தால் அவன் பண்ணப்போகும் தப்பை சரி செய்து அவனை காத்திருப்பாளோ . சத்யாவின் மூளை ஏன் இந்த விசயத்தில் வேலை செய்யாமல் போனது???
*****
ஊருக்குச் செல்ல தேவையானதை எடுத்து வைத்தவள் ஹாலுக்கு சென்றாள் . தேவ் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே இருந்தாள் .
அவன் எப்பொழுதும் வரும் நேரமும் தாண்டியதே தவிர அவன் வந்த பாடு இல்லை .
” தீபு , நீ வந்து சாப்பிடுமா , நாளைக்கு காலைல சீக்கிரமா ஊருக்கு போகணும் . நீ சாப்பிட்டு தூங்கு . தேவ் வந்தால் நான் அவனுக்கு சாப்பாடு போடுறேன். ” என்றார் அக்ஷிதா .
‘ ஆம் தீப்ஷீ , நீ இப்போது தூங்கினா தான் காலையில் சீக்கிரமா எழுந்திருக்க முடியும் .’ என்றது அவளின் மைண்ட் வாய்ஸ் .
இரவு உணவை சாப்பிட்டவள் ரூமிற்கு சென்றாள் . தேவ் வருகிறானா என்று பார்த்துக் கொண்டே உட்கார்ந்த வாக்கில் தூங்கிவிட்டாள் .
அவளை தவிர்க்கவே தாமதமாக வந்தவன் , தீப்ஷீ தூங்கும் விதத்தைப் பார்த்தே அவனுக்காக காத்திருந்து தூங்கிவிட்டாள் என்பது தேவ்விற்கு புரிந்தது .
அவளை சரியாக படுக்க வைத்தவன் .
” நீ என் கிட்ட ஊருக்கு போறதுப் பத்தி ஏதாவது பேசினா எங்கே நான் அழுதுடுவேனோனு பயம் எனக்கு .
நீயா உணரணும்னு சொல்லாமல் இருக்கும் என் காதலை சொல்லிவிடுவேனோனு பயம் .
நீ ஐ.பி.எஸ் ஆகணும் கண்டிப்பா அதற்கு தடையாக நான் இருக்க கூடாது என்பதில் நான் உறுதியா இருக்கிறேன். ” என்றவன் அவளையே இரவு முழுவதும் பார்த்துக் கொண்டிருந்தான் .
எப்போது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது . அலாரம் சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தவன் தீப்ஷீ குளித்துக் கொண்டிருப்பது புரிய . தன் துணியை எடுத்துக்கொண்டு வெளியில் உள்ள பாத்ரூமிற்கு சென்றான் .
நேற்றே எல்லோரிடமும் சொல்லியதால் பைகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர் தேவ்வும், தீப்ஷீயும் .
சத்யா கார் கதவை திறந்து தீப்ஷீயின் பைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் .
” சரி ஏறுங்க நேரமாகுது .” என்ற சத்யா காரில் ஏற தீப்ஷீயும், தேவ்வும் பின் பக்கம் ஏறினார்கள் .
சத்யா விமான நிலையத்தை நோக்கி செல்லாமல் வேறு எங்கோ செல்வதை பார்த்து தேவ் , ” எங்க சத்யா போற? ” என்றுக் கேட்டான் .
” சந்தியாவும் தீப்ஷீயை வழி அனுப்ப வரேன்னு சொன்னா . ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ். ” என்றான் சத்யா .
” ஓகே. ” என்றான் தேவ் .
” பாருடா மேடம் இப்போ உன் கிட்ட ஃபோன்லாம் பேசுறாங்களா? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .
” நான் தான் அவ கிட்ட பேசினேன் . சாதாரணமா உன்ன ஏர்போட்ல வழி அனுப்ப போறதைப் பத்தி சொன்னேன். அதிலிருந்து ஒரே பிடிவாதம் நானும் வரேன் என் தோழியை வழி அனுப்பனு. அதான் காலைல நானே உன் வீட்டிக்கு வரேன் தயாரா இருன்னு சொன்னேன். ”
” நீ நடத்து சத்யா. ” என்று அவனை கேலி செய்தாள் .
காரில் முன்னாடி ஏறிய சந்தியா , ” நல்லா இருக்கீங்களா அண்ணா ? ” என்று தேவ்வை பார்த்துக் கேட்டாள் .
அவர்கள் பேசிக் கொண்டதைப் பார்த்தே சந்தியாவை சத்யா கல்யாணம் பண்ணிக்க போகிறான் என்பது தேவ்விற்கு புரிய , ” நல்லா இருக்கேன் . நீ எப்படி இருக்கிற ? ” என்றான்.
விமான நிலையம் வரும் வரை தோழிகள் இருவரின் பேச்சும் , சிரிப்பும் கார் பயணத்தை இனிமையாக்க . இப்போதே தேவ்வும் சத்யாவும் அமைதியாக இருக்க கற்றுக் கொண்டனர் .
விமான நிலையத்தில் உள்ள வேலையை முடித்த தீப்ஷீ, மூவரோடு வந்து நின்றாள் .
சிறிது நேரத்தில் அவள் விமானத்திற்கான அறிவிப்பு வர சந்தியாவை அணைத்தவள் , ” பாய் டி. சத்யாவை பார்த்துக்கோ . நான் திரும்ப வந்ததும் முதல உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் தான். ” என்றாள் .
மகிழ்ச்சியாகவே , ” சரி டி. ” என்றாள் சந்தியா .
சத்யாவை அணைத்துக்கொண்டவள் அழுதாள் .
அவள் முகத்தை பார்த்த சத்யா , ” நீ ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி என்பதை மறக்காதே . எப்போதும் தைரியமா இருக்கணும். ” என்றவன் அவளின் கண்ணீரை துடைத்தான் .
தேவ்விடம் பேச முடியவில்லையே என்று வருந்தியவள் , ‘ ஊருக்கு போயிட்டு வந்த பின் எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம். ‘ என்று முடிவெடுத்தவள் அவனிடம் , ” போயிட்டு வரேன். ” என்றவள் செல்ல நினைக்க .
அவளின் கை பிடித்து இழுத்த தேவ் , அவனின் வலி போகும் அளவு அவளை அணைத்தவன் பின் விடுவித்தான் .
” பீ கேர் ஃபுல் , ஆல் த பெஸ்ட். ” என்றான் .
ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்னும் புரியவில்லை . அவனின் முதல் அணைப்பு ஏதோ செய்ய . மூவருக்கும் கை அசைத்துவிட்டு விமானம் ஏற சென்றாள் .
ஒரு முறை சத்யாவையும், தேவ்வையும் திரும்பி பார்த்தாள் தீப்ஷீ . இருவரின் கண்களிலும் ஒரே போல் கவலை தெரிந்தது .
‘ என்ன பிரியறது நினைச்சி தேவ்வும் கஷ்டப்படுறானா? ‘ என்ற கேள்வி தோன்றியது தீப்ஷீக்கு . விடை தெரியா கேள்வியோடு ஹைதராபாத் பயணத்தை தொடங்கினாள் தீப்ஷீ .
*****
” மாஸ்டர் … ” என்று அழைத்துக் கொண்டே சத்யா வர்மக் கலை பயிற்சி மையத்திற்குள் நுழைந்தான் .
” வா சத்யா . எப்படி இருக்க ? தீப்ஷீ எப்படி இருக்கா ? ” என்றார் விமல் (வர்மக் கலை பயிற்சியாளர் ) .
” நாங்க நல்லா இருக்கோம் மாஸ்டர் . நீங்க எப்படி இருக்கீங்க ? தீப்ஷீ ஐ.பி.எஸ் ட்ரெய்னிங்காக ஹைட்ரபாத் போயிருக்கா . அதை உங்க கிட்ட சொல்லிட்டு ஆசிர்வாதம் வாங்க வந்தோம் . நீங்க ஊருக்கு போனதா சொன்னாங்க . அதான் தீப்ஷீ என்ன சொல்ல சொல்லிட்டு போயிருக்க மாஸ்டர் .”

