
அத்தியாயம் 26
தீப்ஷீ குளித்து வெளியே வர , தேவ் குளிப்பதற்காக ட்ராலி சூட்கேசை திறந்தவன் , இன்னர்ஸை தேடுவது போல் நடித்தவன், பின் கோபமாக ,
“ தீப்ஷீ , என்னோட இன்னர்ஸ் எங்க ? “
“ உங்க ட்ராலில தான் வெச்சேன் . “
“ வந்து எடுத்துக் கொடு . “
ட்ராலியில் தேடியவள் அது எங்கும் கிடைக்காததால் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு தேவ்வை திரும்பிப் பார்க்க ,
அதுவரை அவளை நக்கலாக பார்த்து சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டிருந்தவன் , அவள் பார்க்கவும் முகத்தை கோபமாகவும் கேள்வியாகவும் மாற்றினான்.
“ நான் இதுல தான் வெச்சேன் . இப்போ காணும். “
“ இப்படி தான் கேர்லஸ்ஸா இருப்பியா ? இப்போ நான் என்ன பண்ண ? “ என்று யோசிப்பதுப் போல் நடித்தவன் பின் ,
“ நான் பாத்ரூம் உள்ள போயிட்டு , இன்னர்ஸ்ஸ வெளிய போடுறேன் , நீ வெளிய ஸ்விம்மிங் ஃபூல் பக்கத்துல இருக்க பைப்ல துவைச்சி , ரூம் ஹீட்டர் கிட்ட நின்னு காய வை .” எனற தேவ் பாத்ரூம் செல்ல.
‘ என்னது இவனோட அழுக்கு துணிய நான் துவைக்குறதா ?’ என்று நினைத்த தீப்ஷீ திரு திருவென முழித்து நின்றாள் .
தீப்ஷீ எப்படியும் துவைத்திருப்பாள் என்று நினைத்தவன் விசில் அடித்துக் கொண்டே பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவன்.
அங்கு அவனின் இன்னர்ஸ் அவன் தூக்கி போட்ட இடத்திலே இருக்க . தீப்ஷீயை தேடியவன் கண்ணில் பட்டது புது இன்னர்ஸ் , அதில் ஒரு பேப்பரும் இருந்தது ,
“ சாரி , என்னால துவைக்க முடியாது அதுக்கு பதிலா புதுசு வாங்கிட்டேன் . உங்க அழுக்கு டிரஸ்ஸ எடுத்து வெச்சிடுங்க.” என்று எழுதி வைத்திருந்தாள் தீப்ஷீ.
“ நானே பெரிய கேடி இவ எனக்கு மேல் பெரிய கேடியா இருக்காளே . இன்னர்ஸ்ஸ எடுக்காம சைஸ் மட்டும் பார்த்து கரெக்டா வாங்கிட்டாளே . பட் செல்லம் உனக்கு நல்ல பிரசன்ஸ் ஆஃப் மைண்ட் இருக்கு.” என்று சத்தமாக பாராட்டியவன் , ரெடியாகியதும் வெளியே செல்ல அங்கு நின்றிருந்த தீப்ஷீயிடம் ,
“ தீப்ஷீ , தேவையானதை மட்டும் எடுத்துக்கோ , மீதிய இங்கே வெச்சிடு. “ என்றான் தேவ் .
“ ஓகே. “
டிரைவரோடு அசோக் காரில் முன்னாடி உட்கார்ந்துக் கொண்டு வழி சொன்னான் .
கோக்கர்ஸ் வாக் வர . “ மிஸ்டர் தேவ் கோக்கர்ஸ் வாக் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும் . இங்கிருந்து பார்த்தால் கொடைக்கானலின் அழகை ரசிக்கலாம் . கடைங்க நிறைய இருக்கும். வேண்டியதை வாங்கிக்கோங்க . என்ஜாய் யூவர்செல்ப் , நாங்க இங்கே இருக்கோம் .” என்றான் அசோக் .
“ ஓகே அசோக் .” என்ற தேவ் தீப்ஷீயோடு நடக்க ஆரம்பித்தான் .
எங்கோ மேகத்தில் நடப்பது போல் உணர்ந்தாள் தீப்ஷீ . மன வேதனை எல்லாம் இயற்கையை ரசிக்கும் போது காணாமல் போய்விடுவதாக தோன்றியது தீப்ஷீக்கு .
இயற்கையின் அழகை கேமராவில் போட்டோ எடுத்தான் தேவ் , பின் தீப்ஷீயை அவளுக்கே தெரியாமல் போட்டோ எடுத்தான் .
தீப்ஷீ இயற்கையோடு ஒன்றிவிட தேவ்வோடு நடந்துக் கொண்டிருப்பதை அவள் உணரவே இல்லை .
தேவ்வின் மனமோ அவளின் கை பிடித்து நடந்து செல்ல ஏங்கியது . தேவ் கஷ்டப்பட்டு அவனின் ஒரு கையை மறு கையால் பிடித்து அவனின் எண்ணத்துக்கு தடை போட்டு நடந்தான் .
பின் கடைகள் வர , அங்கு சென்ற தீப்ஷீ ஒரு தோடை காண்பித்து , “ என்ன விலை ? “ என்றுக் கேட்டாள் .
தன் பர்ஸ்ஸை தேடியவள் பின் தான் அதை ரூமிலே மறந்து வைத்து வந்தது அவளுக்கு நினைவு வர , “ வேண்டாம். “ என்றவள் தேவ்விடம் , “ காருக்கு போலாமா ? “ என்றுக் கேட்டாள்.
“ சரி , வா போலாம். “ என்றான் தேவ் .
தீப்ஷீ முன்னால் போக அவள் அறியாமல் அவள் விரும்பிய தோடை வாங்கிய தேவ், பின் அவளோடு நடக்க ஆரம்பித்தான் .
தீப்ஷீ அங்கு அழுதுக் கொண்டிருந்த ஒரு பொண்ணை பார்த்து நின்றாள் .
தேவ்வும் தீப்ஷீயை தொடர்ந்து அந்த பொண்ணை பார்த்தான் .
தீப்ஷீ அவள் அருகில் சென்று , “ என்னாச்சு? ஏன் மா அழறீங்க ? “ என்றுக் கேட்டாள் .
“ அக்கா … “ என்றவள் தேவ்வை பார்த்து பயப்பட ,
அதை உணர்ந்த தேவ் , “ உன்ன யாராவது டீஸ் பண்ணாங்களா? யாருனு சொல்லு தங்கச்சி நான் அவனை சிறப்பா கவனிக்கிறேன். “
“ இல்லை “ என்பது போல் தலை ஆட்டியவள் பின் தீப்ஷீ காதில் ஏதோ சொல்ல .
தேவ்விற்கு ஓரளவு விசயம் புரிந்தது .
“ சரி வா மா . கார் கிட்ட போலாம் . அப்போ தான் ரெஸ்ட் ரூம் போக முடியும். “ என்றாள் தீப்ஷீ.
“ என்னால எழுந்திருக்க முடியாது. “ என்றவள் அழ ஆரம்பிக்க .
“ தீப்ஷீ. “ என்று தேவ் கூப்பிட,
திரும்பியவளின் கையில் தன் டிஷர்ட்டை வைத்தான் தேவ் .
அதை அவளுக்கு போட்ட தீப்ஷீ அவளை கார் அருகே அழைத்துச் சென்று, ஹான்ட் பேக்கை எடுத்துக் கொண்டவள் .
பின் ரெஸ்ட் ரூம் அழைத்துச் சென்று அந்த பெண்ணிற்கு உதவினாள் .
இருவரும் வெளியே வர தேவ் அந்த பெண்ணிடம் , “ நீங்க எப்படி இங்க தனியா வந்தீங்க ? “
“ ஃப்ரெண்ட்ஸ்ஸோட தான் வந்தேன் . அவங்க ஏதோ வேலை இருக்குனு அவசரமா போயிட்டாங்க . நான் கொஞ்சம் நேரம் இருக்கலாம்னு நடந்துட்டிருந்த அப்போ வயிரு வலிக்க ஆரம்பிச்சது. அப்படியே உட்கார்ந்துட்டேன். என்ன பண்ணுறதுனே தெரியலை ?”
“சரி உங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. “ என்ற தேவ் தன் போனை நீட்ட ,
அதை வாங்கியவள் தன் வீட்டை தொடர்புக் கொள்ள .
தீப்ஷீக்கு நினைவுகள் பின்னோக்கி சென்றது . தானும் இவளை போல் கஷ்டப்பட்டிருப்பேன் என் சத்யா என்னோடு இல்லாமலிருந்திருந்தாள் .
வர்மக் கலை கற்றுக் கொண்டிருந்த சமயம் . ஒரு நாள் வரமக் கலை பயிற்சி முடித்து தீப்ஷீயும், சத்யாவும் வந்துக் கொண்டிருந்தனர் .
‘ நினைவுகள் …
“ வா அம்மு , நேரமாகுது வீட்டிற்கு போகலாம் .” என்று அழைத்தான் சத்யா .
இருவரும் எப்போதும் நடந்து செல்வதே வழக்கம். இன்றும் அதுப் போல் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர் .
“ சத்யா , இந்த தேவ் வேற ஸ்கூல் போனாலும் போனான். அவன் தொல்லை தாங்க முடியவில்லை . அவன் ஹாஸ்டல் போனால் நாம அவனைப் பார்க்காமல் ஜாலியா இருக்கலாம்னு பார்த்தால் மாதம் ஒருமுறை நாலு, இல்ல ஐஞ்சு நாளுக்கு இங்கு வந்துடுறான் . அது மட்டுமில்லாம அவன் டைக்குவாண்டோ விளையாடுறானு இந்திராணி பாட்டி கூட இப்போ சீரியல் பார்க்குறத விட்டுட்டு ஸ்போர்ட்ஸ் சேனல் தான் பார்க்கறாங்களாம்.” என்றாள் தீப்ஷீ .
“ தேவ் முன்ன மாதிரியில்ல அம்மு இப்போ ரொம்ப மாறிட்டான் .” என்றான் சத்யா .
“ உன்ன கஷ்டபடுத்தது இல்லைனு வேணும்னா சொல் . ஆனா , உன்ன அவன் நண்பனா ஏத்துக்கலையே. “ என்றாள் தீப்ஷீ .
“ அவன் நம்மோடு சண்டை போடுவதே இல்லைனு நினைச்சி சந்தோஷப்படணும். “ என்றான் சத்யா .
“ ஆமா சத்யா . அது உண்மை தான் . ஆனா , அவன் தொல்லை தாங்க முடியவில்லை எப்போது பார்த்தாலும் எங்க வீட்டில் தான் இருக்கான். “ என்றாள் தீப்ஷீ .
சத்யா அமைதியானான் அவள் சொல்லியதை யோசித்துக் கொண்டிருந்தான் .
“ சத்யா , எனக்கு வயிறு வலிக்குது. “ என்றாள் தீப்ஷீ .
“ அம்மு இன்னும் கொஞ்ச தூரம் தான் வீட்டிற்கு போய்டலாம் .” என்றான் சத்யா . அவள் எப்போதும் இதுபோல் ஏதாவது பொய் காரணம் சொல்லி ஆட்டோவில் செல்லலாம் என்று சொல்லுவாள் . அதுதான் என்று நினைத்து விட்டான் சத்யா .
மீண்டும் அவன் காதில் ஏதோ சொன்னாள் தீப்ஷீ . அவள் சொல்லியதை கேட்ட சத்யாவிற்கு பதட்டமாக இருந்தது . வேகமாக ஓடிச் சென்று ஆட்டோ ஒன்றை தீப்ஷீ இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தான் .
பயத்தில் அழுதுக் கொண்டே வந்தாள் தீப்ஷீ . அவள் கண்களை துடைத்துவிட்டவன், அவள் கைகளை ஆதரவாக பிடித்துக் கொண்டான் . ஆட்டோ ஓட்டுனர் இவர்களை ஆராய்ச்சியாக பார்த்தார் .
ஒருவழியாக அவர்கள் வில்லா வந்துவிட, வேகமாக இறங்கிய சத்யா பணத்தை ஓட்டுனரிடம் தந்தவன் . தீப்ஷீயை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு சென்றான் சத்யா .
தேவ்வும் சர்வேஷ்ஷூம் அங்கு பார்க்கில் பேசிக் கொண்டிருந்தனர் .
தேவ் , ஆட்டோவில் வந்து இறங்கிய சத்யா தீப்ஷீயை பார்த்தான் .
அவள் அழுதிருக்கிறாள் என்பதும் அவனுக்கு புரிந்தது .
“ சர்வேஷ் , வா உங்க வீட்டிற்கு போகலாம் . எனக்கு உன் புக்ஸ் வேணும் படிக்க. “ என்றான் தேவ் .
“ சரி வா படிப்பாளி. “ என்ற சர்வேஷ் அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் .
அங்கு வீட்டிற்கு வெளியே காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தனர் . சரண்யா வந்து கதவை திறந்ததும் , உள்ளே சென்றனர் சத்யாவும், தீப்ஷீயும் .
“ வா பா சத்யா. “ என்ற சரண்யா மகள் அழுவதை பார்த்து , “ ஏன் தீபு இப்போ அழற ? “ என்றுக் கேட்டார் .
அவள் ஒன்னும் சொல்லாமல் அழுதுக் கொண்டே இருந்தாள் .
“ அம்மு உள்ளே கூட்டிட்டு போய் சொல்லு.” என்றான் சத்யா .
அவளிடம் பதில் இல்லை .
“ நீயாவது சொல்லு சத்யா என்ன நடந்தது ? “ என்றுக் கேட்டார் சரண்யா .
“ சரண்யாமா , அம்மு பெரியவள் ஆகிட்டா. “ என்றான் சத்யா .
அவன் சொல்லும் போது சர்வேஷ்ஷூம் தேவ்வும் உள்ளே வர சரியாக இருந்தது .
“ இதற்கா இந்த அழுகை தீபு. உள்ளே வா.” என்று அவளை அவள் ரூமிற்கு அழைத்துச் சென்றார் சரண்யா .
அவர் வரும் வரை மூவரும் வெளியே காத்திருந்தனர் .
‘ ஐய்யா ! என் செல்ல குட்டி பெரியவள் ஆகிட்டாளே . இனிமே அவளை சத்யாவோடு எங்கும் அனுப்பமாட்டார்கள். ‘ என்று நினைத்தான் தேவ் .
‘ அம்மு இனிமேல் என்னோட எங்கும் வரமாட்டாளா . எங்க நட்பு முடிந்ததா ? ‘ என்று கவலைக் கொண்டான் சத்யா .
‘ இனிமேல் அவளை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். ‘ என்று முதல் முறையாக அண்ணனின் கடமையை உணர்ந்தான் சர்வேஷ் .
வெளியே வந்த சரண்யா , “ சத்யா , கமலாவை வர சொல்றீயா , எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை . பதட்டமா இருக்கு. “ என்றார் .
“ இதோ கூட்டிட்டு வரேன் சரண்யாமா .” என்ற சத்யா ஒரே ஓட்டமாக ஓடிவிட்டான் .
“ ஆன்ட்டி , நானும் எங்க அம்மாவை ஹெல்ப்புக்கு கூட்டிட்டு வரவா ? “ என்றுக் கேட்டான் தேவ் .
“ இல்லப்பா வேண்டாம் , பாட்டிக்கு இதெல்லாம் பிடிக்காது , அவங்க தீட்டுனு நினைப்பாங்க . நீ வந்ததுக்கே திட்டுவாங்க . எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உன்ன உள்ள வராம தடுத்திருப்பேன் . இப்போ நீ போ தேவ் . ஐஞ்சு நாள் கழிச்சி வா பா .” என்றார் சரண்யா .
“ இல்ல ஆன்ட்டி கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன். “ என்றான் தேவ் .
‘ இன்றுவிட்டால் இனி தீப்ஷீயை அடுத்த மாதம் தான் பார்க்க முடியும் . எப்படியாவது அவளை ஒருமுறை பார்த்த பின்பு தான் போகணும் . ‘ என்று மனதில் நினைத்துக் கொண்டான் தேவ் .

