Loading

அத்தியாயம் 23

 

காலையில் , முழித்த தீப்ஷீ தேவ்வைப் பார்த்து பயத்தில் கத்தப்போக ‌. நல்ல வேளையாக நினைவு வர வாயை மூடிக்கொண்டாள் .

 

எழுந்து நின்றவள் , ‘ நாம கீழ தான படுத்தோம் . எப்படி மேல வந்தோம் ? ஒருவேளை… ‘ என்று யோசித்துக் கொண்டிருந்தாள் தீப்ஷீ .

 

‘இவ யோசிச்சா நமக்கு தான் ஆபத்து.’ என்று நினைத்த தேவ் , திரும்பிப் படுக்க,

 

வேகமாக டிரஸ்ஸை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு ஓடினாள் தீப்ஷீ .

 

தீப்ஷீயின் அசைவில் முழித்த தேவ் . தூங்கவது போல் நடித்துக் கொண்டே  அவளின் செயலை பார்த்துக் கொண்டிருந்தான் .

 

அவள் யோசித்தாள் தனக்கு தான் ஆபத்து என்பது புரிய அவளை யோசிக்க விடாமல் பாத்ரூமுக்குப் போக வைத்தவன் .

 

அவளின் செயலை சிரித்துக் கொண்டே ரசித்தான் .

 

தீப்ஷீ ரெடியாகி கீழே போகும் வரை அவளை அவளுக்கே தெரியாமல் சைட்டடித்துக் கொண்டிருந்தான் தேவ்.

 

‘ சரி நம்மளை எழுப்புறாளானு பார்ப்போம் ?’ என்று நினைத்தான் தேவ் .

 

தீப்ஷீயோ அவனை திரும்பிக் கூட பார்க்காமல் கீழே சென்றுவிட்டாள் .

 

“இவள வெச்சுக்கிட்டு நான் என்ன செய்ய போறேனோ? ஈஸ்வரா ?” என்று புலம்பிய தேவ் ரெடியாகி கீழே சென்றான்.

 

” தீபு , மாப்பிள்ளை வந்துவிட்டார் பார் . அவருக்கு குடிக்க என்ன வேணும்னு கேட்டு எடுத்துட்டு வா. ” என்றார் தினேஷ் .

 

வெளியே உட்கார்ந்திருந்தவள் தினேஷ் சொன்னதும் எழுந்துவந்தவள், தேவ்விடம் பேச விரும்பாமல் அவன் அருகே நின்றிருந்தாள் .

 

‘ என்னால கூட வீம்பா நீயா

கேட்கும் வரை எதுவும் சொல்லாம இருக்க முடியும் . ஆனா , உன்ன கஷ்டப்படுத்த நான் விரும்பல்லை .’ என்று நினைத்தவன் தீப்ஷீயிடம் , ” டீ எடுத்துட்டு வா .” என்றான் தேவ் .

 

சமையலறை சென்ற தீப்ஷீ , தேவ்விற்கு டீ போட்டு எடுத்து வந்தாள் .

 

” அங்கிள் , நீங்க என்ன மாப்பிள்ளைனு சொல்லாதீங்க . எப்போவும் போல என்ன பெயர் சொல்லி கூப்பிடுங்க. ” என்றான் தேவ் .

 

” மரியாதையா இருக்காதேப்பா.” என்றார் தினேஷ் .

 

” அங்கிள் , நீங்க என்னோடு வயசுல பெரியவர் , நீங்க எனக்கு மரியாதை தர தேவையில்லை .” என்றான் தேவ் .

 

” சரி நான் , உன்ன தேவ்னே கூப்பிடுறேன். ஆனா , நீ என்னை மாமானு கூப்பிடு இந்த அங்கிள் எல்லாம் இனி வேண்டாம் .” என்றார் தினேஷ் .

 

” சரிங்க மாமா‌. ” என்ற தேவ்வின் முகத்தில் புன்னகை .

 

தீப்ஷீ டீ கப்பை தர அதை வாங்கி குடித்தான் தேவ் .

 

” தேவ் , தீப்ஷீயை பக்கத்திலிருக்கும் கோவிலுக்கு கூட்டிட்டு போ பா . இந்திராணி பாட்டி நல்ல நேரத்துக்கு அங்கு வர சொல்லியிருக்காங்க . அதனால , சீக்கிரமா போயிட்டு வாங்க. தீப்ஷீ , நீ ரெடியா தான இருக்க. ” என்றுக் கேட்ட தினேஷ் பேப்பரை டீபாய் மேல் வைத்துவிட்டு தன் அறைக்கு சென்றார் .

 

தீப்ஷீ , எந்த பதிலும் சொல்லாமல் , கோவில் கூடையில் தேவையானதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

 

அப்போ தான் தேவ் கவனித்தான் தீப்ஷீ வீட்டில் யார் கிட்டையும் பேசலை . அவங்க செய்ய சொல்றதை அமைதியா ரோபோ போல் செய்துக்கொண்டிருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது .

 

‘ இவளை இப்படியே விட்டுவிட்டால் பின் கஷ்டம் தான் . இவளிடம் ஏதாவது வம்பு செய்து, என்னோடு சண்டையாவது போட வைக்கணும் . இல்லணா இவ என்கிட்ட பேசாமல் யாரோ போல் நடந்துக்குவா ?’ என்று யோசித்துக் கொண்டே டீ குடித்துக் கொண்டிருந்தான் தேவ் .

 

” அம்மு. ” என்றுச் சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான் சத்யா .

 

” சத்யா , இன்னைக்கு வேலைக்கு போறீயா ? ” என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

” ஆமா அம்மு , கோவிலுக்கு போறீங்களா ? ”

 

” ஆமா ”  என்றாள் தீப்ஷீ .

 

‘ இவனும் தான நேத்து  விருப்பமில்லாம உன்ன எனக்கு கல்யாணம் பண்ணி வெச்சான் . ஆனா இவனோடு மட்டும் பேசுற? இவன் மட்டும் உனக்கு எப்போவும் ஸ்பெஷல் தான். ‘ என்றது தேவ்வின் மைண்ட் வாய்ஸ்.

 

” அப்பா சொன்னாங்க இன்னைக்கு அக்ஷிதாமா வீட்டுக்கு போறீங்களாமே? ”  என்றுக் கேட்டான் சத்யா .

 

ஆம் என்பதுப் போல் தலை ஆட்டினாள் தீப்ஷீ .

 

” போகும்போது எல்லார் கிட்டையும் சொல்லிட்டு போ அம்மு. ”

 

” முடியாது சத்யா. ”  என்று சொல்லும் போதே அவளின் கண்களில் கண்ணீர் .

 

” சரி அழாத அம்மு . உன் விருப்பம் .”  என்ற சத்யா அவளின் கண்ணீரை துடைத்தான் .

 

” சத்யா வா பா , சாப்பிடுறீயா ?” என்று சமையல் செய்துக்கொண்டே கேட்டார் சரண்யா .

 

” இல்லமா , இப்போ தான் சாப்பிட்டு வந்தேன். ” என்ற சத்யா , சமையலறை சென்றான் .

 

” சரண்யாமா ஏன் அழறீங்க ? ”  என்றுக் கேட்டான் சத்யா .

 

” எப்படி சத்யா , என்ன பார்க்காமலே நான் அழறதை கண்டு பிடிச்ச? ” என்று வியப்பாக திரும்பிக் கேட்டார் சரண்யா .

 

” அதெல்லாம் ரகசியம் சொல்ல முடியாது. நீங்க ஏன் அழறீங்க ?”

 

” எல்லாம் உன் அம்முவால் தான் . எங்க மூணு பேர் கிட்டையும் பேச மாட்டேங்குறா. நாங்களும் காலையிலிருந்து அவளை பேசவைக்க முயற்சி செஞ்சி , முடியாததால் விட்டுவிட்டோம் . உன் கிட்ட தான் பேசுறாள் . அவளை பிரியறதை நினைச்சா கஷ்டமாக இருக்கு . இப்போ கூட எங்க கிட்ட பேசமாட்டேனு பிடிவாதம் பண்ணுறா. ”

 

” அம்மு , எங்கையோ போகலையே. பக்கத்து வீட்டுக்கு தான போறாள் . அவளுக்கு கொஞ்சம் டைம் தாங்க . கோபம் குறைஞ்சதும் அவளே பேசுவாள் . இதுக்காக எல்லாம் நீங்க அழா கூடாது. ”

 

” சரி டா கண்ணா .” என்ற சரண்யாவின் முகத்தில் இப்போது புன்னகை இருந்தது.

 

” பாய் சரண்யாமா , ஆபீஸ்க்கு நேரமாகுது‌. ”  என்ற சத்யா ஹாலுக்கு வந்தான் .

 

” தேவ் , அம்முவை பார்த்துக்கொள் . நாளைக்கு காலைல கார் வரும் ரெடியா இருங்க. ” என்றான் சத்யா .

 

” ஓகே சத்யா. ”  என்றான் தேவ் .

 

” அம்மு , வேண்டியதை எல்லாம் எடுத்து வெச்சுக்கோ . நாளைக்கு காலைல ரெடியா இரு டா . பாய் .” என்றான் சத்யா.

 

” பாய். ” என்றாள் தீப்ஷீ .

 

கப்பை டீபாய் மேல் வைத்த தேவ் , தீப்ஷீ அருகில் சென்றவன் , ” தீப்ஷீ , கோவிலுக்கு போலாமா  ? ”  என்றுக் கேட்டான் .

 

தலையை ஆட்டிய தீப்ஷீ , வேகமாக கூடையை எடுத்துக்கொண்டு எழுந்தாள் .

 

” நான் உன்கிட்ட கேள்வி கேட்டேன். அதுக்கு நீ பதில் சொல்லணும் . நான் கூட முதல்ல நீ நம்ம கல்யாணம் நல்ல படியா நடந்ததுக்காக மௌன விரதம் இருக்கியோனு நினைச்சேன் . ஆனா , இப்போ சத்யா கிட்ட பேசுனியா . அப்போ தான் தெரிஞ்சது நீ மௌனவிரதம் இல்லைனு.” என்றான் நக்கலாக .

 

” …..”

 

கோபமாக , ” என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு என்பதை மறந்துடாதே ? இப்போ சொல்லு , கோவிலுக்கு போலாமா ? ” என்றுக் கேட்டான் தேவ் .

 

” போலாம். ”  என்ற தீப்ஷீயின் கண்களில் கண்ணீர் . வேகமாக கண்களை துடைத்துக் கொண்டே வெளியே போனாள் .

 

” அத்தை , கோவிலுக்கு போயிட்டு வரோம். ”  என்ற தேவ் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தான்  .

 

” சரி பா. ” என்றார் சரண்யா .

 

காரில் பின் பக்கம் ஏற போனாள் தீப்ஷீ .

 

” முன்னாடி வந்து உட்கார் . முன்பு நான் உனக்கு யாரோ என்பதால் உன்ன பின் சீட்டில் உட்கார விட்டேன் . ஆனா , இப்போ நீ என் பொண்டாட்டிங்கறதை  நினைவில் வெச்சுக்கோ. முன்னால் வந்து உட்காரு .” என்றான் தேவ் கடுப்பாக .

 

‘ இவளோடு எல்லாத்துக்கும் போராட வேண்டியதா இருக்கே.’ என்று நினைத்தான் தேவ் .

 

‘ இனி இவன் சொல் படி நான் நடக்கணுமா ? ‘ என்று நினைத்த தீப்ஷீயின் முகம் சோகமாக இருந்தது .

 

அதை பார்த்த தேவ்விற்கு கோபமாக வந்தது , ‘ இவளை எப்படி சரி செய்வது? ‘  என்று யோசித்துக் கொண்டு வந்தான் . அப்போது ஒரு பேனரில் ஐ.பி.எஸ் , ஐ.ஏ.எஸ் கோச்சிங் சென்டர் விளம்பரம் இருந்தது . அதைப் பார்த்ததும் தேவ்விற்கு பல்பு எரிந்தது

 

” நீ ஐ.பி.எஸ் ஆக போறதா சொல்லிட்டே இருப்பியே. இனிமே நீ அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. ”  என்றான் தேவ் .

 

” ஏன் ?” என்று கோபமாக மறுநிமிடமே கேட்டாள் தீப்ஷீ .

 

” பின்ன உன்ன மாதிரி ஒரு பயந்த , அழுமூஞ்சி ஐ.பி.எஸ் ஆனா , அந்த பதவிக்கே அவமானம் . அதனால , இனிமே ஐ.பி.எஸ் ஆவேனு சொல்லக் கூட உனக்கு தகுதி இல்லை .”  என்று அவளை நன்றாக வெறுப்பேற்றினான் தேவ் .

 

” நான் யாருக்கும் பயப்படலை. ”  என்றாள் தீப்ஷீ .

 

” அழுத தானே , நீ எல்லாம் ஐ.பி.எஸ்க்கு செட்டாக மாட்டா. ” என்று நயன்தாரா போல் சொன்னான் தேவ் .

 

” இனிமே நான் அழமாட்டேன் . ஐ.பி.எஸ் ஆவேனு சொல்லுறது என்ன அதை நடத்தியே காட்டுவேன். ”  என்றாள் தீப்ஷீ .

 

” பார்க்கலாம் முதலில் அழாமல் இரு பிறகு ஐ.பி.எஸ் ஆவதைப் பத்தி பேசு. ” என்ற தேவ் நிம்மதி அடைந்தான் .

 

‘ என் செல்லத்தோட அழுகையை எப்படியோ நிறுத்திட்டேன். ‘ ,என்றது தேவ்வின் மைண்ட் வாய்ஸ் .

 

கண்களை நன்றாக துடைத்த தீப்ஷீ , நேராக உட்காரந்தாள் .

 

அதை பார்த்த தேவ் , ‘ இவளுக்கு சத்யாவிற்கு பின் பிடித்த விஷயம் என்றால் ஐ.பி.எஸ் தான் போல் . ஐ.பி.எஸ் வார்த்தை நல்லா வேலை செய்து இவளிடம். ‘  என்று நினைத்தான் .

 

கோவில் வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை .

 

இருவரும் கோவிலுக்கு செல்ல , புதுமண தம்பதி என்று எல்லாரும் ஆர்வமாக இவர்களை பார்த்தனர் .

 

எப்போதும் போல் தேவ் கம்பீரமாக நடக்க எல்லோரும் பார்ப்பதால் தீப்ஷீ கொஞ்சம் சங்கடமாக உணர்ந்தாள் .

 

ஐயரிடம் அர்ச்சனைத் தட்டை தந்த தேவ் , இருவரின் பெயர் மற்றும் நட்சத்திரம் சொன்னான்.

 

தீப்ஷீ அவனை ஆராய்ச்சியாக பார்த்தாள் , ‘ இவனுக்கு எப்படி என்னோட நட்சத்திரம் தெரிஞசது? ‘  என்று நினைத்தவள், பின் அதைப் பத்தி தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாம சாமியிடம் சண்டை போட ஆரம்பித்தாள் , ‘ ஏன் என் வாழ்க்கைய இப்படி செஞ்சீங்க? ‘ என்றாள் .

 

‘ தேவ்விற்கு எப்படி என் நட்சத்திரம் தெரிஞ்சது? ‘ என்ற கேள்விக்கு தீப்ஷீ விடை தேடியிருந்தால் தேவ்வின் காதலை முன்பே உணர்ந்திருப்பாள் . ஆனா , தேவ்வை கஷ்டப்படுத்திய பின் தான் அவனின் காதலை உணர்வேன் என்பவளை என்ன செய்வது .

 

கோவிலுக்கு சென்றதால் இருவரும் ஒரு வித மோன நிலையில் இருந்தனர் . எதுவும் பேசாமல் அமைதியாக வீட்டிற்கு வந்தனர் .

 

இருவரும் வீட்டிற்குள் நுழைந்ததும் , ” சரண்யா , தண்ணீர் எடுத்து வந்து தா இவங்களுக்கு . நேரம் ஆகுது அந்த வீட்டிற்கு போகணும். ” என்றார் தினேஷ் .

 

பின் எல்லோரும் அமர் வீட்டிற்கு சென்றார்  .

 

அங்கு தேவ்வையும் தீப்ஷீயையும் ஆரத்தி சுற்றினார் இந்திராணி . இருவருக்கும் திலகம் வைத்தவர் தீப்ஷீயிடம் , ” வலது காலால் இந்த அரிசியை தள்ளிவிடு. ”  என்றார் .

 

இது அவர்களின் கலாச்சாரம் என்பது தீப்ஷீக்கு தெரியும் .

 

இவள் தான் பல ஹிந்தி சீரியல் பார்த்திருக்காளே. அதனால், அவங்க சொல்லியது போல் செய்தாள் .

 

ஒரு வெள்ளி தட்டில் குங்குமத்தை தண்ணீரில் கலந்து வைத்திருந்தனர் .

 

” தீப்ஷீ , அதில் உன் காலை நனைத்து பின் வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா. ” என்றார் அக்ஷிதா .

 

தீப்ஷீயை தொடர்ந்து அனைவரும் உள்ளே வந்தனர் .

 

” தேவ் , தீப்ஷீயை பூஜை அறைக்கு கூட்டிட்டு போய் விளக்கு ஏத்த சொல்லி சாமி கும்பிட்டு வா. ” என்றார் இந்திராணி .

 

தேவ் தீப்ஷீயை கூட்டிட்டு போக .

 

” நீங்க எல்லோரும் உட்காருங்க . அக்ஷிதா…  டீயும், ஸ்வீட்டும் எடுத்துட்டு வா. ” என்று முதலில் தீப்ஷீ குடும்பத்தினரிடம் சொன்னவர் கடைசியில் அக்ஷிதாவிடம் முடித்தார் .

 

இரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அங்கிருந்தனர் . தீப்ஷீயும், தேவ்வும் வர .

 

” இரண்டு பேரும் உட்காருங்க. ” என்றார் இந்திராணி .

 

” இப்போ எதுக்கு அரிசிய தள்ளின ? எதுக்கு உன் பாத அச்சு தெரியும் படி உள்ளே வந்தனு தெரியுமா ? ”  என்று தீப்ஷீயைக் கேட்டார் இந்திராணி .

 

” உங்க கலாச்சாரம் .” என்றாள் தீப்ஷீ .

 

” கலாச்சாரம் தான் அதுக்காக அந்த ஒரு சொல்லிலே அதை முடித்துவிடக்கூடாது . நீ மகாலஷ்மியாக எங்க வீட்டிற்கு வந்திருக்கிறாய் என்பதற்காக தான் அரிசியை தள்ளும் சடங்கு . உன் பாத அச்சும் மகாலஷ்மியின் பாத அச்சாக தான் நினைக்கிறோம் என்பதை உணர்த்தவே இரண்டாவது சடங்கு . என்ன புரிஞ்சதா ? ”  என்றுக் கேட்டார் .

 

” புரிஞ்சது. ”  என்றாள் தீப்ஷீ .

 

தீப்ஷீயிடம் பேசி முடித்தவர் . மற்றவர்களை பார்க்கும் படி திரும்பி உட்கார்ந்தவர் , ” முக்கியமான விஷயத்தைப் பத்தி சொல்ல தான் உங்க எல்லாரையும் ஒன்னா வர சொன்னேன். ”

 

” சூழ்நிலை காரணத்தால் என் ஒரு பேரனின் கல்யாணம் சாதாரணமா நடந்து முடிஞ்சிடுச்சு . எங்க முறைப்படி செய்தால் ஒரு வாரம் திருவிழா போல கல்யாணம் நடக்கும் . இப்போ எல்லாம் முடிஞ்சிடுச்சி . ஆனா , எங்க உறவுகளை கூப்பிட்டு கல்யாணம் நடந்ததை தெரிவிக்க கிராண்டாக

ரிசப்ஷன் வைக்கணும். ”  என்றார் இந்திராணி .

 

” கண்டிப்பா சிறப்பாக செஞ்சிடுலாம் . எங்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை. ”  என்றார் தினேஷ் .

 

” சந்தோஷம் . எல்லா செலவையும் நாங்க பார்த்துக்கொள்கிறோம். ” என்றார் இந்திராணி .

 

” அதெல்லாம் வேண்டாம் பாட்டி , நாங்களும் செலவு செய்றோம் . எனக்கு இருக்குறதும் ஒரு மக தான் . அவளுக்கு செய்யாம நான் யாருக்கு செய்ய போறேன்?”

 

” கல்யாணம் நீ தான செஞ்ச . அதனால , ரிசப்ஷன் முழுவதும் எங்க பொறுப்பு . நீங்களும் , உங்க உறவுகளும் வந்து இரண்டு பேரையும் ஆசிர்வதித்தால் போதும். ” என்று பாகுபலி படத்தில் வரும் ராஜமாதா சிவகாமி தேவி கூறுவதுப் போல் , ‘ இதுவே என் கட்டளை; கட்டளையே சாசனம். ‘ என்று முடிவாக இந்திராணி இந்த விஷயத்தை பேசி முடித்தார் .

 

” ரிசப்ஷன் தேதி ? ” என்றுக் கேட்டார் தினேஷ் .

 

” ஜூன் 2 ” என்றார் இந்திராணி .

 

” முடியாது , அன்னைக்கு தான் எனக்கு ஐபிஎஸ் எக்ஸாம் இருக்கு. ” என்றாள் தீப்ஷீ .

 

எல்லோரும் தீப்ஷீயை அதிர்ச்சியாக பார்க்க .

 

” நீ ஐ.பி.எஸ் ஆக நான் சம்மதம் தந்ததா எனக்கு நினைவில்லையே? ”  என்றார் இந்திராணி.

 

 

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. இதென்ன புது ட்விஸ்ட் .. தீப்ஷி உன் கனவு அவ்ளோதான்