
இறுதி அத்தியாயம்:
தேடல் 40:
அடுத்து வந்த இரண்டு நாட்களுக்கும் அவர்களின் உரையாடல் எல்லாம் வெறும் கைப்பேசியோடு முடிந்துப் போனது. அவன் வேலை முடியவே நள்ளிரவைத் தாண்டிவிட, அதற்குமேல் வந்து அவளின் தூக்கத்தைக் கெடுக்க வேண்டாம் என விட்டுவிட்டான் அக்னி. ஒரே ஊருக்குள் இருந்துக் கொண்டு ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்கக்கூட முடியவில்லையே என அத்தனை தவித்துப் போனார்கள்.
மூன்றாம் நாள் இரவில் அவளைத் தேடிக் கொண்டு வீடு வந்தவனை, முறைத்துக் கொண்டே சுற்றிக் கொண்டிருந்தாள் மிளிர்.
“இப்ப என்னவாம்..?” அவளின் பின்னோடே சுற்றிக் கொண்டிருந்தவன் கடுப்பாய்க் கேட்க,
“ஏன் எனக்கென்ன… நல்லா தானே இருக்கேன்… நல்லா சாப்பிடறேன்… நல்லா தூங்கறேன்… அப்பறம் என்ன..? யார் வந்தா எனக்கு என்ன..? வரலைன்னா தான் என்ன… இல்த வேலையவேக் கல்யாணம் கட்டி கேஸ் கேஸா பெத்துப் போட்டா தான் எனக்கு என்ன..?” என்றாள் அவளும் கடுப்பாய் அவனைப் பாராது அலமாரியில் இருந்த துணிகளை எல்லாம் அள்ளி கட்டிலில் போட்டபடி.
“எல்லாத் துணியும் மடிச்சு தானே இருக்கு… இப்போ எதுக்குடி இதெல்லாம் அள்ளி இங்க போட்டுட்டு இருக்க…” என்றான் பேச்சை லாவகமாய் மாற்றுவதாய் நினைத்து அவன்.
“நான் எதையோ அள்ளி எங்கையோ போட்டுட்டு போறேன்… உங்களுக்கு என்ன வந்துச்சு… போய் உங்க வேலையவே கட்டிட்டு அழுங்க போங்க…” என வள்ளென்று விழுந்தாள் மிளிர்.
“ஏய்… மினிஸ்டர் மீட்டிங்காக வந்து இருந்தாருடி… இரண்டு நாளா வேலை பெண்டு நிமிந்துடுச்சு… பொட்டு துக்கமில்ல… உனக்கு தெரியும் தானே…” என்றான் பாவமாய் அவன்
“அப்ப மினிஸ்டரையே கட்டி குடும்பம் நடத்த தானே… என்ன எதுக்கு தேடி வந்தீங்க…” என்றபடியே மீதமிருந்த எல்லா துணிகளையும் அள்ளி கட்டிலின் மீதுப் போட்டிருந்தாள் மிளிர்.
“ரொம்பத் தான்டி பண்ணற… சரிதான் போடினு போய்டுவேன் பாத்துக்க… ஏதோ பொண்டாட்டி ஆசையாக் கேட்டாளேனு அந்த ஸ்டூடியோக் கடைக்காரன மிரட்டி போட்டோ எல்லாம் வாங்கிட்டு வந்தேன் பாரு… என்னை சொல்லணும்…” என்றான் கையில் இருந்த கவரை அவளின் முன்பு ஆட்டிக் காட்டியபடியே அக்னி.
“இப்ப என்ன ஒரு போட்டோ தானே வாங்கிட்டு வந்தீங்க… என்னமோ ஆல்பமே வாங்கிட்டு வந்த மாதிரி பேச்சுத் தான்…” என்றவள் அவனிடமிருந்த கவரை வெடுக்கென பிடுங்கிக் கொண்டவள், துணிகளை எல்லாம் எடுத்த பிறகு அலமாரியின் கீழ்தட்டில் பளிச்சென்று தெரிந்த ஆல்பத்தை எடுத்துக் கொண்டு கூடத்தை நோக்கி நடந்தாள். இவனும் பின்னோடு சென்று விட்டான்.
சென்றவள் அங்கிருந்த நீள்விருக்கையில் சென்று அமர, “அப்ப எதுக்காம் இந்த போட்டோ தான் வேணும்னு மேடம் புழிஞ்சு புழிஞ்சு விட்டீங்க…” என்றவன் சட்டமாய் அவளின் அருகே இடித்துக் கொண்டு அமர, “இதோ இதுக்குத் தான்…” என்றவள் அந்த பெரிய ஆல்பத்தை எடுத்துக் காட்டினாள்.
அதில் அந்தப் புகைப்படத்தை பொருத்தியவள், முதலில் இருந்து புரட்ட, அவனும் அவள் தோளில் முகம் புதைத்தபடி பார்க்கத் தொடங்கினான். அதில் மிளிரின் வாழ்வில் நடந்த ஒவ்வொரு முக்கிய தருணங்களும் புகைப்படங்களாய் நிரம்பி இருக்க, மிளிரின் வாழ்வென்றால் மகிழினி இல்லாமல் எப்படி? அதில் 90 சதவீத புகைப்படங்களில் இருவரும் சேர்ந்தே தான் இருந்தனர்.
ஒவ்வொரு பக்கமாய்ப் புரட்டப் புரட்ட, அந்தப் புகைப்படத்துக்குச் சம்பந்தமான நிகழ்வுகளை விவரித்துக் கொண்டே வந்தாள் மிளிர். ஒரு இடத்தில் அவளின் பேச்சு தடைப்பட, அந்தப் புகைப்படத்தில் அக்னியின் கவனம் குவிந்தது. பள்ளிச் சீருடையில் ஏழு மாணவர்கள் நின்றிருக்க, அத்தனை பேரின் கைகளிலும் சின்னச் சின்ன பரிசுக் கோப்பைகள். நலுங்கிய உடை, கலைந்த தலை என இருந்தாலும் அத்தனை பெருமிதமும் பூரிப்பும் சந்தோஷமும் அவர்களின் முகத்தில்.
மிளிர் இதுவரை சொல்லிக் கொண்டு வந்ததில் அந்த புகைப்படத்தில் இருந்த மிளிர், மகி, இனியனை அடையளம் கண்டுக் கொண்டவனுக்கு மற்றவர்களைத் தெரியவில்லை.
அடுத்த பக்கத்தை திருப்பாது, அந்த புகைப்படத்தை பற்றிய நிகழ்வுகளையும் பகிராது, அதை விரல்களால் வருடியபடியே அப்படியே அமர்ந்திருந்தாள் அவள்.
ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தவன், “மிளிர் என்னடாம்மா…” என்றான் வாஞ்சையான குரலில்.
“இது யாருன்னு உங்களுக்கு தெரியுதா மித்து…” என அவள் காட்டிய நபரை, உற்றுப் பார்த்தவனுக்குச் சட்டென யாரென்று பிடிபடவில்லை. ஆனால், மிளிரும் அந்த மரகத விழிகளைக் கண்டவனுக்கு தனது எண்ணங்களின் மீதே ஐயம் எழுந்தது.
“பிரசாத்தா இது…” என்றான் சின்ன ஆச்சர்யத்தோடு சந்தேகமாய்.
“ம்ம்ம்… என்னோட குட்டா…” எனறவளின் குரலில் அத்தனை வலி நிறைந்திருந்தது.
“மிளிர்… என்னம்மா…” என்று அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான் அக்னி.
“அடிக்கடி இந்தக் கண்ணு கனவுல வரும் மித்து… அதுல ஒரு தடவ கொலைவெறி தெரிஞ்சா… ஒரு தடவ ஏக்கமும் இயலாமையும் தெரியும்… அப்போ எல்லாம் எனக்கு யாருன்னு தெரியல… அவன் யாருன்னு தெரிஞ்சப்போ அவன் இந்த உலகத்துலையே இல்லாமப் போய்ட்டான்… ஏன் இப்படியெல்லாம் நடக்கணும் மித்து… அவனுக்கு மகியும் நானும்னா எவ்வளவு இஷ்டம் தெரியுமா… நாள் பூரா எங்க கூடத் தான் இருப்பான்… ஆனா அவனே ஏன் மகியக் கொல்லணும்… அப்படி மட்டும் நடக்காம இருந்து இருந்தா எவ்வளவு நல்லா இருந்து இருக்கும்… இப்ப நாங்க எல்லாரும் ஒன்னா இருந்து இருக்கலாம்…” என்றாள் மிளிர் வேதனை நிறைந்த குரலில்.
“இதுதான் நடக்கணுமுனு இருக்கும் போது யாரால அத மாத்த முடியும்… மகிய மட்டும் அவன் கொல்லாம இருந்து இருந்தா அவன் மேல தப்பில்லைனு ஆகிடுமா..? அவனால எத்தன உயிர் போய் இருக்கு… எல்லாம் சின்ன சின்ன பொண்ணுங்க… அதுக்கெல்லாம் தண்டனை வேண்டாமா..?” என்றான் அழுத்தமாய் அக்னி.
“ஆனா அவனால இன்னைக்கு எத்தனை பேர் எய்ட்ஸ்ல இருந்து மீண்டு வந்து இருக்காங்க… எத்தன பேருக்கு அவங்களோட சொந்தம் திரும்ப கிடைச்சு இருக்கு… எத்தன பேர் அவனால வாழறாங்க… அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா…
அவன் போன வழி தப்பு தான்… சத்தியமா அது ரொம்ப ரொம்ப தப்புதான்… நா அத நியாயப்படுத்தவே மாட்டேன்… ஆனா அவனோட நோக்கம் தப்பில்லையே… ஆனா அதுக்காக அவனுக்குக் குடுத்த தண்டனை ரொம்ப அதிகம்… அவன வாழ வச்சுருக்கலாம்… அவன் வாழ்ந்திருந்தா அவனால இன்னும் நிறையப் பேர் வாழ்ந்திருப்பாங்க…
ஒரு பழமொழி சொல்லுவாங்க… ஒரு குடும்பம் வாழனுமுனா ஒருத்தர இழக்கலாம்… ஒரு ஊர் வாழனுமுனா ஒரு குடும்பத்தையே இழக்கலாம்… அதே ஒரு நாடு வாழனுமுனா ஒரு ஊரே இழக்கலாம்னு… அது சரியா தப்பானு நா சொல்ல வரல… ஆனா குட்டா உயிரோட இருந்து இருந்தா இந்த உலகத்துல நோயினால செத்துட்டு இருக்க இன்னும் நிறையப் பேர வாழ வச்சுருப்பான்… அவனுக்கு மரண தண்டனை குடுக்காம அவன் ஆராய்ச்சிய முறைப் படுத்தி இருக்கலாம். அவன வீட்டுக் காவல்ல இருந்து பண்ணற மாதிரிக் கூடப் பண்ணிருக்கலாம்… வெறும் தப்ப மட்டுமே பண்ணிட்டு பணத்தால எல்லார் வாயையும் அடைச்சுட்டு திமிரா ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கவங்க எத்தன பேர் இருக்காங்க… அவங்கள எல்லாம் உங்க சட்டத்தால என்ன செய்ய முடிஞ்சுது…” என்றவள் சற்றே இடைவெளி விட்டு, “ஆனா அவன் மேல் முறையீடு செய்யல… குடியரசுத் தலைவருக்குக் கூட இந்த மரண தண்டனைய ரத்து செய்யச் சொல்லிக் கருணை மனுப் போட்டு இருக்கலாம்… ஆனா அவன் ஏன் அதெல்லாம் பண்ணல… பண்ணி இருக்கனும் தானே மித்து…” என்றாள் அவனிடம் கேள்வியாய் கேவலோடு அவள்.
அவன் என்ன பதில் சொல்வதெனத் தெரியாது அவளைப் பார்க்க, “என்னால தான்… எனக்காக தான் அவன் அத பண்ணல… அவன் சாகணும்னு நான் நினைக்கறேனு நினைச்சுட்டான்… ஆனா நிஜமா நான் அப்படி நினைக்கவே இல்ல மித்து…” என கலக்கமாய் உரைத்தவள், “உண்மையாவே அவனத் தூக்குல போட்டு இருப்பாங்களா மித்து…” என்றாள் பாவமாய்.
இல்லை என்று சொல்லிவிட அவனுக்கும் ஆசை தான். ஆனால் உண்மை வேறாக இருக்க, அவனும் அதைத் தானே சொல்ல முடியும். “அப்படித் தானே நீயூஸ்ல எல்லாம் சொன்னாங்க…” என்றான் கமறியக் குரலை செருமி சரிசெய்தபடியே.
அவளின் முகம் இன்னும் வாடுவதைக் கண்டவன், பேச்சை மாற்ற எண்ணி அடுத்தடுத்த புகைபடங்களுக்கு விளக்கம் கேட்டு, அப்படியே அவளின் மனநிலையை மாற்றியும் இருந்தான்.
“அப்போ நமக்குப் பொண்ணு பொறந்தா மகிழினினு தான் பேரு வைப்ப இல்ல…” என்றான் விளையாட்டாய்.
“இல்லையா… பின்ன…”
“அப்போ பையன் பொறந்தா… தேவ் பிரசாத்தா…” என்றான் முறைத்துக் கொண்டே.
“அதான் இல்ல… மகிழன்னு வைப்பேன்… குட்டா பேர என் அடுத்த புள்ளைக்கு வைப்பேன்…” என்றாள் அவள்.
“அப்போ நான் எப்போ என் புள்ளைக்குப் பேர் வைக்கறதாம்…” என்றான் நொடிப்பாய் அக்னி.
“சுமக்கறவளுக்குப் பேர் வைக்கத் தெரியாதாமாம்… வந்துட்டாரு தொர பேரு வைக்க, காலரத் தூக்கி விட்டுட்டு…” என்றாள் நாக்கைத் துருத்திப் பழிப்புக் காட்டியபடி. அவளின் செயலில் அவனின் இதழ்கள் புன்னகையில் விரிய பின்னோடு அவளை இறுகக் கட்டிக் கொண்டான் அவன்.
அழுத்தமாய் அவளின் கன்னங்களில் தனது அதரங்களை பதித்தவன், கரங்கள் மென்மையாய் அவளின் வயிற்றை தடவிக் கொண்டுத்தது. காதலில் அவர்களின் மனங்கள் நிரம்பி தளும்பிக் கொண்டிருந்தது.
❤️❤️❤️❤️❤️
நீயூயார்க் நகரின் பிரதான தேசிய நெடுஞ்சாலை. அதிகாலை வேளை. டிசம்பர் மாதத்தின் மெல்லிய பனி உடலை ஊடுருவ, அதைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது இருசக்கர வாகனங்கள் சாலையில் பறந்து கொண்டிருத்தன.
சாலையில் ஒரு ஓரமாக சைக்கிளிங் சென்று கொண்டிருந்தவளைத் தாண்டி மின்னல் வேகத்தில் பைக்குகள் பறக்க, அதன் வேகத்தில் பலமாக அடித்த எதிர்காற்றிலேயே கொஞ்சமாய்த் தடுமாறத் தொடங்கி இருந்தாள் அவள். அவள் இறங்க நினைத்த நொடி, வேகமாக வந்த பைக் ஒன்று அவளின் ஹேண்ட்பாரைத் தட்டிச் செல்ல, நிலைதடுமாறியவள் விழுந்துவிட்டாள்.
“டேய்… அறிவில்ல உனக்கு… வந்துட்டானுங்க… காலங்காத்தால சாவுக்கிராக்கி… இதென்ன உங்கொப்பன் வீட்டு ரோடா… இஷ்டத்துக்குப் போற… எவன்டா முதல்ல இங்க ரேஸ் வைக்க பரிமிஷன் குடுத்தது… வந்துட்டானுங்க… பெரிய புடுங்கியாட்டம்… காலங்காத்தால பைக்கத் தூக்கிட்டு…” கை தரையில் உராய்ந்து ரத்தம் வர, வலியில் தன்னையும் மீறித் திட்டிக் கொண்டிருக்க, இடித்துவிட்டுச் சென்றவனோ திருப்பிக் கொண்டு வந்து அவளின் அருகில் வண்டியை நிறுத்தினான்.
“வந்துட்டான் சாரி கேட்க… பெரிய இவனாட்டம்… இவன் சாரி கேட்டா எனக்கு வலி தெரியாமப் போய்டுமாக்கும்…”
“சாரி கேட்டாப் போகாது தான்… என்ன பண்ணாப் போகும் சொல்லுங்க… அதையே பண்ணிடறேன்…” என்றபடியே அவன் தலைகவசத்தைக் கழட்ட,
“ம்ம்ம்… நீயும் நாலுதடவ ரோட்டுல உருண்டு பெரண்டு இதே காயத்தோட வா… சரியாகிடும்… முதல்ல நகரு நீ… எதுக்கு வழிய மறைச்சுட்டு நிக்கற… வேற வேல இல்ல…” என்றவள் அவனைக் கடுப்புடன் முறைக்க, அவனோ அவனின் மரகத விழிகளில் ஆச்சரியத்தைச் சுமந்து பார்த்தான்.
அவளின் பொன்னிறக் கூந்தலுக்கும், பொன்னிறக் கருவிழிக்கும் அவள் பேசிய சரளமான தமிழுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இருப்பதாய்த் தோன்றவில்லை. இந்திய வம்சாவளியாய்த் தான் இருக்க வேண்டும். ஆனால் சில தலைமுறைகளுக்கு முன்பு. அப்படியிருக்க, இத்தனை சரளமான தமிழ் என்றால், இன்றும் அவள் வீட்டில் தமிழ் புழக்கத்தில் இருக்க வேண்டும். அல்லது அவளுக்குத் தமிழ் மீது அளவற்ற பற்று இருக்க வேண்டும்.
“ஐ அம் தேவ் பிரசாத்… ஃப்ரம் தமிழ்நாடு…” என அவன் புன்னகை முகமாய்க் கைநீட்ட,
“அத்தையே தமிழ்ல சொல்ல வரல… இவரு தமிழ்னதும் ஈஈஈனு பல்ல இழிச்சுட்டு நானும் கைகுடுத்துப் பேர சொல்லனுமோ… சரிதான் நகரு மேன்…” என்றவள் அவனை முணுமுணுவெனத் திட்டிக் கொண்டே தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட,
கண்ணில் இருந்து அவள் மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தவன், “கிரேஸி…” என மெல்லிய புன்னகை ஒன்றை சிந்திக் கிளம்பிவிட்டான்.
~ சுபம் ~
இதுவரை கதையை வாசித்த நேசித்த, உடன் பயணித்த அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

