
தேடல் 39:
கைகளைக் கட்டிக்கொண்டு இனியனையே கேலிப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி. ‘அப்படி வாடி மாப்பிள்ள வழிக்கு…’ என நினைத்தவன், “இந்த மட்டும் உனக்குத் தெளிஞ்சு இருக்குதே… அது வரைக்கும் சந்தோஷம்… சூர்யாவத் தவிர யாரையும் கட்டிக்க மாட்ட… அவகிட்டையும் போய்ப் பேச மாட்ட… அப்பறம் கல்யாணம் எப்ப நடக்குமா…” என்றான் கடுப்பாய்.
“என்னைய என்ன மாமா பண்ண சொல்லறீங்க… நா வேண்டானு போனவளத் தேடிப் போய் நா என்ன பேசறது… கட்டாயப்படுத்திக் காதல வர வைக்க முடியாது… அதுவும் இல்லாம அப்படிக் கட்டாயப்படுத்தி வர காதல் எனக்குத் தேவையும் இல்ல…” என்றான் இனியன்.
“உண்மை தான் இனியா… காதலக் கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது… அது ஒரு உணர்வு… அத உணரணும்… உன் உயிரோட ஆழம் வரைக்கும் வேரோடிப் போய் இருக்க காதல உணரணும்… அதே சமயம் உன்னை உணர்றது மட்டும் காதலில்ல… நீ காதலிக்கறவங்க உணர்வையும் மனசையும் அதோட ஆழத்துல பொதைச்சு வச்சுருக்க காதலையும் உணர்றது தான் காதல்… உனக்கு ஒன்னு தெரியுமா இன்னைய வரைக்கும் கூட நானும் மிளிரும் ஒருத்தர்கிட்ட ஒருத்தர் காதலச் சொல்லிக்கிட்டது இல்ல… உணர்ந்தோம்… என் காதல அவளும் அவளோட காதல நானும் மனசார உணர்ந்தோம்… அப்படி ஏன் உன்னால சூர்யாவோட காதல உணர முடியல… சூர்யாவுக்கு மட்டும் உன்னப் புடிக்கலனா, நீ என்ன சொல்லறது, நானே அந்தப் புள்ள பக்கத்துல உன்ன நெருங்க விட மாட்டேன்… ஆனா என்னாலேயே அந்தப் புள்ள மனசுல நீ இருக்கங்கறத உணர முடியும் போது உன்னால ஏன்டா முடியல…”
“நா மட்டும் அவள உணர்ந்து என்ன ஆகிடப் போகுது மாமா… அவ என்னை உணர வேண்டாமா… என் மேல கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லாம என் மூஞ்சுல கூட முழிக்கக் கூடாதுனு கிளம்பிப் போனவகிட்ட என்னனு நா சொல்லிப் புரிய வைக்கறது…” அவனையும் மீறி தெறித்து விழுந்தது கண்ணீர்த் துளிகள்.
“இனியா… சூர்யாவுக்கு என்ன பிரச்சனைனு எனக்குத் தெரியாது… ஆனா ஒன்னு மட்டும் தெரியும்… அவ உன்னப் பாக்கக் கூடாதுனு இங்க இருந்து போகல… எங்க இங்கையே இருந்து, உன்னப் பாத்துட்டே இருந்தா, தன் மனசுல உள்ளத சொல்லிடுவோமோனு தான் கிளம்பி இருக்கா… புரிஞ்சுக்கோ… வாழ்க்கை ரொம்பச் சின்னதுடா… கைக்கெட்டற தூரத்துல ஒரு பொருள் இருக்க வரைக்கும் அதோட அருமை நமக்குத் தெரியாது… கைய விட்டுப் போனதுக்கு அப்பறம் என்ன பண்ணாலும் அது திரும்பக் கிடைக்காது… சூர்யா உன்னவிட்டு ஏன் விலகிப் போறானு தெரியலைனா… தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு… தெரிஞ்சா அதைச் சரி பண்ண முயற்சி பண்ணு… மனசுவிட்டுப் பேசு… சண்ட போடு… ஆனா இப்படித் தள்ளி இருந்தா ரெண்டு பேருக்குமே கஷ்டம் தான்… இது உன்னோட வாழ்க்கை… இதைச் சரி பண்ணிக்க வேண்டியதும் உன்னோட பொறுப்புத் தான்…”
“ஆனா மாமா… நா… எப்படி..” எனத் தயக்கமாகப் பார்த்தவனை, “அத நா பாத்துக்கறேன்… இன்னைக்கு நீ சூர்யாகிட்டப் பேசற… போதுமா…” என அவனின் கன்னம் தட்டிச் சொன்னவன், அவனின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் அவனையும் இழுத்துக் கொண்டு, கீழே சென்றுவிட்டான்.
அவனின் இழுப்புக்கெல்லாம் சென்றாலும் இனியனின் மனமெங்கும் மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அன்று மருத்துவமனையில் வைத்து ‘என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா..?’ எனக் கேட்டானே அது தான் அவன் கடைசியாய் அவளைப் பார்த்தது. அதன் பிறகு அடுத்தடுத்து வந்த பிரச்சனைகளில் அவன் அவளைக் கவனிக்கத் தவறியிருக்க, மிளிர் சென்னை கிளம்பிய அன்றே அவளும் குடும்பத்தோடு எங்கோ கிளம்பிச் சென்று விட்டிருக்கிறாள். பின் மிளிர் வந்து தேடி, இனியன், அக்னி, அவர்களின் நண்பர்கள் என ஆளுக்கு ஒரு பக்கமாய்த் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் ஒரு வழியாகிப் போனார்கள்.
வரவே மாட்டேன் என அடம்பிடித்தவளுக்கு ஆயிரம் சமாதானம் சொல்லி அழைத்து வந்தவள் மிளிர் தான். இதோ கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கும் மேலாகிவிட்டது. இருந்தும் அவள் முன் போய் நிற்கவில்லை. காதலை யாசிக்கவில்லை. அது அவனுக்குப் பிடிக்கவுமில்லை. அதற்காக அவன் அவளைப் பார்க்கவே இல்லையா என்றால் அதுவும் இல்லைத்தான். அவ்வப்போது அவன் அவளைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தாலும் அவளின் முன்னால் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதில்லை.
திரும்பி வந்தவளின் கலங்கிய முகம் கண்ட மிளிர், கண்கள் இடுங்கக் கேள்விக் குறியாய் அவளைப் பார்த்தாள். அவளின் பார்வையில் தடுமாறியவளோ, சட்டென்று தலையைத் தாழ்த்திக் கொண்டு, முக அலங்காலத்திற்குத் தேவையான பொருட்களைத் தனது பையிலிருந்து வேக வேகமாக எடுத்து வைக்கத் தொடங்கி இருந்தாள்.
“இத உன்கிட்டப் பேசவே கூடாதுனு தான் நினைச்சேன்… ஆனா இன்னும் பேசாம இருக்கது தப்போனு தோனுது… இந்த உலகத்துல மாறாதது மறக்க முடியாததுனு எதுவுமே இல்ல சூர்யா… நீ தான் மறக்க வேண்டியத தினம் தினம் ஞாபகப்படுத்திப் பார்த்துகிட்டு இது மாறவே மாறாதுன்னு உனக்குள்ள திரும்பத் திரும்பச் சொல்லி ஆழமாப் பதிய வச்சுட்டே இருக்க… அத மறந்துட்டு சந்தோஷமா இருக்கதும், இல்ல அத இன்னும் இன்னும் மனசுக்குள்ள ஆழமாப் பதிச்சு உன்னோட சேத்து மத்தவங்களையும் கஷ்டப்படுத்தறதோ உன் கையில தான் இருக்கு… என்ன முடிவெடுப்பியோ… ஆனா யோசிச்சு உன் மனசு சொல்லற முடிவா எடு… நான் முகம் கழுவி ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்…” என்றவள் ஒரு முறை அவளை ஆழ்ந்து பார்த்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
இன்னும் தனது பையிலிருந்து பொருட்களை எடுக்கும் சாக்கில் குனிந்திருந்தவளின் கண்கள் கட்டுப்பாட்டை இழந்து வெகு நேரமாகியிருந்தது. கன்னங்களில் உருண்ட கண்ணீர் தரையில் சொட்டு சொட்டாக விழ, அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டாள்.
மிளிரின் வார்த்தைகளெல்லாம் அவளின் காதுக்குள் நுழைந்தது போலவே தெரியவில்லை. அவளின் எண்ண அலைகளை எல்லாம் இனியனின் பாராமுகமே அலைக்கழித்தது. இதோ இப்படி அவனைக் கண்டுவிட்டால், மொத்தமாய்ப் பலவீனப்பட்டுப் போவோம் என்று நினைத்துத் தானே அவனை முற்றிலுமாய்த் தவிர்த்தாள். ஆனால் அவனின் ஒற்றைப் பாராமுகம் இன்னும் அல்லவா அவளைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. நினைக்க நினைக்க அவன் மேல் கூடக் கோபம் வரும் போலிருந்தது. கேட்க வேடிக்கையாய் இல்லை. ஒதுங்கி ஒதுங்கி வந்தவள் இவள். ஆனால் அவனின் ஒற்றை முகத்திருப்பல் கோபத்தைத் தருகிறதாம்.
உறுதியாய் அவனுக்குத் தான் வேண்டாமென நினைத்ததும் இந்த மனம் தான். இப்போது இவன் மட்டும் தான் தனக்கு வேண்டுமென நினைப்பதும் இதே மனம் தான். அதை முற்று முழுதாக ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் தடுமாறிக் கொண்டிருந்தாள் இப்போது.
சுவரில் சாய்ந்தபடி கைகளைக் கட்டிக்கொண்டு அவளின் அத்தனை போராட்டங்களையும் இமை கொட்டாது பார்த்தபடி நின்றிருந்தான் இனியன்.
“எதுக்கு இந்த அழுகை சூர்யா…” சட்டென்று கேட்ட குரலில் பயமோ பதற்றமோ தோன்றாதது ஆச்சரியமே. அதை விட ஆச்சரியம், இன்னதென்று விவரிக்க முடியாத ஆசுவாசம் ஒன்று மனதில் எழுந்தது தான்.
‘இவன் எப்போ இங்க வந்தான்… வந்தது கூடத் தெரியாமலா அழுதுட்டு இருக்கோம்…’ தன்னுள்ளே கேட்டுக் கொண்டவள், வேகமாய்க் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
நான் அழுதாலும் அதை உன்னிடம் சொல்ல அவசியமில்லை என்பதைப் போலத்தான் இருந்தது அவளின் அவசர செயல். சற்று நேரம் ‘அவன் ஏதாவது பேசுவோனோ…’ என அவன் முகத்தையே பாத்துக் காத்துக் கொண்டிருந்தவளுக்கு, அவன் எதுவும் பேசவில்லை என்றதும் பெரும் ஏமாற்றம்.
‘இப்ப எதுக்கு வந்து இப்படி உத்து உத்துப் பாத்துட்டு நிக்கனும்… பேசலனாக் கிளம்பித் தொலைய வேண்டியது தானே…’ என அவள் மெல்லமாய் முணுமுணுக்க, அதெல்லாம் கண்டு கொள்ளாதவன், இன்னும் வசதியாய் சுவரில் சாய்ந்து நின்று, ஒற்றைக் காலைச் சுவரில் பதித்தபடியே, கைகளைக் கட்டிக்கொண்டு தலையைச் சாய்த்து அவளையே அசையாது பார்த்துக் கொண்டிருந்தான்.
இன்னும் சற்று நேரம் காத்திருந்து பார்த்தவள், அவன் பேசவே போவதில்லை என்பதைப் போன்ற தோற்றத்தில் நின்றிருக்கவும் கடுப்பாகி, ‘நல்லா இருக்கீயானு ஒரு வார்த்தை கேட்க வாய் வராது… இப்ப எதுக்கு தேவையில்லாம வெட்டி சீனு போடனும்… இதுல தொரைக்கு என் மேல லவ்வு வேற… ஆனா விட்டுட்டுப் போனாத் தேடி வர மாட்டாரு… திரும்பப் பாக்கவும் மாட்டாரு… பாத்தாலும் பேசவும் மாட்டாரு… இதுல லவ்வு ஒன்னு தான் கேடு… இதுல வண்டி வண்டியா டயலாக் பேசிட்டுப் பெரிய ரோமியோ மாதிரிப் பேசறது… சச்சை… நா ஒரு கூறுகெட்ட சிறுக்கி… இவன் என்னமோ பெரிய தேவதாஸ்னும்… எனக்காகத் தான் காத்திருக்கான்னும் நினைச்சுட்டு… மூலையில உக்காந்து மூக்கச் சிந்திட்டு இருந்தேன்… பாத்தும் கூட நல்லா இருக்கீயானு கேட்காதவனுக்கெல்லாம் காதல் ஒரு கேடு…” மெல்லமாய் ஆரம்பித்துத் தன்பாட்டில் புலம்பியபடியே, அழகு சாதனப் பொருட்களை வெளியே எடுத்து ட்ரெஸிங் டேபிளின் முன்னால் வைத்தவளைப் பின்னிருந்து கட்டி அணைத்திருந்தான் இனியன்.
கண்ணின் இமையோரம் வழிந்து பிசுபிசுத்துப் போயிருந்த கண்ணீரோடு ஒட்டிக் கிடந்த முடிக் கற்றையை எடுத்துக் காதின் மடலின் பின் ஒதுக்கியவன், “இப்ப கல்யாணம் பண்ணிக்கலாமாடி…” எனக் கிசுகிசுவெனக் கேட்க, வேகமாக அவனின் புறம் திரும்பியவள் சரமாரியாக அவனை அடிக்கத் தொடங்கி இருந்தாள்.
“இதக் கேட்க, இத்தனை நாளா உனக்கு… ஒருத்தி வேண்டானு விட்டுட்டுப் போனா… அதோட விட்டது சனியனு உன் வேலையப் பாக்கப் போய்டுவீயா… திரும்பி வந்து பேச மாட்டீயா… அவ்வளவு தானா நான் உனக்கு… சொல்லுடா கேக்கறேன் இல்ல…” இது நாள் வரை உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்தது அழுகையும் ஆத்திரமுமாய் வெளிப்பட, அவளின் கரத்தைப் பிடித்துத் தடுத்தவன், தன் மார்போடு இறுகக் கட்டிக் கொண்டான்.
“சாரிடா… நீ போனதுல கோபம்டா… நீயே திரும்ப வரனுமுனு நினைச்சேன்… தப்புத் தான்… பெரிய தப்புத்தான்… ரியலி சாரிடா… நீயே வரலைனாலும் நா வந்திருக்கனும்… ரியலி சாரிடா…” என அவளை முழுதாய் உணர்ந்தவனாய்ச் சொன்னவன், ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளின் முகமெங்கும் முத்தங்கள் பதிக்க, இறுதியாய் இதழ்களில் தஞ்சமடைய, கொஞ்சமும் தடுமாற்றமோ, சலனமோ இல்லாமல் அவனோடு ஒன்றிப் போனாள் அவள்.
திறந்திருந்த கதவை இழுத்துச் சாற்றிய அக்னி, ‘கொடுமடா… இதையெல்லாம் கதவச் சாத்திட்டுப் பண்ண மாட்டீங்களா…’ எனத் தலையில் அடித்துக் கொண்டவன், அந்தப் பக்கமாய்ச் சென்ற தனாவைக் கத்தி அழைத்தான்.
“இப்ப என்னத்துக்கு என்னைக் கூப்பிடற…” தனா கடுப்பாய்க் கேட்க,
“பெரிசா ஒன்னுமில்ல… கொஞ்ச நேரம் இந்த இடத்துலையே நின்னு யாரும் ரூம் உள்ள போகாமப் பாத்துக்கோங்க சித்தப்பா…” அவன் அத்தனை பணிவாய் சொல்லவும்,
“என்னைப் பாத்தா எப்படித் தெரியுது… உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் காவல்காரன்னா… பேசாமப் போய்டு… அப்பறம் மொவன்னு கூடப் பாக்க மாட்டேன்…”
“மிளிர் அந்த ரூம்ல இருக்கா…” எனச் சற்றே தள்ளி இருக்கும் இன்னொரு அறையைக் காட்டியவன், “நீங்க ஒன்னும் அதுக்குக் காவல் இருக்க வேண்டாம்… அத நானே பாத்துப்பேன்… நீங்க இங்கையே இருங்க போதும்…” என்றவன் கிளம்பிவிட,
“அப்போ இதுக்குள்ள யாரு இருக்கா…” என்றார் தனா சந்தேகமாய்.
“வேற யாரு… இனியனும் சூர்யாவும் தான்…” என்றவன் உள்ளே சென்று கதவையும் சாற்றிவிட்டான்.
“டேய்… டேய்… என்ன வேலடா பாத்துட்டுப் போற…” என அவர் கத்தியதெல்லாம் அவன் காதில் எங்கே விழப் போகிறது? பாவம் வெந்து நொந்து போனதென்னவோ அவர் மட்டும் தான்.
“மித்து… என்னாச்சு…” எனக் கேட்டவளுக்கு, ‘சக்ஸஸ்…’ என்பதைப் போல இரு கட்டை விரல்களையும் உயர்த்திக் காட்டியவன், அவளைக் கட்டிக் கொள்ள முயல, “கட்டிக்கிட்டிப் புடிச்ச… இன்னையோட உன் கத முடிஞ்சுது பாத்துக்கோ… கிட்டத்தட்ட மூனு மணி நேரம் கஷ்டப்பட்டு ரெடி ஆகியிருக்கேன்… கலைஞ்சுது நீ முடிஞ்சுடுவ…” என விரல் நீட்டி அவனை எச்சரித்தவள், விட்டிருந்த தனது முக அலங்காரத்தைத் தொடர, இப்போது நொந்து வெந்து போவது அக்னியின் முறையாயிற்று.
அடுத்த கொஞ்ச நேரத்தில் விழா தொடங்கிவிட, முழு அலங்காரத்தில் மாம்பழ நிறப் பட்டுப் புடைவையில் தேவதையாய் மின்னியவளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான் அக்னி. அது அவர்களின் கல்யாணப் புடைவையாகவும் அமைந்துவிட, அதனுடனான நினைவுகள் அவனின் மனத்திரையை நிறைத்திருந்தது.
புன்னகை முகமாய் அமர்ந்திருந்தவளின் முகத்தைச் சுற்றி நெட்டி முறித்த கற்பகம் பாட்டி, முதல் ஆளாய் வளையல் பூட்டத் துளசியை அழைக்க, அவர் சுற்றும் முற்றும் பார்த்தார்.
“இந்தா உன்னத் தானே கூப்படறேன்… அங்க இங்கனு பாத்துட்டு நிக்கற… வாத்தா…” என அவர் அருகில் சென்று கையைப் பிடித்து அழைத்து வந்துவிட, ஒரு சேர மிளிரின் கண்களும், அவரின் கண்களும் கலங்கிப் போனது. சந்தனம் பூசி, குங்குமமிட்டவர், அரிசியைத் தூவி வாழ்த்தி, முதலில் வேப்பங்காப்பு பூட்டி, அடுத்தததாய் அவர் வாங்கி வந்திருந்த தங்கவளையலையும் கண்ணாடி வளையலையும் பூட்டி வாழ்த்தினார். அவருக்கு அடுத்தததாய் தெய்வானை, வசுமதி, என மற்றப் பெண்களும் வளையல் பூட்டி வாழ்த்த, சந்தோஷத்தில் மிளிரின் முகம் பூரித்திருந்தது.
அத்தனை சடங்குகளும் நிறைவடைய, அதற்காகவே காத்திருந்தததைப் போல அக்னி கிளம்பி வேலைக்குச் சென்றுவிட்டான். இதில் மிளிருக்குக் கொஞ்சமே கொஞ்சம் வருத்தம் தான் என்றாலும், எப்போதும் அவன் இப்படித் தான் என்பதால் பெரிதாய்க் கண்டுக்கொள்ள முடியவில்லை. எப்படியும் வேலை முடித்துத் தன் வீட்டிற்குத் தான் வரப் போகிறான் இதில் தனியாய் வருத்தப்பட வேண்டியது என்ன இருக்கிறது.
நல்ல நேரத்தில் மிளிரை வீட்டிற்கு அழைத்து வந்துவிட, அக்னிக்கு போன் செய்து தகவலை மட்டும் சொன்னவள் வைத்துவிட்டாள்.
– தேடல் தொடரும்…

