
தேடல் 35:
சுற்றிலும் எங்கும் கருவேல மரங்கள் அடர்ந்து படர்ந்திருக்க அந்த மரங்களின் ஊடே மறைந்த வண்ணம் நிறுத்தப்பட்டிருந்தது வாகனம் ஒன்று. அதன் மீது சாய்ந்த வண்ணம் இலங்கின்றி இருளையே வெறிந்திருந்தன அவளின் விழிகள். வானத்தில் மையத்தில் முகாமிட்டிருந்த முழுநிலவு நள்ளிரவாகி விட்டதை பறைசாற்ற, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மினிக்கிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் அவள் கவனத்தை தன் பக்கம் திருப்ப முயன்றுக் கொண்டிருந்தன. குளுமை சுமந்த தென்றல் காற்று அவளின் உடலை மட்டும் தீண்டி உள்ளம் தொட முடியாமல் வெறுமையாய் திரும்பிக் கொண்டிருந்தது. இயர்போன் வழியாக காதுக்குள் வழிந்த இசையில் கூட கரைய முடியாமல் மனம் நிலைக் கொள்ளமல் தவித்துக் கொண்டிருந்தது
“நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்…
நீங்காத நெஞ்சில் அலை ஓய்ந்தால் போதும்…”
ஒரு முறை கேட்டாலே இதயத்தில் இதம் பரப்பி செல்லும் பாடல், இன்று சில நூறு முறைகள் கேட்ட பின்னும் இதயத்தில் இதம் சேர்ப்பதாய் இல்லை. இன்னதென்று வரையறுக்க இயலாத நெருடல் ஒன்று மனதை அறுத்துக் கொண்டே இருக்கிறது. நிச்சயம் அவள் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கும் எண்ணமில்லை தான். ஆனாலும் இன்னதென்று விவரிக்க இயலாத பெரும் சோகம் ஒன்று மனதை கவ்விப் பிடிக்கிறது. அவளின் உத்தரவின்றியே இமையோரம் சில துளி கண்ணீர் உருண்டோடுகிறது.
மூடிக் கிடக்கும் இமைக்குள் உருளும் கருவிழிகள் இரண்டிலும் மரகத விழிகளின் நிழல் பிம்பமே. இதுவரை மொத்தமே மொத்தமாய் இரண்டு முறை அந்த விழிகளை அவள் கண்டிருக்கிறாள். ஆனால் அந்த இரண்டுக்கும் எத்தனை எத்தனை வேற்றுமைகள். கொடும் பாம்பின் நஞ்சையும் பாலுட்டும் அன்னையின் வாஞ்சையும் ஒரே கண்களில் சுமக்க முடியுமா? ஆனால் அவனால் முடிந்ததே! மகியை கொல்லும் போது அவனின் கண்களில் தெரித்த கொலைவெறிக்கும், இவள் வாகனத்தில் இடித்ததும் இவளுக்கு ஏதேனும் அடிப்பட்டு விட்டதா என நின்று ஆராய்ந்த பாங்கிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். நினைக்க நினைக்க பெரும் குழப்பம். முதல் முறை மருத்துவ மனையில் மகியை கொல்லும் போது அவன் கண்களில் தெரித்த கொலைவெறியும், இரண்டாம் முறை சாலையில் செல்லும் யாரோ ஒருத்திக்கு காயம் ஏற்பட்டிருக்குமோ என அவன் அவசரமாய் ஆராய்ந்த விதமும், காயம் ஏதூமில்லை என்றதும் அந்த கண்களில் நிறைந்த நிம்மதியும், இறுதியாய் இவள் தலைகவசத்தை கழற்றிய நொடி அவன் கண்கள் மலர்ந்த விதமும், அதில் தெரித்த அன்பும் மீண்டும் மீண்டும் நிழல் போல் தோன்றி அவளை இம்சைக்கு உள்ளாக்கின. நிச்சயம் அவன் அவளுக்கு யாரோ தானா?
நொடிக்கு நொடி மாறும் அவளின் முகப் பாவத்தையே உற்று நோக்கியபடி கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தான் அக்னி. எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் கேட்க மாட்டேன் என அடம் பிடிப்பவளை, தடுக்கும் வழி தெரியாது தவித்து நின்றான் அவன்.
“மிளிர்… இன்னும் நேரம் இருக்குமா… இதை இப்படியே விட்டுடலாமே… ப்ளீஸ்… நிச்சயமா நம்மகிட்ட உள்ள ஆதாரமே போதும் அவன அரஸ்ட் பண்ண… அது மட்டுமில்ல சீலனும் இப்ப அப்ரூவர் ஆகிட்டான்… நம்ம பக்கம் ஸ்ட்ராங் எவிடன்ஸ் இருக்கு மிளிர்… கண்டிப்பா தப்பிச்சு போக முடியாது…” மிதமிஞ்சிய இறைஞ்சலாய் கேட்ட குரலில் கண் மலர்த்தி அவனை கூர்ந்து நோக்கினாள் மிளிர்.
கண்ட நாள் முதலாய் இப்படி யாரிடமும் அவன் இறைஞ்சியதாய் நினைவில்லை. “ப்ளீஸ் மித்து… உங்க இந்த குரல் என்ன பலகீன படுத்துது… வேண்டாமே…” அவனை விட அதிகமாய் அவள் குரல் இறைஞ்சியது.
அவளின் இந்த வேண்டுதலில் சட்டென்று அவனின் இதழ்கள் மௌனம் பூசிக் கொள்ள, அதுவும் கூட அவளுக்கு துன்பத்தையே தந்தது. “சொன்னா புரிஞ்சுக்கோங்க மித்து… இனிமே என்னால யாருக்கும் பாதிப்பு வர கூடாதுனு நினைக்கறேன்… எல்லாத்துக்கும் மேல இது என் மகி என்ன நம்பி ஒப்படைச்சுட்டு போன வேலை… இத நான் தான் செய்யனும்… ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க…” அவளின் குரலில் மிதமிஞ்சிய வேண்டுதல். உறுதியாக அவன் தடுத்தானென்றால் அவனை மீறிக் கொண்டு போக முடியுமென அவளுக்கு தோன்றவில்லை.
“எனக்கு பயமா இருக்கு மிளிர்… உனக்கு ஏதாவது ஆகிட்டா…” குரலோடு சேர்ந்து கண்களும் கலங்கி இருந்தது.
“கண்டிப்பா எனக்கு ஒன்னும் ஆகாது… நிச்சயமா மகி என் கூடவே இருப்பா… எனக்கு எதுவும் ஆகாம பாத்துப்பா… அத நான் நம்புறேன்… ப்ளீஸ், நீங்களும் நம்புங்களேன்…” என்றதற்கு அவனிடம் எந்த பதிலும் இல்லை. மாறாய் அவனின் இறுகிய அணைப்புக்குள் அவளை நிறுத்தி இருந்தான். சொட்டு சொட்டாய் அவன் கண்ணீர் அவளின் உச்சந்தலையில் இறங்க, நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவளின் நெற்றியில் பட்டு தெரித்தது.
“ப்ளீஸ் மித்து…” வேறு என்ன சொல்வதென்று அவளுக்கு தெரியவில்லை. என்ன சொல்லி அவனை சாமாதானம் செய்வதென்றும் புரியவில்லை.
அவனுக்கான சமாதானத்தை அவனே தேடிக் கொள்ளலாம் என முடிவெடுத்துவிட்டான் போல. “ப்ளீஸ் மிளிர்…” என்ற வார்த்தைகளோடு அவளின் இதழ்களை தஞ்சமடைந்திருந்தன அவன் இதழ்கள்.
நொடிக்கு நொடிக்கு இறுகிய அணைப்பும் இதழ்களில் கூடிய வன்மையும் அவனின் உள்ளத் தவிப்பை பெண்ணிற்குள் கடத்த, அவளும் அதே நிலையில் தான் இருக்கிறாள் என்பதை அவனுடம் அவள் ஒன்றிய விதமே அவனுக்கு பறைசாற்றியது. இதுவரை எங்கெங்கோ அலைப்புற்ற இதயங்கள் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாய் இளைபாற தொடங்கி இருந்தது.
நொடிகள் நிமிடங்களாய் கரைந்தாலும் பிரியும் எண்ணமில்லை இருக்கும். அத நேரம் அவன் சாய்ந்திருந்த வாகனத்தின் கதவை யாரோ திறக்க முயல சட்டென்று சுயம் உணர்ந்தவனாய் அவளிலிருந்து விலகி நின்றுக் கொண்டான்.
“எல்லாம் ரெடியா இருக்கு மிளிர்… நீ ரெடி தானே… திஸ் இஸ் த கரெக்ட் டைம்…” ஒன்றபடியே அந்த வாகனத்திற்குள் இருந்து தலையை மட்டும் எட்டிப் பார்த்தாள் தேன்மொழி.
மிளிரிடம் மறுமொழி எதுவும் இல்லை என்றதும், உற்று ஒரு நொடி அவளைப் பார்த்தவள், “மிளிர் ஆர் யூ ஆல்ரைட்… இப்பவும் ஒன்னும் ஆகிடல… இத நான் பாத்துக்கறேன்… என் ப்ரப்ஷன்ல இதெல்லாம் எனக்கு பழக்கப்பட்டது தான்… அண்ட் மகிக்காக செய்யற கடமை எனக்கும் இருக்கும்…” என்றாள் தேன்மொழி, மிளிர் இதை செய்ய தயங்குகிறாளோ என்று.
“இல்லக்கா… நீங்க இங்க தான் இருக்கனும்… உங்கள தவிர வேற யாரையும் நம்பி என்னால விட்டுட்டு போக முடியாது…” என்றவளை இடைவெட்டியது ஒரு குரல்.
“ஹாலோ… நம்பிக்கை இல்லைன அர்த்த ராத்திரில என்ன ஏங்க இங்க கூப்பிட்டு உக்கார வச்சு இருக்கீங்க… நானும் பாக்கறேன்… எப்ப பாரு மூனு பேரும் என்ன விட்டுட்டு தனியா போய் கூடி கூடி ரகசியம் பேசறீங்க… இப்ப என்னடானா நம்பிக்க இல்லங்கறீங்க… இல்ல தெரியாம தான் கேக்கறேன்… அப்படி நம்பிக்கை இல்லங்கற அளவுக்கு என்னங்க பண்ணிட்டேன் நானு…” என்றான் மதன் எனப்பட்ட அவன் புருவங்களை ஏற்றி இறக்கி.
மதனும் தேன்மொழியோடு ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவன் தான். தினேஷின் நெருங்கிய நண்பனும் கூட. இன்றளவும் அவனின் இறப்பை தற்கொலை என ஏற்க முடியாமல் தவிப்பனும் கூட! எல்லாவற்றிக்கும் மேல் மென்பொருள் தொழில் நுட்டபங்கள் அவன் விரல் நுனியில். ப்ரப்ஷ்னல் ஹேக்கர் என்ற ஒன்றை தவிர அனைத்தையும் அவனின் ஆர்வத்தால் கற்று வைத்திருந்தான். அதானாலேயே மிளிர் தேன்மொழிடம் உதவி என்று கேட்ட போது அவள் தங்கள் திட்டத்துடன் மதனையும் இணைத்துக் கொண்டது.
“டேய் மதனு… நீ வேற ஏன்டா… போய் வேலைய பாரு… பிரச்சனையோட சீரியஸ்நஸ் புரியாம…” தலையில் தட்டி அவனை உள்ளுக்குள் அனுப்ப முயன்றாலும் வலுகட்டாயமாக தலையை வெளியில் நீட்டி மிளிரை முறைத்துக் கொண்டிருத்தான் அவன்.
“என்ன சீரியஸ்நஸ் புரியல எனக்கு… இப்படியே பேசிட்டு இரு அக்கானு கூட பாக்காம உருட்டு வெளிய தள்ளிடறேன்…”
“ப்ளீஸ் மதன் கொஞ்சம் பொறுமையா பேசுங்க… யாராவது வரப் போறாங்க…”
“ஆமான்… ஆமான்… அப்படியே வந்துட்டாலும்… நானும் நேத்துல இருந்து பாக்கறேன்… ஒரு நெருநாய தவிர வேற யாரும் வர மாட்டறாங்க இந்த பக்கம்…” அவன் சலிப்பாய் சொல்ல, அவன் வாயை அடைக்கவே முடியாத என்ற ரீதியில் பார்த்திருந்தனர் மற்ற இருவரும்.
“சொறி நாய தேடிட்டு தெரு நாய் வராம ஸ்மிதாசென்னா வருவா… பேசாம மூடிட்டு போய் வேலைய பாக்கறீயா…” என்ற தேன்மொழிக்கு, “சாரிக்கா… அது உன்ன தேடி வந்துச்சுனு தெரியாம சொல்லிட்டேன்…” அலட்டிக் கொள்ளாமல் அவன் அவளுக்கு பல்பு கொடுத்து உள்ளே செல்ல, அதில் அவள் முகமோ பிரகாசமாய் எரிய, பார்த்திருந்த மற்ற இருவருக்குமோ இதழ் கடையோரம் மென்னகை ஒன்று அரும்பி இருந்தது.
இந்த இரண்டு நாட்களாய் மூவரின் தீவிர மனநிலையை தனது பேச்சால் சற்றே இலகாக்கிக் கொண்டிருந்தான் அவன். ஏனோ அவனை காணும் போதெல்லாம் அறியாமல் இனியனின் நினைவு எழுகிறது மங்கை அவளுக்கு. எத்தனை பெரும் துன்பத்தில் இருந்து இப்படி பேசிப் பேசியே அவளை வெளிக் கொணர்ந்திருக்கிறான் அவன். அன்னை தந்தையிடம் கொண்ட பற்றுதலை விட அவனிடம் அதிக பற்றுக் கொண்டு விட்டது அவளின் மனம். அத்தனை உறவுகளையும் ஒற்றை வார்த்தையில் அடக்க வேண்டுமென்றால் அவளை பொருத்த வரை அந்த வார்த்தை இனியன்.
இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிறது அவனிடம் பேசி. பலமாய் அவன் நினைவும் வீட்டு நினைவும் எழுந்து அவளைப் பாடாய் படுத்துகிறது. அவனுக்கு ஒன்று என்றதும் தானே, இனி இந்த பிரச்சனையை வளர விடக்கூடாது என தன் உயிரையும் பொருட்படுத்தாது இங்கே வந்து நிற்கிறாள்.
இதோ இந்த நிமிடம் தன்னை பார்க்காமல் எப்படி தவித்துக் கொண்டிருப்பானோ! மீண்டும் ஒரு முறை பார்ப்போமா என்ற எண்ணம் ஏக்கமாய் மாறி பெரும் விருச்சமாய் உள்ளத்தில் வளர்ந்திருந்தது.
“மிளிர்… டைம் ஆகிட்டு… இந்த டைம் மிஸ் பண்ணிட்டா திரும்ப இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கறது கஷ்டம்…” தேன்மொழியின் குரல் நினைவுகளில் இருந்து மீட்டு மிளிரை மீண்டும் சுயம் திரும்ப செய்திருந்தது.
“மிளிர் நான் சொல்லனுமுனு அவசியம் இல்ல… ரொம்ப ரொம்ப கவனமா இருக்கனும்… மாதவன் உனக்காக வெயிட் பண்ணுவாரு… உனக்கு தேவையான எல்லாம் பண்ணி தருவாரு… சரிதானே… திரும்ப சொல்லறேனு நினைக்காத மிளிர்… கவனமா இரு… உன்னோட சின்ன தப்புக்கூட பலரோட வாழ்க்கைய பாதிக்கலாம்… புரியுது தானே…” என்றபடியே ஆய்வகங்களில் பயன்படுத்தும் வெள்ளை ஆடையையும் ஒரு அடையாள அட்டையையும் அவளிடம் நீட்டினாள் தேன்மொழி.
“புரியுதுக்கா… நான் கவனமாவே இருப்பேன்… பயப்படாதீங்க… நல்லதே நடக்குமுனு நம்புவோம்…” என்றவள் அந்த கோர்ட்டை அணிந்து அடையாள அட்டையையும் மாட்டிக் கொண்டாள்.
“இன்னும் ஐஞ்சு நிமிஷம் இருக்கு… இப்ப நீ போனீனா கரெக்டா இருக்கும்… பாத்து யார் கண்ணுலையும் பட்டுடாம…” என்றான் அக்னி.
சரியென்பதாய் தலையசைத்தவள், “நீங்களும் கிளம்புங்க… இப்ப போனாதான் சரியா இருக்கும்…” என்றவள் ஆழ்ந்து ஒரு நிமிடம் அவனைப் பார்த்துவிட்டு கிளம்பிவிட, செல்லும் அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் அக்னி.
மணி மூன்றாக இன்னும் ஐந்து நிமிடமிருந்தது. மெல்ல சத்தம் எழுப்பாமல் நடந்து வந்தவள் நின்ற இடம், அந்த பெரிய ஆய்வு கூடத்தின் பின்புறம். சந்தேகத்துக்கு இடமேயின்றி அது தேவ்பிரசாத்தின் ஆய்வு கூடமே தான்.
இதோ சரியாக மூன்று மணிக்கு ஒரு அங்கிருக்கும் செக்யூரிட்டிகள் சீப்ட் மாற்றம் செய்வார்கள். அந்த இடைவெளியை பயன்படுத்தி அவள் அந்த ஆய்வகத்தின் உள்ளே நுழைந்துவிட வேண்டும். அதன் பின் யார் கண்ணிலும் பாடாமல் அங்கிருக்கும் ஆதாரங்களை திரட்ட வேண்டும். தானே வவிய சென்று சிங்கத்தின் குகைக்குள் நுழைவதைப் போன்றது தான். ஆபத்து அதிகம் தான். அதே சமயம் இதில் பல லாபங்களும் இருக்கிறது. குறிப்பாக இதற்கு இன்னுமொரு முக்கிய காரணமும் இருக்கிறதே!
தேவ் பிரசாத், இந்த வருடத்திற்கு மருத்துவத்திறக்கான நோபல் பரிசை பெற போகும் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவன்… அடுத்த மாதம் நடைபெறும் தனது பாராட்டு விழாவில் எஸ்ட்ஸ் முற்றிலுமாக குணப்படுத்த கூடிய மருந்தை வெளியிட போகிறான். அதே சமயம் இந்த அரசே முன்வந்து புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்தை கண்பிடிப்பதற்கான ஒப்பந்தத்தை தரப் போகிறார்கள்.
எஸ்ட்ஸ்க்கான மருந்தை கண்டிபிடிப்பதற்கே அவன் ஆயிரமாயிரம் அப்பாவி உயிர்களை பலியிட்டுருக்க, இன்னும் இது தொடர வேண்டுமா என்ன? அதுவுமே இந்த முடிவை அவள் துரிதமாக எடுக்க ஒரு காரணம்.
மகி வந்து சென்றபின் அந்த ஆய்வகத்தின் பாதுகாப்பை தேவ் அதிகபடுத்தி விட்டான் தான். ஆனாலும் தன்னை பேட்டி எடுக்க வந்தவள் தான் அத்தனை ஆதாரங்களையும் சேகரித்து விட்டாள் என்று தான் எண்ணியிருந்தான் அவன். நிச்சயமாக அவள் அங்கு கழிவறையின் சாளரத்தின் வழியாக வந்திருக்க கூடும் என்று அவன் எண்ணம் செல்லவில்லை. இன்னும் கூட அந்த அமைப்பு அப்படியே தான் இருந்தது. அதை மாதவன் மூலமே அறிந்தனர். அதுவே மிளிருக்கும் கூட இப்போது மிக பெரிய சாதகமாக அமைந்துவிட்டது.
அந்த ஆய்வகத்தை நெருங்கிவிட்டாள். ஒரு கருவேல மரத்தின் பின்னால், முட்கள் உடலில் கிழிப்பதையும் பொருட்படுத்தாது நின்றிருந்தாள் அவள். பத்தடிக்கு ஒருவராய் கைகளில் ஆயுதமேந்தி செக்யூரிட்டி கார்டுகள் நின்றிக்க, சரியாக மூன்று மணிக்கு அலராம் அடித்து. இங்கிருந்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் களைய, உள்ளிருந்து சில காவலர்கள் வருவது தெரிந்தது. இதுவே சரியாக சமயம்.
சுற்றிலும் இருந்த இரும்பு முள் வேலியில் அவசர அவசரமாக கை வைத்து ஏறி உள்ளே குதித்தாள் அவள். அவள் அணிந்திருந்த பிரத்தியேக காலணி (shoe) அந்த முள் வேலியிலிருந்து அவளை காத்தாலும் கையில் அணிந்திருந்த ரப்பர் உறை காக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒன்றிரண்டு இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தாலும் அதை பொருட்படுத்தாது வேகமாக உள்ளே வந்துவிட்டாள்.
அடுத்த நொடி அந்த கழிப்பறை சாளரத்தின் வழியே தான் நின்றிருந்தாள் அவள். வேகவேகமாக அதன் கண்ணாடிகளை அகற்றியவள் உள்ளே குதிக்க, பதினைந்து அடிக்கும் அதிகமான உயரம் தான். அங்கிருக்கும் அத்தனை கழிவறைகளுக்கும் அது ஒன்றே பொதுவான சாளரம் என்பதால் சற்றே பெரிதாக தான் இருந்தது. (மகி வந்த அதே வழி தான்.)
வேகமாக ஒரு கழிவறைக்குள் சென்று ஒழிந்துக் கொண்டாள் அவள். இது அத்தனையும் ஒரு சில நொடிகளிலேயே நடந்து முடிந்திருந்தது. இதய துடிப்பு இன்னும் சமன்படுவதாய் இல்லை. ஆறாய் பெருகிய வியர்வை உடலெங்கும் நனைத்திட, கைகால்கள் எல்லாம் மெல்ல நடுங்க தொடங்கி இருந்தது. தான் உள்ளே பாதுகாப்பாக உள்ளே வந்துவிட்டதாக தேனிற்கும் அக்னிக்கும் தகவல் அனுப்பியவள், அதே கழிவறைக்குள் தனக்கான தகவல் வரும் வரை காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை.
– தேடல் தொடரும்…

