Loading

தேடல் 34:

 

உயிர் குடிக்கும் கொடூம் தனிமை, அவப்போது அச்சமூட்டும் சுவர்கோழிகளின் சத்தம், தன்னை சுற்றிலும் சூழ்ந்திருக்கும் காரீருள். மூளையை மழுங்கடிக்கடிக்கும் கொடும் பசி, உடலெங்கும் ஊசி துளைக்கும் வலி, உறங்க மறந்(றுத்)த விழிகள். இதை காட்டிலும் நரகம் கொடியதா என்றால் நிச்சயம் அவனின் பதில் இல்லை என்பதாய் தான் இருந்திருக்கும். இந்த நிலையில் அவனை நிறுத்தியது விதி என்று சொன்னால், அதைக் கேட்டு விதியும் கூட எள்ளி நகையாட கூடும். பசித்த வயிறும் தனிமையில் துடிக்கும் மனமும் தான் செய்த பாவங்களை எல்லாம் பட்டியலிட்டு பயமுறுத்துமாம்! அப்படி தான் அவனின் மனமும் அவனை கொஞ்ச கொஞ்சமாய் கூறுப் போட்டுக் கொன்றுக் கொண்டிருந்தது. இன்னமும் இந்த உடல் உயிர் தாங்கி நிற்பது வீண்ணென்று புரிந்த போதும் அதை துறக்கும் வழி தான் தெரியவில்லை அவனுக்கு.

 

இதை எல்லாம் யோசித்த வண்ணம் இறுக மூடிக் கிடந்த விழிகள் இரண்டிலும் கரும்பாவைகள் தீடிரென அலை மோதுகின்றன. அது சட்டென்று அந்த அறையெங்கும் பரவிய வெளிச்சத்தின் உபயமாய் இருக்கலாம். எப்போதும் இருளை மட்டுமே பார்த்து பழகிவிட்ட அவனின் விழிகளுக்கு வெளிச்சம் கூட அந்நியமாய் தான் தெரிகிறது. ஒரு வேளை மூடி கிடக்கும் இமைகளுக்குள்ளே கூட காட்சிகள் விரியகூடும். ஆனால் திறவ மறுக்கும் இந்த இமைகளை திறந்தால் ஒளி வெள்ளம் கூட காரீருளாய் தான் காட்சி தருகிறது.

 

அவனால் கண்களை தான் இறுக மூடிக் கொள்ள முடியும், ஆனால் காதுகளை? அவனின் அனுமதியின்றி சதா சர்வ காலமும் கேட்பாரின்றி திறந்தே கிடந்த செவிப்பறைகளை வந்து மோதுகிறது அழுந்த பதிந்த காலடி சத்தம். உன்னிபாய் அதை கேட்டு எத்தனை நபர்களென்று ஊகிக்க முயல்கிறான் அவன். ஆனால் மரத்து மரணித்துப் போன மூளையோ அவனோடு ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறது. காலடி ஓசை நெருங்க நெருங்க பயத்தில் இதயம் உறைந்துப் போகிறது. இப்போது ஓரளவிற்கு நபர்களின் எண்ணிக்கையை கணிக்க முடிகிறது. நான்கோ ஐந்தோ இருக்காலம். வழக்கத்திற்கு மாறாய் அதிகமாய் இருக்கும் எண்ணிக்கையை எண்ணி யாராய் இருக்குமென்று மனமும் சிறு சஞ்சலம் கொள்கிறது.

 

அந்த காலடி சத்தம் நெருங்க நெருங்க உள்ளுக்குள் சிறு எரிமலை ஒன்று வெடித்து சிதறுகிறது. சிவந்து வீங்கி கிடந்த முகமோ அனிச்சையாய் சுருங்கி கிடந்த உடலோடு ஒன்ற முயல்கிறது. காதுக்கு மிக அருகில் இரண்டு முறை சொடுக்கிடும் சத்தம். அந்த சத்தம் எழுப்பியவன் யாரென்று தெரிந்தாலும் சற்றும் நிமிரிந்துப் பார்க்க முற்படவில்லை அவன்.

 

அதற்கு அடுத்த நொடி அவனின் மிக அருகாமையில் நாற்காலி ஒன்று இழுத்துப் போடப்படும் சத்தம். தனது பூட்ஸ் கால்களை அழுந்த பதித்தபடி நாற்காலியில் அந்த நபர் அமர்வதால் ஏற்படும் சத்ததில் மெல்லிய நடுக்கம் ஒன்று அவனின் ஒவ்வொரு செல்லிலும் பரவுகிறது. இன்னும் தன் உடலை குறுக்கியபடி அதனுள் தனது முகத்தை புதைக்க முயல்கிறான் அவன். பழாய் போன மயக்கம் கூட இந்த நேரம் அவனை நெருங்க மறுக்கிறது. மயங்கினாலும் பயனொன்றும் இருக்க போவதில்லை என்பதும் அவனறிந்த உண்மையே.

 

நாற்காலி அமர்ந்திருந்தவனோ இடது தொடையில் கரம் பதித்து அதில் தன் முகம் தாங்கி, நொடிக்கு நொடி பார்வையில் கூர்மை ஏற்றி, இமைக்காது காலுக்கடியில் கிடப்பவனையே பார்த்திருக்கிறான். அவன் வலது காலின் உந்து சக்தியால் முன்னும் பின்னும் அழுத்தமாய் பதிந்து மீளும் நாற்காலியின் கீரிச்சிடும் ஒலி ஒவ்வொரு முறையும் கீழே கிடப்பவனின் உயிர் பயத்தை தூண்டி உச்சம் தொட வைக்கிறது.

 

“எவ்வளவு இறுக்கமா கண்ண மூடிக்கிட்டாலும் இருக்க இடமும் மாறிடது, நடக்கற எதுவும் இல்லனும் ஆகிடது…” என்ன தான் இருக்கிறது அந்த குரல். அத்தனை அழுத்தமாய் அதித வெறுப்புடன் வெளிப்பட்ட வார்த்தைகளில் சர்வம் நடுங்கிப் போகிறது கீழே கிடந்தவனுக்கு.

 

“பச்… சொல்றேன் இல்ல… கண்ண தொறக்க சாருக்கு தனியா ஒரு ஆள வேலைக்கு வைக்கனுமோ..?” சலிப்பும் கேலியும் சரிபங்காய் நாற்காலியில் அமர்ந்திருந்தவனின் குரலில்.

 

இதுவரை உடலை குறுக்கி சுருண்டுப் படுத்திருந்தவன் இறுக அவன் கால்களைப் பற்றிக் கொண்டான். “ப்ளீஸ் சார்… நான் பண்ணது எல்லாம் தப்புதான்… ஆனா சத்தியமா அப்படி நடக்குமுனு நினைச்சுப் பண்ணல சார்… என்ன மன்னிச்சு விட்டுடுங்க சார்… வீட்டுல என்ன காணுமுனு தேடிட்டு இருப்பாங்க சார்… என் பொண்ணு நான் இல்லாம சாப்பிடவே மாட்டா சார்… ப்ளீஸ் சார் ஒரே ஒரு முற என் பொண்ண மட்டுமாவது பாக்க விடுங்க சார்… ப்ளீஸ்…” துளி துளியாய் தனது பூட்ஸ் காலில் விழுந்த அவனின் கண்ணீர் துளிகளையே ரசித்துப் பார்த்திருந்தான் மற்றவன்.

 

“ஓஓஓ… உனக்கு உன் பொண்ண பாக்கனுமா..? தாராளமா பாக்கலாமே… நான் சொல்லற ஒரே ஒரு விசயத்த மட்டும் செஞ்சுட்டன, உன்ன ஒன்னுமே பண்ணாம இப்பவே இப்படியே விட்டுடுறேன்… என்ன செய்யறீயா..?”

 

“கண்டிப்பா சார்… நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன்… எனக்கு என் பொண்ண பாத்தா மட்டும் போதும்… ப்ளீஸ் சார்…” என்றவனின் விழிப்பாவைகள் இன்னும் இறுக மூடி தான் கிடந்தது.

 

“பெருசா எல்லாம் ஒன்னும் செய்ய வேண்டாம்… மகியோட அப்பா அம்மாவுக்கு அவங்க பொண்ண திரும்ப குடுத்துட்டு நீ போய் உன் பொண்ண பாரு… சிம்பிள்…” என ஏளன புன்னகையுடன் விரக்தியாய் ஒலித்தது அவளின் குரல்.

 

“மிளிர்…” அதிர்ந்து ஒலித்த அவனின் குரலில் அவளதன் கோபம் பல நூறு மடங்காய் பெருக,

 

“முடியாதுல… செத்துப் போன என்னோட மகிய உன்னால திரும்ப கொண்டு வர முடியாதுல… அப்போ உன்னாலையும் இந்த ஜென்மத்துக்கும் உன் பொண்ண பாக்க முடியாது… உன்னையே நம்புன பொண்ணுக்கு எப்படிடா உன்னால துரோகம் செய்ய முடிஞ்சுது… ஒன்றர வயசு குழந்தையையே உன்னால பாக்காம பேசாம பிரிஞ்சு இருக்க முடியாலையே… இருபத்து நாலு வயசு வரைக்கும் பாராட்டி சீராட்டு வளத்து எமனுக்கு தூக்கி குடுத்த பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும்… இல்ல நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அவ கைய புடிச்சே நடந்து பழகிட்ட எனக்கு எப்படி இருக்கு… சொல்லுடா சொல்லு… எங்களால எப்படி அவ இல்லாம இருக்க முடியும்..? நீ என்ன பண்ணுவீயோ ஏது பண்ணுவீயோ எனக்கு தெரியாது… எனக்கு என் மகி வேணும்… இப்ப வேணும்… குடுடா… என் மகிய குடு… என் மகிய குடு… பாவி… எங்க எல்லாரையும் நம்ப வைச்சு இப்படி கழுத்தறுத்திட்டீயே… உன்னேயே நம்பி வந்தவள கொன்னுட்டீயே… நீ நல்லா இருப்பீயா… இல்ல… இல்ல… நான் உன்ன சும்மா விட மாட்டோன்… என் கையாலேயே உன்ன கொன்னு போட்டா தான் என் மனசு ஆறும்…” இதுவரை அவன் சட்டை காலரை பற்றி தூக்கி நிறுத்தி இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவள், இறுதியாக அவனை தாக்கும் அளவுக்கு ஏதாவது கிடைக்கிறதா என சுற்றிலும் பார்வையை சுழற்ற, இத்தனைக்கும் எந்த அசைவும் இல்லாது மரம் போல் தான் நின்றிருந்தான் அவன்.

 

இத்தனை நேரமும் அமைதியாய் நாற்காலியில் அமர்ந்து அவளின் செயல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனோ, வேகமாக எழுந்து அவளின் இரு கைகளையும் தன் கைகளினால் இறுக பிடித்துக் கொண்டான்.

 

“என்ன பண்ணற மிளிர் நீ… இவன கொன்னுட்டு நீ ஜெயிலுக்கு போக போறீயா..? இத மகி கூட விரும்ப மாட்ட…” என்றான் வேகமாய் அவளை தன் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபடி. நீ என்னமோ சொல்லிக்கொள் என்பதைப் போல அவனின் பிடியில் இருந்து திமிறியபடியே, அவளின் பார்வை அந்த இடத்தையே தான் சுற்றி சுற்றி வந்தது.

 

தன்னிடமிருந்து அவளை பிரித்து நிறுத்தியவன் வேகமாக உலுக்கி, “மிளிர்… என்ன பாருடி… என்ன பண்ணிட்டு இருக்க நீ… புரியுதா உனக்கு… நான் சொல்லிட்டே இருக்கேன்… நீ அவன அடிக்க ஏதாவது கிடைக்குமானு தேடிட்டே இருக்க… நீ பாக்கனுமுனு சொன்ன… நான் கூட்டிட்டு வந்தேன்… பாத்துட்ட இல்ல… வா கிளம்புவோம்…” என்றான் அவள் விழிகளை கூர்ந்துப் பார்த்தபடி.

 

“இல்ல மித்து… என்னால முடியல… சாகும் போது என் மகி எப்படி எல்லாம் துடிச்சு இருப்பா… இவனும் துடிக்கனும்… நான் அதை பாக்கனும்…” என வெறி பிடித்தவள் போல் கத்தியவளை என்ன சொல்லி சமாதானம் செய்வதென்றே தெரியவில்லை அவனுக்கு.

 

அவள் அத்தனை திடமாய் தான் வகுத்த திட்டத்திலேயே உறுதியாய் இருக்க, ஒரு வேளை தான் ரகசியமாக பிடித்து வைத்திருக்கும் சீலனை அவளிடம் காட்டினாலாவது தன் மீது நம்பிக்கை ஏற்பட்டு அந்த திட்டத்தை கை விட்டு விட மாட்டாளா என்று தான் அக்னி மிளிரை இங்கே அழைத்து வந்தது. ஆனால் அவளோ அவனை கண்ட நொடி முதல் அவனை கொல்லும் வெறிக் கொண்டு பிதற்றிக் கொண்டிருக்கிறாள்.

 

“ப்ளீஸ் மிளிர்… என்ன கொன்னுடு… உன் கையாலேயே என்ன கொன்னுடு… இந்த தனிமையில… இந்த இருட்டுல… இந்த பசியோட என்னால இருக்க முடியல… ப்ளீஸ்மா என்ன கொன்னுடு… சத்தியமா மகிய அவன் கொல்லுவானு நான் எதிர் பாக்கவே இல்ல… அந்த ஆதாரத்த குடுத்தா பணம் கிடைக்கும்னு நினைச்சேன்… அதுவும் ஆதாரம் இல்லாதப்ப மகியால என்ன பண்ண முடியுமுனு மிரட்டிட்டு விட்டுடுவானு தான் நினைச்சேன்… அதுக்கு அப்புறம் நானும் கூட பேசி மகிய இந்த விசயத்துல இருந்து வெளியக் கொண்டு வந்துடலானு தான் நினைச்சேன்… ஆனா இப்படி மகிய கொல்லுவானு சத்தியமா நான் நினைக்கல… நான் மகிய விரும்புனது சத்தியமான உண்மை மிளிர்… ப்ளீஸ் என்ன நம்பு மிளிர்… சத்தியமா அவன் அப்படி பண்ணுவானு தெரிஞ்சு இருந்தா அந்த ஆதாரத்த அவன்கிட்ட கொடுத்து இருக்கவே மாட்டேன்…” இம்முறை அவளின் கால்களை பிடித்து கெஞ்சிக் கொண்டிருந்தான் அவன்.

 

“நடிக்கதடா டேய்… மகிய விரும்பனவன் தான் அடுத்த மாசமே இன்னொரு பணக்கார பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கிட்டீயா..? இதுல மகி உயிர் மட்டுமா போச்சு… எத்தன எத்தன பேரோட உயிர் போய் இருக்கோ… ஆராய்ச்சிங்கற பேர்ல ஒவ்வொரு நாளும் அணு அணுவா துடிச்சு அவங்க எப்படி இறந்தாங்களோ… பணம் குடுத்துட்டு உன் பொண்ண இப்படி ஒரு ஆராய்ச்சிக்கு பயன்படுத்துனா பாத்துட்டு இருப்பீயா… பேசறான் பேச்சு… பெரிய ஒழுக்க சீலன் மாதிரி… இப்படி கேடுலையும் கேடு கெட்டவனுக்கு பேரு மட்டும் குணசீலன்… இந்த பேரு வச்சவன செறுப்பால அடிக்கனும் முதல…” என்றவள் வேகமாய் அவனை உதறிவிட்டு வெளியேற முயல,

 

இன்னும் பலமாய் அவள் கால்களை கட்டிக் கொண்டவனோ, “ப்ளீஸ் ம்மா… தயவுசெஞ்சு இங்க இருந்து என்ன கூட்டிட்டு போய்டு… இல்ல இங்கையே என்ன கொன்னுப் போட்டுடு… ப்ளீஸ் மிளிர்… என்னால இந்த நரகத்துல இருக்க முடியல… ப்ளீஸ்… ப்ளீஸ்…”

 

“இதெல்லாம் ஒன்னுமே இல்லடா… நீ இன்னும் அனுபவிப்ப… உயிரோட இருக்க ஒவ்வொரு நொடியும் நரகத்த பாப்ப… என் மகிக்கு நீ செஞ்ச துரோகத்துக்கு அது தான் தண்டனை… அத பாக்கறதுக்கு மட்டும் தான் உன்ன இப்ப உயிரோடவே விட்டுட்டு போறேன்…” என்றவள் அவனை உதறி தள்ளிவிட்டு விறுவிறுவென முன்னேறிவிட, அவள் பின்னோடு சென்றவனை தடுத்து நிறுத்தி இருந்தனர் உடன் வந்தவர்கள்.

 

மிளிரும் அக்னியும் சீலனை சந்தித்து விசாரித்து விட்டு வந்த பிறகு சீலனின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் தன் துறை சார்ந்த இரு நெருங்கிய நண்பர்களை அவனை கண்காணிக்க சொல்லி இருந்தான் அக்னி. தீடிரென சீலன் அவசர அவசரமாய் வெளிநாட்டிற்கு கிளம்பவும் தன் நண்பர்கள் மூலமே அவனை தூக்கி யாருமறியா பாதுகாப்பான இடமொன்றில் வைக்க சொல்லி இருந்தான். அவனை யாரும் அடித்து துன்புறுத்தி உண்மையை சொல்ல சொல்லி கட்டாய படுத்தவில்லை. மாறாய் தனியறை ஒன்றில் இருளில் பூட்டி வைத்திருந்தனர். இரண்டு நாளைக்கு ஒருமுறையோ மூன்று நாட்களுக்கு ஒருமுறையோ தண்ணீரும் உணவும் வழங்கப்படும். அந்த நேரம் அவன் உண்பது மட்டுமே. மீதமுள்ளது எடுத்து செல்லபடும். மீண்டும் அவனை இருள் சூழ்ந்துக் கொள்ளும். அந்த இருளில் தனிமையில் தப்பிக்க முயன்று அது முடியதென தெரிந்து தற்கொலைக்கு முயன்று என சீலன் அவனுக்கு அவனே ஏற்படுத்திக் கொண்ட காயங்கள் தான் அதிகம்.

 

காரினுள் வந்து அமர்ந்தும் மிளிரின் கோபம் கொஞ்சமும் குறைவதாய் இல்லை. கண்களில் கண்ணீர் அருவியென வழிந்தோட, இலக்கில்லாமல் எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள் அவள். அக்னியும் எதுவும் செய்ய இயலாத வெறுமையுடன் அவளைதான் பார்த்திருந்தான். இழந்த ஒன்றையே நினைத்து நினைத்து அழுவதால் என்ன பயன். ஆனால் அவளை சொல்லியும் குற்றமில்லை. அவள் இழந்தது அத்தகையது. அதுவும் அந்த இழப்பே ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு இப்போது தான் தெரிய வந்திருக்கிறது என்றால், அவளின் அழுகையும் கூட சரியே. அவளின் மன அழுத்தத்திற்கு சிறந்த வடிகாலும் கூட என்றெண்ணியே அவளை அழவிட்டு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

 

“எப்படி பேசறான் பாரு மித்து… கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லாம… மகிய அவன் கொல்ல மாட்டானு நினைச்சானாம்… எப்படி இப்படி பூசி மொழுக முடியுது இவனால… என்னமோ இவன் மேல தப்பே இல்லங்கற மாதிரி பேசிட்டு இருக்கான்…” இன்னும் அவளின் வார்த்தைகளில் அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாய் தெரிய தான் செய்தது.

 

“விடு மிளிர்ம்மா… ஆத்தோட போறவன் எதையாவது புடிச்சு கரையேற தான் பாப்பான்… அதே மாதிரி அவன் உன் மூலமா இங்க இருந்து தப்பிச்சுடலானு நினைச்சு இருப்பான்…”

 

“நீங்க என்ன சொன்னாலும் என் ஆறவே மாட்டேங்குது மித்து… அவன இப்பவே என் கையால கொல்லனுமுனு வெறியே வருது எனக்கு… ஆனா உடனே செத்து போய்டுவானே… இல்ல… அப்படி அவன் சாக கூடாது…”

 

“பாத்துக்கலாம் விடு மிளிர்… இப்ப என்ன நீ நம்பற தான… இவன் அப்ரூவரீ ஆகிட்டா போதும்… கண்டிப்பா இதுக்கு ஒரு தீர்வ என்னால கொண்டு வர முடியும்… நீ உன் முடிவ மாத்திக்கோயேன்… ப்ளீஸ்… உன்ன அத்தன பெரிய சிக்கல மாட்டிவிட என்னால முடியாது…” கிட்டதட்ட மன்றாடும் குரல் தான்… எப்படியாவது தன் பேச்சைக் கேட்டு அவள் மனம் மாறிவிட வேண்டுமே என்ற தவிப்பு அப்பட்டமாய் அவன் குரலில்.

 

“உங்கள நான் நம்பலைனு யார் சொன்னா மித்து… இப்ப இல்ல இந்த விசயத்துல ஆரம்பத்துல இருந்து உங்கள மட்டும் தான் நம்பறேன் நான்… அதனால மட்டும் தான் உங்க உதவிய கேட்டு வந்திருக்கேன்… இல்லைனா கண்டிப்பா தனியா மட்டும் தான் பொட்டிய கட்டி இருப்பேன்… இவன நீங்க புடிச்சு வச்சு இருக்கதுனால எல்லாம் என் பிளான்ல எந்த சேஞ்சும் இருக்காது… கண்டிப்பா எனக்கு எதுவும் ஆகாது… என் உயிரோட கலந்து எப்பவுமே எனக்கும் துணையா மகியும் என் நிழல போல துணையா நீங்களும் இருக்கும் போது கண்டிப்பா எதுவும் ஆகாது… ஆக கூடாது…” இறுதி வார்த்தைகளில் அவளுக்கு அவளே ஆறுதல் சொல்லிக் கொண்டாளோ? அவளன்றி யார் அறிவார்?

                    – தேடல் தொடரும்…

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்