
தேடல் 30:
ரகலங்கும் விழிகளோடு அமர்ந்திருந்த கவியைப் பார்க்கவே பாவமாய் இருந்தது அக்னிக்கு.
“ப்ளீஸ் அழாதீங்க… என்ன நடந்துச்சுனு கொஞ்சம் தெளிவா சொன்னா தான என்னால அடுத்து மூவ் பண்ண முடியும்… உங்களுக்கு என்ன தெரியுமோ அத மறைக்காம சொல்லுங்க…” என்றான் அவன்.
“எனக்கு பெரிசா எதுவும் தெரியாது சார்… அன்னைக்கு மகி லேட்டா வரவும் எல்லாரும் பயந்துட்டோம்… நான்தான் லேட் ஆகவும் போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுக்கலானு சொன்னேன்… ஆனா, நாங்க கிளப்பி போறதுக்குள்ள மகி வந்துட்டா… வந்தவ அப்சட்டா இருந்தா… அழுத மாதிரி கூட இருந்துச்சு… அதனால தான் நானாப் போய் அவகிட்ட விசாரிச்சேன்… ஆரம்பத்துல எதுவும் இல்லனு மழுப்ப தான் செஞ்சா… ஆனா ரொம்ப அழுத்திக் கேட்கவும் தான் அத சொன்னா… அவ இன்டர்வியூ எடுக்கப் போனது தேவ்பிரசாத்னு ஒரு தொழிலதிபர… அது அப்போதான் தொழில அவர் ஒரு இடத்த புடிச்ச நேரம்… அவர இன்டர்வியூ பண்ணா அது தன்னோட கெரியர்ல ஒரு டெர்னீங் பாயிண்டா இருக்குனு நினைச்சு தான் அங்க போய் இருக்கா… ஆனா இவ லேட்டா போனதால அவன பாக்க முடியலை போல… ஆனா தினேஷ் இவளுக்கு ரொம்ப முன்னாடியே வந்து வெயிட் பண்ணி இருக்கான்… அப்போ தான் இவ வரததால தேவ் கிளம்பி அவனோட குடோனுக்கு போய்ட்டது தெரிஞ்சுது… எப்படியாவது தேவ்வ மீட் பண்ணி இன்டர்வியூ எடுத்துடனுமுனு நினைச்சுட்டு இரண்டு பேரும் அவனோட குடோனுக்கே போய் இருக்காங்க… அங்க போக அப்பாய்ண்ட்மெண்ட் இல்லாததால யாருக்கும் தெரியாம தான் போய் இருக்காங்க… அங்கதான் எதையோ பாத்துருப்பா போல… அது வரைக்கும்தான் என்கிட்ட சொன்னா… அதுக்குள்ள அவளுக்கு தவசீலன் போன் பண்ணிட்டாரு… ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தா… அழுத மாதிரியும் இருந்துச்சு… அப்பறம் மகியும் மிளிரும் ஊருக்கு கிளம்பிப் போய்டாங்க…” என்றாள் கவி.
“போன் பேசன அப்புறம் மகிகிட்ட நீங்க எதுவும் கேக்கலையா…”
“இல்ல… பஸுக்கு லேட் ஆகிட்டுனு கிளம்பிட்டா… எதுவும் கேட்க முடியல…”
“போன்ல சீலன்கூட என்ன பேசனாங்கனு கேட்டீங்களா…”
“சார் அவங்க ரெண்டு பேரும் அடுத்த ஒரு வாரத்துல கல்யாணம் பண்ணிக்க இருந்தாங்க… அப்படி இருக்கும் போது அவங்க பேசறத எப்படி கேக்கறது… ஆனா தூரத்துல இருந்து பாக்கும் போது அவ அழுதது தெளிவா தெரிஞ்சுது…”
“வேற எதாவது உங்களுக்கு தெரியுமா..?”
“ம்ம்ம்… மகி கிளம்பிப் போன அடுத்த நாள் தினேஷ் அவள தேடி வந்தான்… அப்போ நான் மட்டும்தான் இருந்தேன்… பாக்கவே ரொம்ப பயந்த மாதிரி இருந்தான்… மகி இல்லனதும் அவன் பயம் இன்னும் அதிகமாகிட்டு… இரண்டு பேரும் மாத்தி மாத்தி மகிக்கு கூப்பிட்டோம்… எடுக்கல… மிளிருக்கு போன் பண்ணப்ப வசும்மாதான் எடுத்தாங்க… ரெண்டு பேரும் வெளிய போய் இருக்கதா சொன்னாங்க… சரினு தினேஷும் கிளம்பிட்டான்… ஆனா மறுநாள் காலையிலையே மகி இறந்துட்டாதா தகவல் வந்துச்சு… அவள போய் பாத்துட்டு, அன்னைக்கு சாயுங்காலம் திரும்பி வரும்போது தினேஷும் இறந்துட்டானு தெரியவந்தது…”
“தினேஷ் இறந்தது உங்களுக்கு எப்படி தெரியவந்தது…”
“மகிக்கூட வேலை பாத்தாவங்களும் எங்ககூட தான் திரும்பி வந்தாங்க… அவங்க மூலமா தான் தெரிஞ்சுது…”
“ம்ம்ம்…” என அக்னி யோசனையாக பார்க்க, கவியே தொடர்ந்தாள். “இந்த எல்லா விசயத்தையும் கனெக்ட் பண்ணி பாத்தப்ப எனக்கு தவசீலன் மேலதான் சந்தேகம் வந்துச்சு… ஏன்னா எதுவா இருந்தாலும் மகி தவசீலனுக்கு ரிப்போர்ட் பண்ணிடுவா… அதே மாதிரி தேவ்பிரசாதோட குடோனுல என்ன நடந்துச்சுனும் அவன்கிட்ட சொல்லி இருப்பானு நினைச்சுதான் அவன நேர்லையே கேட்க போனேன்… ஆனா சத்தியமா எனக்கு எதுவும் தெரியாதுனு சொல்லிட்டான்… ஆனா அதுக்கு அப்புறம் தான் எனக்கு பிரச்சனை ஆரம்பிச்சுது… யாரோ ப்ளோ பண்ணற மாதிரியே இருந்துச்சு… அந்த டைம்தான் எனக்கு பாரின் போற மாதிரி வாய்ப்பு கிடைச்சுச்சு… கிளம்பிட்டேன்… இப்ப ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் அண்ணா கல்யாணத்துக்காக இங்க வந்தேன்… இப்ப எனக்கு மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டாங்க… சோ அப்படியே இங்கையே இருத்துட்டேன்…”
“வேற ஏதாவது நியாபகம் வருதா… நல்லா யோசிச்சு பாருங்களேன்…” என்றான் மீண்டும் அக்னி.
“இல்ல… அதுக்கு அப்புறம் எனக்கு எதுவும் தெரியாது…” என்றாள் கவி கவலை தோய்ந்த முகத்தோடு. இன்னும் சிறிது நேரம், தனக்கு தேவையான தகவல்களை கவியிடம் கேட்டு தெரிந்துக் கொண்டவன், அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
அதே சமயம் மிளிர் தனது அறையில் இருந்த கணினியில் தேவ்பிரசாத் பற்றிய தகவல்களை தேடிக் கொண்டிருந்தாள். தேவ்பிரசாத் வளந்து வரும் இளம் தொழிலதிபர். மருத்துவம் பயின்றவன். உலகின் தலைசிறந்த இதய அறுவைசிகிச்சை நிபுணரும் கூட! அவனுக்கு சொந்தமானது தான் அந்த பெரிய மருத்துவமனை. அதில்தான் விபத்தின் போது மிளிரும் மகியும் சேர்க்கப்பட்டிருந்தனர். இப்போது பல முடிச்சுக்கள் அவிழ்வதைப் போல தோன்றியது அவளுக்கு. தேவ்வின் முதன்மை தொழிலே பிற நாடுகளிலிருந்து மருந்துப் பொருட்களையும் மருத்துவ உபகரணங்களையும் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்வதுதான். இப்படியாக அவனின் நிறுவனமும் மருத்துவமனைகளும் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் விரவிக் கிடந்தது. யோசிக்க யோசிக்க இது ஏதோ சதாரண பிரச்சனையாக இருக்குமென்று மிளிருக்கு தோன்றவில்லை. நிச்சயம் இது மருத்துவம் சார்ந்த ஒரு குற்றமாக தான் இருக்க வேண்டும். அதைப்பற்றி தான் மகி ஏதாவது தெரிந்துக் கொண்டிருக்க வேண்டும். அதனாலேயே இத்தனை கொலைகள். இன்றளவும் கொலை மிரட்டல் என்றால் குற்றத்தின் தீவிரம் மிளிருக்கு புரிந்தது.
ஏனோ இதை அப்படியே விட்டுவிட மிளிரின் மனம் ஒப்பவில்லை. இதில் மகி, தினேஷைப் போல பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப் பேரோ? தன்னைப் போல உறவுகளை இழந்து தவிப்பவர்கள் எத்தனைப் பேரோ? இதை இப்படியே தொடரவிட்டால் எத்தனை மகிழினிகளை இழக்க நேரிடுமா? இந்த எண்ணமே தீவிரமாக அவளை யோசிக்க வைத்திருந்தது.
யோசிக்க தொடங்கியதுமே தலைவலியும் தொடங்கிவிட, மனமும் உடலும் ஒருசேர ஓய்வுக்கு ஏங்கியது. தண்ணீரைக் கொண்டு அழுந்த முகத்தை கழுவிக் கொண்டவள் புத்துணர்வு வேண்டி பால்கனியில் வந்து நின்றாள். சில்லென்ற மண்வாசம் சுமந்த காற்று நாசியை நிறைக்க, ஆழ்ந்து அதனை சுவாசத்தில் நிரப்பியவள், வானத்தைப் பார்த்தாள். எந்நேரம் வேண்டுமானலும் மழையை பொழிய நான் தயார் என்ற நிலையில் கருத்து இருண்டிருந்தது வானம். அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூரல்கள் விழ, மெல்ல அதனை கையில் ஏந்தினாள். அந்த துளியின் சிலிர்ப்பு கை வழி உடலில் இறங்கி உள்ளத்தை குளிர்வித்தது. மனம் மீண்டும் புத்திணர்வை அடைய, தன்னைப்போல் விட்ட இடத்தில் இருந்து சிந்திக்க தொடங்கினாள்.
மகிக்கு எப்போதுமே முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம். அவ்வளவு எளிதாக மற்றவர்களை நம்பிவிட கூடிய பெண் அல்ல. நிச்சயமாக தேவ்வின் குற்றத்தை அவள் கண்டு பிடித்திருந்தால் ஒன்றுக்கு இரண்டாக அதை சேமித்து பாதுகாத்து வைத்திருப்பாள். அப்படி அவள் ஏதாவது ஒரு ஆதாரம் வைத்திருந்தால், அதை நிச்சயம் இங்கே தான் எங்காவது மறைத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் ஆரம்பத்திலேயே தன் வீட்டின் மூளை முடிக்கிலெல்லாம் அப்படி ஏதாவது கிடைக்கறதா என்று தான் மிளிர் தேடிப் பார்த்து விட்டாளே! இங்கு எதுவுமில்லை என்பது உறுதி. அப்படி என்றால் வேறு எங்கு என சிந்தித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை கவர்ந்தது ஒற்றை விளக்கு எரிந்துக் கொண்டிருந்த மகியின் வீடு.
இந்த இல்லம் கட்டுவதற்கு முன்பு மகியின் வீடே மிளிருக்கும் வீடு. இனியனை ஏமாற்றும் பொருட்டு பல ரகசிய இடங்களும் அவர்களுக்கு உண்டு. திண்பண்டங்களை ஒளித்து வைக்க, அவனின் பேனா பென்சில் புதிய நோட்டு, தேடி அலைந்து கண்டெடுத்த மயிலிறகு என ஒளித்து வைக்க அவசியமான பொருட்கள் ஏராளம். அந்த எண்ணம் தோன்ற, அனிச்சையாய் முகம் மலர்ந்தது அவளுக்கு.
வேகமாக தந்தையின் அறைக்கு சென்றவள் அந்த வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு அகல எட்டுக்களுடன் ஓட்டமும் நடையுமாய் மகியின் வீட்டை நெருங்கி இருந்தாள். கனமான பித்தளை பூட்டை பெரிதும் பிரயாத்தனப்பட்டே அவள் திறக்க வேண்டி இருந்தது. உள்ளே நுழைந்து விளக்குகளை ஒளிரவிட பெரிதாக ஒட்டடை எதுவுமில்லை. பெரிதும் சுத்தமாகவே இருந்தது. அது தனது தாயின் கைங்கரியம் என்று அறிந்தள் இதழ்கள் புன்னகையை பூசிக் கொண்டது.
அழகிய ஓட்டுவீடு அது. மகியின் தந்தையின் பூர்வீகமே இந்த ஊர்தான் என்பதால் சுமார் ஐந்தாறு தலைமுறைகளை தொடர்ந்து கண்ட வீடு. பெரிய தாழ்வாரத்தின் நடுவிலே முற்றமிருக்க அதற்கு மேலே இரும்பு கம்பிகள் பொருத்தப் பட்டிருந்தது. தாழ்வாரத்தை சுற்றி சுமார் நான்கைந்து அறைகளாவது இருக்கும்… அதற்கடுத்தது பெரிதாய் ஒரு பூஜையறை. குறைந்தது ஐம்பது பேராவது ஒன்றாக நின்று சாமியை வணங்கலாம். அதைத் தொடர்ந்த பெரிய சமையலறை. அதற்கு அடுத்து பெரிய பின்கட்டு. அதை தொடர்ந்து தோட்டம்.
பொருட்களெல்லாம் எடுக்கப்பட்டதால் வெறிச்சோடிப் போய் கிடந்தது வீடு. அதன் ஒவ்வொரு அறையாக சென்று ஒரு மில்லிமீட்டர் விடாது அலசித் தேடினாள் மிளிர். அவளுக்கு தெரிந்தவரை அவர்களின் ரகசிய இடங்களில் எல்லாம் விடாது தேடினாள்.
அந்த வீட்டின் அங்குலம் விடாது தேடியவளுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றமே. கடைசியில் தேடி தேடி சோர்ந்து போனதுதான மிச்சம். களைத்துப் போனவள் வியர்வையை துடைத்தெறிந்துவிட்டு, சமையல் மேடை மீதே ஏறி அமர்ந்துவிட்டாள்.
இங்கும் இல்லை, அப்படி என்றால் இனி எங்கிருப்பதற்கும் வாய்ப்பில்லை, மகியின் மரணத்திற்கு காரணமானவனை கடைசி வரை ஒன்றுமே செய்ய முடியப் போவதில்லை என எண்ணியவளுக்கு தன்னையும் மீறி அழுகை முட்டிக் கொண்டு வர, அதே நேரம் அவளின் கைப்பேசி அழைத்தது.
அமைதியாகவே இருந்த இடத்தில் சட்டென்று சத்தம் வர ஒரு நொடி அவளே பயந்துதான் போனாள். அதே சமயம் எங்கிருந்தோ பூனை ஒன்று அவளின் மீது பாய்ந்து ஓடியது. அதுவுமே இந்த சத்தத்தில் பயந்திருக்க வேண்டும். சட்டென்று தூக்கிவாரிப் போட தன்னை சமன்படுத்தி கொள்ள சில நிமிடங்கள் பிடித்தது. அழைப்பை பார்க்க, அக்னிதான் அழைத்திருந்தான்.
“ஹலோ…”
“ஹலோ மிளிர்… நான் அக்னி பேசறேன்…”
“தெரியுது சொல்லுங்க…”
“ரொம்பதான்… என்ன பண்ணற…”
“ராத்திரி நேரத்துல என்ன பண்ணுவாங்க… தூங்கப் போறேன்…”
“ஓஓஒ….”
“சாப்பிட்டாச்சா…”
“ஆச்சு… ஆச்சு…”
“ஒரு பேச்சுக்கு கூட நீங்க சாப்பிட்டீங்களானு கேக்க மாட்டீயா…”
“உங்கள ஏன் நான் கேக்கனும்…”
“சரியான ராங்கி… எல்லாத்தையும் பண்ணிட்டு ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேச்சைப் பாரு…”
“யாரு… என்னப் பண்ணாங்க இப்போ…”
“ம்ம்ம்… யாரோ ஒருத்தவங்க மகி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன கரெக்ட் பண்ண எல்லாம் பிளான் போட்டாங்களாம்… அவங்கள யாருனு தெரியுமா உனக்கு..?” அவனின் குரல் உல்லாசத்தில் குளித்திருத்தது.
“அது யாரோ வேலையத்தவ பண்ணிருப்பா… அத சொல்லதான் இப்போ போன் பண்ணிங்களா…” என்றாள் மிளிர் இதழ்களில் உறைந்த புன்னைகையோடு.
“உன்ன கட்டிகிட்டு எப்படிதான் காலம் தள்ள போறேனோ நானு…” மெல்லிய சலிப்பு அவனிடம்.
“என்ன சொன்னீங்க…”
“நான் சொன்னது உனக்கு கேக்கல… அப்படிதானே… நம்பிட்டேன்… உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும்… காலையில பாக்கலாமா..?”
“சரி உங்க வீட்டுக்கு வந்துடவா…”
“எதுக்கு எனக்கு வாக்கரிசி போடவ… அன்னைக்கு போனோமே காபிஷாப் அங்க வந்திடு… கொஞ்சம் இயர்லியாவே வந்திடு… அப்போ தான் கூட்டம் இருக்காது…”
“கட திறந்ததும் வந்திடறேன்… போதுமா… இப்போ போன வைங்க…”
“அவ்வளவு தானா…”
“அவ்வளவே தான்… வச்சுடுங்க…” என்றவள் வைத்தும் விட்டாள்.
“உலக வழக்கப்படி ‘அவ்வளவு தானா…’ னு ஏக்கமா கேட்டா, பதிலுக்கு ‘வேற என்னனு…” குழைஞ்சுட்டே தானே கேக்கனும்… இவ என்ன அவ்வளவு தானு வச்சுட்டா… இல்ல நான்தான் ஏதாவது தப்பா கேட்டுடேனா…?” என குழம்பிப் போன அக்னி, பேருந்தின் இருக்கையை சரி செய்து, இன்னும் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான்.
அக்னியின் பேச்சில் உறைந்துவிட்ட புன்னகையோடு அமர்ந்திருந்தாள் மிளிர். ஶ்ரீ முன்பே தான் உளறிக் கொட்டியதை சொல்லி சென்றிருக்க, நிச்சயம் அக்னி இப்படி பேசுவான் என்று எதிர்பார்த்து தானே இருந்தாள்.
அதே சமயம், பூனையின் சத்தம் கேட்க, சுற்றும் முற்றும் பார்த்தாள். சத்தமோ பூஜையறையிலிருத்து கேட்டது. ஆனால் அங்கும் பூனையில்லை. அப்போதுதான் சட்டென்று அவளுக்கு அது நினைவுக்கு வந்தது. சமையலறையும் சாமியறையும் இணைக்கும் பெரிய பரண் ஒன்று இருக்கிறது. தேவையற்ற பழைய பொருட்களை அங்குதான் போட்டு வைப்பார்கள். அங்கும் சில ரகசிய இடங்கள் அவர்களுக்கு உண்டு.
அது நினைவு வந்தவுடன் வேகமாக சமையலறைக்கு வந்தவள், சமையல் மேடை மேலேறி, சமையல் பொருட்கள் வைப்பதற்கான அந்த மர சட்டத்தின் ஒவ்வொரு தட்டுகளாய் ஏறி பரணையும் அடைந்துவிட்டாள். கைப்பேசியின் டார்ச்சை ஒளிரவிட்டபடி தேட, கொஞ்சம் பொருட்கள் மூட்டையாக கட்டி அடுக்கப்பட்டிருந்தது. ஒரு மூளையில் மூன்று பூனைகுட்டிகள் இருந்தது. பிறந்து சிலநாட்களே ஆகியிருக்கும் போல. அநேகமாக அவளின் மீது குதித்துச் சென்ற அந்த பூனை இவைகளின் தாயாய் இருக்கலாம்.
அதை தொந்தரவு செய்யாமல் தனது தேடுதல் வேட்டையை தொடர்ந்தாள். எல்லா இடங்களிலும் தேடி முடித்திருந்த சமயம், அந்த பூனைக்குட்டிகள் படுத்திருக்கும் மூலை கண்களில் பட்டது. மெல்ல அவற்றை நகர்த்திவிட்டு அங்கு தேட தொடங்கினாள். பெரிதாக அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்றதும் எழப்போனவளை அங்கிருந்த நடராஜர் ஜியோமென்ட்ரி பாக்ஸ் ஈர்த்தது.
அவர்கள் படிக்கும் காலத்தில் இருவருமே இந்த ஒரே பாக்ஸைதான் பயன்படுத்தினர். இப்போது அது துரு பிடித்து திறக்கவே கடினமாக இருந்தது. போனை ஒளி தரும் வகையில் பக்கத்தில் வைத்துவிட்டு, பாக்ஸை திறக்க, பழைய டைப் நோக்கியா போன் ஒன்றிருந்தது. அது முதன் முதலில் மிளிர் மகிக்காக ஆசையாக வாங்கி தந்தது. போன் என்று முதன்முதலில் அவர்கள் உபயோகித்ததும் இதையே. அப்போதே மெமரிக்கார்டு போட்டு பாட்டு கேட்கும் வசதி அதிலிருக்க, மகியின் விருப்ப பொருட்களில் இதுவும் ஒன்றாகிப் போனது. கடைசி வரை இந்த போனை அவள் உபயோகித்தாள். ஒரு கட்டத்தில் ஸ்மார்ட் போன் வாங்கிய பிறகும் கூட, இரவில் பாட்டுக் கேட்கவென இதைதான் உபயோகிப்பாள். மகிக்கு அத்தனை நெருக்கமானது அந்த போன்.
மிளிர் கொடுத்தளே அது அவளுக்கு நெருக்கமானது தான். அப்படி இருக்க, முதல் முறையாக மிளிரின் சம்பாத்தியத்தில் வாங்கி கொடுத்தால் அது இன்னும் நெருக்கமானதாக தானே இருக்கும். நாதரின் கடையில் வேலை செய்தால் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று கணக்கு வைத்து தருவார் அவர். அப்படி கோடை விடுமுறை முழுவதும் வேலை செய்து மகியின் பிறந்த நாளுக்காக ஆசை ஆசையாய் மிளிர் வாங்கி கொடுத்ததே அந்த போன்.
அவசர அவசரமாக அதை இயக்க முயல, அதுவோ சார்ஜ் இல்லாது உயிரிழந்து கிடந்தது. வேகமாக போனை எடுத்துக்கொண்டவள், கீழே இறங்கி வீட்டை பூட்டிவிட்டு தனது அறைக்கு வந்தாள். அதே வேகத்தில் போனை பாகங்களாக பிரித்து உள்ளே இருந்த மெரிக்கார்டை எடுத்து தனது சிஸ்டத்தில் பொருத்தினாள். நீண்ட நாட்கள் ஆனதாலோ என்னவோ திறக்க நீண்ட நிமிடங்கள் பிடித்தது. ஒரு வழியாக திறக்க, அதில் இருந்தது அத்தனையும் மகியின் விருப்ப பாடல்களே. அதை ஒலிக்க விட்டபடியே மீண்டும் ஒரு முறை கூர்ந்து கவனிக்க இவளை ஏமாற்றது பாடலுக்கு இடையே ‘தேவ்பிரசாத்’ என்று பெயரிட்டே ஒரு போல்டர் இருந்தது. நடுங்கும் கைகளோடு அதை திறக்க, நினைத்ததை எல்லாம் விட பெரிதாக ஒன்று இவளுக்காய் காத்திருந்தது.
– தேடல் தொடரும்…

