
தேடல் 29:
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என கொஞ்சமும் சலனமின்றி அவன் கேட்டிட, சூர்யாவின் முகம்தான் அதிர்ச்சியை சுமந்திருந்தது. ஒரே ஒரு நொடி, அவன் தயங்கி இருந்தாலும், அடியோடு அவனை அவள் வெறுத்திருக்க கூடும். அன்றி, அவளை சமாதானப் படுத்தும் வகையில் ஆறுதல் சொல்லி இருந்தாலோ பத்தோடு பதினொன்றாக எண்ணி இருப்பாள். ஆறுதல் சொல்வதைப் போல ஆதாயம் தேடுபவர்களையும் கடந்து தானே வந்திருக்கிறாள். ஆனால் அவனோ, உண்பது உறங்குவதுப் போல அதையும் சர்வ சாதாரணமாய் எடுத்துக் கொண்டு, ‘என்னை மணக்கிறாயா..?’ என்கிறான். ஏன் அவளை வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டவர்கள் கூட இருக்கிறார்கள் தான். அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு தெரிந்தான் அவன்.
“ஏன்டா… ஏழுகழுத வயசாகியும் நாங்களாம் லவ்வே செட் ஆகமா சுத்திட்டு இருக்கோம்… துரைக்கு அதுக்குள்ள கல்யாணம் கேட்குதோ கல்யாணம்…” என அவர்களின் சிந்தனையை களைத்தபடியே உள்ளே நுழைந்திருந்தான் அக்னி. அவன் பின்னோடே ஶ்ரீயும். அவர்கள் வந்தவுடனையே எதுவும் சொல்லாது வெளியேறி இருந்தாள் சூர்யா.
“ஶ்ரீக்கா… நீங்களா…” அதிர்ந்து கேட்டவனை முறைத்துக் கொண்டு நின்றிருந்தாள் ஶ்ரீ.
“ஏன்டா உங்க அக்காதான் என்ன மறந்துட்டானா உனக்கு என்னடா கேடு… பேசித் தொலைக்க வேண்டியது தானே… அட்லீஸ்ட் அவளுக்கு நியாபகம் வந்த பிறகாவது இது இநு இப்படி இப்படினு சொல்லி இருக்கனுமா இல்லையா..?” அவனை குற்றம் சாட்டும் பாவனையில் அவள் கேட்க,
“சொல்ல கூடிய நிலைமையில யாரும் இல்லக்கா… மகி அக்கா இறப்பு கொலங்கறதே எங்க எல்லாருக்கும் பெரிய அதிர்ச்சி… இதுல அக்காவ வேற சமாளிக்க முடியல… அந்த நிலைமையில எனக்கு அக்காவ தவிர வேற எதுவும் யோசிக்க முடியலக்கா…” என்றான் இனியன் அவளை சமாதானப் படுத்தும் வகையில்.
“எரும மாடே…சூர்யாகிட்ட என்னடா சொல்லி தொலைச்ச… கூப்பிட கூப்பிட திரும்பி பாக்காம போறா…” என்றபடியே அந்த அறையினுள் நுழைந்த மிளிருமே அதிர்ந்துப் போய்தான் நின்றிருந்தாள்.
“ஶ்ரீ… ஶ்ரீ… நீ இங்க எப்படி…” என்றவள் அடுத்த நொடி அவளை தாவி அணைத்திருக்க, அதற்கு மேல் மிளிரால் ஒன்றுமே பேச முடியவில்லை. இத்தனை வருட பிரிவு கண்ணீராய் வெளியேற, ஒரு தோழியின் இழப்பை மற்றொரு தோழியினிடத்தில் ஈடுகட்ட முயன்றுக் கொண்டிருந்தாள் அவள்.
“நீ ஒன்னும் என்கிட்ட பேச வேண்டாம்… நாங்க எல்லாம் செத்துப் போட்டோனு நினைச்சுட்ட இல்ல… பழசெல்லாம் நியாபகம் வந்த பிறகும் ஒருதடவ கூட என்னைய பாக்கனுமுனு உனக்கு தோனவே இல்ல… என்ன இருந்தாலும் நான் உனக்கு மூணாம் பட்சம் தானே… உனக்கெப்படி என்ன பாக்கனுமுனு தோனும்…” என மிளிரை விலக்கிவிட்டு சிறுபிள்ளையாய் முறுக்கிக் கொண்டு நின்றவளை, கண்டு சிறுமுறுவல் தோன்றியது மிளிரிடம். உடன் பழைய நினைவுகளும் தான்.
எப்போதும் ஶ்ரீக்கு மிளிரிடம் வம்பு வளர்ப்பதென்றால் அலாதிப் பிரியம். அடிக்கடி ‘நானா..? மகியா..?’ என்று கேட்டு அவளை சங்கடத்தில் நிற்க வைப்பாள். ஆனால் அவளோ சற்றும் சலனமேயின்றி மகிதானென்றுவிட, ஶ்ரீயின் முகமோ சட்டென்று வாடிவிடும். உடனே மகியோ, எனக்கு என்றுமே ஶ்ரீதான் என்று அவளைக் கட்டிக் கொள்வாள். இதைக் கண்டு மிளிர் மகியிடம் சண்டைக்கு நிற்க, இதிலெல்லாம் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பதைப் போல, புன்முறுவலோடு நின்றிருப்பாள் ஶ்ரீ. இதே அவள் வாடிக்கையும் கூட.
பழைய நினைவுகளில் மூழ்கிப் போனவளாக, “இனிமே நீ போட்டிப்போட ஆளே இல்ல ஶ்ரீ. ஆயிரம் முறை அவதான் எனக்கு முக்கியமுனு சொன்னாலும், எனக்கு ஶ்ரீதான்ப்பா முக்கியமுனு சொல்லிட்டு அவ வரவே போறதில்ல… இனிமே எப்பவுமே அவ வரவே போறதில்ல…” உடைந்து கதறி அழுதவளை பூவாய் தாங்கிக் கொண்டாள் ஶ்ரீ.
பழைய நினைவுகளில் அவளுமே உடைந்து அழுதிட, சமாதனப் படுத்த முடியாது பார்த்து நின்றிருந்தனர் ஆண்கள் இருவரும். ஒரு வழியாக, அழுது கரைந்து தங்களுங்கு தாங்களே ஆறுதல் சொல்லி அவர்கள் தேறி வருவதற்குள் அந்தோ பரிதாபம் என்றாகிப் போனது ஆண்களின் நிலை. அதுதான் அப்படி என்றால் அக்னியின் நிலை இன்னுமே பரிதாபம்தான். பிரிந்த இரு பெண்கள் சேர்ந்தபின் அவர்களுக்குள் பேசவென்று ஆயிரம் கதைகள் இருக்க, அவர்கள் ஏன் அக்னியை கண்டுக் கொள்ளப் போகிறார்கள். ஏன்டா இப்போது ஶ்ரீயை அழைத்து வந்தோமென அவன் வெந்து நொந்துதான் போனான்.
“காற்றில் எந்தன் கீதம்…
காணத ஒன்றை தேடுதே…” அனைவரையும் கலைக்கும் விதமாக கைப்பேசி ஒலிக்க, அவசர அவசரமா தனது கைப்பையில் மிளிர் தேட துவங்கிட, ஒரு புன்முறுவலுடன் அவளை பார்த்திருந்த அக்னி தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றிருந்தான். மிளிருக்கு இந்த பாடலின் மீதிருக்கும் மோகம் அவளை அறிந்த அனைவருமே அறிந்தது தான். ஆனால் அவனின் விருப்பப் பாடலும் இதுதான் என்று தெரியும் போது இதமான உணர்வொன்று இதயத்தில் பரவ, அதரங்கள் குறுநகையைப் பூசிக் கொண்டது.
வெளியே வந்தவன், “சொல்லுங்க ண்ணா…” என்றான்.
“அந்த வேல் டாலர் ஒரு டாக்டரோட தம்பி. அவர் அந்த ஹாஸ்பிட்டல தான் வொர்க் பண்ணறாரு. மகிழினிங்கற பொண்ணுக்கு ஆப்பரேஷன் பண்ண டாக்டர் டீம்ல கூட இருந்து இருக்காரு. மிளிர் திடீருனு டெத் சட்டிபிகேட் கேக்கவும் பயந்துப் போய் எங்க எல்லாம் தெரிஞ்சுட்டோனு அவள கொல்ல ட்ரை பண்ணி இருக்காரு போல. ஆனா அதுக்கு அடுத்த இரண்டு நாள்லையே மலேசியா போய்ட்டாருனு அவங்க பேமிலில சொல்லறாங்க… ஏர்போர்ட்லையும் விசாரிச்சாச்சு… அன்னைக்கு கிளம்பின பேசேன்ஜர் லிஸ்ட்ல அவர் நேம் இருக்கு…”
“ஓ.கேனா… ஒரு அட்ரஸ் குடுத்து விசாரிக்க சொன்னேனே…”
“விசாரிச்சுட்டேன் தம்பி… அந்த பொண்ணு வேலைகிடைச்சு வெளிநாட்டுக்கு போய்ட்டாம்… எங்கனு கேட்டா யாருக்கும் தெரியல… அந்த பொண்ணோட அப்பாம்மா… அவங்க அண்ணன் குடும்பத்தோட ஏதோ வில்லேஜ்ல போய் செட்டில் ஆகிட்டாங்களாம்… அட்ரஸ் வாட்அப்ல அனுப்பி இருக்கேன் தம்பி…”
“சரி ண்ணா… நான் பாத்துக்கறேன்… எதுக்கும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க… தனியா எங்கையும் போகதீங்க… வேற ஏதாவது ஹெல்ப் வேணுமுனா சொல்லறேன்…”
“நான் பாத்துக்கறேன் தம்பி… நீங்களும் கொஞ்சம் பாத்து சூதானமா இருங்க தம்பி…” என்றவர் வைத்துவிட்டார்.
ஏனோ மிளிரிடம் இதை சொல்ல அவன் மனம் இடம் கொடுக்கவில்லை. சொன்னால், ஒன்று இத்தனை சொன்ன பிறகும் எதற்காக இதில் தலையிடுகிறாய் என்பாள். இல்லை, தானும் அவனோடு வருகிறேன் என்பாள். ஆபத்தென்று தெரிந்தும் அதில் அவளை இழுத்துவிட அவனுக்கு மனமில்லை. இதையேதான் அன்று அவளும் நினைத்திருப்பாளோ? தாமதமாக தான் அவளின் மனநிலையை ஆராய முயன்றது அவனின் மனம்.
யோசனையோடே உள்ளே வந்தவன், இனியனை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை கண்டு தானுமே அவர்களுக்கு உதவி செய்தான். அவர்களுடனேயே ஶ்ரீயையும் அனுப்பி வைத்துவிட்டு, பிறகு வந்து அழைத்துச் செல்ல சொல்லி தனாவிற்கும் தகவல் சொல்லிவிட்டான்.
அடுத்த நொடியே அவனுக்கு அனுப்ப பட்டிருந்த முகவரியை தேடி கிளம்பிவிட்டான் அவன். ஒரு வழியாக, அந்த ஊருக்கு செல்லவே அவனுக்கு மாலை ஆகிவிட்டது. விவசாயம் மட்டுமே பிரதானமாக கொண்ட சிறுகிராமம் அது. ஒரு வழியாக, கவியின் தந்தையின் பெயரை சொல்லி, விசாரித்துக் கொண்டு அவர்கள் இல்லம் செல்ல, எட்டு மணிக்கு மேலாகி விட்டது.
கொஞ்சம் பெரிய ஓட்டு வீடு அது. அதனை சுற்றி முள்வேலி வேயப்பட்டிருக்க, படலை திறந்துக் கொண்டு உள்ளே நுழைந்தான் அவன். “சபாபதி ஐயா இல்லைங்களா..?” என இவன் வாசலில் இருந்து குரல் கொடுக்க, உள்ளிருந்து எந்தவிதமான பதிலும் இல்லை. இரண்டு மூன்று முறை இவன் காட்டு கத்தலாக கத்த, “அப்பா வீட்டுல இல்லைங்களே… வயலுக்கு போய் இருக்காங்க… இப்ப வர நேரம்தான்…” என புடவையில் முந்தானையை துடைத்தபடியே வந்தது சாட்சாத் கவியே தான்.
“நீங்க கவிதானே…”
“ஆமான்… நான்தான்… நீங்க…”
“நான் அக்னிமித்திரன்… இன்ஸ்பெக்டர்… மகியோட கேஸ நான் தான் பாத்தேன்… அதபத்தி… உங்ககிட்ட மகிய பத்தி கொஞ்சம் பேசனும்… அதான் வந்திருக்கேன்…” என அவன் சொல்லவுமே அனிச்சையாய் அவள் உடல் நடுங்க தொடங்கியது. முத்து முத்தாக வியர்வை அரும்பிவிட, முகம் வெளிறிப் போனது.
“ரிலாக்ஸ் கவி… நான் உங்க ப்ரண்ட் ஶ்ரீயோட அத்தை பையன்தான்… இன்பேக்ட் மிளிரும் நானும் ஒருத்தர ஒருத்தர் விரும்பறோம்… சீக்கரமே கல்யாணம்கூட பண்ணிக்க போறோம்…”
“நிஜமாவா சார் சொல்லறீங்க… மிளிருக்கு எல்லாமே நியாபகம் வந்துட்டா… ஶ்ரீ இப்போ எப்படி இருக்கா… அவளுக்கு கல்யாணம் ஆகிட்டா… குழந்த இருக்கா…” படபடவென கேள்வி கணைகளால் துளைத்தவளை, நிதானமாக அருகில் அமர வைத்தான் அக்னி.
“இரண்டு பேருமே ரொம்ப நல்லா இருக்காங்க… ஶ்ரீக்கு கல்யாணம் ஆகி பாப்பாவே பொறந்துட்டா… பேருகூட சிற்பிகா…” அவளை நிதானப்படுத்த பொதுவாக பேசிக் கொண்டிருந்தான் அவன்.
அதே சமயம், நீண்ட நேரம் படுக்கையிலேயே இருக்க ஒரு மாதிரி இருக்கிறது என்ற இனியனை அழைத்து வந்து சோபாவில் அமர வைத்து இரவு உணவினை கொடுத்திருத்தாள் மிளிர். அவளுக்கான உணவினையும் எடுத்துக் கொண்டு அவன் அருகிலேயே அமர்ந்துவிட, மகிழ் வேலை செய்த அந்த தொலைகாட்சியில் பிரபலாமான இளம் தொழிலதிபர் ஒருவரின் நேர்காணல் ஓடிக் கொண்டிருந்தது.
“டேய் சேனல மாத்து… பாட்டு ஏதாவது வை…” என இனியனிடமிருந்து ரிமோட்டை பறிக்க முயன்றாள் மிளிர்.
“ப்ளீஸ் க்கா… அவரு எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தெரியுமா..? சயின்டிஸ்யூம் கூட… இந்த சின்ன வயசுலையே எவ்வளவு சாதிச்சு இருக்காரு தெரியுமா… என் ரோல் மாடலே அவர்தான்… இன்னொரு விசயம் தெரியுமா அவருக்கும் கூட நம்ம ஊருதான்…” என்றவன் ஆர்வமாய் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அழ்ந்துவிட வேறு வழியில்லாமல் அவளுமே அதைப் பார்க்க தொடங்கி இருந்தாள்.
“இந்தியாவுல இருக்க டாப் டென் பணக்காரங்கள நீங்களும் ஒருத்தர்… அதுவும் உங்க சொந்த முயற்சியில முன்னுக்கு வந்து இருக்கீங்க… இந்த வெற்றி எப்படி சாத்தியமுனு சொன்னா இளைய தலைமுறைக்கு மேட்டிவேஷனா இருக்குமே…”
“இலக்கு என்னனு தெரிஞ்சுட்டா… பாதையில இருக்க எந்த தடங்களுமே தெரியாது… ஆனா உங்களோட இலக்க தீர்மானிக்கறதுல தான் உங்களோட திறமையே இருக்கு…” என்றவன் அழகாய் ஒரு புன்னகையை சிந்திட… அந்த புன்னகை அங்கிருந்தவர்களையும் தொற்றிக் கொண்டது.
ஆறடிக்கும் அதிகமான உயரம். சற்றே நீள்வட்ட முகம். அடர்ந்த புருவம். அகல நெற்றி. அசைந்தாடும் கேசம். வைரம் பாய்ந்த தேக்கு மர தேகம். ஜீன்ஸும் டீசர்டும் என சதாரணமாகவே இருந்தான் அவன்.
“மயக்கும் புன்னகை சார் உங்களுக்கு… நிச்சயம் சினி பீல்டுக்கு போனா நம்பர் ஒன் ஹீரோ நீங்கதான்…” என்று சொல்ல, அதற்குமே அவனின் பதில் புன்னகை மட்டுமே. தொடர்ந்த கேள்விகளுக்கு புன்னகை முகமாகவே பதிலளித்துக் கொண்டிருந்தான் அவன். அவனின் தனிப்பட்ட விசயங்களை பற்றிய சில அநாகரிக கேள்விகளுக்கு கூட புன்னகை முகம் மாறாது எப்படி நிராகரிக்க வேண்டுமோ எப்படி நிராகரித்துக் கொண்டிருந்தான். அவனின் பேச்சு திறமையை மிளிருமே மெச்சவே செய்யதாள்.
“கடைசி ஒரே ஒரு ரெக்கொஸ்ட் சார்… எங்களுக்காக இத நீங்க பண்ணனும்…”
“என்னனு தெரியாம யாருக்கும் நான் வாக்குறுதி கொடுக்கறது இல்லையே… தொழிலதிபரோட முதல் தகுதியே அதானே..!” என்றான் புன்னகை மாறாமல்.
“பெரிசா என்ன சார் கேட்டுட போறோம்… உங்க அழகே அந்த ப்யூட்டிபுல் ஐஸ் தான்… அதைப்போய் இப்படி மறைச்சு வச்சு இருகீங்களே… கொஞ்சம் கூலிங் கிளாச கழட்டுனா… உங்க ரசிகைகள் எல்லாம் கொஞ்சம் ரசிச்சுப்போம்…”
“அவ்வளவு தானே… என் ரசிகைகளுக்காக இத கூட இந்த தேவ் பண்ண மாட்டானா என்ன…” என்றபடியே அணிந்திருந்த நீலநிற குளிர் கண்ணாடியை கழற்ற, மரகத பச்சை நிறத்தில் ஒளிர்ந்தது அவன் விழிகள். உண்மைக்குமே மயக்கும் மாய விழிகள்தான். அவன் கண்ணை மட்டும் நெருக்கத்தில் காட்ட, அடர் பச்சை நிற கருமணியை சுற்றி மரகதபச்சை நிறத்தில் அடுத்தவரை கவர்ந்து இழுந்தது அவனின் கருவிழிகள். வசியம் வைக்காமலேயே அடுத்தவரை வசியபடுத்துவிடும் விழிகள் தான். உடல் நடுங்க உள்ளம் பதற, அந்த கருமணிகளைதான் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தாள் மிளிர்.
அடுத்த சில நிமிடங்களில், “பிரபல இளம் தொழிலதிபர் தேவபிரசாத்துடனான நேர்காணல் இத்துடன் நிறைவடைகிறது… மீண்டும் ஒரு பிரபலத்துடன் அடுத்த வாரம் சந்திப்போம்…” என நிகழ்ச்சியை நிறைவு செய்திருந்தது சேனல். அதே நேரம் “மகி யாரை கடைசியாக இன்டர்வியூ எடுக்க சென்றிருந்தாள்…” என கவியிடம் அக்னி கேட்ட கேள்விக்கு, “தேவ் பிரசாத்…” என நடுங்கும் குரலில் பதிலளித்து இருந்தாள் கவி.
– தேடல் தொடரும்…

