
தேடல் 28:
மருத்துவமனையின் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தபடி, இமைக்காது தன்னவளையேப் பார்த்திருந்தான் இனியன். இன்றோடு அவனும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு வார காலமாகிறது. மிளிரும் சூர்யாவுமே மாறி மாறி உடனிருந்து கவனித்துக் கொள்கின்றனர். இன்று இனியனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நாள் என்பதால் தனது பெற்றோர் பதறாத வண்ணம் இனியனின் நிலையை ஓரளவுக்கு விளக்கிச் சொல்லிவிட்டுதான் வந்திருத்தாள் மிளிர்.
அவனின் பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தபடியே, அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாள் மிளிர். ஆனால் அவன்தான் ஒன்றுக்குமே பதில் சொல்லவில்லை. ஏன் மிளிர் பேசியதையே கவனித்தானா என்று தெரியவில்லை.
“ரொம்ப வலிக்குதா இனியா… ஏன் இவ்வளவு டல்லா இருக்க…” அவனின் அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவள், அவன் தலைக்கோதி வினவ, அனிச்சையாய் அவன் கண்கள் கண்ணீரை உகுத்தது.
“நான் ரொம்ப கெட்டவனாக்கா…” அவனின் கேள்வி எதனால் என்று புரியாவிட்டாலும் யாரால் என்று புரிந்தது.
இனியனை ஆழ்ந்து ஊடுருவி பார்த்தவள், “கண்டிப்பா இல்லடா…” என்றாள் அமைதியாக.
“அப்போ ஏன்க்கா சூர்யாவுக்கு என்ன புடிக்கல…”
“இத நீ அவகிட்ட தானே கேக்கனும்…”
“கேக்க அவசியமே இல்லங்கற அளவுக்கு அவளோட செயல் இருக்கும் போது நான் என்னனு கேட்க…” என்றவனின் கரத்தினை ஆறுதல் படுத்தும் விதமாக அழுந்த பற்றிக் கொண்டாள் மிளிர்.
“எனக்கு தெரியலக்கா… நான் எப்படி அவள இவ்வளோ காதலிக்கறனேனு சத்தியமா எனக்கே தெரியல… அவ இல்லாம இருக்க முடியாமானா… நிச்சயமா முடியாதுனு தான் தோனுது… ஆனா அவ பார்வையே என்ன தள்ளி நிக்க சொல்லுது… இந்த ஒரு வாரத்துல எத்தனையோ வழியில என் காதல அவளுக்கு புரிய வைக்க ட்ரை பண்ணிட்டேன்… புரிஞ்சாலும் ஒன்னுமே புரியாத மாதிரி இருக்கவகிட்ட என்ன பேச… அதையும் மீறி அவகிட்ட ஏதாவது பேசலானு நினைச்சா… உனக்கும் எனக்கும் செட்டாகுதுனு ஒரே வார்த்தையில சொல்லிட்டு போய்டற… முடியலைக்கா… அப்படி என்னதான் அவளுக்கு பிரச்சனை… கடைசி வரைக்கும் அவ என்ன ஏத்துக்கவே மாட்டாளாக்கா…” கடைசி வார்த்தைகளோடு சில துளி கண்ணீரும் பட்டு தெரிக்க, அவனையே அழுத்தமாக பார்த்திருந்தாள் மிளிர்.
“இதுல நான் என்ன பண்ண முடியுமுனு நினைக்கற இனியா… பேசி சமாதானப் படுத்தி உங்க இரண்டு பேரையும் சேத்து வைக்கனும்னா… இல்ல அவள பத்தி எனக்கு தெரிஞ்சத உன்கிட்ட சொல்லனும்னா…” என அழுத்தமாக கேட்டவளை பாவமாக பார்த்திருந்தான் இனியன்.
“இங்க பாரு இனியா… காதல் ஒரு உணர்வு… அதையும் தான்டின நம்பிக்கை… அது உங்களுக்கு உங்களால கிடைக்கனும்… அடுத்தவங்க சமாதானப் படுத்தியோ விளக்கம் குடுத்தோ வர வைக்க முடியாது… வரவும் வராது… ஒவ்வொரு விசயத்துக்கும் அடுத்தவங்க வந்து விளக்கம் கொடுத்துக்கிட்டும் இருக்க முடியாது… உன் காதல… உன் வேலான நம்பிக்கைய நீ தான் அவள உணர வைக்கனும்… அந்த உணர்வ நம்பிக்கைய நீ கொடுத்துட்ட… அவளே உன்ன தேடி வந்துடுவா… அப்படி வரலையா விட்டுடு… கட்டாயபடுத்தி காதலையோ நம்பிக்கையோ வர வைக்க முடியாது…” என்றவள், அவ்வளவு தான் முடிந்தது என்பதைப் போல, எழுந்து மீண்டும் தனது வேலையை கவனிக்கத் துவங்கி விட்டாள்.
மிளிரின் வார்த்தைகளை தான் தற்சமயம் அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது. அந்த உணர்வு, அவனுக்கே அவனுக்கு மட்டுமான காதல் உணர்வு. ஒன்றல்ல இரண்டல்ல எத்தனையோ முறை தனக்கான அந்த உணர்வை அவளின் கண்களில் அவன் படித்திருக்கிறான். ஆனால் நம்பிக்கை, இந்த இடத்தில் தான் அவன் கொஞ்சம் சறுக்கிப் போனானோ? அன்றி அந்த நம்பிக்கை துளியேனும் அவன்மீது அவளுக்கு இருக்கிறது என்றால் எதனால் அவன் வேண்டாம் என்கிற காரணத்தையாவது சொல்லி இருப்பாளே. ஆனால் அவளோ, ‘நான் உனக்கு பொருத்தமில்லை…’ என ஏதோ கிளிப்பிள்ளைப் போல சொன்னதையே அல்லவா திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறாள். அதையும் மீறி வற்புறுத்தி கேட்டாலும், பதிலில்லை. அதைக்கூட தாங்கிக் கொள்பவனால் சகிக்க முடியாதது அவளின் பாராமுகம் தான். அதற்கு மரணமே மேல் என்று எத்தனையோ முறை எண்ணிவிட்டான். காதலின் வலியை விட மரண வலி சற்றேனும் குறைவாகதான் இருக்ககூடும்.
“அக்கா… எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு… இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்திடும்… இனியன கூட்டிட்டுப் போய்டலாம்… நீங்க இன்னும் எல்லாத்தையும் எடுத்து வைக்கலைப் போலையே…” என்றவள் மிளிருக்கு உதவியாக தானும் எடுத்து வைக்க தொடங்கி இருந்தாள்.
“நீ எடுத்து வச்சுட்டே இரு சூரி… நான் பில் கிளியரன்ஸ் வாங்கிட்டு டாக்டர பாத்து பேசிட்டு வந்துடறேன்…” என்றவள் இனியனை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டாள். அதில் உனக்கு தேவையானதை நீதான் பேசவேண்டும் என்ற அர்த்தம் பொதிந்திருப்பதை அவன் உணராமலில்லை.
“சூர்யா…”
“சொல்லுங்க… ஏதாவது வேணுமா…” தனது வேலையிலேயே கவனம் பதித்திருந்தவள், பெயருக்கு கூட நிமிர்ந்து அவன் முகம் பார்க்கவில்லை.
“ஆமான்… என் கேள்விக்கு பதில் வேணும்…”
“பதிலே கிடைக்காத நிறைய கேள்விகள் இருக்கு…”
“ஆனா… என் கேள்விக்கு பதில் இருக்கு…”
“உரியவங்களுக்கு அத சொல்ல விரும்பம் இல்லைனா விட்டுடனும்…”
“உரிமைப் பட்டவங்க அத தெரிஞ்சுக்கனுமுனு ஆசைப்பட்டா சொல்லிதான் ஆகனும்…” என்றவனை திரும்பி ஆழ்ந்துப் பார்த்தாள் சூர்யா.
“இப்ப என்ன தெரியனும் உங்களுக்கு…”
“என்ன வேண்டானு சொல்ல என்ன காரணுமுனு தெரியனும்…”
“அதான் சொல்லிடனே… எனக்கு கல்யாணம் ஆகிட்டுனு…”
“இருக்கலாம்… ஆனா அது காரணமுனு எனக்கு தோனல…”
“அது மட்டும்தான் காரணமுனு நான் சொல்றேன்…”
“அப்படி மட்டும்தானா கண்டிப்பா நீ என் காதல என்கிரேஜ் பண்ணி இருக்க மாட்ட…”
“நான் அப்படி எதுவும் பண்ணதா எனக்கு நியாபகம் இல்ல…”
“அப்போ எனக்கு அடிப்பட்டப்ப உன் கண்ணுல தெரிஞ்ச வலி… அது எதனால… நீ துடிச்சது எதனால…”
“நமக்கு தெரிஞ்சவர் ஆச்சேங்கற அனுதாபமா அது ஏன் இருக்க கூடாது…”
“அனுதாபத்துக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் குழந்தை இல்ல…”
“வித்தியாசம் தெரியலைனா அதுக்கு நான் பொறுப்பில்ல…”
“நீ தான் பொறுப்பு… நீ மட்டும்தான் பொறுப்பு… நான் வேண்டானா ஏன்னு எனக்கு புரிய வை…”
“அது என் வேலையில்ல மிஸ்டர். இனியன்…” என்றவள் வெளியற முனைய, ஏதோ விழும் சத்தம். இனியன் எழ முயன்றதில் அவன் அருகிலிருந்த தண்ணீர் பாட்டில் கீழே விழுந்திருத்தது.
“உங்கள தான் இன்னும் ஒரு மாசத்துக்கு கால அசைக்க கூடாதுனு சொல்லி இருக்காங்க இல்ல… அப்புறம் ஏன் இப்படி எழுந்திரிக்க ட்ரைப் பண்ணறீங்க…” என்றவள் வேகமாக வந்து அவனை பழையபடியே அமர வைத்தாள்.
“இந்த பதற்றத்துக்கு பேர் என்ன சூர்யா…” அவள் முகம் பார்த்து அவன் கேட்டிட, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள், “மனிதாபிமானம்…” என்றாள் சற்றும் சலனமின்றி.
“இல்ல…. இல்ல… இல்ல… இது காதல்… உனக்கு என்மேல இருக்கது அப்பழுக்கில்லாத காதல்… தெரிஞ்சு இருந்தும் எதுவும் தெரியாத மாதிரி எதுக்கு இத்தனை நடிப்பு… அப்படி என்ன, நான் காதலிக்க தகுதி இல்லாதவனா போய்ட்டேன்… ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்குடி… தாங்க முடியல… இங்க வலிக்குது…” என இதயத்தை தொட்டுக் காட்டியவன், அவளை இழுத்து தன்னோடு அணைத்துக் கொண்டு, அவளின் முகத்தைப் பற்றி தன் நெஞ்சுக் கூட்டின் மேல் புதைத்துக் கொண்டான். அவனின் இந்த செயலில் மெல்லிய படபடப்பு அவளின் உடலில் பரவி லேசாத நடுங்க தொடங்கி இருந்தது உடல்.
முகம் இரத்த பசையின்றி வெளிறிப் போயிருக்க, வேகமாக அவனை உதறித் தள்ளினாள். “இதான்… இதானே ஆம்பளைங்க எல்லாருக்கும் வேணும்… காதல் கல்யாணம்… இதோட அல்டிமேட் கோலே இதானே… கடைசியில இதெல்லாமே இதுக்குதானே…” என கத்தியவளை கண்டு மிரண்டுதான் போனான் இனியன்.
தன்னிலை தெளிந்து, அவளின் வார்த்தைகளின் அர்த்தம் பிடிபட துவங்க, “ஷட்அப் சூர்யா… என் பாத்தா எப்படி தெரியுது உனக்கு… இதுக்குனே அலையறவன் மாதிரியா..?” என அவனும் அவளுக்கு இணையாக கத்தி முடித்திருந்தான்.
அவனின் இந்த செயலில், தன்னனை நிலை நிறுத்திக் கொண்டவளின் கோபம் ஓரளவு மட்டுப் பட்டிருந்தது.
ஆழமாக மூச்சை சில முறைகள் இழுத்து விட்டவள், தன்னை சமன்படுத்திக் கொண்டு, “நாமக்கு செட் ஆகாதுனு சொல்லறது இதுக்குதான்… ஐ அம் அன்பிட் பார் செக்ஸ்… உன்ன ஏன் வேண்டானு சொல்லறேனு இப்போ புரிஞ்சு இருக்குனு நினைக்கறேன்… இனிமே காதல் கன்றாவினு என்ன தொல்லை பண்ணாத… புரியுதா…” என்றவளை இயலாமையுடன் பார்த்திருந்தான் இனியன்.
“காமம் மட்டும்தான் காதலா சூர்யா… அது இல்லாம எத்தனையோ பேர் வாழறாங்க தானே… என் அன்புல உனக்கு நம்பிக்கை இல்லையா…”
“மண்ணாங்கட்டி… சதாரணமா கூட என்ன தொடமலேயே குடும்பம் நடத்திடுவீயா நீ… எப்படி நீ என்ன தொட்டலாலும் எனக்கு அப்படிதான் தெரியும்… நீனு இல்ல எந்த ஆம்பள தொட்டாலும் எனக்கு அப்படிதான் இருக்கு… ஏன் நான் தூக்கி வளத்த என் தம்பி என்ன தொட்டாலே… என்னையும் மீறி என் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுது… நா இப்படி தான்… என்ன விட்டுடு… இந்த நரகத்துக்குள்ள கிடந்து தினம் தினம் என்னால சாக முடியாது…” என்றவள் தன்னையும் மீறி கதறி அழுதிட, சம்பித்து போனதென்னவோ அவன்தான்.
“நரகம்னா என்னனு தெரியுமா… அத நீ அனுபவிச்சு இருக்கீயா… நான் அனுபவிச்சு இருக்கேன்… தினம் தினம் அனுபவிச்சு இருக்கேன்… நான் பத்தாவது ரீசல்ட்டுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்த டைம் அது… குடிக்கு ஆசைப்பட்டு பதினைஞ்சு வயசுலையே என்விட இருபது வயசு மூத்த ஒருத்தனுக்கு இரண்டாந்தாரமா கட்டி வச்சுட்டாரு எங்கப்பா… என்னவிட வயசுல பெரிய பையன் அவனுக்கு… கல்யாணம்ங்கற பேர்ல ஒரு பொண்ணுக்கு நடக்கற வன்கொடுமை தெரியுமா உனக்கு… ஒவ்வொரு ராத்திரியும் நரகம்… கிட்டதட்ட பதினைஞ்சு நாள்… அந்த நரகத்துல இருந்தேன்… அதுக்குள்ள எத்தன தடவ சாக நினைச்சு இருக்கேன் தெரியுமா… கடைசியா செத்துடலானு நான் முடிவே பண்ணி முயற்சி பண்ணப்ப தான் கடவுளே என் மேல இறக்கப்பட்டு அவனுக்கு ஒரு ஆக்ஸிடன்ட் ஆக வச்சாரு… அதுல அவன் செத்தும் போய்ட்டான்… அத்தோடு விட்டுச்சு சனியனு நினைக்க முடியாத அளவுக்கு… அன்னைக்கு நைட்டே… அவன் பையன்… அந்த பையன்… முடியல…” என்றவளிடம் பெரிய கேவல். உடலெல்லாம் நடுங்க, பயத்தில் விரிந்த கண்களில் ரத்த பசையின்றி வெளிறிக் கிடந்தது.
இழுத்து தன்னுள் புதைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல துடித்த மனதிற்கு அரும்பாடுபட்டு கட்டுபாடு விதித்திருந்தான். சொல்வதை எல்லாம் சொல்லி முடித்துவிடு என்பதைப் போல அவளைப் பார்த்திருக்க, வழிந்த கண்ணீரை துடைக்க கூட திறனற்றவளாய் எதற்கோ கட்டுபட்டவளைப் போல சொல்லிக் கொண்டேச் சென்றாள் அவள். “பக்கத்துல… பக்கத்துல… இருந்த… மர சேர எடுத்து அவன அடிச்சுட்டேன்… அவனும் மயங்கிட்டான்… அன்னைக்கு நைட்டே எங்க வீட்டுக்கும் வந்துட்டேன்… மறுநாளே எங்கவீட்டுக்கு போலீஸ் வந்துச்சு… நான் அவன அடிச்சுப் போட்டுட்டு நகையெல்லாம் திருடிட்டு வந்துட்டேனு… எப்படி எப்படியோ போராடுனேன்… எம் மேல தப்பில்லைனு நிரூபிக்க… முடியல… ஐஞ்சு வருஷம் தண்டனை… நன்னடத்தை காரணமா நாலு வருஷத்துலையே வெளிய விட்டுட்டுட்டாங்க… அதுக்கப்புறம்தான் ப்யூட்டிஷியன் கோர்ஸ் சேந்தேன்… மிளிரக்காவ பாத்தேன்… ஏதோ ஒரு வகையில இரண்டு பேருக்குமே பற்றுக்கோல் தேவைப்பட்டுச்சு… ஒருத்தர் அன்ப இன்னொருத்தர் கெட்டியா புடிச்சுக்கிட்டோம்… அவ்வளவு தான் நான்… எனக்கு இந்த நிம்மதி போதும்… மிளிர் அக்காவோட அன்பு கிடைக்காம போய்டுமோனு தான் உன்ன சகிச்சுகிட்டேன்… மத்தபடி இந்த நினைப்பெல்லாம் மறந்துட்டு காதல் கல்யாணமுனு ஆயுசுக்கும் என்னால வாழ முடியுமுனு தோனல… வாழ இஷ்டமும் இல்ல…” என்றவள் மனம் பெரிதும் அமைதிப்பட்டிருந்தது. இப்போது சிறு சலனம் கூட அவளிடமில்லை. எதிலிருந்தோ விடுதலை பெற்ற உணர்வு. மனம் நிர்மலமான ஒரு அமைதியை உணர்ந்தது. ஆனால், அதற்கு நேர் எதிராய் இனியனின் மனதிற்குள் தான் பெரும் அலை அடித்துக் கொண்டிருந்தது. மொத்தமாய் உடைந்துப் போயிருந்தான். இன்னதென்று வரையறுக்க முடியாத உணர்வுக் குவியலொன்னு மனதை ரணமாய் கீறிக் காயப்படுத்தி இருந்தது.
அவன் கண்ட உலகம் வேறு… அதில் மனிதர்கள் வேறு… இப்படியெல்லாம் இருக்க கூடும் என கனவிலும் அவன் நினைப்பதில்லை. என்றாவது எங்கையோ ஏதோ ஒரு பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்ததென செய்தி தாளிலோ தொலைக்காட்சியிலோ பார்க்க நேர்ந்தால் சில நிமிட பரிதாபத்தோடு கடந்துப் போகிறவனில் அவனும் ஒருவனே. அன்றி அதன் பிறகான அவர்களின் வாழ்க்கையை அவன் நினைத்துக் கூட பார்த்தது இல்லை. ஆனால் அவர்களில் ஒருத்தியாய் ரத்தமும் சதையுமாய் மொத்த ஆணினத்தையே குற்றம் சொல்லிக் கொண்டு ஒருத்திக் கண்முன் நிற்க கண்டவன் சில்லு சில்லாய் உள்ளுக்குள் நெறுங்கிதான் போனான்..ஏன் தன்னோடு சேர்த்து அந்த ஆண் இனத்தையே இந்த நொடி அவன் வெறுக்கவும் தான் செய்கிறான். ஆனால் அதற்காகவெல்லாம் அவளை விட்டுடுவானா என்றால், நிச்சயம் இல்லை என்பதே அவனின் ஆழ் மனதிலிருத்து வரும் பதில்.
“இப்போ நீ கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் தெரிஞ்சுட்டு தானே… இனிமே இந்த பைத்தியகார தனத்தை எல்லாம் மூட்டை கட்டிவச்சுட்டு பொழப்ப பாரு… அதான் உனக்கு நல்லது…” என்றவள் அவனைப் பார்க்க, கன்னங்களில் விழும் கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டான் அவன்.
நிமிர்ந்து அவளைப் பார்த்தவன், “நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என்று சற்றும் சலனமின்றி தடுமாற்றமின்றி கேட்டிட, மொத்தமாய் அதிர்ந்து தடுமாறிப் போனவள் அவளே.
– தேடல் தொடரும்…

